முன்னுரை
“அமர காவியம் இது”: என்று கூறியுள்ள திரு.சக்தீ பாலையா, தனது மொழிப்பெயர்ப்பு பற்றி, மேலும் கூறுவார்: ‘(ஆனால்) நான் எழுதியது வரிக்கு வரியிலான மொழிப்பெயர்பல்ல. மன உந்துதலால் உதித்த கவிதைகள் (இவை)’ (மேற்கோள்:திலகர்: சூரியகாந்தி:25.12.2023).
சக்தீ பாலையா இப்படி கூறுவதிலும் பல அர்த்தங்கள் உண்டு. என்றாலும், அவரே இம் மொழிப்பெயர்ப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கின்றார் என்பது அழுத்தமான உண்மையாகின்றது.
ஆனால், கீழே காணப்படும் மொழிப்பெயர்ப்பானது, அவரது மொழிப்பெயர்ப்பில் இருந்து சற்றே வேறுபட்டு, வித்தியாசமான ஒரு நடையில் தரப்படுகின்றது. ஒரு வேளை இது, வேலுப்பிள்ளையின் மூல நடையின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்றாகவும் இருத்தல் கூடும்.
இப்புள்ளியிலேயே, வேலுப்பிள்ளை அவர்களின் எழுத்துக்கள் பொறுத்த, விருப்பு வெறுப்பற்ற கணிப்பொன்றை, நாம் உருவாக்கி கொள்வதும் அவசியமாகின்றது. ஏனெனில், ஜக் மோகனுக்கு மாத்திரமல்லாமல் அனேகருக்கும் ஓர் மர்மமாக அல்லது ஓர் புதிராக அமையக்கூடிய வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் பொறுத்த யதார்த்தப்பூர்வமான கணிப்பொன்று எமக்கு தேவைப்பட்டுத்தான் போகின்றது.
மேலும், வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் பொறுத்த பின்வரும் குற்றச்சாட்டுக்கள் காலந்தோறும் முன்வைக்கப்படாமலும் இல்லை:
“அவரது கலைப்படைப்புக்கள் தோட்டத் தொழிலாளியின் போர் குணத்தை காட்ட தவறுகின்றன. அவரது காலத்தில் நிகழ்ந்த முனைப்புற்ற போராட்டங்களையும் எழுச்சிகளையும் இலக்கியமாக்க அவர் தவற விட்டிருக்கின்றார்…” (2012 ஒக்டோபர்).
“பெரிய கங்காணியின் கொடுமைகளை அவர் எந்த இடத்திலும் விமர்சிக்கவோ அன்றி தொட்டுக்காட்டவோ இல்லை… அவர் ஒரு பெரிய கங்காணியின் வாரிசாகவே செயல்பட்டுள்ளார்…” (2026)
கிட்டத்தட்ட, ஒன்றிலிருந்து ஒன்றாய், ஒரு பதினைந்து ஆண்டுகால இடைவெளியில் ஆற்றப்பட்டுள்ள, இப்படியான விமர்சனங்கள் எந்த அடிப்படையில் ஆற்றப்படுகின்றன என்ற கேள்வி எம்மிடை எழுவது சகஜமாகின்றது.
தன்னை முன்னிலைப்படுத்தும் அவா ஒருபுறம் இருக்க, மறுபுறம் இவற்றுடன் வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் அனைத்தையும் ஒழுங்குற நேர்த்தியாக கற்காததின் போதாமையும் இத்தகைய விமர்சனங்களுக்கு அடிப்படைகளாகின்றன. அல்லது இவ்விரு காரணிகளும் ஒன்றுக் கலக்ககூடிய சாத்தியகூறையும் நாம் மறுப்பதற்கில்லை.
1952இல், மலையக மக்களின் வாக்குரிமை பறிபட்டமைக்கு எதிராக, “அன்றைய” “காங்கிரஸ்”, நாட்டின் பிரதம மந்திரியின் அலுவலக வாயிற்படியில், காந்திய மோஸ்தாரில் ஒரு சத்தியாகிரகத்தை மேற்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 798,000 தொழிலாளர்களை கொண்டிருந்த அன்றைய மலையகம் இக் கொடுஞ்செயலுக்கு எதிராக, ஏன் வேலை நிறுத்தங்களில் இறக்கப்படவில்லை என்பது முக்கியமானதொரு கேள்வி. வெறும் பேச்சுக்கு, 6000 தொழிலாளர்களை மாத்திரமே, வேலை நிறுத்தம் அல்லாமல், வெறும் சத்தியாகிரகம் என்ற பெயரில் பங்குபற்ற செய்தமை ஏன் என்பது ஒரு வரலாற்று கேள்வியாகின்றது. (அதுவும் ஓர் சுற்றுமுறையில்).
