- எழுத்தாளர் மொன்ரியால் மைக்கல் (இயற்பெயர் ஜெயரூபன்  மைக் பிலிப் - Jeyaruban Mike Philip) ஜீவன் கந்தையா, மொன்ரியால் மைக்கல், சதுக்கபூதம், ஜெயரூபன் என்னும் பெயர்களிலும் பதிவுகள் இணைய இதழில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலகட்டத்தில் பங்களித்தவர்களில் இவரும் ஒருவர். ஆகஸ்ட் 2002 தொடக்கம் பெப்ருவரி 2003 வரை பதிவுகள் இணைய இதழில் வெளியான இவரது ஆறு கட்டுரைகளை ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அன்று திஸ்கி , அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகள் இதழில் வெளியான பல படைப்புகளுள்ளன. அவையும் காலப்போக்கில் ஒருங்குறிக்கு மாற்றப்படும். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் நாவலும், ஜெயரூபன் என்னும் பெயரில் எழுதிய 'ஜடாயு' என்னும் சிறுகதையும் பதிவுகள் இதழில் வெளியாகியுள்ளன. - பதிவுகள் -


1. வீரன் - ஜீவன் கந்தையா

பணிதல் என்பது எந்தக் கிளையிலிருந்து துளிர்த்துத் தொடர்கிறது என்று தெரியவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து பணிந்துபோகும் பண்பு, குலவழியாகத் தொடர்ந்து நீளும் சாபமாக வரித்துப் போனதற்கு பிறப்பின் தாழ்ச்சி காரணமேயாகி ரோச நரம்பை அறுத்து எறிந்துவிட்டதா?. பண்புநிலைக்கும், பணிதல் நிலைக்கும் இடையேயான முதுபிரச்சாரத்துள் எங்கோ ஒளிந்திருக்கிறது அடக்குமுறையின் நுண்ணிய சவுக்கு. அது காற்றில் சுழன்று சுழன்று கூனிய முதுகில் ஏற்படுத்திய தொன்மக்காயத்தின் வடுக்கள் இன்று சவுக்கில்லாமலே அதிர்வுகளை உண்டுபண்ணும் மரபுத்துணிக்கையாய் என்னுளத்துளும் மறைந்தியங்குகிறது.

மாநகர வீதிகளில் சிக்னல் லைட் பச்சைக்கு மாறியபின் வீதியைக் கடக்கும் சட்டபூர்வமான இயக்கங்களில் சராலென ஊடறுத்துப் பாயும் சைரன் ஒலித்த பொலிஸ் வாகனங்களின் அருகாமை என் இதயத்தை வேகங்கூட்டுகிறது. நடுமுதுகின் வேர்வைத்துவாரங்களில் ஈரம் பிசுபிசுக்கிறது.

ஓவென்று விரிந்த அரசாங்கக்  கட்டடங்களுக்குள் காரணத்துடன் செல்லவேண்டிய பொழுதுகளில் வாசல்கதவைத் திறந்த மறுகணம் பின்னுக்கு இழுக்கிறது ஏதோவொரு வலிய கரம். மிக இயல்பாக நகர்ந்து திரியும் வெள்ளைக்கார  மனிதர்களுக்குள் என் தடுமாற்றமிக்க மனதுடன் காரியமாற்ற முனையும்போது பயம் தன் நீண்ட தூரிகைகொண்டு முகத்தில் கறுத்த மேகங்களை வரைந்துவிடுகிறது.

“சாக்கடையச் சுத்தம் செய்யடா மனிதா” என ரெஸ்ரோரண்ட முதலாளி கட்டளையிட, நான் அது எனது வேலை இல்லை என மறுத்திருக்கலாம். சோற்றுப்பருக்கைகள் போய் அடைத்து  நாறிய சக்கடையை வெம்பி வெதும்பிய மனத்துடன் வேர்க்க விறுவிறுக்க சுத்தம் செய்தேன். இன்றிலிருந்து இனிமேல் இந்த ரெஸ்ரோரண்டிற்கே வேலைக்கு வருவதில்லை என சங்கற்பம் பூண்டு கொண்டு வீடு வந்தேன்.

நாளைக்கு வேலை இல்லை என்பது இந்த வாரத்திலிருந்து சம்பளம் இல்லை என்னும் பேரிடி. இதை எப்படி மனைவிக்குச் சொல்வது? அவளது முகத்தைப் பார்க்கவே துணிவற்று வரவேற்பறையில் ஷோபாவின் மீது உடம்பைக் கிடத்தினேன். மனம் புழுங்கி அவிந்து, யோசனைகளும் அறுந்து, உறக்கம் கவ்வியது...

***

இரத்தம் செத்துப்போகவேண்டிய சாபம் ஒன்று தலைமுறை நு¡ல்வழியாக அவனது நடுஉச்சியில் இறங்கி விதியாக உறைந்திருக்க, வேலைக்கு சென்று வீடுதிரும்பிய உழைவு தேகத்தில் பரவி, செற்றியில் கால்நீட்டி படுத்திருந்த அவனை ஒரு கதவுத்தட்டல் உசுப்பியது.

கதவு தட்டப்பட்டது.

அவகாசம் எடுத்து கதவின் மீது மோதிய மெல்லிய விரல்களின் ஸ்பரிசம் அவனது செவிகளில் இறங்கியது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்..? வெளியில் பூமியை நோக்கி அர்ச்சுன பாணமாய் சரமிறங்கிக் கொண்டிருக்கும் வெண்பனியை ஊடுருவி காற்றும், கடவுளும், பிசாசுகளும் மட்டும் திரியக்கூடிய குளிர் உறைந்த இரவில் அவனைத்தேடி வர யாருக்கும் அவன் அவ்வளவு முக்கியமானவன் அல்லவே..? குளிர் பரவாத வீட்டுக்குள் கூட அவனைப்பற்றிய பிரக்ஞை இன்றி, கம்பளி மூடி உறங்கிவிட்டாள் மனைவி. மீண்டும் விழுகிறது மெல்லிய தட்டல், மாளாத இரகசியமொன்றை சொல்லிவிடும் யத்தனத்தில் மனதை உசார்ப்படுத்தும் செயல்போல மெல்ல மெல்ல கேட்கிறது பலகையில் விரல்மோதும் தாளம். பின்னர் நீண்ட இடைவெளி விட்டு உணர்வைப் பிய்த்துக் குதறிக்கொண்டு அவனது செவிகளில் அறைந்தது "அண்ணாச்சீ..!" என்ற குரல். திடுக்கிட்டு நிமிர்ந்தான். பலவருடங்களை உதறி எறிந்து கிளர்ந்தெழுந்தது அக்குரலின் ஞாபகம்.

"அண்ணாச்சீ..!"

"நானாக்கும் வீரன் வந்திருக்கிறன்.. நாயைப்பிடியுங்கோ..!!"

மம்மல் கவிந்து, இரவின் வருகையை ஆட்சேபித்து, கைவிளக்கு ஏற்றிய பிறகுதான் இந்தக் குரலும், குரலுக்குரிய வீரனும் படலையில் தோன்றுவார்கள். குரைக்கவும், கடிக்கவும் தெரியாத நாயைக் கலைத்து காலிடுக்கில் அமத்தி வைக்குமளவுக்கும் வீரன் வளவுக்குள் நுழையாது படலையடியில் பம்மிக் கொண்டு நிற்பது அவனது இளவயதுக் குறும்புக்கு சுவாரசியம் கூட்டும். நாயைப் பார்த்தபடி வளவுக்குள் மெல்லடி வைக்கும் வீரனை நோக்கி "ச்சூச்சூ" என்று நாயை எழுப்பி மீண்டும் வாசலைப் பார்த்து வீரனை ஓடவைத்துச் சிரிப்புக்கொள்வான்.

வீரனது வருகை எப்போதும் ஞாயிற்றுக்கிழமை இரவாக இருக்கும். மறுநாள் பள்ளிக்கு போடுவதற்கான நீலக்காற்சட்டையும், வெள்ளைச்சேட்டும் வெளுத்து அயண்பண்ணி, வீரனது கமக்கட்டுக்குள் அணைத்திருந்த சிறுதுணிப் பொட்டலத்துக்குள் இருக்கும்.

"அண்ணாச்சி சுறுக்கா அக்காச்சியைக் கூப்பிடுங்கோ.. பொழுதோட வீட்டை சாயணுமாக்கும்."

ஜம்பது வயதைத் தாண்டிய வீரனுக்கு அவன் அண்ணாச்சி, அவனது அம்மா அக்காச்சி. பின்வளவுக்குள் மாட்டுக் கொட்டிலுக்குள்ளோ, வேறெங்காவதோ கைவேலையாக இருக்கும் அம்மாவை அழைத்து வர, "அக்காச்சி நான் வரட்டுமாக்கும் இண்டைய வெளுப்போடை நாலாச்சு" என்ற குழைவில்  காசுக்குரிய குறிப்பு உணர்த்தப்படும்.

"எப்பவும் விளக்கு வைச்சாப்பிறகுதான் வீரண்ணைக்கு வழி தெரியுது. இப்ப எப்பிடியெண்ணை காசு தாறது?"

"நான் என்னக்காச்சி செய்யிறது. இஞ்ச துணியெடுக்கிறது தெரிஞ்சா, நாளைக்கு உடமைகாறர் எனக்கு உடுப்புப் போடுவினமே..?"

"நாளைக்கு துறைக்குப் போகேக்கை மேனை அனுப்பு வீரண்ணை காசைக் குடுக்கிறன்."

"அக்காச்சி தந்த பனங்கட்டியும் முடிஞ்சுதாக்கும். ரெண்டுநாளா வெறுந்தேத்தண்ணிதான் குடிக்கிறம்"

உறியில் வைத்து மூடியிருந்த பனங்கட்டிப் பானைக்குள்ளிருந்த, உதிர்ந்து உடைந்த அடைப்பனங்கட்டிகளை வீரன் நீட்டிய சீலைத்துண்டுக்குள் கொட்டியபடி அம்மா சொல்வாள்

"மேனிட்ட சொல்லி விடுறதுக்கென்ன வீரண்ணை. ரெண்டு எட்டு வந்து வேண்டிக் கொண்டுபோக அவருக்கு உடம்பு உழையுதாமோ..!"

"அவனெங்கை அக்காச்சி..! வாலாக்கொடியும் கையுமாய் வெயில் குளிக்கிறான். உங்கட அண்ணாச்சியைப்போல படிப்போ... பள்ளியோ? துறைக்கு சாப்பாடு கொண்டு வரக்கூட வள்ளிதான் வருகுதாக்கும்."

"பாவம் அந்தக்குமரை என்னத்துக்கு நீ உலைக்கிறாய்?"

"என்ன செய்ய ஏதோ அம்மாளாச்சி விட்டவழி.." என்றபடி பெருமூச்சும், முணுமுணுப்புமாக இருளுக்குள் கரைந்து போகும் வீரனது உருவம்.

காலப்பட்டறையில் பழுக்கக் காய்ச்சி, நையத்தட்டி, எந்தப்பக்கமும் வளையக்கூடிய வஸ்துவாகி விட்ட நாற்பது வயதில், மூளை கிளறித்தந்த குரலின் அடையாளத்தை உணர்ந்ததும், பொங்கி வழிந்தது நேசமெனும் நீர்வீழ்ச்சி. பல்லாயிரம் மைல்கள் கடந்து தன் பக்தனைக் காண கிராமியதேவதை சிறகு விரித்து வந்திருப்பதைப் பார்க்க குரல் வந்த திக்கை நோக்கிப் பாய்ந்து சென்று கதவைத்  திறந்தான் அவன். வாசலில் நின்ற வீரனைப் பார்த்து நெஞ்சம் உதறியது. பரட்டைத்தலை விரிந்து தோள்களில் தொங்கியது. கறுத்த தேகமெங்கும் சந்தணமும் குங்குமமும்  பரத்திப்பூசி, வாசல்நிலைக்கு கிருதி கொண்டு நின்றது உருவம். வாயில் இறுகக் கடித்திருந்த தேசிக்காய் பாதிபிரிந்து தாடிப்புதரினு¡டாக எலுமிச்சைச்சாறு நெஞ்சுக்கு இறங்கியது. குற்றுயிரான கறுப்புச்சேவலை நெஞ்சுக்கு நேராகத் து¡க்கிப் பிடித்து சன்னதங் கொண்டு ஆடியபடி உள்நுழைந்தான் வீரன். வெண்குருகுமணல் சிதறியடிக்க முத்துமாரி பீடத்திலிருந்து சாம்பிராணி மணம் காற்றோடு கிளம்ப, வேசங்கொண்ட கால்கள் தொப்புத் தொப்பென பூமியை உதைத்து அடங்கிப்போயிருந்த நாட்களுக்கெல்லாம் பதில் காணும் துடிப்புடன் ஆடினான் வீரன். சிறகுகள் இரண்டும் பிய்ந்து போகுமளவுக்கு இழுபட்ட சேவல் வீரனின் ஆட்டத்திற்கிசைய தலையை அசைத்து வானத்தையும், பூமியையும் வந்தனம் செய்வது போல உதறிக் கொண்டிருந்தது.

