‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் முன்வைப்பதில் ஆளுக்காள் இதுவரைக்கும் சளைக்கவுமில்லை; இன்னமும் களைக்கவுமில்லை. எது எவ்வாறாயினும், நந்திக்கடலில் நடந்துமுடிந்த அவலத்தின் காரணங்களை ஒரு சாமானியனின் நோக்கில், நறுக்கென்று சொல்லிவிடும் சாமர்த்தியம், நான்கே நான்கெழுத்து வார்த்தை ஒன்றிடம் உண்டு. அதுதான் ‘துரோகம்!’
துரோகத்தின் ஒட்டுமொத்த விளைச்சலான முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஈழப்போரினால், ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களுக்கு இன்னல்களைத் தவிர இலாபமேதும் கிட்டியதில்லை. ஆயினும் இப்போரின் மூலமாக ஒருசில நல்ல இலக்கியங்களாவது வந்து கிடைத்திருக்கின்றனவே என எண்ணி ஓரளவு மனதைச் சமாதானப் படுத்திக்கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட காலம்வரை இருபக்கச் சமச்சீர்க் கொடுக்குப் பிடிகளுக்கிடையிலிருந்து இலக்கியம் படைக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்து வந்தது. ஒருபக்கக் கெடுபிடிகள் ஓய்ந்து தளர்ந்துள்ள போதிலும், மறுபக்க அச்சுறுத்தல்கள் முற்றாக மறைந்தமைக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், தமிழிலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், போரிலக்கியத்திற்குப் புதியதொரு பரிமாணம் ஈழப்போரினால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மையைத் தமிழிலக்கியத் துறைசார் விற்பன்னர்கள், விமர்சகர்கள் பலரும் ஒப்புக்கொள்ளத் துவங்கியுள்ளனர். இத்தகையதொரு பின்னணியிலேயே சமகால ஈழத் தமிழிலக்கிய முன்னோடிகளுள் ஒருவராக மதிக்கப்படும் அமரர் செங்கை ஆழியான் அவர்களது போர்க்காலப் படைப்பான ’விடியலைத் தேடி’ எனும் நாவலை அணுக விழைகிறேன். 2011இல் எழுதப்பட்ட, 67 பக்கங்களைக் கொண்ட இந்நாவல் குறித்து – “ ‘விடியலைத் தேடி’ என்ற இச்சிறு நாவல் தமிழரின் சமகாலத்தைச் சித்தரிக்கும் ஓர் அரசியல் கதையாகும்” என்று தமது முன்னுரையை செங்கை ஆழியான் ஆரம்பிக்கிறார். அதனைத் தொடர்ந்து, சுதந்திரத்தின் பின்னரான பொன் இராமநாதன், பொன் அருணாசலம் போன்றோரது இணக்க அரசியலும், ஜி.ஜி. பொன்னம்பலம், சி. சுந்தரலிங்கம் போன்றோரது இணக்கமும் பிணக்கமும் இணைந்து-பிணைந்த அரசியலும், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோரது அஹிம்சை அரசியலும், ஆயுதம் ஏந்திய பிரபாகரன் குழுவினரின் ஆயுதப் போராட்ட அரசியலும் பேரினவாதத்திற்கெதிராகப் போராடிப் பூஜ்யமான கதையைச் சொல்லிச் செல்லும் அவர், “இன்று மீண்டும் அன்றைய ஆரம்ப கட்டத்திற்கு வந்துள்ளோம். இவற்றை இந்த நாவல் பேசுகின்றது” என்றும், “நம்பி ஏமாந்த தமிழினத்தின் சோக வரலாற்றை இந்த நாவல் ஆவணப்படுத்துகின்றது” என்றும் அந்த முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
மன்னார் மாவட்ட மாந்தைப் பட்டினத்தின் முண்டைப்பிட்டிக்கும் வெள்ளாங்குளத்துக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள பாலியாற்றங்கரையில் அமைந்திருக்கும் சுங்கன்குழி கிராமத்திலிருந்தே இந்நாவல் சூல்கொள்ள ஆரம்பிக்கிறது. அமைதியும் அழகும் நிறைந்த சிறியதொரு கிராமம், அது. மொத்தம் சுமார் 56 பேரைக் கொண்ட, எட்டே எட்டுக் குடும்பங்கள்தான் அங்கு வசிக்கின்றன. கிராமத்தின் தலைமகனான அம்பலவாணரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைக் கொண்ட நாலு குடும்பங்கள்; மிகுதி நான்கும் அவரது உறவினர்களது குடும்பங்கள். தந்தைவழிச் சமூகத்தின் அச்சொட்டான உதாரணமாகத் திகழும் சுங்கன்குழியில் அம்பலவாணர் வைத்ததுதான் சட்டம். அவரது சம்மதமின்றி அயலிலுள்ள ஒரு சின்ன ஆட்டுக் குட்டியும் அங்கு சத்தமிட முடியாது!
