அண்மைய இலண்டன் தூதரகச் சம்பவமும், அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வலையும்....
இலங்கையின் சுதந்திர தினநாளன்று இலண்டனிலுள்ள இலங்கைத்தூதுவராலயத்தில் நடைபெற்ற விவகாரமானது தமிழ் ,சிங்கள அரசியல்வாதிகளுக்கு மெல்லக் கிடைத்த அவலாகியுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்தை வெட்டும் சைகை தற்போதுள்ள சூழலில் , யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் தேவையற்றதொன்று. அவரது செய்கையினை நாட்டில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காகப் பதவிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவின் அரசில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனா வரவேற்றுப் பாராட்டிப் பேசினார். இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நிறுத்தி விசாரணையை ஆரம்பித்தது. ஆனால் தென்னிலங்கையில் அரசியல்வாதிகளால் இச்சம்பவம் இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கப்பட்டதை அடுத்து , அதற்கு அடிபணிந்த ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அதனை இடை நிறுத்தி அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார். இதன் மூலம் அவர் நாட்டின் ஒரினத்துக்குச் சார்பாகச் செயற்படும் ஜனாதிபதியாகவே தென்படுவார். இணக்க அரசியல் பேசும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் இப்பிரச்சினை விட்டு வைக்கவில்லை. அவரும் சூழலுக்கு அடிபணிந்து உடனடியாகப் பிரிகேடியரை நாட்டுக்குத் திருப்பி அழைக்குமாறு கோரியிருக்கின்றார். இதற்கிடையில் இப்பிரச்சினை பூதாகாரமாக வெளிப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியிலுள்ள புலம்பெயர் அரசியல்வாதிகளும், தென்னிலங்கை அரசியல்வாதிகளைப்போல் இதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினர்.
இலங்கைத் தூதுவராலயத்தின் முன் அமைதியாக புலிக்கொடியுடன் போராட்டம் நடத்துவது அதனை நடாத்துவதற்கு அனுமதியளித்த ஜனநாயக நாடொன்றில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. அதனை இவ்விதமானதொரு சைகையின் மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ வெளிப்படுத்திக் கையாண்டிருக்கத்தேவையில்லை. நாட்டில் விடுதலைப்புலிகளுடான யுத்தம் முடிவுற்ற நிலையில் இன்னும் இவ்வளவுதூரம் பிரிகேடியர் உணர்ச்சி வசப்பட்டிருக்கத் தேவையில்லை. உண்மையில் இச்செய்கையானது சிறுபிள்ளைத்தனமானது. இருவர் வாக்குவாதப்படுகையில் கொல்லுவேன், வெட்டுவேன் என்று பயமுறுத்துவதைப்போன்றது. நாட்டில் 2009இல் யுத்தமே முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்த யுத்தத்தின் பாதிப்புகள், யுத்தக் குற்றங்கள், தொடரும் இலங்கையிலுள்ள சிறுபான்மையினப் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்றவற்றுக்கான தீர்வுகள் இன்னும் உரிய முறையில் கிட்டாத நிலையில் இவ்விதமான பொறுப்பற்ற செயல்கள் , நாட்டில் நல்லெண்ணச் சூழல் ஏற்படுவதைத் தாமதமாக்கும். மேலும் தற்போதுள்ள சூழல் மேலுள்ள கவனத்தைச் சீர்குலைத்து , மக்களுக்கு மத்தியில் இனரீதியிலான முரண்பாடுகளை அதிகரிக்கவெவே வைக்கும். அரசியல் நலன்களுக்காக அனைத்து அரசியல்வாதிகளும் இவ்விடயத்தை இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கவே முயல்வார்கள்.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியருக்கு மீள்பதவியை வழங்குவதற்குப்பதில் , நாட்டின அனைத்து மக்களுக்கும் தான் ஜனாதிபதியாகச் செயற்பட்டிருக்க வேண்டும். பிரிகேடியரின் தற்போது பத்திரிகையாளர்களின் சந்திப்பொன்றில் விளக்கமளித்துள்ளார். இவ்விதமான விளக்கங்கள் அளிப்பதற்கு முன்னர் இதுபோன்ற செயலினை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். ஏற்கனவே சீர்குலைந்திருக்கும் இனங்களுக்கான உறவுகள் சிறிது சிறிதாகச் சீர்பெற்று வருமொரு சூழலில் இந்தச்சிறு செயலின் மூலம் இலங்கையின் பதவி, இன வெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மெல்லுவதற்கு அவலைக்கொடுத்துள்ளார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.