சிறிலங்கா அரசு மீது பல்வேறு முனைகளாலும் அழுத்தத்தைக் கொடுப்போம் - உலகத் தமிழர் பேரவை!
செவ்வாய்க்கிழமை, 16 ஒக்ரோபர் 2012 - மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது பல்வேறு முனைகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சிறிலங்கா மீதான பூகோள கால மீளாய்வுக் கூட்டம் இரண்டாவது முறையாக நவம்பர் 01ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தை வலுவாக எதிர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையானது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான தனது சொந்த அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. "நாங்கள் பூகோள கால மீளாய்வில் பங்குபற்றியுள்ளோம். எமது தலைவரான எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் வேறு சிலருடன் ஜெனீவா செல்லவுள்ளார். நானும் ஜெனீவா செல்லவுள்ளேன்" என சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.