தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 38 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களிலும் திறந்தவெளியிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இம் 38 இடங்களில் சற்றொப்ப 100 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் வரை என இம் 38 இடங்களில் காணப்படுகின்றன. தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் மொழியின் தொன்மைக்கும் தமிழ் எழுத்து வட்டெழுத்தாகி அடுத்து சோழர் கால எழுத்தாகி பின் இந்நாள் எழுத்தாக உருத்திரிந்ததற்கு சான்றாக உள்ளன. திரு. ஐராவதம் மகாதேவன் பெருமுயற்சி எடுத்து இவற்றை எல்லாம் அடர்வு செய்து தென்னகத்திற்கு சமணர் வச்சிர நந்தி தலைமையில் வடக்கே இருந்து வந்ததை ஒட்டி தமிழகத்தில் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் அமைந்த தமிழி கல்வெட்டுகள் கி.மு. 2 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ம் நூற்றாண்டு வரையான காலத்தன என்று காலவரையறை செய்தார். எனினும் புதுக்கோட்டை த் தமிழ் பிராமி நடுகல் கல்வெட்டு கங்கரை குறிப்பது 5 -ம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமியின் பயன்பட்டை உறுதி செய்கின்றது. இக்கல்வெட்டுகள் உள்ள தளங்களை சமண துறவிகளின் படுக்கை என்று ஐராவதம் மகாதேவன் கூறினாலும் மேட்டுப்பட்டி தமிழி கல்வெட்டு "அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ" என்பதிலும், புகளூர் தமிழி கல்வெட்டு "மூதா அமண்ணன்" என்பதிலும் தான் சமணர் பற்றிய தெளிந்த குறிப்பு உள்ளது மற்றவற்றில் அவ்வாறு தெளிவாக இல்லை. இதனால் இவற்றை ஆசீவகர் படுக்கைகள் என்று பேரா. க. நெடுஞ்செழியன் கூறுகிறார். ஆனால் அதற்கும் தெளிவான கல்வெட்டுக் குறிப்பு ஏதும் இல்லை. இக்குன்றுகளின் இருப்பிடத்தில் பிற்காலத்தே சமண புடைப்பு சிற்பங்கள் அமைந்ததாலும் ஐயனார் கோவில்கள் அமைந்ததாலும் இக் கல்வெட்டுகள் சமணர்க்குரியன ஆசீவகர்க்குரியன என்பது தவறு. இக்கல்வெட்டு விளக்கம் அந்த தவற்றை வெளிப்படுத்தவே அமைந்ததாகும். இக்குகைகளில் அமைந்த கற்படுக்கைகள் மருத்துவம் மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கைகள் என்றே எண்ணத் தோன்றுகின்றன. ஏனென்றால் முற்றும் துறந்த சமண, ஆசீவக முனிவர் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கப்போவதில்லை. இடைவிடாமல் இடம்பெயர்வது தான் முற்றத் துறந்தவரின் பண்பு.
அண்மையில் கிடைத்த கொங்கப்பட்டி கல்வெட்டுத் தொடரைக் கருத்தில் கொண்டு பிற பிராமிக் கல்வெட்டுகளை மீள்பார்வை செய்த போது இக் கல்வெட்டுகளில் இடம்பெறும் அந்தை, உபசன் ஆகிய பெயர்ச் சொற்கள், அவற்றின் பொருள் பிராமணர் தொடர்புடையவை என்று தெரிவிக்கின்றன. இவ்வாறு சற்றொப்ப 20 கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழகத்தில் தமிழ் பிராமணர் இருப்பை 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் செல்கின்றன. இதனால் தமிழ்ப் பிராமணரை ஆரியர், யூத பிராமணர், நாடற்றவர், மொழியற்றவர் என்று சிலர் சொல்வது வல்லடிவழக்கு (unreasonable insistence) என்று தெரிகிறது. தமிழ் பிராமணரைத் தமிழ் மண்ணின் மைந்தராக ஆதிக்குடியாக அடையாளப்படுத்தும், முகவரி தரும் இப்படியான கல்வெட்டுச் சான்று வேறு எவருக்கும் இல்லை என்பதே உண்மை.
வியாசரின் புராண மதம் கி.பி. 6 ம் நூற்றாண்டில் அறிமுகமாவதற்கு முன்பு பிராமணர் வேள்வி மதத்தையும் தந்திர யோக மதத்தையும் பின்பற்றி வாழ்ந்தனர். எனவே அவர்களில் இரந்து வாழும் தவசிகள் மருத்துவத் தொண்டு புரிய கற்படுக்கைகளை ஏற்படுத்தச் செய்தனர். இதற்கு மாங்குளம், மேட்டுப்பட்டி, நெகனூர்பட்டி கல்வெட்டுகள் சான்றாகும். மக்கள் இத்தகு இரந்து வாழும் சமண, ஆசீவக, பிராமண முனிவர்களை தமது உடல் நலம், மனநலம் கருதி நாடிச் சென்று பார்த்தனர், எதிர்காலம் பற்றி அறிய குறிகேட்கவும் சென்றனர். இம்மக்களில் அரசர், வணிகர், பிராமணர், ஊரார், எளியோர் அடங்குவர். இவர்கள் தாம் இந்த குகைத்தள படுக்கைகளும் கல்வெட்டுகளும் உருவாகக் காரணமானவர். இக்கல்வெட்டுகள் மூலம் அக்காலத் தவசிகள் மீது மக்கள் கொண்டிருந்த நன்மதிப்பை விளங்கிக்கொள்ள முடிகின்றது. மாங்குளம், மாமண்டூர், புகளூர், நெகனூர்பட்டி ஆகிய இடத்து கல்வெட்டுகளில் துறவு பிராமணத் தாய், தந்தையருடைய பிள்ளைகளும் குறிக்கப்படுவது பிராமணர் வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தையும் முதுமையில் அந்தணர் எனப்படும் இரந்து வாழும் துறவறத்தையும் கடைபிடித்து வாழ்ந்தது பிரம்மச்சரியம், இல்லறம், காடுறை அறம், துறவறம் என்னும் நால்வர்க்க வாழ்க்கையைக் கடைபிடித்து வாழ்ந்தனர் என்று உணர்த்துகின்றது. ஆனால் புத்த, சமண, ஆசீவகம் மதத்திற் உள்ளது போல் இந்த துறவு பிராமணர் முற்றும் துறந்தவர் (complete renunciate) அல்லர். துறவு வாழ்விலும் இவர்தம் உறவினர் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருந்தனர் என்று தெரிகின்றது. "துவிஜ" எனப்படும் இருபிறப்பாளர் என்ற சொற்பொருள் தியானத்தவ வாழ்க்கையை ஏற்ற பின் இரண்டாவது பிறப்பெடுத்தவர் என்ற பொருளில் பிராமணரைக் குறிக்க வழங்குவது ஈண்டு நோக்கத்தக்கது. இந்த தவவாழ்வினால் முக்கால அறிவு, சித்துக்கள் கிடைக்கப்பெற்றவராக இந்த துறவு பிராமணர் இருந்ததால் மக்களால் அதிகமாக மதிக்கப்பட்டனர். பின்பு பிராமணர் கி.பி. 6 ம் நூற்றாண்டு அளவில் வியாசர் தோற்றுவித்த புராண மதத்தை தழுவிய இந்த தந்திர யோகத்தை அடியோடு கைவிட்டதனால் முக்கால அறிவு, சித்துக்கள் அற்றவராக ஆகிப்போனதால் மக்களிடம் தமக்கு இருந்த தொழத்தக்க மதிப்பை இழந்தனர் என்று தெரிகின்றது.
இத்தமிழி கல்வெட்டுகளில் புழங்கும் சொல்லாட்சி அக்காலப் பேச்சு வழக்குத் தமிழ் என்பது புலனாகின்றது. இவற்றில் புழங்கும் தமிழ் அல்லாத சொற்களும் பெயர்ச் சொற்களும் பிராகிருத மொழிக்கானவை, காட்டாக தம்மம், தன்மன், உதயனஸ ஆகியன. கல்வெட்டு எழுத்துகளில் நெடில் குறிலாகவும், ஒற்றெழுத்து இன்றியும் எழுதப்பட்டுள்ளன. சில கல்வெட்டுகளில் ஆண்பால் ஈறு "அன்" தனித்தே எழுதப்பட்டுள்ளது. இகர ஈற்றை அடுத்து யகர மெய் இடப்பட்டுள்ளதானது அக்கால எழுத்து நடையை காட்டுகின்றது. இகரம் எகரமாக குறிக்கப்பட்டுள்ளது. இக்காலத்திற்கும் பயன்படும் பல அரிய தனித்தமிழ்ச் சொற்கள் இக்கல்வெட்டுகளில் உள்ளன. மாங்குளம் முதல் நெற்றம்பாக்கம் வரை பொதுமக்கள் கல்வெட்டுகளுக்கும் கிண்ணிமங்கலம் முதல் புதுக்கோட்டை வரை நடுகல் வகை கல்வெட்டுகளும் ஊர்வாரியாக விளக்கப்பட்டுள்ளன.
மாங்குளம்: மதுரைக்கு வடக்கில் மேலூர் போகும் தேசிய நெடுஞ்சாலையில் கத்தப்பட்டி என்ற கிராமத்தில் பிரிந்து வடமேற்கில் சென்றால் மாங்குளத்தை அடையலாம். இவ் ஊரினை அண்டிய மீனாட்சிபுரம் என்ற ஊரை ஒட்டி தெற்கு வடக்காக 'ஓவாமலை' என்றும் 'கழுகுமலை' என்றும் மக்களால் அழைக்கப்படும் இரு குன்றுகள் உள்ளன. இதன் உச்சியில் கிழக்குப் பகுதியில் கிழக்கு முகமாய் ஐந்து குகைகள் இயற்கையாய் அமைந்துள்ளன. இவற்றில் கற்படுகைகளும், நீர்வடி விளிம்புகளும் வெட்டப்பட்டு வதிவிடங்களாக மாற்றி அமைத்துள்ளனர். இதில் நான்கில் பட்டிப்புரோலு எழுத்து முறையில் ஆறு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு 1:1 > மாங்குளம் மலை ஏறியதும் உள்ள முதல் குகைத் தளத்தில் இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை பாறை முகப்பில் அமைந்த நீர்வடி விளிம்பின் கீழே உள்ளன. முதற்கல்வெட்டு ஒரு வரியில் உள்ளது.
கணிய் நந்த அஸிரிய்இ குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்
கணி - தியானத்தில் உயர்நிலை எய்திய பிச்சை எடுத்து வாழும் முனிவர்க்கு உரிய பட்டம், title for attainment of higher state in meditation by an ascetic ; குவ்வன் - பாடம் சொல்பவன், தீர்ப்பு சொல்பவன்; ஈத்தான் -- கொடுத்தான்; பணவன் - மணிக்கல் சுரங்க பொறுப்பாளர், precious stone mine in-charge; கொட்டுபித்த - கொடுத்த, பள்ளி - கற்படுக்கை.
விளக்கம்: கணி நந்த ஆசிரியர் நடத்திய கல்விச் சாலையில் வேத பாடம் சொல்வானுக்கு தருமமாய் நெடுஞ் செழியனின் மணிக்கல் சுரங்கப் பொறுப்பாளன் கடலன் வழுதி என்பான் இக் கற்படுக்கையை உருவாக்கித் தந்தான் என்பது இதன் பொருள். இக்கல்வெட்டில் "அன்" ஆண்பால் ஒருமை ஈறு பணவன், கடலன் என தனியே பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.
