தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10.
தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சிலவற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து 'பதிவுகளு'க்கு அனுப்பியவர்: சந்திரவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்- பதிவுகள் -
தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்
விக்கியூடகங்களின் தொலைதூரக் கனவு, "உலக அறிவு முழுமையையும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உலகைக் காண்பது" ஆகும். இந்தத் தொலைதூர உலகத்தை அடைவதற்கான சில நடைமுறைச் சாத்தியமான நோக்கங்களையும் செயற்பாடுகளையும் முன்னிறுத்தியே பன்மொழி விக்கித் திட்டங்கள் இயங்கிவருகின்றன. "கட்டற்ற உரிமங்களின் கீழ் அல்லது பொது உரிமத்தின் கீழ், கல்விசார் உள்ளடக்கங்களைச் சேகரித்தும், உருவாக்கியும் உலக அளவில் பரவச் செய்வதற்கு மக்களுக்கு ஆற்றல் அளித்து ஊக்குவிப்பது" என்பதே இத்திட்டங்களை இயக்கிவரும் விக்கிமீடியா நிறுவனத்தின் செயலிலக்கு.
பல்வேறு விக்கித் திட்டங்களை உருவாக்கி இயக்கிவரும் எல்லா மொழிச் சமூகங்களும் மேற்படி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இந்த நோக்கங்களை அடைவதில், எல்லா மொழிச் சமூகங்களுமே ஒரே மாதிரியான பின்னணிகளையும், வசதி வாய்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. பல்வேறு, வரலாற்று, அரசியல், சமூக பண்பாட்டுக் காரணிகள் இந்த மொழிச் சமூகங்களிடையே ஒரு சமமற்ற தன்மையை உருவாக்கி வைத்துள்ளன. இதனால், மேற்படி இலக்குகளை அடைய விரும்பும் மொழிச் சமூகங்கள் விக்கியூடகங்களின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், வளங்களையும் புரிந்துகொண்டு, தமது பின்னணிகளுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமான முறையில் அமைந்த திட்டங்களின் அடிப்படையில் செயல்படுவது முக்கியமானது.
தமிழ்ச் சமூகப் பின்னணியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
அரசியல், வரலாற்றுக் காரணங்களினால் தமிழ் மொழியானது, கல்வி மொழி, பணியிட மொழி போன்ற தகுதிகளை இழந்தது மட்டுமன்றி, அத்தகுதிகளை மீட்டெடுப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிய ஒரு நிலையிலும் உள்ளது. கல்வித்துறையில் கீழ் மட்டங்களிலும், சில துறைகளில் வரையறுக்கப்பட்ட அளவிலும் தமிழ் மொழிமூலக் கல்வி அறிமுகமானது. எனினும், உயர் கல்வியில், குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஆங்கிலமே கோலோச்சி வருகிறது.
இந்த நிலைமை தமிழ் மொழிமூல அறிவுப் பரவலை ஊக்குவிக்கும் முயற்சிகளில் பல இடர்ப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. இவற்றுள்;
• உயர் அறிவுத்துறைகளில் தமிழ் மொழிமூல உள்ளடக்கங்களுக்கான தேவைக் (Demand) குறைவு,
• பல துறைகளில் கலைச்சொற்கள் இல்லாமை அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கலைச்சொற்கள் இல்லாமை,
• துறை வல்லுனர்களுக்குத் தமிழ் மொழியில் எழுதும் திறமையின்மை,
• பல துறைகளில் தமிழ் மொழியில் உசாத்துணை நூல்கள் கிடையாமை போன்றவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இக்குறைபாடுகள் ஒன்றையொன்று ஊக்குவித்து வருவதுடன், தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவை தமிழில் கல்விசார் உள்ளடக்கங்களுக்கான மூலங்களை வெளியில் தேடவேண்டிய நிலையை உண்டாக்குவதுடன், இவற்றைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் இடர்ப்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன. கலைச்சொல்லாக்கத்திலும், முறையான அணுகுமுறையோ ஒருங்கிணைப்போ இல்லாதது பெருங்குறையாக உள்ளது. குறிப்பாக, பல்வேறு நாடுகளில் வாழும் தமிழரிடையே கலைச்சொல் ஒருங்கிணைப்பின்மை, பன்னாட்டுப் பயனர்களையும், பங்களிப்பவர்களையும் கொண்ட தமிழ் விக்கியூடகங்களைப் பொறுத்தவரை ஒரு முக்கிய பிரச்சினை எனலாம்.
