'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் செப்டெம்பர் 2001 இதழ் 21 -
-ஒன்று-
பாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர்ந்தது. சூரியன் மறையப்போகும் நேரம். அலைகளின் இரைச்சலை மீறிக் கொண்டு அசுரர்களின் இரைச்சல் வானில் மோதியது. ஒருபுறம் மார்பு பிளந்த மகாபலியின் அலறல். இன்னொருபுறம் நமுசியும் சம்பரனும் இதயத்தில் தைத்த வேல்களைப் பிடுங்கும்போது எழுப்பிய மரணக் கூச்சல். மற்றொரு புறத்தில் வேரற்ற மரம் போல விழுந்த அயோமுகனின் சத்தம். அச்சத்தத்தில் நெஞ்சம் துடித்தது. தன்னைச் சுற்றிலும் அசுரர்கள் அபயக் குரல் எழுப்பியபடி ஓடுவதைக் கண்டன ராகுவின் கண்கள். உடல் இரண்டு துண்டுகளாக அறுபட்ட நிலையில் முன்னால் வேகவேகமாக மாறிக் கொண்டிருந்த காட்சிகளைத் துயரத்துடன் நோக்கினான் அவன். கடலின் செந்நிறம் ஏறிக் கொண்டே இருந்தது. ரத்தம் கலந்த கடற்பரப்பில் மரணதேவதையின் முகம் தெரிந்தது. ஒரு பெரிய மிருகத்தின் முகம் போல இருந்தது அவள் முகம். அந்த வெறி. அந்தச் சிவப்பு. அவள் கோரைப் பற்கள். உயிரற்ற உடல்களை அள்ளி எடுக்க நீண்டன அவள் கைகள். அக்கை கடலையே துழாவிக் கரையைத் தொட்டது. யாரோ தாக்கியது போல உடல் அதிர்ந்தது. "ஐயோ" என்றான்.
விழிப்பு வந்துவிட்டது. பீதியில் இதயம் துடிக்கச் சுற்றியும் இருந்த கூடாரங்களைப் பார்த்தான் ராகு. உண்ணாநோன்பினால் சோர்ந்திருந்தாலும் மோகினியின் அங்க அழகுகளைச் சுவையோடு பேசிக் கொண்டிருக்கும் சக வீரர்களின் குரல்கள் கேட்டன. அனைவரும் கொல்லப்படுவதாக எப்படி நினைத்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்தக் கனவின் காட்சி மீண்டும் விரிந்தது. மெல்ல எழுந்து கூடாரத்தைவிட்டு வெளியே வந்தான். வெயில் ஏறிய வானம் கண்களைக் கூசவைத்தது. அருகில் இரைச்சலிடும் அலைகளையே வெகுநேரம் பார்த்தான். அவனுக்குத் தன் மனத்தில் கவிந்திருக்கும் குழப்பம் பற்றிக் கவலை உண்டானது. "அபசகுனம்" என்று முணுமுணுத்துக் கொண்டான். எழுந்து கைகளை வானை நோக்கி உதறினான். அவசரமாகப் பணியாள் ஓடிவந்து அருகில் நின்றான். "துணைக்கு வரவேண்டுமா அரசே?" என்றான். ராகுவின் பார்வை அவன் தோள்களில் பட்டு மீண்டது. அவன் காட்டும் பணிவு நடிப்பா உண்மையா புரிந்துகொள்ள முயற்சி செய்து தோற்றான். புன்னகையோடு தலையசைத்தபடி தொடர்ந்து தனியாக நடக்கத் தொடங்கினான்.
கரை நெருங்கியது. கடலின் பெரிய பெரிய அலைகள் கரையை விழுங்க போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு அணியாய் வருவது போல இருந்தது. முதலில் வருவது ரதப்படை. அப்புறம் வருவது யானைப்படை. அதற்கப்புறம் குதிரைப்படை. தொடர்ந்து வருவது காலாட்படை. அப்படி எண்ணியதைத் தொடர்ந்து ஒவ்வொரு அலை எழுந்து வரும்போதும் அதற்குரிய காலடி ஓசையைப் பொருத்திப் பார்த்தான். என்ன ஆச்சரியம். அலையின் ஓசையும் படைகளின் ஓசையும் சரியாகப் பொருந்தின. எதனாலும் வெல்லப்பட முடியாத ஒன்றாக நீண்டிருந்தது கரை. கரைநெடுக வானின் வடுபோல அலையின் சுவடுகள். அங்கங்கே பாறைகள் காணப்பட்டன. பாறைகளுடன் ஆக்ரோஷத்துடன் மோதின அலைகள். அப்பாறைகளின் ஆகிருதியைக் குலைத்து நசுக்கிக் கூழாக்கிவிடத் துடிப்பதைப் போலிருந்தன அலைகள். அலைகளுக்கும் பாறைகளுக்கும் காலகாலமாக அந்த யுத்தம் தொடரந்து நடப்பது போலக் காணப்பட்டது.
கரையையொட்டி ஒரு சிறு குன்றைக் கண்டான். குன்று முழுக்கக் கரிய பாறைக் கூட்டங்கள் யானைகளைப் போலப் பரவிக்கிடந்தன. அங்கங்கே செடிகள் நின்றிருந்தன. அஸ்தமனப்பொழுதில் அவற்றின் இலைகள் வாடிச் சுருங்கிக் கவிழ்ந்திருந்தன. செடிகளின் உடல்முழுதும் ஒருவித ·சோர்வு தென்பட்டது. அவை விடும் பெ முச்சு போல அவற்றின் வழியாக வீசிய காற்று இருந்தது. அங்கங்கே கிளைகளில் சிறுசிறு குருவிகள் அமர்ந்திருந்தன. காலடியோசையில் அதிர்ந் து அவை கிறீச்சிட்டு மேலெழும்பித் தாவின. அவற்றின் தவிப்பை உணர்ந்தது போல அந்தத் திசையிலிருந்து விலகி இன்னொரு கிளைத்திசையில் நடந்தான் ராகு. போதுமான தொலைவு நடந்த பிறகும் கூட குருவிகளின் கிறீச்சிடல் நிற்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மொட்டைப் பாறைகளுக்கும் கிளைகளுக்கும் இடையே அவை தவித்து அலைந்தன. அப்போதுதான் பாறையின் இடுக்கில் ஒரு பாம்பும் கீரியும் ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதைக் காண நேர்ந்தது. இரண்டு பிராணிகளின் கண்களிலும் கொலைவெறி மின்னியது. அவற்றின் வெறிக் பச்சலைக் கேட்டு குருவிகள் மிரண்டன. ஒன்றை ஒன்று கடித்துக் குதறத் துடிக்கும் ஆவேசம் கொண்ட அப்பிராணிகளைப் பார்க்கும்போது ஒரே சமயம் வெறுப்பும் சிரிப்பும் ஏற்பட்டது. உடனடியாக அந்தச் சிறுயுத்தம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் யுத்தத்தை நினைவூட்டியது. உடனடியாக அந்த இடத்திலிருந்து திரும்பிவிட வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. எனினும் அக்காட்சியிலிருந்து அவனால் தன் கண்களை மீட்க முடியவில்லை. கீரி தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பித் தருணம் பார்த்து வசமான இடத்தில் பாம்பைக் கவ்வ முயற்சி செய்தது. உடலை வளைத்தும் நெளித்தும் நீட்டியும் பாம்பு அதன் பிடியில் அகப்பட்டுவிடாமல் தப்பித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் அதன் உடலில் அங்கங்கே கீறலின் கடிகள். ரத்தக் கசிவுகள். அக்காட்சி அவனுக்குள் ஓர் அமைதியின்மையை எழுப்பியது. சலித்து வந்த வழியே திரும்பினான். சூரியன் வேகவேகமாக மேற்கு நோக்கிச் சரிந்தபடி இருந்தது. பகல் வடிந்த வானம் எடுக்க மறந்த துணிபோல தனிமையில் கிடந்தது. அலைகளின் ஆக்ரோஷம் சற்றும் தணியாதிருந்தது.