காதைத் துளைத்து எழும்பியது உடுக்கின் நாதம்.  மரங்கள், செடிகள் மனிதர்கள் எல்லாவற்றிற்குள்ளும் நரம்போடி நிமிரவைத்து, விண்ணென விறைத்து அதிர்ந்து ஆடவைக்கும் உடுக்கின் ரீங்காரம் அறையெங்கும் பரவ அவனது பாதத்திலிருந்து சூடாக நுழைந்து தசைகளை உசுப்பி ஆடவைத்தது ஏதொவொரு சக்தி. ஆடிக்கோடையின் வரட்சி வெருட்டி கொப்புளங்கொண்ட தசைகளைக்கூட குளிர்ச்சி மடையின் படையல் சோறாய் உதிர்ந்துபோக வீரனின் முத்துமாரி காற்றினு¡டு வேப்பமிலைகளை தடவி அரிப்பாற்ற அனுப்பியது போல கடலும், மலையும், குளிரும் தாண்டி வீரனது வருகை உயிர்நாடியை உசுப்பி எடுத்தது. நீர் கட்டியிருந்த கொப்புளங்கள் பொருக்காடி வீழ்ந்துபோக வேப்பிலையின் சீரான தடவல் தேகமெங்கும் புத்துணர்வூட்டியது.

அவனும் ஆடினான் சன்னதங்கூடி. வரவேற்பறையின் பலகைத் தரை இருவரதும் ஆட்டத்திற்கிணங்க தொம் தொம்மென முழக்கு வைத்தது. இற்றைநாள் அலைத்த பணிவென்னும் சாபத்தைச் சூலத்தால் குத்தி காவு கொள்ளும் ராட்சதத் தாண்டவ உச்ச லயத்தில் வீரனது சரீரத்தை எட்டி மிதித்து ஏறி நின்றான்.

***

“தாயே முத்துமாரீ..!”

உரு ஏறியது. நெற்றிக்குள் செருகி கருவிழிகள் மறைய மீண்டும் எழுந்து ஆடினான் வீரன். தாயின் யோனியிலிருந்து சலசலவென உற்பவித்து வரும் நூறாயிரம் சூரர்கள் போல வீரனது கம்பீரம் வளர்ந்துகொண்டே போயிற்று. எண்ணெய்ப் பந்தத்தின் ஒளியலை காற்றில் நடுங்க சூழ நின்ற பக்தர்களின் பயம் பாய்ந்த உடம்புகள் தலை வணங்கி வீரனின் அருள்வாக்குக்காய் கரம் கூப்பி யாசித்தன.

“தாயே அம்மாளாச்சி எனக்கு ஒரு வழி சொல்லம்மா”

ஆறுமுக உடையாரின் மனைவி நாகம்மையின் தளுதளுத்த குரல் கசிந்தது.

“என்னடி நாகம்மா?” வீரனின் நாக்கிலிருந்து அதிகாரக் குரலில் அதட்டினாள் முத்துமாரி.

இடுப்பில் வரிந்திறுக்கிய சால்வையைக் கழட்டி பனித்த கண்களைத் துடைத்து, அருள்வாக்கை எதிர்பார்த்து இறைஞ்சி நின்றார் ஆறுமுக உடையார்.

ஏணி சரிந்து தலைகீழாகியது. வீரனின் நாவிலிருந்து தங்களது பெயர்கள் உச்சரிக்கப்பட மாட்டாதாவென்ற ஏக்கம் சூழ, எதிர்பார்த்து நிற்கும் பக்தர்களை அதிகாரம் பண்ண வந்த முத்துமாரி சன்னதங் கொண்டாள் வீரனின் கால்களினூடாய்.

எல்லாம் ஒரு அரைமணித்தியாலம்.
மீண்டும் திரும்பும் ஏணியின் படிநிலை.

***
வரவேற்பறையில் இருந்த ஷோபாவில் உருண்டு படுக்க வசதிப்படாமலே இரவைக் கழித்த காரணத்தால் கழுத்துப் பிடித்துப் போய்விட்டது. மனைவி தட்டி எழுப்பியபோது, தலை திருப்ப முடியாதவாறு கழுத்து நோவு கண்டது.

“என்னப்பா,.. வேலைக்குப் போகெல்லையே 7 மணியாச்சு”

இல்லை என்று தலையாட்ட முடியாதவாறு என் கழுத்து இறுகிப்போய் இருந்ததால் நான் வேலைக்குப் போகப்போகிறேன் என நினைத்தபடி தேத்தண்ணி வைக்க மனைவி அடுக்களைக்குள் சென்றாள்.

நான் மெல்ல மெல்ல எழும்பி, முடிவெடுக்க முடியாதவாறு பாத்ரூமுக்குள் சென்றேன்.

***
ஒரு குறிப்பு: வீரண்ணர் காலமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. வீரண்ணரின்  ஒரே நம்பிக்கையான மகன், வாலாக்கொடி ஏற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, மாரித்தண்ணீர் நிரம்பி வழிந்த கிணற்றில் தவறி வீழ்ந்து அகால மரணமானான். அந்த புத்திர சோகமே வீரண்ணணை மாய்த்திருக்கக்கூடும்.

பதிவுகள் பெப்ருவரி 23, 2003   


2. காற்றிலேறி நிலவைக் கொய்தல்  - ஜீவன் கந்தையா

அண்மையில் நண்பரொருவரது சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். வெளியிடப்பட்ட தொகுதிக்கதைகளை கையெழுத்துப் பிரதியாகவே படிக்கும் வாய்ப்பு ஏலவே எனக்குக் கிடைத்திருந்தது. ஆனாலும், வெளியீட்டு விழாவில் பேசப்போகும் விமர்சகர்கள் மேற்படி தொகுதியைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என அறியும் ஆவலும் எனக்கு இருந்ததால் விழாவிற்குச் சென்றேன். விழாவின் நடாத்துனர் தொகுதியின் படைப்பாளியை நோக்கி “சென்னையை வென்றுவந்த தம்பியே!, திரிபுரத்தை எரித்த நெருப்பே!!” என்று விளித்தபோதே நிகழ்வு தடம்புரளும் குறிப்புத் தெரிந்தது. எனக்கு அருவருப்பும் ஏற்பட்டது. “என் தம்பி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறான். இன்று அவன் ஒரு பெரிய சாதனையை நிலைநாட்டியிருக்கிறான்” என்றவாறாக அவர் தொடர்ந்து குவித்த சொற்களின் பெருவெள்ளம் மேடையிலிருந்து கரைபுரண்டோடி பார்வையாளர்களின் கால்களையும் நனைத்தது. அரங்கத்தை விட்டு வெளியேறிவிடலாமா என நான் நினைத்தபோது உண்மையில் அரங்கத்திற்கு வெளியே சோவென மழை பெய்துகொண்டிருந்தது. நடாத்துனருக்கு அடுத்துப் பேச வந்தவரும் ஏதோ விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல பாராட்டு வெள்ளத்தை இறைக்கத்தொடங்கினார். இதில் பரிதாபம் என்னவென்றால் மேடையில் ஏற்படுத்தப்பட்ட வெள்ளப்பெருக்கால் கழுத்துவரை நீரில் நின்றுகொண்டு தொகுதியின் படைப்பாளி இறும்பூதிக்கொண்டிருந்தார். (எனக்கு பாஞ்சாலி சபதத்தில் பாரதி எழுதிய “பாவியர் சபை தனிலே...” என்ற வரிகள் ஞாபகத்தில் வந்தன.) அவரது படைப்பாக்கம் தொடர்பான ஒற்றை நம்பிக்கை மீது மேன்மேலும் வலுவேறிக்கொண்டிருந்தது. நாளைக்கு அவர் கதைக்காக எழுதும் குறிப்புக்களைக்கூட நிறைவுபெற்ற படைப்பு வடிவமாக கொண்டுவிடக்கூடிய ஆபத்து எனக்குப் புரிந்தது.

இலக்கியம் எப்போதுமே அரூபமான செயற்பாட்டின் மூலம் மனித மனங்களில் இயங்குவது. அரசியல் பொதுவாகவே இதற்கு எதிர்மாறாக இயங்க வல்லது. சொற்களுக்கு அர்த்தத்தைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக களத்திற்கு அனுப்பும் உல்லாச மேடையாகவே அரசியல்மேடையைக் கணித்துவைத்துள்ளேன். அரசியல்மேடைக்குரிய விருதாப்பேர்வழிகளை அழைத்து புத்தக வெளியீடு செய்வதன் அபத்தம், பாராட்டு ஒன்றையே குறிவைத்தியங்கும் மனவார்ப்புக்குகந்தது மட்டுமே. அண்மையாகக் காணக்கூடியதாக இருக்கும் இன்னொரு வேடிக்கை, புத்தகம் பற்றிய எந்த அறிவுமற்ற, அதைப் பற்றி அறியும் ஆவலுமற்ற லெளகீக தேடலொன்றே வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட மனிதர்களை அழைத்து நூலின் முதற்பிரதியை பெறவைத்து நாலு பாராட்டும், நாலு காசும் வாங்கும் கேலிக்கூத்து. இந்த நடப்பின் காரணமாக படைப்பாளியின் வளர்ச்சி படுபாதாளத்திற்கு தள்ளப்படுகிறதாகவே எனக்குப் படுகிறது.

பாராட்டல், தூற்றல் என்ற இரண்டிற்குமப்பாலேதான் இலக்கியப் படைப்புப் பற்றிய விமர்சன உருவாக்கம் நிகழமுடியும். வாசிப்புப் பரவலும், விமர்சனமும் இல்லாத படைப்பும் படைப்பாளியின் உழைப்பும் கிணற்றிற்குள் வீழ்ந்த கல்லைப்போல மறைந்துவிடும். அது படைப்பாளியின் ஊக்கத்தையும் இயக்கத்தையும் பலியெடுத்துவிடும்.

வாசிப்பின் அரசியல்

அந்த விழாவிலும் விழாவிற்கு வெளியே பத்திரிகைகளிலும் இத்தொகுதி பற்றி விள்ளனம் செய்த விமர்சகர்கள் ‘இக்கதைகளை நாம் எம் மனைவிமார்களுக்குக்கூட படிக்கக்கொடுக்கமுடியாது இதில் அப்படி ஆபாசமாக தூசணங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இவர் ஆபாசமாக எழுதுவதைக் கைவிட்டு நல்ல கதைகளை எழுதுவாராயின் எங்கோ ஒரு உயரத்திற்கு சென்றுவிடக்கூடிய திறமைசாலி, இனிமேல் ஆபாசமாக எழுதுவதை நிறுத்தவும்’ என அறிவுரையும், கட்டளையும் இட்டதை அறிந்தேன். நல்லது. இந்த இலக்கியக் கண்காணிப்பாளர்கள் தூசணங்களென நினைத்து, மனிதஉறுப்புக்களின் கொச்சைச் சொற்களைக் கண்டு முகஞ்சுளிக்கிறார்கள். கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளிற்கு முன்னர் முலை என்று தமிழ் உரைநடையில் பாவிக்கமுடியாத பண்பாட்டுக் கட்டுப்பாடு இருந்திருக்கிறது. இன்றைய படைப்பாளிகள் தம் கதைகளில் சாதாரணமாகவே முலையைக் கையாளுகிறார்கள்.! ஒரு காலத்தில் ஆபாசமாகக் கணிக்கப்பட்டது. இன்று ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் 2000ம் ஆண்டிற்கு முன்பு எழுதப்பட்டதாக நம்பப்படும் உலகப் பொதுமறையான திருக்குறளில் முலை என்று வள்ளுவர் தாராளமாகப் பாவித்திருக்கிறார். கொங்கை, முலை என்பன ஆதிகாலத்தில் பாலியல் தூசணையாக இருந்திருக்க மாட்டாது என்பதற்கு என்ன ஆதாரம்? பின்னர் எழுதப்பட்ட கம்பராமாயாணத்தில் கொங்கை, அல்குல் மட்டுமல்ல;

‘இயல் வுறு செயல் வினாவா
யிருகையு மெயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசித்
துவலை கண் மகளிர் மென்றூ
சுயல்வுறு பரவை யல்கு
லொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்
கயா உயிர்ப் பளித்த தம்மா!’

என வீரர்களின் மனச்சோர்வை தீர்க்க வைத்ததே பெண்குறி என்ற மாமருந்துதான் என கம்பன் பாடியிருக்கிறான். அத்துடன் கற்பு என்று பேசும்போதெல்லாம் இந்தப் பண்பாட்டுக் காவலர்களால் சிலப்பதிகாரமும், கண்ணகியும் உதாரணங்காட்டப்படுவதை நீங்கள் அறிவீர்கள். இதே சிலப்பதிகாரத்தில், மாதவியை விட்டு கண்ணகியிடம் மீண்டு வந்த கோவலன், கண்ணகியை தாஜா செய்வதற்காக ‘சலம் புணர் கொள்கைச் சலதி’ என்று அபாண்டமாக பழி உரைக்கிறான் மாதவியைப்பற்றி. ஆக, நான் மேலே குறிப்பிட்ட அத்தனை படைப்புகளும்தான் எமது பண்டைய தமிழ்ப் பண்பாட்டின் இலக்கியப் பொக்கிசங்களாக இன்றும் இருந்துவருகின்றன. இவைதான் 2000ம் ஆண்டுகளாக எம் முள்ளந்தண்டின் கூனலை நிமிர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் சுக்குமாந்தடிகள்!

