ஆய்வு: சென்ரியு கவிதைகள்தமிழ் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புதுப் மாற்றங்களைப் பெற்று வருகின்றது. ஹைக்கூ கவிதை வடிவத்திலிருந்து பிரிந்து சப்பானில் மாபெரும் கவிதைவடிவமாகச் சென்ரியு கவிதைகள் வளர்ச்சி நிலை அடைந்துள்ளன. இக்கவிதை வடிவமானது, தமிழில்  புதிய கவிதை வடிவமாக  தோற்றம் பெற்று தொடக்ககால வளர்ச்சி நிலையினை அடைந்துள்ளது. ஆகையால், எந்த ஒரு இலக்கியத்தை  எடுத்துக்கொண்டாலும் அதற்கான தோற்றம், வரலாறு மற்றும்  அறிமுகம் இன்றியமையாதது. ஆகையால், தமிழில் சென்ரியு கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து  சென்ரியு சொற்பொருள் விளக்கம், சென்ரியு கவிதையின் தோற்றம்,  காரை சென்ரியு வரலாறு,  சென்ரியு வரையறை, ஹைக்கூ சென்ரியு வேறுபாடு,  சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலை ஆகிய தலைப்புகளின் வாயிலாகக்  காணலாம்.

சென்ரியு சொற்பொருள் விளக்கம்
சென்ரியு கவிதை ஜப்பானிய இலக்கிய வடிவமாகும். மானுடம் சார்ந்த சமூகம், பொருளாதாரம், அரசியல், மனித நடத்தை என உண்மை நிகழ்வை நகை உணர்வு தோன்ற வெளிப்படுத்துவது சென்ரியு கவிதையாகும். சென்ரியு என்னும் பெயர் காரை ஹச்சிமோன் என்னும் கவிஞரின் புனைப்பெயராகும். இவர் கி.பி 18ம் நூற்றாண்டில் இக்கவிதை  இலக்கியத்தை அறிமுகம் செய்தார். பின்னர், கவிஞரின் புனைப்பெயரே  இக்கவிதை  வகைகளுக்குப்  பெயராயிற்று.  சென்ரியு என்னும் சொல்லானது சப்பானிய மொழியில் ஆற்றோரத்து வில்லோ மரம் என்று பொருள் தரும்.

சென்ரியு பெயர்க்காரணம்
மாக்கூ சுகே என்னும் முன்ஒட்டு கவிதைக்கு எழுதப்படும் தொடர் கவிதைகளை தேர்ந்தெடுப்பதில் திறம் பெற்றவராக காரை சென்ரியு விளங்கினார். ஆகையால், காரை சென்ரியு பெயரில் உள்ள சென்ரியு என்னும் சொல்லே இக்கவிதைகளுக்குப் பெயராக வழங்கப்படுகின்றது. இதனையே வில்லியம் ஜெ.ஹிக்கிசன் என்பவர் தனது  ஹைக்கூ பருவங்கள் என்ற நூலில் சென்ரியு பெயர்காரணத்தைப் பற்றி பின்வறுமாறு கூறுகிறார். 'சென்ரியு என்பது ஒருவருடைய இயற்பெயர் என்றும் அப்பெயரே இவ்வகை கவிதைக்கு  பெயராயிற்று ’1 என்று கூறுகிறார்.