இராணுவத்தின் ஆக்குரோஷம் மிக்க பன்முனைத் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் விடுதலைப்புலிகள் பின்வாங்க ஆரம்பித்தபோது, “பொடியள் செப்பமாக அடிச்சு விரட்டி விடுவான்கள்” என்ற அம்பலவாணரின் உறுதியான நம்பிக்கை சிதைந்துபோகிறது. முழுச் சுங்கன்குழி கிராமமும் அவரது முன்நடத்தலுடன் பூநகரியை நோக்கி இடம்பெயர்கிறது. பின்னர் முரசுமோட்டைக்கும் அங்கிருந்து புதுக்குடியிருப்புக்கும், ஈற்றில் நந்திக்கடல் பகுதியின் கெப்பப்புலவுக்கும் போய்ச் சேர்ந்தபோது, அம்பலவாணர் தமது உறவினர்களில் 22 பேரைப் போருக்குப் பறிகொடுத்திருந்தார். பொடியளின் சாகசம் பொய்யாய்க் கனவாய்ப் போன தருணம், அவரது குடும்பத்தவர் 56 பேரில் 20 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இடையில் நடந்து முடிந்த மனிதப் பேரவலத்தை, ஆறாத கவலையுடனும் தீராத வெஞ்சினத்துடனும் இந்த நாவல் விபரிக்கிறது! போரில் பொங்கிப் பெருகிய குருதியாற்றின் பாய்ச்சலுடன் கலந்திணைந்து, அம்பாலவாணரின் குடும்பக் கதையொன்றையும் நாவல் கூட்டியள்ளிச் செல்கிறது!
அம்பலவாணரின் பேரன் சசிதரன், விடுதலைப் புலிகளுடன் இணைந்து, கோண்டாவில் முகாமில் பத்திரிகை வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் சந்தித்த மரகதத்திடம் மனதைப் பறிகொடுக்கிறான். யாழ் குடாநாட்டின் மீதான ஆக்கிரமிப்பை இலங்கை இராணுவம் தீவிரப்படுத்தவே, வலிகாமம் முழுவதும் வன்னியை நோக்கி இடம்பெயர ஆரம்பிக்கிறது. மரகதமும் குடும்பத்தவர்களும் மூட்டை முடிச்சுக்களுடன், நாவற்குழிப் பாலம் கடந்து, கிளாலி ஊடாகக் கிளிநொச்சி சென்று, அங்கிருந்து திருவையாறு போய்ச்சேரும் அச்சம் மலிந்த பயணத்தைக் கிளைக் கதையாக இந்நாவல் கூறிச் செல்கிறது.
