- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
மொழியில் பெயர்ச் சொற்களும், வினைச் சொற்களும் இன்றியமையாதவை. இவ்விரு சொற்களைக் கொண்டே பெரும்பாலான கருத்துகளை உணர்த்தலாம். எனினும், தெளிவாகவும் நுட்பமாகவும் கருத்துக்களை விளக்குவதற்கு ஒட்டுக்கள், இணைப்புச் சொற்கள், பெயரடைகள் போன்றவை மிகுதியாகப் பங்களிக்கின்றன எனலாம். ஒட்டுக்களில் வேற்றுமை பின்னொட்டாக அமைகின்றது. வேற்றுமை என்னும் சொல்லின் உருவாக்கத்தினையும், மரபிலக்கணத்தார், உரையாசிரியர், மொழியியலாளர் ஆகியோரின் வேற்றுமை பற்றிய வரையறைகளையும் வேற்றுமையின் எண்ணிக்கை பற்றியும் மெய்ப்பொருள் விளக்கத்தையும் வேற்றுமை ஆறு எனும் மொழியியலாளர் கருத்தையும் உருபுகளையும் சொல்லுருபுகளையும் இன்றியமையாமையையும் அவைத் தொகையாக வருவதையும் இவ்வியலுள் காண்போம்.

வேற்றுமை சொல்லாக்கம்
வேறு என்னும் குறிப்பு வினையடியாகப் பிறந்த மை ஈற்று உடன்பாட்டுத் தொழிற் பெயரே வேற்றுமை என்பதாகும். மாற்றம் அல்லது வேறுபாடு என்பது பொருளாகும். பெயர்க்கு வினையோடு உள்ள உறவில் நேரும் மாற்றத்தை வேறுபாட்டைக் குறிக்க இச்சொல்லை வழங்கியது மிகவும் பொருத்தமே. பல்வேறு மொழிகளிலும் வேற்றுமையைக் குறிக்கும் சொற்கள் இப்பொருளிலேயே வழங்குகின்றன.

வேற்றுமையின் விளக்கமும் வரையறையும்
வேற்றுமை பற்றி விளக்குவதிலும் வரையறுப்பதிலும் மரபிலக் கணத்தார்களும், உரையாசிரியர்களும், மொழியியலாளர்களும் சிற்சில வேற்றுமைகளைக் கொண்டுள்ளனர்.

மரபிலக்கணத்தார்

தமிழிலக்கண வரலாறு பதின் மூன்று இலக்கண வேற்றுமைகளைப் பேசுகின்றன. ஆயின், அவற்றுள் ஐந்து நூல்களே வேற்றுமையை வரையறுக்க முயல்கின்றன.

வரையறையைச் செய்யும் நூல்களாவன

1. நன்னூல்
2. இலக்கண விளக்கம்
3. தொன்னூல் விளக்கம்
4. சுவாமி நாதம்
5. தமிழ் நூல்

“ஏற்கும் எவ்வகைப்பெயர்க்கும் ஈறாய் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை”1

“ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன ஏழென மொழிப
விளி கொள்வதன் கண் விளியலங்கடையே”2

“வேற்றுமைப்படுத்தலின் வேற்றுமையாம்”3

உரையாசிரியர்கள்
பொதுவாகப் பெயரின் பொருளை வேறுபடுத்துவதே வேற்றுமை என்பதும் உரையாசிரியர்கள் கருத்துமாக உள்ளது. தெய்வச்சிலையாரின் கருத்தும் இதுவாக இருப்பினும் இக்கால மொழியிலாளரின் தொடரியல் சிந்தனைகளுக்கு ஒப்ப இவரின் விளக்கமும் வரையறையும் உள்ளது. அதுவருமாறு, ஒரு பொருளை ஒரு கால் வினை முதலாக்கியும், ஒரு கால் செயப்படு பொருளாக்கியும், ஒரு கால் கருவியாக்கியும், ஒரு கால் ஏற்பது ஆக்கியும், ஒரு கால் நீங்க நிற்பது ஆக்கியும், ஒரு கால் உடையது ஆக்கியும், ஒரு கால் இடமாக்கியும் இவ்வாறு வேறுபடுத்தியது.

