அறிமுகம்
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான, விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள். மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.
இது பற்றி அ.ந.க. நாவலின் முடிவுரையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்: "
நடை என்பது ஒருவனின் உடையைப் போல. சாமுவேல் பட்லர் என்ற ஆங்கில எழுத்தாளர் எந்தக் கலையிலுமே “ஸ்டைல்” (Style) அல்லது “நடை” என்பது நாகரிகமான உடையைப் போல இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். அது பார்ப்பவர்களின் கவனத்தை மிக மிகக் குறைவாக ஈர்க்க வேண்டுமென்பது அவரது கருத்து. அநாவசியமான “ஜிகினா” வேலைப்பாடுகள் உள்ள உடை கூத்து மேடைக்கோ, வீதியில் வெற்றிலை விற்பனை செய்பவனுக்கோ தான் பொருத்தம். ஸ்டீபன் ஸ்பெண்டர் இதனை இன்னும் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு நடையே இல்லையாம். எடுத்த இவ்விஷயத்தை எவ்விதம் சொன்னால் தெளிவும் விளக்கமும் ஏற்படுகிறதோ அவ்விதம் சொல்லிச் செல்வதை விட்டு செயற்கையான மேனிமினுக்கு வேலைகளை மேற்கொள்வதைப் பண்பும் முதிர்ச்சியும் பெற்ற எழுத்தாளர்கள் இன்று முற்றாக ஒதுக்கி வருகிறார்கள். இயற்கைக்கு மாறான செயற்கை நடைகளை வருவித்துக் கொண்டு எழுதுபவர்கள் சொந்த மயிருக்குப் பதிலாக டோப்பா கட்டிக் கொண்டவர்களை ஞாபகமூட்டுகிறார்கள். சிரில் சொனோலி (Cyril Chonolly) என்ற ஆங்கில விமர்சகர் இயற்கையான நடையில் எழுதுபவர்களை “அவர்கள் சொந்த மயிருடன் விளங்குபவர்” என்று பாராட்டுகிறார். வீதியில் யாராவது இயற்கைக்கு மாறாக ராஜ நடை போட்டு நடந்தால் நாம் அதைப் பார்த்துச் சிரிக்கிறோமல்லவா? இலக்கியத்திலும் இதே நிலைதான். மனக்கண்”ணை நேரிய ஒரு நடையிலேயே நான் எழுதியிருக்கிறேன். நான் வாசகர்களுக்குக் கூற வந்த பொருளின் தெளிவே என் குறிக்கோள். அதனால் தான் பாத்திரங்களின் பேச்சிற் கூட ஒவ்வொரு பிரதேசத்தினருக்கே விளங்கக் கூடிய பிரதேச வழக்குகளை மிகவும் குறைத்து பொதுவாகத் தமிழர் எல்லோருக்குமே விளங்கக் கூடிய சரளமான ஒரு செந்தமிழ் நடையை நான் கையாள முயன்றிருக்கிறேன். இதனால் தான் இக்கதை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் மலை நாட்டிலும் ஏக காலத்தில் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது."
அ.ந.க. வாசிப்பு அனுபவமும், எழுத்தனுபவமும் அதிகம் வாய்க்கப்பெற்றவர். இந்த நாவலை மிகவும் சிந்தித்து, திட்டமிட்டு, கதைப்பின்னலைச் சுவையாகப் பின்னிப் படைத்துள்ளார். மேற்படி முடிவுரையில் வரும் அவரது பின்வரும் கூற்று அ.ந.க.வின் நாவல் பற்றிய புரிந்துணர்வினையும், அப்புரிந்துணர்வின் விளைவாகவே அவர் இந்நாவலினைப் படைத்துள்ளார் என்பதையும்தான்:
"நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவனை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம் இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது. “மனக்கண்”ணைப் பொறுத்த வரையில் நாவல் பற்றிய மேற்கூறிய பிரக்ஞையுடனேயே நான் அதனை எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்குச் சுவையான ஒரு கதையைச் சொல்ல வேண்டும்; அது அவர்கள் அனுதாபத்தையும் இரக்க உணர்ச்சியையும் தூண்ட வேண்டும்; அதே நேரத்தில் முடிந்த இடங்களில் வாழ்க்கையில் பிடிப்பைத் தரும் நகைச்சுவை, வேடிக்கை போன்ற உணர்ச்சிகளுக்கும் இடமிருக்க வேண்டும்; சூழ்நிலை வர்ணனையையும் பாத்திர அமைப்பும் சிறந்து விளங்க வேண்டும்; கதைக்கு இடக்கரில்லாது வரும் அறிவுக்கு விருந்தான விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் இந்நாவலை எழுதும்போது என்னை உந்திக் கொண்டேயிருந்தன. இன்னும் உலகப் பெரும் நாவலாசிரியர்களான டிக்கென்ஸ், டால்ஸ்டாய், சோலா, டொஸ்டோவ்ஸ்கி, கல்கி, தாகூர், விகடர் ஹியூகோ போலத் தெட்டத் தெளிந்து ஒரு வசன நடையில் அதைக் கூற வேண்டுமென்றும் நான் ஆசைப்பட்டேன். இன்று தமிழில் ஒரு சிலர் - முக்கியமாகக் கதாசிரியர் சிலர் இயற்கைக்கு மாறான சிக்கலான ஒரு தமிழ் நடையை வலிந்து மேற்கொண்டு எழுதுவதை நாம் பார்க்கிறோம். இப்படி யாராவது எழுத முயலும்போது அவர்கள் வசன நடை முன்னுக்கு வந்து பொருள் பின்னுக்குப் போய்விடுகிறது."
அ.ந.க.வின் கிடைக்கக்கூடிய ஒரேயொரு நாவல் என்னும் வகையில் இந்த நாவல் நூலாக்கம் பெறுவது அவசியம். இந்த நாவலின் முப்பதாவது அத்தியாயம் இன்னும் கிடைக்காததால் அந்த முயற்சியும் இழுபட்டுக்கொண்டு செல்கின்றது. விரைவில் அந்த விடுபட்ட அத்தியாயம் கிடைக்குமென்று எதிர்பார்ப்போம். தொடர்கதையாக வெளிவந்தாலும் அ.ந.க.வின் இந்நாவலின் சிறப்பு தொடர்கதையாக வெளிவந்ததால் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடப்போவதில்லை. உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் பல புகழ்பெற்ற படைப்புகள் அவ்விதம் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தொடர்களாக வெளிவந்தவைதாம். இந்த நாவல் தொடராக வெளிவந்ததன் பின்னர் இலங்கை வானொலியில் புகழ்பெற்ற 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தைத் தொடர்ந்து , சில்லையூர் செல்வராசன் தம்பதியினரால் வானொலி நாடகமாகவும் உருவாக்கப்பட்டு, வெளியாகிப் பெரும் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நாவல் எனக்குப் பிடித்துப்போனதற்குக் காரணமானவைகளாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:
1. சுவையான , சிந்தையைக் கவரும் கதைப்பின்னல்.
