அண்மையில் 'டொராண்டோ' வருகை தந்திருந்த எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் 'ஈழத்து அரசியல் நாவல்' என்னும் தலைப்பில் ஆய்வுரைகள் நிகழ்த்தியதாக அறிவித்திருந்தார்கள். உண்மையில் அவர் ஆற்றியதோ சமர்ப்பித்ததோ ஆய்வுரைகளல்ல; திறனாய்வுகளே. விமர்சனம் என்னும் வடமொழியின் தமிழ் வடிவமே திறனாய்வு. திறனாய்வுக்கும் ஆய்வுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை அறியாமல் பலர் இடம் மாறி அவற்றைப் பயன்படுத்தி வருவதை அவ்வப்போது அவதானித்திருப்பீர்கள். ஆய்வு என்பது ஒரு விடயத்தைப் பற்றிய தகவல்களை இயலுமானவரையில் திரட்டித் தொகுப்பது. அத்தொகுப்பின் இடையில், முடிவில் அவ்வப்போது தனது ஆய்வின் விளைவாக தான் அடைந்த, அறிந்த , புரிந்த விடயங்களைப் பற்றி கருத்துகளை, விமர்சனங்களை வைக்கலாம். அவ்விதம் வைப்பதில் தவறேதுமில்லை. இருந்தாலும் அந்த ஆய்வானது அந்த ஆய்வுக்கான விடயம் பற்றித் திரட்டிய தகவல்களைத் தொகுத்து உள்ளடக்கியிருக்க வேண்டும். அவ்விதமில்லாமல். ஒரு சில குறிப்பிட்ட படைப்புகளைப் பற்றி மட்டுமே அதனைப் படைத்தவர் தனது கருத்துகளை, முடிவுகளை முன்னெடுப்பாரானால் அது வெறும் திறனாய்வே. அதனைத்தான் யமுனா ராஜேந்திரனும் அண்மையில் டொராண்டோ வந்திருந்தபொழுது செய்திருந்தார். அவர் தனக்கு, தன் இலக்கியக் கோட்பாடுகளுக்கமைய ஏற்றுக்கொண்ட படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து அவை பற்றிய கருத்துகளை வழங்கியிருந்தார். ஆனால் ஆய்வென்பது காய்தல் உவத்தலின்றி செய்யப்பட வேண்டியதொன்று.
இத்தகையதொரு சூழலில் எனது சில படைப்புகளைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவசியமென்று நினைக்கின்றேன். இவ்விதம் குறிப்பிடுவதையிட்டு ஒரு சிலர் என்ன இவன் தன்னை விளம்பரம் செய்ய விரும்புகிறானென்று கருதக்கூடும். அவ்விதம் நினைப்பவர்கள் அவ்விதம் நினைப்பதைத் தடுக்க முடியாது. அது அவர்களது உரிமை. ஆனால் அதற்காக நான் என் பதிவு செய்யும் உரிமையினை விட்டுவிட முடியாது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த உரிமை உண்டு. அவசியமானதும் கூட. அவ்வப்போது தேவை ஏற்படும் சமயங்களில் அவர்கள் தங்களது இந்த உரிமையினைப் பயன்படுத்துவது அவசியம் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கின்றேன். இல்லாவிட்டால் திறனாய்வுகளெல்லாம் ஆய்வுகளாகி பலரது படைப்புகளைப் பற்றிய தகவல்களையெல்லாம் இழக்க வேண்டியேற்பட்டுவிடும். அதனால்தான் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகள் பற்றிய விபரங்களை அவ்வப்போது பதிவு செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விமர்சகர்கள், திறனாய்வாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பார்வையில் தேர்வுகளைச் செய்து விட்டுப் போய்விடுவார்கள். அவற்றை மையமாக வைத்து எதிர்காலத்து திறனாய்வாளர்களும் திறனாய்வுகளை ஆய்வுகளாக்கிவிட்டுப் போய்விடுவார்கள். இதனால் எவ்வளவோ நல்ல படைப்புகளைப் பற்றிய விபரங்களெல்லாம் அடிபட்டுப் போய்விடும். மேலும் திறனாய்வாளர்கள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரிச் சிந்திப்பதில்லை. அத்துடன் திறனாய்வுகளெல்லாம் முடிந்த முடிபுகளுமல்ல. திறனாய்வாளர் ஒருவருக்குச் சாதாரணமாகத் தென்படும் ஒரு படைப்பு இன்னுமொருவருக்கு இன்னுமொரு கோணத்தில் சிறந்ததாகப் படலாம். இதற்கு எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய ஆய்வுகள் பக்கச்சார்பற்று ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த வகையில் இலண்டனில் வசிக்கும் நூலகர் செல்வராஜா போன்றவர்களின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை. இவ்விதமான அவர்களது தகவற் திரட்டுகள் மேலதிக ஆய்வுளுக்கும், திறனாய்வுகளுக்கும் மிகவும் உதவியாகவிருக்கும்.