சென்ரியு கவிதையின் தோற்றம்
ஜப்பானிய மதுக்கடைகளிலும் தேனீர் கடைகளிலும் சப்பானிய நடுத்தட்டு மற்றும் வணிகர்களால் வார்த்தை விளையாட்டாகத் தொடக்க காலத்தில் சென்ரியு கவிதைகள் எழுதப்பட்டு வந்தன. ஜப்பானில் முதன் முதலில் காரை சென்ரியு என்பவரின் முயற்சியினால் சென்ரியு கவிதை வடிவமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆகையால், தோற்றம் பெற காரணமாக இருந்த காரை சென்ரியுவே சென்ரியு கவிதையின் தந்தை ஆவார். தொடக்கக்காலத்தில் சப்பானிய மக்களிடையே கவிதை எழுதுதல் என்பது ஒரு விளையாட்டாக இருந்து    வந்தது. 'ஒருவர் ஒருவரோடு போட்டி போட்டுக் கொண்டு இவ்வகை கவிதைகளை சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாகவே இருக்கிறது’2 என்கிறார் ஞானி.  இக்கவிதை விளையாட்டில் ஒருவர் தன்னோடு போட்டிக்கு மற்றொருவரை அறைகூவல் விடுவார். அவ்வாறு போட்டிக்கு அழைக்கும் அறைகூவல் வரிகளை மாக்கூ என்றும், இந்த அறைகூவல் கவிதைகளுக்கு எதிர்வினையாகப் போட்டி கவிதைகளாகத் தொடுக்கப்படும் வரிகளை இட்சுகேகூ என்றும் கூறுவர். கவிதையில் இவ்வகைமையில் ஆழ்ந்த புலமையுடைய ஒருவர், இத்தகைய கவிதைகளை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் பணியில் அமர்த்தப்படுவார். இப்பணிக்கு ஜப்பானிய மொழியில் டென்யா என்று பெயர். டென்யா என்பவர் தேனீர் மற்றும் மதுபானக்கடைகளுக்குச் சென்று போட்டிக்கு அழைக்கும் அறைகூவல் (மாக்கூ) கவிதைகளை ஒரு மாதத்தின் சில வாரங்களில் எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பார். அடுத்த சுற்று அக்கடைகளுக்குச் சென்று மாக்கூ கவிதைகளுக்குப் பதிலாக வந்த இட்சுகேகூ கவிதைகளைத் திரட்டி வருவார். அப்போதே அடுத்த சுற்றுக்கான முன்கவிதைகள் அக்கடைகளில் ஒப்படைக்கப்படும். அறைகூவல் கவிதைகளுக்கு போட்டிகவிதைகளை  படைப்பவர்கள் குறிப்பிட்ட பதிவுத்தொகையை செலுத்தி அக்கவிதைகளைச் சமர்பிக்க வேண்டும்.  இட்சுகேகூ கவிதைகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்குப் பரிசு தர அந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. வெற்றிபெற்ற கவிதைகள்  அச்சிடப்பட்டு உடனுக்குடன் கடைகளில் விற்பனைக்கு என்று கொடுக்கப்படுகின்றது. இக்கவிதைப் போட்டியில் தொடக்கக் காலத்தில் நடுத்தர உறுப்பினர்களும் பெரும் வணிகர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் பெரும்பாலும் ஜப்பானிய தலைநகரான டோக்கியோவைச் சேர்ந்தவர்கள். இவர்களால் இயற்றப்பட்ட இக்கவிதைகளில் நடுத்தர மக்களின் அனுபவம்  மற்றும் உணர்வுகள்  வெளிப்படுவதைக்  காணமுடிகின்றது.

இட்சுகேகூ கவிதைகள் பின் நாளில் ரெங்கு (அ) ரெங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. இதன் அசை அமைப்பு 5-7-5 என்ற அசையமைப்பை கொண்டதாகும். பின்நாளில் ரெங்கா கவிதைகள் பாலியல் பாடல்களாக மாறிவிட்ட  நிலையில்  ரென்டா கவிஞர்கள் இவற்றை ஹைகை நோ ரெங்கா என்று ஒதுக்கி வைத்தனர்.  பாஷொ, இஸ்ஸா முதலானோரின் முயற்சியால் ஹைகை நோ ரெங்கா  கவிதைகள் ஹைக்கூ கவிதைகளாக மாற்றம் பெற்றது.  மேலும், ரெங்கா கவிதையின் மரபியல் சூழலில் ஏற்பட்ட மாறுதலைத் தொடர்ந்து காரை சென்ரியுவின் கவிதைகள் தோற்றம் பெற்றன. காரை சென்ரியு என்பவர் மூன்று அடிகள் 17 அசைகள் என்ற தன்மையில், ஹைக்கூ போன்ற மரபுக்கவிதைகளை உருவாக்கினார். ஆனால், அதற்கு சென்ரியு கவிதைகள் என்றே பெயரிட்டிருந்தார். ஏனெனில், கவிதையின் பாடுபொருளானது மனித நடத்தைகள், நையாண்டி, அரசியல், சமூக விமர்சனம், பாலியல் போன்ற மானுடம் சார்ந்து அமைந்திருந்தது.

காரைசென்ரியுவின் வரலாறு
காரை சென்ரியு என்பவர் எடோ நகரத்தில் 1718ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் காரை ஹச்சிமேன். இவர், ஜப்பானிய இலக்கிய வகையான ஹைக்கூவிலிருந்து சென்ரியு என்னும் இலக்கியத்தை  அறிமுகப் படுத்தியவர். இவரது எழுத்துலகப் புனைப்பெயர் சென்ரியு ஆகும். கவிதை எழுதும் ஆர்வம் அதிகமாக இருந்ததால் காரை 1757ல் மேகுசூகு ஆசானாகத் தீர்மானித்தார்.