2. குறை , நிறைகளுடன் யதார்த்தபூர்வமாகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.
3. நாவலின் நடையும், ஆங்காங்கே ஆசிரியரின் புலமையினை வெளிப்படுத்தும் வகையில் பரவிக்கிடக்கும் தகவல்களும்..
4. நாவல் கூறும் பொருள்.
1. நாவலின் கதைப்பின்னல்:
நாவல் கூறும் கதை இதுதான்: ஶ்ரீதர் இலங்கையின் பெரும் பணக்காரர்களிலொருவரான சிவநேசர் / பாக்கியம் தம்பதியினரின் ஒரே மகன். கொழும்பில் அவர்களுக்குச் சொந்தமான 'கிஷ்கிந்தா' மாளிகையில் தங்கி, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன். அவனது அறை நண்பனாகத் தங்கியிருப்பவன் சுரேஷ். 'கொழும்புப் பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் படிப்பவன். சுரேஷின் படிப்புக்கு உதவி செய்பவர் அவனது மாமா. இதற்குக் காரணம் தனது மகளை 'டாக்டர்' சுரேஷுக்கு மணமுடித்து வைப்பதென்ற எண்ணம்தான். இதற்கிடையில் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வமுள்ள ஶ்ரீதருக்கும் அவனுடன் கல்வி பயிலும் சக மாணவியான பத்மாவுக்குமிடையில் காதல் ஏற்படுகிறது. பத்மா மிகவும் அழகானவள். அவளது தந்தையான பரமானந்தரும் வாத்தியாரே.
பத்மாவுக்கும் , ஶ்ரீதருக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. ஏற்கனவே அவன் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவென்பதால் அவனுடன் பழகுவதற்கே சக மாணவர்கள் தயக்கம் கொள்வார்கள். இந்நிலையில் சாதாரண ஆசிரியர் ஒருவரின் மகளான பத்மாவை மணப்பதற்கு முடிவு செய்கின்றான் ஶ்ரீதர். தான் மிகவும் புகழ்பெற்ற தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவென்று கூறி விட்டால் எங்கே பத்மா தன்னை நிராகரித்து விடுவாளோ என்று பயந்த ஶ்ரீதர் தன் குடும்பப்பெருமையினை மறைத்து அவளுடன் பழகுகின்றான். இதற்கிடையில் ஶ்ரீதரின் கிராமத்தில் வசிக்கும் தங்மணி என்பவள் பத்மாவும், ஶ்ரீதரும் காதலர்களாகத் திரிவதைக் கண்டு பொறாமை கொண்டு சிவநேசருக்கு ஒரு மொட்டைக் கடிதமொன்றினை எழுதி விடுகின்றாள்.
ஶ்ரீதரின் தந்தையான சிவநேசரோ சாதி, அந்தஸ்து பார்க்கும் மனிதர். தன் அந்தஸ்துக்குகந்த மணப்பெண்ணாக தன்னையொத்த பணக்காரரான கந்தப்பரின் மகளான டாக்டர் அமுதாவை ஶ்ரீதருக்குக் கட்டி வைக்கத்திட்டமிடுகின்றார். ஊர் வரும் ஶ்ரீதருக்கு திடீரென்றேற்பட்ட கண் நோய் காரணமாக இரு கண்களின் பார்வையும் போய் விடுகின்றது. அவனது பார்வை போய் விட்டதையறிந்த அம்பலவாணர் தன் மகளை ஶ்ரீதருக்குக் கொடுப்பது என்றிருந்த முடிவினை மாற்றி விடுகின்றார். ஏற்கனவே தனக்கு ஶ்ரீதர் பொய் கூறிவிட்டதால் சிறிது ஆத்திரமுற்றிருந்த பத்மாவும் அவனை நிராகரித்து , கட்டழகான கமலநாதன் என்பவனைத் திருமணம் செய்ய விரும்புகின்றாள்.
இதற்கிடையில் இரு கண்களினதும் பார்வையை இழந்த ஶ்ரீதர் பத்மாவை நினத்து ஏங்கி , வருந்துகின்றான். மகனின் வேதனையைத் தாங்காத சிவநேசரின் மனம் மாறுகின்றது. பத்மாவின் வீட்டுக்குச் செல்லும் சிவநேசரிடம் குருடான ஶ்ரீதரை மணமுடித்துத் தனது வாழ்க்கையைச் சிதைக்க முடியாதென்று கூறி அவரை மறுத்துத் திருப்பி அனுப்பி விடுகின்றாள் பத்மா. பத்மாவின் பதிலினக் கூறினால் ஶ்ரீதர் மிகவும் மனம் வருந்துவானெயென்று நினைத்து என்ன செய்வதென்று யோசிக்கின்றார். இதற்கிடையில் கிளார்க்கர் நன்னித்தம்பியாயின் மகளான சுசீலா ஶ்ரீதரின் நிலையினை உணர்ந்து அவனைத் திருமணம் செய்வதற்கும், பத்மாவின் மேல் கொண்ட காதலால் துயரத்திலாழ்ந்திருக்கும் ஶ்ரீதர் முன் பத்மாவாக நடிப்பதற்கும் சம்மதிக்கின்றாள். அவளை உண்மையாகவே பத்மாவாகக் கருதிவிடும் ஶ்ரீதருக்கும், சுசீலாவுக்குமிடையில் தோன்றிய உறவின் விளைவினால் அவர்களுக்கு ஆண்குழந்தையொன்றும் பிறந்து விடுகின்றது. முரளி என்பது அவன் பெயர்.
இதற்கிடையில் கண் வைத்திய நிபுணரொருவரின் உதவியால் பார்வையைபெறும் ஶ்ரீதர் தனக்கு நேர்ந்த ஆள்மாறாட்ட அனுபவத்தைக் கண்டு, தான் வெறுக்கும் சுசீலாவுடன் தொடர்ந்தும் வாழ்வேண்டுமென்றால் தன் பார்வை இருக்கும் மட்டும் அது முடியாது என்று 'தன் கண்களைக் குத்தி மீண்டும் அந்தகனாகி விடுகின்றான். ஆரம்பத்தில் சுசீலவை வெறுக்கும் ஶ்ரீதர் பின்னர் உண்மை நிலை அறிந்து, பத்மா குருடனான தன்னை மணமுடிக்க மறுத்ததையும், அவளிடம் மகனை மணக்கும்படி கேட்டு அவமானப்பட்ட தன் பெற்றோருக்கேற்பட்ட அனுபவத்தையும் அறிந்து அவளை விரும்பத் தொடங்குகின்றான். சிவநேசரோ இறுதியில் தன்னை அழித்துத் தன் கண்களை அந்தகனான மகனுக்கு வழங்கி அவனுக்குப் புது வாழ்வினைக் கொடுக்கின்றார்.