மொழியியலாளர்கள்
வேற்றுமைகளுக்குரிய பண்புகளாகத் தொல்காப்பியர் சுட்டுவதனின்று. வேற்றுமையை வரையறுக்கும் பொழுது, “தொடரில் ஒரு பெயர்ச் சொல்லுக்கும் ஒரு வினைச்சொல்லுக்கும் இடையேயுள்ள பொருள் தொடர்பாகிய இலக்கண உறவே வேற்றுமை எனப்படும்.”4 என்கிறார். “பெயருக்கும் வினைக்கும் உள்ள உறவு வேறுபாடுகளை “வேற்றுமை” என்றும் பெயரின் அடிப்படைப் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை”5 என்றும் விளக்குவார் பொற்கோ.

வேற்றுமை என்பது, “பெயரோடு முடிந்துவிடுகிற ஒன்று அன்று அது தொடரியல் இலக்கணம் சார்ந்தது. ஒரு வாக்கியத்தில் உள்ள பெயர்கட்கு வினையோடுள்ள பொருள் தொடர்பை இலக்கண உறவைக் காட்டுவதாகும்.”6 எனவே, வேற்றுமை என்பது பெயருக்கும் வினைக்கும் உள்ள அடிப்படையான பொருளுறவு. தொடருறவு. இலக்கண உறவு ஆகியவற்றை வேறுபடுத்துவது என்று கொள்ளலாம்.

வேற்றுமையின் எண்ணிக்கை

“வேற்றுமை தாமே ஏழென மொழிப”7

“விளிகொள்வதன் கண் விளியோடு எட்டே”8

விளியைச் சேர்த்துக் கொள்வதின் மூலம் வேற்றுமை எட்டு ஆகும். வேற்றுமை ஏழு என்பது பிறர் கொள்கை, எட்டு என்பது தொல்காப்பியர் கருத்து. எனவேதான் விளியைத் தனியாகப் பிரித்துக் காட்டியுள்ளார். அது மட்டுமின்றி விளி வேற்றுமைக்கென சில வேறுபட்டத் தன்மைகள் காணப்படுகின்றன.

தொடரின் அகஉறுப்பாக மற்ற வேற்றுமைகள் அமைய விளிவேற்றுமை மட்டும் புறஉறுப்பாக அமைகின்றது. (எ.கா.) கண்ணா நீ இங்கே வா.
விளியேற்றப் பெயர் வேறு எத்தொடர்களுமின்றி தனியே நிற்கலாம். (எ.கா.) கண்ணா.

மகர ஈற்றுப் பெயர்கள் அத்துச் சாரியைப் பெற்றே மற்ற வேற்றுமை உருபுகளை ஏற்பதையும் டு, று என முடியும் சொற்கள் உருபு ஏற்பதில் ஒற்று இரட்டிப்பதையும் காணலாம். ஆனால், விளி ஏற்கும் போது இம்மாற்றங்கள் இல்லை. (எ.கா.) நிலமே, நாடே, ஆறே.

இவ்வேறுபட்டத் தன்மைகளைக் கருதியே தொல்காப்பியர். விளி மரபைத் தனி இயலாக அமைத்தர். நன்னூலார் போன்ற மற்ற இலக்கணத்தாரும் எட்டு என்றே கொள்கின்றனர். எனினும், சேனாவரையர் கருவி வேற்றுமை வேறாகவும் உடனிகழ்ச்சி வேற்றுமை வேறாகவும் கொள்ளும் வகையில் உரை கூறி இருப்பதும் தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமை உருபாக “ஒடு“-வை முதன்மைப்படுத்த, நன்னூலார் ”ஆல்” உருபை முதன்மைப் படுத்துவதும் உண்டு. வேற்றுமையின் எண்ணிக்கை முதலானவற்றில் கருத்து வேறுபாடுகள் உள்ளதைக் காணலாம். மொழியியலாரும் இக்கருத்தில் வேறுபடுகின்றனர்.

