பயனுள்ள மீள்பிரசுரம்: போருற்ற உலகு! - பா.ரவீந்திரன் -
[ நல்லதொரு கட்டுரை. தற்போது நடைபெறும் ருஷ்யா & உக்ரைன் மோதலைப் புரிந்துகொள்ள உதவும் கட்டுரை. உக்ரைன் தன் பூகோள கேந்திர முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுக்காது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதும், நேட்டோ நாடுகள் வார்சோ நாடுகளின்கூட்டணி கலைக்கப்பட்ட பின்னரும் ருஷ்யாவுக்கெதிரான விஸ்தரிப்பினை அதிகரித்து வந்ததும் இம்மோதலுக்கு முக்கிய காரணங்கள். போருக்கான காரணங்கள் எவையாயிருப்பினும் பாதிக்கப்படுவது உக்ரைன் நாட்டு அப்பாவி மக்களும், உக்ரைன், ருஷ்யாப் போர்வீரர்களும்தாம். விரைவில் யுத்தம் முடிவுக்கு வரட்டும். உக்ரைன் நடுநிலை நாடாக இருப்பது இம்மோதலை முடிவுக்குக் கொண்டு வரும். - பதிவுகள்.காம்]
யுத்தம் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. யுத்தம் என்பது சண்டை மட்டுமல்ல. பெரும் உயிரழிவுகளையும் அங்கவீனமுறும் மக்கள் கூட்டத்தையும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, அது பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகிறது. பண்பாடுகளை அதன் விழுமியங்களை மரபுகளை சிதைத்துவிடுகிறது. இயற்கை வளங்களை அழிக்கிறது. இவ்வாறாக ஒரு சமூகத்தை அதன் மரபுத் தொடர்ச்சியிலிருந்து, இயல்பான வளர்ச்சிநிலையிலிருந்து முறித்து முடமாக்குகிறது. எனவே யுத்தத்துக்கு எதிராக நிற்றல் எனபது மிக அடிப்படையானது.
போருக்கு எதிராக நிற்றல் என்பது போரை அதை நிகழ்த்துபவர்மீதும் அதை உருவாக்கி நலன்பெறும் திட்டமிட்ட நாடுகள், சக்திகள் மீதுமான கூட்டு எதிர்ப்பாக இருக்க வேண்டும். ஆனால் நடப்பது அந்த நிலையை உருவாக்குபவர்களின் சக்திமிக்க ஊடகங்களும் குயுக்திகளும் மக்களை மூளைச்சலவை செய்து தம்மை காப்பாறிக்கொள்கின்றன. இந்தப் போரில் மேற்குலகினதும் அமெரிக்காவினதும் பெரும் பாத்திரத்தை மீறி ரசியாவுக்கு மட்டும் விரல் நீட்டுவது பகுதியளவே சரியாக இருக்கும். (இதை போரை ஆதரித்தல் என மொழியெர்க்காமல் இருந்தால் சரிதான்).
உக்ரைன் யுத்தத்தில் ரசியா படைகள் உட்புகுந்ததால் அதுவே குவிமையப்படுத்தப்படுவது நிகழ்கிறது. ஆனால் நாம் அதற்குள் மட்டும் நின்றுவிட முடியாது. இந் நிலை வரலாற்று ரீதியில் எப்படி நிகழ்ந்தது என்ற பார்வையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே எமது போரெதிர்ப்பு மனநிலையை ஆரோக்கியமாக வளர்த்துச் செல்லும்.