பக்தி இலக்கியங்களோ இதைவிட ஒருபடி மேலே போய் நாயக, நாயகி பாவத்தில் பாடப்பட்ட பாடல்களில் இறைவனை சம்போகத்திற்கு அழைத்த கூத்தெல்லாம் தமிழில் உண்டு. உறக்கத்தில் இருக்கும் மனிதர்களைப் பார்த்தால் எமக்கு அவர்களது பாலியல் உறுப்பா ஞாபகம் வரும்? ஆனால் ஆண்டாளுக்கு அதுதான் ஞாபகம் வருகிறது! உறக்கத்தில் இருக்கும் தன் தோழியர்களை எழுப்பும்போது “புற்றவல்குல் வனமயிலே” (நாகபாம்பின் விரிந்த படத்தைப்போன்ற பெண்குறியை உடைய அழகிய பெண்ணே!) எனக் கூப்பிட்டு எழுப்புகிறாள்.

செவ்வியல் இலக்கியங்களில் பாலியல் சொற்கள் பாவிக்கப்பட்டது மாதிரி, நமது வாய்மொழி இலக்கியங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆங்கிலேயக்காலனித்துவ எதிர்ப்பாக பாடப்பட்ட வாய்மொழிப்பாடலொன்று,

“வாராண்டா வாராண்டா
வெள்ளைக்காரன்
வரட்டும் தாயோழி
தொப்பிக்காரன்”  என ஆதிக்க வெறுப்பை வசைச்சொல்லால் வெளிப்படுத்துகிறது. இதைவிடச் சற்றுக் கீழே இறங்கி ஈழத்து நாட்டார் வாய்மொழியாக தொடர்ந்து வரும் ஒரு ஏசல் பாடல்,
“கத்தரிக்காய் குத்து மொண்ணிக்காரி
கைநிறைய காசு தாறன் வாடி”
என்று ‘தேவதூசணமாக’ப் போகிறது.

***

மேன்மக்கள் கலாச்சாரத்தினடியாகப் பிறக்கும் வாசிப்பும், கண்காணிப்பும் எப்போதுமே கிளைக்கலாச்சாரமாக இயங்கும் சாதாரண மக்களது மீறல்களை விருப்பு, வெறுப்புக்களை அடக்கியே வருகின்றது. நாசூக்குகள் அற்ற எதிர்ப்புக்குரல்களின் மொழிகளெப்போதுமே ஏட்டிற்கு அப்பாலே வாய்மொழியாகத்தான் பரவி வருகிறது. அச்சிலே இல்லாததற்குக் காரணம் இறுக்கமான தணிக்கைதான். சமீப காலத்து யதார்த்த இலக்கியங்கள்கூட தெரிவு செய்யப்பட்ட மொழிக்கட்டுமானத்துடன்தான் படைப்புகளாகப் பதிவு பெற்றுவந்திருக்கிறது. அரசியல், இலக்கியம் தொடர்பான எவ்வகை எதிர்ப்புக்குரல்களும் இந்தக் கண்காணிப்பு வலயத்திற்குட்பட்டே அச்சாகவேண்டிய கடப்பாடு தமிழில் விதிக்கப்பட்டது. இவற்றை மீறும் எழுத்துக்கள் பாசம் என சட்டாம்பிள்ளைக்குரல்களின் கார்வைக்குள் அடக்கப்படுகின்றன. அதிலும் பண்பாட்டு மரபுகளை மீறமுயலும் இலக்கியப் பதிவுகள் சொல்லிவைத்தது மாதிரி துடித்தெழும்பும் பண்பாட்டுக் காவலர்களின் அடக்குமுறைக்குள் நசித்து தூரவிலத்தப்படுகின்றன.

சொல்லதிகாரம்

மேற்படி சிறுகதைத் தொகுதியிலுள்ள பாலியல் சொற்பிரயோகம் பற்றிய கடுமையான கண்காணிப்பில் இருக்கும் இக்காவலர்கள் அப்படைப்பின் ஆணாதிக்கச் சொல்லாடல் பற்றிய கருத்தூன்றலை கவனமாகத் தவிர்த்துவிடுகின்றனர். இதுதான் தும்பை விட்டு வாலைப்ப்¢டிக்கும் வேலை என்பது. இச்சிறுகதைத்தொகுதியில் பாவிக்கப்பட்ட பாலியல் தூசணைகள் அப்பட்டமான ஆணாதிக்க வன்மமாகவே எனக்குப் பட்டது. புதிது படைத்து கவனிப்பைப் பெறவேண்டுமென்ற சமூகப் பார்வையற்ற இத்தொகுதிப் படைப்பாளி போன்ற ஒருவரால் பெண்ணை சமூகத்தின் சகஜீவியாக கணிக்கமுடியவில்லை. அவரது ஆழ்மனதில் உறங்கும் ஆணாதிக்க வன்முறை மரபின் கிடுகுவேலிக்குள் வைத்து பெண்ணை போகப்பொருளாகப் பார்க்கவே பயன்பட்டிருக்கின்றது.

சமூகப் பார்வையுடன் பாலியல் பிரச்சனைகளை கதைகளில் கையாண்டவர்களின் வரலாறு மிகவும் பழமையானது. வ.ரா. விலிருந்து தொடங்கும் இப்பாரம்பரியம் கு.ப.ரா., தி.ஜானகிராமன், நாகராஜன், எஸ்.பொ., மு.த., என்பவர்கள் ஈறாக ஓடி இன்று கலகக்குரலை முதன்மையாகக் கொண்டிருப்பினும் சாருநிவேதிதாவின் பல சிறுகதைகள் பாலியல் ஒடுக்குமுறைகளை அப்பட்டமாக வெளிக்கொணர வாய்ப்பளித்திருக்கிறது. இவர் தொடக்கிவைத்த கலகப்புயல் பாதைமாறி பல இடர்ப்பாடுகளையும் தமிழிலக்கியத்திற்கு அளித்துவிட்டது. இவ்வகை இடர்ப்பாட்டின் முழு உதாரணம்தான் நான் பிரஸ்தாபிக்கும் சிறுகதைத்தொகுதிப் படைப்பாளி ஆகும். இவருக்கு புதுமை என்பது தன் முகத்தில் விழவைக்கும் புகழொளியின் ரச்மிகளாகப் பட்டிருக்கின்றது.  இதை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருப்பின் பேரா. சி.தில்லைநாதன் எழுதிய “புதுமைகளும் மாறுதல்களும்” என்ற கட்டுரையிலிருந்து ஒரு பாரவை கீழே தந்து முத்தாய்ப்பதே சிறப்பு என நினைக்கிறேன்.

“புதுமையில் மோகம் கொள்வதும், நாகரிகத் தினிசுகளாலும் வித்தியாசமான பாணிகளினாலும் கவரப்படுவதும் சாதாரண மனித இயல்பு. உடை, நடை முதலியவற்றில் மட்டுமின்றி, கலை இலக்கியங்களிலும் வித்தியாசமானவற்றை வியக்கும் போக்கினைக் காணலாம். வித்தியாசமானது அல்லது புதுமையானது என்பதற்காக மட்டும் ஒன்றினைக் கொடிகட்டிப் போற்றுவது அவசியமானதா என்பதை எண்ணிப்பார்த்தல் நன்று. இலக்கியத்துறையில் வித்தியாசமானது, புதியது என்று ஒன்றினை அணைத்துக்கொள்ளும் அவசரத்தில் என்னத்தை, யாருக்காக, எப்படி வழங்குகிறோம் என்பது கவனிக்கப்படாது போய்விடக்கூடாது. பல வல்லமைகளையும் பொறுப்புக்களையும் தன் கையில் எடுத்துக்கொண்டுள்ள மைத்ன் தன் செயல்களுக்குப் பதில் கூறும் கடமைப்பாடும் உடையவனாகிறான்.”(பண்பாட்டுச் சிந்தனைகள்: சி. தில்லைநாதன். பக்:47)

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

நன்றி:  பதிவுகள் டிசம்பர் 2002


3. சூரையங்காடு - ஜீவன் கந்தையா

இந்த முறையும்  மரணத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்.  மரணந்தான் மனிதனுக்கு இருக்கிற ஆகப்பெரிய துன்பம் என்று நினைக்கிறேன். காவோலைகள் சர சரவென விழ, குருத்தோலைகள் சிரித்த காலம் போய், குருத்தோலைகள் சரிக்கப்படும் காலமொன்றில் இது நிகழ்ந்தது. நிகழ்ந்து பதினெட்டு வருடங்கள் தாண்டிவிட்டன. இந்தப் பதினெட்டு வருடங்களிலே எத்தனையோ மரணங்களைப் பார்த்து வந்துவிட்டேன். திருமூலரின் வார்த்தையின் படிக்கு, நீரிலே மூழ்கி நினைப்பொழிந்து போன முகங்களாக பல, என் ஞாபக அடுக்குகளுக்குள் புதைந்துபோய் விட்டன. அடிக்கடி அலைக்கும் நோயின் உபாதைக்குள்ளாக என் மரணம் பற்றிய பீதி கிளம்பி, வெறுமைக்குள் தள்ளும்போது, சில முகங்களை ஞாபக அடுக்குகளிலிருந்து உருவி எடுத்து தூசி தட்டிப் பார்ப்பதுண்டு. ஆனால் அவற்றுடன் மானசீகமாக உரையாடலை வைத்துக்கொண்டதில்லை. ஏனெனில் முடிவுறாத உரையாடலை நீட்டிச் செல்வதற்கு அந்த முகங்கள் என்னையும் அவைதம் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுமே என்ற பயம்தான் காரணம்.

சில இரவுகளில் கனவுக்கும், நனவுக்கும் இடைப்பட்ட நிலையில் ஓரிரு முகங்கள் வந்து உரையாடலைத் தொடங்கும். ‘என் கவிதை வரிகளைக் களவாடி இருக்கிறாயே ராஸ்கல்!’ என தயாபரன் வந்து மிரட்டுவதும் உண்டு.

தயாபரன் என் பால்யகால நண்பன். எனக்கு கவிதை படிக்கவும், ரசிக்கவும் அவன்தான் சொல்லிக் கொடுத்தான். மைம்மல் பொழுதொன்றில் இரண்டுபேரும் பருத்தித்துறைக் கடற்கரையில் ‘வட்டப்பாறை’ என்று அழைக்கப்படும் கடலுக்குள்ளே அரைவட்டத்திற்கு பாறைகள் நீட்டிக்கொண்டிருக்கும் பிரதேசத்தில், தண்ணிக்குள் தலைநீட்டி நின்ற பாறையொன்றில் கிழக்குநோக்கி இருந்துகொண்டு அவனது கவிதைக் கொப்பியிலிருந்து கவிதைகள் படித்தோம். அதிகமும் அவனது காதலி மாதங்கியினை நோக்கி பாடிய மடலேறுவகைப் பட்ட கவிதைகளாக இருந்தும் புதுக்கவிதையின் சூட்சுமங்களை அந்தவயதிலேயே கைவரப் பெற்றிருந்தான். அவனுக்கு துணைசெய்வதற்கென சிவகங்கையிலிருந்து கவிஞர் மீரா வேறு “கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்” என்ற கவிதைப்புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார். அந்த நாற்பது பக்க கொப்பியில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் அத்தனையையும் படித்து முடிப்பதற்கு சூரியனுக்கு விருப்பமிருக்கவில்லை. இருளடைந்து விட்டதும் தயாபரன் சொன்னான். ‘இந்தா வீட்டில கொண்டுபோய்ப் படிச்சிட்டு பிறகு தா’.

மறுநாள் சேதி அறிந்து நான் சைக்கிளில் த்துப்பறந்து போனபோது புகையிலைப் பாத்திக்குள் தயாபரன் குப்புறக் கிடந்தான். மேலே நடு உச்சியில், கத்தரி வெய்யிலின் அக்னிக்கதிர்களை எறிந்துகொண்டு சூரியன் மிகுதிக் கவிதைக்காக எதிர்பார்த்திருந்தான். முதுகில் சன்னம் துளைத்த சின்ன ஓட்டைதான் இருந்தது. ஆனால் நெஞ்சுப்பக்கம் ஓவென்று பெரிய சல்லடை போட்டுக்கொண்டு S.L.R. துவக்கின் சுருள்சன்னம் வெளியேறிப்போயிருந்தது. முதல்வெடி காலில் தைத்ததும் தப்பியோடுவதற்கு புகையிலைப்பாத்திக்குள் மறைந்து தவழ்ந்து போய்க்கொண்டிருந்தபோது தோட்டவேலி பாய்ந்து வந்து முதுகுக்கு அருகே துவக்கை வைத்து இறுதி முற்றுப்புள்ளியை யாரோ ஒரு ஆமிக்காரன் வைத்திருந்தான்.