கல்வெட்டு 1:2 > முதற் கல்வெட்டு உள்ள இடத்திலேயே இக்கல்வெட்டும் உள்ளது.
கணிய் நத்திய் கொடிய்அவன்
விளக்கம்: இக்கற்படுக்கையை கணி நத்தி என்பவன் ஏற்படுத்தி கொடுத்தான். டகர மெய் சேர்த்து கொட்டியவன் என படிக்க வேண்டும். நத்தி இன்னொரு தியானத் துறவி ஆவார். இவரும் கணி என்ற பட்டத்தை அடைந்தவர்.
கல்வெட்டு 1:3 > முன் இரு கல்வெட்டுகளின் குகைக்கு வடக்கே கீழ்ப்புறம் உள்ள குகையின் வெளிப்புற பாறைச் சுவரில் ஒரே வரியில் நீளமாக பொறிக்கப்பட்டுள்ளது.
கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்
சாலகன் - வேட்டன், மனைவிவழி உறவினன்
விளக்கம்: கணி நந்த ஆசிரியரின் கல்விச் சாலையில் வேத பாடம் சொல்லிக் கொடுப்பவனுக்கு நெடுஞ்சழியனின் மனைவிவழி உறவினான இளஞ்சடிகனின் தந்தை சடிகன் தர்மமாக கற்படுக்கை அமைத்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 1:4 > மேற்கண்ட குகைத்தளத்தின் மேல் மற்றொரு குகைத்தளத்தில் காணப்படும் ஒரு வரி நீண்ட கல்வெட்டு இது.
கணிஇ நதஸிரிய் குவ[ன்] -- -- வெள்அறைய் நிகமது காவதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்
நிகமத்து - ஊரின்; காவிதி - பெண் துறவி, meditator; காழி - உடலுழைப்பு துன்பம், திக்கர் - தவிர்த்தவர் காழிதிக்கர் - உடலுழைப்பு தவிர்த்து பிச்சையெடுத்து வாழ்பவர்; அந்தை - பிச்சையெடுக்கும் அந்தணத் துறவி, பிராமணர்; பிணவு - தங்கிடம்
விளக்கம்: வெள்ளறை என்னும் ஊரில் உள்ள பெண் துறவாட்டியான பிச்சைக்கார அந்தணப் பெண்ணின் மூத்த மகன் கணி நந்த ஆசிரியரின் த கல்விச் சாலையில் வேத பாடம் சொல்லும் பணியாளுக்கு தங்கிடம் செய்து கொடுத்தான் என்பதே இதன் பொருள். ககர மெய் சேர்த்தால் திக்க என்றாகும். இதில் குவ்வன், காவிதி அந்தை, அவள் மூத்த மகன் ஆகிய மூவருமே பிராமணர். நந்தாசிரியர் வேத பாடம் சொல்பவனுக்கு ஆதரவளிப்பதை வைத்து அவரும் பிராம்மணக் குடியில் பிறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். கணி என்ற பட்டம் ஆசீவகர், பிராமணர் என எவரும் கொள்ளும் பட்டம் தான். இனம் இனத்தோடு சேரும் என்ற முதுமொழிப்படி பிராமணர் வேதக் கல்விக்கு ஆதரவு தருவது இயல்பு. பெண் துறவாட்டியின் மூத்த மகன் குறிக்கப்படுவதைப் பார்த்தால் அவள் நால்வர்க்கு வாழ்க்கை முறைப்படி இளமையில் இல்லறமும் முதுமையில் துறவும் மேற்கொண்டவள் எனத் தெரிகிறது.
கல்வெட்டு 1:5 > நான்காவது கல்வெட்டு உள்ள குகைத்தளத்திற்கு தெற்கே இரு சிறிய கல்வெட்டுகள் உள்ளன. அதில் இது முதலது.
சந்தரிதன் கொடுபிதோன்
சந்தை - அதிக அளவு; அர் - பொருள்; ஈத்தன் - கொடுப்பவன். அரிதன் என்றால் நாட்டுப் பிரிவின் எல்லையை கடந்து ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு பொருளைக் கொண்டு போய் கொடுப்பவன் (delivery man).
விளக்கம்: அதிக அளவு பொருளை கொண்டு கொடுக்கும் சந்தரிதன் இந்த கற்படுக்கையை ஏற்படுத்தி கொடுத்தான் எனப் பொருள் . டகர மெய் சேர்த்து கொட்டுபித்தோன் என படிக்க வேண்டும். செதுக்கி அமைத்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.
கல்வெட்டு 1:6 > 1:5 கல்வெட்டு அமைந்த குகைத் தளத்திலேயே இக்கல்வெட்டும் அமைந்துள்ளது.
வெள்அறை நிகமதோர் கொடிஓர்
விளக்கம்: வெள்ளறை ஊரார் இக்குகையின் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தனர் என்பது இதன் பொருள். தகர மெய் சேர்த்து நிகமத்தோர் என்றும் டகர மெய் சேர்த்து கொட்டியோர் என்றும் படிக்க வேணடும். நிகமத்தோர் இங்கு வணிகரைக் குறிக்காது
_____________________________
அரிட்டாபட்டி: மதுரைக்கு வடக்கில் 20 கி. மீ. தொலைவில் மேலூர் செல்லும் வழியில் சாலையை விட்டு சற்று விலகி அரிட்டாபட்டி உள்ளது. அவ் ஊரில் உள்ள கழிஞ்ச மலையின் அடிவாரத்தில் இயற்கையான குகை ஒன்றில் கற்படுகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் உட்புகாமல் இருக்க நீர்வடி விளிம்பு குகையின் நெற்றிப்புறத்தில் வெட்டப்பட்டு உள்ளது. அதன் கீழ் ஒன்றும் மேல் ஒன்றும் என இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
கல்வெட்டு 2:1 > நீர்வடி விளிம்பின் கீழ் முதல் கல்வெட்டு உள்ளது. 1971 ல் இது கண்டு அறியப்பட்டது.
நெல்வெளிஈய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதோன்
சிழிவன் - துணிவணிகன்; முழாகை - கற்படுக்கை, flat stone.
விளக்கம்: நெல்வெளியைச் சேர்ந்த துணி வணிகன் அதினன் வெளியன் என்பான் இக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தான் எனப் பொருள். ஒற்று எழுத்து சேர்த்து கொட்டுப்பித்தோன் எனப் படிக்க வேண்டும்.
கல்வெட்டு 2:2 > நீர்வடி விளிம்பின் மேல் ஒரே வரியில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இது 2003 ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. மிக மங்கலாகவும் தேய்ந்தும் உள்ளது.
இலஞ்சிய் எளம் பேராஅதன் மகன் எமயவன் இவ் முழ உகைய் கொடுபிதவன்
விளக்கம்: இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த இளம் பேர்அதன் மகன் இமயவன் என்பவன் இக் கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது பொருள். ஒற்று சேர்த்து கொட்டுபித்தவன் எனப் படிக்க வேண்டும்.
கல்வெட்டு 2:3 > செப். 15, 2003 ல் இந்து நாளேடு வெளியிட்ட புதிதாக கண்டறியப்பட்ட மூன்றாவது அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டு இது. மெல்லிய கோடுகளால் தெளிவின்றி காணப்படும் இக்கல்வெட்டு 33 எழுத்துகளுடன் 3.10 மீட்டர் நீளத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது.
இலஞ்சிய் வேள் மாப்பரவன் மகன் எமயவன் நல்முழாஉகை கொடுபிதவன்
விளக்கம்: இலஞ்சி எனும் ஊரின் வேள் ஆன (அரையன்) மாப்பரவன் மகன் இமயவன் நல்ல கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான் என்பது இதன் பொருள். மாப்பரவன் என்றால் மீனவர் தலைவன். முன்னைய கல்வெட்டில் இவன் பெயர் இளம் பேராதன் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரே செய்தி இரு இடங்களில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒற்று சேர்த்து கொட்டுப்பித்தவன் எனப் படிக்க வேண்டும்.
_____________________________
திருவாதவூர்: மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட இவ் ஊர் மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ் ஊரின் புறத்தில் உவா மலை என்றொரு குன்றில் உள்ள குகைத் தளப் புருவப் பகுதியில் இரு கல்வெட்டுகள் காணப்படு கின்றன.
கல்வெட்டு 3:1 கீழ் உள்ள குகையின் புருவத்தில் நீர்வடி விளிம்பின் மேல் பகுதியில் ஒரே வரியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.
பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்
பாங்கு + ஆடை - ஒருவகை சல்லடை ஆடை, a type of perforated cloth; அரிதன் - அர் + ஈதன் > அர் என்றால் பொருள், ஈதன் என்றால் கொடுப்பவன், delivery man like courier, Amazon, zomato, Dunzo
விளக்கம்: பாங்கு என்னும் ஒரு வகை துளையிட்ட ஆடையை வேற்றிடத்திற்கு கடத்த உதவுபவன் இக்குகைத் தளத்தைச் செய்து கொடுத்தான் என்பது இதன் பொருள். காட்டாக, பாங்கு ஆடை சிந்துவெளி பூசசக அரசன் பொம்மைத் தோளில் போர்த்திய துண்டில் உள்ள பூவேலைத் துளையைப் போன்றது. விலையுயர்ந்த இவ்வாடையை அரசர் துறவிகளுக்கு சிறப்பு செய்யும் முகமாக கொடுத்தனர்.
கல்வெட்டு 3:2 நீர்வடி விளிம்பின் கீழ் பகுதியில் ஒரே வரியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு.
உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்
உபசன் - உபாசனை செய்யும், குறி சொல்லும் பிராமணப் பூசகன்; பரசு - மூங்கில் ; உறை - வதிவிடம்.
விளக்கம்: பூசகரைக் குறிக்கும் உவச்சர் என்ற சொல்லின் திரிபு தான் உபசன் என்பது. ஒற்றை தெய்வத்தை உபாசனை செய்யும் பூசகன் எனவும் கொள்ளலாம். உவா + அச்சன் = உவச்சன். உவா என்றால் நிலவு. தலைவாவு அமாவாசையிலும் முழு நிலவிலும் குறிசொல்பவன் என்பதை வைத்தே உவச்சன் என்ற சொல் உருவாக்கப்பட்டது. கல்வெட்டில் பிராமண பூசகன் மூங்கில் சூழ்ந்த அல்லது மூங்கிலில் அமைத்த வதிவிடம் கொடுப்பித்தான் என்று கூறுகிறது.
_____________________________
கீழவளுவு: மதுரையில் இருந்து 38 கி.மீ தொலைவில் மேலூர் வட்டத்தில் மேலூர் - திருப்பத்தூர் சாலையில் கீழவளவு அமைந்திருக்கிறது. இவ் ஊரின் சற்று முன்பாக இயற்கையாக உள்ள குன்றின் அடிவாரத்திலும் நடுவிலும் குகைத்தளத்தில் பல கற்படுக்கைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர் மலை என அழைக்கப்படும் குன்றின் நடுவில் உள்ள குகைத்தளம் ஒன்றன் முகப்பு பகுதியில் நீர்வடி விளிம்பின் கீழாக வலம் இடமாக பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு 4:1> உப[ச]அன் தொண்டி[ல]வோன் கொடு பளிஇ
விளக்கம்: பிராமணப் பூசகன் தொண்டிலவோன் கொடுத்த கற்படுக்கை இது எனப் பொருள்.