இயக்கத்தினரால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்ட மரகதம், ஒரு கட்டத்தில் இன விடுதலைக்காகத் தன்னைப் பூரணமாக அர்ப்பணிக்க முடிவெடுத்ததன் மூலம், சசிதரனின் சபலத்துக்கு முற்றுப் புள்ளி இடுகிறாள். கலா என்ற மாற்றுப் பெயருடன் இயக்கத்தில் உயர்பதவி பெறுகிறாள். “இன்றைக்கு நாங்கள் எல்லாத்திலும் இருக்கிறம். எதுவும் செய்யமுடியும். பெண்களின் மகத்தான சக்தியை நீங்க அறியவில்லை. எங்களால ஆக்கவும் அழிக்கவும் முடியும்… இலேசாக எண்ணிவிடாதையுங்கோ..” (பக். 17) எனும் வார்த்தைகள் மூலம் புதிய தலைமுறைப் பெண்களின் துணிச்சலையும் பரந்துபட்ட பார்வையையும் அவள் துல்லியமாக வெளிப்படுத்துகிறாள். சசிதரனை அவனது மாமி மகள் வசந்தியுடன் இணைத்து வைப்பதற்கென அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு உதவிய கலா, யுத்தத்தில் மடிந்து போகிறாள். ஓங்கி முழங்கிய விடுதலை யுத்தம், தற்காப்பு யுத்தமாகிப் பின்னர் உக்கிரமிழந்து ஒருபக்க இனவழிப்பாக உருவெடுக்கிறது. சரணாகதி வேண்டி வெள்ளைக் கொடியேந்தி வந்த விடுதலைப்புலி வீரர்களோடு சசிதரனும் சுட்டு வீழ்த்தப்படுகிறான். வரலாறு காணாத துன்பங்களையும் துரோகங்களையும் அழியாத கறைகளாகக் கொண்ட அத்தியாயம் ஒன்று, வன்னி மண்ணில் வரையப்படுகிறது. எஞ்சியிருந்த குடும்பத்தவர், உறவினருடன் மெனிக் ஃபார்ம் இடைத் தங்கல் முகாமில் சிலகாலம் தங்கியிருந்து, கடைசியில் மீண்டும் சுங்கன்குழி போய்ச் சேரும் அம்பலவாணரின் குடும்பத்துக்கு, அங்கொரு அதிர்ச்சி காத்துக்கிடப்பதாகக் கூறி, ‘விடியலை நோக்கி’ என்ற இந்த நாவல் முடிவுக்கு வருகிறது!
செங்கை ஆழியான் ஒரு புவியியலாளர். மேலும், அவர் ஓர் அரச நிர்வாகத்துறை அலுவலர். அந்தவகையில் வட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தவர். அவ்வப்பிரதேசங்களில் வதியும் மக்களது கிராமிய மொழி வழக்குகளும், வாழ்க்கை முறைகளும், உற்பத்தி உறவு முறைகளும், உணவு-உடை உள்ளடங்கலான பண்பாட்டு அம்சங்களும், புவியியல் சார்ந்த விபரணைகளும் அவரது நாவல்களில் மிக எளிமையாகவும் நுணுக்கமாகவும் அழகாகவும் சித்திரிக்கப்படுவதற்கு இவை பிரதான காரணங்கள். அம்பலவாணரது மூன்றாவது மகள் பாக்கியலட்சுமியின் கணவன் மருதநாயகம், சுங்கன்குழி கிராமத்திற்குப் பின்னாலுள்ள பாலியாற்றங்கரையை அண்டியிருக்கும் அடர்ந்த காட்டுக்குள் வேட்டை நாயுடன் உடும்பு வேட்டைக்குச் செல்கின்ற காட்சி – வன்னிக் காட்டுப்புற ஆன்மாவைக் கையோடு காவிச் செல்கின்ற காட்சி – செங்கை ஆழியானுக்கே வாலாயமான நேரடி அனுபவ வார்ப்பு! இதுபோன்ற அனுகூலங்களுடன் கூடிய, அவரது ஆற்றலின் பலாபலன்களை வாசகர்கள் இந்நாவலின் பல இடங்களில் அனுபவிக்கலாம்.