தாய்க்குத் தலைமகன் தயாபரன். அவனுக்குக்கீழே குஞ்சும் குருமானுமாய் பெண்சகோதரிகள். வெளிறிப்போயிருந்த சடலத்தைக் கட்டியழும் சகோதரிகளுக்கு யார் ஆறுதல் சொல்வார்?. எட்டுச் செலவுவரை ஓடியாடி நண்பர்கள் எல்லோரும் அக்குடும்பத்திற்கு உதவினோம். அந்த நாளில் தினமும் போய் வந்துகொண்டிருந்தும் கவிதைக்கொப்பியை கொண்டுபோய்க் கொடுக்கவில்லை. இப்படியாக அது என்கூடவே இருந்தது. யாராவது நம்பிக்கையாக வைக்கத் தந்த காசு உங்களிடம் இருந்தால் செலவுக்கு கஸ்டப்படும் தினங்களில் பத்திருபதை எடுத்துக்கொள்வதில்லையா? அதேபோலத்தான் கவிதை எழுதுவோமே என்று தயாரிப்புச்செய்து கவிதையும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது சில இடங்களில் ஒறுவாய் விழும் வார்த்தைகளுக்கு அந்தக் கொப்பியில் இருந்து எடுத்து நிரப்பியிருக்கிறேன். திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற எல்லோரது நம்பிக்கையைப் போலத்தான் இதையும் நான் செய்தேன். ஆனால் எல்லாக் கடனையும் தீர்த்துவிடக்கூடிய மாதிரி மனிச வாழ்க்கை இல்லை அல்லவா? இப்போது தயாபரனின் மிரட்டல் நீள்கிறது...

*********

ஒரு மனித இறப்பை ஐந்தடி தூரத்திலிருந்து வைத்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கு வயது ஏழு.

மலேரியாக் காய்ச்சல் பீடித்து என்னை மந்திகை ஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்த்திருந்தாள் அம்மா.

ஆஸ்பத்திரிக் கட்டிலில் நான் படுத்திருக்க, அம்மா அருகே நின்றுகொண்டு தோடம்பழம் உரித்து, இரண்டு சுளையை எனக்குத் தீத்துவதும், மூன்றாவதை தான் தின்பதுமாக லயப்பிசகின்றி இயங்கிக்கொண்டிருந்தாள்.

எனக்கு இடப்புறமாக ஐந்தடி தள்ளியிருந்த கட்டிலில் ஒரு வயதுக்குக் குறைவான குழந்தை ஒன்று படுத்திருந்தது. அதற்கு சேலைன் ஏறிக்கொண்டிருந்தது. செங்கமாரி முற்றி மங்கமாரி ஆக்கிவிட்டது என்று அதன் தாய் எனது அம்மாவுக்கு சொல்லியிருந்தாள். அதற்கு அழுவதற்குக்கூட வலுவில்லைப்போலும். ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்த முதல் நாளிரவிலிருந்து ஒரு அனக்கமும் காட்டவில்லை. எப்போதாவது ஒருமுறை கண்ணைத் திறக்கும். காட்சிகள் பிடிபட்ட எந்த அசுமாத்தமு மின்றி சிறிதுநேரம் இமையாடிவிட்டு, பின்னர் அயர்ச்சியில் மூடிவிடும்.

அன்று பகல் பூராவிலும் அதன் அம்மாவும் எனது அம்மாவும் பாடு பேசிக்கொண்டிருந்தபோது, நான் காதைக் கொடுத்து அலுத்துப்போய் நித்திரையாகி விட்டேன். உறக்கம் கலைந்தபோதுகூட “இவன் பிறந்த ராசியோ என்னவோ சாணைப்பிள்ளையில இருந்து நோய் நொடிதான் தங்கச்சி” என்று என்னைப் பற்றி அம்மா சொன்னது எனக்குக் கேட்டது.

பிறகுதான் இந்தத் தோடம்பழச் சுளை தீத்தலும், தின்னலும் நடந்தது.

அம்மாவிற்குப் போகும் தோடம்பழப் பங்கைக் குறைப்பதற்காக நான் வேகமாக சாப்பிட முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். ஆறேழு நாட்களாக அடித்த காய்ச்சல் காரணமாக எனது வாய்பூராவுமே ருசியற்று மந்தமாகிவிட்டது. தொண்டை வேறு காய்ந்துபோய் இருந்ததால் நினைத்தமாதிரி விழுங்கவும் முடியாமல் திண்டாடினேன்.

திடீரென, கையில் வைத்திருந்த தோடம்பழச் சுளைகளை தொப்பென வீசினாள் அம்மா. “பிள்ளை.. பிள்ளை.. நேர்ஸ்.. நேர்ஸ்” என்று கத்திக் கொண்டு ஓடத் தொடங்கினாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பக்கத்துக் குழந்தையின் தாயும் தாச்சி மறிப்பது மாதிரி அங்குமிங்குமாய் ஓடுவதும் குழந்தைக்குக் கிட்ட வருவதுமாக அலைந்தபோதுதான் ஏதோ ஒருவகைப் புரிதல் நிகழ்ந்து நான் குழந்தையைப் பார்த்தேன். அதன் சின்ன விலாக்கூடு மேலும் கீழுமாக அந்தரப்பட்டது. மூச்சு எடுக்க முடியாமல் வாய் திறந்து மூடுவதுமாக இருந்தது. இப்போது அதன் கண்கள் விரியத் திறந்து அயர்ச்சியற்று பிரகாசமாக இருந்ததுபோல எனக்குப் பட்டது.

நேர்சும் அம்மாவும் ஓடி வந்தார்கள். குழந்தையின் சின்ன நெஞ்சாங்குழிக்குள் கையை வைத்து அமத்தி அமத்தி எடுத்தாள் நேர்ஸ். பல தடவை எத்தனித்தபிறகு, மெதுவாக தன்  கையை எடுத்துவிட்டு வெறுதே பார்த்துக்கொண்டே இருந்தாள். நானும் சரிந்து படுத்து கவனித்துக்கொண்டே இருந்தேன். அதன் விரிந்த இமையை தட்டித் தட்டி விட்டாள். குழந்தையின் தாய் நேர்சைப் பிடித்து தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தாள். அம்மா அந்தத் தாயின் தோளை அணைத்தபடி ஆறுதல்சொன்னாள். அம்மாவின் கண்களிலிருந்தும் நீர் வடிந்ததை நான் பார்த்தேன்.

பின்னர் நேர்ஸ் விலகிப்போய் டொக்டரைக் கூட்டி வந்தாள். துடிப்படங்கிய சிறு மார்பில் குழாய் வைத்துப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு,

“இஞ்ச பாரம்மா, இதில அழுதுகொண்டு நிக்காதை. மற்றப் பிள்ளையள் பயந்து போடும். நான் D.M.O. இட்டை கையெழுத்து வேண்டித் தாறன், கெதியா பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுபோகப் பார். பிறகு காம்பராவுக்குள்ள கொண்டுபோனால் எடுக்கிறதுக்கு அலைச்சல்” என்று முடிவாகச் சொன்னார் டொக்டர்.

போர்வையால் குழந்தையின் தலைவரை போர்த்துவிட்டு நேர்சையும் அழைத்துக்கொண்டு டொக்டர் சென்றதும், “தங்கச்சி ஓடிப்போய் ஒரு கார் பிடிச்சுக்கொண்டு வா” என்று அம்மா அத்தாயிடம் வேண்டினாள்.

அவள் தலையில் அடித்துக் குளறிக்கொண்டே வெளியேறிப்போனாள்.

“என்ர ஐயோ! அந்தக் கார்க்காரன் 150 ரூபாக் கேட்கிறான். ஆக்களை ஏத்துற கார்க்  காரர் ஒருத்தரும் பிரேதம் ஏத்தமாட்டினமாம். பிரேதக்கார்க்காரன் 150 ரூபாவாம்... நான் என்ன செய்வன் இந்தப் படுபாதகக் கடவுள் என்னை இப்பிடிச் சோதிக்கிறானே” என்று ஒப்பாரியிட்டுக் கதறிக்கொண்டு திரும்பி வந்தாள் தாய்.

அம்மா என்னருகே வந்து தலையணைக்குள் வைத்திருந்த காசை எடுத்து எண்ணிப் பார்த்தாள். “என்னட்டை 15 ரூபாவும் சில்லறையுந்தானே இருக்கு தங்கச்சி” என்று பரிதாபமாக முறையிட்டாள் அம்மா.
ஏதோ கடிதமொன்றை கொண்டுவந்து கொடுத்த நேர்ஸ், “கொண்டு போறதுக்கு ஏற்பாடு செய்திட்டியா” என அவசரப்படுத்தினாள். அந்தத் தாய் செய்வதெதுவும் தெரியாமல் என் அம்மாவை பார்த்து நீர் பெருக்கினாள்.

தரவற்று அழுதுகொண்டிருக்கும் அவளையும் சடலம் மூடப்பட்டிருக்கும் போர்வையையும் மாறி மாறிப் பார்த்தபின், “தங்கச்சி எழும்பு! உன்ரை உடுப்பு பாக்கை எடு நான் பிள்ளையைக் கொண்டுவந்து வீட்டை தாறன், கண்ணைத் துடை, நான் பஸ்சில உன்னைக் கூட்டிப் போறன் அழுது கிழுது காட்டிக் குடுத்துப் போடக்கூடாது” என்னுடைய துவாயை எடுத்து மளமளவென்று குழந்தையைச் சுற்றினாள். அப்படியே தூக்கி தன் தோளில் அணைத்துக் கொண்டு சீலைத் தொங்கலால் சீராக மறைத்துக் கொண்டாள். மறு  கையில் தாயின் கையை இறுகப் பிடித்தபடி என்னைப் பார்த்து,“ராசா! பேசாமக் கட்டில்ல கிடவணை. நான் இந்த அக்காவைக் கொண்டுபோய் வீட்டில விட்டிட்டு வாறன்” என்று சொல்லிக் கொண்டு வெளியேறிப் போனாள்.

நான் பக்கத்துக் கட்டிலின் வெறுமையைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன்.

***
1984: சென்னை:
காண்டாவனக் காற்று திரண்டு வந்த மாதந்தான் என் கிராமத்திலிருந்தும், என் வீட்டிலிருந்தும் என்றென்றைக்குமாக பிரிந்து வந்தேன். நம்பமாட்டீர்கள், காண்டாவனக் காற்று பெயர்ந்துவரும் மாதத்தில், என் கிராமமே ஒருபக்கம் தலைசாய்த்து நிற்கும். காற்றுத் தெளித்துக் கண்களுக்குள் விழுத்தும் மணல், தூசி, தும்பைத் தவிர்க்க மனிதர் தலை சாய்த்திருப்பர். காற்றின் போக்கிற்கு தென்னை, பனை, மா, சீமைக் கிழுவை, முருங்கை தலை சாய்த்துப் பணியும். சேவலின் விசிறிவால் கூட சாய்ந்தே இருக்கும். ஆனாலும் அது பேட்டுக்கோழியைக் கலைத்தே தீரும். இரவுகளிலும் காற்று அமராது. கடலில் வாங்கெழும்பி அலை உறுமும். ஓலைப்பாயை விரித்து தலைசாய்த்துப் படுத்தால் கூரை முகட்டுவளையில் எலி பிடிக்க நெளியும் சாரைப்பாம்பின் வயிறும் சிலபொழுது தெரியும். இருந்தும் இப்படியான அற்புதக் கிராம வீடுகளிலிருந்து பல இளைஞர்கள் கிளம்பி  இந்தியா வந்தோம்.

சென்னையிலோ  வெயில் அனலெழுப்பியது. ஈழத்தின் பல்வேறு கிராமங்களில் திரட்டப்பட்ட 200 பேர்வரை யுதப்பயிற்சிக்காக சென்னையில் வந்து குவிந்திருந்தோம். யாருக்கும் யாரது பின்புலங்களும் தெரியாதபோதும் எமது கண்களுக்குள் அடைகாக்கப்பட்ட ஈழக்கனவொன்றின் பொன்முட்டையேந்தி நடமாடினோம், உரையாடினோம்...

“இன்னும் இரண்டு வருசங்களுக்கிடையில ஈழம் கிடைச்சிடும். பிறகென்ன.. ராச வாழ்க்கை.”

“எங்களுக்கெல்லாம் தியாகிகள் பென்சன் கிடைச்சாலும் கிடைக்குமடா”

தமிழீழத்தில நடக்கிற முதல்தேர்தல்ல பருத்தித்துறைத் தொகுதிக்கு நான் கண்டிப்பா போட்டியிடுவன்.

“உது விசர்க்கதை நடக்கப்போறது கம்யூனிசப்புரட்சி! தேர்தலுமில்ல ஒரு மண்ணுமில்ல.”

“அதுக்கு, நாங்கள் முதல்ல மக்களுக்கை வேலை செய்யோணும் தோழர்! மக்களை அரசியல் மயப்படுத்தாத ஆயுதப்போராட்டத்தில ஒன்றுமேயில்ல..”

“அப்ப என்ர அக்காவுக்கு சீதனங் குடுக்கத் தேவையில்ல.. எண்டுறியளோ?”

“விடுதலை கிடைச்ச உடன நான் யுர்வேத மருத்துவத்தைப் படிச்சு முடிச்சு அதை ஒரு விஞ்ஞானபூர்வமாக மாற்றியமைக்கப் போறன்.”

