தேடி எடுத்த கவிதை இது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை. இந்தக்கவிதையை எழுதியவர் ஆதிசங்கரர். இந்து சமயத்தில், ஆதிசங்கரருக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவர் இருப்பை விளக்க உருவாக்கிய தத்துவம் அத்வைதம். அவரது கொள்கையின்படி இப்பிரபஞ்சத்தைப்படைத்தவரும், இங்குள்ளவர்களும் ஒரே சக்தியின் வடிவங்களே. ஜீவாத்மா (சகல உயிரினங்களும்) , பரமாத்மா (இறைவன்) இரண்டும் ஒன்றே என்று கூறுவது அத்வைதம். கருத்துமுதல்வாதம் கடவுளை வேறான தனியானதொரு சக்தியாகவும், கடவுளால் படைக்கப்பட்டதே நாம் காணும் இப்பிரபஞ்சமும் என்று கூறும். பொருள்முதல்வாதமோ நாம் காண்பது மட்டுமே உண்மை. அதற்கும் வேறாக ஒன்றுமேயில்லை என்று கூறும். ஒருவிதத்தில் மாகவி பாரதியை அத்வைதவாதி என்று கூறலாம். அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையின் இறுதி முடிவு 'காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிவதைப்பார்க்கையில் அவ்விதம்தான் எண்ணத்தோன்றுகின்றது. அக்கூற்றின்படி காணும் பொருளும், அதனை உருவாக்கிய சக்தியும் ஒன்று. இதனைத்தானே ஆதிசங்கரரின் அத்வைதமும் கூறுகின்றது.
ஆதிசங்கரின் அந்த மொழிபெயர்ப்புக் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி. அவர் மேற்படி கவிதையினை 'ஏகசுலோகி' என்னும் பெயரில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கின்றார்.லது தினகரன் வாரமஞ்சரி மே 31, 1967 பதிப்பில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதையைக் கீழே தருகின்றேன்.
இந்தக் கவிதையை மொழிபெயர்த்ததன் மூலம் அ.ந.க.வின் அறிவுத்தாகமெடுத்தலைந்த அவரது மனதை அறிய முடிகின்றது. உண்மையில் இந்தக் கவிதை ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை எளிமையாக விளக்கும் கவிதை. தர்க்கரீதியாகத் தனது வாதத்தை இக்கவிதை மூலம் வைக்கின்றார் ஆதிசங்கரர். மார்க்சிய அறிஞருக்கு ஆதிசங்கரரின் அத்வைதத்திலென்ன ஈடுபாடு என்று யாரும் கேட்கலாம். மார்க்சிய அறிஞர்கள் முட்டாள்தனமாக ஒன்றை நம்புவதில்லை. உள்ள தத்துவங்கள் அனைத்தையும் அறிந்த பின்னரே , மார்க்சிய அடிப்படையில் அவற்றை தர்க்கரீதியாக விவாதித்தே தம் நிலைப்பாட்டுக்கு வருகின்றார்கள். கருத்துமுதல்வாதிகளுக்கும், பொருள்முதல்வாதிகளுக்குமிடையிலொரு பாலமாக ஆதிசங்கரர் நிற்பதையே அவரது அத்வைதக் கொள்கை புலப்படுத்துகிறது. காண்பதை மாயை என்று அவர் கருத்துமுதல்வாதிகளைப்போல் ஒதுக்கித்தள்ளவில்லை. அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொண்டு, படைப்புச்சக்தியின் வடிவமாகக் காண்கின்றார். அதனை அவர் கூறியது ஏழாம் நூற்றாண்டில். மார்க்சியர்களைப்பொறுத்தவரையில் பொருளே உண்மை. அதற்கும் மேலானதொரு சக்தி இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மார்க்சிய அறிஞரான அ.ந.க.வுக்கு பொருளை விட வேறானதொரு சக்தி இருப்பதை வலியுறுத்தும் கருத்துமுதல்வாதத்தைவிட, பொருளை மாயையாகக் கருதும் கருத்துமுதல்வாதத்தைவிட, பொருளை உண்மையாக ஏற்று, அதனை படைப்புச்சக்தியின் வடிவமாக இரண்டும் ஒன்றே என்று கருதும் ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம் ஒருபடி மேலானதாகத்தோன்றியிருக்க வேண்டுமென்று தென்பட்டிருக்குமோ என்றொரு எண்ணமும் தோன்றுகின்றது. இவ்விதமான அவரது தத்துவம்தான் அ.ந.க.வைக் கவர்ந்திருக்க வேண்டுமென்று நான் கருதுகின்றேன்.
