- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள்.காம் நவம்பர் 2003 இதழ் 47
ஊடறு. அருமையானதொரு தலைப்பு. தேவா(யேர்மனி), நிரூபா(யேர்மனி), விஜி(பிரான்ஸ்) றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் கடின உழைப்பில் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. இப் பதிப்பின் வடிவமைப்புக் கூட வழமையான வெளியீடுகளிலிருந்து வித்தியாசமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. றஞ்சிக்கு ஒரு பாராட்டு கொடுக்கத்தான் வேண்டும். பெண்களின் ஆக்கங்களை மட்டும் கொண்டு சக்தி வெளியீடான ..புது உலகம் எமை நோக்கி.. புலத்தில் வெளி வந்த போது ஆண்கள் மத்தியில் இருந்து சற்று அதிருப்தியான கண்டனங்கள் வரத் தவறவில்லை. அது ஏன்..? பெண்களுக்கென்று மட்டுமாக ஒரு தொகுப்புத் தேவைதானா...? என்று சினக்கவும் அவர்கள் பிந்தவில்லை. இது ஒன்றும் பெண்களைப் பொறுத்த வரையில் புதிதில்லை. தம்மைத் தாண்டி பெண்கள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆண்களிடமிருந்து எழும் அச்சத்துடனானன அதிகார மிரட்டல்கள்தான் இவை. .
ஏதோ.... எழுத்தும் இலக்கியமும் ஆண்களுக்கு மட்டுந்தான் சொந்தமானவை என்பது போலத்தான்; எமது சமூகத்தின் மத்தியில் ஒரு மாயை ஏற்படுத்தி வைக்கப் பட்டுள்ளது. ஆனால் சங்க காலத்திலேயே நிறையப் பெண்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழ் மொழியில் வழங்கும் அறத்துறை இலக்கியங்கள் போன்று உலகில் வேறு எங்கும் இல்லையென்று மேல் நாட்டு அறிஞர்களாகிய பெஸ்கி, போப் முதலியோரால் பாராட்டப் பட்ட எமது பழந்தமிழ் இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் பெண்பாற் புலவர்களும் இருந்திருக்கின்றார்கள்.
பொதுவாக இலக்கிய உலகப் பெண்களை நினைத்தால் எம் மனதில் உடனே தோன்றுபவர் அவ்வையார்தான். மிஞ்சிப் போனால் ஆண்டாள், காக்கை பாடினியார், காரைக்கால் அம்மையார்... போன்ற ஒரு சிலரே. உண்மை நிலையோ வேறு. எந்த நாட்டு இலக்கிய வரலாற்றிலும் இல்லாதபடி சங்க காலத்தில், ஒன்று சேர்ந்த நேரத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள்; கவிபாடியுள்ளனர் என்பது நம்ப முடியாத உண்மை. ஆதி மந்தியார், குறமகள் இளவெயினி, வெறிபாடிய காமக் கண்ணியார், கீரன் எயிற்றியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், நப்பசலையார், வெள்ளி வீதியாரபூதப்பாண்டியனின் உள்ளங் கவர்ந்த பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர்.. என்று எமது பெண்பாற் புலவர்களின் பட்டியல் நீளமானது. ஆனாலும் ஆண் கவிக்கு முன் பெண் கவி சளைத்தவளில்லை என்று கூறி அறிவுத் திமிரோடு ஆண்களுக்கு நிகராக நின்று பாடல்களாலேயே சவுக்கடி கொடுத்த அவ்வையாருக்கு இணையாக பலகாலமாகப் படைப்புலகில் பெண்கள் யாரும் இடம் பிடிக்கவில்லைத்தான். அனேகமான எல்லாப் பெண்களுமே குடும்பச் சூழலிலும், பல்வேறு சமுதாயச் சிக்கல்களிலும் அகப்பட்டுக் கொண்டு இலக்கிய உலகத்திலிருந்து எட்டவே இருந்து விட்டார்கள்.
கவிக்குயில் சரோஜினியின் காலத்தில் கூடத் தமிழில் பெண்கள் யாரும் பெரிய அளவில் கவிதை எழுதியதாகச் செய்திகள் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இரா.மீனாட்சி கவிஞராக உருவெடுத்தார். இரா. மீனாட்சி கவிதை எழுத வந்த காலத்தில் மாலதி ஹரீந்திரன், தேவமகள், ரோகிணி ஆகிய கவிஞர்களும் இருந்தனர். அதன் பின் ஆங்காங்கு 1970 பகுதியில் தனது சில கவிதைகளைத் தொகுப்பாக்கிப் பிரசூ¢த்த திருமதி செளந்தரா கைலாசம் போன்ற பெண் எழுத்தாளர்கள் தோன்றினர். ஆயினும் இப் பெண்கள், கவிஞர்கள் எனறு அழைக்கப் பட்டனரேயன்றி இலக்கிய எழுத்தாளர் பட்டியலில் சேர்க்கப் படவில்லை. இவர்களுக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதத் தொடங்கி இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் குறிப்பிடத் தக்க வகையில் பெண் எழுத்தாளர்கள் தலைகாட்ட ஆரம்பித்தனர்.