எது எப்படியிருப்பினும், இதன்போது, ஒரு பத்து மணி நேரமாய், இவ் எழுத்துக்களின் சொந்தக்காரரான, திரு.வேலுப்பிள்ளை அவர்கள் ஒரு போலீஸ் வேனில் அடைக்கப்பட்டார் என்பதும் இந் நெடுங்கவிதையின் பெரும்பகுதி, அப்போலீஸ் வேனில் வைத்தே எழுதப்பட்டது என்பதும் பதிவு.
மலையகத்தின் ஒரே ஒரு பாணன் (Bard) என்று பெயர்ப்பெற்ற திரு.வேலுப்பிள்ளை அவர்கள், தன் இளம் வயதிலேயே தொழிற்சங்க அரசியலில் நுழைந்து பிரவேசம் கொண்டார் என்பது பம்பாயின் ஜெக் மோகனின் (JAG MOGAN) 1954இன் முன்னுரையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது, அவரே ஒரு கேள்வியும் கேட்டு தன் முன்னுரையை முடித்து வைக்கின்றார்: ‘இங்கே ஒரே ஒரு மர்மம் உண்டுதான் - இந்த கவிதைகளை பார்வையிடுமிடத்து, தாகூரின் சி~;ய பிள்ளையாக திகழ்ந்த வேலுப்பிள்ளை அவர்கள், ஒரு குறித்த காலத்தில், எப்படி தாகூரின் அன்றைய ரொமான்டிசிசத்தை (Romantism) தூக்கியெறிந்து, நவீன கவிதைக்குள் (Modern Poem) நுழைந்து கொண்டார் என்பதே அந்த மர்மமாகும்’.
மனிதனின் சிறுமையும் பெருமையும் அவரவர் மக்கள் திரள்வுடன் கொள்ளும் நெருக்கத்திலிருந்தே பிறப்பெடுக்கின்றன எனலாம். இந் நெருக்கமானது சில வேளைகளில் மறைமுகமாகவும் சில வேளைகளில் நேரடியாகவும் இயங்குவதுதான். இருப்பினும் இந்நெருக்கங்களின் வெவ்வேறு பரிமாணங்களுக்கேற்பவே, குறித்த கவிஞனது எழுத்துக்கள் புடம்போடப்படுகின்றன. அவற்றில் தவழும் சத்தியம், இந்நெருக்கங்களை எதிரொலிக்காமல் விடுவதும் இல்லை.
வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களில் பிறப்பெடுத்துள்ளதை நாம் அவதானிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. ஒன்று, அவரது மிக இளம் வயதில் (கிட்டத்தட்ட பதினேழு வயதில்) தாகூரின் மிக நெருக்கமான செல்வாக்குக்கு உட்பட்டு “விஸ்மாஜினி” (1934) என்ற படைப்பினை எழுதிய ஓர் இளவயதுகாரனின் காலம்.
இக்காலக்கட்டத்தில், அவர் ஓர் இந்திய விடுதலை இயக்கத்தின் அரசியலாலும் காந்திய செல்வாக்காலும் பாதிப்புற்றிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. (படத்தில் குல்லாயுடன் தோன்றும் வேலுப்பிள்ளையின் முகபாவமும் அதனை நிராகரித்து மகா கோபத்துடன் வீற்றிருக்கும் பெரிய கங்காணியான அவரது தாத்தாவின் முகபாவத்தையும் நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். ஆங்கில புலமையுள்ள தனது பேரன், துரையைப்போல் கோர்ட்-சூட்டுடன், படத்துக்கு தோன்றுவார் என எதிர்ப்பார்க்கும் ஒரு சராசரி தாத்தாவின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக வேலுப்பிள்ளை குல்லாயுடனும் கதர் சட்டையுடனும் தோன்றும் போது தாத்தாவுக்கு ஏற்படுத்தக்கூடிய ‘ஏமாற்றம்’ புரிந்துக் கொள்ளக்கூடியதே).
இதனை தொடர்ந்து அடுத்து வந்த காலகட்டமே அவரது எழுத்தின் தலையாய பண்பை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்ல ஏதுவாய் அமைந்தது. அதுவே, அவரை மலையக வரலாற்றின் ஒரே ஒரு பாணனாகவும் முன்னிறுத்தியதாகியது.
In the Ceylon Tea Garden (1952) எனும் இந்த நெடுங்கவிதையையும், உழைக்க பிறந்தவர்கள் (Born to Labour) (1965-1969) எனும் அன்றைய மலையக வாழ்வின் அற்புத சித்தரிப்பினையும், மலையக அரசியல்:தலைவர்களும் தளபதிகளும் (1958-1959) என்று பிரவாகம் கொண்டுள்ள பல்வேறு மலையக தலைவர்கள் பொறுத்த வர்ணனைகளும் எழுத்துக்களும் அவரது இலக்கிய ஆளுமையை மட்டுமல்ல ஆனால் அவரது அரசியல் செழுமையையும் எமக்கு சுட்டிக்காட்டத்தக்கதுதான்.
