அண்மையில் 'டொராண்டோவி'ருந்து வெளிவரும் 'டொராண்டோ ஸ்டார்' தினசரியில் ஏப்ரல் 2, 2013இல் வெளியான 'தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள்' பற்றி 'டெப்ரா பிளாக்' ((Debra Black) எழுதிய கட்டுரை பற்றி, கனடிய பல்லின இலக்கியம், மற்றும் கனடிய இலக்கியம்' பற்றிய எனது கருத்துகளைச் சிறியதொரு வாசகர் கடிதமாக எழுதி அனுப்பியிருந்தேன். அதனை 'டொராண்டோ ஸ்டார்' தனது ஏப்ரல் 4, 2013 பதிப்பிற்கான ஆசிரியர் கடிதத்தில் 'Shedding light on ethnic literature' என்னும் தலைப்பில் பிரசுரித்திருந்தது. அக்கடிதத்தையும், அது கூறும் கருத்துகளையும், அத்துடன் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதையினையும் இம்முறை ஒரு பதிவுக்காகப் பதிவு செய்கின்றேன். மேற்படி கடிதம் சிறியதாகவிருந்தாலும் அது கூறும் விடயம் மிகவும் முக்கியமானது. கனடாவின் உத்தியோக மொழிகள் ஆங்கிலமும், பிரெஞ்சும் ஆனபடியால் கனடிய இலக்கியமென்றால் மேற்படி மொழிகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி மட்டுமே கொண்டதாகப் பலர் கருதிவிடுகின்றார்கள். ஆனால், கனடா பல்லின மக்கள் அதிகமாக வாழும் நாடுகளிலொன்று. இங்கு வாழும் பல்லின மக்களால் அவர்களது மொழிகளில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளைப் பற்றிக் கனடாவின் பெரும்பான்மைச் சமூகமான ஆங்கிலேயர்களோ அல்லது பிரெஞ்சு சமூகத்தவரோ அதிகமாக அறியமுடியாத நிலையே நிலவுகின்றது.
மேலும் பல்லின மக்களால் படைக்கப்படும் இலக்கியப் படைப்புகளும் அவற்றைப் படைக்கும் சமூகங்களுக்கு மட்டுமே அறிமுகமானதொன்றாக இருந்து விடுகின்றன. இதற்கு முக்கிய காரணங்களிலொன்று: ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளியாகும் படைப்புகள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்படாதிருப்பதுதான். அவ்விதம் மொழிபெயர்க்கப்படும் ஒரு சில படைப்புகளும் பெரும்பாலும் ஒரு சில குழுக்கள் பெறும் அரசின் உதவிகளைக்கொண்டு , அக்குழுவின் ஆர்வங்களுக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு வெளியாவதால், போதிய கவனத்தினைக் கனடாவின் பிரதான ஊடகங்கள் மத்தியில் பெறுவதில்லை. இவ்விதமானதொரு சூழலில் 'கனடாத தமிழ் இலக்கியத் தோட்ட'த்தின் விருதுகள் பற்றிய கட்டுரையானது பிரதான கனடிய பத்திரிகைகளிலொன்றான 'டொராண்டோ ஸ்டார்' பத்திரிகையில் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆங்கிலேயரல்லாத, பிரெஞ்சியர்களல்லாத ஏனைய மொழி பேசும் கனடியர்களால் படைக்கப்படும், ஆற்றப்படும் இலக்கியப் படைப்புகள் மற்றும் முயற்சிகள் பற்றி அனைத்துக் கனடியர்களும் அறிய வழியினை இவ்விதமான கட்டுரைகள் ஏற்படுத்துகின்றன. அத்துடன் இவ்விதமாகப் பிறமொழி பேசும் கனடியர்களால் படைக்கப்படும் கலை, இலக்கியப் படைப்புகளை பிரதான உத்தியோக மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் ஆர்வத்தையும் கனடியர்கள் மத்தியில் ஏற்படுத்திட உதவும் சாத்தியங்களை உருவாக்குகின்றன. மேலும் பிறமொழிகளைக் கற்று அம்மொழிகளில் வெளியாகும் படைப்புகளைப் பிரதான உத்தியோக மொழிகளில் ஏற்படும் ஆர்வத்தையும் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படுத்துவத்தற்கான சாத்தியங்களையும் உருவாக்குகின்றன.