மூவகைப் பெயரீடு
வேற்றுமைகளுக்குப் பெயரிடும் போது மூன்று வகையான அடிப்படையில் நம்முடைய இலக்கணப் புலவர்கள் பெயரிட்டிருக்கின்றார்கள்.

உருபடிப்படை
ஒரு வேற்றுமைக்கு ஒரு உருபை முதன்மைப் படுத்தி, உருபு அடிப்படையில் பெயரிடுவதற்கே தொல்காப்பியர் முதன்மை தந்திருக்கிறார்.

ஐ    - எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

ஒடு - எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

கு - எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

இன் - எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

அது - எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

கண் - எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

மேற்கண்ட நூற்பாக்களின் சொல்லாட்சி இந்த உண்மையை நமக்கு நன்றாகப் புலப்படுத்துகின்றன.

வேற்றுமை உருபுகள்



இப்பட்டியலிலிருந்து உருபை முதன்மைப் படுத்துவதில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதையும் புதிய மாற்றுருபுகள் தோன்றியிருப்பதையும் அறியலாம். மரபிலக்கணங்கள் எழுவாய்க்கு உருபைக் கூறாவிட்டாலும் மொழியியலார் உருபுள்ளதாகவே கருதுகின்றனர். கால்டுவெல்லும். மு.வ.வும் எழுவாய் வேற்றுமையின் உருபாக அம் என்பதைக் குறிக்கின்றனர். இவர்கள் கூறும் கருத்து. அதாவது அம் எனும் உருபு வடமொழி மரபிற்கே உரியது, தமிழுக்குப் பொருந்தாது. இலக்குவனார், கமில் சுவலபில் போன்றோர் எழுவாய் வேற்றுமையின் உருபாக “இன்மை’ (Zero) வடிவத்தில் குறிக்கின்றனர். இதை இன்மைப் பொருள் என்பதைவிட உருபிலா உருபு என்று குறிப்பிடுவதே பொருத்தமாக உள்ளது. விளிக்குத் தனித்த உருபு இல்லையெனினும் விளியேற்கும் பெயர்த்திரிபையே அதற்குரிய உருபாகக் கொள்ளலாம்.

பொருளடிப்படை
வேற்றுமை உணர்த்தும் பொருளடிப்படையில் எழுவாய், செயப்படுபொருள், கருவி கொண்ட நீங்கல் உடைமை, இடம் விளி என்று பெயர்கள் வழங்கப்படுவதும் உண்டு. ஒரு வேற்றுமை ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை உணர்த்துவதாயினும் அவற்றுள் சிறந்ததை அல்லது பெருவழக்குடையதைப் பொருளடிப்படையில் பெயரிடுவதைக் காண்கிறோம். (எ.கா.) மூன்றாம் வேற்றுமைக்குக் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி ஆகிய பொருள்கள் இருப்பினும் கருவியே பெயராக அமைந்துள்ளது.

எண்ணடிப்படை
தொல்காப்பியருக்கு முன்பே வேற்றுமைகளுக்கு எண் அடிப்படையில் பெயரிட்டு வழங்கும் மரபு இருந்து வந்திருக்கின்றன என்றும் அதனாலேயே அவரும் எண் அடிப்படையில் பெயர்களை அறிமுகப் படுத்தினார் என்பதும் கீழ்வரும் நூற்பாக்களின் மூலம் அறிய முடிகிறது.

“இரண்டாகுவதே
ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி”9

“மூன்றாகுவதுவே
ஒடு வெனப் பெயரி வேற்றுமைக் கிளவி”10

மேலே கூறியபடி உருபு அடிப்படையிலும் பொருளடிப்படையிலும் பெயரிடும் போது சில சிக்கல்கள் காணப்படுகின்றன. ஒரு வேற்றுமைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உருபுகள் இருப்பின், பொருள்கள் இருப்பின் ஒன்றை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யும் போது மற்ற உருபுகளோ பொருள்களோ குறிப்பிடப்படாமல் விடப்படுகின்றன. இவை போன்ற சிக்கல்கள் எண்ணடிப்படையில் தவிர்க்கப்படுகின்றன. எனவேதான் எண்ணடிப்படையில் பெயரிடுவதையே தொல்காப்பியரும் அவருக்குப் பின் வந்தவர்களும் சிறந்த ஒன்றாகக் கருதுகின்றனர்.

