
கட்டுரையாளர்: முனைவர் அ. கார்வண்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை – 600061.
முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சமூகம் அடைந்த மறுமலர்ச்சியில் பெண்ணுரிமையும் சமூக விடுதலையும் பிரிக்க முடியாத இரு பெரும் கூறுகளாக விளங்கின. காலங்காலமாக ஆணாதிக்கச் சமூக அமைப்பிலும் வைதிகச் சடங்குகளிலும் கட்டுண்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிப்பதில், மகாகவி சுப்பிரமணிய பாரதியும் அவரது வழியைப் பின்பற்றிப் புரட்சிகரக் கருத்துகளை படைத்த பாவேந்தர் பாரதிதாசனும் ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது. பாரதி தேசிய மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளின் பின்னணியில் பெண்ணுரிமையைப் பாடினார். அவரைத் தொடர்ந்து, பாரதிதாசன் தந்தை பெரியாரின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் ஜாதி ஒழிப்பையும் பெண்ணுரிமையையும் இணைத்துப் புரட்சிக் கருத்துகளை முன்வைத்தார். எனவே, இவ்விரு ஆளுமைகளின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் மற்றும் சமூக விடுதலைப் பங்களிப்புகள் குறித்தும் அவற்றுள் நிலவிய கோட்பாட்டு முரண்பாடுகள் குறித்தும் ஆரய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்
சமூக, அரசியல், பொருளாதார விடுதலைகளுக்கு இணையாகப் பெண் விடுதலைக்கும் பாரதியார் முதன்மை இடமளித்தார். பெண்களை வெறும் இல்லறப் பொருளாக மட்டுமே பார்த்த சமூகப் பார்வையை மாற்றி, அவர்களைச் 'சக்தி' வடிவமாகவும், தேசத்தின் உன்னதமான மனிதர்களாகவும் நிலைநிறுத்துவதற்கான முயற்சியை அவர் தனது படைப்புக்களின் வழி வெளிப்படுத்தினார்.
பாரதியாரின் கனவிலும் கற்பனையிலும் உதித்த உன்னதப் படைப்பு மரபினை உடைத்தெறியும் 'புதுமைப் பெண்'. இக்கருத்தாக்கத்தால், ஆணும் பெண்ணும் நிகர் என்ற நிலை ஏற்படும்; மக்களிடையே அறிவு செழித்தொங்கும்; அதனால் இந்த நாடும் நலம்பெறும். எனவே, பெண்களுக்கு இச்சமூகம் விதித்த 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' என்னும் மரபார்ந்த குணங்களை அவர் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இதனைப் புலப்படுத்தும் வகையில்
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கியிவ் வையந் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சக்தியாம்
நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்.
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் " (பாரதியார் பாடல்கள், ப.- 501)
என்ற அவரின் பாடலடிகள் அமைந்திருப்பது உற்றுநோக்கத்தக்கது. இதனைத் தவிர்க்க, பாரதியார் பெண்களுக்குப் புதியதொரு பண்பாட்டு இலக்கணத்தை வகுத்தளித்தார். அதாவது, பெண்கல்வியை மறுத்த தலைமுறையினரின் பழமைவாத கருத்துக்கள் மாய்ந்து போகவும். அடுத்து வரும் இளந்தலைமுறையினர் பெண், ஆண் என்ற கருத்து வேறுபாடின்றி ஓங்கி வளரவும் சமூகத்தில் உடனடியாக ஏற்படவேண்டிய மாற்றத்தை பின்வருமாறு எடுத்துரைத்திருக்கின்றார். அதாவது,
”ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
பட்டங்க ளாள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டு மறிவினி லாணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி” (பாரதியார் பாடல்கள், ப.- 499)
என்ற அடிகள் இதற்குச் சான்று பகர்கின்றன. இதில், வீட்டின் இருட்டுப் பொந்துகளில் முடங்கிக் கிடந்த பெண்களை உலக அறிவுநுட்பங்களை அறியவும், பல நூல்களைக் கற்கவும், திசைகள் எட்டும் சென்று புதிய அறிவைக் கொண்டுவரவும் பாரதியார் தூண்டினார். பெண்கள் நாட்டின் சட்டங்களை இயற்றவும், பல்வேறு பட்டங்களை ஆளவும் தகுதி படைத்தவர்கள் என்று முழங்கினார். மேலும்,
”கற்பு நிலையென்று சொல்லவந் தாரிரு
கட்சிக்குமஃது பொதுவில் வைப்போம்” (பாரதியார் பாடல்கள், ப.- 499)
என்ற பாடலடிகள் வழி கற்பு நெறியை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இது பெண் விடுதலைக்கான மிக முக்கியத் தேவை என்பது பாரதியார் முன்வைக்கும் கருத்தாகிறது.