ஏதோ ஒரு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது. மார்பை அது தீண்டியதும் உடலில் உருவான சிலிர்ப்பை உணர்ந்தான் ராகு. அவன் மனம் அதில் பெரும் நிம்மதியைக் கண்டது. அந்தச் சிறுநேர நிம்மதியில் அவன் மனப்பாரம் பெருமளிவில் குறைந்தது. கடந்த இரவிலிருந்து அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்த குழப்பங்களிலிருந்து கணநேரத்துக்கு விடுதலை அடைந்தான். அவன் அசுரபுத்திரன். வீரன். ஆக்ரோஷத்துடன் எதிரிகளுடன் மோதி வீழ்த்துபவன். இந்த அகிலத்தில் தேவர்களுக்கு இணையாகத் தம் குலம் வாழ்வதற்கான ஜீவித நியாயத்தை நிறுவிக் காட்டுவதில் வேகமும் ஆற்றலும் கொண்டாவன். அப்படிச் சொல்லிச் சொல்லித்தான் காலம் காலமாக வளர்க்கப்பட்டிருந்தான் அவன். அக்கடமையிலிருந்து அவனால் ஒருபோதும் மீள முடியாது. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பைத் தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒருபுறமுமாகப் பிடித்துக் கடைந்து கொண்டிருந்த தருணத்தில் கூட அந்த எண்ணம் அவன் மனத்தின் ஆழத்தில் மிதந்தபடியே இருந்தது. காலம் முழுக்கத் தம் குலத்தின் ஜீவித நியாயங்களை மறுத்துவந்த தேவர்களின் ஒற்றுமை வார்த்தைகள் உள்ளார்ந்த நட்பா, நாடகமா என்ற சந்தேகம் கிளைவிரித்தபடி இருந்தது. தன்வந்திரியிடமிருந்து அமுத கலசத்தை மகாபலியும் மற்றவர்களும் பிடுங்கிக் கொண்ட சமயத்தில்தான் அச்சந்தேகம் எல்லார் மனங்களிலும் தங்கியிருந்ததை அவனால் உணர முடிந்தது. பல ஜென்மங்களாகத் தொடரும் மோதல் மறுபடியும் தொடங்கிவிடும் போல இருந்த நிலையில்தான் அந்த இளமபெண் வெளிப்பட்டாள். தன் பெயர் மோகினி என்று சொல்லிக் கொண்டாள். அவள் யார், எங்கிருந்து வந்தாள், என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்குலம் கூட நகர விடாமல் ஆளைக்கட்டி நிறுத்திவிட்டது அந்தக் கவர்ச்சியான புன்னகை. இனிமையான குரல். ஒயிலான நடை. "அழகியே.. நீ பொது ஆள். உன்னைப் பார்த்தால் மனத்தில் நம்பிக்கை துளிர்க்கிறது. இந்த அமுதத்தைச் சமமாக எங்களுக்குப் பிரித்தளிப்பாயா?" என்று அசுரர்களே அமுதக் கலசத்தை அவளிடம் நீட்டினார்கள். மற்ற சமயங்களில் செய்வது போல மகாபலியோ நமுசோ பிற அசுரர்களைக் கூட்டிச் செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. கருத்துகள் பரிமாறப்படவில்லை. ஒரே நொடியில் முடிவெடுத்து கலசத்தை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டாள் மகாபலி. அந்தத் தருணத்தில் "ஐயோ..சக்கரவர்த்தி, என்ன காரியம் செய்கிறீர்கள்" என்று பதறி ஓடிப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. "அசுரர்களே அந்த மோகினியை நம்பாதீர்கள். இதில் ஏதோ சதி இருப்பது போலத் தெரிகிறது" என்று அவளைத் தடுக்க முடியவில்லை. "யாரென்றே தெரியாத பெண்ணை நம்பினால் மோசம் போய்விடுவோம்" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய இயலவில்லை. எல்லாம் கூடிவருகிற வேளையில் என்ன செயல் இது என்று மகாபலியின் தோளை உலுக்கி நாலு வார்த்தைகள் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்டிருந்தாலாவது ஆசுவாசம் கிடைத்திருக்கும் . அவனைத் தவிர அசுர கூட்டத்தின் கண்கள் அந்தப் பெண்ணின் மீதிருந்தது. தொடை வரை நீண்ட அவள் கூந்தல் ஆசையைத் து¡ண்டும் அவள் கண்கள். தங்கத் தகடென மின்னும் கன்னம். கவர்ச்சியான தோள் வளைவுகள். செழிப்பான மார்பு. குழைவான இடை. அவர்கள் பார்வைகள் அவள் மீது அங்கம் அங்கமாக மொய்க்கத் தொடங்கியதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அந்தத் தருணத்தில் அவர்கள் அனைவரின் மீதும் கடுமையான ஆத்திரமும் வெறுப்பும் பொங்கின. "என்ன குலம் இது? ஏமாந்து அழிவதே இதன் தலையெழுத்தா?ஏ என்று கசப்புடன் நொந்து கொண்டான். அவர்களுடைய முரட்டு மோகம் முதல் முறையாக அவனுடைய கோபத்தைத் து¡ண்டியது. அந்தப் பெண்களின் முன் அவர்கள் நெளிவதையும் குழைவதையும் பல்லிளித்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று பேச முற்பட்டதையும் காண எரிச்சல் பொங்கியது. ஏஆண் சிங்கங்களே, என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. அமர நிலை எய்ய வைக்கும் அமுதத்தை உண்ணும் முன்பு நாளை ஒரு நாள் உண்ணாநோன்பிருப்போம். நாளை மறுநாள் அதிகாலையில் பங்கிட்டுக் கொள்வோம்" அவளது இனிய குரலுக்கும் குழைவான சொற்களுக்கும் அசுரர்கள் கூட்டம் அடிபணிந்துவிட்டது.
மகாபலியை நெருங்கிச் சந்தேகத்தை முன்வைக்கவே இயலவில்லை. மோகினியின் விழிகளிலிருந்து புறப்பட்ட கணைகளை உடல்முழுக்கச் சுமந்து கொண்டிருப்பது போன்ற கனவில் மிதந்து கொண்டிருந்தார் அவர். சக்கரவர்த்தியைவிட ஒருபடி மேலாக மற்றவர்கள் உருகிக் கிடந்தார்கள். இதையெல்லாம் கண்ணால் பார்த்து சங்கடப்படவேண்டியதாகிவிட்டதே என்று குமைவதைத் தவிர வேறு வழியில்லை. தேவர் குலத்தில் யுத்தத்தை நேருக்குநேர் எதிர்த்துக் கொன்றழித்தால்தான் தன் மனம் ஆறுமோ என்னமோ என்று தோன்றியது. பெரும்கூட்டமாக வந்து , வினயத்துடன் வணங்கி, ஏநாமெல்லாம் அண்ணன் தம்பிகள் போலத்தானே, நாம் ஒன்று கூடி செய்கிற காரியத்தில் வெற்றி கிடைக்காமல் போகுமோஏ என்று இனிப்பான வார்த்தைகளை உதிர்த்த போது அவன் மனத்தில் முதலில் எழுந்தது இந்தச் சந்தேகம்தான். அந்தச் சம்தேகக் கோட்டின் ஈரம் இன்னும் அழியாமல் இருப்பதாகத் தோன்றியது. அதற்கப்புறம் ஓர் இரவு கூட நிம்மதியாய்த் து¡ங்க இயலவில்லை. சாவு குறிக்கப்பட்டுவிட்ட கைதியாக மனம் தத்தளித்தபடி இருந்தது. எல்லாம் முடிந்து அமுத கலசம் கையில் கிடைத்த தருணத்தில் அந்தக் கள்ளி வந்து சேர்ந்தாள்.
எப்படியெல்லாம் தளுக்கினாள் அந்தக் கள்ளி. உதடுகளை அவள் சுழித்த சுழிப்பு. கண்களில் அவள் தேக்கியிருந்த கவர்ச்சி. வார்த்தைக்கு வார்த்தை புன்சிரிப்புதான். மெலிந்த கைகளை நீட்டித் தோள்களில் தீண்டினாள். அந்த இன்பத்தில் சிலிர்த்தார்கள் அசுரர்கள். பெண்ணின் மென்மையை உணர்ந்தறியாத அவர்கள் உடலும் மனமும் கிளர்ச்சியுற்றுப் பைத்தியம் பிடித்ததைப் போல மாறிவிட்டார்கள். அவளை அடையும் உத்வேகத்தில் அவள் இடும் கட்டளைகளையோ விதிமுறைகளையோ காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவர்கள் எதிர்பார்த்தெல்லாம் அதிக நேரம் அவளுடன் செலவழிக்க வேண்டும் என்பதுதான். அவள் தோள் தொட்டுப் பேச வேண்டும். கன்னத்தை ஒருமுறை தீண்டிப் பார்க்க வேண்டும். அவளுடன் கை கோர்த்துக் கொண்டு நடக்க வேண்டும். அவளைத் தோளில் சுமந்து கொள்ள வேண்டும். பஞ்சு போன்ற அவள் பாதங்களில் முத்தம் பதிக்க வேண்டும். மழையில் அவளுடன் நனைய வேண்டும். இவைதாம் அவர்கள் கனவுகளாக இருந்தன. இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றுகூட இல்லை. இக்கனவுகளை அனுமதிக்கிற விதமாக அவள் பழகியதே அவர்களுக்கு அமுதம் குடித்ததைப் போல இருந்தது. "யோசித்துப் பாருங்கள் ஒப்புக் கொள்ளும் முன்பு" என்று அவள் சொன்னது கூட செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.
எதுவுமே பிடிக்கவில்லை. அமுதமும் வேண்டாம், விஷமும் வெண்டாம் என்று அலுப்பாகிவிட்டது. திரும்பவும் தன் இடம் நோக்கி சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஏமற்றவர்கள் அனைவருமே வந்தால் வரட்டும் , இருந்து அந்த மோகினியை நம்பி எக்கேடாவது கெட்டுப் போகட்டும்ஏ என விட்டுச் செல்ல விழைந்தது மனம். மறுகணமே "இது என்ன சுயநலம், அழிவதென்றால் அனைவருமே சேர்ந்து அழிவோம், வாழ்வென்றாலும் அனைவருமே சேர்ந்து வாழ்வோம்" என்று எண்ணம் எழுந்தது. ஒரு கண நேரத்தில் உதித்த சுயநலச் சிந்தனையை எண்ணி வெட்கம் ஏற்பட்டது.
கரையோரமாகவே வெகு து¡ரம் வந்ததை உணர்ந்தான் ராகு. திரும்பிப் பார்த்தான். தம் கூடாரங்கள் தொலைவில் புள்ளியாய்த் தெரிந்தன. திரும்பிக் கடலைப் பார்த்தான். கடலின் விளிம்பில் செம்மை அடர்த்தியாய்ப் படர்ந்திருந்தது. சூரியன் தடுக்கி விழும் குழந்தை போல மேகத்தின் விளிம்புக்கு வந்திருந்தான். திடுமெனத் தன் பகல்கனவை அவன் நினைத்துக் கொண்டான். அது மரணதேவதையின் முகத்தையும் அம்முகம் மோகினியின் முகத்தையும் கொண்டு வந்து நிறுத்தியது. ராகுவின் உடல் பதற்றத்தில் நடுங்கியது.