இந்த ஆரம்பத்தின் சில படிகளைத் தாண்டிய ஒரு வடிவமே இன்று நாம் எடுத்துக் கொண்ட பெண்களின் படைப்புக்களைத் தாங்கிய ஊடறுவும். இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் கட்டுரைப் பகுதிக்குள் அடங்கிய கண்டகாரை நோக்கிய ஒரு பயணம் திரைப்படம் பற்றியதொரு அருமையான விமர்சனம். இடப் பெயர்வின் போது இடம் பெயராது ஆப்கானிஸ்தானிலேயே தங்கி விட்ட தங்கையைத் தற்கொலையிலிருந்த காப்பாற்ற கனடாவில் பத்திரிகையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் நவாஸ் கண்ட காரை நோக்கிப் பயணிக்கும் போது, எதிர் கொள்ளும் இன்னல்களையும், காணும் தலிபான் பெண்கள் படும் துயர்களையும் சித்தரிப்பதாகவே இப்படம் அமைந்துள்ளது. உமா அதை மிகவும் அருமையாக விமர்சித்திருந்தார். இன்னொருவனின் மனைவி போல நவாஸ் நடித்தே பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் தற்காலிகக் கணவன் கூட தனது மரியாதைக்காக இவளை பர்தா அணியச் சொல்வதும், வைத்தியரிடம் காண்பிக்கும் போது திரைமறைவின் பின் பெண் நிற்க ஒரு சிறிய துவாரத்தினூடு வைத்தியர் அவளைப் பரிசோதிப்பதும்... பெண்கள் மீதான தலிபானின் அடக்குமுறைகளை உணர்த்துகின்றன. இன்னும் ஆப்கானிஸ்தான் பெண்கள் படும் பல துயரங்கள் இதில் பதிவாகியுள்ளன.
அடுத்து யசோதா மொழிபெயர்த்த வேசிகளைப் பற்றிய சித்திரம் பெண்களை மிகவும் கீழ்தரமாகச் சித்தரிக்கும் Phonography பற்றிச் சொல்லியுள்ளது. இதிலே யசோதா - மொழிபெயர்ப்பினால் கட்டுரையின் தன்மையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாதவாறு இருப்பதற்காகவும், கட்டுரையின் வீச்சும், தாக்கமும் வெளித் தெரிவதற்காகவும் இத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் எப்படி அழைக்கப் படுகிறார்களோ.. அல்லது எப்படி விளிக்கப் படுகிறார்களோ... அச் சொற்களையே பாவித்து கட்டுரையையும் எழுதியிருந்தார். இது புத்தகம் வெளி வந்த காலத்தில் சிறிதான சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாது எதிர் விமர்சனத்தையும் தோற்றுவித்தது. ஆனாலும் கட்டுரையை வாசிக்கும் போதுதான் யசோதாவின் வார்த்தைப் பிரயோகத்தின் அவசியம் புரிகிறது.
தலித்தியமும் தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பின் கீழ் அரங்கமல்லிகா சங்க இலக்கியத்திலிருந்து இன்று வரையுமான தலித்திய மக்களது வாழ்வியலோடும் தாழ்வுகளோடும் பயணித்திருந்தார். நிரூபா எண்பதுகளில் பூப்புனிதவிழா கண்ட பெண்ணின் மனதையும், அவள் கண்ட அசெளகரியங்களையும், இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு புலம் பெயர் பெண் அதை வேறு கோணத்தில் வரவேற்றுக் கொள்வதையும் தனக்கே உரிய யதார்த்த பாணியில் ஒப்பீடு செய்திருந்தார். இன்றும் சாமத்தியச் சடங்கின் மூலம் பெண் பிள்ளைகளைக் காட்சிப் பொருளாக்க முனையும் பெற்றோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கட்டுரை இது.