தமிழ் விக்கியூடகங்களின் தற்போதைய நடவடிக்கைகளின் தன்மை
தமிழ் விக்கியூடகங்களில் முனைப்பாக இயங்கி வருவன விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிச் செய்திகள் ஆகிய திட்டங்களாகும். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் விக்கியூடகப் பயனர்களின் கவனம் முக்கியமாக மூன்று விடயங்களில் இருந்துள்ளது.
1. கட்டுரை / பக்க எண்ணிக்கை
2. உள்ளடக்கங்களின் தரம்
3. தமிழ் விக்கியூடகச் சமூகத்தின் வளர்ச்சி
தொடக்கநிலைகளில் விக்கித் திட்டங்களில் தாங்குநிலை வளர்ச்சிக்குத் தேவையான மாறுநிலைப் பொருண்மையை (Critical Mass) எட்டுவதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை. பரப்புரைகள், பயிற்சிப் பட்டறைகள், கட்டுரைப் போட்டிகள் போன்ற பல்வேறு திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் தமிழ் விக்கியூடகங்கள் பெருமளவுக்குத் தமது நோக்கங்களில் வெற்றி பெற்றுள்ளன எனலாம். தமிழ் விக்கிச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் குறிப்பிடத்தக்க பெறுபேறுகள் கிடைத்துள்ளன. தமிழ் விக்கியூடகங்களைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளில் எட்டப்பட்ட மிகப் பெரிய சாதனை இதுவே எனலாம். விக்கிப்பீடியாவில் தற்போது கட்டுரைகளின் நீளம், உள்ளடக்கத் தரம் என்பவற்றில் கூடுதலான கவனம் திரும்பி உள்ளதையும் காண முடிகிறது.
இனி வரும் ஆண்டுகளிலும் இவை தொடர்பான நடவடிக்கைகளே கூடிய கவனத்துக்கு உள்ளாகும் என்பதிலும் ஐயமில்லை. அதேவேளை, தமிழ் மொழி மூலமான அறிவுப் பரவல் தொடர்பில் மேம்பட்ட முறையில் செயலாற்றுவதற்கு, விக்கியூடகங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்வதோடு, தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துச் சிந்திப்பதும் அவசியமானது.
தமிழ் விக்கியூடகங்களின் உள்ளாற்றல்
• தமிழ் விக்கியூடகங்கள் மிகப்பெரிய, உலகளாவிய அளவில் அடையாளம் காணப்படுகிற ஒரு அமைப்பின் பகுதி. "விக்கிமீடியா", "விக்கிப்பீடியா" போன்ற மிகப்பரவலாக அறியப்படுகின்ற குறியீடுகள், தமிழ் விக்கித் திட்டங்களையும் மக்கள் உயர்வாகப் பார்ப்பதற்கான அடிப்படையை வழங்குகின்றன.
• இந்த அமைப்பின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வளம் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய வசதி தமிழ் விக்கியூடகங்களுக்கு உண்டு. மொத்தத்தில், தமிழ் மொழி மூலமான அறிவுப் பரவற் பணிகளைச் செய்வதற்கு உலகத் தரம் வாய்ந்த ஒரு ஊடகம் தமிழ் மக்களுக்குக் வாய்த்துள்ளது.