இதுதான் நாவலின் பிரதான கதைச்சுருக்கம். ஆனால் இந்தக் கதையினைச் சுவையாக, தொய்வில்லாமல், தன் ஆழ்ந்த புலமையின் மூலம் அ.ந.க படைத்திருக்கின்றார் என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வார்கள். இந்த நாவலில் மேலும் பல உப பாத்திரங்களாகப் பலர் வருகின்றார்கள்.
நாவல் முழுவதும் அ.ந.க.வின் மேனாட்டு மற்றும் கீழ்நாட்டு இலக்கியங்கள் மீதிருந்த புலமையின் விளைவினைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்துகொள்ள முடிகிறது.
ஶ்ரீதர் திறமையான ஓவியன், அத்துடன் நல்லதோர் நடிகனுமாவான். புகழ்பெற்ற கிரேக்க நாடகாசிரியனான சோபாகிளிஸ்ஸுன் புகழ்பெற்ற நாடகமான எடிப்பஸ் நாடகத்தைத் தமிழில் எழுதி, எடிப்பஸ் பாத்திரத்திலும் மிகவும் சிறப்பாக நடிக்கின்றான். நாடகத்தில் வரும் எடிப்பஸ் தந்தையென்று தெரியாது தந்தையைக் கொன்று, தாயென்று தெரியாது அவளையும் மணந்து பிள்ளைகளையும் பெற்றுக்கொள்கின்றான். பின் உண்மை தெரிய வரவே தன் கண்களைக் குத்தித் தன்னைக் குருடாக்கிக்கொள்கின்றான். இந்த நாடகம் முதலில் கொழும்பு பல்கலைக்கழகத்திலும், இரண்டாவது தடவை யாழ் இந்துக் கல்லூரியிலும் நடைபெறுவதாகச் சம்பவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனா. சோபாகிளிஸின் எடிப்பஸ் நாடகத்தின் மூலம் அ.ந.க நாவலின் நாயகனான ஶ்ரீதருக்கு ஏற்படவிருக்கும் நிலையினைக் குறிப்பாகக் கூறி விடுகின்றாரென்றுதான் கூற வேண்டும். எடிப்பஸ் போலவே ஶ்ரீதரும் இழந்த பார்வை பெற்றதும், தனக்குத் தன் காதலியென்ற பெயரில் இன்னொருத்தியைக் கட்டி வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து, தன்னிரு கண்களையும் குத்தி மீண்டும் குருடனாகி விடுகின்றான். எடிப்பஸ் நாடகத்துக்கும் , மனக்கண் நாவலுக்குமிடையிலுள்ள முக்கியமான ஒற்றுமை ஆள் மாறாட்டத்தின் விளைவாகவே இருவரும் தம் கண்களைக் குத்திக் குருடாகி விடுகின்றார்கள். எடிப்பஸ்ஸுக்கும் தன் தந்தை, தாய் யார் என்ற உண்மை நிலை தெரியாத நிலையில் அவனை மீறிச் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஶ்ரீதரின் வாழ்விலும் அவன் குருடனாகிய நிலையில் அவன் அறியாத நிலையில் அவன் வாழ்விலும் ஆள் மாறாட்டம் நிகழ்து சுசீலாவைப் பத்மா என்று கூறி அவனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகின்றார்கள்.
இவ்விதமாகச் செல்லும் நாவலை ஆறுதலாகப் படித்துச் சுவைக்க வேண்டும். அவ்விதம் சுவைத்தால்தான் நாவல் முழுவதும் அ.ந.க எடுத்தாண்ட உதாரணங்கள், அவரது தமிழ் மற்றும் மேனாட்டு இலக்கியங்கள்பால் உள்ள புலமை ஆகியவற்றை உணர்ந்திட முடியும்.
2. குறை , நிறைகளுடன் யதார்த்தபூர்வமாகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.
மனக்கண் நாவலில் அ.ந.க.வின் பாத்திரப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்நாவலில் வரும் மாந்தர்கள் குறை, நிறைகளுடன் படைக்கப்பட்டிருகின்றார்கள். செல்வந்தனின் மகனாக வரும் ஶ்ரீதருக்கும், மிகவும் சாதாரண நிலையிலிருக்கும் பத்மாவுக்குமிடையில் காதல் அரும்புகிறது. ஆரம்பத்தில் தான் செல்வந்தரான சிவநேசரின் மகன் என்பதை மறைத்து விடுகின்றான். பின்பு உண்மை தெரிந்து விடுகின்றது. இவ்விதமாக அவனுடன் காதல் வயப்பட்டிருக்கும் சமயத்திலேயே பத்மாவின் கமலநாதன் மீதான சலனங்களை அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் சம்பவங்கள் மற்றும் அவளது உணர்வுகளை அ.ந.க. விபரித்திருக்கின்றார். உதாரணத்துக்கு பின்வரும் சம்பவத்தைக் கூறலாம். காதலன் ஶ்ரீதருடன் தெகிவளை மிருககாட்சிச்சாலைக்குச் சென்று திரும்புகையில், அவன் அவளைத் தனது காரில் கொண்டுவந்து இறக்குகின்றான். அப்போது அவள் மோட்டார் சைக்கிளில் செல்லும் கமலநாதனைக் காண்கின்றாள். அதனை ஆசிரியர் இவ்விதம் விபரித்திருப்பார்:
"ஆனால் காரிலிருந்து இறங்கியதும் பத்மா கண்ட காட்சி! கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் இறுக்கமான கறுப்புக் காற்சட்டையணிந்து கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து சென்று கொண்டிருந்தான். அவன் கண்களை “கொகிள்ஸ்” என்னும் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்கள் அணியும் புகைக் கண்ணாடி அலங்கரித்தது. உதடுகளை வழக்கம் போல் அவனது கவர்ச்சிகரமான அரும்பு மீசை அலங்கரித்தது. ஆளில்லாது வெறிச்சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னாசனம் - ஐயோ வீணாகிறதே என்ற உணர்ச்சி பத்மாவுக்குத் தன்னையறியாமலேயே ஏற்பட்டது. மேலும் என்ன தான் முயன்ற போதிலும் கமலநாதனின் பின்னழகை இரசிக்காதிருக்கவும் அவளால் முடியவில்லை! "
இது போல் மேலும் பல சந்தர்ப்பங்களில் பத்மாவின் ஆளுமை விபரிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் சென்ற ஶ்ரீதரிடமிருந்து எந்தவிதத் தகவல்களும் வராத நிலையில் அவளது கவனம் கமலநாதன்பக்கம் திரும்புகிறது. அவள் கமலநாதனுடன் நடன விருந்தில் கலந்துகொள்கின்றாள். உவைன் அருந்துகின்றாள். அவனுடன் அணைத்தபடி அவனது மோட்டார் சைக்கிளில் செல்கின்றாள். இது போல் செல்வச் செருக்கு மிக்கவராக வரும் சிவநேசர் பின்னர் மகனுக்காக எல்லாவற்றையும் விட்டு கீழிறங்கி வருகின்றார். இறுதியில் தன்னையே அழித்து அவனுக்குப் பார்வையைக் கொடுத்துத் தியாகபுருஷராகி விடுகின்றார். ஶ்ரீதரின் நண்பனாக வரும் டாக்டர் சுரேஷ் மிகவும் முற்போக்கான இளைஞன். ஆனால் அவனால்கூட தன்னை, தன் படிப்புக்காக மாப்பிள்ளையாக விலைக்கு வாங்கும் மாமனாரிடமிருந்து விடுபட்டோட முடியவில்லை. ஶ்ரீதருடனான உரையாடலொன்றில் அவன் "“மச்சானை மண முடிக்க வேண்டும். அத்தை மகளைக் கட்ட வேண்டும் என்பது என்று நேற்று விதிக்கப்பட்ட சட்டமா என்ன? அச்சட்டத்துக்கு அடங்கி நடக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். பார்த்தாயா ஸ்ரீதர் இன்னொரு விசேஷத்தை? எண்ணத்தால் நான் புரட்சிக்காரன். ஆனால் செயலால் உன்னை விட அதிகமாகச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல பிரஜை நான்” என்று கூறுவது அவனது ஆளுமையினை வெளிப்படுத்தி நிற்கிறது. .இவ்விதம் நாவலில் வரும் பாத்திரங்கள் குறை, நிறைகளுடன் மனதில் நிற்கும்படியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. இது ஆசிரியர் பாத்திரப்படைப்பிலீட்டிய வெற்றியாகவே கொள்ளலாம்.