“அதுக்குமுதல் நீ உயிரோட இருக்கோணுமே, ஒண்டில் ஆமி சுடும், அல்லாட்டி வேற இயக்கமேதும் மண்டையில போடும்.”

“F குறுப்பை சாப்பாட்டுக்கு கூப்பிர்ராங்கள் எழும்புங்கோ”
 

சூரியனிலிருந்து குதித்தோடி வந்தவன் போல மேற்கிலிருந்து கத்திக் கொண்டு வந்த தோழன் சேதி சொன்னபோது நான் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. மாலைநேரமாகிவிட்டாலும் எனக்கு அப்போதுதான் மத்தியானச் சாப்பாட்டுக்கான வரிசை வந்தது! சடலத்தைப் பார்க்க எல்லோரும் எழுந்தோடினார்கள். நான் மற்றும் ஓரிருவர் மட்டும், பருப்பும், எருமை இறைச்சிக்கறிக் குழம்பும் குழைத்த சோற்றில் கவனம் செலுத்தினோம்.

அது சென்னைக்குப் புறத்தேயுள்ள சாலிக்கிராமத்தின் அருகேயுள்ள ஐ¡னகி தோட்டம் என்ற பரந்த மாமரக்காடு. மாமரத்தில் து¡க்குமாட்டி மரணமானவனுக்கும் எனக்கும் முன்பே பரிச்சயம் இருந்தது. நானும் அவனுமாக இரண்டுவாரம் நாளுக்கு பன்னிரண்டு வார்த்தைக்கு மேலாகாமல் உரையாடிக்கொண்டு ஒரே அறையில் பதுங்கியிருந்தோம். பின்னர் பாசையூரில் வள்ளத்திலேறிய நேரம் தொடக்கம் இராமேஸ்வரம் கரை தொடும்வரைக்கும் நான் அவன்மீது சத்தியெடுத்து, அசிங்கப்படுத்தியபோதும் எந்தவித முனக்கமும் இல்லாமல் அருகில் இருந்தான். கரையிறங்கியபோது அவனது முதுகு பூராவிலும் இரத்ததோயல். அதிவேகமாக ஓடிய வள்ளம் கடலலையில் து¡க்கிப் போட்ட ஒவ்வொரு தரமும் இவனது முதுகு காயப்பட்டிருக்கிறது. இவன் ஒரு அசகாயமெளனி. மனக்காயத்தை வெளியில் து¡க்கி வீசத்தெரிந்திருந்தால் இவனுக்கு தற்கொலைக்கான எண்ணம் வந்திருக்காது. இவன் என்னையும், மற்றவர்களையும் போலத்தான் தமிழீழ விடுதலை வேண்டும் என்ற கனவில், கடற்படையின் கண்காணிப்பு வீச்சை ஊடறுத்து பாக்குநீரிணையைக் கடந்து கரைதாண்டி வந்தானா என்று எனக்கு இன்றைவரை தெரியாது. ஆனாலும் சாப்பாட்டு வரிசை தவறி முன்பாகவே சாப்பிடக் குந்தியதற்கு யாரோ கடிந்துகொண்டதைப் பொறுக்கமாட்டாமல் சோற்றுக்கடாரத்தின் வாய்க்கு சாக்குச் சுற்றிக்கட்டி கஞ்சி வடிக்கப் பாவிக்கும் கயிற்றைக் கழட்டியெடுத்துப் போய் மாமரத்தில் து¡க்குமாட்டி இறந்துவிட்டான்.

சாப்பிட்டுக் கையைக் கழுவிக்கொண்டு போய் நான் சடலத்தைப் பார்த்தபோது, சரிவான மாமரத்தில் கயிற்றை மாட்டி இருந்ததால் உடல் பாரத்திற்கு சடலம் மெல்ல மெல்ல வழுகி வந்து, நிலத்தில் முழந்தாள் பட குந்திக்கொண்டிருந்தது.

யாசிப்பது போல இருந்தது... எதை யாசிக்கிறான் என் மெளனத்தோழன் என இன்றுவரை கேள்வி என்னகத்தே உண்டு!

ஒருவன் உயிர் வாழுவதற்காக சாப்பிடவேண்டி இருக்கிறதல்லவா? இந்தப் பதினெட்டு வருடங்களாக தினந்தினம் என்றில்லாவிட்டாலும் அவ்வப்போது என் கையில் சோற்றுக் கவளம் திரளும் கணங்களில், தூக்கு மாட்டிச் செத்தவன் மனதின் எங்கோ ஒரு மூலையில் இருந்து ஞாபகிக்கிறான்..!

ஜீவன்.க. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


மேற்படி ஜீவனின் கட்டுரைகள் பற்றி பதிவுகளின் வாசகர்கள்...

ஜீவன் கந்தையாவின், "சூரையங்காடு" மனதைப்பிசையும் வாழ்வியல் யதார்த்தம். நம்மைப்போன்றவர்களுக்கு, முன்னொரு காலத்தில் யானை கூட மீந்துபோன சொத்தாக இருக்கவில்லை. சூரையங்காடு சொல்லுகின்ற சம்பவங்களைப் போன்ற பலவாயிரம் நிகழ்வுகளே சுவடுகளாய் நின்று வலிதந்திருக்கின்றன. மரணம் பற்றிய நினைவுகள் மனத்திரையில்  வந்து எட்டிப்பார்க்கின்றபோதே கலக்கமடையும் எனக்கு, நேரில் நுரைதுதும்ப மரணத்தை கண்ட, அதன் வாசம் இன்னும் கரைந்தபடி இருப்பதாய் எண்ணும் ஜீவன் கந்தையாவின் மனநிலையை நெருங்கிப் பார்க்க முடிகிறது. நாம் கடந்துவந்த வாழ்வு முழுதும் அவலங்கள் தானே. போராட்டங்களால் வந்து நெருக்கிய அவலவாழ்வை அவ்வளவாக தீவிரத்துடன் பதிவுசெய்யப்படவில்லையென்ற என் எண்ணத்திற்கு ஜீவன் கந்தையாவின் "யாத்ரா மார்க்கம்" விதிவிலக்கு. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் நண்பரே!!!

    அன்புடன்,
    டிசே

    பதிவுகளிலே ஜீவன் கந்தையாவின் தொடர்கட்டுரைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து வெளியிடவேண்டும்.


 நட்புடன்,
-/இரமணி.

நன்றி:  பதிவுகள் நவம்பர் 2002


4. காடேறி வலயம் - ஜீவன் கந்தையா -
 

“தேறும் வகை நீ! திகைப்பும் நீ
தீமை நன்மை முழுவதும் நீ”.
(திருவாசகம்)

தவா செத்துவிட்டார் என செய்தி வருவதற்கு முன்னரே எனக்கு சிறுகுடலை, பெருங்குடல் தின்னுமளவுக்கு அகோரப்பசியாக இருந்தது. தகனக் கிரியைகளுக்காக காசு சேர்ப்பதற்கு ரங்கன் காலை எட்டு மணிபோல எமது அறைக்கு வந்தபோதுதான் விசயத்தைக் கேள்விப்பட்டேன். நான் தங்கியிருந்த அறையின் மூப்பரான தேவராசாவிடம், ரங்கன் காசு வேண்ட வந்திருப்பான் போலப்பட்டது. தேவராசாவும், மற்ற இருவரும் என்னை அறைக்குக் காவல் வைத்துவிட்டு நேற்றிரவு நம்பர்ஹவுஸ் போனவர்கள் இன்னும்  அறைக்குத் திரும்பவில்லை.

நான் அவனிடம் கேட்டேன்:

“ரங்கா எவ்வளவு காசு சேர்ந்தது..?”

“கணேசலிங்கம் இரண்டாயிரம் தந்தார். செம்பூரில இருக்கிற எலெக்ரிக் சுடலைக்காரன் இரண்டாயிரத்து ஐநூறு கேட்கிறான். இன்னுமொரு இரண்டாயிரம் சேர்த்தால் பொலிசுக்கும் குடுத்து பிரேதத்தை எடுத்து எரிச்சுப்போடலாம்”

“சரி, அதில ஒரு ஐம்பதை எனக்குத்தா நான் நேற்று மத்தியானத்தில இருந்து ஒண்டுமே சாப்பிடவில்லை.”

நானும் ரங்கனும் தாதர் ரயில்வே ஸ்ரேசனிற்கு முன்னாலுள்ள  ஈரானி ஹோட்டலில் சாயாவும், ‘பாவு’ம் சாப்பிட்டுவிட்டு காசு சேர்ப்பதற்காக V.T.இல இருக்கிற சபாபதி அண்ணரது அறைக்குப் போனோம்.

அறையில் யாருமே நித்திரையால் எழும்பவில்லை. நேற்றிரவு தண்ணிப்பாட்டி நடந்த அறிகுறி தெரிந்தது. இரண்டு மக்டொவல் விஸ்கிப்போத்தல்கள், கொந்திய கோழிஎலும்புகள், கச்சான் கொட்டைகள், சாரம் விலகிய சபாபதி அண்ணர், தாசன் எல்லோருமே  பேதம்பாராது நிலத்தில் சிதறிக்கிடந்தனர்.

குப்புறக் கிடந்த சபாபதி அண்ணரை ரங்கன் தட்டி எழுப்பினான். கடைவாயைத் துடைத்தபடி தலையை நிமிர்த்திய சபாபதி அண்ணருக்கு சேதியைச் சொன்னான்.

“எட காலங்காத்தால..இழவு!. அந்த மூதேசி இருந்தும் என்ன, செத்தும் என்ன..”

சாரத்தை இறுக்கி இடுப்பில் கட்டியபடி சுவரில் சாய்ந்திருந்து திட்டத்தொடங்கிய சபாபதி அண்ணரை இடை மறித்தான் ரங்கன்:

“தூள் ஓவடோஸ், V.T.ரெயில்வேக் குவாட்டசுக்கு பின்னால, மரத்துக்குக் கீழ செத்துக் கிடந்ததாம். ரெயில்வேப் பொலிஸ் கொண்டுபோய் காம்பராவுக்குள்ள தள்ளிட்டான்”

“நான் கெய்ரோவால வந்தநேரம் ஊருக்குப் போய் சேரு நாயே எண்டு ஒரு பச்சை இழுத்துக்குடுத்தனான். நரகம்! அதை மாத்தி தூள் வேண்டி அடிச்சுப்போட்டு ஒரு கிழமையால திரும்பவும் வாறவன் போறவனிட்ட கையேந்திக்கொண்டு நிண்டுது. எங்கட மானத்தைக் கப்பலேத்திறதுக்கெண்டு பம்பாய்க்கு வந்து சேருதுகள்”

“ஓமண்ணை, ‘இத்தாலி’நாதனும் ஒரு சிலோன் புத்தகத்தை தலைமாத்தி ரிக்கற்றோடை குடுத்தவராம் ஊருக்குப் போகச்சொல்லி. அதையும் ருக்கோ வித்து தூள் அடிச்சுப்போட்டுது எண்டு அண்டைக்கு ரயில்வே ஸ்ரேசனடியில தவாவைப் பிடிச்சு நாயேபேயே எண்டு பேசிக்கொண்டு நிண்டார். னால் எப்பிடிக் கண்டமாதிரிக் கிழிச்சாலும் கோயில்மாடு மாதிரித் தலையாட்டுமேயொழிய பாவம் எதிர்த்தொண்டும் கதைக்காது.” என்றான் ரங்கன்.

“சரி! அதின்ரை தலவிதி இப்பிடி அனாதையாச் சாகோணுமெண்டு. இப்ப என்ன அடுக்குப் பண்ணுறது..?”
என்று தாசன் கேட்டபோதுதான் அவனது முகத்தைப் பார்த்தேன். மாப்பாணித்தவக்கை மாதிரி ஊதிப்போய் கிடந்தது. தாசனுக்குப் பலமுறை சொல்லியும் விஸ்கியுடன், தூளையும் சேர்த்துப் பாவிப்பதை விடுவதாய்த் தெரியவில்லை. இரண்டின் போதையும் சேரும்போது தனக்கு சொர்க்கம் தெரிவதாகவும், சொர்க்கத்தில் யாருக்குமே ஒரு பிரச்சனையும் இல்லையெனவும் கூறுகிறான்.

“இந்தா ரங்கா இதில யிரமிருக்கு, இந்தக்காசையும் சேர்த்துக்கொண்டுபோய் சுடலைக்காரனை யத்தம்பண்ணு. நானும் தாசனுமாய் ‘தாதாநானா’வைப் பிடிச்சு பொலிசைச் சரிக்கட்டி நாலுமணிக்கிடையில மையத்தைக் கொண்டுவாறம்.”

சபாபதி அண்ணர் ஒரு காரியத்தைத் தூக்கித் தன் தோளில் ஏற்றிவிட்டார் என்றால் அதில் வெற்றி கண்டுதான் சன்னதம் ஓய்வார் என்று எமக்கு நம்பிக்கை வருமளவுக்கு அவரது கடந்தகால கீர்த்தி பம்பாயிலுள்ள எல்லா சிறீலங்கருக்கும் பரவியிருந்த உண்மை.

ரங்கனிடம் மூவாயிரம் ரூபா சேர்ந்திருந்தது. செம்பூர்ச் சுடலைக்குப் போவதற்கு முன்னர், V.T.ரயில்வே ஸ்ரேசனிற்குப் பின்புறமாக நம்மவர் எல்லோரும் வழமையாகச் சந்திக்கும் மரத்தடிக்குச் சென்று விபரம் தெரிவித்தோம்.