மலையகத்தின் அன்றைய யதார்த்த வாழ்வுடன், தான் இதுகாறும் சேகரித்து வந்திருந்த ஆங்கில இலக்கியத்தின் செழுமையும், முக்கியமாக, மலையக பெருந்தோட்ட அமைப்பு முறையில் தொழிற்சங்க வரலாறானது, உற்பத்தி செய்திருந்த அரசியல்களையும் ஒன்று கலக்க செய்யும் இவர், தாம் கண்டுணர்ந்த தொழிலாளரின் விதிகளை இப்படி முன்வைத்ததற்கூடாக, அவர் மலையக வரலாற்றின் ஒரே ஒரு பாணனாகின்றார்.
மறுமுனையில், இதுவே ஜக் மோகனை பொறுத்தமட்டில் “மர்மமாயும்” வரையறுக்கப்படுகின்றது. தாகூரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த ஒரு மனிதன் எப்படி நவீன கவிதைக்குள் நுழைந்தான் என்பது அவரது கேள்வியானது.
மேற்படி, இரண்டாவது கட்டத்தை தொடர்ந்து வந்த மூன்றாவது கட்டம், வேலுப்பிள்ளை அவர்களை முற்றாக வேறு ஒரு திசைக்கு இழுத்து செல்வதாயும், வேலுப்பிள்ளை என்ற ஒரு மனிதன் தனது செயற்பாடுகளுக்கூடு தொழிலாளர் அணியிலிருந்து, ஒப்பீட்டளவில், கத்தரிக்கப்பட்டு ஒரு குடும்ப மனிதனாக ஒடுக்கப்பட்ட ஒரு காலகட்டமாகும்.
அவரது மனைவியும் பிள்ளையும் மாத்திரமே இத்தகைய கத்தரிப்புக்கான காரணமாக அமைந்திருக்க முடியாது. இக்கத்திரிப்பின் பின்னணியில் தொண்டமான் போன்றோர் நகர்த்திய அரசியலும் அந்நகர்வுக்கு பக்கபலமாய் அமைந்திருக்கக்கூடிய இந்திய வர்த்தக பெருமக்களின் ஆதிக்கமும் இதற்கான காரணங்களாய் அமைந்திருக்க கூடும். (கூடவே, பிரதேச-உலக வல்லரசுகளின் பங்களிப்புகளையும் சேர்த்துக் கொள்வது நன்று).
மே 15 1948இல் வெளியிடப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் அறிக்கைப்படி (1947-1948) தொண்டமான் அன்றைய இலங்கை இந்திய காங்கிரசுக்கு ரூ131,172.91ஐ கடனாக வழங்கியுள்ளார். அடுத்த கடன் தருனர் ஏ.அசிஸ் ஆவார். (ரூபாய்:2361.47)
இதனை ஒருவழியில் தொண்டமான் அவர்கள் அன்று தான் செய்த வர்த்தக முதலீடு என வர்ணிப்பது பொருத்தமானது.
ஏன் எனில், இந்த கடன் தருபவர்களின் முன்னிலையில் சோமசுந்தரம் அல்லது வெள்ளையன் அல்லது வேலுப்பிள்ளையின் ஆற்றல்கள் எவ்விதம் வெளிப்படக்கூடியது என்பது வெளிப்படையானது. 1948-1949 வெளிவந்திருக்கும் சங்க அறிக்கையின்படி, நிதி நிலைமை பொறுத்து பின்வரும் கூற்று காணப்படுகின்றது. “ஒரு ஸ்தாபனத்தின் வெற்றி அதன் நிர்வாக திறமையிலும், நிர்வாக திறமை பெரும்பாலும் கிடைக்கக்கூடிய பணநிலைமையையும் பொறுத்துள்ளது”. (பக்கம்:05: 1948-1949 நிர்வாக அறிக்கை). எமது அவதானத்தை கோரக்கூடிய, இப்போக்குடன், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அன்றைய தினத்திலேயே சாதிய வேறுபாடுகளும் முளை எடுத்திருந்தனவா என்பது வேறு கேள்வி. (ஓர் இடதுசாரி அமைப்பு இவ்வகையில் வித்தியாசப்பட்டிருக்கலாம்).
ஆனால், இவ்வகை அரசியலே, மலையகத்தில் பலரையும் கத்தரிக்கவே செய்திருந்தது. சோமசுந்தரம் எப்படி இறுதியில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டாரோ, அதுபோலவே வெள்ளையன் எவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து நீக்கப்பப்பட்டாரோ–அதுபோலவே வேலுப்பிள்ளை அவர்களும் இந்நகர்வுகளின் முக்கியமான பலிக்கடாவாக ஆகாமலும் இல்லை.