-இரண்டு-
கடற்காற்று உள்ளே நுழையாவண்ணம் கூடாரம் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததெனினும் குளிரடித்தது. குளிர் படிந்து படிந்து மஞ்சத்தில் ஓர் ஈரத்தன்மை ஏறி விட்டிருந்தது. கதகதப்புக்காக கொஞ்சமாக மது அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உண்ணாநோன்பின் நாளில் மதுவை நினைப்பது குற்ற உணர்வைத் தந்தது. கவனத்தை உடனடியாக வேறுபக்கம் திருப்பினான் ராகு. அடுத்தடுத்த கூடாரங்களிலிருந்து பேச்சுக் குரல்கள் மிதந்து வந்தன. கடந்த இரவு முதல் அவர்கள் பேசிக் கொண்டே இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. அக்குரல்கள் அனைத்தையும் இணைத்து ஒர் ஒவியத்தைத் தீட்டினால் அந்த நங்கையைத் தீட்டிவிடுவது சுலபம். ஒலி அலைகளை இணைத்து ஓர் ஓவியத்தைக் காற்றுவெளியில் தீட்டித்தான் அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்களோ என்று தோன்றியது. நாலைந்து கண நேர சந்திப்பில் அந்த நங்கையைப் பற்றி இந்த அளவு பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டான். மஞ்சத்தில் அமர்ந்தவனீன் காதில் அக்குரல்கள் வந்து விழுந்தபடி இருந்தன. மனம் ஏதோ ஒரு குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததால் அந்தக் குரல்கள், அசுரர்கள், அந்த இரவு, அந்த நங்கை எல்லாவற்றின் மீதும் என்னவென்று சொல்லவியலாத கடுகடுப்பும் எரிச்சலும் பொங்கின. தன் மன அமைதியைக் குலைத்துவிட்ட அந்த நங்கையை மனசாரச் சபித்தான்.
கூடாரத்தின் இணைப்பின் இடைவெளியில் தலையை நுழைத்து யாரோ பார்ப்பது போல இருந்தது. அயல் கண்கள் தன்னை மொய்பப்தை அவன் சட்டென உணர்ந்து அகாண்டான். அந்த முகம் யாருடையது என்று உள்வாங்கிக் கொள்வதற்குள் அது மறைந்துவிட்டது. முதலில் வேலைக்காரனாக இருக்குமோ என்று தோன்றினாலும் மறுகணமே அவனுக்கு அந்த அளவு தைரியமிருக்காது என்கிற நம்பிக்கையில் அந்த எண்ணத்தைத் தள்ளினான். மீசை அமைப்பைக் கொண்டு யோசித்துப் பார்த்தால் தளபதி காலநாபனோ அல்லது அயக்ரீவனோவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்கள்தாம் என்று உறுதியாக மனம் நம்பத் தொடங்கியதும் எரிச்சல் ஏற்பட்டது. உளவறியும் அளவுக்குத் தன் மீது இவர்களுக்கு என்னவிதமான சந்தேகம் தோன்றியது என்றுகோபம் வந்தது. உடனே இந்த விஷயத்தைச் சக்கரவர்த்தியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று விழைந்தது அவன் மனம் . ஒரு கணம்தான். மறுகணமே இந்த உளவு வேளை அவர் வேலையாகவே இருந்துவிட்டால் என்ன செய்வது என்றொரு மாற்று எண்ணம் எழுந்ததும் அவன் வேகம் வடிந்து போனது. அவர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு எங்காவது போய் விட வேண்டும் என்று யோசித்தான். வெளியே கடுங்குளிர். இருட்டு. கடற்கரை தனிமையில் விரிந்திருந்தது. எங்கும் போகப் பிடிக்கவில்லை. ஏதோ ஒருவித அச்சம்தான் அவன் மனத்தின் அடியில் தேங்கியிருந்தது. அந்த அச்சத்தை உணர்ந்துவிடாதபடி எரிச்சலிலலும் ஆத்திரத்திலும் மனம் மாறிமாறித் தஞ்சமடைந்தது. எல்லாருக்காகவும் யோசிக்கிற பொறுப்பை நீ எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்ன சம்பரனின் துடுக்கான வார்த்தைகள் அவனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் சொல்லப்பட்டதாகத் தோன்றியது. அவர்கள் எல்லாரும் உயிர் துறந்து தான்மட்டும் தப்பித்து உயிர்த்திருக்கிற நிலை ஏற்பட்டால் உயிர்க்காற்று பிரியும் தருணத்திலாவது தான் எடுத்துரைத்த உண்மையை உணர்ந்து அவர்கள் வருத்தம் கொள்வார்களோ என்றொரு கேள்வி எழுந்தது. அதே சமயத்தில் அப்படி ஓர் எண்ணம் எழ இடம் தந்த மனத்தை நொந்து கொண்டான். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் சாகக் கூடாது. அவர்கள் பெரியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். வாழ்வின் மேடுபள்ளங்களில் ஆயிரம் அடிபட்டவர்ள். அவர்கள் அனைவரும் உயிர்த்திருக்கத் தன் உயிர் மட்டும் பிரிய, அப்பிரிவின் சமயத்தில் உண்மையின் வெளிச்சம் அவர்களின் கண்களில் படுமானால் அதுதான் உயர்ந்ததாக இருக்கும் என்று நினைத்தான். அவர்களுக்காகத் தானாக முன்வந்து உயிர்துறக்கும் வீரனாகத் தன்னைக் கற்பனை செய்து பார்த்தான். அக்கற்பனை மரணம் காவிய நயம் கொணடதாகவும் மனத்துக்கு இதமாகவும் இருந்தது.
அந்த நங்கையை நினைத்துப் பார்த்தான் ராகு. அவள் குழைந்து பேசியதில் ஏதோ செயற்கைத்தனத்தை மனம் உணர்ந்ததால் அக்கணத்தில் அவள் உருவத்தைச் சரியாகப் பதித்துக் கொள்ளவில்லை அவன். அவள் உதடுகள் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வந்தன. பூவின் இதழை நினைவூட்டும் செழிப்பான உதடுகளில் ஈரம் மின்னியது. மூக்குக்குக் கீழே சின்ன மொக்குப் போன்ற குழியைத் தொடர்ந்து பழச்சுளையொன்றைக் கிள்ளி ஒட்டியது போன்ற பளபளப்பான உதடுகள். அவை அச்சத்தையும் ஆசையையும் து¡ண்டுவதாக இருந்தன. நொடிக்கொரு முறை அவ்வுதடுகள் பிரிவதும் கூடுவதும் சுழிப்பதும் உள்ளொடுங்குவதுமாக மாறிய கோலத்தைப் பார்த்தன. அப்போது அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அந்த இரவில் அந்த உதடுகளின் கோலம் நினைவிலெழுந்ததும் இதயம் பதறுவதை உணர்ந்தான். உதடுகள், பிறகு உதட்டுக்குத் தகுந்த கன்னம். கன்னத்துக்குத் தகுந்த முகம். முகத்துக்கு தகுந்த உடல் என ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அந்த மனச்சித்திரத்தை எழுதிக் கொண்டே போனான். அவன் உடலில் பரபரப்பு கூடிக் கொண்டே போனது. முழு உருவமும் மனசிலெழுந்த போது அவன் உத்வேகம் பல மடங்காகப் பெருகியது. அதே நங்கைதான் அவ்வுருவம். புனைவு அல்ல. துல்லியமாக அதே நங்கைதான். அவள் உடலின் ஒவ்வொரு அசைவையும் மனசின் இன்னொரு கண் தன் கட்டளையை எதிர்பாரக் காமலேயே பதித்து வைத்திருந்ததை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. வெறும் உதடுகளை மட்டுமே தான் பார்த்ததாக நினைத்தது எவ்வளவு நடிப்பு என்று நினைத்தபோது கூச்சமாக இருந்தது. அருகில் சகோதர அசுரர்களின் பாடல் ஒலி கேட்டது. பெண்ணைப் பற்றிய பாடல்தான். அந்த வரிகளின் தாளத்துக்குத் தகுந்தபடி யாரோ யாழை இசைத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த இளநங்கை அருகில்தான் இருக்கிறாளாம். கண்களை அசைக்கிறாளாம். ஒவ்வொரு அசைவும் ஒரு கவிதையாம். காதல் களிப்பேறிக் கட்டித் தழுவ கைகளை நீட்டும்போது அவள் மறைந்துவிடுகிறாளாம். கண்டதெல்லாம் கனவா, நனவா புரியாமல் குழப்பம் ஏற்படுகிறதாம். அப்பாடலின் வரிகள் நெகிழ்ந்து நெகிழ்ந்து முத்தாய்ப்பு கொண்டன. உடனே யாழ் அதிர இன்னெருவன் குரலெடுத்துப் பாடத் தொடங்கிவிட்டான். முழுநிலவு போன்று அவள் முகம் ஒளிர எதிரே நிற்கிறாளாம். அந்த நங்கை. அவள் அமுத வாய் திறந்து ஏதோ ஒரு சொல் பிறக்கிறது. அச்சொல் ஒளியாகவும் இசையாகவும் மாறுகிறது. ஒளிபட்டு உலகம் மிளிர்கிறது. இசை காற்றாக மாறி எங்கும் அலையலையாய்ப் பரவி நிறைகிறது. அந்த ஒளியும் இசையும் கூடி வானை நோக்கி நகர்கின்றன. மேகத்தில் அமர்ந்து இளைப்பாறுகின்றன. அங்கிருந்து அவை உதிரும்போது அமுத தாரைகளாகின்றன. அம்மழையின் தீண்டுதலில் உடல் ஆனந்தம் ஆனந்தம் என்று பாடுகிறது. இப்படிச் சென்று முடிந்தது இன்னொரு பாடல். முடிவேயற்று அவர்கள் பாடல்களை இசைத்தபடியே இருந்தார்கள்.