_____________________________
கொங்கர்புளியங்குளம்: மதுரை திருமங்கலம் வட்டத்தில் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கும் செக்கானூரணிக்கும் இடையில் கொங்கர்புளியங்குளம் உள்ளது. இந்த ஊர் அருகில் பெருமாள் கோவில் மலையில் இயற்கையான குகைத்தளத்தில் 50 க்கும் மேற்பட்ட கற்படுகைகளும் மூன்று தமிழி கல்வெட்டுகளும் உள்ளன.
கல்வெட்டு 5:1> குகையின்முகப்பு நெற்றிப் பாறைக்கு சற்று தள்ளி வெட்டப்பட்டு உள்ள கல்வெட்டுகளில் இது முதலாவதாக உள்ளது.
குற கொடுபிதவன் உபசஅன் உபறுவ(ன்)
விளக்கம்: உபறுவன் என்னும் பெயருடைய பிராமணப் பூசகனால் இக் குகைத்தளம் அமைக்கப்பட்டது என்பதே இதன் பொருள்.
கல்வெட்டு 5:2> இக்கல்வெட்டு மூன்று கல்வெட்டுகளுள் நடுவே உள்ளது.
குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன் ஓன்
குறு - குகை; கொடல்கு - ஆழ் குளம்
குகைத்தள கற்படுகையும், ஆழ்குளமும் குடைவிப்பதற்கு வெள்ளிக்காசு ஈந்தவன் செற்அதன் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 5:3> இது இறுதியில் பொறிக்கப்பட்டுள்ள மூன்றாம் கல்வெட்டு.
பாகன் ஊர் பே(ர)தன் பிடன் இத்த வெபொன்
பேராதன் - பெருஞ்செல்வன்; ஈத்த - கொடுத்த; வெ - வெள்ளி; பொன் - காசு.
விளக்கம்: பாகனூரைச் சேர்ந்த பெருஞ்செல்வன் பிட்டன் என்பவனால் குகைத் தளம் அமைக்க வெள்ளிக்காசு வழங்கப்பட்ட சேதியைக் குறிக்கிறது.
_____________________________
மறுகால்தலை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கில் 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊருக்கு அருகில் மறுகால்தலை உள்ளது. இவ் ஊரின் பூவிலுடையார் மலையின் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் இயற்கையான குகைத்தளத்தில் சில கற்படுக்கைகள் அமைந்துள்ளன.
கல்வெட்டு 6:1> குகைத்தள நெற்றிப் பகுதியில் ஒரே வரியில் பெரிய எழுத்துகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
வெண்காஸிபன் கொடுபித கல் கஞ்சனம்
விளக்கம்: வெண்காசிபன் என்பவன் கற்படுக்கை அல்லது கற்கட்டடம் அமைத்துக் கொடுத்தான் என்பதே இதன் பொருள். மெய் சேர்த்து கொட்டுப்பித்த எனப் படிக்க வேண்டும்.
_____________________________
வரிச்சியூர்: மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் வரிச்சியூர் உள்ளது. இங்குள்ள உதயகிரி எனப்படும் சுப்பிரமணிய மலையில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியிலும், கிழக்கு நோக்கி உள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டப்பட்ட நீர்வடி விளிம்பின் மேலும் கீழும் ஆக மூன்று கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு 7:1 > இது வடக்கு நோக்கிய சிறுகுகையின் நெற்றிப் பாறை முகப்பில் பொறிக்கப்பட்டு உள்ளது.
ப(ளி)ய் கொடுபி - - - --
விளக்கம்: இக் கற்படுக்கையை ஈந்தவர் பெயர் குறிக்கப்பட்டாலும் அது சிதைந்து போனதால் கொடையாளியின் பெயர் தெரிந்திலது.
கல்வெட்டு 7:2 > இது கிழக்கு நோக்கிய பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறையின் நீர்வடி விளிம்பின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது.
அடா- - - றை ஈதா வைக - - - ஒன் நூறு கலநெல் -- - -
விளக்கம்: இக் குகைத்தளம் அமைக்க ஒரு நூறு கலம் நெல் வழங்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது. கொடை வழங்கினவர் பெயர் சிதைந்து உள்ளது.
கல்வெட்டு 7:3 > இக் கல்வெட்டு கிழக்கு நோக்கிய பெரிய குகையின் நெற்றிப் பாறை நீர்வடி விளிம்பின் கீழ்ப் பகுதியில் பொறிக்கப்பட்டு உள்ளது.
இளநதன் கருஇய நல் முழஉகை
கருவிய - செய்த. செயலை குறிக்கும் கருமம் என்ற சொல்லை நோக்குக.
விளக்கம்: இக் கற்படுகையை செய்து கொடுத்தவன் இள நத்தன் என்பான் என்பது இதன் பொருள். தகர மெய் சேர்த்து இள நத்தன் எனப் படிக்க வேண்டும்.
_____________________________
விக்கிரமங்கலம்: மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு மேற்கே விக்கிரமங்கலம் அமைந்து உள்ளது. இங்கு உண்டாங்கல் என்ற சிறு குன்று அமைந்து உள்ளது. இங்கு ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு 8:1> ஒரு சிறு தனிப்பாறையின் கீழ் அமைந்த சின்னஞ்சிறு குகைத் தளத்தின் விதானத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
எஇய்ல் அர்இய்தன் சேவித்ஓன்
விளக்கம்: பொருளை அரண்மனைக் கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டு செல்பவன் செய்வித்த கற்படுக்கை இது என்பதே இதன் பொருள்.
கல்வெட்டு 8:2> இரண்டாம் கல்வெட்டு இங்குள்ள பெரிய குகைத்தளத்தின் நெற்றியில் வெட்டப்பட்டு உள்ளது.
எம்ஊர் சிழிவன் அதன்தியன்
சிழிவன் - துணி வணிகன்
விளக்கம்: எம்மூரினது துணி வணிகன் அதன் திய்யனால் இக்கொடை நல்கப்பட்டது என்பதே இதன் பொருள். தியன்- யகர ஒற்று சேர்த்து திய்யன் எனப் படிக்க வேண்டும்.
கல்வெட்டு 8:3> இக்கல்வெட்டு பெரிய குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கை ஒன்றன் தலைப்பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.
அந்தைய் பிகன் மகன் வெந்அதன்
விளக்கம்: பிச்சை கொண்டு வாழும் பிராமணத் துறவி பிக்கனின் மகன் வெண்அதன் என்பானால் கொடையாக நல்கப் பட்டது என்பதைக் குறிக்கிறது. பிகன் - க் என்ற ஒற்றெழுத்து சேர்க்க வேண்டும்.
கல்வெட்டு 8:4> இன்னொரு கற்படுக்கையின் தலைப்பகுதியில் வெட்டப்பட்டு உள்ளது.
பேதலை குவிரன்
விளக்கம்: பேதலை எனும் ஊரைச் சேர்ந்த குவிரன் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 8:5> இன்னொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
செங்குவிரன்
விளக்கம்: செங்குவிரன் என்பான் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 8:6> மற்றொரு கற்படுக்கையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
கு (வி)ரதன்
விளக்கம்: குவிரதன் இப்படுக்கையை அமைத்தான் என்பது இதன் பொருள்.
_____________________________
மேட்டுப்பட்டி: மதுரைக்கு மேற்கில் 40 கி.மீ. தொலைவில் பேரணைப் பகுதியில் மேட்டுப் பட்டி அமைந்திருக்கின்றது. இவ்வூரின் வைகையாற்றுத் தென் கரையில் சித்தர் மலை, மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படும் மலை உள்ளது. மலை உச்சயில் மகாலிங்க சுவாமி கோவிலுக்குப் போகும் வழியில் பஞ்சபாண்டவர் குகை எனப்படும் இயற்கையான நீண்ட பெருங் குகைத் தளம் ஒன்று உள்ளது. இதன் நெற்றிப் பாறை விளிம்பின் அடியிலும் கற்படுக்கையின் தலைப் பகுதியிலும் பத்து தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு 9:1> குகைத்தள முகப்புப் பாறையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. ஒரு மீட்டர் நீளத்தில் ஐந்து சொற்களைக் கொண்டுள்ளது.
அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ
விளக்கம்: மதுரையைச் சேர்ந்த சமண முனிவன் (அமணன்) அத்திரன் என்பானுக்குரிய உறைவிடம், இது உதயனுடைய கொடை எனப் பொருள். மதுரை இக்கல்வெட்டில் மதிரை என சரியாகக் குறிக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டு 9:2> குகைத்தள கற்படுக்கைகளில் இடப்புறம் அமைந்த முதற் கற்படுக்கையில் வெட்டப்பட்டு உள்ள கல்வெட்டு இது.
அந்தை அரிய்தி
விளக்கம்: இரந்து வாழும் பிராமணன் அரிதிக்கு உரிய கற்படுக்கை எனப் பொருள்.
கல்வெட்டு 9:3> மேல் வரிசையில் அமைந்த மற்றொரு கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ள கல்வெட்டு இது.
அந்தை இராவதன்
விளக்கம்: இரந்து வாழும் பிராமணன் இராவதன் என்பானுக்கு உரிய கற்படுக்கை எனப் பொருள்.
கல்வெட்டு 9:4> மேல் வரிசைக் கற்படுக்கை ஒன்றில் உள்ள கல்வெட்டு இது.
(ம)திர அந்தை (வி)ஸுவன்
விளக்கம்: மதுரைச் சேர்ந்த இரந்து வாழும் பிராமணன் விசுவனுக்கு அமைத்த கற்படுக்கை எனப் பொருள்.
கல்வெட்டு 9:5> மேல் வரிசையில் நான்காம் கற்படுக்கையில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.
அந்தை சேந்தன் அதன்
விளக்கம்: இரந்து வாழும் பிராமணன் சேந்தன் அதனுக்கு அமைத்துக் கொடுத்த கற்படுக்கை எனப் பொருள்.
கல்வெட்டு 9:6> மேல் வரிசையில் உள்ள ஐந்தாம் படுக்கையில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.
சந்தந்தை சந்தன்
விளக்கம்: இரந்து வாழும் முனிவனுக்கு சந்தன் இப்படுக்கையை செய்தான் எனப்பொருள்.
கல்வெட்டு 9:7> கீழ்வரிசை கற்படுக்கை ஒன்றை ஒட்டி வெட்டப்பட்ட கல்வெட்டு இது.
பதின் ( ஊர்) அதை
அதை - கல்
விளக்கம்: பதின் ஊரார் செய்த கற்படுக்கை எனப் பொருள்.
கல்வெட்டு 9:8> கீழ்வரிசைப் கற் படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது.
குவிர அ(ந்தை) சேய் அதன்
விளக்கம்: குவிரந்தை என்னும் துறவிக்கு சேய் அதன் என்பவன் கற்படுக்கை செய்தளித்தான் என்று பொருள்.
கல்வெட்டு 9:9> கீழ்வரிசைக் கற்படுக்கை ஒன்றன் தலைப் பகுதியில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.
குவிரந்தை வேள் அதன்
விளக்கம்: குவிரந்தை என்னும் துறவிக்கு வேள் அதன் செய்த படுக்கை எனப் பொருள்.
கல்வெட்டு 9:10> கீழ்வரிசைப் படுக்கையில் உள்ளது.
திடிஇல் அதன்
விளக்கம்: திடியில் அதன் என்பானால் அமைக்கப்பட்ட கற் படுக்கை என்பது இதன் பொருள். இப்போது திடியன் என்ற பெயரில் இவ் ஊர் மேட்டுப்பட்டிக்கு தென்கிழக்கில் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ளது என்பர்.