3. நாவலின் நடையும், ஆங்காங்கே ஆசிரியரின் புலமையினை வெளிப்படுத்தும் வகையில் பரவிக்கிடக்கும் தகவல்களும்..
பொதுவாகவே அ.ந.க.வின் நடை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது நடையினைத் துள்ளு தமிழ் நடை என்று வர்ணிப்பார்கள். அவரது நடையில் அவரது புலமையினை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்களும் நிறைந்திருக்கும். உதாரணத்துக்குக் கீழுள்ள எடுத்துக்காட்டுகளினைக்குறிப்பிடலாம்:
1. *விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் - சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் - காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!"
2. "நாடகம், தேபேஸ் நாட்டு மன்னனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுவது, எடிப்பஸ் தந்தையைத் தந்தையென்றறியாது தன் கரத்தாலேயே கொன்றுவிடுகிறான். பின் தாயைத் தாயென்று தெரியாது பெண்டாளுகிறான். அவளைத் தனது பட்டத்து மகிஷியாகவும் ஏற்றுக் கொள்ளுகிறான். தாய்க்கும் மகனுக்கும் குழந்தைகளும் பிறந்துவிடுகின்றன! இந்நிலையில் சில சந்தர்ப்ப சூழல்களால் அவனுக்கு உண்மைகள் வெளியாகின்றன. என்ன செய்வான், எடிப்பஸ். தாயைப் பெண்டாண்ட பாதகன் தானென்று தெரிந்ததும் நெருப்பை மிதித்தவன் போல் நெஞ்சடைத்து கதறுகிறான் எடிப்பஸ்!
தந்தையைக் கொன்றவன் நான்!
தாயின் கணவன் நான்!
என் பிள்ளைகள் எனக்குத் தம்பிமாராகிவிட்டார்கள்!
எடிப்பசுக்கு இதை விட வரை வேறென்ன வேண்டும்! வேறென்ன வேண்டும்!
உலகமே அதிரும்படியாக இவ்வசனங்களை முழங்குகிறான் ஸ்ரீதர். இந்தக் கட்டத்தில் அவனது நடிப்பு எல்லோரையும் கவர்ந்துவிட்டது. ஆனால் அடுத்த கட்டமோ மயிர்க் கூச்செரியச் செய்தது. ‘எடிப்பஸ் மன்னன் மேடையின் நடுவே மின் விளக்கின் வட்ட ஒளியில் வந்து நிற்கிறான். ஆவேசங் கொண்டு அலறுகிறான். பின்னணியில் கூட்டு வாத்தியங்களும் அவனோடு சேர்ந்து பயங்கரமாக அலறுகின்றன. இசையின் அலறலுக்குத் தக்கபடி தன் ஈட்டியால் தன் கண்களை மீண்டும் மீண்டும் பல தடவை குத்துகிறான் அவன். கண்களிலிருந்து இரத்தம் பீறிடுகிறது. கன்னங்களில் கொட்டுகிறது செந்நீர்! கண்ணிழந்து கபோதியாய் நிற்கிறான் காவலன்......இந்தக் கட்டத்தில் ஸ்ரீதர் நடிப்பின் உச்சத்தை அடைந்து விடுகிறான். சபையோர் நடு நடுங்கிப் போய் விட்டார்கள். பட்டாசு போல் கைதட்டல் வெடிக்கிறது!
3. சில சமயம் அந்தகர்களைப் பற்றிய பெரும் கவிஞர்களின் கவிதைகள் அவன் நினவுக்கு வரும். அவற்றை அம்மாவுக்குச் சொல்லிக் காட்டுவான். முக்கியமாக இடையிலே குருடாகிய ஆங்கிலக் கவிஞர் மில்டனின் கவிதைகளை அவன் அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான்.
ஆண்டுதோறும் பருவங்கள்
அழையாதிங்கே ஓடி வரும்
ஈண்டிவ்விதமாம் மாற்றங்கள்
பகலுமில்லை இரவுமிலை
படுவான் எழுவான் காட்சியிலை
திகழும் மலரின் அழகில்லை
தெரியும் வசந்தக் காட்சியிலை
ஆடு மாடு மந்தைகளில்
அழகும் காணேன் - மனிதர்களின்
பீடு மிக்க முகங்காணேன்
பெருகும் இருளில்
வீற்றிருந்தேன்.
அறிவுப் புலனின் கதவொன்று
அடியோ டடைத்து முடிற்றே!
துருவிப் பார்க்கும் என் கண்கள்
தூர்ந்தே பார்வை மறந்தனவே.