சுமார் 50 நாவல்களை ஈழத்தமிழ் வாசகர்களுக்குத் தந்த பெருமைக்குரிய எழுத்தாளரான செங்கை ஆழியான், அன்றாட வாழ்வில் தாம் கண்டவற்றை உடனடியாகக் கதையாக்கும் வல்லபம் கொண்டவர். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் கைவராத கலை. ஆனால் இந்த வலிமை இவரை மேலோட்டமான மெல்லுணர்வுகளுக்கும் இலட்சியங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் ஒரு படைப்பாளி என்ற வகைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருந்தது. பங்காளராக இல்லாமல் பார்வையாளராக இருந்து இலக்கியம் படைக்கும் அவரது பல ஆக்கங்களில் சமூக முக்கியத்துவம் சமரசம் செய்யப்பட்டிருப்பதான ஒரு அபிப்பிராயம் பல விமர்சகர்கள் மத்தியில் நிலவி வந்துள்ளது.
மேலும், செங்கை ஆழியான் தமது பல்கலைக்கழக நாட்களில் பேராசிரியர் கைலாசபதியிடம் கல்விகற்றதன் பயனாக, தமது எழுத்தூழியத்தின் ஆரம்ப காலத்தில் இடதுசாரிச் சிந்தனையால் கவரப்பட்டிருந்தார். ஆயினும், கடந்த நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பின்னரான சுமார் 3 தசாப்தகாலமாக ஈழத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த முற்போக்கு அணியுடன் அவர் தம்மை இணைத்துக் கொண்டவரல்ல. அதேவேளை அவர் ஒரு தீவிரத் தமிழ்த் தேசியவாதியுமல்ல. பதிலாக, தமது சகோதரர் புதுமைலோலனின் பாதிப்புகள் காரணமாக, ஒரு மிதவாதத் தமிழ்த் தேசியவாதியாகவும் தமிழ்ப் பற்றாளனாகவும் தம்மை இனங்காட்டிக்கொண்ட அவர், பெரும்பாலும் யாழ் இலக்கிய வட்டத்தினருடனேயே தமது ஊடாட்டங்களை வைத்திருந்தார்.
இவ்வகையில் ஒரு சித்தாந்தச் சார்புநிலைப்பட்ட படைப்பாளியாக அவர் தம்மை மாற்றிக்கொள்ளாத போதிலும், தாம் வாழ்ந்த சமூகத்தில் கண்டவற்றை – கேட்டவற்றை – உணர்ந்தவற்றை யதார்த்தப் பண்புடன் கூடிய படைப்புக்களாக உருவாக்கினார். மிக நீண்ட காலமாகக் கதை சொல்லும் மரபாக இருந்துவரும் யதார்த்தவாத அடிப்படையிலேயே தமது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார். யதார்த்தவாதத்தின் தொடர்ச்சியாக மேற்கிளம்பிய இயல்புவாத அல்லது நவீனத்துவ அல்லது பின்நவீனத்துவப் பண்புகள் எவற்றையும் தமது படைப்புகளில் அவர் ஒருபோதும் பரீட்சித்துப் பார்த்தவரல்ல.
கல்கி, சாண்டில்யன், அகிலன், நா. பார்த்தசாரதி போன்ற தமிழக எழுத்தாளர்கள் எவ்வாறு மெல்லுணர்வுகளைத் தீண்டி, இலட்சிய வேட்கைகளை விதைத்து, ஒரு புதிய தலைமுறை வாசகர்களைத் தம்வசப்படுத்தினார்களோ, அவ்வாறே ஈழத்தில் ஒரு வாசகர் பரம்பரையைச் செங்கை ஆழியான் தமதாக்கி வைத்திருந்தார். காட்டாறு, வாடைக்காற்று, கிடுகுவேலி, இரவின் முடிவு போன்ற அவரது நாவல்கள் பல பரந்துபட்ட வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணம். அந்தவகையில், போர்க்கால வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு, அக்கால வாழ்க்கையை யதார்த்தப் பண்புகளுடன்கூடிய ஒரு படைப்பாக்கும் பணியினை ‘விடியலைத் தேடி’ நாவலூடாக அவர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்.