இத்தகையதொரு சூழலில்தான் நான் எனது சில படைப்புகளைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவ்விதம் குறிப்பிடுவது ஓர் ஆவணத்திற்காக, பதிவு செய்தலுக்காக மட்டுமேயன்றி வேறெதற்காகவுமல்ல என்பதை இன்னுமொருமுறை நினைவுறுத்த விரும்புகின்றேன். ஒருவருக்கு அவை பிடித்திருக்கலாம். இன்னுமொருவருக்கு அவை பிடிக்காமலிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படைப்பும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக இதுவரையில் கனடாவில் மற்றும் தமிழகத்தில் வெளியான எனது நாவல்களைப் பற்றி இங்கு ஒரு பதிவுக்காக, ஆவணப்படுத்தலுக்காகக் குறிப்பிட விரும்புகின்றேன்.
'டொராண்டோ' கனடாவில் வெளிவந்த முதலாவது நாவல் என்ற பெருமை நான் அறிந்தவரையில் எனது 'மண்ணின் குரல்' என்னும் சிறு நாவலுக்குண்டு. அந்நாவல் 84/85 காலகட்டத்தில் 'மான்ரியா'லில் இருந்து வெளிவந்த 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துச் சஞ்சிகையில் தொடராக வெளிவந்து பின்னர் மங்கை பதிப்பகத்தின் வெளியீடாக டொராண்டோவில் இயங்கிய றிப்ளக்ஸ் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியானதொரு நூல். அந்நூலில் மேற்படி நாவலும், சில கட்டுரைகளும், கவிதைகளும் தொகுக்கப்பட்டிருந்தன. மேற்படி நாவலின் கரு இதுதான். அக்கரு அன்றைய காலத்தின் என் சிந்தனையின் போக்கினைத் தீவிரமாக வெளிப்படுத்தியது. ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தேசிய மற்றும் வர்க்க விடுதலை முக்கியமானது என்பதை வலியுறுத்தும் நாவலது. அது நாவலா அல்லது வெறும் பிரச்சாரமா அல்லது கலைச்சிறப்புள்ளதா அல்லது அற்றதா என்பதெல்லாம் அதனைப்படைத்த எனது பொறுப்பல்ல. அது திறனாய்வாளர்களின் பிரச்சினை. ஆனால் கூறும் பொருளையிட்டு அந்நாவல் ஈழத்து அரசியலைப் பேசுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனைப் பதிவு செய்வது அதனைப்படைத்தவனென்ற வகையில் எனது உரிமை. அதனை யாருமே மறுக்க முடியாது. அந்த வகையில் அதனை இங்கு பதிவு செய்கின்றேன். அந்ந நாவல் கூறும் கதை இதுதான்: கமலா ஒரு தமிழ் ஆசிரியை. வட்டுக்கோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றாள். இனரீதியாக அடக்கப்படும் இனத்திற்காக பொங்குபவள். அதே சமயம் பெண்ணடிமைத்தனத்தை எண்ணிச் சீறுபவள். அவளது காதலன் ஒரு விடுதலைப் போராளி. அவனின் நினைவுடன் வாழ்ந்து வருகின்றாள். ஒரு நாள் வழக்கம்போல் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவள் படையினரின் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றாள். ஆனால் அவள் கோழையல்லள். வாழ்வினைச் சவாலாக ஏற்று வாழும் பக்குவம் மிக்கவள். ஒரு நாள் தந்தைக்குக் கடிதமொன்றினை எழுதி வைத்துவிட்டுத் தனது காதலனுடன் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து விடுகின்றாள். மேற்படி கடிதத்தில் 'தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு நான் கோழையல்லள். வாழ்வினைச் சவாலாக ஏற்கும் பக்குவம் எனக்கு .. உங்கள் மகளுக்கு நிறையவே உண்டு அப்பா! ' என்றும், 'எமது சமுதாயத்தில் ஏற்கனவே பெண்கள் வெறும் பண்டமாற்றுப் பொருளாகத்தான் வாழ்கின்றார்கள். அத்துடன் தமிழ்ப்பெண்கள் சிங்கள் இராணுவக் காடையரின் காமுக வெறியாட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள். தமிழர்களின் போராட்டத்தில் பெண்களும் ஆண்களுடன் தோளுயர்த்திப் போரிட வேண்டிய தருணம் வந்து விட்டதாகக் கருதுகின்றேன்.' என்றும் எழுதியிருந்தாள். இது போல் அவளது தங்கையின் காதலனான இன்னுமொரு இளைஞனையும் நாட்டின் அரசியல் நிலைமை போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றது. சாதாரண மக்களெல்லாரும் எவ்விதம் நாட்டு நிலை காரணமாகப் போராட்டத்தில் குதிக்கின்றார்கள் என்பதை விபரிக்கும் நாவலது. அந்தச் சிறு நாவலின் முடிவு இவ்விதமாக முடிந்திருக்கும்:
