முற்றுப் பெறாத உரையாடல்கள்
“வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (மத்தேயு 24:35)
வார்த்தைகளின் வல்லமைகளை பறை சாற்றும் பரிசுத்த வேதாகமத்தின் வாசகங்கள் அவைகள். மனிதனால் மட்டுமே பேச முடிகின்றது. சிந்திக்க முடிகின்றது. வார்த்தைகளை உருவாக்கி இன்னொரு மனிதனுடன் உரையாட முடிகின்றது. இவ் உரையாடல்களின் மூலம் அவன் தனது எண்ணங்களை, உணர்வுகளை தேவைகளை வெளிப்படுத்திக் கொள்கிறான். இன்று மனிதனது தேவைகள் அதிகரித்துள்ளன. பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இன்றைய 21ம் நூற்றண்டில் தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் அசுர வளச்சி பெற்றுள்ள நிலையில் அதற்கான உரையாடல் வெளிகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. எமது புலம்பெயர் வாழ்விலும் நாம் இன்று அதிகம் உரையாட வேண்டிய தேவை எமக்குண்டு. ஒரு வலி மிகுந்த சமூகமாக, 3௦ ஆண்டு கால யுத்தம் ஏற்படுத்திய கொடுந்துயரமான வாழ்வும் அது ஏற்படுத்திய வலிகளும் ரணங்களும் இன்னும் மாற்றம் பெறாத நிலையில், எமது துயரங்கள், தோல்விகள், தவறுகள், குறித்தும் இனி போக வேண்டிய பாதைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தெல்லாம் நாம் அதிகம் பேச வேண்டிய மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளோம். உரையாடல்கள் மூலம் நாம் எத்தகைய தீர்வுகளையோ முடிவுகளையோ எட்ட முடியாது என்பது உண்மையாயினும் அதனை செயற்பாடுகளுக்கான ஒரு முன்னூட்டமாக அதனை நாம் மாற்ற முடியும் என்பது எமது அசையாத நம்பிக்கை.
இவ்வகையில் இன்று நாம் பேசுகின்றோம், உரையாடுகின்றோம், பல் வேறு விதமான உரையாடல் வெளிகளை உருவாக்கி வருகின்றோம். பிரதிகள் மூலமாக, பாடல்கள் மூலமாக, செய்திகள் மூலமாக, கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் மூலமாக, கவிதைகளாக, புனைவுகளாக, வேறும் பல்வேறு வழிகளிலும். அத்தகைய உரையாடல்களில் காத்திரமானவைகளை, அது காற்றில் கலந்து கரைந்து இல்லாமல் போகு முன்பே, பாதுகாப்பாக பதிவுகள் செய்வதே இத்தொடரின் நோக்கமாகும்.
கொலை மறைக்கும் அரசியல் – இது பகை மறப்புக் காலம் அல்ல. •தோழர் சேனனுடனான உரையாடல் குறித்து.
கடந்த வார ஐ.பி.சி. தமிழின் அக்னிபார்வை நிகழ்ச்சியில் தோழர் சேனன் அவர்கள் கலந்து கொண்டார். இங்கு புகலிடத்தில் சமூக, அரசியல், கலாச்சார தளத்தில் இயங்குபவர்களில் சேனனை அறியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. தோழர் சேனன் அவர்கள் ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத்தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக் கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர். Tamil Solidarity அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர். ‘கொலை மறக்கும் அரசியல்’ லண்டன்காரர்’ என்ற நூல்களின் ஆசிரியர். விமர்சகர். ஊடகவியலாளர்.