சில சமயங்களில் அவன் அம்மாவிடம் இது பகலா இரவா? என்று கேட்பான். கேட்டுவிட்டு
"நண்பகலின் பேரொளியில்
நானிருட்டில் வாழுகிறேன்
சூரியனை ராகுவிங்கு
சூழ்ந்ததுவே ஆனால் அச்
சூரியர்க்கு மீட்சியுண்டு
சுடர் விழிக்கோ மீட்சியிலை
நித்தியமாம் கிரகணமென்
நேத்திரத்தைப் பிடித்ததுவே"
என்று பாடுவான்.
4. சுரேஷ், “ஸ்ரீதர்! பணம் என்பது இவ்வுலகில் ஒருவரிடமிருந்து ஒருவர் இனாமாகப் பெறும் பொருளல்ல. அதனால் கொடுப்பவனை விட வாங்குபவன் தன் கணிப்பிலேயே இழிந்த மனிதனாகி விடுகிறான். இவ்வுலகில் ஒருவனுக்கு அதை விடப் பெரிய நஷ்டம் வேறென்ன? பணத்தை ஒவ்வொருவனும் தானே முயன்று சம்பாதிக்க வேண்டுமென்பதே உலக நியதி. சங்க நூலொன்றில் கூட இது பற்றி ஒரு பாட்டிருக்கிறது. நீ கேள்விப்பட்டதுண்டா?” என்று கேட்டான்.
ஸ்ரீதர் “இல்லை” என்று தலையாட்டினான்.
சுரேஷ் பாட்டை ஓதிக் காட்டினான்.
“ஈ என இரத்தல்
இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல்
அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல்
உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல்
அதனினும் உயர்ந்தன்று”
“புறநானூற்”றில் வரும் இப்பாட்டின் பொருள் என்ன தெரியுமா? தருவாய் என்று கேட்டல் இழிந்தது. அதற்குத் தர மாட்டேன் என்று பதில் கூறுதல் அதனினும் இழிந்தது. இதனைப் பெற்றுக்கொள் என்று வாரிக் கொடுத்தல் உயர்ந்தது. ஆனால் அதை வேண்டாமென்று மறுத்தல் அதனினும் உயர்ந்தது. அதாவது ஈ என்று இரத்தல் கூடாது. கொள் என்று தந்தாலும் வாங்கக் கூடாது. தனக்கு வேண்டிய பொருளைத் தானே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே பொருள்” என்று பாட்டை ஓதிப் பயனும் கூறினான் சுரேஷ்.
5. ஸ்ரீதர் பத்மாவிடம் திடீரென “அதோ நாங்கள் பார்க்க வந்த ஜோடி!” என்றான் அமைதியாக.
பத்மா அவன் சுட்டிய திசையை நோக்கினாள். அங்கே ஒரு பெரிய இரும்புக் கூட்டுள் ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தது.
“பேனெடுக்கும் குரங்கு தான் டி.எம். ராஜ். பேனெடுக்கப்படும் குரங்கு அதன் காதலி டி.எம். ராணி!” என்றான் ஸ்ரீதர்.
“உங்களுக்கு எப்பொழுதும் பெயர் மாறாட்டம்தானே? சிவநேசர் சின்னப்பா ஆன மாதிரி” என்றாள் பத்மா குறும்பாக.
ஸ்ரீதர், “இந்த விஷயத்தில் நான் பொய் சொல்லவில்லை. உண்மைதான் சொன்னேன். ஆண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராஜ். பெண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராணி. மர்க்கடமென்றால் குரங்கு. தெரிந்ததா மட்டிப் பெண்ணே?” என்றான்.
இதற்கிடையில் காதலன் குரங்கு அவர்களைப் பார்த்து விட்டது. காதலியின் தலைப் பேனொன்றை எடுத்து வாயிற் போட்டு மென்று கொண்டே அவர்களைப் பார்த்துப் பல்லை இளித்து மூக்கைச் சொறிந்தது குரங்கு!
6. வள்ளியாச்சி அதிகாரைக் கடைக் கண்னால் பார்த்துவிட்டுச் சிரித்தாள். "அதை ஏன் இப்போது ஞாபகமூட்டுகிறீர்கள்? அப்படியானால் வாருங்கள். நாங்களும் ஜோடியாக தண்ணீரில் இறங்குவோம்"
அம்பலவாணருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. புன்னகை செய்து கொண்டே கம்ப ராமாயணத்திலிருந்து நீர் விளையாட்டைப் பற்றிய ஒரு பாட்டை எடுத்து விட்டார்.
"தாளையே கமலத்தாளின் மார்புறத் தழுவுவாரும்
தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்
பாளையே விரிந்ததென்னப் பாந்தநீர் உந்துவாரும்
வாளைமீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவுவாரும்"
என்று இப்படிப் போகிறது பாட்டு. பொருளென்ன தெரியமா? சில பெண்கள் தமது தலைவர்களின் மார்பைத் தழுவுகிறார்களாம். இன்னும் சிலர் தோள்களைத் தழுவுகிறார்கள். மற்றும் சிலர் தண்ணீரைக் கமுகம் பாளை போல் விரியும்படி எற்றி விளையாடுகிறார்கள். ஒரு சில பெண்கள் வாளை மீன்களைக் கண்டு பயந்து தம் காதலரைக் கட்டிக் கொள்கிறார்களாம். தோளையே பற்றி வெற்றித் திருவெனத் தோன்றுவாரும்- என்பது இப்பொழுது நீ கண்ட காட்சியைத் தான். அதாவது அந்தப் பெட்டை ஸ்ரீதரின் தோளைப் பிடித்துக் கொண்டு ஆடிய ஆட்டத்தைத் தான் குறிக்கிறது. தோளைப் பற்றிக் கொண்டு இலட்சுமி போல் தோன்றினார்களாம். பல பெண்கள், நீர் விளையாட்டின் போது, நீர் விளையாட்டுப் படலத்தில் வருகிறது. கம்பர் பாடியிருக்கிறார்" என்று பேசிக் கொண்டே போனார் அதிகார்.
7. படிப்பாளியாகிய சிவநேசருக்கு எந்த நிலையிலும் தாம் படித்தறிந்த விஷயங்கள் ஞாபகம் வராமல் இருப்பதில்லை. பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோமா என்று நினைத்த அவருக்கு, அர்த்தசாஸ்திரத்தில் கெளடில்யன் கூறியுள்ள எழுவகைத் திருமணங்களும் ஞாபகம் வந்தன. இவற்றில் ஒன்று இராட்சத திருமணம். பலாத்காரமாக ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்யும் இதனைக் கூடக் கெளடில்யன் ஒப்புக் கொள்ளுகிறான். இத்திருமணத்தின் முடிவாகச் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தி ஏற்படுமாயின் அது அங்கீகரிக்கத்தக்கதே என்பது அவரது தீர்ப்பு.