மேலும் இம்மொழிபெயர்ப்புக்கவிதைக்கோர் முக்கியத்துவமுண்டு. ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.க மொழி பெயர்த்த ஆதிசங்கரர் கவிதையென்பதுதான் அது. இந்தக் கவிதையை மொழிபெயர்த்ததன் காரணம் ஏன் என்பதை அ.ந.க எங்கும் கூறியிருப்பதாகத்தெரியவில்லை. இக்கொள்கையைப்பற்றியும் அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்று அவர் நினைத்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
இந்தக்கவிதை குருவுக்கும் , சீடனுக்குமிடையிலான உரையாடலாக ஆரம்பமாகித் தொடர்ந்து இறுதியில் குருவின் விளக்கத்துடன் முடிவடைகின்றது.
குரு சீடனிடன் கேட்கின்றார்: பகலில் உனக்குக் காட்சிகளெல்லாம் தெரிகின்றதே. உன் பார்வைக்கு உதவும் அந்த விளக்கு எது. எந்த விளக்காலே பார்வையினை நீ பெறுகின்றாய்?
அதற்குச் சீடன் கூறுகின்றான்: ஐயா இந்த உலகை ஆதவன் உதவியினால் பார்க்கின்றேன்.
குரு: அப்படியென்றால் இரவில் நீ பார்வையை எவ்விதம் பெறுகின்றாய்?
சீடன்: விளக்குகளால் , வெண்ணிலாவினால், மின்னலினால் நான் இருட்டிலும் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது.
குரு: தீபம், மின்னல், திங்கள் உதவிகொண்டு நீ பார்ப்பதற்கு உதவுவது எது>
சீடன்: என் கண்கள் வாயிலாக அவற்றின் உதவியுடன் இந்த உலகை நான் காண்கின்றேன்.
குரு: நல்லது. அப்படியானால் கண்கள் தூங்குகையில் உன்னால் எவ்விதம் காட்சிகளைக்காண முடிகின்றது? தூக்கத்திலும் காட்சிகளை நாம் காண்கின்றோமல்லவா?
சீடன்: கண்கள் தூங்குகையில் என் மனதால் காட்சிகளை நான் காணுகின்றேன்.
குரு: மனம் என்று கூறுகின்றாயே. இந்த மண்ணில் மனதை அறிந்தவர் யார்?
சீடன்: இந்த மண்மீது நானே மனம். நானும் மனமும் ஒன்றே.
குரு: மகிழ்ச்சி சீடனே. நன்றாகவே கூறினாய். இந்த உலகின் காட்சியெல்லாம், ஒளியெல்லாம் நீயேதான். இவையெல்லாம் தெரிவதற்குக் காரணமே நீ தான். ஆக, ஒளிதான் நீ. நீ தான் ஒளி.
இவ்விதமாகத்தான் ஆதிசங்கரரின் கவிதையின் கருத்தை நான் விளங்கிக்கொண்டேன். அந்தக் கவிதையின் முழுவடிவமும் கீழே அ.ந.க மொழிபெயர்ப்பில்.
ஆதிசங்கரரின் 'ஏகசுலோகி' என்பதன் ஆங்கிலவழித்
தமிழாக்கம்! தமிழில்: அ.ந.கந்தசாமி
பகலில் எந்த விளக்காலே
பார்வை நீயும் பெறுகின்றாய்?
ஐயா அந்த ஆதவனால்
அதனை நானும் பெறுகின்றேன்!
இரவில் எந்த ஒளியாலே
இவண் நீ பார்வை பெறுகின்றாய்?
தீபத்தாலே மின்னலினால்
திங்கள் நிலவால் பெறுகின்றேன்.
தீபம் மின்னல் திங்களினைத்
தெரியக் காண்பதெதனால் நீ!
கண்களிரண்டால் அவை கண்டேன்.
கண்ணே காட்சி காட்டிடுமே!
கண்கள் மூடும் காலையிலே
காண்பதெதனால் காட்சிகளை.
மனதால் அவற்றைக் காண்கின்றேன்.
மனதே கண்ணும் ஆகியதே!
மனமே என்றாய் மனத்தினையே.
மண்ணில் அறிந்தார் யாருளரோ?
நானே மனமாம் நிலமீது.
நானும் மனமும் ஒன்றேயாம்.
மனிதா நன்கே சொன்னாய் நீ.
மங்கா ஒளியும் நீயேதான்!
உன்னால் தானே உலகினிலே
உள்ள வெல்லாம் ஒளியாகும்.
நன்றி: தினகரன் வாரமஞ்சரி மே 31, 1967.