_____________________________
கருங்காலக்குடி: மதுரை மேலூர் வட்டத்தில் மேலூர் - திருச்சி செல்லும் வழியில் உள்ள ஊர் இது. இந்த கிராமத்தில் பஞ்சபாண்டவர் குட்டு எனும் சிறு குன்று உள்ளது. இக்குன்றின் இயற்கையான குகைத் தளத்தில் பல படுக்கைகள் உள்ளன.
கல்வெட்டு 10:1 > குகையின் முகப்புப் நெற்றிப்பாறை நீர்வடி விளிம்பில் ஒரு கல்வெட்டு உளளது.
எழைய் ஊர் அரிதின் பளி
விளக்கம்: எழையூரைச் சேர்ந்த நாட்டு எல்லையை கடந்து பொருளை மாற்றிடத்திற்கு கடத்த உதவுபவன் அளித்த கற்படுக்கை எனப் பொருள். ளகர மெய் சேர்த்து பள்ளி எனப் படிக்க வேண்டும்.
____________________________
முதலைக்குளம்: மதுரை உசிலம்பட்டி வட்டத்தில் மதுரைக்கு மேற்காக விக்கிரமங்கலம் அருகில் முதலைக்குளம் உள்ளது. விக்கிரமங்கலம் உண்டாங்கல்லு மலை இதன் அருகே உள்ளது.
கல்வெட்டு 11:1> சின்ன உண்டாங்கல்லு மலையில் இராக்கிப்புடவு என்ற குகையின் புருவத்தில் 164 செ.மீ. நீளத்தில் இக் கல்வெட்டு உள்ளது.
வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்
விளக்கம்: அயம் > சுனை, குளம் ஆகியவற்றை குறிக்கும் சொல். இந்தப் பெருங்குளம் வேம்பிற்றூராரால் வெட்டப்பட்டது என்பது இதன் பொருள். அவ்வூரில் 2 கி. மீ. சுற்றளவில் ஒரு பெருங்குளம் உள்ளது. சேதவர் என்பதை செய்தவர் எனக் கொள்ளலாம்.
_____________________________
அழகர்மலை: வைணவர் திருத்தலமான அழகர்கோவில் மதுரைக்கு வடக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது. அழகர் கோவிலை சுற்றி உள்ள கோட்டையின் முகப்பு வாயிலுக்கு வெளியே கிழக்கு நோக்கி மேலூர் போகும் சாலையில் மலைத் தொடரின் அடிவாரத்தில் சுந்தரராசன்பட்டி, கிடாரிப்பட்டி என்ற ஊர்கள் உள்ளன. அவற்றின் அருகில் மலைத்தொடர் குன்றின் சற்று உயரமான பகுதியில் இயற்கையான குகைத்தளமும் ஒரு சுனையும் உள்ளன. இக்குகைத் தளத்தில் செதுக்கிய கற்படுகை ஒன்றிலும் நெற்றிப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள நீர்வடி விளிம்பின் மேலும் கீழுமாக தமிழ் பிராமி கலவெட்டுகள் உள்ளன. இங்கு வணிகர்கள் கொடைகொடுத்த செய்தியே அதிகம் உள்ளது. சமண பொதுமக்களில் அதிகமானோர் வணிகரே என்பது கருதத்தக்கது. ஒரு இனம் தன் இனத்திற்கு ஆதரவாக இருப்பது தொன்றுதொட்ட உலக வழக்கு.
கல்வெட்டு 12:1> குகைத்தள முகப்புப் பாறையின் நெற்றிப் பகுதியில் நீர்வடி விளிம்பின் கீழே இக் கல்வெட்டு உள்ளது.
மதிரை பொன் கொல்வன் அதன் அதன்
விளக்கம்: மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் அதன் அதன் இக்கொடை ஈந்தான் என்பது பொருள்.
கலவெட்டு 12:2> முதற் கல்வெட்டின் அருகிலேயே உள்ளது. முன்னும் பின்னும் எழுத்துகள் சிதைவுற்றுள்ளன.
- - - அ னாகன் த - - -
விளக்கம்: நாகன் என்ற பெயர் மட்டும் தெளிவாக உள்ளது.
கல்வெட்டு 12:3> இரண்டாம் கல்வெட்டை அடுத்து நெற்றிப் பாறையில் இக்கல்வெட்டு நீண்ட வரியாக வெட்டப்பட்டு உள்ளது.
மத்திரைகே உபு வாணிகன் வியக்கன் கணதிகன்
விளக்கம்: உபு என்பதில் ப் என்ற ஒற்றெழுத்தை சேர்க்கவேண்டும். மத்திரை என்பது மதுரையைக் குறித்தது, இதாவது மதுரையைச் சேர்ந்த வியக்கன் கணதிக்கன் என்ற உப்பு வணிகன் கற்படுக்கையை ஏற்படுத்தினான் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 12:4> மேல் உள்ள கல்வெட்டினைத் தொடர்ந்து அதே போல் நீண்ட வரியில் இக்கல்வெட்டு உள்ளது.
கணக அதன் மகன் அதன் அதன்
விளக்கம்: கணக அதன் மகன் அதன் அதன் இக் கற்படுக்கையை செய்தளித்தான் என்பது பொருள். இறுதியில் இவர் தந்த காசின் மதிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு 12:5> முன் கல்வெட்டு உள்ள நீண்ட வரியில் நான்காம் பகுதியாக இக் கல்வெட்டு உள்ளது.
சபமிதா இன பமித்தி
விளக்கம்: தகர மெய் சேர்த்து சபமித்தா எனப் படிக்க வேண்டும். சபமித்தா இனத்தவள் பமித்தி, இதாவது ஒரே ஊர் அல்லது ஒரே நாட்டினள் எனக் கொள்ளலாம். இந்த இரு பெண் துறவாட்டிகளும் கற்படுக்கை அமைத்தனர் என்பது பொருள். பெயரை வைத்து இருவரும் சமணர் என்கின்றனர்.
கல்வெட்டு 12:6> முன் உள்ள கல்வெட்டுகளின் நெடுவரிசையில் இக்கல்வெட்டு 5 ஆம் வரிசையில் உள்ளது.
பாணித வாணிகன் நெடுமலன்
பாணித - கை வைத்த சட்டை வணிகன்
விளக்கம்: கைவைத்த சட்டை வணிகன் நெடுமல்லன் கற்படுக்கை செய்தளித்தான். மகர மெய் சேர்த்து நெடுமல்லன் என படிக்க வேண்டும்.
கல்வெட்டு 12:7> இக்கல்வெட்டு 6 ஆவதாக உள்ளது.
கொழு வணிகன் எள சந்தன்
விளக்கம்: ஏர்கலப்பையின் கூர் பகுதியான கொழுவை விற்கும் இள சந்தன் கற்படுக்கை செய்தளித்தான் என பொருள்படும். எள என்பது இள என்பதன் கொச்சைத் திரிபு.
கல்வெட்டு 12:8> முகப்புப் புருவ நீர்வடி விளிம்பின் கீழ் ஏழாவதாக உள்ளது. கல்வட்டின் தொடக்கப் பகுதி சிதைந்துள்ளது.
(ஞ்)சி கழு மாற நதன் தாரஅணிஇ கொடுபிதஅவன்
கழு - கல்லினால் ஆன கூர் கருவி (spike). மரக்கட்டையில் நார் அல்லது கயிறால் பிணைத்து கோடாரியாக பயன்படுத்தப்படுவது தான் கழு. மாறன் - பொருளுக்கு பொருள் மாற்றும் வினையை செய்பவன் என்ற பொருளில் வணிகனைக் குறிக்கும்.
விளக்கம்: கழு வணிகன் நத்தன் மழைநீர் தடுப்பு வசதியை செய்துகொடுத்தான் என்பதே கல்வெட்டின் பொருள்.
கலவெட்டு 12:9> இக்கல்வெட்டுகளின் நெடுவரிசையில் இறுதியது.
தன்ம(ன்), கஸபன் அவ்(விரு) அ அர்உம் குடுபிதோ
விளக்கம்: தர்மன், கஸபன் என அவ் இருவரும் கொடை அளித்தோர் எனப் பொருள்படும். இருவரும் என்பது தப்பும் தவறுமாகப் பொறிக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டு 12:10> 12:3 கல்வெட்டின் கீழ் இக் கல்வெட்டு ப் பொறிப்பு உள்ளது.
வெண்ப(ளி)இ அறுவை வணிகன் எளஅ அடன்
அறுவை - ஆக்கப் பொருள், finished product
விளக்கம்: வெண்பள்ளி என்ற ஊரின் ஆக்கப்பொருளை விற்கும் வணிகனான இளைய அட்டன் இக்கொடை அளித்தான் என்பது இதன் பொருள். இளய > இளைய என்பது எளஅ என பேச்சு வழக்கில் பொறிக்கப்பட்டுள்ளது. அடன் டகர மெய் சேர்த்து அட்டன் என்று படிக்க வேண்டும்.
கல்வெட்டு 12:11>12:10 கல்வெட்டிற்கு அடுத்ததாக உள்ளது
தியன் சந்தன்
விளக்கம்: யகர மெய் இட்டு திய்யன் என படிக்கவேண்டும். திய்யன் என்பான் சந்தன் என்னும் துறவிக்கு இக்கொடையை நல்கினான் என்பதே இதன் பொருள்.
கல்வெட்டு 12:12 > குகைத் தளத்தின் உள்ளே ஒரு கற்படுகையின் தலைமாட்டில் இக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்
விளக்கம்: கணி நாகன், கணி நத்தன் என இருவர் சேர்ந்து ஏற்படுத்திய (அமைத்த) படுக்கைக் கல். நதன் நத்தன் என ஒற்றெழுத்து சேர்த்து படிக்கவேண்டும். கணி என்பது தியானத்தால் அடைந்த தகுநிலையை குறிக்கும் சிறப்பு பட்டம்.
_____________________________
சித்தன்னவாசல்: புதுக்கோட்டை இலுப்பூர் வட்டத்தில் புகழ்மிக்க பாண்டியர் கால ஓவியங்களைக் கொண்ட சித்தன்னவாசல் உள்ளது. இவ்வூர் மலையின் கிழக்குப்புறத்தில் மக்களால் ஏழடிபாட்டம் எனப்படும் குகைத்தளம் உள்ளது.
கல்வெட்டு 13:1> அகலமான கற்படுக்கையின் பக்கவாட்டிலும், தலைப் பகுதியிலும் வெட்டப்பட்ட தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.
எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த காவடிஈ தென்கு சிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்
விளக்கம்: எருமிநாட்டுக் குமிழுரில் பிறந்த பெண்துறவிக்கு தெற்கு சிறுபோசில் நாட்டைச் சேர்ந்த போர்ப்பயிற்சி பெறும் கன்னி வீரர் செய்து கொடுத்த இருப்பிடம் என்பது இதன் பொருள்.
_____________________________
ஐயர் மலை: கரூர் குளித்தலை வட்டத்தில் சத்திய மங்கலத்தில் ஐயர் மலை என்னும் ஊர் உள்ளது. இங்கத்து இரத்தினகிரீசுவரர் மலையில் இயற்கையான குகைத்தளத்தில் கற்படுக்கையுடன் தமிழி கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு 14:1> பனைதுறை வெஸன் அதட் அனம்
விளக்கம்: பனைத்துறை என்னும் ஊரினைச் சேர்ந்தவர் வெசனுக்கு ஏற்படுத்தித் தந்த இருப்பிடம் என்பது இதன் பொருள். இதில் றை என்ற எழுத்து முதலில் வெட்டாது விடுபட்டு பின்பு இடைச் செருகலாக சிறிய அளவில் எழுதப்பட்டு உள்ளது.