இப்படி கத்தரிக்கப்பட்ட ஒரு காலக்கட்டத்திலேயே, அவரது வீடற்றவன் அல்லது நாடற்றவன் போன்ற நாவல்களும் பிறப்பெடுக்கின்றன.
ஆனால், இதுவே, இன்றைய, ஒரு சில விமர்சகர்களுக்கு ஒரு வகையில் உவப்பை தரும் விடயமாகவும் இருக்கின்றது.
இந்த, ‘இன்றைய விமர்சகர்கள்’ என நாம் விவரிக்கும்போது, இவ் விமர்சகர்களின் பல்வேறு கூறுகளை நாம் அடையாளம் காண வேண்டியுள்ளது.
முக்கியமாக மாறிவரும் இன்றைய மலையகத்தில் அதனது முக்கிய கூறுகள் என்னென்ன என்பதும் கேள்வியாகின்றது.
இன்றைய மலையகத்தில், நன்கு வளர்ந்த ஒரு தொழிற்சங்க இயக்கம், எப்படி திட்டமிட்ட ரீதியில் சிதைக்கப்பட்டதோ, அதே அளவில் (ஒப்பீட்டளவில்) பெருந்தோட்ட அமைப்பு முறையும், சேர்ந்து, சிதறடிக்கப்படும் ஒரு புள்ளியை எய்தியுள்ளது. இச்சிதைவுக்கு ஏனைய பல்வேறு காரணிகளும் துணை புரிவதாயும் இருத்தல் கூடும், என்பது சம்பந்தமான விடயம்தான்.
ஆனால், இவை அனைத்தும், எமது, புதிய மத்திய தர வர்க்கத்தின் புதிய எழுச்சிக்கான ஆசிர்வாதங்கள் என கூறுவதும் மிகையாகாது.
எமது புதிய மத்தியதர வர்க்கத்தின், இப்புதிய எழுச்சி, ஒரு புதிய அரசியலை, ஒரு புதிய ஒரு இலக்கிய பார்வையினை அல்லது புதிய ஓர் அர்த்தத்தை அல்லது புதிய ஒரு பொருள்கோடலை அல்லது ஒரு புதிய விமர்சன முறைமையை முன்நகர்த்துவதாக இருக்கின்றது. இதனால்தான், சில அருமையான வரிகள் கூட, இன்று, மிக நசிந்த பொருள்கோடலுக்கு உள்ளாகுவதாய் இருக்கின்றன.
வரலாற்றை எடுத்தால், இவ் உதாரணத்தை நாம் மேலும் தெளிவுற காணலாம். முல்லோயா கோவிந்தனுக்கு எவ்வாறு இன்று, சில வேளையில், புதிய அர்த்தம் கற்பிக்கப்படுகின்றதோ, அதுபோலவே சிவனு லட்சுமணனுக்கும் புதிய பொருள்கோடல் வழங்கப்படுவது சகஜமாகின்றது.
காணி சுவீகரிப்புக்கு எதிராக அல்லது ஒரு பெருந்தோட்ட அமைப்பு முறையை தக்கவைக்கும் ஓர் எண்ணப்பாட்டுடன், தன் உயிரை தியாகம் செய்த சிவனு லட்சுமணண் காணியை கோரியே போராட்டம் நிகழ்த்திய முதல் ஆசாமி என புதிதாய் இன்று பொருள்கோடல் செய்யப்படுகின்றது.
இது, இன்றைய எமது மலையக தேசிய அரசியல் உருவாக்கும் பொருள் கோடல் என்பதில் சந்தேகம் இல்லை. இம்மலையக தேசியம் எனப்படும் அரசியலானது, புதிதாய் வீறு கொண்டு எழும் ஒரு மத்தியதர வர்க்கத்தின் அரசியல் என்பது வெளிப்படை. இதனுடனேயே, ஒரு புலம்பெயர் அரசியலும் நேரடியாய் இங்கு பங்குபற்றி, மறைமுகமாய் அல்லது நேரடியாய் நன்கொடைகள் என்பதின் பெயரிலான கையூட்டல்களை வழங்கி, இதன் அடிப்படையிலேயே இத்தகைய அரசியல் இன்று ஊக்குவிக்கப்படுவதாய் தெரிகின்றது.
அதாவது, மக்களின் உண்மை வரலாறானது இப்போது மறைக்கப்படுகின்றது. அல்லது திரிக்கப்படுகின்றது. போலி வரலாறுகள் அல்லது போலி விமர்சனங்கள் கட்டமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன.