'கோடானு கோடி உலகங்களைக் கொண்டதான பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு சிறு மூலையில் அணுத்துகளென சுழன்று கொண்டிருக்கும் இந்தப் புவியுலகோ வினாடிக்கு வினாடி போர்களாலும், இரத்தக்களரிகளாலும் வெடித்துக் கொண்டுதானிருக்கின்றது. அன்று தொட்டு இன்று வரை அதர்மத்திற்கும், தர்மத்திற்குமிடையிலான மோதல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான பரிமாணங்களில் வெடித்துக்கொண்டிருந்தன. அடக்கு முறைகளும், ஒடுக்கு முறைகளும், வர்க்கச்சிதறல்களும்.. மனிதனே மனிதனை அழித்துக் கொண்டுதானிருக்கின்றான். அதர்மச் சக்கரத்துள் உலகே அழிந்து விடுமோ என்று கூட அச்சப்படும்படியாக முரண்பாடுகள் முற்றி வெடித்த வண்ணமுள்ளன. ஆனால் தர்மத்தின் கரங்கள் சோர்ந்ததாக வரலாறேயில்லை.......... ஆமாம்! என்று இம்மண்ணில் அநீதியும், அக்கிரமும் அழிந்தொழிந்து விடுகின்றனவோ, பொய்மை உருக்குலைந்து போகின்றதோ, பெண்மை போற்றிடப்படுகின்றதோ, குடும்ப உறவுகள் சீர்பெற்று விடுகின்றனவோ, அன்று வரை இம்மண்ணின் குரலும் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே! அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே! இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ!'
இந்த முடிவு இந்த நாவலின் நோக்கத்தினைத் தெள்ளத்தெளிவாக விளக்கி நிற்கின்றது. ஆனால் கனடாவில் தமிழ் நாவல் என்று ஒருவர் ஆய்வினைச் செய்ய விரும்பினால், கனடாத் தமிழ் அரசியல் நாவல் என்னும் தலைப்பில் ஒருவர் ஆய்வொன்றினைச் செய்ய விரும்பினால் நிச்சயம் அவர் இந்த நாவலை அந்த ஆய்வினில் குறிப்பிட்டுத்தானாக (அநுபந்தத்திலாவது) வேண்டும். அந்த ஆய்வினை முன்வைத்துத் திறனாய்வினை அல்லது விமர்சனத்தைச் செய்யும் ஒருவருக்கு இதனை ஏற்க, தவிர்க்க அல்லது ஒதுக்க முழு உரிமையுண்டு.
இது போல் மேலும் சில நாவல்களை அச்சமயம் டொராண்டோ, கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகை/சஞ்சிகையில் தொடராக எழுதியுள்ளேன். அவை வருமாறு:
1. வன்னி மண்
2. அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்
3. அமெரிக்கா
இவற்றில் அமெரிக்கா நாவலும், மேலும் சில சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு அமெரிக்கா என்னும் பெயரில் மங்கை(கனடா) / ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 1996இல் தமிழகத்தில் வெளிவந்தது. அமெரிக்கா 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு அகதியாக வெளியேறிய ஈழத்துத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. இந்நாவல் அளவில் சிறியது. அத்துடன் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை ஆவணப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இதற்கும் முக்கியத்துவமுண்டு. இந்த 'அமெரிக்கா' சிறுகதைத் தொகுதிபற்றியும் மேற்படி 'அமெரிக்கா' நாவல் பற்றியும் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' ஆய்வு/திறனாய்வு நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டிசெதமிழன் போன்றவர்களின் கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே 'சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்!' எழுதியிருக்கின்றேன். அது திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களில் வெளியாகியிருக்கின்றது. அதிலுள்ள சில பகுதிகளை மீண்டும் இங்கு குறிப்பிடுவது இக்கட்டுரையின் நோக்கத்திற்குப் பொருத்தமானதால் அவற்றைக் கீழே தந்துள்ளேன்:
