நேற்றிரவு உமையாழின் சிறுகதைத்தொகுதியான ‘Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட கதையில் சொல்லப்படாதவை’ படித்து முடித்தேன். இந்த Covid 19 வைரஸ் பரம்பலையிட்டு வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் அச்சவுணர்வு கொஞ்சம் தலையெடுத்தாலும், பல்வேறுவிதமான நெருக்கடிகளிலும் இருந்து விடுபட்ட ஏகாந்த நிலையில் இது போன்ற நூல்களை வாசிப்பதென்பது ஒரு அலாதியான அனுபவம்தான். வாசித்து முடித்ததும் ஒரு உண்மை துலக்கமாகப் புலப்பட்டது. ஈழ- புகலிட சிறுகதையாசிரியர் வரிசையில் உமையாழ் தன்னையும் ஒரு சிறந்த சிறுகதையாளனாக இறுக்கமாகப் பிணைத்துக் கொள்கிறார். நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்ததொரு சிறுகதையாளன் கிடைத்துவிட்டான்.
இது உமையாழின் முதலாவது சிறுகதைத் தொகுதி. 9 சிறுகதைகள் அடங்கிய இந்தச் சிறுகதைத் தொகுதியை ‘யாவரும்’ பதிப்பகத்தினர் பல்வேறு எழுத்துப் பிழைகள் இருந்தாலும் மிக அழகாகவும் சிறப்பாகவும் வெளியிட்டுள்ளனர். இந்தச் சிறுகதைகளில் அநேகமானவை, இன்று நவீனத்தமிழ் இலக்கிய உலகில் வலம் வரும் பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும் ஏற்கனவே பிரசுரிமாகியிருந்தபடியால் அதற்குரிய அங்கீகாரத்தை அவை ஏற்கனவே பெற்று விட்டிருக்கின்றன.
“கடந்து வந்த நிலமெல்லாம் ஆச்சரியங்கள்தான். ஆகவே நிலங்களை எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது.” என்று தனது முன்னுரையில் கூறும் உமையாழ் தான் பிறந்து வளர்ந்த கிழக்கிழங்கையில் இருந்து, ஆறாண்டுகள் அலைந்து திரிந்த அரேபிய பாலைவங்கள் ஊடாக இன்று தான் வசிக்கின்ற பனி படர்ந்த நிலமாகிய பிரித்தானியா வரை பல்வேறு பிரதேசங்களிலும் தனது கதையின் களங்களை படர விட்டிருக்கிறார். வாழ்வும் வாழ்வுடன் தொடர்கின்ற அலைவுகளும் துயரங்களுமாக தொடர்கின்ற இக்கதைகள் வாழ்வு குறித்தும் வாழ்வின் அர்த்தங்கள் குறித்ததுமான விசாரணைகள் ஆக வெவ்வேறு அனுபவங்களுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
‘சபிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை’ இத்தொகுதியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. பொருளீட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தனது மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்து அரேபிய மண்ணிற்கு வேலை செய்ய வந்து, 23 வருடங்கள் கடும் வெயிலும் சுடு மணலிலும் காமங்கள் மறுக்கப்பட்ட மனிதனாக வாழ்ந்து வரும் வங்கதேச இளைஞன் ஒருவன், தனது காம வேட்கையை தணிக்க முயல முற்படும் ஒரு வெள்ளிக்கிழமையில் கைது செய்யப்பட்டு, இன்னொரு வெள்ளிகிழமையில் தனது தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ள மரணதண்டனையை எதிர்பார்த்து நிற்கும் கணங்களில் அவனது எண்ணங்களின் வெளிப்பாடாக விரிகின்றது.
ஜெனிபர், ஷர்மிளா என்ற இரண்டு இளம்பெண்களின் சமபாலுறவுக் கதையாக விரியும் ‘நின்கூடுகை’ மிக அதிகமான பாலுறவுச் சித்தரிப்புக்களுடன் மட்டுமன்றி எழுத்து, இலக்கியங்கள் குறித்த உரையாடல்களுடனும் ஒரு அழகான மொழியில் படைக்கப்பட்டிருக்கின்றது.
West End Bar இல் நடனமாடும் ஒரு இளமங்கை, முன்பொருபோது தான் சந்தித்த ஒரு பாலியல் தொழிலாளியின் நினைவுகளுடனேயே அவளது காதுப் பூவுடன் இறுதிவரை வாழ்ந்த ஒரு மனிதர், தனது தாய் ஆறாவதாக கருவுற்ற போது அவள் முகத்தில் காறித்துப்பிய அவள் மூத்த மகள், ஒரு காலை வேளையில் நடைப்பயிற்சியின் போது திடீரென்று ஏற்பட்ட ஒரு எண்ணவோட்டத்தில் மனம் மாறி, அன்று காலையே தனது கணவனை தன்னை விட்டு விலக்கிய ஒரு நடுத்தர வயதுப் பெண் என கதைகளில் வருகின்ற மனிதர்கள் யாவரும் வாழ்வு குறித்து ஏதோ ஒரு செய்தியினை எமக்குக் கூறிச் செல்கின்றனர்.