பாரதியாரின் பாஞ்சாலி சபதம்
பாரதியார் படைத்த 'பாஞ்சாலி சபதம்' எனும் புரட்சிக்காப்பியம் பெண்ணுரிமைக்கான ஒரு பெரும் தார்மீகக் குரலாகும். சூதாட்டத்தில் தங்களைத் தோற்ற பின்னர், தன்னைப் பணையம் வைக்கத் தன் கணவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சபையில் பாஞ்சாலி எனும் பெண் கதாப்பாத்திரம் எழுப்பும் கேள்வி, ஆணாதிக்கச் சட்டங்களை உடைத்தெறிகிறது. துச்சாதனன் அவளது ஆடையைப் பற்றி இழுத்தபோது, அங்கிருந்த ஆண் தலைமைகளின் மௌனத்தையும், வஞ்சகச் சாத்திரங்களையும் சாடிய பாஞ்சாலி, அநீதிக்கு எதிராக வீறுகொண்டு எழும் வீரப்பெண்ணின் அடையாளமாகப் பாரதியாரால் படைக்கப்பட்டிருக்கிறாள். இக்காப்பியத்தில் பாரதியார் பாஞ்சாலியின் தார்மீகக் கோபத்திற்கு முதன்மை இடமளித்துள்ளார்.
பாரதிதாசனின் பகுத்தறிவுப்பெண்
பாரதிதாசன், பாரதியாரின் மாணவராகத் தன் கவிப்பயணத்தைத் தொடங்கியவர். ஆயினும், அடுத்தடுத்த காலக்கட்டங்களில் தந்தைப்பெரியாரின் சுயமரியாதை இயக்கச் செல்வாக்கினால் முற்றிலும் பகுத்தறிவு/சமூகச் சீர்திருத்தப் பாதையில் கவிதை படைக்கத் தொடங்கினார். மூடநம்பிக்கைகளையும் வைதீகச் சடங்குகளையும் தகர்ப்பதே பெண் விடுதலைக்கு அடிப்படை என்பதை உணர்த்த முற்பட்டார். மேலும், பெண் விடுதலையே சமூக விடுதலையைப் பெற்றுத்தரும் என்று பெரிதும் நம்பினார்.
பெண் கல்வியும் இல்லற வாழ்வும் - பாரதிதாசன்
பெண்கல்வியே ஒட்டுமொத்தச் சமூக விடுதலைக்கும் வேர் என்பதை அழுத்த்ந்திருத்தமாக தமிழ்ச்சமூகத்திற்கு எடுத்துரைத்தவர் பாவேந்தர் பாரதிதாசன். இக்கருத்தை முன்னிறுத்தி குடும்ப விளக்கு, இருண்ட வீடு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல் முதலான படைப்புக்கள் பல படைத்திருக்கிறார். இவற்றில் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் நூலில் சமூக சமத்துவத்தை பெண்பாலின சமத்துவத்திலிருந்து தொடங்க வேண்டுமென்றும் 'குடும்ப விளக்கு' நூலில் கற்ற பெண்களின் சிறப்பையும், 'இருண்ட வீடு' நூலில் கல்லாத பெண்களால் குடும்பம் எத்தகைய இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை நயமாகவும் நறுக்குத்தெறித்தார்போன்றும் எடுத்துரைத்துள்ளார். 'குடும்ப விளக்கு', 'இருண்ட வீடு' ஆகியன ஒன்றிற்கொன்று முரணான படைப்புகள். கல்வியறிவும் பண்பும் நிறைந்த குடும்பமே சிறந்த சமுதாயத்தின் அடிப்படை என்பதை விளக்கும் 'குடும்ப விளக்கு' நூலும், கல்வியறிவு இல்லாத பெண்களால் குடும்பம் எவ்வாறு சீரழியும் என்பதைக் காட்டும் 'இருண்ட வீடு' நூலும் இவற்றிற்கான சிறந்த சன்றுகள்.
வைதீகச் சமூகக் கட்டமைப்பில் கணவனை இழந்த பெண்களுக்கு விதித்திருந்த கொடுமைகளைக் கண்டு பாரதிதாசன் கடுமையாக் கண்டித்தார். கைம்பெண்கள் கூந்தலில் மலர்ச்சூட தடுத்தல், திலகமிட தடுத்தல், அவர்களை காணுதல் அபசகுனம் எனல், அவர்களைத் தரையில் படுக்க அதிகாரமிடுதல், உணவைக் குறைத்தல் போன்ற ஒடுக்குமுறைகளைச் சாடிய பாரதிதாசன், விதவை மறுமணத்தையும் காதல் மணத்தையும் தீவிரமாக ஆதரித்தார். இளவயதில் விதவையாக்கப்படும் பெண்களின் துயரைக் கண்டு வீறுகொண்ட அவர்,
"பெண் படைத்த இவ்வுலகைப் பல்லாண் டாகப்
பெற்றுயர்ந்த நெடுவானே புனலே! கூறீர் ,
மண் படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப் பாடெதற்கு?” (பாரதிதாசன் கவிதைகள்-ப. 77)
என்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கேள்வி எழுப்பினார். இயற்கை விதிகளுக்கு முரணான வைதீகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து, கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை என்பதையும் எடுத்துரைக்கிறார்.