ஏழு ஆண்டுகள் விவாகரத்துப் பெற்று வாழ்ந்த இரு குழந்தைகளுக்குத் தாயான சபீயாவை அபூபக்கர் என்பவர் பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதால் அவள் கருவுற்றாள். இதற்காக நையீரிய இஸ்லாமிய நீதி மன்றம் அவளுக்கு மரண தண்டனையும், வல்லுறவுக்கு அவளை ஆளாக்கிய அபூபக்கருக்கு தண்டனைகளெதுவுமின்றி விடுதலையும் கொடுத்தது. இந்த விந்தையான ஒரு பட்சமான தண்டனைத் தீர்மானம் பற்றியும், மனித உரிமைகள் அமைப்புகள் இதனுள் தலையிட்டதாலும் சபீயாவின் மேல் குற்றம் நிரூபிக்கப் பட முடியாமல் போனதாலும் அவள் விடுதலை அடைந்ததையும் சபியா ஒரு முடிவல்ல, அவள் ஒரு தொடர் என்பதன் மூலம் ஜெயந்திமாலா தந்திருந்தார்.
மேலும் பால் நிலை கருதி பாராம்பா¢யமற்ற தொழில்களில் பெண்கள் ஈடுபடுத்தப் படுவதை பாரதியும், அரசியல் விமர்சகரும், புகழ் பெற்ற எழுத்தாளரும், போராட்டக்காரருமான அருந்ததி ராயின் கருத்துக்களோடு யுத்தம் எதற்காக என்பது பற்றியதொரு கண்ணோட்டத்தைத் தேவாவும், ஒரு தேவதாசியின் கதையை மட்டுமல்லாமல் முத்துப்பழனி, நாகரத்தினம்மாள் போன்ற கணிகையரின் மறுபக்கங்களை ஞானபாரதியும்,மொழியும் ஆண்வழிச் சமூகமும் எப்படிப் பெண்களை அடக்கப் பயன் பட்டிருக்கிறது என்பது பற்றி, பெண்கள் சம்பந்தமான பன்நோக்குக் கருத்துக்களை எமக்குத் தந்து வந்த செல்வி திருச்சந்திரனும், முன்னைய சோவியத்திலிருந்து இன்றைய அமெரிக்கா வரையான ஒரு பெண்ணிலைப் பயணத்தினூடு கிழக்கு ஐரோப்பியப் பெண்களின் பின் தங்கிய நிலையையும், அவர்கள் மீதான ஆணாதிக்க அழுத்தங்களையும் ஆதார பூர்வமான கணக்கீடுகளுடன் றஞ்சியும், தொழில் நுட்பமும் பெண்விடுதலையும் என்ற தலைப்பின் கீழ் மடலாடற்குழுக்களின் பயன் பற்றியும், வீட்டுக்குள் குடி வந்த கணினியால் வெளியுலகத்துக்குப் பெண்கள் செல்ல முடிந்தது பற்றியும், அதன் அவசியம் பற்றியும் சுபாவும் கூறியிருந்தார்கள்.
இப் பதிப்பில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் அரசியல், சமூகம், பொருளாதாரம்.. என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப் படுத்தியே பேசியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் பல் வேறு தளத்திலான பல தகவல்களை எம்மோடு பரிமாறியிருந்தன.
கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப் பட்டிருந்தன. சில கவிதைகள் போர் தந்த பாதி;ப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பி¡¢வின் துயர்களையும் பேசியிருந்தன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருந்தன. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருந்தன.
கவிதைகளை யேர்மனியிலிருந்து - உமா, கோசல்யா சொர்ணலிங்கம், சாந்தி ரமேஸ் வவுனியன், மல்லிகா ஆகியோரும்,
பிரான்ஸிலிருந்து - ஜெயந்தி சாம்சனும் , சுவிஸிலிருந்து - நளாயினி, தாமரைச்செல்வனும், லண்டனிலிருந்து - சந்திரா ரவீந்திரனும், அவுஸ்திரேலியாவிலிருந்து - பாமதி, ஆழியாள் ஆகியோரும், இந்தியாவிலிருந்து - திலகபாமா, மாலதி ஆகியோரும், இலங்கையிலிருந்து - ஜெயந்தி தளையசிங்கம், அருட்கவிதா, அனார், கி.கலைமகள், விஜயலட்சுமி சேகர், வாசுகி குணரத்தினம், மஸாஹிறா பாயிஸ், சிறிவதி, ஆகியோரும் தந்திருந்தார்கள்.