விளக்கில் எண்ணெய் வற்றி அணைந்து விட்டது. படபடவென்று அத்திரி துடிக்கிற தருணத்தில்தான் அவன் அதைக் கவனித்தான். அடுத்த கணமே அது அணைந்துபோனது. செம்புள்ளியாய் அத்திரியின் நுனி சிறிது நேரம் ஒளிர்ந்து அடங்கியது. கூடாரம் முழுக்கப் புகையின் மணம் சுழன்று சுழன்று வந்தது. பணியாளை அழைக்கலாமா என்ற யோசனையை உடனடியாகத் தவிர்த்துவிட்டு இருட்டையே வெறித்தபடி இருந்தான். சில கணங்களுக்குப் பிறகு ஒவ்வொன்றும் தெளிவாகத் தெரிந்தது. மஞ்சம். விளக்கு. குடம். குடுவை. துணிகள். காலணி.
மறுபடியும் பாடலும் இசையும் ஒலிக்கத் தொடங்கிய போது மீட்டப்பட்ட யாழ் நரம்பு போல மனம் துடித்தது. உடல் முழுக்க அந்த இசை நிரம்பித் தளம்புவது போல இருந்தது. ரத்தத்தில் ஒருவித சூடு பரவியது. மஞ்சத்தின் விளிம்பில் துகில் அலைய, கூந்தலில் சூட்டிய பூ மணக்க ஒரு இளம்பெண்¢ன் உருவம் தெரிந்தது. அந்த உருவம் மெல்ல மெல்ல மோகினியாக மாறியபோது துணுக்குற்றான். தன் எண்ணம் நகரும் திசையை எண்ணிக் குற்ற உணர்வு கொண்டான். யார் அவளைப் பற்றி நினைத்துக் கொண் ருந்தாலும் தான் மட்டும் அவளை நினைத்துக் கூடப் பாரக் கக் கூடாது என்று நினைத்தான். பிறகு அமைதி ஏற்பட்டது.
கூடாரத்தைத் தாண்டி யாராரோ நடந்து செல்லும் காலடி ஓசை கேட்டது. அவர்களின் குரல்கள் தெளிவாகக் கேட்டன. திரும்பிப் பார்க்க நினைத்தான். எனினும் எழுந்திருக்கவில்லை. மனத்துக்கும் உடலுக்குமான கட்டளைத் தொடர் அறுபட்டது போல இருந்தது. கண்களைத் திருப்பக் கூட முடியவில்லை. அசைவில்லாமல் படுத்திருந்தான். மனம் இறுக்கமாக இருந்தது. கண்களின் முன் மறுபடியும் அவள் முகம் வந்து நின்றது. ஆனந்தம் மின்னிக் கொண்டிருந்தது அவள் கண்களில். அவள் தன் மார்போடு அமுத கலசத்தை இறுக்கி அணைத்தபடி இருந்தாள். அவள் தோள்கள் வெயில்பட்டு மினுமினுத்தன. கூந்தல் காற்றில் அசைந்தது. கன்னத்தில் செம்மை ஏறியது. நறுக்கிய பவழ உதடுகளில் ஈரம் ஒளிர்ந்தது. கலசத்தின் அமுதத்தையெலக்லாம் தனித்தே குடித்துவிட்டவள் போல. அவன் மனம் அதிர்ந்தது. பறிகொடுத்த இழப்புணர்வில் வேகம் ஏறியது. "அடி கள்ளி, வேஷக்காரியே நான் நினைத்தது நடந்துவிட்டதே. எங்களை என்னவென்ற நினைத்தாய்? ஏமாந்தவரகள் என்றா? அறிவற்ற பேதைகள் என்றா? நீ அருந்திவிட்டதைக் கண்டு தலைவிதியை நொந்தவண்ணம் வெறும்கையோடு திரும்பிச் சென்று விடுவோம் என்று எண்ணிக் கொண்டாயா?" ஓடிச்சென்று அவளை இழுத்து அறைந்து உலுக்குவது போலக் கற்பனை செய்தான். வெறுப்பாக இருந்தது. சந்தர்ப்பங்கள் சார்ந்த சம்பவங்களுக்குக் கண்ணும் காதும் வைத்து ஊதிப் பெருக்கி நிம்மதியை இழந்து தவிக்கிறோமோ என்று ஆற்றாமையால் தலையில் அடித்துக் கொண்டான்.
"ராகு"
கனவில் கேட்கும் குரலோ என்று ஒரு கணம் பொறுமையாய் இருந்தான்.
"ராகு"
மறுகணம் சரியாகக் காதில் விழுந்தது அக்குரல். உடனே மஞ்சத்தைவிட்டு எழுந்தான். பரபரப்போடு கூடாரத்தின் வாசலைப் பிரித்துத் திறந்தான். மகாபலி. சக்கரவர்த்தி
"இருளில் என்ன செய்கிறாய் ராகு?"
"து¡க்கம் வரவில்லை அரசே. படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன்" அவன் தலைவணங்கியபடி பதில் சொன்னான். சக்கிரவர்த்தி அவனை நெருங்கித் தோளில் தொட்டார். அவர் உள்ளங்கையின் வடுக்கள் உறுத்தின.
ஏகளியாட்டத்தில் ஏன் எங்களோடு வந்து கலந்து கொள்ளவில்லை?"
ராகு பதில் சொல்லவில்லை.
"வரவர நீ அசுரனா, தேவனா என்றே தெரியவில்லை. நம் ஆர்ப்பாட்டங்களிலிருந்து தள்ளித் தள்ளிப் போகிறாயே? ஏளனத்துக்குரியவர்களாக எங்களைப் பற்றி நினைக்கிறாய் போலத் தெரிகிறது"
"இல்லை அரசே, இல்லை" அவசரமாக அவன் மறுத்துத் தலையசைத்தான். கண்களின் ஓரம் அடிபட்ட வேதனை தெரிந்தது.
"வயதில் சிறியவன் நீ. பேசிச் சிரிக்க வேண்டிய வயது. ஆனால் நீ தவித்து ஒதுங்கியிருப்பதைப் பார்க்கும்போது வேதனை தாள முடியவில்லை."
மகாபலியின் வார்த்தைகளைக் கேட்டு ராகுவின் தொண்டை அடைத்தது. விழிகளில் கண்ணீர் தளும்பியது.
"வருந்தாதே ராகு. ஒரு மோகினி அல்ல, இன்னும் நு¡று மோகினிகள் வந்தாலும் நம் அசுர குலத்தை ஏமாற்றிவிட முடியாது. உன் மேல் ஆணை. அதற்கு ஒருபோதும் நான் இடம் தரமாட்டேன்."
கணீரென்ற குரலில் அவர் வார்த்தைகள் ஆணி அடித்தது போல ராகுவின் நெஞ்சில் இறங்கியது. அதில் இனம்புரியாத கனிவு கலந்திருப்பதை உணர்ந்தான். அக்கனிவு அவனை உருக்கியது. தன் மனத்தில் இருப்பதை இவர் எப்படிப் படித்தார் என்று வியப்பில் ஆழ்ந்தான்.
"போ ராகு.. போய் நிம்மதியாக உறங்கு. காலையில் உதயவேளைக்கு முன்னர் தயாராக வேண்டும்"
மகாபலி கூடாரத்தைக் கடந்து போனார். அவருடன் மற்ற தளபதிகளும் சென்றார்கள்.
-முன்று-
குளக்கரையில் ஏராளமான மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்தன. விழிததெழுந்த பறவைகள் சத்தமிட்டபடி மேலே பறந்தன. குளித்து முடித்த அசுரர்கள் ஈர உடலுடன் கூடாரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் விடியாத சாலையில் ஒற்றையடிப்பாதை ஒரு பாம்பு போல நீண்டிருந்தது. அதைப் பார்த்ததும் வாசுகிப் பாம்பின் ஞாபகம் வந்தது ராகுவுக்கு. உடனே அடுக்கடுக்காகச் சம்பவங்கள் கிளைவிடத் தொடங்கின. அவளைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் ஞாபகம். ராகு தலையைப் பிடித்துக்கொண்டான். யோசனைகளை ஒரு மூட்டையாய்க் கட்டி எங்காவது கடலில் து¡க்கிப் போட்டுத் தொலைந்து விடுகிற வித்தை தெரிந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. குளத்தின் மேல் பார்வையைப் படரவிட்டான். நடுக் குளத்தில் அசுரர்கள் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சற்றே தள்ளி இருக்கிற தாமரைப்பூவை யார் முதலில் சென்று எடுத்துவருவது என்ற போட்டி வைத்துக் கொண்டு இருவர் வேகமாக அதை நோக்கி நீந்தினார்கள். பறித்துவரும் அம்மலரை மோகினிக்குத் தர இருவர் மனத்திலும் ஆசை படர்ந்தது. இன்னும் சிலர் குளத்தின் மறுகரையைத் தொட்டுத் திரும்பப் பந்தயம் வைத்துக் கொண்டு தண்ணீருக்குள் பாய்ந்தார்கள். ஒருவன் குளத்துக்குள் மூழ்கி குளத்தின் ஆழத்திலிருந்து மண்ணை எடுத்துவந்து உள்ளங்கையில் வைத்துக் காட்டினான். குளம் கலங்கத் தொடங்கியது,. சளக்சளக்கென்ற ஓசை குளம் முழுக்கக் கேட்டபடி இருந்தது. யாரோ ஒருவன் இரவில் பாடிய பாடலொன்றின் வரியை ராகத்துடன் இழுத்தான் உடனே அவர்களுக்கு உற்சாகம் கிளம்பிவிட்டது. அனைவரும் ஒரே குரலில் அவ்வரியைப் பாடத் தொடங்கி விட்டார்கள். இன்னும் இருள் பிரியாத சூழலில் அக்குரல்கள் ராகுவுக்கு ஒருவிதமான சங்கட உணர்வைக் கொடுத்தது.