பாரதிதாசன் படைத்த பெண் கதாபாத்திரங்கள் வெறும் இல்லத்தரசிகளாக மட்டும் இல்லாமல், வீரம், மானம், பகுத்தறிவு மற்றும் செயல்திறன் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். சஞ்சீவி பர்வதத்தின் சாரல் காப்பியத்தில் வரும் காதலி, மலையின் உச்சியிலுள்ள மூலிகையைப் பறிக்க அஞ்சும் தன் காதலனைத் தன் விழிப்பார்வையாலேயே ஊக்கப்படுத்துகிறாள். இதனை,
"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" (பாரதிதாசன் கவிதைகள்-ப. 7)
என்ற பாடலடிகளில் எடுத்துரைகின்றார். இதில் பெண்ணை ஆற்றலின் குறியீடாக முன்வைக்கிறார். அதேபொல், பெண்களுக்கு ஆணுக்கு நிகரான பேச்சுரிமை வேண்டும் எனவும் சமூக முன்னேற்ற செயல்பாட்டில் ஆண்களைப் போலவே பெண்களுக்குச் சமஉரிமை உண்டு என்பதை அனைவரும் ஏற்கவேண்டுமென்கிறார். இதனை,
"பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே". (பாரதிதாசன் கவிதைகள்-ப. 6)
என்ற புரட்சிகர அடிகளில் எடுதுரைக்கின்றார். இவ்வடிகளில் 'முயற்கொம்பு' என்ற உவமை மிகவும் முக்கியமானது. முயலுக்கு எக்காலத்திலும் கொம்பு முளைக்காது என்பது இயற்கை. அதைப் போலவே, பெண்களை அடிமைகளாகக் கொண்டிருக்கும் ஒரு நாடு, அந்நியரிடமிருந்து விடுதலை பெற்றாலும் அது உண்மையான விடுதலையாகாது என்கிறார்.
பெண்ணுரிமைப் புரட்சிக்கான காலச்சூழலும் கொள்கை முரணும்
பாரதியார்-பாரதிதாசன் ஆகிய இருபெரும் ஆளுமைகளின் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் போற்றும் அதே வேளையில், இவ்விருவர் படைப்புகளிலும் காணப்படும் சில முரண்களைக் காலச்சூழலின் விளைவுகளாகக் கொள்ள இயலும்
பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பெண் விடுதலைக்காகவும், பெண் உரிமைக்காகவும் உரக்கக் குரல் கொடுத்த ஒரு புரட்சிப் கவிஞர். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று முழங்கிய பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் மிக ஆழமானவை. பாரதியார் படைத்த "புதுமைப் பெண்" அச்சப்பட்டு ஒடுங்கி வாழ்பவள் அல்ல. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டவளாக படைக்கப்பட்டிருக்கிறாள்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சமுதாயத்தில் சாதிக்க வேண்டுமானால், அவர்களுக்குக் கல்வி மிக அவசியம் என்பதைப் பாரதி ”ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்* என்று பாடியதன் மூலம், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதைக் சாடியிருக்கின்றார். பெண் கல்வி கற்றால் மட்டுமே அந்தச் சமுதாயமும், அடுத்த தலைமுறையும் அறிவார்ந்த சமூகமாக மாறும் என்று நம்பினார். பெண்கள் வெறும் இல்லத்தரசிகளாக மட்டும் முடங்கிவிடாமல், நாட்டின் சட்டங்களை இயற்றுவதிலும், நிர்வாகம் செய்வதிலும் ஆண்களுக்கு நிகராகப் பங்கேற்க வேண்டும் என்கிறார்.
பாரதியார் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சமத்துவத்தை மிகத் தீவிரமாக வலியுறுத்துகிறார். பெண்ணை அடிமையாக நடத்தும் சமூகம் ஒருபோதும் முன்னேற முடியாது "கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"என்று பாடி, கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமானது அல்ல, அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்ற முற்போக்குக் கருத்தை முன்வைக்கிறார்.
