'ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்' என்னுமொரு கட்டுரையை அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கின்றார் (https://www.jeyamohan.in/119092… ) அதனை எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைப்பதிவில் மறுபிரசுரம் செய்து தட்டிக்கொடுத்திருக்கின்றார். இளம் எழுத்தாளரைத் தட்டிக்கொடுத்து ஆதரிப்பது நல்ல விடயமே. அக்கட்டுரையின் ஆரம்பத்தில் அவர் எழுதிய பின்வரும் கருத்துகளைக் கவனியுங்கள்:
"தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான்."
ஷோபாசக்தி, ஜெயமோகன் ஆகியோர் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய படைப்பாளிகள். ஆனால் அவர்களை டால்ஸ்டாயுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிட முடியுமா? சிறிது அதிகமாகத்தெரியவில்லையா?
இலக்கியமென்பது அலைக்கழிப்பு உள்ளவர்களாலும் . அவ்விதமில்லாதவர்களாலும் படைக்க முடியும். அவர்களை வரிசைப்படுத்துகையில் அவர்களது படைப்புகளின் சிறப்பின் அடிப்படையில் குறிப்பிடுவதே சிறந்தது. வெகுசனப்பத்திரிகையில் பல்வேறு வாழ்க்கைப்போராட்டங்களில் சிக்கி,உழைப்புக்காக மர்மக்கதைகள்படைக்கும் எழுத்தாளர் ஒருவரையும் டால்ஸ்டாய்க்குப் பக்கத்தில் வைத்து இவ்விதமான கூற்றின் அடிப்படையில் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?
தனிப்பட்ட வாழ்க்கையில் அலைகழிப்பும் துயரமும் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பதை மட்டும் காரணமாக வைத்து இவ்விதமாக ஒப்பிட முடியுமா? இதனை வாசிக்கும் ஒருவருக்குக் கட்டுரையாளர் இந்த ஒரு விடயத்துக்காக மட்டும் இவ்விதமொரு வரிசையைச் சுட்டிக்காட்டுகின்றார் என்பது புலப்படாது. டால்ஸ்டாய் என்னும் படைப்பாளியின் படைப்புகளூக்கு ஈடாக ஏனைய படைப்பாளிகளும் ஒப்பிடப்பட்டிருக்கின்றார்கள் என்றுதான் புலப்படும்.
இதுபோல் இன்னுமொரு வரிசை: "அதேநேரம் லௌகீக உலகில் அலைக்கழிப்பு இன்றி அகத்தத்தளிப்பில் நல்லிலக்கியம் படைத்தவர்களும் இருக்கிறார்கள்தான். ஆ.மாதவன், சுந்தரராமசாமி, பூமணி, அ.முத்துலிங்கம், இமையம், கலாமோகன் என்று ஒரு வரிசையை அதற்குச் சொல்லமுடியும். அலைக்கழிப்பும் அனுபவங்களின் செறிவும் ஒருபோதும் இலக்கியத்தின் முக்கிய அடிப்படையாகக் கொள்ள இயலாது." இவ்விதமான மயக்கத்தினைத்தரும் இன்னுமொரு வரிசை இது.
இதற்குப்பதிலாகக் கட்டுரையாளர் மேற்படி எழுத்தாளர்களின் படைப்புகளின் உள்ளடக்கம், மொழி, பாத்திரப்படைப்பு போன்ற அம்சங்களின் அடிப்படையில் ஒப்பிட்டிருக்கலாம். மேலுள்ள ஒப்பிடுதலில் கட்டுரையாளர் புரிந்துள்ள தந்திரம் என்னவென்றால்? அக்கூற்றுகள் இரண்டிலும் கட்டுரையாளர் மேற்படி படைப்பாளிகளின் படைப்புகளை வைத்து அவர்களை ஒரே தட்டில் வைக்கவில்லை. 'தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவம் உள்ளவர்கள், அவ்விதம் இல்லாதவர்கள்' என்னும் அடிப்படையில்' மட்டுமே குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் கட்டுரையை வாசிக்கும் ஒருவருக்கு அவர்கள் அவர்கள்தம் எழுத்துகள் காரணமாக ஒப்பிடப்பட்டிருக்கின்றார்கள் என்னும் கருத்து மயக்கத்தினைத் தரும் கூற்றுகள் இவை. ஏற்கனவே இவர்கள் சிறப்பான எழுத்தாளர்கள் என்று தீர்மானித்துவிட்டு, மேற்படி கூற்றுகளின் அடிப்படையில் (அவர்களின் படைப்புகளின் சிறப்பின் அடிப்படையில் அல்ல) அடிப்படையில் அவர்களை ஒப்பிட்டிருக்கின்றார்.