குளத்தின் கரையிலேயே நின்று குளித்துவிட்டுக் கூடாரத்துக்குத் திரும்பாமல் கரையோரமாக இருந்த பாறை ஒன்றின் மீது உட்கார்ந்து கொண்டான் ராகு. அங்கே அவன் உட்காரந்திருப்பதைப் பார்த்தும் கூட அவனிடம் பேச விரும்பாமல் நடந்தார்கள் பலர். அவர்களுடைய வெறுமையான பார்வை மட்டும் ஒருமுறை அவன் மீது பட்டுத் திரும்பியது. அவ்வளவுதான். குன்றின் மேல் இன்னும் இருள் விலகாதிருந்தது. பூக்களும் , மிதக்கும் இலைகளும் கருத்துத் தெரிந்தன. நடந்து செல்லும் சகோதர அசுரர்களின் முகங்களைக் கவனித்தான். அவர்கள் கண்களில் உற்சாகமும் களிப்பும் தாண்டவமாடின. அமுதம் பருகி அமரர்களாக மாறும் தருணத்தை எதிர்கொள்ளும் பரபரப்பு அதில் தென்பட்டது. அந்த அமுதத்தை வழங்கப் போவது மனத்துக்குப் பிடித்தமான அழகான இளம்பெண் என்பதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான பரபரப்பில் மிதப்பது தெரிந்தது. நீண்ட பெருமூச்சுடன் ஒருமுறை கண்களை மூடி இருட்டில் திளைத்துவிட்டுத் திறந்தான்.
எத்தனை காலமாக இப்படிப் பெருமூச்சுடன் பொழுதுகளைக் கழித்திருக்கிறோம் என்று நினைத்தபோது மனம் கசப்பில் கவிந்தது. வாழ்வில் கசப்பை உணர்ந்த முதல் தருணத்தை அசை போட்டான் ராகு. அப்போது சிறுவயது. சுற்றியும் தந்தையும் அவர் வயதையொத்தவர்களும் மூத்த ஆண்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நேரம். ஓரமாய் ஒதுங்கி நின்று இறுகி நெகிழும் அவர்கள் உடல் தசைகளையும் தோள் வலிமையையும் கட்டான உடல் வனப்பையும் பார்த்ததும் உலகிலேயே முக்கியமான குலம் தம்முடையதே என்று தோன்றி பெருமையால் விம்மியது அவன் மனம். அவர்கள் தொடாமல் உலகில் எக்காரியமும் இல்லை. அவர்கள் வலிமைதான் உலகையே தாங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெருமையெல்லாம் இன்னும் மன ஆழத்தில் இருந்தது. ஆனால் அவர்களையும் அவர்கள் அசைவுகளையும் அவர்கள் உடல் வலிமையையும் பற்றி மற்றவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் வாளால் நெஞ்சில் செருகுகிற மாதிரி இருந்தது. அவனால் யாரையுமே நிமிர்ந்து பார்த்து நேருக்குநேர் பேச முடியாமல் போய்விட்டது. வெட்கமும் அவமான உணர்வும் தலைகுனிய வைத்துவிட்டது. அவர்கள் அசுரர்கள். சபிக்கப்பட்டவர்கள். திதியின் கருவில் தங்கிய ஜய விஜயர்களின் குலம். தேவர்கள் முன்னிலையில் பேச நேரும்போது உடல் முழுக்க ஒரு படபடப்பும் தவிப்பும் எப்படியோ வந்து விடுகின்றன. அந்த உணர்வுகள் ஆத்திரமாகவும் எரிச்சலாகவும் வெடித்துவிடும். அப்போது தொடங்கிய பெருமூச்சை காலம் கடந்த பிறகு கூட நிறுத்த முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அந்தப் பெருமூச்சிலிருந்து அவனுக்கு விடுதலையே இல்லை. அவன் மனம் என்னதான் விரும்புகிறது? தேவர்களுக்கு இணையான வாழ்வையா? மதிப்பையா? அதெல்லாம் பெரிதல்ல என்று தோன்றியது. தேவர்களின் நுணுக்கமான தந்திரத்தால் அசுரர்களை விழ்த்தி விடுகிறார்கள். ஆசை காட்டி மோசம் செய்வது காலம் காலமாகத் தொடர்கிறது. அவர்கள் தம் ஆதாயத்துக்காக அசுரர்களின் உடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தந்திரம் அறிவாகவும் எதிர்பார்ப்பு நிறைவேறாதத்¢ல் கிளர்ந்தெழும் வேகம் அசட்டுத் தனமாகவும் பார்க்கப் பட்டது. அசுரர்களின் வரலாறாக இந்தக் கேவலம் சித்தரிக்கப்படும்போது பெருமூச்சைத் தவிர வேறு வழி என்னவென்று இருக்கும் என்ற குழம்பினான் ராகு.
பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. இரண்டு நாட்களாக அசுர குலத்தவர் ஒவ்வொருவரும் அந்த இளநங்கையின் நினைவில்தான் மிதந்தபடி இருக்கிறான். யாரை நிறுத்தி எப்படிப் பேசுவது என்று குழம்பினான். யோசனை அவனைப் பைத்தியமாக்கிவிடும் என்று பட்டது. அசுரனாக இருப்பதைவிட ஒரு மரமாக , ஒரு செடியாக, ஒரு கல்லாக , ஒரு பூச்சியாக இருந்து விடலாம். அவற்றுக்கு எண்ணங்கள் இல்லை. குழப்பங்கள் இல்லை. நிம்மதியாக இருக்கலாம். அக்குளக்கரையோரம் தான் ஒரு பூச்சியாக மாறிப் பறந்து செல்வது போன்ற எண்ணம் ராகுவுக்கு சற்றே ஆறுதல் அளித்தது.
பலிச்சக்கரவர்த்தி அருகில் வந்து "நீராடியாயிற்றா ராகு?" என்ற வினவினார். தேக்குமரம் போன்ற அவர் உடல் வயதை மீறி கட்டுக் குலையாமல் இருந்தது. தோளில் படர்ந்திருந்த நீர் முத்துகளில் சூரியன் மின்னியது. "ஆயிற்று அரசே" என்று எழுந்து நின்றான் ராகு. குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். குழப்பம் கவிந்த அவன் முகத்தைத் தொட்டுத் து¡க்கினார் பலி. அவர் கண்களில் ததும்பிய கருணையைக் கண்டு சற்றே உதடு பிரித்துச் சிரிக்க முயன்றான்.
"சொல் ராகு. இரண்டு நாட்களாக ஏன் அமைதியற்றுத் திரிகிறாய்? நேற்று இரவு சொன்னதையெல்லாம் மறந்துவிட்டாயா?" என்றார் பலி.
மனத்தைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டிவிடும் வேகம் கொண்டான் ராகு. மனத்துக்குள் ஒரு பெரிய மரம் காற்றில் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.
"நாம் பாற்கடலுக்கு வந்திருக் கவே கூடாது என்று தோன்றுகிறது. இந்த அமுதும் அமர நிலையும் யாருக்கு வேண்டும் அரசே?"
"அமரனாக இருப்பது நல்லதுதானே நமக்கு"
"யாருக்கு நல்லது அரசே?" வேகமாகக் கேட்டான் ராகு. அவன் கண்களில் கொட்டுவது போல கூர்மை ஏறியது.
"எல்லாருக்கும்தானே ராகு"
"எல்லாரும் என்ற ஒரே சிமிழில் அவர்களையும் நம்மையும் அடைக்காதீர்கள் அரசே. நாம்தாம் எல்லாரும் எல்லாரும் என்று பரந்த மனப்பான்மை பற்றிப் பேசுகிறோம். தேவர்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவனாவது அப்படிப் பேசிப் பார்த்திருக்கிறீர்களா? நாங்களும் அசுரர்களும், நீங்களும் நாங்களும் என்றுதான் பேசுகிறார் கள். அவர்கள் மனத்தில் அப்படிப் பார்க்கும் மனப்பான்மைதான் இருக்கிறது. இன்று நேற்றல்ல, இந்தக் குலம் தோன்றிய காலத்திலிருந்து அவர்கள் மனத்தில் அந்த எண்ணம்தான் என் ஆத்திரத்தையெல்லாம் கொட்டத் தொடங்கினால்.." ராகு வேகவேகமாய்ப் பேசினான்.
அவன் பேசுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பலி. பிறகு மெதுவான குரலில் "உன் வருத்தம் புரிகிறது ராகு. என் நிலையை யோசித்துப் பார். காலம் முழுக்க அழிந்தது நம் வம்சம்தான். உயிர் விட்டது நம் வம்சம்தான். எத்தனை எத்தனை உயிர்கள் நம் பிரிவில் பலியாகிவிட்டன தெரியுமா? அவர்களையெல்லாம் நாம் மீண்டும் பார்க்க முடியுமா? எண்ணிப்பார். நம் வம்சத்துக்கு சாகாமல் இருக்க ஒரு வாய்ப்பு உருவாகி வரும்போது அதை விடாமல் எப்படி இருக்க முடியும்? எதிர் அணிக்காரர்கள் அமரராக இருந்து, நாம் மட்டும் மரணத்தைத் தழுவுகிறவர்களாக இருந்தால் நம் குலம் நாசமாகிவிடாதா?"