இவ்விதமாக நாவல் முழுவதும் அ.ந.க. அறிவுக்கு விருந்தாகும், சிந்தனையைத் தூண்டும் விடயங்களை, தகவல்களை அள்ளி வழங்கிச் செல்கின்றார். இவை நாவலின் கதையோட்டத்துடன், பாத்திரப்படைப்புடனொன்றி வாசகர்களுக்கு இன்பமூட்டிச் செல்கின்றன. இது பற்றி அ.ந.க. நாவலின் முடிவுரையில் பின்வருமாறு கூறுவார்:
"டால்ஸ்டாய் போன்ற பெரு நாவலாசிரியர்களில் சிலர் அறிவூட்டலும் நாவலின் பணி என்று கருதினார்கள். அதனால் தான் யுத்த விவரங்களையும், சரித்திர விவரங்களையும் மிகவும் அதிகமாக விளக்கும் அத்தியாயங்களை “யுத்தமும் சமாதானமும்” என்னும் நூலில் டால்ஸ்டாய் சேர்த்திருக்கிறார். விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாட்டி”ல் பாரிஸ் சாக்கடை பற்றிய செய்திகள் விரிவாகச் சேர்க்கப்பட்டுப்பதும் இக் காரணத்தினாலே தான். சுருங்கச் சொன்னால் பார காவியம் செய்யும் கவிஞனும் காத்திரமான நாவலை எழுதும் நாவலாசிரியனும் கதை சொல்லிச் செல்கையில் வழியில் தென்படும் எந்த விஷயத்தையும் பற்றிப் பூரணமான விளக்கம் கொடுக்காமல் மேலே செல்வதில்லை. ஆனால் இவ்வித விளக்கம் கொடுக்க ஒருவன் கதை கட்டும் ஆற்றல் பெற்றவனாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. பல விஷயங்களையும் தெரிந்து ஓர் அறிஞனாகவும் விளங்க வேண்டியிருக்கிறது. ஒருவனுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நூலறிவும், அனுபவ அறிவும் சமுதாய அறிவும், இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த விளக்கங்களை அவன் திறம்படச் செய்து கொண்டு போகலாம்"
அ.ந.க அறிஞர் அ.ந.க என்று அவரது பன்முகப் புலமை காரணமாக அழைக்கப்பட்டவர். அவரது பன்முகப் புலமை காரணமாக அவரால் இலக்கிய விடயங்களை நாவலில் சூழலுக்கேற்ற வகையில் பொருத்தமாகப் பாவிக்க முடிகின்றது. அ.ந.க.வின் மனக்கண் நாவலை எழுதப்பட்ட காலகட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதன் சிறப்பு நன்கு விளங்கும்.
4. நாவல் கூறும் பொருள்.
அ.ந.க.வின் மனக்கண் நாவலைப் படித்தபொழுது எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலின் மூலம் அ.ந.க. எதனைக் கூற வருகின்றார்? அவரோ ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடி. மார்க்சியத்தத்துவத்தின்பால் ஈடுபாடு மிக்கவர். வர்க்க விடுதலையினை வலியுறுத்துபவர். இந்த நாவல் அவரது நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளதா என்று சிறிது சிந்தித்துப் பார்த்தேன். அவ்விதம் பார்க்கும்பொழுது நாவல் பிரச்சாரத்தின் சாயல் நாவலின் கலைத்துவச் சிறப்பினை மறைத்துவிடாத வகையில் படைக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. டால்ஸ்டாய், தத்யயேவ்ஸ்கி போன்றவர்கள் முறையே 'புத்துயிர்ப்பு', 'குற்றமும் தண்டனையும்' போன்ற நாவல்களின் இறுதியில் மதப் பிரச்சாரத்தை மதமே மானுடத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதை வெளிப்படையாகவே வலியுறுத்தி முடித்திருப்பார்கள். ஆனால் அதற்காக அப்படைப்புகளின் படைப்புத்திறன் சற்றும் குறைந்துபோய்விடுவதில்லை. மனக்கண் நாவலிலும் ஆங்காங்கே அ.ந.க.வின் முற்போக்கு எண்ணங்கள் தலைகாட்டாமலில்லை. ஒரு முறை பணம் பற்றி டாக்டர் சுரேஷும் , ஶ்ரீதரும் உரையாடுகையி, பினவருமாறு உரையாடுவார்கள்:
இன்னுமோரிடத்தில் ஶ்ரீதரும், அவனது தந்தையான சிவநேசரும் பின்வருமாறு உரையாடுவார்கள்:
“எனக்கு அமுதாவைக் கல்யாணம் செய்ய இஷ்டமில்லை.”
“ஏன்?”
“நான் கொழும்பில் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்யத் தீர்மானித்து விட்டேன்.”
“அம்மா சொன்னாள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.”
“ஏன் அப்பா, அவள் மிகவும் நல்லவள். நீங்கள் கொழும்புக்கு வந்தால் அவளை நான் கிஷ்கிந்தாவுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். உங்களுக்கு மிகவும் பிடிக்குமப்பா.”
“கல்யாணப் பெண் நல்லவளா அல்லவா என்பதல்ல முக்கியம் ஸ்ரீதர். உனது நிலைக்கு ஏற்ப பெண்ணை நீ கட்ட வேண்டும். அமுதாவும் நல்லவள்தான். அத்துடன் சகல விதத்திலும் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவள் அவள்.”
“எனக்கு இந்த அந்தஸ்து என்பதில் நம்பிக்கையே இல்லை. ஏன், நீங்கள் கூட “எமது சமுதாயப் பிரச்சினைகள்” என்ற நூலில் கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்களல்லவா?” பத்மாவின் தகப்பனார் பரமானந்தர் கூட அந்த நூலின் பிரதி ஒன்றை வைத்திருக்கிறார். அந்த நூலைப் படித்ததன் காரணமாக அவர் இந்தத் திருமணத்திற்குக் கட்டாயம் உங்கள் ஆசி கிடைக்குமென்று நம்புகிறார், அப்பா.”
சிவநேசர் ஒரு கணம் மெளனமானார். எதிர்பாராத இவ்வார்த்தைகள் அவரை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டன. இருந்தும் சமாளித்துக் கொண்டு, உண்மைதான். ஒரு காலத்தில் அக்கொள்கைகளை நான் நம்பியதுண்டுதான். ஆனால் அவை கூடச் சாதாரண பொதுமக்கள் தம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் கூறிய ஆலோசனைகளேயல்லாமல் என்னையோ உன்னையோ போன்றவர்களுக்குக் கூறப்பட்ட ஆலோசனைகளேயல்ல. பரம்பரைச் செல்வாக்குடன் உள்ள நாம் உண்மையில் ஆட்சி செய்யப் பிறந்தவர்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு நீ சொல்லும் வாத்தியார் போன்றவர்களுடன் எந்தவிதமான உறவும் இவ்வுலகில் சாத்தியமில்லை” என்றார்.