ஆங்கிலேயர்கள் போன்ற உலகின பல மொழிபேசும் மக்கள் சீன மொழியினை, ருஷ்ய மொழியினை, ஸ்பானிஷ் மொழியினை, இது போன்ற பல மொழிகளைக் கற்று அம்மொழிகளில் வெளியாகும் படைப்புகளைத் தமது மொழிகளில் மொழிபெயர்க்கின்றார்கள். ஒரு காலத்தில் ஜி.யு.போப் போன்றவர்களெல்லாரும் தமிழ் மொழியினைக் கற்று தமிழ் மொழிக்குச் சேவையாற்றியிருக்கின்றனர். இன்று அவ்விதம் எத்தனை வேற்று மொழியினர் தமிழைக் கற்று தமது மொழிகளில் தமிழ்ப் படைப்புகளை மொழிபெயர்த்திருக்கின்றார்கள்? தமிழ்ப் படைப்புகளைத் தமிழர்கள்தாம் பெரும்பாலும் மொழிபெயர்க்கின்றார்கள். இவ்விதமாக வேற்றுமொழியினர் சீன, ருஷ்ய மொழிகளையெல்லாம் கற்றுத் தமது மொழிகளில் அவ்விதம் கற்ற மொழிகளிலிருந்து படைப்புகளை மொழிபெயர்க்கின்றார்களோ அவ்விதம் தமிழ் போன்ற ஏனைய கனடியர்களின் மொழிகளைக் கற்று, மொழிபெயர்ப்பதற்கு வேற்றுமொழிகளில் படைக்கப்படும் இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள், அவை பற்றிய கட்டுரைகள், தகவல்கள் போன்றவை கனடாவின் பிரதான ஊடகங்களில் அதிக அளவில் வெளியாகவேண்டும். அந்நிலை உருவாகுவதற்குரிய ஆரம்பப் படிகளிலொன்றாகத்தான் மேற்படி 'டெப்ரா பிளாக்'க்கின் 'ஸ்டார்' கட்டுரையினைக் கருதுகின்றேன். அதனால்தான் அச்சிறு வாசகர் கடிதத்தை 'ஸ்டார்' பத்திரிகைக்கு எழுதி அனுப்பினேன். அதனால்தான் அக்கடிதத்தில் 'கனடாவின் பல்லின மக்கள் படைக்கும் இலக்கியம் பற்றி, கனடிய இலக்கியம் பற்றி'க் குறிப்பிட்டிருந்தேன்.
அக்கடிததின் தமிழாக்கம் கீழே:
'கனடா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. பல்லினச் சமூகங்கள் அருகருகாக வாழுகின்றன. பல்லினச் சமூகங்கள் படைக்கும் தினசரிகள், வாரவெளியீடுகள் மற்றும் மாதவெளியீடுகள் பல வெளியாகின்றன. பல வேற்றுமொழிக் கனடியக் குடியுரிமை பெற்ற எழுத்தாளர்கள் தத்தமது மொழிகளில் பங்களிப்பு செய்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்கள் படைக்கும் இலக்கியமானது கனடிய இலக்கியத்தினொரு பகுதியாகக் கருதப்பட வேண்டும். வேற்றுமொழிக் கனடியர்களால் படைக்கபடும் இலக்கியம் பற்றிக் கனடாவின் 'ஸ்டார்' போன்ற பிரதான ஊடகங்கள் எழுதுவதானது எல்லாக் கனடியர்கள் மத்தியிலும் இவ்விதமான வேற்றுமொழிக் கனடியர்கள் படைக்கும் இலக்கியம் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
இது அரசின் இலக்கிய அமைப்புகள் கனடாவின் வேற்றுமொழி இலக்கியம் பற்றி, அம்மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் பற்றி, அவர்களது கனடிய இலக்கியத்துக்கான பங்களிப்பு பற்றி அறிந்துகொள்ள உதவி செய்கின்றது. இது வேற்றுமொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் மேற்படி அரசசார்பு இலக்கிய அமைப்புகளின் வளங்களையும் அடைய உதவி செய்கின்றது.'
Toronto Star
Opinion / Readers’ Letters
Shedding light on ethnic literature
Published on Thu Apr 04 2013
Re: Nurturing ancient Tamil language a ‘labour of love’, April 2
Thanks for publishing this article about the Tamil Literary Garden awards written by Debra Black in your highly esteemed newspaper. Canada is a multilingual country. Many different ethnic communities live side by side. Ethnic publications are published daily, weekly and monthly.
Many ethnic writers who are also Canadian citizens contribute in their mother tongue. In that respect, ethnic literature of Canada should be considered as part of Canadian literature. Writing about ethnic literature in mainstream media such as the Star makes all Canadians aware about the ethnic literature of Canada.
This will also help the governmental literary organizations of Canada learn about Canadian ethnic literature, ethnic writers and their contributions to Canadian literature. This will help ethnic writers to reach the resources of such governmental organizations.
V.N. Giritharan, Toronto