_____________________________
திருமலை: சிவகங்கை வட்டம் திருமலையில் அமைந்து உள்ள குடைவரைக் கோயிலுக்கு மேல் பகுதியில் மலை மீது பழங்கால ஓவியங்களுடன் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு 15:1> மலை மீது வடபுறத்தில் மேலே அமைந்துள்ள குகைத்தளத்தின் முகப்புப் பாறையில் பொறிக்கப்பட்டு உள்ளது. முன் பகுதி எழுத்துகள் சிதைந்து உள்ளன.
- - - - வ கரண்டை
விளக்கம்: முனிவர் வாழிடம், குகைத்தளம் என்பது மட்டுமே உள்ளது. முன்னே இருந்த எழுத்துகள் சிதைந்து போயின.
கல்வெட்டு 15:2> மலையின் மீது வடதிசை நோக்கிய பகுதியில் கீழப்புறம் அமைந்த சிறு குகைததளத்தின் நெற்றிப் பகுதியில் மிக மெல்லிதாக பொறிக்கப்பட்டு உள்ளது.
எருகாடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்
விளக்கம்: எருகாட்டூரைச் சேர்ந்த பெண் துறவிக்கு அவ்வூர் ஆட்சியாளன் (கோன்) செய்து கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள். கொறிய என்பதில் ஒற்றெழுத்து சேர்த்து கொற்றிய எனப் படிக்கவேண்டும். பழங்காலத்தே ஒற்றோடு வரும் றகரம் டகரமாகவே பலுக்கப்பட்டது. அந்த வகையில் கொற்றிய என்பதை கொட்டிய என்று தான் பலுக்கவேண்டும். இதன் பொருள் கொடுத்த என்பது. இன்றும் தெலுங்கில் பற்று - பட்டு என்றும், நாற்று > நாட்டு என்றும் டகராமாகவே பலுக்கப்படுகிறது.
_____________________________
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகருக்குத் ஐந்து கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது இத் திருத்தலம். இக்குன்றின் மேற்கில் உயரமான இடத்தில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. இதில் உள்ள கற்படுக்கைகளில் தலைப் பகுதியிலும, பக்கவாட்டிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
கல்வெட்டு 16:1> வலம் இருந்து இடமாகவும் எழுத்துகள் தலைகீழாகவும் கற்படுக்கை ஒன்றன் தலைப்பகுதியில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
அந்துவன் கொடுபிதவன்
விளக்கம்: இக் கற்படுக்கையை ஏற்படுத்திக் கொடுத்தவன் அந்துவன் என்பான் என்பது இதன் பொருள். மெய் சேர்த்து கொட்டுபித்தவன் எனப் படிக்க வேண்டும்.
கல்வெட்டு 16:2> இரு கற்படுக்கைகளின் பக்கவாட்டுப் பகுதியில் இரு பிரிவுகளாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
மாராயது கய(ம்)
விளக்கம்: அரசர் ஏற்படுத்திக் கொடுத்த குளம் என்று பொருள்.
கல்வெட்டு 16:3> வரிசையாய் அமைந்த கற்படுக்கைகளின் தலைப் பகுதிகளுக்குப் பின் புறம் உள்ள பாறையில் நீளமாக வெட்டப்பட்டு உள்ளது.
எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்
இழ குடும்பிகன் - வறிய குழுத்தலைவன் , ஆய்சயன் - கற்படுக்கை வடிக்கும் வினைஞன்
விளக்கம்: கற்படுக்கை வடிக்கும் (ஆய்சயன்) நெடுசாத்தனைக் கொண்டு எருகாட்டூரைச் சேர்ந்த வறிய குழுத் தலைவன் போலாலயன் கற்படுக்கை செய்தான் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 16:4 > 2013ல் பிப்ரவரியில் புதிதாக உயர்த்தே உள்ள காசி விசுவநாதர் கோவில் அருகே உள்ள குளத்திற்கு செல்லும் படிகள் உள்ள தரையில் இருவரியில் தமிழி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது .
மூ நகர / மூ சக்தி
விளக்கம்: பழைய நகரான மதுரையின் மூன்று ஆற்றலர்.
_____________________________
முத்துப்பட்டி: மதுரை தெற்கு வட்டத்தில் வடபழஞ்சி என்னும் ஊருக்கு அருகில் முத்துப்பட்டி உள்ளது. முத்துப்பட்டியில் பெருமாள் மலை எனவும் கரடிப்பட்டி மலை எனவும் அழைக்கப்படும் 220 மீட்டர் உயரமுள்ள மலையின் தென்பகுதியில் இயற்கையான குகைத்தளத்தில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன. குகைத்தள மழைநீர்வடி முகப்பிலும், படுக்கையின் அருகிலும், சிறுகுகைத்தளத்தின் தனிக் கல்லிலுமாக இவை உள்ளன.
கல்வெட்டு 17:1 > சிறுகுகைத்தளத்தின் சிறு பாறை ஒன்று வழவழப்பாக செதுக்கப்பட்டு உள்ளது. இச்சிறுபாறையின் உட்புறம் செதுக்கப்படாமல் மேடும் பள்ளமுமாக உள்ள பகுதியில் வலம் இடமாக தலைகீழாக இக் கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது.
நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்
விளக்கம்: நாகபேரூதை ஊரைச் சேர்ந்த முசிறி கோடன் என்னும் போர்ப்பயிற்சி பெறும் கன்னிவீரன் கற்படுகை ஏற்படுத்தித் தந்தான் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 17:2> இடையன் தருமம் எனப்படும் பெரிய குகைத்தளத்தின் முகப்பு நெற்றியில் மூன்று பகுதிகளாக பொறிக்கப்பட்டு உள்ளது.
சைய்அளன் விந்தைஊர் கவிய்
கவி - கற்படுக்கை, flat stone.
விளக்கம்: சைய்அள்ளன் என்பான் விந்தையூரில் கற்படுக்கை அமைத்தான் என்பது இதன் பொருள். விந்தையூர் முத்துப்பட்டியின் பழம்பெயர் எனத் தெரிகின்றது.
கல்வெட்டு 17:3> பெரிய குகைத்தளக் கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது. கல்வெட்டின் நடுவே சிதைந்து உள்ளது.
திடிக் காத்தான் (ம) _ _ னம் எய்_ _
விளக்கம்: டகர மெய் சேர்த்து திட்டி என படிக்க வேண்டும். திட்டி எனும் ஊரைச் சேர்ந்த காத்தான் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை என்பது இதன் பொருள்.
_____________________________
ஜம்பை: விழுப்பரம் மாவட்ட திருக்கோவிலூருக்கு அருகில் தென் பெண்ணை ஆற்றின் வடகரையில் இவ்வூர் அமைந்து உள்ளது. இங்கு உள்ள ஆளுருட்டி மலையில் மக்களால் தாசிமடம் எனப்பெறும் இரு இயற்கைக் குகைத் தளங்களில் ஒன்றன் உட்புறத்தில் பின்புறமாக நிற்கும் பாறையில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டு 18:1> ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி
விளக்கம்: அதியன் நெடுமான் அஞ்சி செய்து அளித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். அசோகன் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சதியபுதோ என்பதன் பொருட் புதிரை இக் கல்வெட்டு தீர்த்து வைத்து உள்ளது. சதிய புத்திரன் என்பதன் பிராகிருத சிதைவு வடிவச் சொல் தான் சதியபுதோ என்பது. அசோகன் கல்வெட்டில் சதியபுதோ என்ற சொல் அதியமான்களைக் குறிக்கின்றது. அதிய என்பது சகர முன்னொட்டு பெற்று சதிய என்றாகி உள்ளது. மகன் > மான் என்பது புத்தோ என பிராகிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. பளி யில் ளகர மெய் சேர்த்து பள்ளி எனப் படிக்க வேண்டும்.
_____________________________
ஆனைமலை: மதுரை வடக்கு வட்டத்தில் மதுரை மேலூர் சாலையில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தைக் கடை என்னும் ஊரில் இருந்து கிழக்காகச் சென்றால் நரசிங்கம் என்னும் ஊரை அடையலாம். அங்கு யானை போல் தோற்றமுடைய மலை ஒன்று உள்ளது. அதனால் அது ஆனைமலை எனப்படுகிறது. யானைத் தலையை ஒத்த மலைப் பகுதியின் மேற்பரப்பில் ஓர் இயற்கையான குகைத்தளம் உள்ளது.
கல்வெட்டு 19:1> குகையின் நெற்றப்புறத்தில் மழைநீர் விளிம்பின் கீழ் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இரு வரிகளில் அமைந்த கல்வெட்டு இது.
இவகுன்றது உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் / அத்துவாயி அரட்டகாயிபன்
பா - கற்படுக்கை, flat stone; ஏரி ஆரிதன் - ஏரியை அண்டி வாழ்பவன்.
விளக்கம்: தகர மெய் சேர்த்து குன்றத்து என படிக்க வேண்டும். இக்குன்றில் அமைந்த தங்கிடத்தில் உள்ள கற்படுக்கையை ஏரியை அண்டி வாழ்பவன் அத்துவாயி, அரட்டகாயிபன் ஆகிய இரு துறவியர்க்குச் செய்தளித்தான் என்பது பொருள்.
_____________________________
புகளூர்: சேலத்தில் இருந்து கரூர் போகும் வழியில் 15 ஆவது கிலோ மீட்டரில் காவிரிக்கரையில் இவ்வூர் அமைந்து உள்ளது. வேலாயுதபாளையம் என இக்கால் அறியப்படுகின்ற பகுதியே இவ்வூர். இங்கு புகழியூர் முருகன் கோவில் அமைந்த ஆறுநாட்டார் மலை உச்சிக்கு சற்றே இறக்கமாக வடக்கிலும் தெற்கிலும் இயற்கையான குகைத் தளங்கள் உள்ளன. வடதிசை குகைத் தளத்தில் உள்ள கற்படுக்கையிலும், தென்திசை குகைத்தள நெற்றி முகப்பிலும், சுவர்களிலும், அதன் கற்படுக்கைகளிலும் என 12 தமிழி கல்வெட்டுகள் காணப்பட்டு உள்ளன. பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்துகளில் சிறப்பிக்கப்படும் சேர அரசர்கள் குறித்த பொறிப்புகள் இங்கு இடம் பெற்று உள்ளன.
கல்வெட்டு 20:1> தென்திசையில் அமைந்த குகைத்தள நெற்றி முகப்பில் வெட்டப்பட்ட இரு கல்வெட்டுகளில் இரண்டாவதாக உள்ளது. கீழிலிருந்து மேலாக முதல் கல்வெட்டு எழுத்துகள் தேய்ந்து காணப்படுகின்றன. ஒரே வரிசையாய் அல்லாமல் இடச் சுருக்கம் கருதி நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய் / கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் / பெருங்கடுங்கோன் மகன் ளங் கடுங்கோ / ளங்கோ ஆக அறுத்த கல்
விளக்கம்: சேர வேந்தன் ஆதன் செல்லிரும் பொறையின் மகன் பெருங்கடுக்கோனின் மகன், இதாவது, வேந்தனின் பேரன் இளங் கடுங்கோ இளவரசனாகப் பட்டம் ஏற்றபோது அதற்காக யாற்றுரைச் சேர்ந்த மூத்த சமணத் துறவி செங்காயபனுக்கு அமைத்த உறைவிடத்தில் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை எனப் பொருள்படும். இக்கல்வெட்டில் இள என்பதில் இகரம் எழுதாமல் விடப்பட்டுள்ளது.
