- தினகரன் வாரமஞ்சரியில் (டிசம்பர் 20, 2020) வெளியான சிறுகதை. -
1.
கேசவன் அவன் வசிக்கும் தொடர்மாடிக்கட்டடத்தின் 'அபார்ட்மென்ட்' பல்கணிக்கு வந்துநின்று எதிரே விரிந்துகிடந்த மாலைநேரத்து வானை நோக்கினான். விரிந்துகிடந்த அந்திவான் நெஞ்சில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. மெல்லிய இருள் பரவிக்கொண்டு வந்தது. மெல்லிருளும் அந்தியின் வெளிச்சமும் கலந்த வானம் சிவந்துகிடந்தது. அந்தச் சிவப்பின் பின்னால் அடிவானத்திற்குள் ஒளிந்துவிட்ட கதிரவனின் கைங்கரியமிருந்தது. தொலைவில் அந்தி வானை ஊடறுத்தபடி ஜெட் விமானமொன்று நிழலாக விரைந்து கொண்டிருந்தது. கேசவனின் மனதை எப்பொழுதும் இயற்கையும், அதன் வனப்பும், வாழும் உயிரினங்களும் கவர்ந்தவை. சிட்டுக்குருவிகளை, புறாக்களை, அணில்களின் வாழ்வை இரசிப்பதில், அவதானிப்பதில் பொழுது போவதே தெரியாமல் மெய்மறந்து நிற்பான். அவ்விதமான சமயங்களில் விரிந்து கிடக்கும் விண்ணைக் கிழித்தபடி விரைந்துகொண்டிருக்கும் பூமிப்பந்தினைப் பற்றி நினைத்துக்கொள்வான். விண்வெளியில் பூமிக்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு விரையும் பூமி எவ்விதம் தெரியுமெனச் சிந்தித்துப் பார்ப்பான். சிறியதொரு வாயுக் குமிழியாக விரையுமொரு குமிழி. ஆனால் உயிர்த்துடிப்புள்ளதொரு குமிழி. அந்தக் குமிழிக்குள்தான் எத்தனை விதமான உயிரினங்கள். பல்வேறு அறிவு நிலைகளில் பல்வகை உயிரினங்கள். அறிவு நிலையில் வேறு பட்டிருந்தபோதிலும், இனத்தைப் பெருக்குவதில், குழந்தைகளை வளர்த்தெடுத்து ஆளாக்குவதிலும் அனைத்தும் காட்டும் கடமை, பாசவுணர்வு எப்பொழுதுமே அவனைப் பிரமிக்க வைத்தன. அதே சமயம் விண்ணில் விரைந்து செல்லும் இந்த நீலவண்ணக் கோளுக்கு வெளியில் கவிந்து கிடக்கும் தனிமையும், வெறுமையும் ஒருவித அச்சத்தினையும், இந்தப் பூவுலகில் வசிக்கும் ஜீவராசிகள்பால் ஒருவித பரிவினையும் ஏற்படுத்தின. வெளியினூடு ஆயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் விரையுமிந்தக் கோளின் வேகத்தினையும் உணர முடியவில்லை. இதற்கு வெளியே விரிந்து, கவிந்து கிடக்கும் வெறுமையையும், தனிமையையும் உணர முடியவில்லை. உள்ளே நாடு, மதம், மொழி, இனம், சாதி.. என்று எத்தனை வேறுபாடுகள். குத்து வெட்டுகள். இந்தக் கோளும், இங்கு வாழும் உயிரினங்களும் எவ்வளவு கொடிய தனிமை சூழ்ந்த வெறுமைக்குள் வாழ்கின்றார்கள்? அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?
'டொராண்டோ'வில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஈழத்துத் தமிழ் அகதிகளில் கேசவனுமொருவன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து மேற்கு நோக்கிப் படையெடுத்தவர்களிலொருவன். வயது நாற்பதை எட்டிக்கொண்டிருந்தது. ஓரிரு நரைகளே தென்பட்டன. ஆனால் வலுவான உறுதியான உடல். இன்னும் திருமணம் செய்துகொள்ளாத தனிக்கட்டை. பிரமச்சாரி. அவனது பதின்ம வயதில் அனைவருக்கும் வருவது போல் அவனுக்கும் ஒரு பெண்மேல் ஈர்ப்பு வரத்தான் செய்தது. வந்த வேகத்திலேயே அது பறந்தோடி விட்டது. அதன் பிறகு நாட்டுச் சூழல் அவனை உலகின் பல்வேறு திக்குகளிலும் தூக்கியெறிந்து பந்தாடியதில் பொழுது சென்றதே தெரியவில்லை. எவ்வளவு விரைவாகக் காலம் ஓடிவிட்டது என்று பிரமித்தபோது காதோரம் நரை தட்டத் தொடங்கி விட்டிருந்தது. வயதும் நாற்பதை எட்டியிருந்தது. திருமணம் செய்யும் ஆசையே போய்விட்டது.