வேற்றுமையின் மெய்ப்பொருள் விளக்கம்
வேற்றுமை மொத்தம் எட்டெனவும் அவற்றுள் முதல் வேற்றுமை முதலானவை எல்லாம் அதன் திரிபெனவும் இறுதி வேற்றுமை பெயரின் விளி எனவும் கூறுவர். முன்னர்த் தோன்றிய மொழியோடும் இலக்கணத்தோடும் பின்னர்த் தோன்றிய மெய்ப்பொருள் கருத்தைப் பொருத்துவது ஏற்புடையது அன்று எனினும் இதன் ஒப்புமை நயத்தைக் கருதி மகிழலாம்.

வேற்றுமை ஆறு எனும் மொழியியலார் கருத்து
மூன்றாம் வேற்றுமை உருபின் பொருண்மைக்கான கருவி உடனிகழச்சி ஆகியவற்றைத் தனித்தனி வேற்றுமைகளாகக் கொள்ள வேண்டும். மரபிலக்கணத்தார் கூறும் ஐந்தாம் வேற்றுமை இன்று முழுவதும் மறைந்து விட்டது. எனவே, இன்னும் கூட வேற்றுமையின் எண்ணிக்கை எட்டு என்கிறார் பொற்கோ,

“It may be noted that in mordern Tamil also we have eight cases.
The third case has split into two and the fifthcase has totaly
disappeared. As a result of this we have eight cases again.”11

மரபிலக்கணத்தார் கூறும் எட்டு வேற்றுமைகளோடு இக்கால மொழியியலாளர் கூறும் இருபத்தோரு வகையான வேற்றுமை பொருண்மைகளைப் பொருத்தித் தொகுத்து வேற்றுமையின் எண்ணிக்கை ஆறு என்கிறார். விளியைப் பெயரோடும் ஐந்தாம் வேற்றுமைப் பொருண்மையைப் பிரித்து ஒப்புமை இரண்டிலும் ஏது மூன்றிலும், நீங்கல் ஆகியவற்றை ஏழிலும் அடக்கிவிடுகின்றார். மரபிலக்கணத்தாரின் கருவி. உடனிகழ்ச்சி ஆகியவைத் தனித்தனி வேற்றுமைகளாகக்கொள்ளப்பட்டு ஆறாம் வேற்றுமையாகக் கொள்ளாததன் காரணம் அவ்வகைத் தொடர்களில் பொருண்மை உறவு வேற்றுமையாகச் செயல் படாததாகலாம். ”சாத்தனது கை’ என்ற தொடரின் புதை வடிவம் ”இக்கை சாத்தனுடையது’ என்பதாகும். இதில் உடையது என்பது குறிப்பு வினையாக உள்ளது. இதுவே புறவடிவமாகும் பொழுது குறிப்புப் பெயராகி அதற்குரிய விகுதி அது பெயரோடு சேர்கிறது இப்பொழுது சாத்தனது கை என்றாகிறது. இத்தொடரில் வேற்றுமை உருபு வேற்றுமைப் பொருளில் செயல்படாத காரணத்தால் ஆறாம் வேற்றுமையை. வேற்றுமையாகக் கொள்ளப் படவில்லை. இனி இவைகள் நீங்க வேற்றுமைகள் ஆறு எனக் கூறும் ஆதித்தனின் பட்டியலைக் காண்போம்.

இது மேலும் ஆய்வுக்குரியது.