இக்கட்டுரை முழுவதும் இலங்கைத்தமிழ்ப்படைப்புகள் பற்றி, இலங்கைத்தமிழ் விமர்சகர்கள் பற்றிய போதிய ஆய்வற்று, ஜெயமோகன், மு.தளையசிங்கம் போன்றோர் வைக்கும், வைத்த கருத்துகளின் அடிப்படையில் , இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய சொற்பதங்களை அதிகம் பாவித்து சொற் சிலம்பமாடியிருக்கின்றார் அனோஜன் பாலகிருஷ்ணன். வாசிக்கையில் பெரும் மலைப்பை ஏற்படுத்தும். முடிவில் இவர் ஆடியிருப்பது சொற்சிலம்பமே தவிர வேறல்ல என்பது புலப்படும்.
மேலும் ஈழத்தமிழ் இலக்கியம் மொழி, வட்டாரவழக்கு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் அடிப்படையில் வித்தியாசமானது. தமிழக எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைத் தமிழகச் சூழலில் வைத்து எடை போடுகின்றார்கள். அது தவறு.
பேராசிரியர் கைலாசபதி ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான திறனாய்வாளர். மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படையில் படைப்புகளை அணுகியவர். இலக்கியமென்றால் அதில் பல்வேறு பிரிவுகளும் இருக்கத்தான் செய்யும். மார்க்சிய இலக்கியம் ஒருவகை. அவ்வகை இலக்கியமும் இலக்கியத்தின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளாமல் கைலாசபதி பற்றிக்குறிப்பிடுகையில் 'கைலாசபதி ஏன் ஓர் விமர்சகர் இல்லை என்பதை மேலே குறிப்பிட்டாகிவிட்டது. அவர் சமூகத்தை அளக்க இலக்கியத்தை பயன்படுத்த முனைந்தாரே தவிர இலக்கிய விமர்சகர் இல்லை' என்று குறிப்பிடுகின்றார் கட்டுரையாளர். கைலாசபதி ஏன் ஓர் விமர்சகர் இல்லை என்பதை மேலே குறிப்பிட்டாகிவிட்டது என்பது தவறானது. மேலே எங்கும் அவ்விதம் குறிப்பிடப்படவில்லை. மு.த கைலாசபதியை விமர்சிக்கின்றாரே தவிர , கைலாசபதியை விமர்சகர் அல்லர் என்று எங்கும் குறிப்பிடவில்லை. அனோஜன் பாலகிருஷ்ணனே இக்கூற்றை இக்கட்டுரையில் முன்வைக்கின்றார்.
மார்க்சியக் கட்சியில் இருப்பதால் தரமான இலக்கியங்களைப்படைக்க முடியாதா? நோபல் பரிசு பெற்ற மைக்கல் ஷொலகாவ் கட்சிக்காரர். நோபல் பரிசையும் பெற்றவர். மார்க்சிம் கார்க்கி அத்தகையவர். கட்சிக்காகத் தன் கலை, இலக்கியச் செயற்பாடுகளை முன்வைத்தவர். அவரது 'தாய்' இன்று உலக இலக்கியங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகின்றது.
மேற்படி கட்டுரையில் அனோஜன் கூறிய விடயங்கள் ஒவ்வொன்று பற்றியும் ஒவ்வொன்றாக என் கருத்துகளைத் தொடர்ந்தும் பதிவு செய்வேன். நீங்களும் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். உங்கள் கருத்துகளை அனோஜன் பாலகிருஷ்ணனின் கட்டுரையின் உள்ளடக்கத்தின் அடிபடையில் கூறுங்கள்.