அபார்ட்மென்ட் வாசற் கதவைத்திறந்து யாரோ வரும் ஓசைகள் கேட்டன. எழுந்து சென்று பார்த்தான். அவனது 'ரூம்மெட்' 'டெட்லா'. எதியோப்பிய நாட்டினைச் சேர்ந்தவன். வந்தவனின் முகம் சிறிது வாடிக்கிடந்ததுபோல் பட்டது. எதற்காக இவன் வாடிக்கிடக்கின்றான். வந்தவன் கூடத்திலிருந்த சோபாவின் மேல் பொத்தென்று விழுந்தான். சிறிது நேரம் அமைதியாக, கண்களை மூடியபடி கிடந்தான்.
" ஹாய் டெட்லா, இன்றைக்கு இமிகிரேஷன் அலுவலாய்ப் போனாயே. என்ன நடந்தது? அது பற்றிச் சிறிது கூறு."
ஆங்கிலத்தில் அவர்களுக்கிடையிலான உரையாடல் ஆரம்பமானது. இதற்கு டெட்லா பின்வருமாறு பதிலிறுத்தான்: 'என்னைப் பற்றி யாருமே எதற்குமே கவலைப் படத்தேவையில்லை. சரி விசயத்திற்கு வருவோம். இன்று நான் யார் முகத்தில் விழித்தேனே தெரியவில்லை. 'பாவி போன இடமெல்லாம் பள்ளமும் திட்டிதான்'.
கேசவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது. போகும்போது எவ்வளவு உற்சாகத்துடன் சென்றான். என்ன நடந்தது. அவனது மனைவியும் , இரு குழந்தைகளும் கென்யாவில் அகதிகளாகத் தங்கியிருந்தார்கள். அவர்களை அவன் ஸ்பான்சர் பண்ணியிருந்தான். மூத்தவளுக்கு வயது பன்னிரண்டைத்தாண்டி விட்டிருந்தது. சிறு வயதிலிருந்தே அவனது செல்லக்குட்டி. அடுத்தவன் பையன். வயது ஆறுதான் ஆகின்றது. அவன் பிறந்த சமயம், அவனை ஒரு மாதக் குழந்தையாகத் தாயுடன் விட்டு விட்டு டெட்லா மேற்கு நோக்கி அகதியாகப் பயணித்திருந்தான். அதன் பிறகு எத்தனை வருடங்கள் சென்று விட்டன. அவனது குடும்பத்தவரும் கென்யாவில் வந்து தங்கவேண்டியேற்பட்டு விட்டது. அவன் ஸ்பான்சர் பண்ணியபோது ஒரு சிக்கல். அவர்களது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாத நிலையில் அவர்கள் அவனது குழந்தைகளென்று உறுதி செய்ய வேண்டும். அதற்கு இன்னுமொரு வழியிருந்தது. அவர்களது டிஎன்ஏயும் அவனுடையதும் ஒத்திருந்தால் போதுமானது. அதற்கான , மரபணுச்சோதனைக்கான பதில்தான் இன்று வந்திருந்தது.
கேசவன் கேட்டான்: "என்ன டெட்லா டிஎன்ஏ ரிசல்ட் வந்தாச்சுதா?"
டெட்லா மிகவும் தளர்ச்சியுடன், சோர்வுடன் பதிலளித்தான்: "இன்றைக்கு வந்திருந்தது"
கேசவன்:" அப்படியென்றால் இன்றோடு உன் கவலை போய்விட்டதென்று சொல். பின் ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரியிருக்கிறாய்?"
இதற்கு டெட்லா பின்வருமாறு கூறினான்:" பிரச்சினையே அங்குதான். யாரையுமே நம்ப முடியவில்லை. நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? எனக்கேன் இந்தமாதிரியெல்லாம் நடக்கிறது?"
கேசவனுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லைதான். டிஎன்ஏ டெஸ்டிங் நல்லதுதானே. சிறிது குழப்பத்துடன் டெட்லாவை நோக்கினான். டெட்லா மெதுவாகத் தொடர்ந்தான்: "அந்தக் குழந்தைகளின் ஒரு குழந்தையின் டிஎன்ஏ பொருந்தவில்லையாம்."
'என்ன!'
டெட்லா தொடர்ந்தான்: "எனது மூத்த குழந்தையின் டிஎன்ஏ பொருந்தவில்லையாம்."
கேசவனுக்கு உண்மையிலேயே உண்மையிலேயெ வியப்பாகவிருந்தது. டெட்லாவின் மீது இனம் புரியாததொரு பரிவு கலந்த உணர்வு எழுந்தது. டெட்லாவுக்கு மூத்தவளென்றால் உயிர். எந்த நேரமும் அவளைப் பற்றியே கூறிக்கொண்டிருப்பான். அப்படியென்றால் எப்படியிது சாத்தியம்? எவ்விதம் இதனை இவன் தாங்கிக்கொள்ளப் போகின்றான்?
எத்தனை வருடங்களாக அவன் தன் குடும்பத்தவரை அழைக்கவேண்டுமென்று கனவு கண்டுகொண்டிருந்தான்? அகதிக்கோரிக்கையில் சிறிது காலம் கழிந்தது. பின் 'லாண்டட் பேப்பர்' கிடைத்து ஸ்பான்சர் பணணுவதற்கு மேலும் சில காலம் சென்றது. எத்தனை கனவுகளுடன் வாழ்ந்திருந்தான். எதிர்காலக் கனவுகள் , திட்டங்களெல்லாம் எவ்விதம் சிதைந்து போயின. இவ்விதமான நேரங்களில் சிறிது ஆறுதலாக மனதை வைத்திருப்பது அவசியம். கேசவன் கூறினான்: "டெட்லா, வீணாக மனசை வருத்திக்கொள்ளாதே. நடப்பதைப் பற்றிச் சிந்திப்போம்."
இவ்விதம் கூறியவன் உள்ளே சென்று 'தெகிளாவும்' 'மார்கரிட்டாவும்' இரு கிளாஸ்களில் கலந்துகொண்டு வந்தான். அவனுக்கு 'தெகிளா'வை அறிமுகப்படுத்தியதே டெட்லாதான். டெட்லாவுக்கு மிகவும் பிடித்தமான மதுபானம் 'தெகிளா'. கேசவன் இரு கதிரைகளை பல்கணிக்குக் கொண்டு வந்தான். அவற்றில் அமர்ந்தபடியே தெகிளாவைச் சுவைக்கத் தொடங்கினர். சிறிது நேரம் அமைதியாக மதுவருந்தினர். முதலில் நிலவிய அமைதியினை டெட்லாதான் கலைத்தான்: "ஒரு விதத்தில் நீ கொடுத்து வைத்தவன்தான்"
கேசவன்: "ஏனப்படிக் கூறுகிறாய்? எந்தவிதத்தில் நான் கொடுத்துவைத்தவனெறு கூறுகின்றாய?"
டெட்லா: "உனக்கென்ன குடும்பமா? கவலையா? என்னைப் பார். நான் என்ன் கெடுதல் யாருக்குச் செய்தேன். எனக்கேன் இப்படியெல்லாம் நடக்கிறது? என் மனைவியை நினைத்தால் என்னால் நம்பவே முடியவில்லை. அவள் இப்படிச் செய்வாளென்று நான் கனவில்கூட நினைத்ததில்லை. அப்படியென்றால் நான் அங்கு வாழ்ந்திருந்த அந்தக் காலத்திலேயே அவள் எனக்குத் துரோகமிழைத்திருக்கிறாளா? அடக்கடவுளே! யாரை நம்புவது? யாரை நம்பாமலிருப்பது? "
இவ்விதம் கூறியவன் சிறிதுநேரம் மெளனமாகவிருந்தான். பின் தொடர்ந்தான்: "என் குழந்தையை நினைத்தால்தான் கவலையாயிருக்கு. அவளென்ன பாவம் செய்தாள்? குழந்தையிலிருந்து என் தோளிலும், மார்பிலும் போட்டு வளர்ந்த குழந்தையல்லவா அவள். எப்படி தாங்கப்போகிறாள்?
