நான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே அறிந்தவன் நான். தொடர்ந்து அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின் பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும் இதழ்களிலும் நான் வாசித்திருக்கிறேன்.
பத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட அவரது எழுத்துலக அனுபவங்கள், அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச் சொல்லத் தவறிய கதைகள் என்ற புனைவு சாரா இலக்கியத்திலும் இந்த அனுபவ முத்திரைகளை காணலாம்.
20 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல் நினைவுகளின் தொகுப்பாக அல்லது நினைவுகளிலிருந்து முகிழ்க்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக பார்க்கலாம். இதனைப் பிரசுரித்ததன் மூலம் அவர் தன் நினைவுச் சுமையின் ஒரு பகுதியை இறக்கி வைக்க எண்ணினாரா? அல்லது, உபயோகமான தகவல்கள் என்றெண்ணி இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணினாரா? அல்லது நூல் ஒன்றை வெளியிடுவதனால் கிடைக்கும் படைப்பூக்கத்தை அடைய எண்ணினாரா? இம்மூன்று சந்தேகங்களும் நியாயமானவைதான்.
இனி இந்நூலில் உள்ள சில அத்தியாயங்களை எனது விருப்புக்குரிய ஒழுங்கில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
முதலாம் அத்தியாயத்தில் புலம் பெயர் நாட்டு நடப்புகள் பற்றிய குறிப்புகளை தந்திருக்கிறார். லெபனீஸ் பெண்ணொருத்தி தன் பையனுக்கு தெருவில் வைத்து அடித்ததை கண்ட ஒரு வழிப்போக்கர் பொலீசில் முறையிட, அது ஏற்படுத்திய விபரீதங்கள் அங்கதச் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.
குடும்ப வன்முறையில் தொடங்கி குறட்டைச் சத்த பிரச்சினை வரை கணவன்- மனைவி உறவின் விரிசல்கள் , விவாகரத்து வரை போவது பற்றி நகைச்சுவை கலந்த குறிப்புகள் வருகின்றன.
“ திசை மாறிய பறவையின் வாக்கு மூலம் “ என்ற தலைப்பில் தனது இடது சாரி அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகிப் பின் எவ்வாறு இலக்கியத்தின் பக்கம் திசை மாறினார் என்ற விபரங்களை பல நினைவுக் குறிப்புகளுடன் சொல்கிறார். ஈழத்து முன்னணிக் கவிஞர் ஒருவர். பலராலும் அறியப்படாமலேயே வாழ்ந்து மறைந்த பிரமிள் என்றழைக்கபட்ட தருமு சிவராம் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவர் பற்றிய அத்தியாயம் ஒன்று இதில் வருகிறது. தமிழ்நாட்டில் அறியப்பட்ட, ஆனால் எம்மவரால் அதிகம் அறியப்படாத பிரமிள் பற்றிய தகவல்களின் கச்சிதமான பதிவு இது. தமிழ் நாட்டிலேயே தன் இறுதிக்காலத்தைக் கழித்த பிரமிள் எழுதிய கவிதையின் வரியொன்றே தலைப்பாகவும் வருகிறது. கதிர்காமத்தில் பாலியல் சித்திரவதையில் கொல்லப்பட்ட அழகி பிரேமாவதி மனம்பேரி பற்றிய குறிப்புகள் வரும் அத்தியாயம் ஒன்றை எழுதியிருக்கிறார். ஜே.வி.பி ஆதரவாளர் என்பதால் பொலீசரால் கொல்லப்பட்ட மனம்பேரி குறித்து அவர் எழுதிய கங்கை மகள் என்ற சிறுகதையையும் முன்பு வாசித்திருக்கிறேன்.
கிருஷாந்தி, கோணேஸ்வரி, இசைப்பிரியா போன்ற தமிழ்ப் பெண்களை விட்டு விட்டு, மனம்பேரியை ஏன் தேர்ந்தெடுத்தார் ? என்ற கேள்வி மனதில் எழுந்தது. 1971 இல் அவர் அங்கே அந்த சூழலில் வாழ்ந்தது ஒரு காரணமாயிருக்கலாம். அத்துடன் போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் ஒடுக்க அரசு செய்த வன்முறைகள் தமிழருக்கும், சிங்களவருக்கும் பொதுவானதே என்றும் காட்ட முயன்றிருக்கலாம்.
தாய்மொழியும் கலப்பின உறவும் என்ற தலைப்பில் பாரம்பரியமாக நீர்கொழும்பு தமிழர்களின் பிரதேசமாகவே இருந்திருக்கிறதென்று அடித்துக் கூறுகிறார். இராவணனின் மகன் இந்திரஜித்தன் நிகும்பலை யாகம் செய்வதற்காக நீர்கொழும்பில் ஐந்து குளங்கள் வெட்டியதாக பூர்வீகம் உள்ளதாயும் , நீர்கொழும்பு ஆங்கிலத்தில் நிகம்பு என்று அழைக்கப்படுவது, இதிலிருந்தே வந்திருக்கலாமென்றும் ஐயம் தெரிவிக்கிறார். வடக்கின் முன்னாள் முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் நீர்கொழும்புத் தமிழர் சிங்களவர்களாக மாறி வருகின்றனர் என்று பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கு மறுதலிப்பாகவே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இதற்கு முதலமைச்சரின் பதிலும் முன்னிணைப்பாக இந்த நூலில் உள்ளதைக் கண்டேன். தேங்காய்கள், திரையரங்குகள், பாதணிகள் இம்மூன்றினதும் மகாத்மியங்களை சொல்லும் மூன்று வெவ்வேறு தலைப்புகள் உள்ளன. பண்பாட்டுக் கோலத்தில் புகையிலை வாசம் என்ற தலைப்பும் உள்ளது. புகையிலை பயிரிடல் பாவனை பற்றிய துணுக்குகள் இதிலுள்ளன.