இப்பின்னணியிலேயே, வேலுப்பிள்ளையின் வீடற்றவன்-நாடற்றவன் எழுத்துக்களும் கொண்டாடப்படுகின்றன. இதன் போதே வேலுப்பிள்ளையின் நெடுங்கவிதையும் (ஐn ஊநலடழn வுநய புயசனநn) அவரது ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ (டீழசn வழ டுயடிழரச) போன்ற நவீனங்களும் மறைக்கப்படுகின்றன. இதே போன்று அவரது ‘மலையக தளபதிகள்’ எனும் மிக அற்புதமான நூல் இன்று ‘புதிதாய்’ பொருள்கோடல் செய்யப்படுவதாகின்றது –‘வஞ்சகபுகழ்ச்சி’ என சிலர் அதனை வரையறுப்பதும் உண்டு. அதேவேளை, வீடற்றவன் அல்லது நாடற்றவன் போன்ற நவீனங்கள் தூக்கிப் பிடிக்கப்படுகின்றன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேலுப்பிள்ளை என்ற பெரும் கவிஞனின், மக்களுடனான நெருக்கம், வேறு ஒரு தளத்தில் மலர்ந்ததின் காரணமாய் வீடற்றவன் அல்லது நாடற்றவன் போன்ற நவீனங்கள் உருவாகியிருக்கலாம். இப்படியான ஒரு பெருங்கவிஞன், தனது, மக்களுடனான நெருக்கத்தை இழந்து போனதற்கான காரணத்தை, தொண்டமான் அல்லது இந்திய வர்த்தக நலன்கள் நகர்த்திய அரசியல் படைத்து இருக்கலாம். ஆனால், வேலுப்பிள்ளையின் இந்த பிற்காலத்து எழுத்துக்களை தூக்கிப் பிடிக்கும் அரசியலானது, இன்று செயற்கையாக ஊக்குவிக்கப்படுகின்றது என்பதே, மலையகத்தில் தொடர்ந்து வரும் ஒருவகை அரசியல் இயக்கப்போக்கை பறைசாற்றுவதாக உள்ளது.
இவ்வகை அரசியலாலேயே, வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் இன்று வேறுபிரித்தறியப்படுகின்றன. வேலுப்பிள்ளையின் எழுத்துக்களை, தம் இ~;டப்படி, வகைப்பிரிப்பதும் தேர்வு செய்வதும் ஒருவகையில், ஆழ்ந்த அரசியலை உள்ளடக்கக்கூடியதாகின்றது. அதாவது, அவரவரின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்ப வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் இப்படியாக இன்று வகைப்பிரிக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. முன்னரே கூறியது போல், வேலுபிள்ளையின் நெடுங்கவிதையும், மலையக தளபதிகளும் மறைக்கப்பட்டு, அவ்விடத்தில் வீடற்றவனும், நாடற்றவனும் அரங்கேறச் செய்யப்படுவது இயற்கையாகின்றது. இது அரசியல்.
இதுபோக, ‘தேயிலை தோட்டத்திலே’ என்னும் இந் நெடுங்கவிதையின் சிறப்பம்சங்கள் பலவாயிருந்தாலும் சில முக்கிய விடயங்கள் ஓரிரண்டை மாத்திரம் நாம் தொட செய்யலாம்: ஒன்று, இந்நெடுங்கவிதை, மலையக மக்கள் பொறுத்த முழுமையான ஒரு பார்வையை உருவாக்கி கொள்ள தெண்டிக்கிறது. (அதாவது, தொழிலாளர் பொறுத்து…).
இதனாலேயே, ஜெக் மோகன் போன்றோர், 798,000 தொழிலாளர்களின் குரல் இந்நெடுங்கவிதையில் ஒலிக்கிறது என விஸ்தரிப்பார். அதாவது, அடக்கப்பட்ட மக்களின் குரலாய் இந்நெடுங்கவிதையில் பேசுவதில் வேலுப்பிள்ளை பெருமை கொள்கின்றார் எனலாம். (அவரது தாத்தாவில் இருந்து வேறுபட்டு).
இதன்போது, அவரில் விகசித்த, ஆங்கில இலக்கியத்தின் செழுமையும், ஒரு பெருந்தோட்ட அமைப்பு முறைகள் உருவாக்கி தரும் வாழ்க்கை முறைகளும் கைகோர்ப்பதாய் உளன. இது முதலாவது.
இரண்டாவதாய், எல்லா மாபெரும் கவிஞர்களை போலவே (தாகூர்-பாரதி போன்றோர்) நாளை வரவிருக்கும், ஒரு இளம் வரகவிக்கு வாழ்த்து கூறவும், திரு.வேலுப்பிள்ளை அவர்கள், இந்நெடுங்கவிதையில் தயங்கவில்லை.