சிறுகதைகள் என்ற உடனேயே சந்திரா ரவீந்திரனின் 'பால்யமும்', 'கருக்கு' பாமாவின் 'ஒத்த'யும் நினைவில் வந்து மோதுகின்றன. ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் ஒரு முற்போக்குவாதி காதலிக்கிறான்- ஒரு கோப அலையை மனதில் தோற்றுவிக்கிறது. பாலரஞ்சனி ஜெயபாலனின் ஸ்டிரைக் சோகத்தைத் தருகிறது.
சந்திரா ரவீந்திரனின் 'பால்யம்' சிறுகதை சின்ன வயசுப் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துர்ப்பிரயோகம் பற்றிப் பேசியுள்ளது. கதையில் வந்த பத்மாவும், விசாலியும் மிகவும்; அழகாக நகர்த்தப் படுகிறார்கள். சொல்லப் படாமலே போய் விட்ட ஒரு அசிங்கத்தை மிக அழகாக இலக்கியம் கலந்து சொல்லியிருக்கிறார் சந்திரா ரவீந்திரன். பத்மாவதி விறகு பொறுக்கச் செல்லும் பனந்தோப்பிற்குள் ஒளிந்து கிடக்கும் பொத்தல் விழுந்த ஓலைக் கொட்டிலில் வேலனின் சீவற் கத்திகளும், கள்ளுமுட்டிகளும் மட்டும்தான் இருக்குமென்பது ஊரறிந்த உண்மை. ஆனால் அதே கொட்டிலில் பத்மாவதி என்ற பன்னிரண்டு வயதுச் சிறுமியின் வாழ்க்கை நாளும் பொழுதும் சீவப் பட்டுக் கொண்டே இருப்பது யாருக்குத் தெரியும். தலை விரித்தாடும் இந்தப் பனைகளுக்குத் தெரியுமா? அலையெறிந்து மோதும் அந்தச் சமுத்திரத்துக்குத் தெரியுமா? இந்தக் காற்றுக்குத் தெரியுமா? நட்சத்திரங்களுக்குத் தெரியுமா? ஓடிக் கொண்டே திரியும் இந்த முகில்களுக்குத் தெரியுமா? யாருக்குத் தெரியும்? யாருக்குப் புரியும்? பத்மாவதி சமைந்து போனால் மட்டும் இந்த ஊருக்குத் தெரியும். சமைய முன்பே அவள் வாழ்வு கரைந்து கொண்டிருப்பது யாருக்குத் தெரியும்?
எனக்குள் கண்கள் முட்டி வழிந்தன..........
கதைக்குள் இருந்த சந்திரா ரவீந்திரனின் கவித்துவமான இக் கதைச் சொற்களை வாசிக்கும் போது மனசை என்னவோ செய்கிறது. எத்தனையோ பத்மாவதிகள், எழுதப் படாமலே போன அவர்களது பால்யங்கள் மனசை முட்டுகின்றன.
'பாட்டி என்னை விடு பாட்டி எனக்குக் கணக்கும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்' விசாலியின் குரல் கதை படித்துக் கன நாளாகிய பின்னும் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
அடுத்து வாழ்க்கையும் எழுத்தும் வேறல்ல என்று வாழ்ந்து கொண்டிருக்கும் 'கருக்கு' பாமாவின் கதை சொல்லல் மிகவும் வித்தியாசமானது. புதிய வழக்கத்தில் அதிகமில்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குச் சொந்தமான பேச்சுத் தமிழ். யதார்த்தத்தினூடான கதை நகர்த்தல். ஒத்த மார்பை இழந்த இல்லாமல்லியின் வாழ்வையும், அவளை பாலியல் துர்ப்பிரயோகம் செய்ய முனைந்த காட்டுக்காரனை அவள் ஒற்றைக் கண்ணன் ஆக்கியதையும், லூர்து பாட்டி ஆறுதல் சொன்னதையும் கோர்வையாக்கி 'கருக்கு' பாமா நகர்த்திய விதம் மிகவும் அருமை.
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் ஒரு முற்போக்குவாதி காதலிக்கிறான் நாங்கள் தமிழர்கள், இது எங்கள் கலாச்சாரம் என்று பேசும் முற்போக்குவாதிகளின் பிற்புலத்தைப் பற்றிச் சொல்லியிருந்தது. கண்ணியம் பற்றிப் பேசும் குமார் மனைவிக்குத் தெரியாமல் 35 வயது நிரம்பிய பழைய காதலியை படுக்கைக்கு அழைப்பது.......... எமது தமிழ்சமூகத்துள்ளே நடமாடும் கலாச்சாரப் போலிகளைப் படம் பிடித்துக் காட்டி மனசுள் கோப அலையை உண்டு பண்ணியது.