தவாவின் இறப்பைக் கேட்ட, தெரிந்தவர் அனைவரும் ஒருபாடு திட்டி ஓய்ந்துதான் துக்கத்தை முகத்தில் ஏற்றினர்.

அவர்களை நாலுமணிக்கிடையில் சுடலைக்கு வரச்சொல்லிவிட்டு செம்பூரை நோக்கி பஸ்சில் போகும் வழியில் ரங்கன் சொன்னான்.
“டேய்..! பிரேதத்தைக் கொண்டுவந்து எரிச்சு முடிய பின்னேரம் னாலும் கும். பஸ்சைவிட்டு இறங்கு, ளுக்கு ஒரு பியரும் அடிச்சு புரியாணியும் சாப்பிட்டுப் போவம்”

இரண்டாயிரத்து இருநூற்றைம்பதுக்கு சுடலைக்காரனுடன் பேரத்தை முடிச்சு, காசைக்கொடுத்துவிட்டு நானும் ரங்கனும் காத்திருந்தபோது அறிந்தமுகங்கள் வரத்தொடங்கின. பதினைந்துபேர்வரை வந்திருந்தார்கள் சுமார் மூன்றரை மணிபோல சபாபதி அண்ணரும் தாசனும் ஒரு நீளக்காரில் பிரேதத்தைக் கொண்டுவந்தார்கள்.

தவாவின் சலனமற்ற முகத்தை நான் பார்க்கவிரும்பாததால் விலத்தியே நின்றேன். முகச்சீலையை எடுத்துவிட்டு அனைவரும் பார்த்தபின், தேவார திருவாசகம் என்ற சடங்குகள் எதுவுமற்று சுடலைக்காரர் இருவர் சடலத்தை எரிக்க பெட்டியுடன் எடுத்துச் சென்றனர்.

மெளனம் கரைகட்டி நின்றது.

ரங்கன் மெல்ல என்னருகே வந்தான்.
“டேய் மச்சான்! இண்டைக்கொரு கவலைக்குடி ஒண்டு போடோணும். தவாவின்ர புண்ணியத்தில சேர்த்த காசு கொஞ்சம் மிச்சங் கிடக்கு. அறைக்குப்போய் குளிச்சு முழுகி பஞ்சாபியின்ர பாருக்கு வா.. அரைப்போத்தல் விஸ்கி வேண்டி அடிப்பம்”.

எனக்கும் இன்று குடிக்கவேண்டும்போல இருந்தது. அத்துடன் ரங்கனிடம் இருக்கும் மிச்சக்காசில் ஒரு ஜீன்ஸ் வேண்டித்தரக் கேட்கவும் இருந்தேன். பம்பாய் வந்த நாளில் இருந்து மாற்றிப்போட உடுப்பு இல்லாமல் ஒவ்வொரு இரவும் சேட்டையும் ஜீன்சையும் தோய்ச்சுப் போட்டு அடுத்தநாள் அணியும் வழக்கமாகிவிட்டது.

சுடலைக்கு வந்தவர்கள் இரண்டு மூன்று பிரிவாக நின்று தவாவைப் பற்றிய நினைவுகளை மீட்டபடி நின்றனர். பெரும்பாலும் கதைத்து முடிந்து குடிப்பதற்கு கிளம்பிப் போய்விடுவர் என ஊகித்தேன்.

****

தசை எரியும் மணம் காற்றில் கிளம்பியபோது சுடலையின் இரும்புக்கிராதிக் கேற்றைத் திறந்துகொண்டு தெருவுக்கு வந்தேன். மனம் களைத்துப்போய் துவண்டது. இன்னும் கொஞ்ச நம்பிக்கைகளை மிச்சம் வைத்துக்கொண்டு எதிர்பார்த்திருக்கக்கூடிய தவாவின் மனைவியை நினைத்தேன். சாவு மிரட்டும்போதுதான் வாழ்வின் தகைமை தெரியும்போலும்.

சாலையோர மரங்களின் நிழலினூடாக அறையை நோக்கி நடந்து செல்லும்போது “தம்பி” என  பின் பக்கத்திலிருந்து கூப்பிடும் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நான் வெளியேறும்போது திருப்பிச் சாத்தாமல்விட்ட சுடலைக்கேற்றின் வழியாக தவா என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார் நாட்பட்ட தாடியும், நெடிய உருவத்தில் பம்மல் நடையுமாய்..

“தம்பி! பயப்பிடாதையும் நான் காசு கீசு கேட்கமாட்டன். சும்மா.. உம்மோட வழித்துணையாய் றூம் மட்டும் வாறன்”

“அதுக்கென்ன வாங்கோ, கதைச்சுக்கொண்டுபோவம். அதுசரி தவா அண்ணை! இந்தத் தூள் அடிக்கிறது... உடம்புக்குக் கூடாதே”.

“எது நல்லது தம்பி?
சாராயம் நல்லதோ?
சாப்பாடு நல்லதோ?
சம்போகம் நல்லதோ?
மனிசர் நல்லதோ?
கடவுள் நல்லதோ?
அவனவன் பார்வையில நல்லதுக்கும் கெட்டதுக்கும் அளவுமானம் வேற வேற தம்பி.”

“நான் நியாய அநியாயம் கதைக்கேல்லை தவா அண்ணை, உடம்புக்குக் கூடாது எண்டுறன்.”

“பிச்சை எடுக்கிறன். குளியாமல் திரியிறன். தூள் அடிக்கிறன் எண்டு எல்லாரும் பேசுறாங்கள். கெய்ரோ, இத்தாலியெல்லாம் கொண்டுபோய் தூள் விக்கிறது மட்டும் நியாயமோ? தூள் வித்த காசில சோக்குப் பண்ணிக்கொண்டு வேசையிட்டப் போறது எல்லாம் நியாயமோ?”

“அப்ப நீங்களேன் இந்தச் சாக்கடையுக்கை கிடந்து மாயுறியள். பட்டது போதுமெண்டு ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாமே?”

“எந்த முகத்தைக் கொண்டு போறது?. நான் 1978இல வெளிநாடு வந்தன். நம்பமாட்டீர், தோட்டத்தில கிடந்த வாட்டர்பம்மை வித்துத்தான் கராச்சிக்கு ரிக்கற் எடுத்தனான். ஈராக், ஈரான் எண்டெல்லாம் அடியுண்டு, அரபியின்ர சிறை, தில்லிக்காரன்ர திஹார் சிறை எல்லாம் பாத்தாச்சு. பாகிஸ்தானில வெத்திலை வித்துத்தான் தம்பி அப்ப வீட்டுக்கு காசு அனுப்புவன். அந்தநேரந்தான் எனக்கு மகள் பிறந்திருக்கிறாள் எண்டு கடிதம் வந்தது. மகளின்ர பலனோ என்னவோ என்னோட வெத்திலை வியாபாரத்தில பாட்னராக இருந்த ‘குருவி’ சொன்னான் - தவா உப்பிடி அஞ்சுசேம், பத்துச்சேம் இலாபத்துக்கு மாரடிக்கிறதை விட்டுட்டு பேசாமல் பம்பாயுக்குப் போய் ஒரு தரம் தூள் கிளப்பிக்கொண்டுபோய் இத்தாலியில இறக்கினா ராசா போல இருக்கலாம். - சரி. கையிலடிச்சா கம்மாரிசு எண்டு பம்பாயுக்கு வந்து க்களைபிடிச்சு தூள்வேண்டி பிரிட்டிஷ் பாஸ்போட் தலைமாத்தி, சப்பாத்துக்குள்ள தூளை மறைச்சு வைச்சுக்கொண்டு பம்பாய் எயாப்போட்டுக்குப் போனால், ஏதோ நாலாங்கால் வீடுமாறி வாற மாப்பிள்ளையை வரவேற்கிற மாதிரி பிளேன் வாசல்ல வைச்சு அப்பிக்கொண்டு போனான் பம்பாய் பொலிஸ். அடியோ அடி, நாய் அடி. அப்பத்தான் என்ர தோள் மூட்டும் கழண்டது. வெள்ளைவேட்டிக் கள்ளர். நீங்கள் என்னை பிச்சைக்காரன் எண்டிறியள்”

“பொறுங்கோ தவா அண்ணை! இந்தப் பிச்சை எடுக்கிறது, பிடுங்கித் தின்னிறது பற்றியெல்லாம் நான் கதைக்கேலாது. எனக்கும் உங்கட நிலைமைதான். பாவத்துக்கு இரங்கியோ, பாதுகாப்புக்கோ தெரியாது தேவராசா தன்ரை அறையில என்னைத் தங்க வைச்சிருக்கு. அந்த அறையில எந்த மூலையில.. எவ்வளவு தூள் மறைச்சு வைச்சிருக்கோ, எப்ப பொலீஸ் பாய்வானோ எண்ட நித்திய பயத்தோடதான் நான் படுத்தெழும்புறன். தேவராசா வேண்டித்தந்தா சாப்பாடு. இல்லையெண்டா பட்டினி..”

“ஏன்... நீர் அண்டைக்கு மாதுங்காவுக்குக் கிட்ட கையில ஏதோ புத்தகத்தோட விறுவிறெண்டு போனீர். மலேசியன் பாஸ்போர்ட் வேண்டி விக்கிறீர்தானே. பிறகென்ன பட்டினி எண்டுறீர்?. பிரிட்டிஷ் பாஸ்போர்ட் ஏதும் இருந்தால் சொல்லும் நல்ல விலைக்கு வித்துத்தாறன்”.

“இல்லை. எனக்கும் உந்த தாலியறுந்த புத்தக வியாபாரத்துக்கும் ஒரு சம்மந்தமுமில்லை. நான் கையில வைச்சிருந்தது ஏதும் கவிதைப் புத்தகமா இருக்கும்”

“ஓ..! கவிதையெல்லாம் படிக்கிறனீரோ? எங்கட கல்லடி வேலன்ர கவிதை படிச்சிருக்கிறீரோ?”

“முந்தி ஏதோ ஒரு தமிழ்ப்பாடப் புத்தகத்தில படிச்ச ஞாபகம் தவா அண்ணை. நீங்கள் அவற்றை கவித படிச்சிருக்கிறீயள் போல..”

ச்..சாய்.. ஒரு கவிதையும் எனக்குத்தெரியாது. னா அந்த மனிசன் சரியான தண்ணிச்சாமியாத்தான் இருக்கும் ஏனெண்டால் ஒடியல்கூழெண்டால் மனிசனுக்கு வலு விருப்பமெண்டு அறிஞ்சன். அதுசரி ஒரு பத்துரூபா இருந்தால் தாருமன் மூக்கு நமநமக்குது.”

சடுதியாய், கிளம்பிய காற்றில் சுடலையில் அடித்த அதே துர்நாற்றம் அடித்தது. உடல் உருகி எரியும் மணம் என் மூக்கில் தாக்க உடம்பு புல்லரித்து நடுக்கம் கண்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். சாலையில் ஒருவரும் இல்லை. என் நிழல்கூட இல்லாத அந்தகாரமாக சூரியன் முகில்களுக்குள் தாண்டிருந்தான்.

எமது அறைக்கதவைத் திறந்தேன். துர்நாற்றம் அறைக்குள்ளிருந்து வியாபித்து திறந்த கதவினூடாக குப்பென வெளியேறி சாலைக்கு இறங்கியது. அறைக்குள் எப்படி தசை எரியும் நாற்றம் என்ற பீதியுடன் மெல்ல உள்ளிறங்கி ராய்ந்தேன். நான் உள்நுழைந்ததே அறியாமல், நிலத்தில் இருந்தபடி, எமது அறைக்கார தேவராசா, ஈயப்பேப்பரில் தூளைப் பரத்தி மெழுகுவர்த்தி கொழுத்திச் சூடுகாட்டி போதையேற்றிக் கொண்டிருந்தார்.

***                                                      ***
‘கலை’ச்சொற்கள்:
1 - நம்பர் ஹவுஸ் : மும்பையிலுள்ள விபச்சார விடுதிகள்
2 - தூள் : ஹெராயின்
3 - பச்சை : அமெரிக்கன் டொலர்ஸ்
4 - ஒரு பச்சை : குழுஉக்குறி வழக்கின்படிக்கு, ஒரு பச்சை என்பது நூறு அமெரிக்கன் டொலர்ஸ்.
5 - V.T. : மும்பையிலுள்ள பெரிய புகையிரத நிலையமான VICTORIA TERMINUS.
6 - புத்தகம் : பாஸ்போர்ட்.(இது சர்வதேசத்து ஈழத்தமிழினத்திற்கும் பரவலான சொல்)

ஜீவன்.க. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நன்றி: பதிவுகள், செப்டம்பர் 2002


5. வான்கோழி நடனம் - ஜீவன் கந்தையா
 
கைகளின் நீட்சி தான் பேனா என்று கனடிய இலக்கியவாதியும், தொடர்பியல் அறிஞருமான ஹேர்பர்ட் மார்ஷல் மெக்லூகன் சொல்கிறார். துவக்கு, கத்தி போன்ற வல்லாயுதங்கள் எந்த மனித உறுப்பின்  நீட்சி என மெக்லூகன் சொல்லவில்லை. இது ஒரு நியாயமான ஐயம். ஏனென்றால் பேனாவும், துவக்கும் எதிரெதிர் முனையில் நின்று சமராடி வருவது காலாகால வரலாறு அல்லவா.