"'மண்ணின் குரல்' அன்றைய காலகட்டத்து என் மனநிலையினைப் பிரதிபலிக்குமொரு படைப்பு. தமிழ் மக்களின் விடுதலையினை வலியுறுத்தும் நாவல். ஆனால் அதன் பின் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற தவறான போக்குகளை, நிகழ்வுகளை, ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளாக மேற்படி தொகுப்பிலுள்ள 'வன்னி மண்', மற்றும் 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்' என்னுமிரு நாவல்களையும் கூறலாம். மேற்படி நாவல்களிரண்டும் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகை / சஞ்சிகையில் வெளிவந்த நாவல்கள். ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கிய படைப்புகளென்று நான் கூறுவதற்குக் காரணங்களுண்டு. மேற்படி விமர்சனங்கள் ஒரு போதுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. மிகவும் பலமாக சகோதரப் படுகொலைகளை, 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' கேள்விக்குள்ளாகினால் , 'வன்னி மண்' நாவலோ அப்பாவிகள் யாராகவிருந்தாலும் (சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ) அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
மேற்படி 'வன்னி மண்' என் வாழ்வின் பால்ய காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவமொன்றின் அடிப்படையில். நடைபெற்ற நிகழ்வொன்றின் அடிப்படையில், தமிழ் மக்களின் போராட்டத்தை அணுகும் நாவல். என் பாலய காலத்தில் நான் , வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா அங்குதான் ஆசிரியையாகக் கற்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் மன்னார் வீதியில் அமைந்திருக்கும் குருமண்காடு என்னும் பகுதி ஓரிரு குடும்பங்களையே உள்ளடக்கிய, ஒற்றையடிப் பாதையினை மட்டுமே கொண்டிருந்த , காடு மண்டிக் கிடந்ததொரு பகுதி. அங்கு நாங்கள் போவதற்கு முன்னரே ஒரு சிங்கள பாஸ் குடும்பமும் வாழ்ந்து வந்தது. எந்நேரமும் சிரித்தபடி காட்சியளிக்கும் அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நல்ல அயலவர்களாக விளங்கிவந்தார்கள். எங்களது பண்டிகைகளில் எங்களது உணவு வகைகள் அவர்களது வீட்டிற்குப் போகும். அவர்களது பண்டிகைக் காலங்களில் அவர்களது பாற்சோறு ('கிரி பத்' ) போன்ற உணவு வகைகள் எங்களுக்கு வரும். அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் அருகிலிருந்த பட்டாணிச்சுப் புளியங்குளம் என்னும் குளத்திற்குக் குளிக்கப் போவதுண்டு. அப்பொழுது எனக்கு நீந்தத் தெரியாது. நீந்துவதற்குப் பழகிக் கொண்டிருந்தேன். அந்த பாஸ் குடும்பத்தவருடன் சாந்தா என்று ஒரு சிங்கள இளைஞனும் வசித்து வந்தான். அவன் நன்கு நீந்துவான். நீந்தத் தெரியாத நான் அக்குளத்தில் மிதந்து கொண்டிருந்த மரக்குற்றியொன்றைப் பற்றிப் பிடித்தவண்ணம் நீந்தப் பழகிக் கொண்டிருந்தேன். அருகில் சாந்தாவும் நீந்திக் கொண்டிருப்பான். ஒரு நாள் இவ்விதம் மரக்குற்றியினைப் பிடித்தவண்ணம் நீந்திக் கொண்டிருந்தேன். அருகிலேயே சாந்தாவும் நீந்திக் கொண்டிருந்தான். நீந்திக் கொண்டிருந்தவன் மிகவும் ஆழமாக விளங்கிய குளத்தின் நடுப்பகுதிக்கு வந்து விட்டேன். அந்தச் சமயத்தில் மரக்குற்றியைப் பிடித்திருந்த பிடி நழுவி விடவே நான் நீரினுள் மூழ்க ஆரம்பித்துவிட்டேன். இதனைக் கண்ட சாந்தா மிகவும் விரைவாக என்னருகே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த என்னைப் பற்றித் தூக்க முயன்றான். அவன் கழுத்தைச் சுற்றிப் பலமாக மூழ்கிக் கொண்டிருந்த நான் கட்டிப்பிடித்துக் கொள்ளவே என்னுடன் சேர்ந்து அவனும் மூழ்க ஆரம்பித்தான். இதனை அவதானித்த குளக்கரையிலிருந்த என் அக்கா கத்தவே, அப்பொழுது கரையில் நின்று சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த பாஸ் , உடனடியாகவே நீந்திவந்து மூழ்கிக் கொண்டிருந்த எங்களிருவரையும் தன் இரு கைகளால் கிடுக்கிப் பிடி பிடித்தபடி கரைக்கு இழுத்துவந்து காப்பாற்றினார். அன்று அந்த பாஸ் எங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால். இன்று நான் உங்கள் முன்னிருந்து இவ்விதம் கதை கூறிக்கொண்டிருக்க மாட்டேன். அதன் பின்னர் நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் போய் விட்டோம். யாழ் இந்துக் கல்லூரி, மொறட்டுவைப் பல்கலைக் கழகமென்று திரிந்த என் வாழ்க்கை இன்று கனடாவில் தொடர்கிறது. இதற்கிடையில் இலங்கையில் தமிழ்ர் விடுதலைப் போராட்டம் முனைப்புடன் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்து