"ஒரு மன்னனாகவே இந்தப் பிரச்சனையைப் பார்க்கிறீர்கள். ஏன் ஒரு தனி ஆளின் கோணத்தில் பார்க்க மறுக்கிறிர்கள்?" என்றான் சலிப்புடன் ராகு
"மன்னனுக்குத் தனிப்பட்ட கோணம் இல்லை ராகு. என் குலம்தான் எனக்கு முக்கியம். அவர்கள் வாழ்ந்தால் நான் வாழ்வேன். அவர்கள் இறந்தால் அவர்களோடு நானும் இறந்து விடுவேன்."
"உங்கள் கடமையுணர்வை நான் மிகவும் மதிக்கிறேன் அரசே. அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் நம்மையறியாமல் பலியாகி விட்டோமோ என்றுதான் சொல்ல வருகிறேன்"
"தேவைக்கு மேல் ஒரு விஷயத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்கிறாய் ராகு. அதனால்தான் அவசியமல்லாத வேதனையும் துக்கமும் உனக்கு" என்றார் பலி. அவ்வார்த்தைகள் அவன் மனத்தில் தைத்தன.
"தேவையின் அளவு தெரியவில்லை அரசே எனக்கு. நான் முட்டாள்" என்றான் சூடாக. பலிக்கு அவன் கோபம் சிரிப்பு மூட்டுவதாக இருந்தது. ஒரு குழந்தையைப் பார்ப்பது போல அவனைப் பார்த்துத் தணிந்த குரலில் "சொல். எதன் ஆதாரத்தின் மீது அவர்கள் நடவடிக்கையைச் சூழ்ச்சி என்று சொல்கிறாய்?" என்றார்
"நன்றாக யோசித்துப் பாருங்கள் . பாற்கடலைக் கடைய நாமும் அவர்களும் ஒரே அணியாகப் போய் நின்ற அக்கணத்தை எண்ணிப் பாருங்கள். துல்லியமாக யோசித்துப் பார்த்தால் விவரம் புரியும் உங்களுக்கு. எல்லாக் காரியங்களிலும் நம்மைத் து¡ண்டி விட்டுப் பின்னால் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள் தேவர்கள். ஆனால் அந்தச் சமயத்தில் என்ன செய்தார்கள்? அவசரம் அவசரமாகப் பாம்பின் தலைப்பக்கம் போய் நின்று கொண்டார்கள். எதையுமே முதல் ஆளாய்ச் செய்து பழகிய உங்கள் அகங்காரம் உடனே பொத்துக் கொண்டு விட்டது. நீங்கள் சத்தம் போட்டதும் உங்களுக்காக விட்டுத்தருகிற மாதிரி தலைப் பக்கத்தை நமக்கு விட்டுத் தந்து விட்டார்கள். அவர்கள் வால் பக்கம் போய் நின்றார்கள். ஆனால் கடைசியில் நேர்ந்தது என்ன? பாம்பின் மூச்சுக்காற்றின் விஷத்தால் தவித்து நலிந்தது நாம்தானே. இது சூழ்ச்சி இல்லையா?" சூடாகக் கேட்டான் ராகு.
"ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு அர்த்தம் கற்பித்துப் பார்த்தால் எப்படி ராகு? நம் விருப்பப்படிதானே அவர்கள் நடந்து அகாண்டார்கள்? இதில் சூழ்ச்சி எங்கிருந்து வந்தது?" என்றார் அப்பாவித்தனமாக. அவர் அவனை அமைதிப்படுத்த முயற்சி செய்வது போல இருந்தது. அந்த அன்பு அவனைத்தடுமாற வைத்தது. அந்த இடைவெளியைப் பயன்படுத்திப் பலி ஆலகாலம் வெளிப்பட்ட போது இரு அணிகளிலுமே கணிசமான பேர் மயங்கி விழத்தானே செய்தோம்? பிறகு அனைவரும் சமமாகத்தானே காப்பபாற்றப்பட்டோம்? நீ சொல்கிற மாதிரி அவர்கள் மனத்தில் ஓரவஞ்சனை இருக்குமெனில் நம்மை அப்படியே சாக விட்டிருக்கலாமே? அப்படி ஏன் செய்ய்வில்லை?ஏ என்று கேட்டார். "அமுதம் எடுக்கும் வேலை முடியும் மட்டும் அசுரர்களின் துணை அவசியம் என்பது அவர்களுக்கும் தெரியும் சக்கரவர்த்தி" என்றான் குத்தலாக ராகு
அதைக் கேட்டுப் பகீரென்றது அவருக்கு. "இது என்ன பேச்சு ராகு? ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லையென்றால் காலம் முழுக்க யுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான்" என்றான்
"தந்திரத்தின் பின்னணியில் ஒற்றுமையை வளர்ப்பதைவிட வெளிப்படையாய் மோதிச் செத்துப் போகலாம்" என்று முனகினான் ராகு.
"சாக வைப்பது ஒரு மன்னனின் நோக்கமாக எப்போதும் இருக்க முடியாது ராகு. நீ உண்மை தெரியாமல் பேசுகிறாய்".
"அவ்வளவு நியாயம் பேசுகிற நீங்கள் தன்வந்திரியிடமிருந்து அமுதகலசத்தைப் பிடுங்கிக் கொண்டு ஏன் ஓடி வரவேண்டும்?"
"நல்ல கேள்விதான். நீ சொல்கிற மாதிரி அவர்கள் மீதான அவநம்பிக்கையின் மிச்சம் இன்னும் நம் மனத்தில் இருக்கிறது என்று புலப்படத்த்தான் பிடுங்கிக் கொண்டு வந்தேன்."
"அப்படியென்றால் அதை அக்ககணமே குலத்தில் உள்ள அனைவருக்கும் பருகக் கொடுத்திருக்கலாமே? அதைத் து¡க்கி முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் ஏன் தந்தீர்கள்?" கோபமாகக் கேட்டான் ராகு. பலி அதைக் கேட்டுச் சிரித்தார்.
"பிடுங்கிக் கொண்டு ஓடியது நம் அவநம்பிக்கையைப் புலப்படுத்த மட்டும்தான். நாமே குடித்து நாம் மட்டுமே அமரர்களாக வேண்டும் என்கிற பேராசையால் அல்ல. பாவம், உழைத்தே அறியாத தேவர்கள் நம்முடன் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். உழைப்பின் பலன் உரியவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதானே காலம் காலமாக நாம் பேசி வரும் பேச்சு? அவர்களுக்குத் தராமல் நாம் மட்டுமே அமுதம் பருகினால் வாய்ப்பு கிடைத்தால் நாமும் அவர்கள் போல நடப்பவரகள்தாம் என்று இன்னொருவர் நம்மைச் சுட் டிக் காட்டிப் பேச வழி செய்து தராதா? பொது ஆளான அவளிடம் கொடுத்தால் எல்லாருக்கும் சமமாக கொடுத்து விடுவாள் என்கிற நம்பிக்கையில்தான் அவளிடம் தந்தேன்"
ராகு அமைதியாக இருந்தார். தொடர்ந்து பலியிடம் வாதிட அவனுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றி நடப்பதொன்றே தன் கடமை என்று எண்ணியவனாக மெளனமாக இருந்தான்.
"வா ராகு, போகலாம். சூரியன் எழும் முன்பு நாம் போய்ச்சேர வேணடும்" பலி அவன் தோள்களைத் தொட்டு அணைத்தவாறே நடத்திச் சென்றார். குளத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கரையேறி அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். புதர்களிடையேயிருந்து பறவைகளின் கிரீச்சென்ற குரல்கள் கேட்டபடி இருந்தன. அவை "போகதே.. போகாதே" என்று சொல்வது போல இருந்தது ராகுவுக்கு.
-நான்கு-
பாற்கடலின் கரையெங்கும் ஒருவிதமான பரபரப்பு ஏற்படுவதை உணர்ந்தான் ராகு. "வந்துவிட்டாள் வந்துவிட்டாள்" என்ற மகிழ்ச்சியான குரல்கள் எங்கும் எதிரொலித்தன. "அதோ.. அதோ.. அங்கே பார்" என்று கைகள் ஒரு திசையில் சுட்டிக் காட்டின. திரும்பிப் பார்த்தான் ராகு. தொலைவில் கருங்கூந்தல் புரளும் நெற்றியில் சூரியனின் ஒளிப்புள்ளியில் மின்னும் நெற்றிச்சுட்டி தெரிந்தது. கும்பல் அவளை நெருக்கியபடி இருந்தது. அலையும் கும்பலை அவளின் குரல் அடக்கியது. மெல்லப் பின்வாங்கிச் சற்றே உயரமான மேடான மணல்பகுதிக்குச் சென்று நின்றாள் மோகினி. அப்போது அவளை முழுக்கப் பார்த்தான் ராகு.