மேகுசூகு கவிதையானது காரை சென்ரியு காலத்தில் கவிதை விளையாட்டு போட்டியாக மாறியிருந்தது. முதல் இருவரிகளைக்  கவிதை ஆசான் அறிவிப்பார். மேலும், அதனோடு பொருந்தும் மூன்றாம் அடியினை கவிதையாக இயற்ற வேண்டும். 1757ல் புதிய டென்யாவாக அறிமுகமாகிய காரை சென்ரியு வெகுவிரைவில் மிகப் பிரபலமாகிய மேகுசுகு ஆசான் ஆனார். அவர் வாழ்க்கையில் 23 லட்சம் பாக்களை படித்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்தார். இவருடைய முயற்சியால் மேகுசுகு தனியான 17 அசைக் கவிதையான போதும் சென்ரியுவின் பெயரே அதற்கு நிலைத்து விட்டது.

காரை ஹச்சிமோன் தனது சென்ரியு கவிதையின் முதல் தொகுதியை கி.பி 1757ல் வெளியிட்டார்.  காரைசென்ரியு தனது கவிதைகளைத் தொகுத்து சென்ரியு ஹோ மேன் குவாவாஸ் என்ற பெயரில் ஆண்டு வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளார். 

சென்ரியு வரையறை
சப்பானிய மொழிக் கவிதையான சென்ரியு  மூன்று அடிகள் மற்றும்  5-7-5 என்ற அசையமைப்புகளை கொண்ட மரபுக்கவிதை வடிவமாகக் காணப்படுகின்றது. சப்பானிய சென்ரியுக்கள் ஜென் தத்துவம் மற்றும் மெய்யியலுடன் தொடர்பு கொண்டு சமூகம் சார்ந்த நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுகின்றது. தமிழில் சென்ரியு கவிதைகள் மரபுக்கவிதைகளாகப் படைக்கப்படுவதில்லை. மூன்று அடிகள் என்னும் அடி வரையறை மட்டுமே பின்பற்றப்படுகின்றது. சென்ரியு கவிதைகள் மக்களின் பிரச்சனைகளை வேடிக்கை மற்றும் நகைப்புத்தன்மையுடன் சமுகம் சார்ந்து  படைக்கப்படுகின்றன.

சென்ரியு கவிதைகளுக்கு கட்டுபாடுகள் இல்லையெனினும் சமுதாய நலத்தினை மனதில் கொண்டு நகை உணர்வுடன் படைக்கப்படுகின்றன.   சமூகம் மற்றும் மனித அவலங்களை பாடுபொருளாகக் கொண்டு உண்மைத் தன்மையுடன் சென்ரியு கவிதைகள் படைக்கப்படுகின்றன.

ஹைக்கூ - சென்ரியு வேறுபாடு
ஹைக்கூவும் சென்ரியுவும் சப்பானிய  இலக்கியமாக இருப்பினும் இரண்டும் உள்ளடக்கம் மற்றும் பாடுபொருள் ஆகியவற்றால் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

ஹைக்கூ இயற்கையைப் பற்றி ஆழ்நிலை ஜென் தத்துவங்களுடன் பாடுகிறது. இதனை,

'அழகிய வண்ணத்துப்பூச்சி
பறக்கும் திசையெல்லாம்…
உடன் பறக்கும் மனசு'4


என்னும் ஹைக்கூ வரிகள் நமக்கு உணர்த்துகின்றன. இயற்கையின் தரிசனம் மற்றும் தத்துவ நிலை ஆகியவற்றுடன் இரண்டற கலந்த நிலையில் ஹைக்கூ கவிதைகள் படைக்கப்படுகின்றன.
சென்ரியு கவிதைகள் மனித நடத்தைகள், சமூக அவலங்கள் மற்றும் அரசியல் போக்குகள்  ஆகியவை குறித்து  பாடுகின்றன. இதனை,

'சாக்கடையில் ரொட்டித்துண்டு
மொய்த்துக்கொண்டிருக்கின்றன
பசித்தவனின் கண்கள்'5


என்னும் ஹைக்கூ கவிதையின் வாயிலாக அறியமுடிகின்றது. மக்களிடத்தில் பொருளாதாரத்தில்  ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு நிலைகளால் வறுமையில்  உணவில்லாதவனின் நிலைக்குறித்து  இக்கவிதை வெளிப்படையாக எடுத்துரைப்பதாக அமைகின்றது.

ஹைக்கூவில் மேல்த்தட்டு மக்களால் பயன்படுத்தப்படும் நாகரீகமான வார்த்தைகள்  மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்ரியுவில் நாகரீகமற்ற கொச்சை சொற்களும்,  வட்டார வழக்கு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.