விட்டிருந்தது. இனங்களுக்கிடையில் நிலவிய புரிந்துணர்வுகள் சிதைந்தன. முக்கியமாக எல்லைப் புறங்களில் வாழ்ந்த பல்வேறு மக்களுக்கிடையில் நிலவிய நட்புடன் கூடிய சூழலை நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளும், இனக்கலவரங்களும் , அரசபடையினரின் அடக்குமுறைகளும், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதச் சட்டமும் மோசமாகச் சீரழித்து விட்டன. நானும் காலப்போக்கில் அந்த பாஸ் குடும்பததவரை மறந்து விட்டேன். பின்னர் பல வருடங்களின் பின்னர் நான் கனடாவில் வசிக்கும்போதுதான் கேள்விப்பட்டேன் அந்த பாஸ் குடும்பததவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையினை. 1983ற்குப் பின்னர் நிலவிய சூழலில், தமிழ் விடுதலை அமைப்பொன்றினால் அந்த பாஸின் குடும்பம் முழுவதுமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதாகவும், அதனை அந்தப் பகுதியிலேயே வாழ்ந்த அந்த அமைப்பின் பொறுப்பாளரே செய்ததாகவும், பின்னர் அந்தப் பொறுப்பாளர் இன்னுமொரு அமைப்பினால் கொலை செய்யப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்த பாஸ் பின்னர் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கியதாகவும் அதனாலேயே இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. சுயாதீன விசாரணைகளேதுமற்ற நிலையில் நான் கேள்விப்பட்ட அந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆயினும் அந்த பாஸ் குடும்பம முழுவதும் அருகிலிருந்த காட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட தகவல் என்னைப் பாதித்தது. என்னையும் ,மூழ்கிக் கொண்டிருந்த சாந்தா என்ற சிங்கள் இளைஞனையும் காப்பாற்றிய அந்தச் சம்பவம்தான் உடனடியாக நினவிற்கு வந்தது. உடனடியாகவே வன்னி மண்ணில் கழிந்த என் பால்யகாலத்து நினைவலைகள் ஓடி மறைந்தன. வன்னி மண்ணுடனான என வாழ்வின் அனுபவங்களின் நனவிடை தோய்தலினூடாக எவ்விதம் அந்த வன்னி மண்ணின் அமைதி கலந்த சூழல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளால் படிப்படியாக மாற்றமடைந்தது என்பதை விளக்குமொரு நாவலாக இந்த வன்னி மண் நாவல் உருவானது. அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் மேல் துப்பாக்கிகள் நீட்டப்படுவதை என்னால் ஏறக முடியாது. அதே சமயம் ஈழத் தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தினையும் என்னால் கொச்சைப்படுத்த முடியாது. வன்னி மண் நாவல் மேற்படி இரண்டுவிதமான என்மனப் போக்குகளையும் விவரிக்கும். மேற்படி நாவல் தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்துகொண்டிருந்த சமயம் கனடா வந்திருந்த எழுத்தாளர் மாலனுடனானதொரு குறுகிய சந்திப்பு எழுத்தாளர் ரதனின் இருப்பிடத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது நடைபெற்ற உரையாடலின்போது மாலன் 'ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நடைபெறும் இச்சூழலில் எந்தவொரு ஈழத்தமிழ் எழுத்தாளராவது அப்பாவிச் சிங்கள மக்கள்மேல் நடைபெறும் தாக்குதல்பற்றிக் கண்டித்து எழுதியிருக்கின்றார்களா? இல்லையே' என்று குறைபட்டுக் கொண்டார். அப்பொழுது 'வன்னி மண்ணி'ல் இவ்விதமானதொரு கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றேன் என்று கூற நினைத்தேன். ஆனாலும் கூறவில்லை.
மேற்படி 'வன்னி மண்' நாவலில் வரும் கீழுள்ள சில பத்திகள் என் மனநிலையினைத் தெளிவாக விளக்கும்:
"..இன்று உன்னால் உயிர் கொடுக்கப்பட்ட நான் இருக்கிறேன். ஆனால் .. நீ.. உளவாளியென்று உன்னோடு சேர்த்து முழுக்குடும்பத்தையும் கூண்டோடு கைலாசமேற்றி அனுப்பிவிட்டார்கள். நியாயப் படுத்துவதற்கா ஆட்களில்லை. எதையும் நியாயப்படுத்த அடுக்கடுக்காக அள்ளி வீசக் காரணங்களாயில்லை. சொந்தச் சகோதரர்களையே தெருவில் எரித்துப் போட்டுவிட்டு அதற்குமொரு நியாயம் கற்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நாங்கள்... வழக்கம்போல் இதற்கும் காரணங்களை அள்ளி வீசுவோம்.