• கட்டற்ற உள்ளடக்கம், தன்னார்வக் கூட்டு முயற்சி, யாரும் தொகுக்கலாம் போன்ற விக்கித் திட்டங்களின் அடிப்படைக் கருத்துருக்களும், செயல்முறைகளும் வேறு வகையில் பெற்றுக்கொள்ள முடியாத பல சாத்தியப்பாடுகளைத் தமிழருக்கும் வழங்கியுள்ளன.
• கல்விசார் உள்ளடக்கங்களின் உருவாக்கம், பரவல், பயன்படுத்தல் போன்ற செயற்பாடுகள் இணையவழியில் செயற்றிறன் வாய்ந்த முறையில் இடம்பெறுவதை விக்கியூடக மென்பொருட்கள் உறுதி செய்கின்றன. இதன் மூலம் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவிக்கிடக்கும் வல்லமைகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவதற்கான ஆற்றல் வாய்ந்த ஒரு முறைமையைத் தமிழரும் பயன்படுத்தக்கூடிய வசதி தமிழ் விக்கியூடகங்கள் ஊடாகக் கிடைத்துள்ளது.
• புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் போதிய தமிழ் அறிவைப் பெறுவதற்கும், பண்பாட்டைப் பேணுவதற்கும், வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் தேவையான உள்ளடக்கங்களை இலகுவாக வழங்குவதற்கும், பெற்றுக்கொள்வதற்குமான வாய்ப்பு உண்டு.
• பல மொழிகளிலும் உள்ள விக்கியூடகத் திட்டங்களில் மிகப்பெரிய அறிவுத் தொகுப்பு ஒரே இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கட்டற்ற முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த வளங்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் எவ்வித தடையும் கிடையாது. தமிழர் தரப்பில் இருந்து சமூக ஆர்வம் கொண்ட மனித வளம் மட்டுமே தேவை.
• உயர் கல்வித்துறையில், பல்வேறு அறிவுத்துறைகளில், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில், தமிழ் மொழி மூலமான அறிவுத் தேவை மிகக் குறைவாகவே இருப்பதனால், இத்துறைகள் சார்ந்து சந்தைத் தேவையை அடிப்படையாகக் கொண்ட வெளியீடுகள் வருவதோ, அவற்றின் மூலம் புதிய கலைச்சொற்கள் உருவாகும் நிலையோ இல்லை. விக்கியூடகங்களைப் பொறுத்தவரை உள்ளடக்கங்களை உருவாக்குவதில் "சந்தைத் தேவை" என்பது முக்கியமான ஒரு காரணி அல்ல. இதனால், உயர் அறிவுத்துறை சார்ந்த உள்ளடக்கங்களைத் தமிழ் விக்கியூடகங்களில் உருவாக்கும் வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.
• தமிழில் கல்விசார் அறிவுத்தொகுப்புக்களின் மிகப்பெரிய களஞ்சியமாகத் தமிழ் விக்கியூடகங்கள் உருவாக முடியும். விக்கியூடகங்களின் உள்ளார்ந்த இயல்பு காரணமாகத் தமிழ் மொழி மூலமான கல்விசார் உள்ளடக்க உருவாக்கத்தோடும், பரவலோடும் தொடர்புடைய பல விடயங்களில் தமிழ் விக்கியூடகங்கள் தொடர்ச்சியான இயக்க ஆற்றலாக விளங்க வல்லவை. இதனால் ஒன்றிணைந்த தமிழ் விக்கியூடகத் தளம், தமிழ் மொழிமூல அறிவுப் பரவலில் ஒரு உத்தியோகப்பற்றற்ற நடுவக் களமாகச் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டது.