'பூஜ்யத்தில் வாழ்க்கை
குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள்
மானங்கெட்ட பொழப்பு'6


என்னும் கவிதை வரிகள் மூலம் சென்ரியு மனித உணர்வுகளை வெளிப்படையாக உத்வேகத்துடன் வெளிப்படுத்துவதற்கு கொச்சை சொற்களைப் பயன்படுத்துவதை காணமுடிகின்றது.
ஹைக்கூ கவிதையில் உண்மை சம்பவங்கள் நேரடியாக உரைக்கப்படுவதில்லை. ஆனால், கற்பனை மற்றும் கவித்துவம் மிகுந்து காணப்படும்.

'நிலவைப் படம்பிடிக்க
முடியாத வருத்தத்தில்
வற்றிய குளம்'7


என்னும் கவிதை  இயற்கை சூழல் சார்ந்து கற்பனையும் கவித்துவமும் மிகுந்து படைக்கப்பட்டுள்ளது.

சென்ரியு நேரடி உண்மைத்தன்மை நிறைந்தது. சொல்ல வந்த கருத்தை நேரடியாகவும், பொட்டில் அறைந்தார் போலவும், உள்ளதை உள்ளபடியே கூறும் தன்மை கொண்டது. இதனை உணர்த்தும் வகையில்,

'விழாக்காலங்கள்
வரும் போகும்
விடிவு காலங்கள்'8


என்னும் வரிகள் அமைந்துள்ளது. வறுமை நிலையிலுள்ள மக்களுடைய வாழ்க்கையானது, ஏற்றம் அடையாத நிலையில் உள்ளதை இக்கவிதை எடுத்துரைக்கின்றது.

ஹைக்கூவில்  இயற்கைச் சார்ந்த பருவக்கால குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஹைக்கூ இயற்கை மற்றும தத்துவம் சார்ந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், சென்ரியு கவிதைகள்   எவ்வித கட்டுபாடுகளுக்கும் உட்பட்டவை இல்லை. ஹைக்கூ கவித்துவம் நிறைந்து மறைப்பொருள் தன்மையுடன் படைக்கப்படும் கவிதை. சென்ரியு கவித்துவம் குறைந்தும் சில இடங்களில் கவித்துவம் இன்றியும் காணப்படுகின்றது. இவ்வாறு ஹைக்கூவும் சென்ரியுவும் பாடுபொருளாலும், உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபட்டு நிற்பதைக் காணமுடிகின்றது.

சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலை
சென்ரியு கவிதைகளை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் காரை சென்ரியு என்பவரே ஆவார். மெய்யியல் சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்டு வெளிவந்த ஜப்பானிய ஹைக்கூ கவிதை, சென்ரியு எனும் சமூக விமர்சன கவிதையாக மாற்றம் பெற்றுள்ளது. 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரெங்கா என்னும் கவிதை போக்கில் ஏற்பட்ட மாறுதலே சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலைக்குக் காரணம் எனலாம். காரை சென்ரியு காலத்தில்  இருந்தே ஹைக்கூவைப் போல 5-7-5 என்னும்  அசை அமைப்புடன் சப்பானில் சென்ரியு கவிதைகள் படைக்கப்பட்டு வந்தன.  சென்ரியு கவிதைகள் ஹைக்கூவிலிருந்து தமது உள்ளடக்கத் தன்மையில் வேறுபட்டுக் காணப்படுகின்றது. சென்ரியு கவிதைகள்  மானுடத்தையும் சமுதாய கருத்துக்களையும் முதன்மையாகக் கொண்டது.

சப்பானில் சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலை
ஒரு கவிதை இலக்கியம் வளர்ச்சியடையக் காரணமாக இருப்பது அக்கவிதைச் சார்ந்த படைப்பு நூல்கள்  மட்டுமல்லாது அக்கவிதையின் தன்மைகள் குறித்து வெளிவரும் திறனாய்வு மற்றும் விமர்சன நூல்களே ஆகும்.    காரைசென்ரியு தமது   சமகால நிகழ்வுகளைத் தொகுத்து ஹைஃபூ யானாகிடாரு எனும் சென்ரியு நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார். 1950ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யோமுரி சிப்பன் என்னும் நாளேடு புதிய சென்ரியு கவிதைகளை வெளியிடத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்நாளேட்டில் 1989 முதல் 1996 வரை வெளியான 100 சென்ரியுக்கள் தொகுக்கப் பெற்று சென்ரியு ஹைக்கூ காலத்தில் எதிரொலி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் அரசியல், சமூகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, பொருளாதாரம், சர்வதேச நிகழ்வுகள் என அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1980இல் மேரிகேசல் என்பவர் ஹைக்கூ - சென்ரியு  குறித்து புரிதல்களை ஏற்படுத்த அன்றாடமை என்னும் நூலை வெளியிட்டுள்ளார். இவ்வாறாக சென்ரியு கவிதை இலக்கியம் சார்ந்த நூல்கள்  சப்பானில்  வெளிவர சென்ரியு கவிதைகள் மாபெரும் வளர்ச்சி நிலையை எட்டியுள்ளன.