கைகளின் நீட்சியாகப் பிறந்தது பேனா என்று கூறிய அதே மெக்லூகன்தான் பேனாவினால் பிறக்கும் எழுத்து என்ற சமூகத்தின் பரிமாற்ற சாதனத்தை ஒருவகை ‘நோய்’க்கூறாகவும் காண்கிறார். சமூகத்தின் சமச்சீர் பாதிக்கப்படும்போது இந்த மனித அங்கங்களின் நீட்சி (கால்களின் நீட்சி சக்கரம், தோலின் நீட்சி ஆடை) ஏற்படுகின்றதெனவும், அவை மனிதர்களின் நரம்பு மண்டலங்களைப் பாதித்து நீள்வதாகவும் அவர் ஆராய்ந்து பார்க்கிறார்.

தமிழிலுள்ள பல பின்நவீனத்துவப் படைப்புக்களைப் படிக்கும்போது கிளித்தட்டு, கீச்சு மாச்சுத் தம்பலம், கள்ளன் பொலீஸ் போன்ற சிறுவர் விளையாட்டுக்கள் ஞாபகம் வருவதுண்டு என்றாலும், எழுத்தை இப்படி ஒரு ‘நோய்’க்கூறாக நான் இதுநாள் வரை எண்ணியிருக்கவில்லை. அங்ஙனம் நினையாது மேலும் எழுத்தை நம்பிப்படிப்பது எவ்வளவு பேதமை என்ற புரிதலைப் புகட்டவென எனக்கு ஒரு அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது.

சில மாதங்களின் முன் ரொரொன்ரோ நகரில் வெளியிடப்பட்ட திரு. குரு. அரவிந்தனின் சிறுகதைத் தொகுதியான “என் காதலி ஒரு கண்ணகி” என்ற புத்தகத்தை கடந்தவாரம் படித்தேன். 15 கதைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகள் ஒவ்வொன்றையும் பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவுமே இல்லை. மூர்க்கமான வாழ்க்கை ஒருபுறம் சங்கோசத்துடன் ஒதுங்கிக்கொள்ள, சிறிது நகாசுவேலைகளுடன் இவரது கதைகள் உற்பத்தியாகியிருக்கின்றன. அவ்வளவும் காதலர் தினமான valentain day க்காக சுடச்சுடத் தயாரான கதைகளென ஆசிரியர் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். இக்காதலர் தினத்தைக் கடந்து, வாழ்வுக்கு அர்த்தமூட்டும், அடாவடிபண்ணும் நிஜக்காதலின் தொந்தரவுகள் பற்றி ஆசிரியருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது வாசிக்கும்போது புரியக்கூடியதாக இருந்தது. காதலியை, தாயை மட்டும் கண்ணகியாக போற்ற விரும்பும் புருஷமனதைப் பற்றி பின்னொரு பொழுதில் அலசுவோம்.

கனடியத் தமிழிலக்கியம் புகலிட அனுபவக்கூறுகளை அடக்கிக்கொண்டு கிளம்பிய 15 ஆண்டுகளுக்குள் ஜனரஞ்சகத்திற்கும், காத்திரமான இலக்கியப் படைப்புகட்குமான ஊற்றுக்கால்கள் இறங்கியிருக்கின்றன. இவ்விரு பகுப்புக்கும் அடங்காது புறந்து நிற்பது திரு. குரு. அரவிந்தனின் கதையுலகம்.

இவர் சுவீகாரம் செய்துள்ள படைப்புக்கான அனுபவங்கள் கதையாகும்போது பெரும்பாலும் ஒரு சூத்திரத்திற்குள் இயங்குகின்றன. தமிழ் சினிமாவின் ஆயுள் ஆதாரமான இச் சூட்சும சூத்திரம் மனிச மனங்களின் நுட்பங்கள் தெரியாத பேதமை வாய்ந்தது. பரஸ்பர உதவி பெறுதல், கொடுத்தல் என்ற நிகழ்விலிருந்து குரு. அரவிந்தனின் கதைமாந்தர்களான விடலைகள் காதல் வயப்படுகிறார்கள். தினசரி வாழ்வின் கசடுகள், காயங்கள் பிரயத்தனங்கள், தோல்விகளுள் மனிதர்கள் யாபேரும் இலாபப்பிரக்ஞையற்று பிற மனிதருக்கு உதவவோ, உதவி பெறவோதான் செய்கின்றனர். ஆறாவது அறிவைக் காவி நிற்கும் மனிதவிலங்கின் வாழ்வியல் தாரம் இச்செய்கை. இங்ஙனமான உதவி கொள்தல், கொடுத்தல் என்ற நடைமுறையில் ஒருவன் அல்லது ஒருத்தி காதலுறவேண்டுமாயின் நாளாந்தம் எத்தனை காதல் செய்யவேண்டும்?

ஒரு இலக்கியப் படைப்பு என்பது நிஜவாழ்க்கையுடன் பிணைந்தும், முரண்பட்டும், இயலாமை, போட்டி, முன்னெடுப்பு, தோல்வி என்று சகல பரிமாணங்களையும் அடங்கிய அனுபவங்களின் வடிசலாக பிறப்பெடுத்திருக்கும். ஆகவேதான் அவ்விலக்கியப் படைப்பானது மனிதனை செப்பனிடும் ஊக்கிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அபத்தவாதக் கதைகள்கூட தம்முள் கைப்பின் முட்களை விரிப்பது தயார்நிலைப் படுத்தலுக்கான உபாயமாகவே நான் கொள்கிறேன்.

எனது இளவயதில் புஷ்பா தங்கத்துரையின் மாதநாவல்களைப் படித்தபோது, இவர் சற்று மனம்பேதலித்தவராக இருக்கக்கூடுமோ என நினைத்ததுண்டு. பின்னாளில் புஷ்பா தங்கத்துரையின் சில நல்ல சிறுகதைகளையும், நல்ல நாவலொன்றையும் படிக்க நேர்ந்தபோது; நான் இளமையில் அவரைப்பற்றி தவறாக எண்ணிவிட்டேனோ என அங்கலாய்த்துவிட்டிருப்பினும் பழைய கருத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதேபோல குரு. அரவிந்தனும் ஓரிரு நல்ல சிறுகதைகளை எழுதியிருப்பினும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்ட அவரது கதைகளை மாதிரி எழுதுவதற்கு விடலைப்பருவத்து கனவு கிளர்த்தும் மூளையும், கொஞ்சம் பகட்டு, ஆங்கிலங்கலந்த சொற்களும் போதும். ஆனால் அவை புத்தகமாகத் தொகுக்கப்படக்கூடிய இலக்கியப் பதிவுகளா என்ற கேள்வி என் முன் நிற்கிறது.

“இலக்கியமொழி என்பது பேச்சு மொழியின், ஒரு சமுகத்தின் தொடர்புமொழியின் ஓர் அச்சுப்பதிப்பே. மொழி என்றளவில் பேச்சுமொழியோடு இலக்கியமொழியும் உள்ளடங்கிய ஒன்று என்று நினைவில்கொள்ளவேண்டும்”.(முனைவர்.செ.ரவீந்திரன்) மேற்படி செ.ரவீந்திரனின் கருத்தை அடியொற்றிப் பார்ப்போமானால் குரு. அரவிந்தனிடம் பதிவு பெற்றிருப்பது ஒருவகைத் திரிசங்கு மொழி என்பதை அறிந்துகொள்ளலாம். இலகுவான ஈழத்து வசனநடைக்கும், சென்னைத் தெருக்களில் உலவும் நாகரிக யுவர்களின் மழலைத் தமிழுக்கும் இடையே கிடந்து தொங்கி நிற்கிறது இவரது கதைமொழி. ஒரு மொழியின் வளமும், செழுமையும் அம்மொழியில் விரிந்த படைப்பிலக்கியத்தின் பேறு என்பதற்கு தமிழின் நவீன இலக்கிய மூலவர்களான பாரதி, வ.வே.சு. ஐயர் போன்றவர்களின் மொழிப்புத்தாக்கங்கள் சான்றாக விளங்குகின்றன. புரட்சி, மறுமலர்ச்சி போன்ற இன்று பரவலாகிப்போன வார்த்தைகள் எல்லாம் முறையே பாரதி, வெ.வேசு. வின் கொடைகள்தான்.  குரு.அரவிந்தனும் தம் பங்குக்கு தமிழுக்கு செழுமைசேர்க்கும் முகமாக சில வார்த்தைகளை தம் கதைகளில் பாவித்திருக்கிறார். ‘லேட்டஸ்’, ஸ்போட்டிவ்’ என்பன அவற்றுள் சிலவாம்!

மேற்படி குரு.அரவிந்தனின் நூலிற்கு அளிக்கப்பட்ட அணிந்துரையில் “வாழும் சூழலில் தம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களால் எழுத்தாளர்கள் கவரப்படுவதுண்டு. சிலசமயம் பாதிக்கப்படுவதுமுண்டு. இவைகளே அந்த எழுத்தாளரின் உள்மனதில் உறைந்து எழுத்து வடிவத்தில் பரிணமிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குரு.அரவிந்தனை பாதிப்பேற்படுத்திய சம்பவங்கள்தான் அவரது எழுத்துக்கள் எனில், நான்,  பழம்பாடல் ஒன்றை குரு.அரவிந்தனுக்காகக் சமர்ப்பித்து  சுபமிடுவது சிறப்பு.

“தங்கள் தனம் இருக்கத் தார்வேந்தர் எல்லோரும்
எங்கள் தனத்துக்கே இச்சிப்பர் - எங்கள் தனம்
கச்சிருக்கும் பாலிருக்கும் காமபாணங்கள் பட்டுப்
பிச்சிருக்கும் வேண்டாம் பி(ள்)ளாய்.!”


நன்றி: பதிவுகள் ஆகஸ்ட் 2002


6. நடுகல் - ஜீவன் கந்தையா
 

‘வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன.
எழுதுங்கள்
பேனாமுனையின் உரசலாவது கேட்கட்டும்’.

இப்படி ஒரு கவிதையில் ஆத்மாநாம் ஆதங்கப்படுகிறார். வார்த்தைகள் காற்றிலேறிக் கரைந்துபோய்விடும். சில கிளைகளேறி பரந்துவிடும். எழுதுவது எப்போதாவது ஒரு வாசகனுக்காவது பயன்படத்தான் செய்யும். வாசகன் அந்த எழுத்தின் அபத்தத்தை, அல்லது காத்திரத்தை உணரவும், பகிரவும் கூடும். நான் இந்தப் பக்கங்களை இவ்வகைப் பகிர்தலின் பொருட்டே எழுதத் துணிந்தேன்.
 

நம் பண்டைய வாழ்வியலில் ‘நீத்தார் பெருமை’ என்பது தொன்ம மரபாக தொடர்ந்து வந்திருக்கிறது. கல்வெட்டுப் பாடுதல், நடுகல் வழிபாடு என்பன நீத்தார் நினைவு கொள்ளலின் கூறுகள்தான். இன்றைய அவசரக்கோல வாழ்வில் மனிசமுகங்கள் எந்தவித ஆழ்படிமங்களுமற்று நீரலை வட்டங்களாக அதிர்ந்து மறைந்து விடுகின்றன. இதற்கு யாரையுமே குற்றம் சொல்லமுடியாதபடிக்கு வாழ்வு தினமும் கசடுகளை மனத்துள் ஏற்றுகிறது. ஞாபகங்கள் பின்வாசலால் வடிந்து போய்விடுகின்றன.

நம்மோடு வாழ்ந்து அண்மையில் காலமாகிய ஆளுமையாளரும், சிறந்த சிறுகதையாளருமான குமார்மூர்த்தியின் சிறுகதை ஒன்றை உங்களுடன் பகிர்வதினூடாக அன்னாரின் நினைவை மீட்டுக்கொள்வதும், அவரது படைப்பின் சிறப்பை அடிக்கோடிடுவதும் எனக்கு உகந்த செயலாகப் படுகிறது. ஆகவே என் யாத்ரா மார்க்கத்தின் முதல் கட்டுரை, குமார்மூர்த்தியின் காரியார்த்தமான குறுகிய வாழ்வு; வாசகர் உள்ளங்களில் மீளப் பயணிப்பதற்கான திசைச்சுட்டி அல்லது நடுகல்.

குமார்மூர்த்தியின் “மஞ்சள் குருவி”
 

குமார்மூர்த்தியின் படைப்புப்பயணம் மிகக் குறுகிய காலத்தில் நிறைவு கண்டுவிட்டது. பதினொரு கதைகளைக் கொண்ட முகம்தேடும் மனிதன் தொகுப்பும், வெவ்வேறு சஞ்சிகைகளில் உதிரியாக வந்த சில கதைகளும், ஓரிரு கட்டுரைகளுமே அவரது ஆயுட்கால படைப்பு முயற்சிகளாகும். குமார்மூர்த்தியினது அகத்தில் ஓங்கியிருந்த மனிதத்திற்கான தேடல், இலக்கியப்படைப்புகளாக உருமாறியதைவிட, சமூகசேவையாகவும், நடைமுறைப் போராளியாகவும் அவரை முன்னெடுத்துச் சென்றதற்கான தாரங்கள்தாம் அவரது நண்பர்கள், சகபோராளிகள் மூலம் இன்று எமக்குக் கிடைக்கின்றன. இந்த இரண்டுவகையான தேட்டமும் ஒரே விளைச்சலுக்கான முயற்சிகள்தானே.