குவளைப் பூவின் நிறத்தில் அவள் மேனி. அளவான உயரம். ஒரு கையில் அமுத கலசம் தாங்கியிருந்தாள். அலைபாயும் கரிய பெரிய விழிகள். ஜொலிக்கும் கன்னங்கள். கழுத்திலும் இடையிலும் அவள் அணிந்திருந்த அணிகலன்கள் கண்ணைக் கவர்ந்தன. அவள் நடக்கும் போது தண்டையும் கொலுசும் இனிய நாதம் எழுப்பின. காற்றில் அவள் மஞ்சள் ஆடை படபடபத்தது. அவளது ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கவனித்தான் ராகு. கூர்மையாக அவள் கண்களை நோக்கினான். அவற்றில் எந்தக் கள்ளமும் இல்லை. இனிமையும் அன்பும் அக்கண்களில் வழிந்தன. எந்தத் தந்திரத்தையும் அவற்றில் கண்டுபிடிக்க இயலவில்லை. சூழ்ச்சியின் அடையாளம் கிஞ்சித்தும் இல்லை. குழந்தைக்குத் தன் மார்பைக் காட்டும் தாயின் கண்களில் புலப்படும் நெகிழ்ச்சியும் குழைவும் மட்டுமே அவள் முகத்தில் தேங்கியிருந்தன. அவள் உடலிலிருந்து ஒருவித இனிய மணம் வீசியது. மலர் மணம். இசை மிதக்கும் காற்றின் மணம். தன்னை அறியாமல் மனம் ஒடுங்கினான் ராகு. தன் குழப்பங்கள் அர்த்தமற்றவையோ என்ற நாணம் படர்ந்தது. எல்லாம் நல்லபடியாக நடந்துவிடும் என்று ஒருகணம் பெரும் நிம்மதி பரவியது. புலன்கள் அமைதியடைந்து அடங்கும் தருணத்தில் அவன் சந்தேகமுள் மறுபடியும் தலைநீட்டிக் கீறியது.
தேவர்களும் அசுரர்களுமாக அலைமோதியது கூட்டம். அவள் தன் இனிய குரலில் "அமைதி..அமைதி" என்று கூட்டத்தினரைப் பார்த்துச் சொன்னாள். அவள் கைகளை உயர்த்தும் போது கைவளைகள் குலுங்கின. அவள் உள்ளங்கையின் வெண்மை வெள்ளரிப்பழத் துண்டு போல இருந்தது.
கூட்டத்தினிடையே சலசலப்பு ஓய்ந்தது. எங்கும் மெளனம் நிலவியது. முகம் பொலிய நின்ற மோகினி கூட்டத்தைப் பார்த்து "நான் சொல்வதைக் கேட்பதாக எல்லாரும் வாக்களித்திருக்கிறீர்கள், நினைவிருக்கிறதா?" என்றாள் . அனைவரும் ஒரே நேரத்தில் "இருக்கிறது" என்று பதிலிறுத்தார்கள். அவள் கையை உயர்த்தி "நல்லது.. நல்லது நீங்கள் அனைவரும் நீடுழி வாழ்க" என்று வாழ் த்தினாள். கூட்டம் முழுக்க மகிழ்ச்சிப் பரவசம் காற்றலை போல பரவி மிதந்தது.
"முதலில் அனைவரும் இரண்டு அணிகளாகப் பிரிந்து தனித்தனியாக அமருங்கள். இதோ கொப்பரைகள். ஆளுக்கொன்று எடுத்துக் கொள்ளுங்கள். அமுதம் வழங்கி முடிக்கிற வரை யாரும் எதுவும் பேசக் கூடாது. கேட்கக் கூடாது. குற்றம் குறை சொல்லக் கூடாது. அப்படி நடந்தால் அமுதம் தன் தன் சக்தியை இழந்துவிடும் , தெரிகிறதா?"
எல்லாரும் தலையசைத்தார்கள்.
பலிச்சக்கரவர்த்தி முன்னால் சென்று கொப்பரையை எடுத்துக் கொண்டு இடது பக்கமாய் நடந்தான். தொடரந்து கொப்பரைகளை எடுத்துக் கொண்ட அசுரர்கள் அவனைப் பின்தொடர்ந்து வரிசையில் உட்கார்ந்தார்கள். எதிர்பார்ப்பும் ஆசையும் அவர்களைப் பதற்றமுற வைத்தது. கொப்பரைகளைத் து¡க்கித் து¡க்கிப் போட்டுப் பிடித்தார்கள். மோகினி அவர்களைப் பார்த்து உதட்டைச் சுழித்து "ம்ஹ¤ம்..அவசரம் கூடாது" என்றாள். அந்த வார்த்தைகள் அவர்களைக் கிறங்கடித்தன. பேசும்போது அவள் கண்களில் வெளிப்பட்ட ஒளியையும் வீசும் காற்றில் நெற்றி முழுக்க அலையும் அவள் கூந்தலையும், விலகி ஓடும் மேலாடையையும் இறுக்கி முடிந்த மார்புக் கச்சையையும் பார்க்கக் கிடைத்த பரவசத்தில் மெய்மறந்திருந்தார்கள். அவர்களைப் போலவே தேவர்கள் அணியும் ஒன்று கூடி எதிர்ப்புறத்தில் உட்கார்ந்திருந்தது. இந்திரன் அவளைப் பார்வையால் விழுங்கியபடி இருந்தான். இரு வரிசைக்கிடையேயும் அந்த மங்கை நின்றாள்.
ராகுவின் நெஞ்சு வேகவேகமாக அடித்தபடி இருந்தது. அவன் இதயத்தின் துடிப்பை அவனால் மிகச் சரியாகக் கேட்டக முடிந்தது. அவள் மீது உருவாக்கிக் கொண்ட வெறுப்பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அவள் உண்மையிலேயே பேரழகிதான் என்று தோன்றியது அவனுக்கு. அதுவரை அவளைப் போல ஓர் அழகியை எங்கும் கண்டதில்லை என்று நினைத்தான். ரத்தத்தில் கதகதப்பு பரவுவதை உணர்ந்தான். ஒரு பெண்ணின் அழகுக்கும் ஓர் ஆணின் உடலில் ஓடும் ரத்தத்துக்கும் எப்படி இந்த உறவு ஏற்படுட முடியும் என்கிற விசித்திரமான கேள்வி அவன் மனத்தைக் குடைந்தது. ஏயாரோ ஒருத்தி அவள் யாரோ ஒரு அசுர இளைஞன் நான் என் மூளை நரம்பின் அசைவுகளை அவள் அழகால் கட்டுப்படுத்தப்படும் செயலாக எப்படி நிகழ்கிறது? ரத்தத்துக்கு இந்த விசேஷ குணம் எப்படி வந்தது?ஏ அவன் மனம் குவிவதை அந்தக் கேள்வி சிதறடித்தது. கரையில் என்ன நடக்கிறது என்றே அவனால் சரியாகக் கவனிக்க இயலவில்லை. குழப்பங்கள் அவன் நெஞ்சை இறுக்கிப் பிசைந்தன.
அவள் மெல்ல மெல்ல முன்னால் வந்து கொண்டிருந்தாள். அகப்பையால் கலசத்திலிருந்து அமுதத்தை முகர்ந்து தேவர்களின் வரிசையில் ஒருவனின் கொப்பரையில் ஊற்றினாள். அடுத்து அதே நளினம். அதே சிரிப்பு. அதே குழைவு. மெல்ல வந்து அசுரர்களின் வரிசையில் ஒருவனின் கொப்பரையில் ஊற்றினாள். அவர்கள் முகங்களில் படர்ந்த பரவசத்துக்குக் காரணம் பருகிய அமுதமா, அவளது அழகா தெரியவில்லை.
சிரித்தபடி நங்கை நகர்ந்தாள். மெல்ல மெல்ல வரிசையைத் தாண்டி வந்தாள். அவளையே பார்த்தபடி இருந்தான் ராகு.
சூரியன் தெளிவாக மேலேறிவிட்டான். வானத்தில் சிவப்புக் கரைந்து வெண்மை படரத் தொடங்கியது. மேகங்கள் அற்ற வானம் தெளிவாகத் தெரிந்தது. அலைகளின் ஓசை தொடர்ந்து கேட்டபடி இருந்தது. தொலைவில் தேவர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் அசுரர்களின் கூடாரங்களும் தள்ளித் தள்ளிக் காணப்பட்டன. அருகில் பச்சைக் குன்று. ஈரம் சுமந்த காலைக் காற்று எங்கும் இதம்பட வீசியது. காற்றின் வேகம் கூடக் கூட மோகினியின் ஆடை ஒரு கணம் உடலோடு ஒட்டியது. மறுகணம் நெகிழ்ந்தது. அவள் உடல் வளைவுகளும் செழிப்பும் புலப்படன. அவள் முகத்தில் களிப்பும் உற்சாகமும் தெரிந்தன.