முஸ்லீம்கள் பற்றிப் பேசும் இரு தலைப்புகள் இந்த நூலில் உள்ளன. சிங்கள இலக்கியவாதிகளான மார்ட்டின் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரின் படைப்புகளை தமிழுக்கும் அதேபோன்று தமிழ் இலக்கியப் படைப்புகள் பலவற்றை சிங்களத்திலும் மொழி பெயர்த்த முஸ்லீம்கள் பலரின் பெயர்ப் பட்டியலையும், நூல்களின் பெயர்களையும் தந்திருக்கிறார். ஒரு ஆய்வுக்குரிய தரவுகளாக இவை பயன்படக் கூடும்.
வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய துணுக்குகள் கொண்ட தலைப்பு ‘எழுத்துலகில் சனி பகவான்’. பத்திரிகைக்கு அச்சுக் கோர்க்கும் காலப்பகுதியில் சில ஒப்பு நோக்குதலில் ஏற்படும் தவறுகளால் வந்த வில்லங்கங்களைச் சொல்வது இந்த அத்தியாயம். ஜனாதிபதி சனிக்கிழமையன்று வெளிநாட்டுக்கு பயணமாகிறார் என்ற செய்தி சுருக்கமான செய்தியாக ‘சனியன்று ஜனாதிபதி பயணம்’ என்று வந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு எழுத்து தவறியதால் ‘சனியன் ஜனாதிபதி பயணம்’ என்று அச்சாகி விட்டது! இதுதான் ஏற்பட்ட வில்லங்கம். இப்படியான பல சுவாரஸ்யங்களை தந்திருக்கிறார்.
மறைந்தவர்களின் தொலைபேசி இலக்கங்கள் என்ற மனதை நெகிழ வைக்கும் தலைப்பில் ஒரு அத்தியாயம் வருகிறது. முருகபூபதி தனது பழைய டயறியில் பல நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களை குறித்து வைத்துள்ளார். அவர்கள் பலதரப்பட்டவர்கள். அவர்களில் பலர் மறைந்து போய் விட்ட நிலையில் அந்த டயறி மீட்டுத் தரும் நினைவுகளே இந்த அத்தியாயம்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட காலப் பகுதியைச் சித்தரிக்கும் ஒரு பதிவிலும் 1983 இனக் கலவர காலத்தில் நீர்கொழும்பில் தான் இளைஞனாயிருந்தபோது நிகழ்ந்தவற்றை இன்னொரு அத்தியாயத்திலும் தந்திருக்கிறார். இதில் காடையர்கள் என்ற சொல்லைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான குறிப்பு வருகிறது. இனக் கலவரம் முடிந்த பின்னர் 1984 இல் தமில் நாட்டு சென்று எழுத்தாளர் கி. ராஜநாராயணனை முருகபூபதி சந்திக்கிறார். ‘கலவரங்களை யார் நிகழ்த்தினார்கள்?’ என்று அவர் கேட்டதற்கு இவர் 'காடையர்கள்' என்று சொல்லியிருக்கிறார்.
'என்ன மீண்டும் சொல்லுங்கள் ?' என்று கேட்டு, 'காடையர்கள்' என்ற சொல்லை தன் குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டாராம் கி. ராஜநாராயணன். ஈழத்து தமிழர்தான் இந்த சொல்லை கண்டு பிடித்திருக்கிறார்கள் போலும்! இந்த நூலை கிளிநொச்சி மகிழ் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். அட்டைப் படத்தை சிட்னியை சேர்ந்த திருமதி கீதா மதிவாணன் வடிவமைத்திருக்கிறார். முன்னுரையை ஊடகவியலாளர் கருணாகரன் எழுதியிருக்கிறார். இலக்கியவாதிகளுக்கே உரித்தான ஒரு துயரம் உண்டு. ஒரு மேடை கலைஞருக்கு நிகழ்வு முடிந்த கையோடேயே ஆற்றுகைக்கான பாராட்டும் விமரிசனமும் கிடைத்து விடும். ஆனால், ஒரு எழுத்தாளனுக்கோ அல்லது இலக்கியவாதிக்கோ விமரிசனம் கிடைப்பதற்கு மாதங்கள் பல ஆகலாம். அல்லது வருடங்களும் ஆகலாம். எனவேதான் இவ்வாறான நூல் அறிமுகங்கள் அவசியமாகின்றன.