கல்வெட்டு 20:2 > முதற் கல்வெட்டிற்கு மேலாக பொறிக்கப்பட்டு உள்ளது. எழுத்துகள் தேய்ந்தும் இரண்டாம் வரியில் பாறை சிதைத்ததால் எழுத்துகள் பெயர்ந்து போயும் உள்ளன. நான்கு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.
மூதாமண்ணன் யாற்று செங்காயபன் உறைய் / கோ ஆ- - - ல்லிரும்புறை மகன் பெருங் / கடுங்கோன் மகன் கடுங்கோன் ளங்கடுங் / கோ ளங்கோ ஆக அறுபித கல்
விளக்கம்: முதற் கல்வெட்டுச் செய்தியே இதிலும் எழுதப்பட்டு உள்ளது. முதற் கல்வெட்டில் முதா என்பது இக்கல்வெட்டில் மூதா என உள்ளதால் மூத்த என பொருள் கொள்ள வேண்டும். யாற்றூரில் ஊர் என்ற சொல் இக் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. முதற் கல்வெட்டில் போல் இகரம் எழுதப்படவில்லை எனினும் இக்கல்வெட்டில் கடுங்கோன் இளங்கடுங்கோ என "கடுங்கோன்" என்ற சொல் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இது முதற் கல்வெட்டில் இல்லை. அறுபித என்பதில் தகர மெய்யை சேர்த்து அறுப்பித்த என்று படிக்க வேண்டும். பொறை இக்கல்வெட்டில் புறை எனப் பொறிக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டு 20:3> குகைத்தள கற்படுக்கை ஒன்றில் பொறிக்கப்பட்டு உள்ளது. மூன்று வரிகளில் மிகத் தேய்ந்த நிலையில் உள்ளது.
யாற்றூர் செங்காயபன் / தாவன் ஊர்ப் பின்அன் குற்றன் / ன் அறுபித்த அதிட்டானம்.
விளக்கம்: சமணத்துறவி யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூரைச் சேர்ந்த பின்னன் கூற்றன் செதுக்கி அளித்த இருக்கை என்பது கல்வெட்டின் பொருள்.
கல்வெட்டு 20:4 > குகைத்தளத்தில் வலப்புறம் அமைந்து உள்ள கற்படுக்கையில் சிதைந்த நிலையில் இறுதிச் சொல் மட்டும் காண்பதற்குத் தெளிவாக உள்ளது.
- - - - - அதி ட்டான்னம்
விளக்கம்: இருக்கையைக் குறிக்கும் அதிட்டானம் என்ற சொல் கூடுதலாக ஒரு னகர மெய்யை ஒற்றாகப் பெற்று உள்ளது. முன்னே இருந்த எழுத்துகள் சிதைந்து விட்டன.
கல்வெட்டு 20:5 > தென்திசையை நோக்கி உள்ள குகைத்தளத்தின் கிழக்கே சிறு குகை ஒன்று அமைந்து உள்ளது. அதன் செதுக்கிச் சீர்படுத்தாத தரையில் இரு வரிகளில் இக் கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது.
நலி (ய்) ஊர் ஆ பிடன் குறும்மகள் / கீரன் கொறி செயிபித பளி
ஆ - அவ்விடத்து என்னும் இடச்சுட்டு, சேர்ந்த; பள்ளி - படுக்கை; பிட்டன் - கருத்தவன்.
விளக்கம்: நல்லியூரைச் சேர்ந்த பிட்டன் உடைய இளைய மகள் கீரன் கொற்றி என்பாள் செய்வித்து அளித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். நலி யில் லகர மெய்யும், பிடனில் டகர மெய்யும், கொறியில் றகர மெய்யும், செய்பித என்பதில் தகர மெய்யும், பளி இல் ளகர மெய்யும் சேர்க்க வேண்டும்.
கல்வெட்டு 20:6 > மேற்சொன்ன குகையில் உள்ள கற்படுக்கையின் மேல் இக்கல்வெட்டு ஒரு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.
நல்லி(ய்) ஊர் ஆ பிடந்தை மகள் கீரன் கொற்றி அதிடானம்
பிட்டந்தை - கருத்த அந்தணத் துறவி; அதிஷ்டானம் - location, நிலைத்தளம்.
விளக்கம்: முன்னைக் கல்வெட்டுச் செய்தியே சில மாற்றுச் சொல் கொண்டு இதில் பொறிக்கப்பட்டு உள்ளது. நல்லியூரைச் சேர்ந்த கருத்த பிராமணத் துறவியின் மகள் கீரன் கொற்றி என்பாள் செய்வித்த இருப்பிடம் எனப் பொருள்படும். வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தை கடைபிடித்த பிட்டன் பிற்பகுதியில் துறவு மேற்கொண்டதனால் அவருக்கு அவரது மகள் இருப்பிடம் அமைத்துக் கொடுத்தாள் என்பது நால்வர்க்க வாழ்க்கை முறைக்கு ஒரு சான்றாகிறது.
கல்வெட்டு 20:7 > தென்திசையை நோக்கியபடி உள்ள பகுதயின் மேற்புறம் உள்ள குகையின் முதல் படுக்கையில் இரு வரியில் பொறிக்கப்பட்டு உள்ளது.
கொற்றந்தை ளஎன் / முன்று
கொற்றம் - அச்சமற்ற, அந்தை - பிச்சையெடுத்து வாழும் அந்தணன்; இளையன் - போர்ப்பயிற்சி பெறும் கன்னி வீரன்; முன்று - குகை.
விளக்கம்: அச்சமற்ற பிராமணத் துறவிக்கு கன்னி வீரன் ஏற்படுத்திய குகை என்பது இதன் பொருள். இளையன் ளஎன் என பேச்சு வழக்கில் பொறிக்கப்பட்டு உள்ளது. கொற்ற என்ற முன்னொட்டு இங்கு துறவிகளின் பெயரில் பின்னொட்டாக ஆனந்தா, சரசுவதி, பாதர் வருவது போல உள்ளதால் கொற்ற என்பது தனிப்பிரிவு துறவு கூட்டத்தாரை குறிப்பதாகலாம்.
கல்வெட்டு 20:8 > மேற்சொன்ன குகையின் மற்றொரு கற்படுக்கையில் பொறிக்கப்பட்டு உள்ளது. இறுதிச் சொல் தவிர ஏனைய சிதைந்து உள்ளன.
_ _ _ அதிட்டானம்
விளக்கம்: இருப்பிடம் என்பது மட்டுமே தெளிவாக உள்ளது. முன்னே இருந்த சொற்கள் சிதைந்து விட்டன.
கல்வெட்டு 20:9 > மேற்சொன்ன குகையின் மூன்றாம் படுக்கையில் இரு வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.
கருஊர் பொன் வாணிகன் / நத்தி அதிட்டானம்
விளக்கம்: கரூர் வாழ் பொன் வணிகன் நத்தி என்பான் ஏற்படுத்திய இருப்பிடம் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 20:10 > மேற்சொன்ன குகையின் நான்காம் படுக்கையில் இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.
எண்ணை வாண்ணிக / ன் வெநி ஆதன் அதிட்டானம்
விளக்கம்: எண்ணெய் வணிகன் வெந்நி/வென்னி ஆதன் என்பான் ஏற்படுத்திய இருப்பிடம் என்பது இதன் பொருள். வாணிகனில் ணகர மெய் தேவை இன்றி பொறிக்கப்பட்டு உள்ளது. வெநியில் னகர மெய் சேர்த்து வென்னி என படிக்க வேண்டும்.
கல்வெட்டு 20:11 > மேற்சொன்ன குகையின் ஐந்தாம் படுக்கையில் ஐந்து வரிகளில் பொறிக்கப்பட்டு வலப்பக்க எழுத்துகள் சிதைந்து போய் உள்ள கல்வெட்டு இது.
- -- - -வ / பெ - - - / கன் - -- - / மக - - - - / ளவா - - -
பொருள் அறியமுடியாத படி கல்வெட்டு சிதைந்து உள்ளது.
கல்வெட்டு 20:12 > ஆறுநாட்டார் மலையின் வடதிசையில் சூளாமணி எனப்படும் குகையில் இக்கல்வெட்டு உள்ளது.
ணாகன் மகன் பெருங்கீரன்
விளக்கம்: நாகன் என்பான் மகன் பெருங்கீரன் ஏற்படுத்தியது என்பது இதன் பொருள்.
_____________________________
மாமண்டூர்: இவ்வூர் காஞ்சிபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் வந்தவாசி செல்லும் சாலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு வட்டத்தில் தூசி என்ற ஊர் அருகே உள்ளதால் தூசி மாமண்டூர் எனப் பொதுவாக அழைக்கின்றனர்.
கல்வெட்டு 21:1> இங்குள்ள மலையில் அமைந்துள்ள பல்லவர் குடவரைக் கோயில்களுக்கு வடதிசையில் உள்ள சிறிய குன்றின் இயற்கையான குகைத்தளத்தின் முகப்பில் பந்தல் அமைக்க கொம்புகளைச் செருகுவதற்காக அகழப்பட்ட இரு துளைகளுக்குக் கீழே இக்கல்வெட்டு நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
கணி மான் / தேனூர் தந்த கோன் குன்று ஆசி / செயிதான். தசன் சிறு / - - - - வன்.
முன் - first born child, தலைச்சன் பிள்ளை; ஆசி - ஆசீர்வதி, வரமளி.
விளக்கம்: கணிமான் என படித்தது தவறு. அதில் 'மா' என்ற பிராமி எழுத்தே இல்லை மாறாக பேரா இரா. மதிவாணன் வாசிப்புப்படி 'மு' என்ற சிந்து எழுத்து தான் உள்ளது. எனவே அதை முன் என்றே படிக்க வேண்டும். பெயர் குறிப்பிடப்படாத தியானத்தினால் கணி என்ற பட்டம் பெற்ற பிராமணத் தவ முனிவரின் முதல் மகன் தேனூரைக் கொடையாகத் தந்த ஆட்சியாளனுக்கு இக்குன்றில் ஆசியை (வரத்தை) தந்தான். தச்சன் சிறு - - - - வன் என்பவன் இதைக் கல்லில் வடித்தான். சகர மெய் சேர்த்து தச்சன் என படிக்க வேண்டும். கணி என்னும் பட்டத்தை எய்திய பிராமணத் துறவி தம் வாழ்வின் முற்பகுதியில் இல்லறத்தவராக இருந்து வாழ்வின் பிற்பகுதியில் பிச்சை எடுக்கும் துறவி ஆனார் என்று தெரிகின்றது. இது நால்வர்க்க வாழ்க்கை முறைக்கு ஒரு சான்று.
_____________________________
குன்னக்குடி: புகழ்மிக்க முருகன் கோவில் அமைந்துள்ள இவ் ஊர் காரைக்குடி திருப்பத்தூர் சாலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இக்குன்றின் மேல் அமைந்துள்ள ஞானியார் மடம் என்ற குகையின் நீர்வடி விளிம்பில் இரு தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
கல்வெட்டு 22:1 > தலைமாறாகவும் கீழ் மேலாகவும் மாற்றி எழுதப்பட்டு உள்ளன.