‘எங்களூரின் மொழியும் இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. அவற்றை எழுதிக் கடக்கிறபோது நான் அடைகின்ற ஆனந்தம் அளவிட முடியாதது.’ என்கிற உமையாழ் அவரது கூற்றுப்படி அவர் தான் பிறந்து வளர்ந்த கிழக்கிலங்கையின் இஸ்லாமிய சமூக வட்டார மொழி வழக்கில் பல கதைகளை மிக இயல்பாக எழுதிச் செல்கிறார். ஆயினும் இந்த வட்டார வழக்குகளை எமக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்தப் பாத்திரங்கள் சிருஷ்டிக்கப் பட்டனவா என்ற சந்தேகம் எழும் வண்ணம் சிலவேளைகளில் இந்த வட்டார வழக்கு மொழி அதிகம் திகட்டியும் விடுகின்றன.
பெரும்பாலான கதைகள் தன்மை ஒருமையில் கதை சொல்லியின் கூற்றாக வருகின்றது. அந்த ‘நான்’ எல்லாம் உமையாழ்தானா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படும் வேளையில் ‘அரூபம்’ என்ற கதை அந்த சந்தேகங்களை தகர்க்கின்றது. அந்தக் கதையும் தன்மை ஒருமையில் ‘நான்’ என்று கதை சொல்லியின் கூற்றாக வந்தாலும் அங்கு உமையாழும் ஒரு பாத்திரமாக வந்து இங்கு நிஜமான உமையாழ் யார் என எம்மை திகைப்புற வைக்கிறார். இங்கு வரும் உமையாழ் சிகரட் பிடிக்கிறார். உன்னத இலக்கியங்கள் குறித்து நண்பனுடன் விவாதிக்கிறார், அல்லது நண்பனை அலுப்படிக்கிறார். சார்த்தர் குறித்தும் எஸ்ரா குறித்தும் மட்டுமன்றி நகுலனின் கவிதைகள் குறித்தும் ஜெயமோகனின் ‘இரவுகள்’ குறித்தும் விலாவாரியாக விரிவுரையாற்றுகிறார். ஈற்றில் தனது நண்பனின் காதலியையே களவாடிச் செல்கிறார்.
நூலில் பக்கத்துக்குப் பக்கம் வாழ்வின் அர்த்தங்கள் குறித்தான விசாரணைகள் மீதான பதிவுகள் அடிக்கடி வந்து போகின்றன ”நினைவு ஊர்ந்து செல்கின்றது.பார்க்கப் பயமாக இருக்கின்றது. பார்க்காமலும் இருக்க முடியவில்லை.” என்ற நகுலனின் கவிதை வரிகள் மட்டுமன்றி ஆசிரியரின் கூற்றாக ‘இந்த இலைகள் போன்று அர்த்தமற்றதா வாழ்க்கை’ ‘பரந்த இந்த பூமியில் மனிதனின் காலடித்தடங்கள் பதிந்த இடங்களில் எல்லாம் அன்பு வியாபித்து இருக்கின்றது’ என்ற கவிதை போன்ற வரிகள் அவரின் படைப்பாற்றலை நிரூபித்து நிற்கின்றது.
காமத்தை எழுதுதல் என்பது இலகுவானதல்ல. அது கடினமானதும் கூட. அதிலும் நவீன கால உறவுகளை எழுதுவது மிகவும் சிக்கலானது. ஆனால் அது உமையாழுக்கு மிகவும் கைவரப் பெற்றிருக்கின்றது. “தெகிட்டத் தெகிட்டக் காமம் பயின்ற இரவு அது. உச்சம் பலமுறை தலையில் அடித்து, பித்துக் கலங்கி, அண்ட சராசரமும் ஆண்டோழுகி---“ இப்படி எழுதுவதில் உமையாழுக்கு எந்தவித சிரமும் இருக்கவில்லை. கதைகள் பலவும் காமத் தகிப்புக்களினாலும் அதன் வெளிப்பாடுகளினாலும் பக்கத்திற்கு பக்கம் நிரம்பி வழிகின்றன.
தாயக நிகழ்வுகள் பகைப்புலமாக வரும் கதைகளில் போரின் வடுக்களையும் இலேசாகத் தொட்டுச் செல்கிறார். இன முரண்பாடுகளிடையே உக்கிரம் கொண்டு எழுந்த பிரச்சினைகளையும், அந்த பிரச்சினைகளின் ஊடாக பாதிப்புறும் சாமான்ய மனிதனின் தினசரி வாழ்வும் இடையிடையே வந்து போகின்றன. கடந்த 30 ஆண்டு காலப் போரின் கந்தக நெடியில் மறைந்து போன எமது ஈழத்து இலக்கியத்தின் மண்வாசனை இவரின் எழுத்தால் மீண்டும் பல இடங்களில் மீட்டெடுக்கப் படுகின்றன.
இன்று ‘தமிழின் சிறந்த சிறுகதைகள்’ ‘தமிழின் சிறந்த 100 சிறுகதைகள்’ என்று பல்வேறு விதமான பட்டியல்கள் இடப்படுகின்றன. இதில் தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களின் பல்வேறு சிறுகதைகளும் இடம் பிடித்துள்ளன. இந்த ஜாம்பவான்களின் சில சிறுகதைகளை பின் தள்ளி அதற்குள் உமையாழின் பல சிறுகதைகளை உள் நுழைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தப் பட்டியலாளர்கள் உள்ளனர். இது வெறும் உயர்வு நவிற்சியல்ல. வாசிப்பவர்கள் புரிந்து கொள்வர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.