அச்சமயம் கேசவன் இவ்விதமாகத் தனக்குள் எண்ணினான்: 'ஒரு விதத்தில் அவன் கூறுவதும் சரிதான். நான் என் வாழ்க்கையை என்னிஷ்ட்டப்படியே அமைத்துக்கொள்வேன். என்னாலெவ்விதம் குடும்பம், பாசம், கடமையென்று உயிர் வாழ முடியும்?'. அச்சமயத்தில் டெட்லாவின் வாழ்க்கையைப் பற்றி ஒருகணம் நினைத்தான். அவனது அன்றைய நிலை வருத்தத்தைத் தந்தது. அந்த மூத்த பெண் குழந்தையின் மீது எவ்வளவு பாசத்தைக் கொட்டியிருக்கிறான் அவன். அந்தக் குழந்தையை இழந்து இவனால் வாழ் முடியுமா? எப்படி முடியும்?' இவ்விதமாக எண்ணங்கள் எழுந்தோடி மறைந்தன.
2.
கோடை தன் முடிவினை நெருங்கிக்கொண்டிருந்த நேரம். மெல்லிய குளிர் படர்ந்திருந்த நள்ளிரவு, நள்ளிரவு வானில் நகரத்து ஒளியினையும் மீறி ஆங்காங்கே ஓரிரு சுடர்க்கன்னிகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில் கிரகமொன்று முறைத்துப் பார்த்தபடியிருந்தது. அதே நேரம் அந்த நள்ளிரவில் பல்கணியில் நண்பர்களிருவரும் தக்கிளாவின் கணகணப்பில் உரையாடிக்கொண்டிருந்தார்கள். கேசவனுக்கு டெட்லாவின் கதை சிறிது அதிர்ச்சியைத்தந்திருந்தது. டெட்லாவுக்கோ இருப்பே வெறுப்பாகிக்கொண்டிருந்தது. அதை மறக்க அவன் அன்று மிகவும் அதிகமாகவே குடித்திருந்தான். அந்த நள்ளிரவில் நேரம் போவதே தெரியாமல் உரையாடுவதும், இடைக்கிடையே அமைதியிலாழ்வதுமாகவிருந்தார்கள். இவ்விதமான சமயங்களில் மனந்திறந்து உரையாடுவது நல்லதொரு மருந்தெனக் கேசவன் தனக்குள்ளாகவே எண்ணினான். அதன் விளைவாக அவன் டெட்லாவின் உரையாடலை ஊக்குவித்தபடியிருந்தான். இவ்விதம் டெட்லா தன்ம் மனதிலுள்ளவற்றைக் கொட்டுவது அவனது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்குமென்று கருதினான் அவன். அதே சமயம் அவனது மனதில் வேறொருவகையான எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. 'எதற்காக இந்த இருப்பு இவ்விதமிருக்கிறது? மானுடரின் குணங்கள் ஏனிவ்விதம் குற்றங்களைப் புரியும் வகையில் இயங்குகின்றன? எதற்காக டெட்லாவின் மனைவி இவ்விதம் நடந்து கொண்டாள்? இவ்விதமாக எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில் அவனுக்கோர் எண்ணமுதித்தது. அந்த எண்ணத்துடன் அவன் டெட்லாவிடம் கூறினான்:
"டெட்லா, வீணாக மனதைக் குழப்பிக்கொள்ளாதே. எனக்கென்ன தோன்றுகின்றதென்றால்.." என்று கூறிவிட்டுத் தன் உரையாடலினை நிறுத்திவிட்டு டெட்லாவை நோக்கினான். அதற்கு டெட்லா "கேசு, என்ன சொல்ல வருகிறாய்?"
கேசவன்: "இந்த டி.என்.ஏ சோதனை நூற்றுக்கு நூறு சரியானது என்று கூறுவதற்கில்லை. மில்லியன்களிலொன்று பிழைக்கலாம். சாத்தியமுண்டென்று படித்திருக்கிறேன். ஞாபகத்திலிருக்கிறது. இந்தச் சோதனை தவறாகவிருப்பதற்குப் பல காரணங்களிருக்கக்கூடும்."
டெட்லா இன்னுமொரு மிடறைத் தள்ளிவிட்டுக் கேசவன் கூறுவதையே கேட்டுக்கொண்டிருந்தான்.
கேசவன் தொடர்ந்தான்: "எதற்கும் அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாதே. இன்னுமொரு முறை சோதனை செய்து பார்க்கலாம். அதிலும் இதே முடிவுதான் வந்தால் பிறகு இதுபற்றிச் சிந்திக்கலாம்."