இன்றும் வேற்றுமை எட்டே
முன்னர்க் குறிப்பிட்டவாறு இவர் கூறும் பட்டியல் மேலாய்வுக்குரியது விளியின் சிறப்பியல்புகளைக் கருதித் தனி இயலாகத் தொல்காப்பியர் அமைப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, விளியை எழுவாயோடு சேர்க்காது தனியியலாகவே கொள்ள வேண்டும். மூவிடப் பெயர்கள் உருபு ஏலா வடிவம், உருபு ஏற்கும் வடிவம் என இரு நிலைகளிலே அமைகின்றன. உருபு ஏற்கும் வடிவத்துடனேயே அது உடைய உருபுகளை ஏற்கின்றன. எனவே, மரபிலக்கணத்தாரின் ஆறாம் வேற்றுமையை இன்றும் வேற்றுமையாகவே கொள்ளலாம், இந்நிலையில் வேற்றுமை எட்டாகிறது.

உருபுகளின் தோற்றமும் வளர்ச்சியும்

வேற்றுமை உருபினைத் தொல்காப்பியர் கிளவி என்று குறிப்பிடுகிறார். கிளவி என்பது பொதுவாகச் சொல்லைக் குறித்தாலும் பெயருக்கும் வினைக்கும் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது. சொல்லுருபு நாளடைவில் தேய்ந்து குறுகிய வடிவத்தையே குறிக்கப் பயன்படுகிறது எனலாம். பண்டைய இலக்கியங்களில் வேற்றுமை உருபுகள் அருகிவருகின்ற நிலையினை அறிய முடிகிறது. தொல்காப்பியத்திற்குச் சமகால இலக்கியங்களாகக் கருதப்பெறும் சங்க இலக்கியங்களில் வேற்றுமைத் தொகைகளின் ஆட்சியே 70 விழுக்காடுகளுக்கு மேலாகக் காணப்படுகின்றன. இன்னமும், எங்கெல்லாம் வேற்றுமை உருபுகள் தொக்கு வருகின்றனவோ அங்கெல்லாம் பொருள் குழப்பம் ஏற்படும் நிலை இருக்கின்றதே! இங்கெல்லாம் கூட வேற்றுமை உருபுகள் தொக்கு வரும் நிலையினை இவ்விலக்கியங்களில் காண முடிகின்றது.

“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.”12

“புரவலர் காணாது”13

“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு”14

கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகளில் மிக முந்தையதாகக் கருதப்பெறும் கல்வெட்டுகளில் கூட வேற்றுமை உருபுகளின் ஆட்சி இல்லை எனும் நிலைதான் இருக்கின்றது. இக்கருத்துகள் அனைத்தும் வேற்றுமைக் கோட்பாடும் வேற்றுமை உருபுகளும் பிற்கால வளர்ச்சியாக இருத்தல் கூடும் என்ற கருத்தினை உருவாக்குகின்றன. வேற்றுமை உருபுகள் அனைத்தும் முழுச்சொற்களின் திரிபு நிலையால் அமைந்தவை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். திராவிட மொழிகளில் வேற்றுமைப் பொருள் அனைத்தும் வேற்றுமை உருபு (Casal Suffix) மற்றும் சொல்லுருபுகளாலேயே (Post-possition) உணர்த்தப் படுகின்றன என்றும் அவையனைத்தும் ஒரு காலத்துக்குத் தனிச்சொற்களாக இருந்தவையே என்றும் கால்டுவெல் குறிக்கிறார். அவற்றுள் பெரும்பாலானவை தனித்தியங்கும் தம் இயல்பு கெட்டு, வேற்றுமை உணர்த்தும் விகுதிகள் அல்லது வேற்றுமையுருபுகள் என்ற நிலையினைப் பெற்றுவிட்டன என்பது அவர் கருத்து. தொடக்கத்தில் அவையனைத்தும் பின் இணைத் துணைப் பெயர்ச் சொற்களாகவே இருந்தன என்பது அவரது முடிவு. வேற்றுமைத் தொடர்களில் வழங்கிய இடைச்சொற்களுள் வழக்கும் பயிற்சியும் மிகுந்தவை பின்னர் பல்வேறு வேற்றுமை உருபுகளாக வளர்ச்சியுற்றன. வேற்றுமை உருபுகள் தமிழின் தொடக்கதில் இல்லை இவ்வுண்மையைச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. பழைய பேச்சு வழக்கு மரபுகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சித்த மருத்துவ நூல்களில் வேற்றுமை உருபுகள் இல்லாமையே தொடர்கள் செல்லும் பாங்கைக் காணலாம்.