உள்ளாற்றலைப் பயன்படுத்திக்கொள்ளல்: ஒரு தொலைநோக்கு
மிகப்பெரிய அறிவுத்திரட்டு உருவாக்கம்
மேற்சொன்ன விக்கியூடகங்களில் ஆற்றல்களைப் பயன்படுத்தித் தமிழ் மொழியில் உள்ள அறிவுசார் உள்ளடக்கத் திரட்டுகளில் அளவிலும், தரத்திலும் மிகச் சிறந்த திரட்டு என்னும் நிலைக்கு விக்கியூடகங்களை உயர்த்துவது சாத்தியமானதே. இதற்காக உரிய முறையில் திட்டமிட்டுச் செயல்படுதல் அவசியமானது.
ஒருங்கிணைந்த செயற்பாடுகள்
• இந்த நோக்கத்தை அடைவதில் பல்வேறு விக்கியூடகங்களின் ஒருங்கிணைந்த செயற்பாடு மிகவும் அவசியமானது. சிறப்பாக விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிநூல்கள், விக்கிச்செய்திகள், பொதுவகம் போன்றவை ஒன்றுக்கொன்று உதவுவனவாகவும், ஒன்றின் குறைகளை மற்றவை இட்டு நிரப்பும் தன்மை உடையனவாகவும் திட்டமிட்டு வளர்த்தெடுக்கவேண்டும்.
• விக்சனரி தன்னளவில் ஒரு அகரமுதலியாகச் செயற்படும் அதேவேளை, விக்கிப்பீடியா போன்ற விக்கியூடகத் திட்டங்களில் உள்ளடக்க உருவாக்கத்துக்கான கலைச்சொற்கள் தொடர்பிலான பங்களிப்பையும் செய்துவருவதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
• அதேபோல இப்போது போதிய வளர்ச்சியடையாத நிலையில் இருக்கும் விக்கிநூல், விக்கிமூலம் ஆகியவை முக்கிய பங்காற்றமுடியும். விக்கிநூல், பள்ளி மட்டத்திலான கல்விசார் உள்ளடக்கத் தேவைகளை நிறைவேற்றுவதில் விக்கிப்பீடியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தக்கதான வழி முறைகளைக் கண்டறிய வேண்டும். விக்கிமூலத்தில், தமிழ் மொழிமூல ஆவணங்களைத் திரட்டுவதன் மூலம், அது தனியானதொரு ஆவணக் காப்பகமாகச் செயல்படுவதுடன், பிற விக்கித் திட்டங்களுக்கான சான்றுகளையும் வழங்கி உதவும்.
• பொதுவகம் இலட்சக்கணக்கான படிமங்களையும் பிற ஊடகக் கோப்புக்களையும் கொண்டிருந்த போதும், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் சூழல் போன்றவை தொடர்பான கோப்புக்கள் போதிய அளவில் இல்லை என்றே கூறவேண்டும். அத்துடன், தமிழ் விக்கியூடகங்களில் ஆங்கிலக் குறிப்புக்களுடன் கூடிய நிலப்படங்கள், வரைபடங்கள் போன்றவை பயன்பட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. இவற்றை மொழி பெயர்த்துப் பொதுவகத்தில் இடவேண்டிய தேவையும் உண்டு.
• இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதற்கு இணங்க, விக்கிச்செய்திகள் ஒருவகையில் ஒரு ஆவணக் காப்பகமே. காலப்போக்கில் இது பிற விக்கித் திட்டங்களின் உள்ளடக்க உருவாக்கத்திபோது பெறுமதியான சான்றுகளை வழங்கக்கூடும். இதனால், இந்த நோக்கில், விக்கிச் செய்திகளில் இருந்து தரவுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் செய்திகள் உரிய முறையில் ஒழுங்கு படுத்தப்படுவதையும், செய்திகளுக்கான நம்பத்தகுந்த சான்றுகள் இருப்பதையும் உறுதிப்படுத்துதல் பயனுள்ளதாக அமையும். இது மட்டுமன்றி நடப்புச் செய்திகளின் விரிவான பின்னணித் தகவல்களுக்காக பிற விக்கித்திட்டங்களுக்கு இணைப்புக்கொடுக்க முடியும் என்பதால், இந்த வகையிலும் ஒருங்கிணைந்து செயல்படுவது பயனுள்ளதாக அமையும்.
