(* ஓவியம் AI)
தேர்தல் வெற்றிக்காக, உங்கள் அரசியல் நலன்களுக்காகத் தொடர்ந்தும் இனவாதம் பேசாதீர்கள். அவன் சிங்களவன். அவனுக்கு ஆதரவளிக்காதீர்கள் என்று கோசம் எழுப்பாதீர்கள். அது இனவாதம். அதற்குப் பதிலாக இதுவரை கால அரசுகள் இனவாதம் பேசின. நாமும் இனவாதம் பேசினோம். இனியும் இனவாதம் பேசுவதைத் தவிர்ப்போம். ஆனால் இதுவரை இலங்கையில் நடைபெற்ற அனைத்து அழிவுகளுக்கும், போர்களுக்கும் காரணமாக இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இதுவரை கிட்டவில்லை. அதுவரை பிரதேசமொன்றில் வாழும் மக்களின் கைகளில் அதிகாரம் இருப்பது ஆரோக்கியமானது, எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க அது அவசியம் என்று கோரிக்கை விடுங்கள். அது நியாயமானது. ஆரோக்கியமானது. இனவாதமற்றது.
அதே நேரத்தில் எம் அரசியல்வாதிகள் இதுவரை புரிந்த அனைத்துத் தவறுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். உதாரணத்துக்கு எம் பகுதிகளுக்கு அபிவிருத்திக்கென்று வந்த நிதியைத் திருப்பி அனுப்பினோம். ஆனால் அதே சமயம் நாம் எமக்கு, எம் பதவிகள் காரணமாகக் கிடைத்த நன்மைகளை உதாசீனம் செய்யவில்லை. முன் கதவாலும், பின் கதவாலும் ஏற்றுக்கொண்டோம்.
தேர்தல் காலங்களிலேயே மக்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் நாங்கள் ஏனைய சமயங்களில் மக்களின் நிலை பற்றிக் கவனத்தில் பெரிதாக எடுத்ததில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், முன்னாள் போராளிகள், விதவைப் பெண்கள், அநாதரவாக்கப்பட்ட குழந்தைகள் விடயத்தில் நாம் என்ன செய்தோம் இதுவரை என்று கேட்டால் அதற்கு எம்மிடம் பதிலில்லை. அதற்காக வெட்கப்படுகின்றோம். புகலிடத் தமிழ் அமைப்புகளே பல அவற்றுக்கும் ஓரளவு உதவின. அதே சமயம் வேறு சில புகலிடத் தமிழ் அரசியல் அமைப்புகள் எம்மைத் தம் நலன்களுக்காகப் பயன்படுத்துக்கொண்டன. அதனால் கிடைத்த நன்மைகளுக்காக நாமும் அவற்றைப் பயன்படுத்திக்கொண்டோம். இனிமேல் நாம் அவ்வாறு செய்ய மாட்டோம்.
இதுவரை காலமும் எம் மத்தியில் இடம் பெற்ற அப்பாவிகளின் கொலைகள், அரசியற் கொலைகள், வன்முறைகள் அனைத்தையும் நாம் கண்டிக்கின்றோம். அவை போல் இனியும் நடைபெற நாம் விடமாட்டோம். இளைஞர்களை உரிய முறையில் பயன்படுத்தத்தவறி விட்டோம். அவர்களையும் எம் அரசியல் நலன்களுக்காகப் பாவித்து மோதல்களை உருவாக்குகின்றோம். அதனை அடியோடு நீக்குவோம்.
அரசை எதிர்க்க வேண்டுமென்பதற்காகவோ, சிங்கள அரசு என்பதற்காகவோ எதிர்க்க மாட்டோம். அதன் நல்ல ஆரோக்கியமான திட்டங்களை ஆதரிப்போம். அதே சமயம் எதிர்மறையான திட்டங்களைக் கடுமையாக எதிர்ப்போம். தொடர்ந்தும் அரசுடன் ,அல்லது அரசுகளுடன் எம் மக்களின் பிரச்சனைகளுக்கான நியாயமான தீர்வுக்காகப் பேசியோ அல்லது அமைதியான முறையில் மக்களை அணி திரட்டியோ செயற்படுவோம்.
இவ்விதம் நீங்கள் மாறினால், செயற்பட்டால் மக்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து உங்கள் பின்னால் அணி திரண்டு செயற்படுவார்கள். அதே சமயம் தொடர்ந்தும் இனவாதரீதியில் செயற்பட்டால் ஏற்கனவே அவ்வணுகு முறையால் சலித்துப்போயிருக்கும் மக்கள் தொடர்ந்தும் பிரிந்தே இருப்பார்கள். ஏனெனில் இன்றுள்ள அரசு இனவாதத்துக்கெதிராக வடகிழக்கில் மட்டுமல்ல ,தெற்கிலும் கடுமையாகப் பேசி வருகின்றது. அதனால் தான் மக்கள் வடகிழக்கு, தெற்கில் அணி திரண்டிருக்கின்றார்கள். இவ்விதம் அவர்கள் செயற்படுகையில் அவர்கள் முன்பு இனவாதிகளாக இருந்தவர்கள் என்று குற்றஞ்சாட்டுவதில் பயனில்லை. அதனை மக்கள் செவிமடுக்க மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல நாமும் இனவாதிகளாகத்தான் இருந்தோம். இருக்கின்றோம்.
தெற்கில் மாறியதுபோல் நாமும் மாறுவோம். இனவாதத்துக்கெதிராக , இனவாதமற்று மக்களுக்கு விளங்கப்படுவோம். மக்களிடம் கோரிக்கை விடுவோம். தொடர்ந்தும் ஐந்து வருடங்களுக்கொரு தடவை என்றில்லாமல் , எப்போஉதும் செயற்படுவோம்.
இவ்விதம் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். செயற்பட்டால் மக்கள் உங்கள் அணுகுமுறையில் மாற்றத்தை உணர்வார்கள். நிச்சயம் ஆதவரளிப்பார்கள். மாறாகத் தொடர்ந்து இனவாத அடிப்படையில் செயற்பட்டால் தொடர்ந்தும் மக்கள் பிரிந்தே இருப்பார்கள்.