கொழுந்து சாப்பிடத் தீரும்
இஃது ஆச்சாரி அனுபவம்
சாரணை சாப்பிடத் தீரும்
இரண்டும் தட்டிக்கொடுக்க

என மருத்துவ நூல்களில் வருகின்றன. மேலே கண்ட காட்டுகளில் வேற்றுமை உருபு வரவேண்டிய இடங்களில் அவை வராமல் இருக்கின்றன. கீழ்வருமாறு உருபுகள் சேர்ந்து வருவதே தற்போதையத் தமிழ்,

கொழுந்தைச் சாப்பிடத் தீரும்
இஃது ஆச்சாரியது அனுபவம்...

போன்றவாறு அமையும்.

அது முருகன் வீடு
மாடு பிடித்தான்

என்பன போன்று இன்றும் பேச்சு வழக்கு உருபின்றியே பெரும்பாலும் காணப்படுகின்றன. “வீட்டு முருங்கை போன்ற தொடர்களில் ‘கண்’ உருபு பேச்சில் ஆளப் படாமையையும் இங்குக் கருதலாம்”15 என்பர். இவ்வாறு ஆயும் போது தமிழில் வேற்றுமை உருபுகள் பிற்காலத்தில் தோன்றிய ஒரு வளர்ச்சியே என முடிவுக்கு வரலாம். உருபு பிற்காலத்து வளர்ச்சியாயினும் வேற்றுமைப் பொருளுடைய சொற்களைக் கொண்டு வாக்கியங்கள் வழங்கியிருக்கலாம். அச்சொற்களே காலப் பழமையால் சுருங்கிக் குறுகிய வடிவம் பெற்றிருக்காலம். பிறமொழித் தொடர்பால் அவ்வடிவங்களுக்குரிய இலக்கண உறவை அறிந்து தொல்காப்பியர் வேற்றுமைக் கோட்டுபாடுகளை வகுத்திருக்க வேண்டும்.

சொல்லுருபுகள்
சொல்லுருபு என்பது வேற்றுமையுருபு செய்யும் பணியைச் செய்யும் வேறொரு சொல் ஆகும். இதனைச் சொல்லுருபு என்கிறோம். அதாவது, சில வேளைகளில் வேற்றுமை உருபின் பணியை ஒரு தனிச் சொல் நின்று செய்வதையும் காணமுடியும். அப்பொழுது அச்சொல்லைச் ‘சொல்லுருபு’ என்று வழங்குவர். உருபின் பணியைச் செய்யும் சொல் என்றோ சொல்லாக நின்று உருபாகப் பயன்படும் ஒன்று என்றோ பொருள் கொள்ளலாம். (எ.கா.) 1. ராமன் கத்தியால் வெட்டினான். இதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு தனக்குரிய கருவிப் பொருளை உணர்த்தி நின்றது. (எ.கா.) 2. ராமன் கத்தி கொண்டு வெட்டினனான். முதல் எடுத்துக்காட்டில் ‘ஆல்’ என்ற உருபு உணர்த்திய அதே பொருளை உணர்த்திற்று இவ்வாறு, ஒரு வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தில் இந்த உருபிற்குப் பதிலாக ஒரு சொல்லுருபு நின்று அவ்வேற்றுமை உருபின் பொருளைத் தரும்போது அச்சொல்லைச் சொல்லுருபு என்று வழங்குகிறோம். இவ்வாறு வருவது மட்டுமின்றி வேற்றுமை உருபின் அருகிலும் சொல்லுருபு நின்று பொருளை மேலும் தெளிவுருத்துவதுண்டு.