- பாஸ் இராணுவததிற்கு உளவு சொன்னான் -
- பாஸின் மனுசிக்கும் இராணுவத்துக்கும் அப்படியிப்படி ஏதோ தொடர்பாம். விட்டு வைக்கக் கூடாது...-
- அவங்கட பிள்ளைகளும் சேர்ந்துதானாம் -
- போராட்டப் பாதையிலே இதையெல்லாம் விட்டு வைக்கக் கூடாது -
ஆனால் எனக்குத் தெரிந்த நீ .. என்னைவிட அம்மண்ணுடன் உனக்குத்தான் அதிக சொந்தம். நாங்கள் முதன் முறையாக வந்தபோதே அந்தப் பகுதி காடுமண்டிப் போய்க்கிடந்தது. ஆனால் நீ வந்தபோதோ நான் பிறந்திருக்கவேயில்லை. அந்தப் பகுதி எந்த நிலையில் இருந்திருக்கும். இளைஞனான நீ கனவுகளுடன் , கற்பனைகளுடன் புது மண்ணில் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பாய். திட்டங்கள் பல போட்டிருப்பாய். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ..... போராட்டம், இராணுவத் தீர்வு என்ற பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? போரில் நேரடியாக ஈடுபட்டவர்களின் அழிவைவிட இதுவரை அழிந்துபோன பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் எண்ணிக்கைதான் மிகமிக அதிகம். உலகம் முழுவதும் நிலைமை இதுதான். இதன் முடிவு தானென்ன?
... நான் நிச்சயம் நம்புகிறேன். நீ உளவாளியாகவிருக்க முடியாது. என் உயிரைக் காப்பாற்றும்போது நான் தமிழன் நீ சிங்களவனென்று நீ நினைத்திருக்கவில்லை. மனிதனென்றுதான் எண்ணினாய். அந்த மனிதாபிமானத்தை எனக்கு விளங்கும். என் எதிர்பார்ப்பையும் மீறி உண்மையிலேயே காலம் உன் நெஞ்சிலும் இன உணர்வுகளை விதைத்து விட்டிருந்தால்.. அதற்கும் கூட உனக்கும், உன் குடும்பததவர்களுக்கும் கிடைத்த தண்டனை கொடியதுதான்... மிகவும் கொடியதுதான்... ." (மண்ணின் குரல் ; பக்கங்கள்: 96,97 & 98)
இந்த நாவலின் நோக்கம் பற்றி மேற்படி 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பின் இறுதியில் பின்வருமாறு கூறியிருந்தேன். அதனை இங்கு மீண்டுமொருமுறை குறிப்பிடுவதும் பொருத்தமானதே:
எம்மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட ஆயுதம் ஏந்தியவர்கள் தொடர்ந்தும் தமக்கிடையில் மோதித்தேவையற்ற அழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பாவிகள் யாராகவிருந்தாலும் அவர்களுக்கெதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதில் என் மனம் மிகவும் தெளிவாகவேயிருந்தது. மேற்படி தாயகம் பத்திரிகையில் வெளிவந்த எனது இன்னுமொரு நாவலான 'அருச்சுனனின் தேடலும் , அகலிகையின் காதலும்' நாவல் முக்கியமாக அமைப்புகளிடையே நிலவிய சகோதரப் படுகொலைகளையும், உட்படுகொலைகளையும், சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆயுதமேந்தியவர்களால் களவு, விபச்சாரம் போன்றவற்றைத் தம் வயிற்றுக்காகப் புரிந்தவர்களை மரணதண்டனைக்குள்ளாக்கிய செயல்களையும் கண்டிக்கிறது. அவ்விதம் கண்டிக்கும் அதே சமயம் அந்நாவல் பின்வருமாறு முடிவது அதன் நோக்கத்தைத் துல்லியமாகவே புலப்படுத்தும்:
" அநியாயமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதன் காரணம் , சாகடிக்கப்படுவதன் காரணம் விசாரணைகளின்றி விரைவாகத் தண்டனைகள நிறைவேற்றப்படுவதுதான். நீ சொல்வதும் உண்மைதான். ஒரு தனி மனிதனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடியதும் இதனால்தான். ஒவ்வொரு மனிதனினதும் தனிப்பட்ட உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை உட்படச் சகல உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். போராட்டச் சூழலில் நீண்ட விசாரணைகளை எதிர்பார்க்க முடியாதுதான். இருந்தாலும் மரணதண்டனைகள் விடயத்தில் இயக்கங்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். இயக்கரீதியாக, சரியான வழியில், பிரச்சினை அணுகப்படவேண்டும். தண்டனைகளை நிறைவேற்றுவதில் அதிக அவசரம் காட்டக் கூடாது. இயக்கங்கள் தங்களது இயக்க விதிகளை, யாப்புகளை மறுசீரமைக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் முன்னிற்க வேண்டும். அதே சமயம் ஒற்றுமையற்று சிதைந்திருக்கும் எம் மக்களுக்கிடையே , இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். நடந்தவற்றைக் கெட்ட கனவாக மறந்துவிட்டு , புதிய பாதையில் இனியாவது நடைபோட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை என்றாலும் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டட்டும்." (மண்ணின் குரல்; பக்கம் 220)