தான் வாழும் சமூகத்து மக்களுக்குத் தேவை என்று ஒரு படைப்பாளி கருதும் செய்தியைத் தனது படைப்பில் சொல்வதற்கு, அப்படைப்பாளிக்குப் பூரண சுதந்திரமும் உரிமையும் உண்டு. ஆயினும் இந்த உரிமையும் சுதந்திரமும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களுக்கு 2009 மே 18 வரை கிடைக்கவில்லை. அதன் பின்னர் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்ட படைப்பளிகளுள் செங்கை ஆழியானும் ஒருவராவார். விடுதலைப் புலிகளின் தோல்வியை வரவேற்று ‘ருத்திரதாண்டவம்’ என்னும் நாவலை 2012இல் அவர் எழுதியிருக்கின்றார். அதற்கு முன்னதாக 2011இல் விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டதுதான் ‘விடியலைத் தேடி.’ எனும் இந்த நாவல். பேரினவாத்திற்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்கள் யாவும் பூச்சியமாயின என்றும், அதற்கான முழுப் பொறுப்பும் விடுதலைப் புலிகளையே சாரும் என்றும் கூறும் செங்கை ஆழியான், தமது கண்டனங்களையும் அவற்றிற்கான காரணங்களையும் இந்நாவலில் அடுக்கிக்கொண்டே போகிறார். “எத்தனை சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அத்தனை பேச்சுவார்த்தைச் சந்தர்ப்பங்களையும் பிரபாகரனின் பிடிவாதம் வீணாக்கியது” (பக். 56) என்று வெளிப்படையாகக் கூறும் செங்கை ஆழியான், ஈழத்தில் தமிழ் பேசும் மக்களது ஒரு குறிப்பிட்டகால வாழ்வினை உண்மைத் தன்மையுடனும் நம்பகத் தன்மையுடனும் நாவலாக்கித் தரவேண்டும் என்ற வேட்கையுடன் இந்த நாவலை எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
Novellus என்ற இலத்தீன் சொல்லே ஆங்கிலத்தில் Novel ஆகியது. அதனைத் தமிழில் நாம் நாவல் என அழைக்கிறோம். Novellus என்பது இலத்தீன் மொழியில் ‘இளமையும் புதுமையும்’ எனப் பொருள்படும் ஒரு சொற்பதமாகும். செங்கை ஆழியானின் ‘விடியலைத் தேடி’ எனும் நாவலில் இப்பொருண்மை பெரிதும் எய்தப்பட்டதாகச் சொல்லமுடியாது. புதுமையான உருவகங்களோ படிமங்களோ இன்றி, ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக – நேர்கோட்டுத் தன்மை கொண்டதாக இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழ் இலக்கிய உலகில் இடம்பெறும் மிகச் சிறிய நாவல்களுள் ஒன்றான ‘விடியலைத் தேடி,’ சுங்கன்குழி கிராம மக்களது வாழ்வில் வீசிய காலச் சூறாவளியைச் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்லும் ஒரு புனைவு. இலங்கைவாழ் தமிழினத்தின் ஒரு குறிப்பிட்ட கால அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களின் முக்கியமான ஒரு பதிவு. தமிழர்தம் உரிமைகளை வென்றெடுக்கவென மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் பலவும் கைகூடாத நிலையில், ஆயுதப் பலத்தினைப் பிரயோகித்து அவ்வுரிமைகளைப் பறித்தெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் படுதோல்வியில் முடிந்தமைக்கான காரண காரியங்களைச் சொல்லும் கதை. அவ்வகையில், ஈழத் தமிழர்மீது திணிக்கப்பட்டுவந்த வாழ்வின் குரூரங்களை எதிர்த்துக் குரலெழுப்புவதற்குத் தேவையான ஆத்ம பலத்தையும் எழுத்தாற்றலையும் கொண்ட அமரர் செங்கை ஆழியானின் ‘விடிவைத் தேடி’ நாவலுக்கென்று, ஒரு வரலாற்றுப் பெறுமதியும் முக்கியத்துவமும் உண்டு என்பதையும், அவரது படைப்பிலக்கிய முயற்சியில் இந்நாவல் ஒரு முன்னோக்கிய பாய்ச்சல் என்பதையும் வாசகர்களால் எளிதில் இனங்கண்டுகொள்ள முடியும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.