"இதை நீங்கள் மனதார நம்பிக் கூறுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரையில் நான் மனித சமத்துவத்தை நம்புகிறேன். மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். இதில் அந்தஸ்துக் கூடியவர் குறைத்தவர் என்று யாருமே இல்லை.”
“நீ எனக்குப் பரிசாகக் கொண்டு வந்தாயே நீட்சேயின் நூல்கள்? - அந்த நீட்சே மனிதர்கள் சமமென்ற கொள்கையை அங்கீகரிக்கவில்லை. உலகில் ஒருவர் ஆளவும் மற்றும் சிலர் அவர்களுக்குப் பணி செய்யவும் பிறந்திருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் இதுவரை நான் கண்டவர்களெல்லாம் ஆளப் பிறந்தவர்கள் தான். நீயும் ஆளப் பிறந்தவன் தான். உன்னைப் பார்த்தவர்கள் உன் தோற்றத்தைக் கொண்டே அதைப் பளிச்சென்று சொல்லிவிடுவார்கள். நீ ஆள வேண்டுமென்ற விருப்பத்தில் நான் தான் உன் ஆசைக்குத் தடையாய் நிற்கிறேன். நீட்சே கருத்துகள் மட்டுமல்ல, இந்துக்களின் மனுதர்மம் கூட அந்த அடிப்படையில் தான் எழுந்தது. ஆளப்பிறந்தவனை அன்று ஷைத்திரியன் என்றார்கள். இன்று அவனுக்கு அவ்விதம் பெயரளிக்கப்படாவிட்டாலும், ஆளப் பிறந்தவன் தன் நடவடிக்கைகள் மூலம் தான் யார் எனபதைக் காட்டி விடுகிறான். என்னைப் பொறுத்தவரையில் உலகில் சமத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது இயற்கைக்கு விநோதமான கொள்கை.”
"எப்படி?”
“இயற்கையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சமத்துவமாயிருப்பதை நீ எப்போதாவது கண்டிருக்கிறாயா? ஒரு மனிதன் குட்டை, மற்றவன் நெட்டை, ஒரு மனிதன் நூற்றைம்பது இறாத்தல், மற்றவன் நூற்றைம்பத்தைந்து இறாத்தல், ஒருவன் சிவப்பு, மற்றவன் கறுப்பு, ஒருவன் புத்திசாலி, மற்றவன் மடையன். உலகில் ஒருவருக்கொருவர் சமமான மனிதர் இல்லவே இல்லை. சமத்துவம் பேசுவபர்கள் உண்மையில் பொய் பேசுகிறார்கள்.”
சிவநேசர் தமது அந்தஸ்து வெறிக்கு ஒரு தத்துவ உருவமே கொடுத்து விட்டதைக் கண்டு ஸ்ரீதர் திகைத்தான். “நீட்சேயின் புத்தகங்களை நீங்கள் வாசிப்பது இதற்குத் தானா” என்றான் அவன்.
“தத்துவ தரிசர்களில் நீட்சே ஒருவன் தான் உண்மையை அப்படியே எடுத்துக் கூறியவன்.”
ஒரு கட்டத்தில் தாயுடன் உரையாடும் ஶ்ரீதரின் மனநிலை பின்வருமாறு சித்திரிக்கப்பட்டிருக்கும்:
"ஸ்ரீதர் "அவர்தான் என்ன செய்வார்? பணக்காரன் ஏழை என்று பார்க்கும் உலகத்தில் இந்த அந்தஸ்து என்ற பிரச்சினை இருக்கத்தான் இருக்கும். ஆனால் இவ்வுலகில் எல்லோருமே பனக்காரராகவோ ஏழைகளாகவோ இருந்துவிட்டால் பிரச்சினை ஒழிந்துவிடும். பண விஷயத்தில் எல்லோருமே சமமாக இருக்க வேண்டுமென்று சுரேஷ் சொல்லுவான். அவன் அறிவாளி. அவன் சொல்வது சரி போலத்தான் தெரிகிறது" என்றான்."
இவற்றின் மூலம் அ.ந.க குறிப்பாக என்னதான் கூற விரும்புகின்றார்? பணம், சாதி, அந்தஸ்து என்று மிகவும் ஆடம்பரமாகத் திரிந்தவர் சிவநேசர். தனது அந்தஸ்துக்கேற்ற வகையில் சுழிபுரம் கந்தப்பரின் மகளைத் தனது மகனான ஶ்ரீதருக்கு மணம் முடித்து வைக்கவேண்டுமென்பது அவரது அவா. அப்படிப்பட்டவர் பின் இதனது அந்தஸ்து , கர்வத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஶ்ரீதருக்கு, அவன் குருடானயதும், அவன் மேல் வைத்த தூய அன்பினால், பத்மாவைப் பெண் கேட்டு வந்து அவமானமடைகின்றார். இறுதியாக அவர் புரியும் தியாயம் , இதுவரையில் வேறெந்த தமிழ் நாவலிலும் நான் வாசித்ததில்லை.
இவ்விதமாக சாதிமானான சிவநேசர் இறுதியில் மனம் மாறி, தனது மகன் மீண்டும் பார்வையினைப் பெறுவதற்காக தன்னையே அழித்து, கண்களைத் தானமாக்குகின்றார். இந்த நாவலினைக் கூர்ந்து வாசிப்பவர்கள், அவதானிப்பவர்கள் ஒன்றினைப் புரிந்துகொள்வார்கள். சிவநேசர் தீண்டமைப் பேய், வர்க்கப்பேய் போன்றவையின் ஆதிக்கத்தில் இயங்கும் நம் மானுட வாழ்வின் குறியீடாகத்தான் விளங்குகின்றார். இவை நீங்குவதற்குச் சமுதாயத்தில் நிலவும் வர்க்க வித்தியாசங்கள்மறைய வேண்டும். சிவநேசரின் மனமாற்றமும், தியாகம் மிக்க முடிவும் வர்க்கமற்ற சமுதாயமொன்றின் உதயத்தைத்தான் கட்டியம் கூறி வரவேற்கின்றன.