இவ்விதம் கேசவன் கூறியதும், அவற்றைக் கேட்டுக்கொண்டும், தனக்குள் சிந்தித்துக்கொண்டுமிருந்த டெட்லா ஒரு முடிவுக்கு வந்தவன்போல் தோன்றினான். ஒருவிதமான தெளிவு குழம்பிக்கிடந்த மனதில் பரவியதுபோலுணர்ந்தான். மனம் குழம்பிக்கிடக்கும் சமயங்களில் சிறிது அமைதியாகவிருப்பதும், அவசரப்படாமல் குழப்பத்துக்குக் காரணமான விடயத்தைப் பற்றி எண்ணுவதும், அது பற்றி உரையாடுவதும் நல்ல விடயங்களென்பதை டெட்லா அச்சமயத்திலுணர்ந்தான். அதற்காக அவனது மனதினுள் கேசவனுக்கு நன்றி கூறினான். அத்துடன் அவனுடனான உரையாடலினையும் தொடர்ந்தான்:
"கேசு, நானொரு முடிவுக்கு வந்திருக்கிறேன். உடனடியாக நான் கென்யாவுக்குப் போகப் போகின்றேன். நான் எப்பொழுது திரும்பி வருவேன்பது எனக்குத் தெரியாது. நீ வேண்டுமானால் உனக்கு யாராவது அபார்ட்மென்டைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்தால் ஏற்றுக்கொள். என்னைப்பற்றிக் கவலைப்படாதே. "
கேசவன்: "எப்ப போகப் போவதற்கு முடிவு செய்திருக்கிறாய்?"
டெட்லா: "இன்டர்நெட்டிலை இந்த இரவிலையே பிரயாண முகவரொருவரிடத்தில் பதிவு செய்யப்போகின்றேன். எல்லாம் சரியாக அமைந்தால் நாளைக்கே கூடப் பறக்கலாம். நான் உடனடியாகப் போவதே சரியென்று படுகிறது."
கேசவன்: "டெட்லா, ஏதாவது அவசரபட்டு முடிவொன்றும் எடுத்துவிடாதே"
டெட்லா:"பயப்படாதே கேசு, நானொன்றும் அவ்வளவு முட்டாளல்லன். நான் நேரடியாகவே என் மனைவியிடம் கேட்கப்போகின்றேன். அவள் நிச்சயம் எதுவும் நடந்திருந்தால் உண்மையினைக் கூறுவாளென்று நினைக்கிறேன். என் மகளை நினைத்தால்தான் நெஞ்சு வெடிக்கிறது. அவளை என் மகளில்லை என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்தத் தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்தவன். நான் உடனடியாகச் செல்வதற்கு அவளுமொரு காரணம். அவளுக்கு வங்கியிலொரு 'டிரஸ்ட்' கணக்கொன்று தொடங்க வேண்டும். அவளது எதிர்கால வாழ்க்கை எனக்கென்ன நடந்தாலும் பாதிக்கப்படக் கூடாது. என்ன நடந்தாலும் அவள் என் குழந்தை. அதிலெவ்வித மாற்றமுமில்லை."
இவ்விதம் கூறிவிட்டுட் டெட்லா சிறிது நேரம் அமைதியாகவிருந்தான். இச்சமயம் கேசவன் தனக்குள் சிந்திக்கலானான். டெட்லாவின் கூற்றும், மகள் மீதான கவலையும் அவன்மீதான மதிப்பினை இன்னும் அதிகரிக்கவே செய்தது. இன்னுமொருவனென்றால் இவ்விதமானதொரு சூழலில் , பொறுமையிழந்து யாருக்கோ பிறந்தவள்தானேயென்று மகளை நிராகரித்துவிடக்கூடும். ஆனால் டெட்லா அவ்விதம் நடந்துகொள்ளவில்லை. குழந்தையின் நல்லவிதமான எதிர்காலத்தைப்பற்றித்தானே நினைக்கின்றான். கவலையுறுகின்றான். இவனைப்போல் எத்தனைபேரை இந்த உலகில் காணமுடியும்? உண்மையிலேயே அந்தக் குழந்தையின் தந்தை அவனில்லையென்றால் கூட, அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது. அந்தக் குழந்தையின் மீதான அவனது பாசம், உறவு மிகவும் வலிமைமிக்கதென்று அவன் அச்சமயம் தனக்குள் உணர்ந்தான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி: தினகரன் வாரமஞ்சரி, டிசம்பர் 20, 2020