காபிஊர் ஆதன் சாத்தன்
விளக்கம்: காப்பியூர் வாழ் ஆதன் சாத்தன் என்பான் கற்படுக்கை ஏற்படுத்தித் தந்தான் என்பது கல்வெட்டின் பொருள். பகர மெய் சேர்த்து காப்பி எனப் படிக்க வேண்டும்.
கல்வெட்டு 22:2 > இக்கல்வெட்டும் தலைமாறாகவும், கீழ் மேலாகவும் நீர்வடி விளிம்பின் மறுபுறம் பொறிக்கப்பட்டு உள்ளது. முதல் மூன்று எழுத்துகள் தெரிகின்றன ஏனைய கட்டடக் கட்டுமானத்தில் மறைந்து உள்ளன. முன் கல்வெட்டுச் செய்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.
ஊறு து
விளக்கம்: றகர மெய் சேர்த்து ஊற்று என்று படிக்கவேண்டும். நீர் ஊற்றை காப்பி ஊர் ஆதன் சாத்தன் ஏற்படுத்திய செய்தியைக் குறிப்பதாகலாம் என அறிஞர் கருதுகின்றனர். ஏனெனில் குகைக்குப் போகும் வழியில் சதுரவடிவில் ஒரு சுனை வெட்டப்பட்டு அதில் இன்றளவும் நீர்த் தேங்கி பயன்பட்டுக் கொண்டு உள்ளது.
_____________________________
தொண்டூர்: விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு 22 கிலோ மீட்டர் வடகிழக்கே இவ்வூர் அமைந்துள்ளது. இந்த ஊருக்குத் தெற்கே உள்ள குன்றில் பஞ்சனார்படி என்ற இயற்கையான குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.
கல்வெட்டு 23:1> குகையின் வெளியே உள்ள தரையில் இரு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது இக்கல்வெட்டு.
(இ)ளங் காயிபன் ஏவ அகழ்ஊரறம் / மோசி செயித அதிடானம்
அறம் - தீர்ப்பாளர், judge
விளக்கம்: இளங்காயிபன் என்ற துறவியின் சொற்படி அகழுரைச் சேர்ந்த தீர்ப்பாளர் மோசி என்பவர் இந்த இருப்பிடம் செய்தார் என்பது இக் கல்வெட்டின் செய்தி.
_____________________________
குடுமியான்மலை: புகழ்மிக்க இசைக் கல்வெட்டும், குடைவரைக் கோவிலும் கொண்ட இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மலையின் தென்மேற்குப் பகுதியில் பாறைச் சரிவில் உள்ள குகைத்தளத்தில் இக் கல்வெட்டு காணப்படுகின்றது.
கல்வெட்டு 24:1 > குகையில் அமைந்த கற்படுக்கையில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு எழுத்துகள் தெளிவின்றி உள்ளன.
நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்
விளக்கம்: நாழள் எனும் ஊரின் அச்சமற்ற அந்தணனுக்கு (கொற்றந்தை) ஏற்படுத்திய கற்படுக்கை என்பது இதன் பொருள். துறவிகளின் பெயரில் பின்னொட்டாக ஆனந்தா, சரசுவதி, பாதர் வருவது போல கொற்ற என்ற முன்னொட்டு இங்கு தனிப்பிரிவு துறவு கூட்டத்தாரை குறிப்பதாகலாம்
_____________________________
திருச்சிராப்பள்ளி: திருச்சி மலைக்கோட்டை மலையின் மேற்கு திசையில் உள்ள இயற்கையான குகைத்தளத்தில் ஒரு தமிழி கல்வெட்டு அறியப்பட்டது.
- - - பன் கே
விளக்கம்: இம் மூன்று எழுத்துகள் மட்டும் படிக்கக் கிடைக்கின்றன.
_____________________________
எடக்கல்: கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கணபதி வட்டம் என்ற ஊருக்கு தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் எடக்கல் மலை உள்ளது. இம்மலையின் உச்சியில் மேற்கு திசைச்சரிவில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. அங்கு ஐந்து தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு 26:1> குகையில் வடக்கு சுவர் மேல் பொறிக்கப்பட்டு உள்ளது.
ஒபனப விரஅ
விளக்கம்: ஒப்பனப்ப வீரன் என்ற ஆள் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. பகர மெய் சேர்த்து ஒப்பனப்ப என்றும் விர என்பதை நெடிலாக்கி வீர என்றும் படிக்கவேண்டும்.
கல்வெட்டு 26:2> அதே வடதிசைச் சுவரில் பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு.
கடும்மி புத சேர கோ
விளக்கம்: கடு உம்மி பூத சேர கோ என்பது ஒரு சேர மன்னனது பெயர். புத என்பதை மகன் என்னும் பிராகிருத சொல்லொடு பொருத்துவர் அறிஞர். எனினும் அதை நெடிலாக்கி பூத எனப்படிப்பதே சரி. கோ என்ற சொல் பிந்து கால சிந்து எழுத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதை பேரா. இரா. மதிவாணன் கோ என படித்து உள்ளார்.
கல்வெட்டு 26:3> அதே வடதிசைச் சுவரில் மூன்றாவதாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. பழைய மைப்படி கொண்டு படிக்கப்பட்டு உள்ளது.
கோ பூதி விர
விளக்கம்: அரசனான பூதி வீரன் என்று பொருள். பூதன் என்ற பெயர் இகர ஈறு பெற்று பூதி ஆகி உள்ளது. எனினும் இதை பிராகிருதச் சொல்லாகக் கொள்கின்றனர்.
கல்வெட்டு 26:4> கோ(வா)தான்
விளக்கம்: ஆதன் எனும் பெயர் கொண்ட அரசன் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு 26:5> 2012 ல் அம்புக்குத்தி மலையில் உள்ள எடக்கல் குகையில் ஐந்தாவதாக புதியதாக இப் பிராமி கல்வெட்டு கண்டறியப்பட்டது.
சிவஸ்வாமி
விளக்கம்: சிவஸ்வாமி என்ற பெயர் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை கண்டறிந்த இராகவ வாரியார் "ஸ்ரீ வழுமி" என்று படித்தார். ஐராவதம் மகாதேவன் இதை "ஈ பழம" இதாவது இந்தப் பழமையான என்று பொருள்படப் படித்தார். அதன் பயனாய் மலையாளம் செம்மொழி என அறிவிக்கப்பட்டது. இதை தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி தான் "சிவஸ்வாமி" என்று சரியாகப் படித்தார்.
_____________________________
நெகனூர்ப்பட்டி: வடதமிழ்நாட்டில் செஞ்சி வட்டத்தில் நெகனூர்பட்டி உள்ளது. இங்கு அடுக்கன் கல் என்ற இயற்கைக் குகைத்தளம் உண்டு. இதன் வெளிப்புறத்தில் தென்திசை நோக்கிய பாறையில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.
கல்வெட்டு 27:1> சுற்றிலும் சதுரக்கட்டம் வெட்டப்பட்டு நான்கு வரிகளில் அமைந்து உள்ளது. எல்லா மெய் எழுத்துகளும் புள்ளி பெற்று உள்ளன.
பெரும் பொகழ் / சேக்கந்தி தாயியரு / சேக்கந்தண்ணி செ / யி வித்த பள்ளி
சேக்கு - கன்னக் குடுமி, காதுக்கு மேற் பக்கமாக முடிக்கும் குடுமியை 'கன்னக் குடுமி' என்பார் ஈழத்தார்; அந்தணி - பிச்சையெடுத்து வாழும் கிழத் துறவாட்டி, அந்தணன் என்பதன் பெண் பால்; சேக்கு + அந்தி - இளையவள், அக்காள் .
விளக்கம்: பெரும் புகழ் எய்திய கன்னக் குடுமி அக்காளின் தாயார் கன்னக் குடுமி பிராமணத் துறவிக்கு செய்வித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். இவர்கள் குறி சொல்லி இப்படி பெரும் புகழ் பெற்றிருக்கலாம்.
_____________________________
அம்மன்கோவில்பட்டி: சேலம் ஓமலூர் வட்டத்தில் தாரமங்கலம் ஓமலூர் வழியல் அமைந்த பெரியேரிப்பட்டி எனும் ஊரின் ஒரு பகுதியாக அம்மன் கோவில்பட்டி திகழ்கிறது. இந்த ஊரில் ஓடும் உப்பாற்றின் வட கரையில் அமைந்த பெருமாள் கோயில் பாறையின் "தேப்பாலி" என்ற சுனையின் அருகில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு 28:1> நீரோட்டத்தால் தேய்ந்து உள்ள இக்கல்வெட்டு இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.
பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் / கோபன் கணதேவன் தொட சுனை
பரம்பன் - பரம்பு நாட்டவன்; தொட்ட - தோண்டிய, சுனை - ஆழமான குளம்.
விளக்கம்: பரம்பு நாட்டின் கோகூர் கிழவருடைய மகன்கள் வியக்கன், கோபன், கண்ணதேவன் ஆகியோர் தோண்டிய சுனை இது என்பது இதன் பொருள். ணகர மெய் சேர்த்து கண்ணதேவன் என்றும், டகர மெய் சேர்த்து தொட்ட எனவும் படிக்க வேண்டும்.
_____________________________
அரச்சலூர்: காங்கேயம் ஈரோடு வழித்தடத்தில் அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன.
கல்வெட்டு 29:1> கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது.
எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் / தேவன் சாத்தன்
வண்ணக்கன் - கல்லை உருவமாக வடிப்பவன், சிற்பி; புணருத்தான் - எழுதினான்.
விளக்கம்: மலையில் வாழும் கல்வடிக்கும் சிற்பி தேவன் சாத்தன் என்பவன் கற்படுக்கைகளை வடித்ததோடு அல்லாமல் இக்கல்வெட்டுச் செய்தியையும் எழுதினான் என்பது இதன் பொருள். பண்டு திரிகை, அம்மி, குழவி, உரல், ஆட்டுக்கல் வடிப்பவரே கற்படுக்கைகளையும் கல்வெட்டுகளையும் வடித்தது ஒன்றும் வியப்பில்லை. கல்லில் உருவம் வடிக்கும் முன் அதை ஓவியமாய் வரைவதை வைத்து இச்சொல் சிற்பிக்கு உண்டாகியிருக்கலாம்.
கல்வெடடு 29:2> முன் உள்ள கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது.
த தை தா தை த / தை தா தே தா தை / தா தே தை தே தா / தை தா தே தா தை / த தை தா தை த
விளக்கம்: மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒருவகை இசை ஒலிகளை உணர்த்துகின்றது.
கல்வெட்டு 29:3 > முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளது. பல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர்.
கை த தை த கை / த (கை) (த) (கை) (த) / தை த கை த (தை) / த கை (த) (கை) (த) / (கை) (த) (கை) த (கை)
விளக்கம்: இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.
_____________________________
மன்னார் கோவில்: திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காக ஐய்யனார்குளம் அமைந்து உள்ளது. இவ்வூர் பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல குன்றுகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு 30:1> இராசப் பாறைக் குகையில் நீர்வடி விளிம்பும் இரு கற்படுகைகளும் உள்ளன. இங்கு இக்கல்வெட்டு உட்கூரையில் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி செய்வித்தான் / கடிகை (கோ) வின் மகன் / பெருங்கூற்றன்
விளக்கம்: கோ ஊகித்துக் கொள்ளப்பட்ட எழுத்து. கடிகைக் கோவிற்கு மகனான பெருங்கூற்றன் என்பான் இந்த கற்படுக்கையை செய்வித்தான் என்பது இதன் பொருள்.