மேலும், இதன் நடையானது ஒரு ராணுவ நடையின் செறிவுடன் மூலத்தில் காணக்கிட்டுவது குறிப்பிடத்தக்கதாகின்றது. சொற்செறிவுடன், பொருள் செறிவும் இணைய இவரது கவிதை, மூலத்தில், அணிநடை பயிலவே செய்கின்றது. இது, சக்தீ பாலையாவின் மொழிப்பெயர்ப்பில் வெளிப்படவில்லை என்பதையும் நாம் கூடவே, சொல்லியாக வேண்டும். (அவரில் பல சிறப்பம்சங்கள் காணப்பட்டாலும்).
மறுபுறத்தில், திரு.வேலுப்பிள்ளை அவர்கள், மாக்சிய தத்துவத்தில் ஊறி திளைத்த ஒருவரும் இல்லை. எனினும், இவ் எழுத்துக்களை கூர்ந்து நோக்கும் போது, இவை ஒரு வர்க்க கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒருவராலேயே தீட்டப்பட்டுள்ளதாய் காட்சி தருவது, ஆச்சரியப்பட வைக்கின்றது. இதுவும், ஜெக்மோகன் குறிப்பிடும் ‘மர்மத்தின்’ ஒரு கூறாக இருக்கவும் சந்தர்ப்பம் உண்டு.
வாழ்க்கை ஏற்படுத்தி தரும் அனேக மர்மங்களில் இதுவும் ஒன்றே. அதாவது, தத்துவத்தை அறியாமல், வாழ்வு சிற்சில உண்மைகளை வரலாற்றில் கைப்பற்ற வைக்கின்றது என்பது! (முக்கியமாக சமூக அமைப்புகள் மாறும்போதும், அதற்கேற்ற யதார்த்தங்கள் கட்டி எழுப்பப்படும் போதும்).
ரதி-மன்மதன் கதை போன்றவற்றை இம்மக்கள் ஆழ்ந்து சிலாகிப்பதை அவதானத்துடனும், அனுதாபத்துடனும் பார்க்கும் வேலுப்பிள்ளை, பிறிதொரு கோணத்தில் இவ்விடயத்தை அணுகவும் தவறவில்லை. அதாவது, இம் மக்களின் இச் சிலாகிப்பு, வெறுமனே, மயக்கத்தில் கிறங்குவதேயாகும் என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்கின்றார். எனினும், இக் கண நேர ஆசுவாசமானது, இம்மக்களை ஆற்றுப்படுத்தும் ஒரு சங்கதியாகவும் இருத்தலை அவர் காண்கின்றார். இவ் ஆசுவாசப்படுத்தலானது இம்மக்களுக்கு தேவைப்படுகின்றது– அவர்கள் மீண்டும் தங்களின் புத்துணர்வை மீட்டுக்கொள்ள, என்பதை இந்த ஆங்கிலேய பெருந்தோட்ட தர்பார்களும் அறிந்து, அவர்களும், அவற்றை தமக்கு சாதகமாக பாவித்து கொள்கின்றனரா என இவர் ஐயுறவு கொள்வதும் இந்நெடுங்கவிதையில் தட்டுபடும் முக்கிய விடயங்களில் ஒன்றாகின்றது.
மக்களின் கோயில் விழாக்களை அல்லது திருவிழாக்களை தோட்ட நிர்வாகம் எப்படி, எப்படி உற்சாகப்படுத்தி, வரவேற்று வசதி செய்து தருகின்றது எனும் அதே பார்வையும் இங்கே ஒடுங்குவதாய் உளது–
இப்படித்தான், இம்மக்களின் சோகத்தை, மகிழ்வை, ஆர்ப்பரிப்பை பிழிந்து காட்டும் அதேவேளை, இம் மக்களின் வியர்வையை, அவ் வியர்வையால் பொங்க கூடிய கொழுந்தை, இளம் பச்சை மலைகளை காட்டும் போது, அம் மக்களின் அந்த வியர்வை பறிப்பினையும் சேர்த்து காட்ட வேலுப்பிள்ளை தவறவில்லை என்பது குறிப்பிடதக்கதாகின்றது.
இத்தகைய பிரஞ்ஞை கொண்ட ஒரு எழுத்தாளராகவே திரு.வேலுப்பிள்ளை இந் நெடுங்கவிதையில் மிளிர்வதை காணக்கூடியதாக உள்ளதும் பெருமைக்குரியது. இப்பண்புகள் உண்மையான மக்கள் கவிஞர் ஒருவருக்கே பொருந்தி வருவதாயும் இருக்க கூடும். இதனாலேயே, ஜெக் மோகன் கூறுவது போல குறிப்பிட்ட காலத்தில் சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் திரு.வேலுப்பிள்ளை அவர்கள் இச் சமூகத்தின் ஒரே ஒரு பாணனாக திகழ்ந்துள்ளார் எனலாம்.
