நாஞ்சில் நாடனின் இளம் எழுத்தாளர்கள் பற்றிய ஆனந்த விகடன் பட்டியல் பற்றிய தனது கருத்தினை தனது வலைப்பதிவில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். அதிலவர் 'முதல்கேள்வி இப்படி பட்டியல்போடுவது சரியா என்பது. உலகமெங்கும் எங்கு இலக்கியம் உள்ளதோ அங்கெல்லாம் இப்படி பட்டியல் போடப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்பதையும், இலக்கியம் தோன்றியநாள் முதல் இப்படிப்பட்ட பட்டியல்கள் வழியாகவே அது தரம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது என்பதையும் கோயிந்துக்களுக்கு கொட்டை எழுத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே' என்று கூறியிருக்கின்றார்.
'ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே' என்று ஜெயமோகன் பொதுவாகக் கூறியிருக்கிறார். இது தவறு. இதற்கான ஆதாரங்களை வைத்து அவர் கூறியிருக்க வேண்டும். ஐம்பெருங்காப்பியங்களெல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்ற இலக்கியப் படைப்புகள். அதன் பின்னர்தான் பதினான்காம் நூற்றாண்டில் ஐம்பெருங்காப்பியங்களென்ற பெயரில் மயிலைநாதர் என்பவரால் அழைக்கப்பட்டதாக, - சொ.ஞானசம்பந்தன் என்னும் தமிழறிஞர் தனது 'இலக்கியச் சாரல்' என்னும் வலைப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
"சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை ஐம்பெருங்காப்பியம் என்கிறோம். இந்தச் சொற்றொடரை உருவாக்கியவர் மயிலைநாதர் (14 ஆம் நூற்றாண்டு); இவர் இலக்கண நூலாகிய நன்னூலுக்கு உரை எழுதி இருக்கிறார்; அந்த உரையில்தான் "ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு" என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சொற்றொடர்களையே நாம் பன்னெடுங்காலமாய்த் திருப்பிச் சொல்லிவருகிறோம்; எண்பெருந்தொகை மட்டும் எட்டுத்தொகை என்று சுருங்கிவிட்டது"
தனது கட்டுரையில் மேலும் அவர் குறிப்பிடுவதாவது: "
"அப்படி உரைத்த மயிலைநாதர் ஐம்பெருங்காப்பியம் இவை இவை எனச் சுட்டிக் காட்டவில்லை. பின்பு தோன்றிய "தமிழ்விடு தூது" என்னும் சிற்றிலக்கியமும், "கற்றார் வழங்கு பஞ்ச காப்பியமும்" என்றதே ஒழிய விரித்துரைக்கவில்லை. கந்தப்ப தேசிகர்தான் (19 ஆம் நூ.) தாம் இயற்றிய திருத்தணிகை உலாவில் காப்பியங்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்:
சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
சுந்தர மணிமே கலைபுனைந்தான் --- நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டல கேசிக்கும் ...............
என்பது அவரது செய்யுள். இவற்றைத்தான் மயிலைநாதர் மனத்தில் எண்ணினாரா என்பது தெரியவில்லை. இவற்றுள் வளையாபதியில் 66 பாக்களும் குண்டலகேசியில் 224 பாக்களும் மட்டுமே கிடைத்துள்ளன. சிறு காப்பியங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிற சூளாமணி, பெருங்காப்பியம் என்னும் பெயர்க்குப் பொருத்தமானது எனத் திறனியர் கூறுகின்றனர். வடமொழியிலும் ஐங்காவியம் (பஞ்ச காவ்யம்) உண்டு. அவை: நைடதம், கிராதார்ச்சுனீயம், ரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம்."
தமிழறிஞர் சொ.ஞானசம்பந்தன் தன்னைப்பற்றித் தனது வலைப்பதிவில் "11.02.1926 இல் புதுச்சேரி மாநிலத்துக் காரைக்காலில் பிறந்து, பிரெஞ்சு மொழிவழி மேனிலை வரை கல்வி பயின்றேன். அரசு தொடக்கப் பள்ளியில் பிரெஞ்சாசிரியராய்ப் பணியாற்றியபோதே தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராயும், தலைமை ஆசிரியராயும் வேலை செய்து ஓய்வு பெற்றேன். கற்ற பிறமொழிகள்: ஆங்கிலம், இலத்தீன், இந்தி. இயற்றிய நூல்கள்: 1. தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி? 2. லத்தீன் இலக்கிய வரலாறு. 3. பிரெஞ்சு இலக்கிய வரலாறு. 4. மாப்பசான் சிறுகதைகள். 5. சிங்க வேட்டை. 6. மறைந்த நாகரிகங்கள்."
நாஞ்சில் நாடன் தன் வாசிப்பு அறிவுக்கேற்ப தனது பட்டியலை வெளியிடுவதில் தவறொன்றுமில்லை. அது அவரது உரிமை. அது போல் அது பற்றிய எத்தகைய கருத்துகளையும் வெளியிடுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. அது அவர்களது, வாசகர்களது உரிமை.
ஈழத்தமிழர்கள் அரசியல் காரணங்களுக்காக புலம் பெயர்ந்து முப்பதாண்டுகள் கடந்து விட்டன. அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் படைக்கும் இலக்கியம் புகலிடத்தமிழ் இலக்கியம், புலம் பெயர் தமிழ் இலக்கியம் என்று வகைப்படுத்தப்பட்டுத் திறனாய்வுக்குட்படுத்தப்படுகின்றது. , பல்வேறு நாடுகளிலிருந்தும் புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், நாடகங்கள், சஞ்சிகைகள், இணையச் சஞ்சிகைகள் என்று அவர்களது பங்களிப்பு தொடர்கின்றது. இந்நிலையில் ஈழத்தமிழர்களின் ஈழத்திலிருந்து படைக்கப்படும் இலக்கியம் ஒரு பிரிவாகவும், புகலிட/புலம் பெயர் தமிழர்களின் இலக்கியம் இன்னுமொரு பிரிவாகவும் ஆராயப்பட வேண்டியதொன்று. தனது பட்டியலில் இவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது புகலிடத் தமிழ் இலக்கியத்தில் நம்பிக்கை தருபவர்களாக இவர்களைக் குறிப்பிட்டிருக்கலாம். மேலும் ஈழத்திலிருந்து காத்திரமான படைப்புகளை வழங்கும் இளையவர்களின் பெயர்களைத் தனியாக ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவர்களாகக் குறிப்பிட்டிருக்கலாம். அண்மைக்காலமாக ஈழத்திலிருந்து பல இளையவர்கள் கவிதைகள், புனைகதைகளென்று ஆழமாக எழுதி வருகின்றார்கள். எழுநா , வடலி போன்ற பதிப்பகங்கள் வாயிலாக அவர்களின் எழுத்துகள் நூலுருப்பெற்றிருக்கின்றன. நாஞ்சில்நாடன் தமிழகத்தின் வெகுசன இதழ்களில் எழுதுபவர்களின் படைப்புகளை வாசிப்பதுடன், ஈழத்திலிருந்து மற்றும் புகலிடச் சூழலிலிருந்து வெளியாகும் படைப்புகளையும் அதிகம் வாசிக்க வேண்டும். அவ்விதம் வாசிக்காமல் பட்டியலிடுவது தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளைப் போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியே தீரும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.