முகம்தேடும் மனிதன் தொகுப்பிலுள்ள பதினொரு கதைகளும் மிகுந்த பார்வைத் தீட்சண்யத்துடன், கருத்தமைதி கூடிவந்த படைப்புகள். வாழ்க்கைக்கு சவாலாக நெருக்கும் மரணம், குடும்ப உறவுகள், அரசியலால் எதிராகிப்போகும் அப்பாவிகள், இயற்கை, மற்றும் ஐ£வராசிகளுடனான நேசம் என்பவை கருவாகி உன்னிய இக்கதைகளெல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளியாக மனிதத்தின் தோல்வி பற்றிய கேள்வி உட்கிடையாக ஓடுகிறது. நேசம் நிறைந்த மனமொன்றின் கேள்விகளுடன் மூர்த்தியினது படைப்புலகம் தொழிற்பட்டிருக்கிறது. இந்த நேசத்தின் இன்றைய சரிவுகளை குறிப்புணர்த்தும்போதெல்லாம் அங்கதம் உள்ளுடனாக கதைகளில் ஓடுவது தெரிகிறது. மற்றும், அவரது முக்கியமான கவனிப்பாக ஐ£வராசிகளின் மீதான நேசம் கதைகளில் து¡க்கலாகத் தெரிகின்றது. இவ்வகை நேசம் என்பது இயற்கையுடன் ஒன்றிவாழும் கிராமியமனம் சார்ந்தது. பணக்காரனுக்கு வானம் அழகாகவும், ஏழைக்கு மழையின் ஊற்றாகவும் பார்க்கப்படும்  யதார்த்தத்தில், குமார்மூர்த்தியின் மஞ்சள் குருவி என்ற சிறுகதை ஊடாக, புறத்து¡ண்டுதலில் இருந்து விழித்துக்கொள்ளும் அகமனதின் ஓட்டம், எமது இழந்துபோன வாழ்முறையை, கலாச்சாரத்தை எண்ணி ஏங்குவதை குறிப்புணர்த்துவதே இச்சிறு பத்தியின் நோக்கம்.

“சங்க இலக்கியம் என்ற பெயரில் தெரியவரும் பாடல்களில் அகப்பாடல்கள் என்ற பிரிவு ஒன்றுண்டு. அவை, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று பொருட்களாலும் பிணைந்து அமைந்துள்ளன. உரிப்பொருள் என்பது காதல் ஒழுக்கத்தையும், முதல்,-கருப்பொருட்கள் காலம், இடம், இயற்கை சமூகச் சூழல்களையும் உள்ளடக்கியவை. ஏறத்தாழ இதே அடிப்படையில் இன்றைய கதை இலக்கியங்களில் மனித ஒழுக்கங்களை அகம் என்றும், இவற்றிற்குரிய சூழல்களை புறம் என்றும் குறிப்பிடலாம்.“1

மேற்படி சங்க இலக்கியத்தில் பயின்று வரும் அகம், புறம் என்ற கருத்தாக்கத்தைக் கருவியாகக் கொண்டு நுண்துறைகள் பலவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் ஒரு விமர்சனப்பார்வை நவீன இலக்கியப்படைப்புகளுக்கும் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது. அகப்பாடல்களின் மூன்று பிரிவுகளான முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பவற்றுள் உள்ளார்ந்து இயங்கும் அகம், புறமென்ற உட்பரிமாண, வெளிப்பரிமாணப் பகுதிகளைத் துணையாகக் கொண்டு மஞ்சள் குருவி சிறுகதையைப் பார்க்கலாம். அத்துடன் இனிவருங் காலம் புலம்பெயர் படைப்புகள்தான் தமிழில் கோலோச்சும் என்ற வீரப்பிரகடனங்களின் பின்னேயுள்ள அபத்தத்தை தெளிவாக்கிக் கொள்ளவும் இப்பார்வை உதவக்கூடும்.

ஈழத்திலிருந்த புலம்பெயர்ந்த தலைமுறைகளின் இழந்த சொர்க்கம் பற்றிய தவிப்பானது புறச்சூழல்களின் தாக்கங்களால் கிளர்ந்தெழவைக்கப்பட்டு மண்ணை நினைத்து ஏக்கங்கொள்ளும் கீழைத்தேச கலாச்சாரமனம் சம்மந்தப்பட்டே இயங்கி வருகிறது என்பதுதான் உண்மை. சொந்த மண்ணிலிருந்து, அதன் பண்பாட்டு, கலாச்சார நினைவுகளை சுமந்துகொண்டு புலம்பெயர்ந்த இந்தத் தலைமுறையின் ஓய்வுக்குப் பின்பு இங்கு பிறக்கும் புதிய தலைமுறைகள் இவற்றை அஞ்சலோட்டமாக எடுத்தியங்கும் என்பது மாபெரும் கனவாகும்.

ஆடம்பரமற்ற நடையில், நேரோட்டமாக சொல்லப்பட்ட சிறியதொரு கதை மஞ்சள் குருவி. இதமான காலை நேரத்தை வரவேற்றுக் கொண்டு வேலைக்குப் போகும் ஒருவனின் புறக்கவனங்களுடன் கதை திறக்கிறது. சுவாசமாக புல்தரைகளில் உட்கார்ந்து இளவேனிலை அனுபவிக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டு வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டதே என்ற அங்கலாய்ப்புடன் பஸ்சுக்கு காத்திருந்த அவனின் கால்களுக்கிடையில் நறுக்கென்று மிதிபடுகிறது ஒரு மஞ்சள்குருவியின் உடல். இந்தப் புறத்தாக்கத்திலிருந்து விரிகிறது அவனது அகம்.

வேலை, பஸ்சின் வருகை, இளவேனிலின் அருமை என்ற மனவோட்டத்தை சடுதியாகத் திருப்பி ஈழத்தை நோக்கி ஓடவைக்கிறது, இறந்த மஞ்சள் குருவியின் உடல். கால்கள் இரண்டையும் நீட்டியபடியே மல்லாக்காகக் கிடந்த அந்த மஞ்சள்குருவி அவனது அகத்துள் எத்தனையோ, நிழலுருவங்களை, ஞாபகங்களை மேலுக்குத் தூக்கி வருகின்றது. தான் பிரிந்துவந்த சொந்தக் கிராமத்தில் இளம்பிராயத்தின்போது தினமும் பார்க்கக்கிடைத்த மஞ்சள்குருவியொன்றின் ஞாபகவாசலால் உள்நுழைகின்றன ஊர்மனிதர், ஊரிழப்பு என்பன...

எல்லாவற்றையும் விட அவனுக்குப் பிடித்தது அந்த மஞ்சள்குருவிதான். அவன் இளம்வயதில் பாடசாலைக்குச் செல்லும் பாதையில் சிடிக் சிடிக் என வாலை நிமிண்டி அழகைச் சொரிந்து பாடசாலைக்குத் தாமதமாகச் செல்லவைக்கும். சில பொழுதில் நமசிவாய வாத்தியார் அவனது காதைப் பிடித்து கூட்டிச் செல்வதும் உண்டு. பின்பு ஊரைவிட்டு நீங்கி கனடா வந்தபின் கூட்டில் அடைத்தது போல தவிப்பாக இருந்தது அவனுக்கு. மனிதனாகப் பிறந்திருக்கக் கூடாது என்ற எண்ணமும் மேலோங்குகிறது. ஏனெனில் பறவைகளுக்கோ எல்லைகளற்ற இருப்பு. அத்துடன் சுதந்திரம் எப்போதுமே அவற்றின் இறக்கைகளில் உண்டு.

இந்த அழகான மஞ்சள்குருவிகளும், உற்றார், சுற்றமும் வாசஞ்செய்யும் அவனது அமைதியான ஊரைப்பற்றி திடுக்கிடும் தகவலையும் பின்னர் அறிந்து கொள்கிறான்.

அவனைப்போலவே வன்யுத்தத்தால் ஊரைப் பிரிந்து வந்த நண்பனைச் சந்தித்தபோது, அவன் சொல்கிறான். “ஊரில் வெறும் மண்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்” என்று.

-“குருவியின் உடலை எடுத்து வேலி ஓரத்து பூச்செடிகளுக்குள் பத்திரமாக வைத்துவிட்டு வேலைத்தலத்து இயந்திரங்களுக்குள் சங்கமித்துவிட்டாலும் இயந்திரங்களின் இரைச்சலையும் மீறி ஊரின் சலசலப்பு ஓங்கி ஒலிக்கிறது.” - அவனது அகத்துள்.

-“என்ன அழகானது அவனது ஊர். லமரம், பிள்ளையார் கோயில், சப்பறம், பள்ளிக்கூடம், நெல்வயல்கள், காட்டுமரங்கள், அதற்குள் தொப்பென இறங்கும் கீழ்வானம்.”- இவையெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது என்று நண்பன் சொல்கிறான்.

-“எல்லாமே ஒரு அதிகாலை வேளையில் இரண்டு இளைஞர்கள் இரத்த விளாறாக்கி நாற்சந்தியில் போட்ட இராணுவத்தின் வருகையோடு சோபை இழந்துவிட்டது.” -

-“மாலையில் வீடு திரும்பும் போது மனம் விச்ராந்தியாகி வேறு வாழ்வின் அந்தலைகளை ஆராய்ந்தது மனம். ஆனாலும் ஒளிக்கற்றை போல கண்ணுக்குத் தெரியாத சோகம்.”-

-“சமையலறையில் விறைத்துப்போன கோழியை வெட்டிக் கொண்டிருந்த மனைவியிடம் மஞ்சள் குருவியைப் பற்றிச் சொன்னபோது ஜயோ பாவம் என்கிறாள், தொடர்ந்து விறைத்த கோழியை வெட்டிக்கொண்டே இருக்கிறாள்.”-

ரெலிபோன் கிணுகிணுக்கிறது. ஆயுள்காப்புறுதி மலிவு விலைக்கு இருக்கிறது என்று தேடுகிறார் ஏஜென்ட். இந்த அபத்தத்தை நினைக்க அவனுக்கு சிரிப்பு வருகிறது. இன்றைய சுமையை இறக்கிவைக்க ஒரு சுமைதாங்கி இல்லாத அந்தலை வாழ்வில் நாளைக்கான காப்புறுதிக்கு வலைவீசும் மனிதர்கள் அவனது கவலைகளைத் தாங்கப்போவதில்லை, பியர் நுரையின் குளிர்ச்சி தற்காலிகமா தாங்குகிறது...!

மதுவின் போதையுடன் அவனது மனம் லேசாகிப்போகிறது. மஞ்சள் குருவியின் நினைவு பியர் நுரைக்குள் மறைந்துபோக அடுத்த நாள் வேலை ஓட்டத்தை எண்ணி மனம் படபடப்பு கொள்கிறது.

இவ்வாறாக மஞ்சள்குருவியின் கதை முடிகிறது. எனினும் வாசகர்களிடம் தொற்ற வைக்கப்பட்டுள்ள இந்தக் குறுகிய வாழ்வின் அபத்தமும், நேசமும், முன்னெடுப்பும் பற்றிய தேடல் விரிந்து கொண்டே செல்கிறது. குமார்மூர்த்தியின் பல சிறுகதைகளை இந்த அகம்-புறமென்ற பார்வை வழியாக நோக்கி வாசகப்பரப்பை விரித்துச் செல்லலாம். அகம்-புறமென்ற எண்ணத்துணிவுடன் உண்மையில் ஒரு படைப்பாளன் இயங்குவதில்லை. அவனது படைப்பூக்கம் சடுதியில் கிளம்பி, வாழ்வின் அனுபவ சாரங்களை இழுத்துவந்து எழுத்தாக கோர்த்து வைப்பது. வாசகர்களாகிய நாம்தான் கதைமீது செலுத்தும் அகம்-புறமென்ற கருவி வழியான பார்வை, படைப்பாளனின் நெறியைக் கண்டுகொள்ள வாய்ப்பாகும். மேலோட்டமான ஆரம்ப முயற்சியாகவே நான் இஇந்தச் சிறுகட்டுரையை கோடு காட்டியிருக்கிறேன். வேறு யாராவது கூரிய விமர்சகர்கள் மேற்படி அகம்-புறமென்ற பார்வையைக் கொண்டு புலம்பெயர் படைப்புக்களை ஆராய்வார்கள் எனில் மேலும் பல வாசல்கள் திறக்கும்.

பயன்படுத்திய நூல்கள்:

1. ராஜ் கெளதமன் - எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம் - பக் 119.
2. குமார் மூர்த்தி - முகம் தேடும் மனிதன்
***
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.    

நன்றி: பதிவுகள், ஆகஸ்ட் 2002


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here