அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!
அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!
- கவிஞர் கருணாகரன் -
எழுத்தாளர் பெருமாள் கணேசன், அதிபர் நியமனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விசயம் குறிப்பிடத்தக்களவு பொதுக்கவனத்தைப் பெற்றுமுள்ளது. இருந்தும் அவருக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. அது தொடர்பான வெளிச்சங்களும் தென்படவில்லை. இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கும் அரசியல் ரீதியாக நீதியான தீர்வை நோக்கிக்கி, இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கும் பலரும் முன்வந்திருப்பதாகத் தகவல்.
குறிப்பாக வடக்கு முதலமைச்சர்ன் விக்கினேஸ்வரனின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் முன்வந்திருக்கின்றனர். இது சமரசமா? அல்லது மெய்யாகவே நீதி, நியாயத்துக்கான முயற்சியா என்பதை பொறுத்திருந்தே கவனிக்க வேணும். இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கமும் இதில் அக்கறை செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், மனித உரிமைகள் அமைப்பில் நீதி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த மாதிரியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே மனித உரிமைகள் அமைப்பை நாடியபோது, அது அவற்றையெல்லாம் புசி மெழுகி அமுக்கி விட்டது. வடக்கில் செயற்படும் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பொது லேபிள் அமைப்புகளில் பெரும்பாலானவை சார்வு அரசியல் மயப்பட்டவை. ஆகவே அவற்றை நம்பிப் பயனில்லை.
கணேசன் கடந்த ஆண்டு கிளி/ பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து அதிரடியாக விலக்கப்பட்டவர். அதற்குச் சொல்லப்பட்ட காரணம், அது ஒரு 1AB பாடசாலை. எனவே அதற்கு அதிபர் தரம் 01 ஐச் சேர்ந்தவர்களே அதிபராக இருக்க முடியும் என்று. அது நியாயமானதே. ஆனால், அந்தப் பாடசாலையைப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் அதை 1AB பாடசாலையாகத் தரமுயர்த்துவதற்கு முயற்சித்து அதைச் சாத்தியமாக்கியது கணேசனே.
அதேவேளை கணேசனின் அதிபர் தரம் மற்றும் கல்வித் தகுதியை ஒத்ததாக இருக்கும் பலர் இன்னமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல 1AB பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், கணேசனுக்கும் அவரோடு ஒத்த ஒரு சிலருக்கும் மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்?
பாரதிபுரம், மலையத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்து குடியேறிய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பின்தங்கிய பிரதேசமாகும். ஆகவே இந்தப் பிரதேசத்தில் தரம்வாய்ந்த பாடசாலைகள் வேணும் என்ற அடிப்படையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் புதிதாக மூன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.