இவ்வளவையும் கூறும் நாம், இந் நெடுங்கவிதையில் பலவீனங்கள் இல்லை எனவும் கூற வரவில்லை. யானைகளுக்கும் அடி சறுக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கதுதான். ஆனால், வாதிக்கப்படுவது யானை என்பதும் நினைவூட்டத்தக்கதே. இது எவ்விதம் நிகழ்ந்துள்ளது? மூலத்தை விடவும், மொழிப்பெயர்ப்புகளில்தான் அநேக குறைபாடுகள் உண்டு. இது, தன்னடக்கமோ அன்றி யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக கூறப்படும் ஒரு கூற்றல்ல. மாறாக மூலத்தின் வலிமையை குறிக்கவே இங்கு கூறப்படுகின்றது என்பதை புரிதல் நன்று. இனி, இந்த ஒரு பின்னணியுடன், வேலுப்பிள்ளையின் கவிதைக்குள் செல்லலாம்:
எனது விதி
நாழிக்கு நாழி
வீதியில் நின்று
என்
யாழினை எடுத்து
என் கீதத்தை
இசைப்பேன்…
என் பாடல்கள் யாவும்
ஈழத்தின் மானுடர்க்காய்…
வயல், புல்வெளிகளிலும்
ரப்பர், தேயிலை தோட்டங்களிலும்
பிறந்திட்ட மானுடர்க்காய்
ஆம் நான் காதலிக்கும்
அவர்களுக்காய்…
மலைகளை கேளுங்கள்
பிரட்டின் அதிர்வு…
ஆம்
அது
மீள் ஒலி; எழுப்பி
நெடு… மூச்… செறியும்…
அமைதி காக்கும் -இம்
மலைகளின் மீதும்
சப்தமே அற்ற - இப்
பள்ளத் தாக்குகள் நெடிதும்
மீள் ஒலி எழுப்பி
நெடு… மூச்… செறியும்…
மோனமாய்
நிற்கும்
இவையோ
இங்கு
காலம் காலமாய்
காத்திடும் தம் பதிவை
ஓர் நூற்றாண்டு காலத்து
எலும்புகள் குறித்தும்
ஓர் நூற்றாண்டு காலத்து
வியர்வை குறித்தும்
ஓர் நூற்றாண்டு காலத்து
கண்ணீர் குறித்தும்
தம்முள் பதித்துள்ள
வரலாற்று கணக்கினை
நெடுநீள் மரபுடன்
விழிப்புறக் காக்கும்.
எனது மக்கள்:
எனது மக்கள் காள்….
ஓ …..
அவர் தாம்
புழுதியின் கீழ் புழுதியாய்
தேயிலையின் கீழே….
நினைவோ சின்னமோ
ஏதுமே அற்று
தனித்து அவர்தம்
கல்லறை குழியினுள்,
துணைக்கு ஓர் சிறு
கானகப் பூவதன்
அணைப்போ உறவோ நெருக்கமோ
இன்றி
ஏகாந்தமாய் உறங்குகிறார் நன்று.
தந்தை புதைந்த
மேட்டின் மீதே
மிதித்து உழன்று
நின்று ஓய்ந்த
தனயனும்
தளர்ந்து வீழ்ந்து
இறந்தே போனான்.
வெட்கம்தான் ஏது
மானுடனே – நீ
கல்லறை சமைக்கவும்
மறந்தனை அவர் தமக்கே…
இறைவன் மாத்திரம்
பெரும் கருணை கொண்டு
மென் பசும் புற்றரையால்
மெல்ல
போர்த்தி அவரை
மூடினான்: மறைந்தார்.
இரு இலைகள் ஒரு குருத்து:
மலைகளின் இருண்ட
இடுக்குகள் இங்கே
மதர்த்த காலை
தேயிலை யிடையே
வெண்ணுரை பொங்கி
உம்மையும் அழைக்கும்.
தேவையோ,
நலிந்த மாதரின்
தசையில் எலும்பில்
நரம்பில் எங்கும்
தீயினை மூட்டும்
தீயினை மூட்டும்.
அன்னையர் செவிலியர்
கண்ணியர் யாவரும்
கூடைகள் முதுகினில்
குறுக்காய் தொங்கிட
மென்னுடல் குலுங்க
சாரல்கள் நோக்கி
அணி நடை நடப்பர்.
தளிர்களின் வடிவில்
அமைந்திட்ட கண்களால்
செழித்த நிரல்களை
அமைவுற நோக்கியே
சிறிய மெலிந்த
தேர்ந்த விரல்களால்
‘இரண்டு இலைகள் ஒரு குருத்து’
ஆம்
‘இரண்டு இலைகள் ஒரு குருத்து’
அவள்
உச்சி வெயிலின் கோரமோ
அன்றி
பருவக் காற்றின் சீறலோ
இல்லை
கசியும் நீரின்
பெருகும் கோபமோ
எம் பெண்டீர் காலை
கட்டுவதில்லை.