கல்வெட்டு.30:2> நிலாப் பாறையின் திறந்த வெளிப் பகுதியில் வெட்டப்பட்ட கற்படுக்கையின் தலைப்பாகத்தில் இரு வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
குணாவின் ளங்கோ / செய்பித பளிஇ
விளக்கம்: குணா என்னும் ஊரின் இளங்கோ (இளவரசன்) செய்வித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். பெயரில் முதல் எழுத்தான உயிர் எழுத்து இகரம் எழுதப்படவில்லை ஆதலின் இகரம் இட்டு இளங்கோ எனப் படிக்க வேண்டும். தகர மெய் சேர்த்து செய்பித்த எனப் படிக்க வேணடும்.
_____________________________
சமணர்மலை: மதுரை அருகே முத்துப்பட்டி, கொங்கர்புளியன்குளம் மலைகளை ஒட்டி அமைந்த கீழ்க்குயில்குடி சமணர்மலையில் ஒரு கல்வெட்டு 2012 ல் கண்டறியப்பட்டது
கல்வெட்டு: பாறையின் நீர்வடி விளிம்பின் கீழ் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது
பெருதேரூர் குழித்தை அய்அம்
விளக்கம்: பெருந்தேரூரில் வாழும் குழுவினர் குளம் ஏற்படுத்தினர் என்பது இதன் பொருள். குழித்தை என்றால் குழு, team.
_____________________________
கரதுக்கம்: கேரளம் காசர்கோடு மாவட்டம் கரதுக்கத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் கால்வாய் அருகே உள்ள செம்புரை மண் (laterite) தரையில் 14 எழுத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இது மார்ச்சு 2014 ல் கண்டறியப்பட்டது.
கல்வெட்டு: கழ கோற பட்டன் மகன் சரும
கழல் - கால்; கோறர் - கள்ளர்குடி பட்டப் பெயர்; கழ கோற - கள்ளர் காலாட்படை; பட்டன் - படைத் தலைவன், commander; மகன் - கீழ்ப்படிந்த படைவீரன், low rank subordinate warrior
விளக்கம்: கள்ளர் காலாட்படைத் தலைவனின் படையாள் "சரும" என்பவன் குறிக்கப்படுகிறான். மலையாளம் செம்மொழி தகுதி பெறவேண்டும் என்பதற்காக பொய்யாக இக்கல்வெட்டை திராவிட பிராமி, தென் பிராமி ஆகிய பெயர்களால் சுட்டினாலும் இக்கல்வெட்டில் வட்டெழுத்தின் தொடக்க கால எழுத்துகள் இடம்பெறுவதால் இதை கி.பி. 6 ஆம் நூற்றாண்டினது எனக் கொள்ளலாம். இது கள்ளர் சார்த்த கல்வெட்டு.
_____________________________
நெற்றம்பாக்கம்: மதுராந்தகம் நெற்றம்பாக்கத்தில் உள்ள நந்தீசுவரர் கோவிலில் மறுசீரமைப்பின் போது லிங்கத்தின் சதுரவடிவ ஆவுடையில் பிராமி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கல்வெட்டு: சே நருமான்
விளக்கம்: ஆட்சியாளன் "நருமான்" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. சே என்றால் தலைவன்.
_____________________________
கிண்ணிமங்கலம்: மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் மதுரை - தேனி சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எதிரில் கிண்ணிமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏகநாதன் மடத்தில் புதையுண்ட சிதைந்த ஏகமுக லிங்கத்தில் இருவரியில் பிராமி கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது.
கல்வெட்டு: ஏகன் ஆதன் / கோட்டம் .
விளக்கம்: ஏகன் என்ற தலைவனுடைய மதில் கொண்ட கோவில் என்பது பொருள். இது பள்ளிப்படை கோவில் என்று பிற்கால வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
_____________________________
கொங்கப்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கொங்கப்பட்டியில் சீலைக்காரி அம்மன் கோவிலின் முன்பாக ஊர் மந்தையில் பழமையான தொம்பரைக் கல்லில் தமிழி எழுத்து பொறிப்பில் இக்கல்வெட்டு திசம்பர் 2021 இல் கண்டறியப்பட்டது
"_ _ததேள் இரங இட்டார் பேரார் அ / _ _ ப பத்தான் பார்ப்பான் தவதந்தை / _ இளங்கண்ணஅன்"
இரங இட்டார் - இரங்கல் இதாவது, நினைவுக் கல் வைத்தார்; பேரார் (பெயர் +ஆர்) - புகழ்மிக்க பெரிய மனிதர்; அ - இன்பம் துனபம் என எல்லாக் காலத்தும் முதன்மை பெறும்; பார்ப்பான்- வேதம், தியானம், பூசனை கற்றுக்கொடுப்பவர்; தவ தந்தை - தவத்தில் உயர்ந்தவர். பத்தான் - கூட்டம் இதாவது, பின்பற்றிகள் (followers) என கொள்ளலாம்.
விளக்கம்: உயிர் நீத்த படைத்தலைவனுக்கு எல்லாக் காலத்திலும்முதன்மை பெறும் புகழ்மிக்க பெரிய மனிதரும், வேதம், தியான யோகம் முதலியன கற்றுக்கொடுப்பவரும், தவத்தில் உயர்ந்தவரும் ஆன இளங்கண்ணன் நினைவுக்கல் வைத்தார் என்பது பொருள். கல்வெட்டு இளங்கண்ணனின் பெருமைகளையே அதிகம் பேசுகிறது. முதல் வரியிலும் இரண்டாவது வரியிலும் முன்னே சில எழுத்துகள் சிதைந்து உள்ளதால் இந்த அளவே பொருள் கொள்ள முடிந்தது. மீண்டும் சீராக படியெடுத்தால் கல்வெட்டின் பொருளை இன்னும் தெளிவாக அறியமுடியும். அதுவரை இது தற்காலிகமானது தான்.
_____________________________
தாதப்பட்டி: தஞ்சைத் தமிழிப் பல்கலைக்கழக தொல்எழுத்தியல் மற்றும் தொல்லியல் துறையால் 2006 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் வத்தலகுண்டிற்கு 16 கீலோ மீட்டர் தெற்கே வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்த தாதப்பட்டி என்னும் ஊரில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கற்பதுகை ஒன்று அறியப்பட்டது. ஈமப்புதைப்பு நடுகல்லில் தமிழி எழுத்து அறியப்பட்டது அதுவே முதல் முறை. இவ்வூர் இதே போல் மூன்று நடுகற்கள் அறியப்பட்ட புலிமான் கோம்பைக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டு: இதன் உயரம் 200 செ.மீ. இருந்திருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. இதில் சில முன் எழுத்துகள் சிதைந்தது போக ஒரே வரியில் எஞ்சிய 13 எழுத்துகள் தெளிவாகக் காணப்படுகின்றன.
ன் அடிஓன் பாகல் பாளிய் கல்
அடியோன் - ஏவலன், servant; பாகல் - வளைவாக வெட்டி உடைத்த, பகு > பகல் > பாகல்; பாழி - நினைவு கல்.
விளக்கம்: சிலர் 'த' என்ற எழுந்து முதலில் உள்ளதாக கூறுகின்றனர். எனவே அது "தன்" என்று முடியும் ஒரு ஆடவன் பெயர் என குறித்துள்ளனர். அது அவ்வாறு ஆயின் என்னுடைய கருத்து அடியோன் என்பது அவருடைய ஏவலன் என்பதைக் குறிக்கின்றது. பாகல் பாளி என்பது வளைவாக வெட்டி உடைத்த நினைவுக் கல் என்பது இதன் பொருள்.
_____________________________
புலிமான்கோம்பை நடுகற்கள்: புலிமான்கோம்பையில் தமிழி கல்வெட்டுள்ள நடுகற்கள் மூன்று கிட்டியது. இவ்வூர் தேனி மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்து உள்ளது
வேள் ஊர் / அவ்வன் பதவன்
பதவன் - கல்லை வடிப்போன், சிற்பி, one who shapes a stone. பதக்கம் என்ற சொல்லின் வேரை பதவனோடு பொருத்திப் நோக்குக.
விளக்கம்: இருவரி கொண்ட கல்வெட்டு இது. வேளூரைச் சேர்ந்த அவ்வன் எனும் இயற்பெயர் கொண்ட கல்வடிக்கும் சிற்பி என்பது இதன் பொருள்.
- - அன் ஊர் அதன் / - - -- ன் அன் கல்
விளக்கம்: இரு வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டு. நடுகல்லின் இடைப் பகுதி உடைந்து உள்ளது. அதன் என்பவன் ஊர் குறிக்கப்படுகிறது. பின்பு எழுத்து சிதைந்த ஒருவன் பெயரை குறிப்பிட்டு அவனது கல் என்கிறது.
கல் / பேடு தீயன். அந்தவன் / கூடல் ஊர் ஆகோள்.
அந்தவன் - அந்த + அவன் எனப் பிரிக்க வேண்டும், that person; ஆ கோள் - மதிப்புள்ள ஆடு, மாடு இவற்றை களவாடுதல்.
விளக்கம்: மூன்று வரிக்கல்வெட்டு இது. இக்கல் பேடுதீய்யனுக்கு உரியது. அந்த அவன் கூடலூரின் மதிப்புள்ள பொருளை களவாடியவன் (ஆ கோள்) என்பது இதன் பொருள்.
_____________________________
புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும். 2012 - ம் ஆண்டு இக் கோட்டையில் உள்ள குளக்கரையில் முக்கோண வடிவிலான 5 வரித் தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கல்வெட்டு: கோவென் கட்டிற் நெதிர / ணறு பொன் கொங்கர் விண்ணகோன் / ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு / அங்கபடைத் தாணையன் கணங், / குமரன் கல்.
நறு பொன் - பொற்காசு; ஆ எறித்து - செல்வத்தை கவர; ஏவ - ஏவிவிட; அங்கப்படை - வெட்டும் படை; தாணையன் - முன்னணி மறவன்
விளக்கம்: கோவன் கட்டி என்ற கங்க அரசனுக்கு எதிராகப் போரிட தன் பெயரில் பொற்காசு வெளியிட்ட கொங்கர் இன அரசன் விண்ணகோன் மதிப்புள்ள பொருளைக் கவர்ந்துவர கட்டளையிட படைத்தலைவன் அதவன் உடைய வெட்டும்படையின் முன்னணிப் போர்வீரன் கணன் குமரன் அதன்போது வீரசாவடைந்தான். அவனது நினைவுக் கல் இது என்பது பொருள். மதிப்புள்ள பொருளை குறிக்கும் "ஆ" என்பது ஆ கோள் எனும் புளிமான் கோம்பை நடுகல்லிலும் ஆட்சி பெற்றுள்ளது. ஆ கோள் என்பதும் ஆ எறித்து என்பதும் ஒன்றே.
மேற்சொன்ன தமிழி கல்வெட்டுகள் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் நூலை மேற்கோளாகக் கொண்டது.
தமிழ் பிராமி கல்வெட்டுகள் நூல் pdf https://www.tnarch.gov.in/Library%20BOOk%20PDF/TAMIL%20BIRAMI%20KALVETTUKAL.pdf
ஆசீவகர் பற்றிய குறுநூல் https://www.rarebooksocietyofindia.org/book_archive/196174216674_10153031903361675.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.