ஏதோ எண்ணங்களில் மூழ்கி இருந்துவிட்டுச் சட்டென ஒருகணத்தில் மீண்டான் ராகு. அந்த மோகினி அவன் கண்ணெதிரில் நு¡ற்றுக்கு நு¡று சதவீதம் பார்க்கிற தொலைவில் ஐந்தாறு அடி தள்ளி நிற்பதைக் கண்டான். அவன் ரத்தத்தில் மெல்ல மெல்ல சூடேறியது. சட்டென கவனம் பிசகி, அவள் உடலின் மீது பதிந்திருந்த கண்களைத் திருப்பி கொப்பரையின் மீது பதித்தான். அக்கணமே அவன் அதிர்ச்சியில் உறைந்தான். தேவர்களின் கையில் உள்ள கொப்பரையில் மட்டும் அகப்பையால் அமுதத்தை முகர்ந்து ஊற்றினாள் அவள். அதே மலர்ந்த முகத்துடன் முகர்வது போன்ற பாவனையுடன் கலசத்துக்குள் விட்டெடுத்த வெறும் அகப்பையை அசுரர்களின் கொப்பரையில் கவிழ்த்தாள். வெற்றுக் கொப்பரையை வாய்க்குள் கவிழ்த்துக் கொள்ளும் அசுரர்கள் தாம் எதையுமே பருகவில்லை என்கிற உணர்வு கூட இல்லாமல் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார்கள். ராகுவால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ஒரு கணம் கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் பார்த்தான். தேவரின் கைக்கொப்பரையில் அமுதத்தைக் கவிழ்க்கும் அகப்பை. அசுரர்களின் கொப்பரையில் வெற்று அகப்பை கவிழ் ந்து மீண்டது. அவசரம் அவசரமாக அவன் கண்கள் பலியைத் தேடின. வரிசையின் முதலில் அவர் காணப்பட்டார. மோகினியின் அழகில் மயங்கிய நிலையில் சிலை போல உட்கார்ந்திருந்தார் அவர். ஓடிப்போய் அவரை எழுப்பி உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பரபரத்தது அவன் மனம். எழுந்து கத்த வேணடும் போல துடித்தது அவன் உடல். மெல்மெல்ல வெறியேறியது அவனுக்கு, மறுகணமே காலம் முழுக்க குழப்பவாதி என்றும் அவந்மபிக்கைக்காரன் என்றும் சொல்லிவரும் தன் கூட்டம் தன்னை நம்பாது என்று தோன்றியதும் சலித்துக் கொண்டான். எனினும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உத்வேகம் கொண்டான் ராகு. அதிர்ச்சியில் வறண்ட தொண்டையில் ஈரம் பரவ எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி வேகமாக யோசித்தான். அழகியின் கால்கள் அவனை நோக்கி நெருங்கி விட்டன. அக்கணமே அவன் மனம் ஒரு முடிவெடுத்தது. தவிப்புடன் கண்களை மூடினான். தன் ஆற்றலின் உதவியால் தன்னை யாருக்கும் தெரியாமல் ஒரு தேவர் குலத்தவனாக உருமாற்றிக் கெண்டான். அனைவரின் கவனமும் மோகினியின் முகத்தில் குவிந்திருந்த கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வரிசை மாறி உட்கார்ந்தான். உள்ளூர அமுதத்தின் மேல் அவனுக்கு நம்பிக்கையில்லை. அக்கணம் அவன் அமுதத்தை வெறுத்தான். அதைவிட ஒரு துளி விஷம் மேலானது என்று தோன்றியது. எனினும் விருட்டென்று எழுந்துபோய் அப்பெண்ணின் தந்திரத்தை அம்பலப்படுத்துவதைவிட இது சிறந்த வழி என்று அவன் மனத்துக்குப்பட்டது. பலிக்கும் மற்றவர்களுக்கும் தான் எடுத்துச் சொல்லிவந்த உண்மை அப்போதுதான் புரியும் என்று அமைதியுற்றான்
மோகினி அவனை நெருங்கினாள். அவள் அகப்பை அவனது கொப்பரையில் அமுதத்தை ஊற்றியது. அவன் அதை ஆர்வமின்றிக் குடித்து முடித்தான். கொப்பரையைத் தரையில் வைக்கும்போது அருகில் உட்கார்நதிருந்தவன் ஏஐயோ பெண்ணே, இவன் தேவர் குலத்தவன் அல்ல. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் இவன் இல்லை. அதோ திக்விஜயன்., அவன்தான் என் அருகில் இருந்தான். இடையில் எப்படி இவன் முளைத்தானோ தெரியவில்லை. வேஷதாரி. அசுரர் குலத்தவன். ஆள் மாறாட்டம் செய்கிறான்ஏ என்று கூவினான். உடனே வரிசை கலைந்தது. ஏவிடாதே பிடி கொல்லுஏ என்று கூக்குரல்கள் தேவர்கள் நடுவிலிருந்து கேட்டன. கூட்டமே அவனை நோக்கிப் பாய்ந்தது. ஏநிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்ஏ என்ற கூவிக் கொண்டே ஓடி வரும் பலியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஓட முயற்சி செய்தவனைப் பிடித்து இழுத்தார்கள் தேவர்கள். அதற்கள் மோகினி தன் கையிலிருந்த அகப்பையாலேயே அவனை ஓங்கி அடித்தாள். வாள் வீச்சு போல இறங்கியது அந்த அடி. ஏஅம்மாஏ என்ற அலறலுடன் அவன் உடல் இரு துண்டுகளாக விழுந்தன. விழுந்த வேகத்தில் அவன் சொந்த உருவடைந்தான். வேதனையும் அதிர்ச்சியும் கொண்ட அவன் கண்கள் அந்த மோகினியின் மீது நிலைகுத்தி நின்றன. ஏராகு.. ராகுஏ சுற்றிலும் குரல்கள் கேட்டன. உடனே செய்தி பரவ ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிக்கும் ராகுவைக் காண ஓடி வந்தார்கள் அனைவரும். அசுரர்களால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ஆ என்ற சத்தத்துடன் தோளைக் குலுக்கிக் கொண்டு அந்தப் பெண் மீது பாய்ந்தார் பலி. அவர் கண்களில் கவிந்திருந்த பரவசம் மறைந்து மூர்ககம் ஏறியது. அவருடன் மற்ற அசுரர்களும் சேர்ந்து கொண்டார்கள். அவளைத் தடுத்தாட்டொள்ள முயன்றது தேவர்கள் வரிசை. இரண்டு வரிசைகளும் மோதின. தலைகளைப் பிளக்கும் கரங்கள். ஆளையே து¡க்கித் தொடையில் வைத்து ஒடிக்கும் வேகம். எங்கும் துண்டான உடல்கள். கிழிந்த இதயங்கள். வெட்டுப்பட்ட கைகள். உரத்த குரலில் கூவியபடி பலி ஒரு யானையைப் போல அப்படைகள்¢ன் இடையே புகுந்து சுழன்றார். ஏகொல்.. கொல்.. நம்ப வைத்துக் கழுத்தறுப்பதே காலம் முழுக்க வேலையாகிவிட்டது இந்த வீணர்களுக்கு..ஏ ஏவிடாதே பிடி கொல்லு. உயிருக்கு உயிர் பலி வாங்காமல் விடக்கூடாதுஏ ஏஒன்றல்ல.. இன்றைக்கு ஒரு கோடி தலைகள் தரையில் உருள வேண்டும். இந்த பாற்கடல் ரத்தத்தில் சிவக்க வேண்டும்ஏ ஏஇந்த அசுரர்கள் நம்மை என்ன கையாலாகாதவர்கள் என்று நினைத்துவிட்டார்களா? காட்டுங்கள் தேவர்களே நம் கைவரிசையைஏ. குரல்கள் கூவின. வெட்டப்பட்ட தலைகளும் உடல் உறுப்புகளும் பந்துகள் போல தலைக்குமேலே பறந்தபடி இருந்தன. எங்கும் கதறல் . அழுகை. கெஞ்சுதல்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே மோதல் வலுத்தது.
-ஐந்து-
ரத்தச் சேறாக மாறிய கடற்கரையில் தன்னந்தனியாக உட்காரந்திருந்தார் பலி. முற்றிலுமாக அவர் மனம் சிதைந்திருந்தது. நடந்ததெல்லாம் ஒரு கனவு போல இருந்தது. அவருக்கு. இப்படியெல்லாம் நடக்குமா என்ற நம்பக் கூட முடியவில்லை.. அவர் மனம் ராகுவுக்காக உருகியபடி இருந்தது. சந்தேகங்களைக் கண்களில் தேக்கியபடி இருந்த ராகு. உள்மனம் உணர்ந்ததைத் தயக்கமின்றி சொன்ன இளம்வீரன் ராகு. அவன் முகம் நினைவுக்கு வந்தது. அவன் குரல் காதில் ஒலித்தது. மிக அருகில் உட்காரந்துகொணன்டு மன்னா மன்னா என்று ஏதோ சொல்வது போல இருந்தது. உடல் முழுக்க சிலிர்த்தது. பலி மிகவும் சோர்வாக உணர்ந்தார். வானத்தின் பக்கம் பார்வையை திருப்பினார். இருள் அடர்ந்திருந்தது. இந்த ஒரு நாள் பிறக்காமலேயே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவர் மனம் அவாவியது.
"சக்கரவர்த்தி"
நிமிர்ந்து பார்த்தார். மெய்க்காப்பாளன்.
"போகலாம் அரசே..இருட்டிவிட்டது..இறந்த அசுரர்களுக்குச் சிதை மூட்ட வேண்டும்"
"நம் அணியில் எவ்வளவு பேர் மாண்டார்கள்?"
மெய்க்காப்பாளன் பேசாமல் தலைகுனிந்தான். பலி தலையை அசைத்துக் கொண்டார். எழுந்து நிற்கக் கூட தன் உடலில் பலமில்லை என்று தோன்றியது. வெட்டுண்ட கையிலிருந்தும் தோளிலிருந்தும் ரத்தம் வடிந்து உறைந்திருந்தது. ஊன்றிக் கொள்ள மற்றொரு கையைத் தரையை நோக்கிப் பதித்த போது கொப்பரை தட்டுப்பட்டது. அதைப் பார்த்துமே ராகுவின் நினைவு மறுபடியும் வந்தது. ராகு என்று வாய்விட்டுச் சொன்னபடி வானத்தை நோக்கினார். வெட்டுண்ட ராகுவின் கண்களை நட்சத்திரங்களின் குவியலிக்கிடையே பார்த்தார். ராகு என்று தளர்ந்த குரலில் சொன்னபடி எழும் முயற்சியைக் கைவிட்டுச் சரிந்து உட்கார்ந்தார்.