உள்ளடக்க உருவாக்கம்
விக்கியூடகங்களின் செயற்பாடுகளில் அடிப்படையானது உள்ளடக்க உருவாக்கமே. தமிழ் விக்கியூடகங்கள், தொடங்கிய நாளில் இருந்து இதற்கே முக்கியத்துவம் அளித்து வந்துள்ளன. எத்தகைய உள்ளடக்கங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படவேண்டும் என்பது குறித்தும் பல பயனர்கள் ஆலமரத்தடி போன்ற பகுதிகளில் அவ்வப்போது கருத்து வெளியிட்டுள்ளார்கள். எனினும், திட்டங்களின் அடிப்படையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். தமிழ் விக்கியூடகங்களில் இருக்கக்கூடிய உள்ளடக்கங்களைப் பின்வருமாறு வகைப்படுத்த முடியும்:
• பள்ளிமாணவர்களின் பாடத்திட்டம் சார்ந்த உள்ளடக்கங்கள்
தற்போதைய சூழலில், கட்டாயமாகத் தேவைப்படுகின்ற ஒரு உள்ளடக்க வகை இது. எனவே இது தொடர்பில் விக்கியூடகங்கள் கூடிய கவனம் எடுப்பது அவசியம். பல்வேறு பாடத்துறைகள் சார்ந்த இவ்வாறான உள்ளடக்கங்கள் அச்சு நூல்கள் போன்ற வேறு பல வழிகளிலும் கிடைக்கின்றன. ஆனாலும், பாட நூல்களில் பயன்படுத்த முடியாத, அசைபடங்கள், ஒலிக்கோப்புகள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தும் வசதிகளும், அதன் மூலம் பாடங்களை இலகுவாகப் புரியவைக்கக் கூடிய வல்லமையும் விக்கியூடகங்களுக்கு உண்டு. விக்கிப்பீடியா, விக்கிநூல், விக்சனரி போன்றவை இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்தலாம். மாணவர்களிடையே விக்கியூடகங்களைப் பிரபலப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகவும் அமையும். இவர்களிற் பலர் பங்களிக்கும் பயனர்களாக மாறக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு.
• பொதுவாக எல்லோருக்கும் பயன்படக்கூடிய உள்ளடக்கங்கள்
பொதுவாக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய அல்லது அறிந்துகொள்ள விரும்புகிற விடயங்கள் ஏராளமாக உண்டு, மனித வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட விடயங்கள், பொது அறிவுத் தகவல்கள், நடப்புச் செய்திகள், சமூக நிகழ்வுகள் போன்ற பல இவ்வகைக்குள் அடங்கக்கூடியன. இந்தத் தேவைகளை நிறைவேற்றுவதும் தமிழ் விக்கியூடகங்களின் முக்கியமான குறிக்கோளாக இருக்கவேண்டும். இவ்வகை உள்ளடக்கங்களை உருவாக்குவதன் மூலம் தமிழ் விக்கியூடகங்களைப் பரவலான தமிழர் சமூகத்துக்குப் பயன்படத்தக்கவையாக உருவாக்க முடியும். விக்கிப்பீடியா, விக்கிச்செய்தி, விக்கிமேற்கோள் போன்றவை இத்தகைய உள்ளடக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
• உயர் அறிவுத்துறைகள் சார்ந்த உள்ளடக்கங்கள்
கல்வி சார்ந்த "சந்தை"யில், அறிவியல், தொழில்நுட்பம் என்பனவும் உள்ளடங்கிய பல்வேறு உயர் அறிவுத்துறைகள் சார்ந்த தமிழ் உள்ளடக்கங்களின் தேவை மிகவும் குறைவு என்று ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது. ஆனாலும் எல்லா அறிவுத்துறைசார்ந்த விடயங்களையும் தமிழுக்குக் கொண்டுவருவதற்கும், அதற்காகத் தமிழ் மொழியை வளர்த்து எடுப்பதற்கும், இவ்வாறான உள்ளடக்கங்கள் தமிழில் வெளிவரவேண்டியது அவசியம். தற்போதைய சூழலில் இவ்வகை உள்ளடக்க உருவாக்கத்துக்குக் களமாக அமையக்கூடிய ஆற்றல் விக்கியூடகங்களுக்கு உண்டு. குறிப்பாக விக்கிப்பீடியா இதற்கு மிகவும் பொருத்தமானது. அத்துடன், ஆய்வுத் தேவைகளுக்குப் பயன்படக்கூடிய உள்ளடக்கங்களை விக்கி மூலத்தில் சேகரிக்க முடியும். இது பல துறைகளையும் சேர்ந்த ஆய்வாளர்களுக்குப் பெரும் உதவியாக அமையக்கூடியது.