(எ.கா.) 1. கத்தியைக் கொண்டு வெட்டினான் இதுவே தொகையாக.

2. கத்தி கொண்டு வெட்டினான் என்றும் வரும். இவ்விரு காட்டுகளில்

முன்னதில் ஐ உருபின் அருகில் கொண்டு எனும் சொல்லுருபு வந்ததால் அது தனக்குரிய செயப்படு பொருள் தன்மையை இழந்து கருவிப் பொருள் தன்மையைப் பெற்றது. பின்னர்த் தன் தொகையில் ‘ஐ’ மறைந்து வருவதாகவும் கொள்ளலாம் அல்லது ‘ஆல்’ உருபுக்குப் பதிலாகக் கொண்ட சொல்லுருபு வந்திருப்பதாகவும் கொள்ளலாம். இனி எந்தெந்த உருபுக்கு எந்தெந்த சொல்லுருபு வரும் என்பதை கீழ்வரும் பட்டியலில் காணலாம்.

வேற்றுமையின் இன்றியமையாமை
தொடர்கள் தொகா நிலையாகவும் தொகை நிலையாகவும் வரும் என்பதை முன்னர்க் கண்டோம். எவ்வாறாயினும் தொடர்களில் வேற்றுமைகள் இன்றியமையாமையாகும். தொடர்களில் வேற்றுமை உருபுகள் பொருளுணர்த்தும் பாங்கினை மேலே கண்டோம். எனவே, வேற்றுமை மிக இன்றியமையாதது. இதனை மேல்நாட்டு அறிஞர் லாஞ்சென்டொயன் ( Langendoen) கருத்தைக் கூறி பின்வருமாறு விளக்குகிறார். “ஒவ்வொரு வாக்கியத்தையும் நுட்பமானதொரு தனி சிறு நாடகம் என்று கொண்டால், அவ்வாக்கியத்தின் பயனிலைதான் அந்நாடகத்தின் கரு என்றும் அவ்வாக்கியத்திலுள்ள பெயர்ச்சொற்கள்தாம வெவ்வேறு வேடம் புனைந்த மாந்தர்கள்”16 என்றும் கூறுவர். (எ.கா.)’சாலியன் ஆடையை நூலால் ஆசிரியருக்காக வீட்டின்கண் நெய்தான்’ எனும் வாக்கியத்தை ஒரு சிறு நாடகம் என்று கொள்வோம். ‘நெய்தான்’ என்பது இந்நாடகத்தின் கரு. சாலியன் ஆடை நூல், ஆசிரியர் வீடு என்பன இந்நாடகத்தில் நடிக்கும் மாந்தார்கள் இவர்கள் முறையே 0 ஐ ஆல் கு ஆக கண் என்னும் ஒப்பனைகளைப் புனைந்துள்ளனர் புனைந்தபின் முறையே எழுவாய் செய்படுபொருள். கருவி பொருட்டு இடம் என்னும் பாத்திரங்களாகத் தோன்றி நடிக்கிறார்கள். இவ்வாறு வெளிப்படையாகத் தொடர்களில் வேற்றுமைவுருபுகள் வெளிப்படையாக அமைந்து பொருளை விளக்குவது போன்றே தொகையிலும் பொருள் உணர்த்துவதில் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது.

வேற்றுமைத்தொகை
தொகை நிலைத் தொடரில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவதையே வேற்றுமைத்தொகை என்கிறோம்.

(எ.கா.) நிலம் கடந்தான்

வாள் எறிந்தான்

போன்ற தொடர்களில் ஐ, ஆல் உருபுகள் மறைந்து வருவதை வேற்றுமைத்தொகையாக உரையாசிரியர்களில் ஒரு சாரார் கருதுகின்றார். ஆனால், மொழியியலாளர்கள் இக்கருத்தை ஏற்க மறுகின்றனர். இவர்கள் இரு சொற்கள் சேர்ந்து ஒரு சொல் நீர்மைத்தாய்(ஒரு தன்மை) வருவதையே தொகை எனக் கொள்கின்றனர்.