இக்கட்டுரைக்கான முகநூல் எதிர்வினைகள்:
Vadakovay Varatha Rajan தி ஜானகிராமன், சட்டநாதன் செங்கைஆழியான், இ .முருகையன் , வண்ணநிலவன் ,கி. ராஜநாராயணன் , தகளி சிவசங்கரப்பிள்ளை ---- ஆகியோர் சொந்த வாழ்க்கையில் அழைக்கழிப்பும் துயரமும் நிறைந்தவர்களா ?
Giritharan Navaratnam இலக்கியமென்பது அலைக்கழிப்பு உள்ளவர்களாலும் . அவ்விதமில்லாதவர்களாலும் படைக்க முடியும். அவர்களை வரிசைப்படுத்துகையில் அவர்களது படைப்புகளின் சிறப்பின் அடிப்படையில் குறிப்பிடுவதே சிறந்தது. வெகுசனப்பத்திரிகையில் பல்வேறு வாழ்க்கைப்போராட்டங்களில் சிக்கி,உழைப்புக்காக மர்க்கதைகள்படைக்கும் எழுத்தாளர் ஒருவரையும் டால்ஸ்டாய்க்குப் பக்கத்தில் வைத்து இவ்விதமான கூற்றின் அடிப்படையில் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? இங்கு ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய போதிய ஆய்வற்று, மு.த, ஜெயமோகன், பகீரதன், வண்ணநிலவன் போன்ற சிலரின் எழுத்துகளின் , கூற்றுகளின் அடிப்படையில் சொற்சிலம்பம் ஆடியிருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் ஈழத்தமிழ் இலக்கியம் மொழி, வட்டாரவழக்கு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் அடிப்படையில் வித்தியாசமானது. தமிழக எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைத் தமிழகச் சூழலில் வைத்து எடை போடுகின்றார்கள். அது தவறு.
Pena Manoharan கி.ரா.வை இந்த பிரிவுக்குள் கொண்டு வந்ததேன்.அவர் கரிசல் காட்டில்...வானம் பார்த்த பூமியில் பிறந்து உழன்று Giritharan Navaratnam சொன்னதுபோல் அலைக்கழிப்புற்ற வாழ்க்கையை வாழ்ந்தவர்.கடந்த சில வருடங்களாகத்தான் புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்...
Vadakovay Varatha Rajan Pena Manoharan வேப்பண்ணா , கி ரா .இடைச்செவல் கிராமத்தில் வசதியாக வாழ்ந்தவர் என்றுதான் அறிந்தேன் . ஒரு பேட்டியில் தான் எந்த ஒரு வேலையும் செய்யவில்லை என்று கூறி உள்ளார்
Kokula Ruban முற்போக்கு இலக்கிய அணி மற்றும் கைலாசபதி- சிவத்தம்பி குறித்த விமர்சனங்கள் எல்லாமே முன்னம் சொல்லப்பட்டு வந்த தடாலடித்தனங்கள்தான். அனோஜன் மற்றவர்களிடம் தேடல் குறைவு என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் உரிமையைப் பெற வேண்டுமாயின் அவர் சுயமாக இன்னும் நிறையத் தேடிக் கண்டடைய வேண்டும்.
Rajaji Rajagopalan அனோஜன் வளர்ந்துவரும் எழுத்தாளர் அதனால் வரவேற்போம். ஆனால்.. (யாரப்பா இந்த ஆனால் என்ற சொல்லைக் கண்டுபிடித்தது?)
Vasan Svs அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து------- இன்று இவர்கள் தொழுகின்ற மு.தளையசிங்கம் தனது ‘மெய்யுள்’ நூலில் மெய்முதல்வாதம் கட்டுரையில் “இன்று முழு உலக இலக்கிய வளர்ச்சிக்கும் ஈழத்தமிழ் இலக்கியப் போக்கே தலைமை தாங்குகின்றது” என்று எழுதியவர். இது குறித்து இவர்கள் எல்லோரும் ’கப்சிப்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.