வெள்ளைக்காரனோடு வெளியில் போனால் கண்ணியம் கெட்டு விடுமாம். ஆனால் யாருக்கும் தெரியாமல் அவர்களோடே படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேணுமாம். இது எமது தமிழ் ஆண்கள் சிலரின் கண்ணியம். வழமை போலவே ராஜேஸ் பாலாவின் கதை நாவிலொன்றும் செயலிலொன்றுமாய் வாழ்பவர்களின் செயலை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருந்தது.
பாலரஞ்சனி ஜெயபாலன் ஸ்டிரைக்கினால் பரீட்சைக் கொப்பி வேண்ட முடியாமலே போய் விட்ட ராசுவின் சின்ன மனசின் ஏக்கம் நிறைந்த சோகத்தினூடு தோட்டத் தொழிலாளர்களின் குடும்பப் பின்னணியையும், அந்த சமூகத்துள் நிறைந்துள்ள அன்றாடப் பணப் பிரச்சனைகளையும் மனசைத் தொடும் படியாக எடுத்துக் காட்டியிருந்தார்.
அடுத்து மிகவும் நன்றாக அமைந்திருந்தவை இதழியப் பதிவுகள். நூலுருவில் வந்த பெண்களின் கவிதைத் தொகுப்புகளில் இருந்து ஆழியாளின் உரத்துப்பேசு - சல்மாவின் கவிதைத் தொகுப்பு - பாலரஞ்சனி சர்மாவின் மனசின் பிடிக்குள் - பதினெட்டுப் பெண்களின் கவிதைகளை உள்ளடக்கிய வெளிப் படுதல் - கோசல்யா சொர்ணலிங்கத்தின் கோசல்யாவின் கவிதைகள் - போன்றவைகளை ஆய்ந்து மிகவும் சுவையான முறையில் எம்மோடு பகிர்ந்திருந்தார் சுவிஸ் றஞ்சி.
றஞ்சியைப் போலவே பிரான்ஸிலிருந்து விஜி எமது குடும்ப அமைப்பு முறையையும், அதன் புனிதத்துவத்தையும், அதனூடாக தக்க வைக்கப் பட்டிருக்கும் ஆண் அதிகார மையத்தினையும் கேள்விக்குட்படுத்தும் சிவகாமியின் குறுக்குவெட்டு நாவலின் ஒரு வெட்டு முகத்தை மிக அருமையாகத் தந்திருந்தார். தயாநிதி ஆப்கான் பெண்ணியப் போராளியும் பெண்கவிஞையுமாகிய அஸிமியின் முதல் வெளியீடான அந்த எ¡¢ந்த இதயத்தை அறிமுகம் செய்திருந்தார். றஞ்சி, விஜி போலவே தயாநிதியின் இதழியப் பதிவும் இவ் இதழ்களைத் தேடிச் சென்று வாசிக்கும் வேட்கையை எமக்குள் ஏற்படுத்தின.
அடுத்து ஊடறுவுக்கு அழகு சேர்த்தவை ஓவியங்கள். ஓவிய உலகில் எமது தமிழ்ப்பெண்களின் ஈடுபாடு எந்தளவுக்கு இருக்கின்றது என்பது என்வரையில் கேள்விக் குறியாகவே உள்ளது. பெரும்பாலும் எம் மத்தியில் ஆண் ஓவியர்களைத்தான் நாம் அதிகம் காண்கிறோம். பெண் ஓவியர்கள் என்று பார்க்கும் போது எண்ணிச் சொல்லக் கூடிய வகையில் பிங்கலை, அருந்ததி ரட்ணராஜ், புங்கா விருது பெற்ற வாசுகி, போன்றோரே இருக்கிறார்கள். இன்னும் இலைமறைகாயாக எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ தெரியாது. அவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும். றஞ்சினியின் ஓவியத்தை இவ்விதழில்தான் நான் முதல் முதலாகப் பார்த்தேன். சுவிஸ் றஞ்சி கூறியது போல பெண்களிடையேயான எழுத்தாற்றல் வலுப்பெற்றது போல உணர்வுகளின் கோலங்களான ஓவியங்களும் வலுப்பெற வேண்டும். ஓவியத்திற்கான தளமாக மட்டுமல்லாமல் பல பெண்களின் ஒன்றிணைவுக்கும் பாலமாக ஊடறு பதிந்ததில் சந்தோசம்.இன்னும் இப்படியான பதிவுகளும், பெண்களின் ஒத்துழைப்புகளும் தொடர வேண்டும்
சந்திரவதனா செல்வகுமாரன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
6.10.2003