(எ.கா) 1. நாட்டுப்பண்

2. கிரிவலம்

இவை போன்று வருவனவற்றையே மொழியியலாளர் வேற்றுமைத்தொகையாகக் கொள்கின்றனர். இவற்றுள்ளும் தலையணை, மாநிலங்களவை என்பன போன்ற சொல்களில் உருபு மட்டும் தொக்கி வருகின்றன. கலைக்கூடம், கற்சிலை சொற்களில் உருபும் பயனும்உடனாகத் தொக்கி வருகின்றன. இவை மட்டுமின்றி இன்னும் பிற நிலைகளிலிலும் உம்மைத்தொகைக்குள் அடங்கிக்கிடக்கும் வேற்றுமைத்தொகை போன்றும் காணப்படுகின்றன.

முடிவுரை

வேறு - குறிப்புவினை, மை - பண்புப்பெயர் விகுதி சேர்ந்து வேற்றுமையானது.
பெயருக்கும் வினைக்கும் உள்ள பொருளுறவு. இலக்கண உறவு, தொடருறவு போன்றவற்றை வேறுபடுத்துவது வேற்றுமை.
வேற்றுமையின் எண்ணிக்கை பற்றி சிற்சில கருத்து வேறுபாடுகள் இருப்பினும் மரபிலக்கணத்தார் வேற்றுமையை எட்டு என்கிறார்.
உருபு, பொருள், எண் ஆகிய மூன்று நிலைகளில் வேற்றுமைக்குப் பெயர் அமைகிறது.
எழுவகை பிறவியோடும் இறுதியில் இறைவன் தன்னிடம் அழைத்து முக்தி அளிப்பதோடும் பொருத்தி எட்டு வேற்றுமை மெய்ப்பொருள் விளக்கம் பெறுகிறது.
மொழியியலாளரின் கருத்துப்படி வேற்றுமை ஆறாகிறது.
வேறு வேறு நிலைகளில் தொகுத்தும் பகுத்தும் பார்க்கும் போது இன்னும் வேற்றுமை எட்டாகிறது.
வேற்றுமைப் பொருளில் பயன்பட்டச் சொற்கள் காலப் பழமையால் சுருங்கி உருபுகள் ஆகியுள்ளன.
உருபுகளுக்கு அடுத்து வந்து பொருளைத் தெளிவுறுத்துகின்றன. அல்லது உருபுகளுக்குப் பதிலாக வருகின்றன.
வாக்கியத்தில் வேற்றுமையின் இன்றியமையாமை உணர்தற்குரியது
தொடரில் வெளிப்படையாக வருதலில் உள்ள இன்றியமையாமை தொகையினும் அமைந்து தொடரின் சுருங்கிய வடிவத்திற்கு உதவுகின்றன.
உருபு மட்டும் தொகுதல், உருபும் பயனும் தொகுதல், பிற நிலைகளில் தொகுதல் என மூன்று வகைகளில் வேற்றுமைத்தொகை அமைகிறது.

அடிக்குறிப்புகள்
1. நன்னூல், ப - 291.
2. இலக்கண விளக்கம், ப - 193.
3. தொன்னூல் விளக்கம், ப - 55.
4. ஆதித்தன், இலக்கணக் கொள்கை, ப - 190.
5. கோதண்டராமன், தமிழிலக்கணக் கலைக் களஞ்சியம், ப - 49.
6. அரங்கராசன் மருதூர், தமிழில் வேற்றுமைகள், ப - 52.
7. தொல்காப்பியம், ப - 546.
8. மேற்படி, ப - 547.
9. மேற்படி, ப - 555.
10. மேற்படி, ப - 557.
11. கோதண்டராமன், தமிழிலக்கணக் கலைக்களஞ்சியம், ப - 40.
12. குறள் - 191.
13. புறநானூறு, ப - 204.
14. குறள் - 240.
15. சௌந்திரப்பாண்டி, தமிழ் மணமும் வழியும், பக். - 21, 23.
16. அரங்கராசன் மருதூர், தமிழில் வேற்றுமைகள், ப - 52.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R