மேற்படி நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் எனக்குத் தெரிந்து யாருமே இவ்விதம் இயக்க உள்முரண்பாடுகளை, இயக்க முரண்பாடுகளை, அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள், விபச்சாரம், களவு போன்ற வயிற்றுக்காகத் தவறிழைத்தவர்கள் சீர்திருத்தப்படுவதற்குப் பதிலாக, அவ்வாறு அவர்களை வாழ நிர்ப்பந்தித்த சமுதாயத்தைத் திருத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கே தண்டனை கொடுத்த செய்கையினைக் கண்டித்து நாவல்கள் படைத்திருக்கின்றார்களா? எம் மக்களின் தேசிய விடுதலையுடன் அவர்களது சமுதாயப் பிரச்சினைகளையும் தீர்க்கப் போகின்றோமென்று கூறிய அமைப்புகள், அத்தகைய அமைப்பின் விளைவாக உருவானவர்களுக்குத் தண்டனை அதுவும் மரணதண்டணை கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை அவ்விதம் வாழ நிர்பந்தித்த சமுதாய அமைப்பினைத் திருத்துவதன் மூலம்தான் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்பதென் நிலைப்பாடு. அதை விட்டு விட்டு, வறுமையின் காரணமாக அவ்விதம் வாழ்ந்த மக்களுக்குத் தண்டணை கொடுத்த செயல தவறானதென்பதென் கருத்து. ஆயினும் செழியன் போன்ற முன்னாள் போராளிகள் சிலர் தமது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார்கள்? ஆனால் படைப்பாளிகள் யாராவது இவ்விதம் புனைகதைகளைப் படைத்திருக்கின்றார்களா? மேற்படி நாவல்களெல்லாம் 90களின் ஆரம்ப காலகட்டத்தில் எழுதப்பட்டனவென்பதை நினைவில் வைப்பதும் நல்லதே. அக்காலகட்டச் சூழலின் வரலாற்றுக் கடமை கருதி, கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படைக்கப்பட்ட நாவல்களவை. அவை கூறும் பொருளின் அடிப்படையில் மேற்படி நாவல்களுக்கும் முக்கியத்துவமுண்டு என்று நான் கருதுகின்றேன்.
பின்னர் 'அமெரிக்கா II ' என்னுமொரு இன்னுமொரு விரிவான நாவல் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. நியூயார்க் மாநகரத்தில் ஈழத்தமிழ அகதியொருவனின் அனுபவங்களை விபரிப்பது. இன்னும் நூலுருப் பெறவில்லை. கூறும் பொருளிலும், கூறும் முறையிலும், பாத்திரப் படைப்பிலும் என் நாவல்களில் முக்கியமானதொன்றாக இதனை நான் கருதுகின்றேன். இந்நாவலில் வரும் மாந்தர் தொடக்கம் அனுபவங்கள் அனைத்துமே ஏனைய புலம்பெயர் படைப்புகளிலிருந்து சிறிது வேறுபட்டு வாசிப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தினைத் தரக்கூடுமென்று நான் எண்ணுகின்றேன். இந்நாவல் நூலுருப் பெறும்போது மேலும் பலரது கவனத்தைக் கவரக் கூடும்."[கட்டுரை: 'சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்!' - வ.ந.கிரிதரன் ]
இந்நாவலின், 'அமெரிக்கா II', பெயர் தற்போது 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்' என்றும், ஏற்கனவே வெளிவந்த 'அமெரிக்கா' 'அமெரிக்கா: சுவர்களுக்குள்' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவை இரண்டும் ஒரே நூலாக 'அமெரிக்கா' என்றும் பெயரில், 'அமெரிக்கா: சுவர்களுக்குள்', 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்' என்னும் இரு பகுதிகளை உள்ளடக்கியதாக, வெளியிடும் எண்ணமுண்டு.
இச்சமயத்தில் இன்னுமொரு விடயத்தினையும் நினைவு கூர்ந்திட விரும்புகின்றேன். மேற்படி 'அமெரிக்கா' தொகுப்பு தமிழகத்தில் வெளிவந்தபோது அமரர் வல்லிக்கண்ணனும் , சீர்காழியைச் சேர்ந்த எழுத்தாளர் தாஜ்ஜும் நீண்டதொரு விமர்சனக் கடிதங்களை அனுப்பியிருந்தார்கள். அவற்றை இன்னும் நன்றியுடன் பாதுகாத்து வருகின்றேன். மேலும் எழுத்தாளர் தாஜ் முகமது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது' நாவலின் பிரதியொன்றினையும் அனுப்பி உதவியிருந்தார். அதனையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். மேற்படி தொகுதியிலிருந்த 'சுவடுகள்' இதழில் வெளிவந்த 'பொந்துப் பறவைகள்' சிறுகதையினை சிங்கப்பூர் கல்வி அமைச்சு உயர்தர மாணவர்களின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்காக அனுமதி கேட்டு எழுதியிருந்த கடிதத்தினையும் இத்தருணத்தில் நினைவு கூருகின்றேன். இதுவரை நூலாக வெளிவராத ஆனால் 'பதிவுகள்' இணைய இதழ் போன்ற இணைய இதழ்களில் மட்டுமே வெளிவந்த எனது படைப்புகளை வைத்துத் தமிழக/ ஈழப் பல்கலைக்கழக மட்டங்களில் ஆய்வுகள் செய்திருக்கின்றார்கள். அவற்றையும் ஒரு கணம் தற்போது நினைவு கூருகின்றேன். இவையெல்லாம் 'பதிவு' செய்தலின் அவசியத்தை, ஆவணப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்துவன.