கட்டற்ற மூல ஆவணச் சேகரிப்பு
விக்கிமூலம் பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்கும் அப்பால் விரிவடைய வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய நிலையில் இதற்கான மனிதவலு போதாது என்பது உண்மையே. ஆனாலும், இதற்கான சில திட்டங்கள் குறித்துச் சிந்திப்பதன் மூலம் புதிய எண்ணங்கள் உருவாகக்கூடும் என்பதையும், இவ்விடயத்தில் குறிப்பான அக்கறை கொண்ட புதிய பயனர்களை ஈர்க்கக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்வது பொருந்தும். பல்வேறு அமைப்புக்களிடம் இருக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், பேச்சுக்கள், ஒப்பந்தங்கள், செய்திகள், நினைவு வெளியீடுகள், நூல்கள், பிற வெளியீடுகள் போன்றவற்றைக் கட்டற்ற முறையில் வெளியிட ஊக்குவிப்பதன் மூலம் தமிழ் விக்கிமூலத்துக்கான உள்ளடக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். சில பிற மொழி விக்கிநூல்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன.
தற்காலத்தில், பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சியில் உள்ள அரும்பொருட்களை ஒளிப்படம் எடுத்து வெளியிட அனுமதி வழங்குகின்றனர். இத்தகையவற்றை இனங்கண்டு, இவற்றைப் படம் எடுத்துப் பொதுவகத்தில் பதிவேற்றுவதை ஒரு திட்டமாகவே செயல்படுத்த முடியும். தவிரவும், தற்போது காப்புரிமைக் காலம் கடந்துவிட்ட பல நூல்களில் பல பயனுள்ள வரைபடங்கள், ஒளிப்படங்கள், நிலப்படங்கள் போன்றவை உள்ளன. இவற்றை உரிய வடிவில் எண்ணிமப் படிகளாக்கிப் பொதுவகத்தில் இடமுடியும்.
பிற மொழி உள்ளடக்கங்களை மொழிபெயர்த்தல்
பிறமொழி விக்கியூடகங்களில், குறிப்பாக ஆங்கிலத்தில் உள்ள தரம்வாய்ந்த ஏராளமான உள்ளடக்கங்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தவேண்டும். பெறுபேறுகள் தரமானவையாக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் தேவை. ஒரு முழுமையான மொழிபெயர்ப்புக் கையேடு ஒன்று இருப்பது மிகவும் அவசியம். ஆர்வமுள்ள பயனர்களுக்குத் தகுதி வாய்ந்தவர்களைக் கொண்டு பயிற்சியளிப்பது குறித்தும் சிந்திக்கலாம். மொழிபெயர்ப்புகளை வேகமாகச் செய்வதற்குத் தானியங்கித் தொழில் நுட்பங்களை அளவாகவும், பொருத்தமான முறையிலும் பயன்படுத்துவது குறித்த வழிமுறைகளைக் கண்டறிவதும் பயனுள்ளதாக அமையும்.