தமிழில் சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலை
தமிழில் மரபுக் கவிதைகளுக்குப் பின் புதுக்கவிதை தோற்றம் பெற்றதைப் போல, ஹைக்கூவிற்குப் பிறகு சென்ரியு கவிதை வடிவம் தோற்றம் பெற்றது. வெறும் இயற்கையையே பாடிவந்த ஹைக்கூவிலிருந்து மாறுபட்டு மக்களைப் பற்றிய கவிதையாக சென்ரியு கவிதைகள் உருவாகத் தொடங்கியது. சென்ரியு கவிதைகளை தமிழில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர் ஈரோடு தமிழன்பன் ஆவார். இவருடைய ஒரு வண்டி சென்ரியு(2001) என்னும் சென்ரியு  கவிதை நூல்  தமிழில் வெளிவந்த முதல் சென்ரியு கவிதை நூலாகும். தமிழன்பனின் இக்கவிதை நூலே சென்ரியு கவிதைகளை ஹைக்கூ கவிதைகள் என்று அழைக்கும் அறியாமையைப் போக்கியது. ஒருவண்டி சென்ரியு நூலைத்தொடர்ந்து  பாரதிவசந்தனின் யாதெனில், புதுவையுகபாரதியின் அரசமரம், வே.மணிகண்டனின் மாமதயானை, பிரியா புளோரியின் குறுமணல், மாமதயானையின் கடவுளின் கடைசி கவிதை,  கவியருவி ம. இரமேஷின் ஓராயிரம் சென்ரியு  போன்ற நூல்கள் தமிழில் தோற்றம் குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. தமிழில் ஹைக்கூ வளர்ந்த அளவிற்கு சென்ரியு வளரவில்லை என்றாலும், இன்று சென்ரியு தனக்கென ஒரு தனி இடத்தையும், அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்ரியு எல்லோராலும் எளிமையாகக் கையாளப்படக்கூடிய  கவிதை  இலக்கியமாக  தற்போது  வளர்ந்து வருகின்றது.

தொகுப்புரை
சென்ரியு கவிதைகள் ஹைக்கூ கவிதைகளில் இருந்து தோன்றிய புதிய கவிதை இலக்கிய வகைமை ஆகும். சென்ரியு ஹைக்கூ கவிதையை போலவே மூன்றடிகளில்  படைக்கப்படுகின்றது. சென்ரியு சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் என்னும் முறையைப் பயன்படுத்தி மூன்று அடிகளில் பொருளை விளங்க வைப்பதாக அமைந்துள்ளது.  ஹைக்கூவில் இருந்து சென்ரியு தோற்றம் பெற்றிருந்தாலும் இரண்டும் பாடுபொருள் அளவில் வேறுபட்டுக் காணப்படும் நிலையினை காண்கின்றோம். சப்பானில்  சென்ரியு கவிதைகள் தோற்றம் பெற்று வளர்ச்சி நிலை அடைந்த நிலை, தமிழில் முதன் முதலில் சென்ரியு தோற்றம் பெற்று வளர்ச்சி நிலை அடைந்த நிலை ஆகியவற்றை இக்கட்டுரையின் வாயிலாக அறிகின்றோம்.

அடிக்குறிப்புகள்

1.    மாமதயானை, வே.மணிகண்டன் - ப- 56
2.    ஓராயிரம் சென்ரியு, கவியருவி ம.இரமேஷ் - ப- 18
3.    சென்ரியு கவிதையின் தோற்றம் வளர்ச்சி, வே.மணிகண்டன் - ப- 14
4.    கடவுளின் கடைசி கவிதை, மாமதயானை - ப- 94
5.    கடவுளின் கடைசி கவிதை, மாமதயானை - ப- 58
6.    ஒரு டீ சொல்லுங்கள், கவின் - ப- 33
7.    கடவுளின் கடைசி கவிதை, மாமதயானை - ப- 93
8.    கடவுளின் கடைசி கவிதை, மாமதயானை - ப- 20

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R