மீண்டுமொருமுறை கூறுகின்றேன்; ஆக இவ்விதமானதொரு கட்டுரையின் தற்போதைய நோக்கம் ஒன்றே தான். அதுதான் பதிவு செய்தலாகும். ஆய்வு செய்பவர்களுக்கும், திறனாய்வு செய்பவர்களுக்கும் இவ்விதமான பதிவுகள் அவசியமானதால் இவ்விதமான பதிவுகள் தவிர்க்க முடியாதவையென்பதென் கருத்து. இவ்விதமான பதிவுகள் ஏன் அவசியமென்பதற்கு இந்தச் சமயத்தில் என் சொந்த அனுபவத்தினையும் இங்கு கூறுவது பொருத்தமானது. எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை / இந்திரா பார்த்தசாரதி ஆகியோரால் தொகுத்து வெளிவந்த 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுதிக்குக் கனடாவிலிருந்தும் சில படைப்புகளை இங்கு அதற்குப் பொறுப்பானவர்கள் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவ்விதம் அனுப்பியவர்கள் யாரும் எனது சிறுகதையினை அனுப்பியிருக்கவில்லை. ஆனால் அத்தொகுப்புக்காக நான் எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'யினை அனுப்பியிருந்தேன். அதனை இ.பாவும், எஸ்.பொ.வும் அத்தொகுப்பில் இணைத்திருந்தார்கள். அந்தச் சிறுகதை பற்றி அதன் பின் பலர் வெகுவாக விதந்து எழுதியிருந்தார்கள். ஆரம்பத்தில் அத்தொகுப்புக்குப் படைப்புகளை அனுப்பியவர்கள் பார்வையில் அந்தச் சிறுகதை தென்பட்டிருக்கவில்லை. அந்தச் சிறுகதை தொகுப்பாளர்கள் பார்வையில் சிறந்ததாகத் தென்பட்டிருக்கிறது. வாசித்த வாசகர்கள் பலருக்கு அது சிறப்பாகத் தென்பட்டிருக்கின்றது. தெ.வெற்றிச்செல்வனும் தனது நூலில் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்விதமாக நான் எனது சிறுகதையினைத் தொகுப்பாளர்களுக்கு அனுப்பியதை தற்போது பதிவாக எழுதியிருக்கும் இக்கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். திறனாய்வாளர்களுக்கோ அல்லது தொகுப்பொன்றுக்குப் படைப்புகளைத் தேர்வு செய்பவர்களுக்கோ முக்கியத்துவமற்றுத் தென்படும் படைப்புகள் கூட பின்னர் பலருக்குச் சிறப்பானதாகத் தென்படக்கூடும். இதற்காகத்தான் படைப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டியதவசியம். அதனைத்தான் 'பதிவுகள்' இணைய இதழும் இயலுமானவரையில் செய்கின்றது. அந்த வகையிலான ஆவணப்படுத்தல்தான் இந்தப் 'பதிவுகளு'க்கான பதிவுமேயன்றி வேறல்ல.
பதிவுக்காக சில இணைப்புகள்:
1. மண்ணின் குரல்: மண்ணின் குரல், அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், வன்னி மண் ஆகிய நாவல்களை உள்ளடக்கிய தொகுதி. நூலகம் இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம்: http://noolaham.net/project/20/1927/1927.pdf
2. அமெரிக்கா: இது அமெரிக்கா நாவலினையும் (சிறு நாவல், தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. ஈழத்து . அமெரிக்கத் தடுப்பு முகாம் பற்றி விபரிப்பது.] http://noolaham.net/project/20/1926/1926.pdf
3. அமெரிக்கா (சுவர்களுக்கப்பால்) நாவலினையும் அதன் மொழிபெயர்ப்பையும் ஏனையவற்றையும் கீழுள்ள சுட்டியில் வாசிக்கலாம். இவை இன்னும் நூலுருப் பெறவில்லை. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=section&layout=blog&id=30&Itemid=54
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.