வலையமைப்பு உருவாக்கம்
தமிழ் விக்கியூடகங்கள் தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய பல திட்டங்களில் உதவக்கூடிய அல்லது ஒன்றிணைந்து செயற்படக்கூடிய பிற அமைப்புக்களுடன் தொடர்புகளை உருவாக்கிப் பேணுவது பயன் தரக்கூடிய ஒரு முயற்சி. இவ்வாறான தொடர்புகள் பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமையக்கூடும்.
• இரு தரப்புக்கும் பொதுவான நோக்கங்கள்
• ஒவ்வொரு தரப்பும் மற்றத்தரப்பில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள்
• சமூக மேம்பாட்டை ஆதரிக்கும் ஆர்வம்
இந்த அடிப்படைகளில், அமைப்புக்களையும், தனிப்பட்டவர்களையும் இனங்கண்டு பயனுள்ள தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது முக்கியமானது.
பொதுவான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தொடர்புகள்
தமிழ் விக்கியூடகங்களின் நோக்கங்களில் அடங்கும் தமிழ் மொழி மூலமான அறிவுத்திரட்டல் அவற்றைப் பரவச் செய்தல் ஆகிய நோக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்ற நூலகங்கள், அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள் போன்றவை தமிழ் விக்கியூடகங்களின் மேம்பாட்டுக்காக, உசாத்துணை வசதிகள், கட்டற்ற உள்ளடக்கங்கள், பயிற்சி போன்றவற்றை அளித்து உதவ முடியும். அத்தோடு இவ்வாறான நிறுவனங்கள் பல கேட்போர் கூடம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன. முறையாகத் தொடர்புகளை வளர்த்து எடுத்தால் இவ்வாறான வசதிகளைத் தமிழ் விக்கியூடகங்களின் தேவைகளுக்குப் பெறுவதும் சாத்தியமாகலாம் என்பதோடு, கூட்டாக நிகழ்வுகளை ஒழுங்கு செய்யக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு. சில வகை ஊடகங்களும் விக்கியூடகங்களுடன் பொது நோக்கங்களைக் கொண்டவை இவற்றுடனான தொடர்புகள் மூலம், உள்ளடக்க உதவிகள், பரப்புரை வசதிகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பரஸ்பர பயன்களை அடிப்படையாகக் கொண்ட தொடர்புகள்
தமிழ் விக்கியூடகங்களின் நோக்கங்களை அடைவதில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பிற கல்விசார் அமைப்புக்கள், போன்றவை மிகவும் முக்கியமானவை. முதலாவதாகத் தமிழ் மொழி மூலமான முறைசார்ந்த அறிவுத் தேவை இத்தகைய அமைப்புக்கள் மூலமாகவே உருவாகின்றன. எனவே இத்தகைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு இவ்வமைப்புக்களின் ஆலோசனைகளும், உதவிகளும் தமிழ் விக்கியூடகங்களுக்கு அவசியமானவை. இது தவிர, இவ்வமைப்புக்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில் உருவாகக்கூடிய, தமிழ் விக்கியூடகங்களின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான பங்களிக்கும் பயனர் உருவாக்கத்துக்கு உதவும். இந்த வகையில் மேற்படி அமைப்புக்கள் பெருமளவு பங்காற்ற முடியும். இவற்றோடு, உசாத்துணைத் தேவைகள், கலைச்சொல் தேவைகள், உள்ளடக்கத் தேவைகள், உள்ளடக்கங்களின் தரம் பேணுவதை உறுதி செய்தல், அவற்றின் நம்பகத்தன்மையைக் கூட்டுதல், பயனர்களுக்கான பயிற்சி வழங்கல் போன்ற விடயங்களிலும் மேற்படி அமைப்புக்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, தமிழ் விக்கியூடகங்கள் இந்த அமைப்புக்களின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான கட்டற்ற உள்ளடக்கங்களை உருவாக்குவதில் முனைப்புக்காட்ட வேண்டும்.