அதனால்தான் நாவல் பின்வருமாறு முடிகிறது:
"அமராவதி’யில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் அதன் பெரிய மதில்கள் சிறிய கைப்பிடிச் சுவர்களாகிவிட்டதாகும். வீதியில், செல்லும் பாதசாரிகளுக்குக் கூட ‘அமராவதி’யின் அகன்ற விறாந்தைகள் இப்பொழுது நன்கு தெரிந்தன. வாசலின் பெரிய இரும்பு ‘கேட்டு’களுகுப் பதிலாக சிறிய மர ‘கேட்டு’கள் போடப்பட்டன. மாறி வரும் சமுதாயத்தின் புதிய எண்ணங்களின் சின்னமாக அவை காட்சியளித்தன. இன்னும் வாசலிலே காக்கி உடையோடு காணப்பட்ட அந்த வாசல் காவலாளியையும் இப்பொழுது அங்கே காணோம். ஸ்ரீதர் தன் படிப்பை முடிக்க, சுசீலாவோடும், முரளியோடும் சீக்கிரமே கொழும்பு போனான். சுரேஷோ பாக்கியத்துக்குத் துணையாக ‘அமராவதி’யில் தங்கி வைத்தியத்தோடு சமுதாய சேவையையும் மேற்கொண்டான். ஸ்ரீதரும் தன் படிப்பை முடித்துக் கொண்டதும் சமுதாய அரசியல் சேவைகளில் ஈடுபடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான். இதை எல்லோரும் வரவேற்றார்களென்றாலும் சுரேஷே மிக அதிகமாக வரவேற்றான் என்பதைக் கூறவேண்டியதில்லையவா?"
டாக்டர் சுரேஷ் தனது மருத்துவப்பணியுடன், சமுதாய சேவையினையும் ஆற்றுகின்றான். ஶ்ரீதரும் இதுபோல் தன் படிப்பு முடிந்ததும் சமுதாய அரசியல் சேவைகளில் ஈடுபடப்போவதாகத் திட்டமிட்டிருக்கின்றான். பெரிய இரும்புக் கேட்டுகளுடன் வெளியுலகிலிருந்து பிரிந்திருந்த அமராவதி இல்லத்தின் பெரிய மதில்கள் சிறியவையாக மாறி விட்டன. அவை மாறிவரும் சமுதாயத்தின் ஆரோக்கியமான புதிய மாற்றங்களின் சின்னமாகக் காட்சியளிக்கின்றன.
தனது சமுதாய , அரசியல் நோக்கங்களைப் பாத்திரங்களினூடு வெளிப்படுத்தி, நாவலின் நிகழ்வுகளை அழகாகப் பின்னி, பிரச்சாரமறறு, வாசகர்களுக்குச் சுவை மிக்க நல்லதொரு நாவலினைப்படைத்துள்ளார் அ.ந.க.. அதிலவர் வெற்றியும் அடைந்துள்ளார்.
முடிவாக....
ஒரு வாசகருக்கு எழுத்தாளரொருவரின் படைப்புகள் நடை, கதை, வர்ணனை, தகவல்கள், கதாபாத்திரங்கள்.. என இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காகப் பிடித்துப்போகின்றன. எனக்கு அ.ந.க.வின் நடையும், எழுத்தில் விரவிக்கிடக்கும் அறிவுத் தெளிவும் மிகவும் பிடித்த விடயங்கள். அவர் இலக்கியத்தின் பல் துறைகளிலும், நாடகம், நாவல், கவிதை, சிறுகதை, உளவியல் மற்றும் விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என படைப்புகளை வழங்கியுள்ளார். தனது குறுகிய வாழ்நாளில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, உலகத் தமிழ் இலக்கிய உலகமும் நிச்சயம் பெருமைப்படத்தக்க , நன்றியுடன் நினைவு கூரத்தக்க பங்களிப்பு. அந்தப் பங்களிப்புகளுக்காக அவர் எதனை எதிர்பார்த்தார்? தன் படைப்புகள் ஏதோ ஒரு விடயத்திலாவது பயனுள்ளதாகவிருக்கவேண்டுமென விரும்பியதைத்தவிர வேறெதனையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது படைப்புகளைபெற்றுக்கொண்டவர்கள் நாம். நாம்தாம் அவரது படைப்புகளை இயலுமானவரையில் நவ ஊடகங்களில் வெளியிட்டு மேலும் பலரைச் சென்றடையச் செய்ய வேண்டும். இந்த கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் 'பதிவுகள்' இணைய இதழ் ஆற்றிவரும் பங்களிப்பு முக்கியமானது. இன்று ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் மட்டுமல்ல, உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் அ.ந.க.வும் அவரது படைப்புகளும் அறிமுகமாகப் 'பதிவுகள்' காரணமாக இருந்திருக்கின்றது. பலர் தமது ஆய்வுகளில் அ.ந.க.வை மேற்கோள் காட்டும்போது 'பதிவுகள்' இணைய இதழினை மேற்கோள் காட்டும் அளவுக்கு அ.ந.க அவை மீள் அறிமுகம் செய்வதில் 'பதிவுகள்' ஆற்றிய பங்கிருக்கின்றது. இந்தச் சமயத்தில் எழுத்தாளர் அந்தனி ஜீவாவையும் இத்தருணத்தில் நன்றியுடன் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். பலர் அவ்வப்போது அ.ந.க பற்றிய கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அந்தனி ஜீவாதான் முதலில் அ.ந.க.வின் பன்முகப்பட்ட இலக்கிய மற்றும் அரசியல் பங்களிப்பு பற்றி, விரிவாக 'தினகரன்' பத்திரிகையில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தொடர் கட்டுரையினை எழுதி அ.ந.க.வின் பன்முக இலக்கியப் பங்களிப்பினை என் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். {அத்துடன் 'அ.ந.க ஒரு சகாப்தம்' என்ற நூலினையும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றார்}. அதன் பின்னர்தான் அ.ந.க.வின் படைப்புகளைத் தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கினேன். சில்லையூர் செல்வராசன், ஈழத்து முற்போக்குக் கூடாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் போன்றோரிடமிருந்து அவரது படைப்புகளைப் பெற்றுக்கொண்டேன். இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து 'மனக்கண்' நாவலினைப் பெற்றுக்கொண்டேன். எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்து 'வெற்றியின் இரகசியங்கள்' நூலினைப் பெற்றுக்கொண்டேன். இவற்றையெல்லாம் அக்காலகட்டத்தில் கொழும்பில் வசித்த என் தம்பி பாலமுரளி பெற்று அனுப்பி வைத்தார். மேலும் சில படைப்புகளை (நாநா - மொழிபெயர்ப்பு நாவல், சுதந்திரனில் வெளிவந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றை) 'பதிவுகள்' மூலம் தொடர்புகொண்ட மயூரன் (கொழும்பு) சுவடிகள் திணைக்களத்திலிருந்தும், திருமதி கமலினி செல்வராசனிடமிருந்தும் பெற்று அனுப்பி வைத்தார். இவர்கள் அனைவரையும் பதிவுகள் நன்றியுடன் நினைவு கூருகின்றது. அ.ந.க.வின் படைப்புகளை நாடிய 'பதிவுகள்' இணைய இதழின் தேடல் தொடர்கிறது. அ.ந.க.வின் படைப்புகளை வைத்திருப்பவர்கள் 'பதிவுகள்' இணைய இதழுடன் தொடர்புகொள்ளலாம். தொடர்ப்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.