பாரதிதாசனின் பகுத்தறிவுச் சிந்தனையின் மிக முக்கியப் பரிமாணம் பெண் விடுதலை. சடங்குகளின் பெயராலும், குடும்ப அமைப்பின் பெயராலும் பெண்கள் முடக்கப்படுவதைக் கடுமையாக இவர் எதிர்க்கின்றார். மேலும், 'இருண்ட வீடு' என்ற படைப்பில் கல்வியறிவில்லாத பெண்களால் குடும்பமே எப்படிச் சீரழிகிறது என்பதை எள்ளலுடன் எடுத்துரைக்கின்றார். அதேபோல், 'குடும்ப விளக்கு' நூலில் பகுத்தறிவுள்ள, கல்வியறிவுள்ள பெண் ஒரு குடும்பத்தையும் சமூகத்தையும் எவ்வாறு நல்வழிப்படுத்துகிறாள் என்பதையும் விளக்கியிருக்கின்றார். அத்துடன், கைம்பெண்களுக்கு அக்காலத்தில் விதிக்கப்பட்ட கொடுமையான ஆதிக்க விதிகளுக்கு எதிராகவும் விதவைப் பெண்களின் மறுமணத்தை ஆதரித்தும் பகுத்தறிவுப் பூர்வமாகக் கேள்வி எழுப்புகிறார். பெண்களை வெறும் போகப் பொருளாகப் பார்க்காமல், அவர்களை சக மனிதராக மதிக்கும் மனப்பக்குவம் சமூகத்தில் மலர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.
பாரதிதாசன் பகுத்தறிவுப் பாதையில் பயணித்துத் தீவிரப் பெண்ணுரிமையைப் பாடினாலும், அவரது உன்னதப் படைப்பான 'குடும்ப விளக்கு' நூலில் பெண்ணை குடும்பக் கட்டுக்குள்ளும், கணவனுக்குப் பணிவிடை செய்யும் எல்லைக்குள்ளும் படைத்துக் காட்டியிருப்பது குறிப்பித்தக்கது.. பாரதிதாசனின் பகுத்தறிவுப் பெண், மொழிப்பற்றும் சமூகக் கடமையும் கொண்டிருந்தாலும், அவளது முதன்மைப் பணி இல்லறக் கடமைகளைச் செவ்வனே ஆற்றுவதாகவே அமைத்துக் காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
மகாகவி பாரதியும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் தமிழ்ச் சமூகச் சூழலில் பெண்ணுரிமை மற்றும் சமூக விடுதலைக்கான தார்மீகத் தளத்தை அமைத்துக் கொடுத்த இணையற்ற இலக்கியவாதிகள். பாரதியார் ஆன்மீக மற்றும் தேச உணர்வுகளோடு பெண்ணின் அக ஆற்றலை 'சக்தி'யாக மீட்டெடுக்க முயன்றார். பாரதிதாசனோ மூடநம்பிக்கைகளை உடைத்து, கல்வி, விதவை மறுமணம், சம உரிமை ஆகியவற்றைப் பகுத்தறிவுப் பூர்வமாகச் சமுதாயத்தில் விதைத்தார்.
இருவரிடமும் சில கால முரண்பாடுகளும், கொள்கை ரீதியிலான நடைமுறைச் சிக்கல்களும் இருந்தபோதிலும், அவர்கள் தங்களின் கவித்துவ ஆற்றலால் பெண்ணடிமைத் தளைகளை அறுத்து எறிந்தனர். இன்றைய தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், அரசியல் துறைகளிலும் தடம் பதித்து முன்னேறுவதற்குக் பாரதியாரின் 'புதுமைப் பெண்' கனவும் , பாரதிதாசனின் 'குடும்ப விளக்கு' காட்டிய கல்விப் பாதையும் மிக முக்கிய உந்துசக்தியாக விளங்குகின்றன.
துணைநூல் பட்டியல்
மகாகவி பாரதியார், அறிஞர் C.N.அண்ணாதுரை-கவிஞர் பாரதிதாசன், கலை மன்றம், சென்னை-1, 1953.
பாரதியார் கவிதைகள், வானவில் பிரசுரம் : சென்னை, 1977
பாரதி காலமும் கருத்தும், ரகுநாதன், மீனாட்சி புத்தக நிலையம் : சென்னை, 1982
பாரதிதாசனும் பொதுவுடைமைத் தத்துவமும் பாவேந்தரும் மொழிபெயர்ப்பும்,
மருதநாயகம், ப. (பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம்- தஞ்சாவூர், 2003.
பாரதிதாசன் கவிதைகள், பரமசிவன். தொ(தொ. ஆ), நியூ சென்சூரி புக் ஹவுஸ், சென்னை. 1992.
பாரதிதாசனின் மார்க்சியம், ஜெகநாதன். ஆ, அகரம் வெளியீடு, கும்பகோணம், 1996.
பெரியார் களஞ்சியம்(ஆறாம் தொகுதி), கி. வீரமணி (தொ. ஆ), பெரியார்
சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை – 7, 1991.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