மேற்படி அமைப்புக்களோடு பல்வேறு வகையான ஊடகங்களும் ஒருதரப்பிலிருந்து மறு தரப்புப் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகளின் அடிப்படையில் ஒத்துழைக்க முடியும். ஊடகங்களின் பல்வேறு தேவைகளுக்கு விக்கியூடகங்களின் கட்டற்ற உள்ளடக்கங்கள் பயனுள்ளவையாக அமைகின்றன. அதேவேளை, இணையத்துக்கு வெளியே விக்கியூடகங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் முக்கிய பங்காற்ற முடியும்.
சமூக மேம்பாட்டு ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர்புகள்
குறிப்பாக எவ்வித நேரடிப் பயன்கள் இல்லாதபோதும், பொதுவான தமிழர் சமூக மேம்பாட்டு ஆர்வம் காரணமாகத் தமிழ் விக்கியூடகங்களோடு ஒத்துழைக்கக்கூடிய பல்வேறு அமைப்புக்கள் உள்ளன, தனிப்பட்டவர்களும் உள்ளனர். மேற்படி அமைப்புக்களுடனும், தனிப்பட்டோருடனும் தொடர்புகளைப் பேணிக்கொண்டு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வளங்களைத் தமிழ் விக்கியூடகங்களின் மேம்பாட்டுக்காகத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்வதும் அவசியம்.
நிறைவுரை
தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்ற தகவல் தொழில்நுட்பமும், திறந்த மூல மென்பொருள் உருவாக்கம், கட்டற்ற அறிவு வள உருவாக்கம், நல்லெண்ணத்துடன் கூடிய தன்னார்வக் கூட்டு முயற்சி போன்ற கருத்துருக்களும் சேர்ந்து உருவான விக்கியூடகங்கள், தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்குக் கிடைத்துள்ள மிகவும் பெறுமதியான வளம். தமிழ் மூலமான அறிவுப்பரவல் தொடர்பில் இதுவரை இயலாது என்று கருதப்பட்ட பலவற்றை நிகழ்த்திக் காட்டக்கூடிய வாய்ப்புத் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான ஆற்றலை விக்கியூடகங்கள் வழமையாக நடைபெறுவதுபோல் அரசுக்கோ, மிகப்பெரிய அமைப்புக்களுக்கோ வழங்கவில்லை. வயது, கல்வித்தகைமை, மதம், நாட்டினம், பொருளாதாரப் பின்னணி, உறுப்பினராகச் சேர்தல் என்று எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நேரடியாகவே இந்த ஆற்றலும், பொறுப்பும் தரப்பட்டுள்ளன. பொதுவாகத் தமிழர் மேம்பாட்டிலும், குறிப்பாகத் தமிழ் மொழி மூலமான அறிவுப் பரவலிலும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் தமிழ் விக்கியூடகங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, அதைத் திட்டமிட்டுத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலமே ஆகக்கூடிய பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இ.மயூரநாதன்
இ.மயூரநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர். கட்டடக்கலைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். 2003ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியது முதல் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக தனியொருவராகப் பங்களித்து இத்திட்டத்துக்கு வித்திட்டவர் மயூரநாதனே. அன்று முதல் கட்டிடக்கலை, வரலாறு, மொழியியல் ஆகிய பல்வேறு ஆர்வத் துறைகளில் 3000 க்கும் கூடுதலான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகளில் கட்டிடக்கலை, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ், முடிச்சு, ஓவியத்தின் வரலாறு, கோயில், யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழ் விக்சனரி, தமிழ் விக்கி மேற்கோள் திட்டங்களின் தொடக்கக் காலத்தில் பங்களித்துள்ள இவர், மீடியாவிக்கி மென்பொருளின் தமிழ் இடைமுக மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு வகையான விக்கிப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.