எழுத்தாளர் ஹம்சத்வனி (தமிழ்ச்செல்வன் கனகசுந்தரம்) எண்பதுகளில் என் கவனத்தையீர்த்த கவிஞர்களிலொருவர். க.தமிழ்ச்செல்வன் என்னும் பெயரில் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதுவரை இவரது மூன்று கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'சிறைகளில் இருந்து' , 'அக்கரைக்குப் போன அம்மாவுக்கு' மற்றும் 'முடிவிலும் அழியாதது' ஆகியவையே அவை. இவற்றில் 'அக்கரைக்குப் போன அம்மாவுக்கு' என்னிடமிருந்தது. அண்மையில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. நண்பர் யாரோ எவருக்கோ வாசிக்கக் கொடுத்திருக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகக் கவிஞர்களென்றால் முதலில் நினைவுக்கு வரும் மூவர்: சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் & ஹம்சத்வனி.
அண்மையில் நூலகத்தில் இவரது 'முடிவிலும் அழியாதது' கவிதைத்தொகுப்பை வாசித்திருந்தேன். தொடர்ந்து இவரும் முகநூலினூடு தொடர்புக்கு வந்தார். இரண்டுமே தற்செயலாக நடந்தவை. ஆனால் அத்தற்செயல்களுக்கிடையில் நிலவிய ஒற்றுமை என்னை வியக்க வைத்தது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கவிதை நடை பிடித்திருக்கும். தேவைக்கதிகமாகப் படிமங்கள் நிறைந்து, விடுகதை போடும், வெட்டி முறித்த கவிதைகளை என்னால் ஒருபோதும் சுவைத்திட முடிந்ததில்லை. ஆற்றொழுக்குப்போன்ற தெளிந்த நடையில்., அவ்வப்போது படிமத்தாமரைகள் பூத்திருக்கும் கவிதைவாவிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்ன இவன் படிமங்களை எதிர்த்துகொண்டு படிமத்தாமரைகள், கவிதைவாவிகள் என்று படிமங்களை அள்ளித்தெளிக்கின்றானென்று பார்க்கின்றீர்களா? நான் கூறவந்தது தேவைக்கதிகமான படிமங்களின் தேவை தேவையில்லையென்பதையே. ஹம்சத்வனியின் கவிதைகள் அததகையவை.
கவிஞர் ஹம்சத்வனியின் எழுத்து நடை எனக்குப் பிடிக்கும். மனத்தைத்தொட்டு, வருடிச்செல்லும் நடை. அண்மையில் வாசித்த இவரது 'முடிவிலும் ஆழியாதது' கவிதைத்தொகுதியிலிருந்து என் கவனத்தையீர்த்த கவிதை வரிகளை இங்கு பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன்.
கிராமம் என்னும் தலைப்பில் இவர் மூன்று கவிதைகளைத் தொகுப்பில் சேர்த்திருக்கின்றார். இவற்றில் இவர் தன் கிராமம் பற்றிய எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார். முதலில் போர்ச்சூழலால்இருளடைந்த கிராமத்தை அறிமுகப்படுத்தி, பின்னர் அதன் ஒளிமிகுந்த காலத்தை நினைவு கூர்ந்து, தொடர்ந்து போரின் வடுக்களை வெளிப்படுத்தி இறுதியில் இருளடைந்த கிராமம் மீண்டும் உயிர்ப்புறும் என்ற நம்பிக்கையில் முடிகின்றது.
என் பால்ய காலம் இயற்கை வளம் மலிந்த வன்னியில் கழிந்தது. இக்கவிதையினை வாசிக்கையில் எனக்கு அக்காலகட்ட நினைவுகளே படம் விரித்தன. தாமரைகள் பூத்த தடாகங்கள், தொட்டாற் சிணுங்கிகள், மீனோடும் வாய்க்கால்கள், பாலைப்பழங்கள், கட்டாக்காலிகள், செம்மண் வீதிகள், வானம் தொடச் சலித்திருக்கும் மருதைகள், மாமரங்கள் எல்லாம் அக்காலகட்டத்துக்கே என்னைத்தூக்கிச் சென்று விட்டன. காலைவேளைகளில் குருமண் காட்டிலிருந்து வவுனியா மகாவித்தியாலயத்துக்குச் செல்கையில் எதிர்படும் இயற்கை வளம் மிகுந்த சூழலில் நாமடைந்த அனுபவங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன. இதயத்தை மென்மையாக வருடிச்சென்றன ஹம்சத்வனியின் வரிகள்.
தொகுப்பில் என் கிராமம் - 1, என் கிராமம் - 1 & என் கிராமம் - 3 என்று வெளியாகியிருந்த மூன்று கவிதைகளையும் என் கிராமம் என்று ஒரு கவிதையாக இறுதியில் இணைத்துள்ளேன். இவ்விதம் மூன்று கவிதைகளையும் ஒன்றாக்கி வாசிக்கும்போதுதான் அக்கிராமம் பற்றிய பூரண சித்திரம் கிடைக்கிறது.
