தனித்துப் போராடும் முன்னாட் பெண் போராளி எழில்வேந்தன் கோணேஸ்வரி!
கடந்த சில நாட்களாக முகநூலில் , இணையத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த துன்பம் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் பெயர் எழில்வேந்தன் கோணேஸ்வரி . முன்னாள் விடுதலைப்புலிப் போராளி. இவரது சகோதரர்களும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி மரணித்தவர்கள்., இவரது கணவரும் முன்னாள் புலிகள் இயக்கத்துப் போராளி. அவர் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களிலொருவர். புலிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் இவரது சகோதரர் ஒருவர் அழகரட்ணம் என்பவருக்கு ரூபா 28 இலட்சம் பணம் கொடுத்து வாங்கிய காணியில் இவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால் அக்காணி அக்காலத்தில் முறையாக அரச காணிப்பதிவேட்டில் பதியப்படவில்லை. இவ்விதமான சூழலில் வாழ்ந்துவரும் இவர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். செஞ்சோலையில் வாழ்ந்து வந்தவர். வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விட்டது இவருக்கு.
தற்போது இவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? இவர் வீடு அழிக்கப்பட்டு , தாக்கப்பட்டு மருத்துவ மனையிலிருக்கின்றார். காரணம்? இவர் குடியிருக்கும் காணி சட்டரீதியாக இவருடையது அல்ல. ஆனால் இக்காணிக்கு இவரது சகோதரர் அன்று ரூபா 28 இலட்சம் கொடுத்ததாக இவர் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கைநெற் இணையத்தளச் செய்தின்படி இவருக்கு ஏற்பட்ட நிலைமைக்குக் காரணம்:
இவர் சில வருடங்களுக்கு முன்னர் உதவி கேட்டு சிறீதரன் பா.உறுப்பினரிடம் சென்றிருக்கின்றார். அவர் வேழமாலிகிதன் என்பவரை இவரது இருப்பிடம் சென்று இவரது நிலையை அறிந்து வரச் சொல்லியிருக்கின்றார். அவ்விதம் சென்று இவரது நிலையை அறிந்து கொண்ட வேழமாலிகிதன் தான் சிறீதரனிடம் இவரது நிலையை எடுத்தியம்புவதாகக் கூறியுள்ளார். ஆனால் அன்றிரவே பத்து மணியளவில் இவரை அழைத்து தங்கச்சி உணவுக்கு என்ன செய்தீர்கள்? தான் கொத்துரொட்டி வாங்கி வருவதாகக் கூறுகின்றார். இவரது கூற்றுப்படி (இலங்கைநெற் தளத்தில் வெளியான செய்தியின்படி) இவர் அவ்விதம் வேழமாலிகிதன் இரவில் அழைத்துக் கொத்துரொட்டி கொண்டு வருவதாகக் கூறியதையிட்டுச் சந்தேகம் அடைகின்றார். வேழமாலிகிதன் தவறான எண்ணத்தில்தான் அச்சமயம் அழைத்ததாக இவர் எண்ணுகின்றார். அதன் விளைவாக அயலவரிடம் அது பற்றிக் கூறி பாதுகாப்புக் கேட்கின்றார். இதனால் தன் பெயருக்குக் களங்கமேற்படுத்திய இவரின் மேல் ஆத்திரம் கொண்ட வேழமாலிகிதன் அன்றிலிருந்து இன்றுவரை இவருக்குத் தொல்லைகள் கொடுக்கின்றார். காணியின் முன்னாள் உறுப்பினர் அழகரட்ணத்துடன் தொடர்புகொண்டு இக்காணி இப்போது ஒரு கோடி வரையில் செல்லுமென்று கூறிச் சட்டத்தின் துணையுடன் இவரைக் கலைக்கின்றார். இருந்த வீட்டையும் சிதைத்து விடுகின்றார்.