நலிந்த இந்த
மானுட வண்டிகள்
கூடையின் பாரங்கள்
சுமையாய் அழுத்த
தங்கமாய் பொங்கும்
தேயிலை சுமந்தே
மலைகளின் உச்சிகள்
வரட்டு பள்ளங்கள்
மேடுகள் என்றே
யந்திர கதியில்
ஏறியும் இறங்கியும்
அசைந்து அசைந்து
இறுதியாய் அங்கே
நிலுவையின் கணத்தினை
நோக்கியும் நகரும்.
ஓர்,
அற்ப தவறோ
ஓர்,
அற்ப பிழையோ
இல்லை,
முற்றிய இலையோ
அன்றி,
நிரைகளில் பிந்தலோ
இல்லை
தம் பச்சிளம் குழந்தையை
நிலையத்தில் பிரிந்ததில்
சுணங்கிட்ட இரண்டொரு-அந்த
அற்ப கணங்களோ
அட,
போதுமாம் இவை
ஓர் ஆயிரம் தூ~pப்பை
இவர் மேல் சொரிய
ஒரு நாளின் உழைப்பை
இவரிடம் பறிக்க!
இரவு,
அதுவும் நீண்டு
மீள இவளில்
வதைகளை பொறிக்கும்.
கணவன்,
குழந்தைகள், வீடு
யாவும் அவளின்
உழைப்பினை கோர, கோர
இவளோ,
சமைத்து முடித்து
அலுத்து சோர…. சோர
உண்மை
இரவு,
அதுவும் நீண்டு
மீள இவளில்
வதையாய் தொடரும்.
விடியலின் புன்னகை
பிரட்டின் கூவல்
இவற்றை எண்ணியே
உடுக்களின் சுடரை
கொண்டவள் கண்கள்
துயின்றும் விழித்தும்
கனவினில் சோர
களைத்து நைந்த
அவளின் உடலம்
சரிந்த கிடக்கும்
இரவில், பாயில்.
எத்தனை ஆண்டுகள்
எத்தனை ஆண்டுகள்
உழைப்பு மிகுந்த
அவளின் பகல்கள்
அதனை தொடரும்
அவளின் இரவு
இதுவாய் இதுவாய்
முடிந்தது இங்கு.
வெண்கல தோல் மனிதர்கள்
என்,
வெண்கல தோல் மனிதர்காள்…
எழுவான் புலர்ந்தது முதல்
பள்ளம், குன்றுகள், மலைகள் என
எதிரொலி செய்யவே
குத்துளி, கோடாரி, சுத்தியல், அலவாங்கு
மண்வெட்டி சகிதம்
மலைகளில் ஏறுவர்.
மலைகளின் முதுகினை
முள்ளால் கீறவும்
தேயிலை செடிகளை
வெட்டி சாய்க்கவும்
மருந்து தெளிக்கும் மருந்தடி காரராயும்
காட்டு புற்களை, களைகளை
வெட்டி தள்ளும், புல்வெட்டு ஆளாயும்
கவ்வாத்து ஆளாயும்
தேயிலை மலைகளில்
முள் ஆளாயும்
அவர்
மலைகளில் நுழைவர்.
மலைகளில் நுழைவர்.
கலைந்த தேனீ கூடவர்
இதயம்.
கசியும் தேன் திரட்டவர்
கரங்கள்.
வெட்கையில் சிதறிய வியர்வை துளிகள்
புழுதியில் புரண்டு ஓட,
வாரத்தில் ஏழு நாட்கள்
நாட்களில் எண் மணி நேரம்
இப்படியாய் இரத்தம் சிந்தும்
என் வெங்கல மனிதர்கள்.
யார், எவரின்
மோட்சத்து வாழ்க்கையை
இங்கேயே நிச்சயித்து விட.
யார் எவரின்
பூமியை இங்கோர்
சுவர்க்கபுரியாக ஆக்கிவிட
உழைத்தனர் - உழைத்தனர்
என் வெண்கல தோல் மனிதர்கள் -
இப் பிரட்டின் அதிர்வுக்கே…!
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உசாத்துணை நூல்கள்
1. 'இலங்கை தேயிலைத் தோட்டத்திலே' - மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை (The Ceylon Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு - சக்தீ அ.பால - ஐயா , பாக்கியா பதிப்பகம், 1956, 2007
2. தேயிலைத் தோட்டத்திலே - ஆங்கில மூலம்- ஸி.வி.வேலுப்பிள்ளை / தமிழாக்கம் - சக்தீ அ.பாலையா , செய்தி பதிப்பகம், 1969
3. In Ceylon's Tea Garden - C.V.Velupillai, published by Harison Peiries, 1954
* டிஜிட்டல் ஓவியம் - கந்தையா இரமணிதரன்



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