தொகுப்பிலுள்ள கவிதைகளில் என்னக் கவர்ந்த, நெஞ்சைத்தொட்ட வரிகளில் சிலவாகப் பின்வருவனற்றைக் கூறுவேன்:
1.
"காற்றுப் போன்றது வாழ்க்கை.
புதியாய் எதனையும் சொல்லத்தவறிய
புத்தகம் போல் பொழுதுகள்" ('உள்ளும், வெளியும்')
2.
'சப்பாத்துகளின் அடியில்
சப்திக்கா சருகுகள்' ('சருகு')
3.
"நாடோடிக்காற்று' ('நாடோடிக்காற்று')
4.
'நிலத்துக்கும் முகிலுக்கும்
தந்து கட்டி
தம்பூரா வாசிக்கும் மழை' ('சுவாசம்')
5.
'வீதியில்
காத்துக் கிடக்கிறது வாழ்க்கை
முகமூடி அணிந்தபடி' ('ஜாஸ்')
6.
'நான் வந்து விழுந்த
இந்த நகரத்தில்
தொலைந்தது என் முகம்.
அடை காத்தது அறை' ('பச்சை')
7.
'வெறி பிடித்தலையும் நினைவுகளைக்
கட்டி வைக்கவென்று ஒரு தொழுவமில்லை' ('தூறல்')
இவ்வரிகளுக்குப் பின் சிறப்பானதொரு படிமம் நினைவுகள் பற்றி மறைந்துள்ளது. நினைவுமாடு கட்டுக்கடங்காமல் முரண்டு பிடிப்பதை எத்துணை சிறப்பாகக் கவிஞர் கையாண்டிருக்கின்றார்.
********
என் கிராமம்
என் கிராமம் இருளடைந்தது
இப்படித்தான்.
ஆம்பலும் தாமரையும்
பூத்துக் கொழித்த குளங்களில்
பாசி படர்ந்து
நெல் விளைந்த கழனியில்
தொட்டாற் சிணுங்கி நாயுருவி அடர்ந்து
மாமர ஊஞ்சல்களின்
கயிறுகள் இற்றுப்போய்
பலா மரங்களின் அடியில்
சருகுக்ள் குவிந்து
பழங்கள் அழுகி விழுந்து
முற்றங்களில் முள்ளி முளைத்து
இருளடைந்தது
என் கிராமம்.
போருக்கு முந்தைய அமைதியான
நாட்களில்
மாரி பொழியவும் குளங்கள் நிறைந்தன.
நீர் வார்ந்தோட
செம்மண் வீதியில் பொன்மணற் படிவுகள்.
காற்றினோடு மாவிலை கதைக்க
பேட்டினோடு சேவல் கலக்க
மஞ்சள் மஞ்சளாய்
உழுந்தின் பூக்கள்.
கடல் நண்டுகளாய்
கலப்பைகளை உயர்த்தியபடி
விடியும்வரை உழவியந்திரங்கள்
விடிந்த பின்
வீதி எங்கணும் சிதறிய களிமண்
திரட்டி நான்
பிடித்த பிள்ளையாருக்கு
வாகைப் பூவை சூடிப்பார்ப்பாள்
தங்கை.
மீனோடும் வாய்க்காலோடு
மிதப்போம் நாங்கள்.
பள்ளி விட்டதும்
பாலைப் பழங்கள் பறிப்போம்.
இப்படி இப்படி
கழிந்தன நாட்கள்.
போருடனான இந்த நாட்களிலும்
மாரி பொழிய குளங்கள் நிறைந்தன.
செம்மண் வீதியில்
செந்நீர் தெளியல்.
கிராமக் கோடியில் ஓடும்
நறுவிழியாற்றின் கரைகளில்
சரசரப்பு.
ஒத்திசைந்தோடிய
வாழ்வின் இயக்கத்தை
மிதித்து நெரித்தது காலம்.
மூச்சற்றுக் கிடக்கிறது
எங்கள் கிராமம்.
சிலுவை யேசுவை
சிலந்தி மூடிற்று.
பிள்ளையார் பலிபீடத்தில்
களிம்பு படர்ந்தது.
எனினும் -
கிராமத்தின் இருப்பைக் காட்ட
உரம் கொண்ட கட்டாக் காலிகளும்
வானம் தொட சலித்திருக்கும் மருதைகளும்
இனியோர் நாளில்
எங்கள் கிராமம் உயிர்ப்புறும்.
* தொகுப்பினை வாசிக்க: https://noolaham.net/project/636/63598/63598.pdf