ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?மனித உயிர்கள் சமூகமாக மாறும் வளர்ச்சிக் கட்டங்களில் மனித உயிர்களால் வெளிப்படுத்தப்பட்ட பேச்சொலிகளும், சைகைகளும் அர்த்தம் கொள்ளத் தொடங்குகின்றன. இந்த அர்த்தப் புலப்பாடுதான் மொழி எனப்படுகிறது. அதாவது, “வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தோந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவிக் கொண்டு இவற்றிற்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும் தான் மொழி பிறந்தது” (அந்திரேயெவ்.இ.லி., பி. எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய (மனிதக்குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் என்ற புத்தகத்திலிருந்து மகராசன் அவர்கள் மேற்கோள் காட்டியது, பெண்மொழி இங்கியல் , ப. 29).

மேலை இலக்கியத்திறனாய்வு, இந்திய இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. நவீனக் கோட்பாடுகளின் அறிமுகத்தால் பிரதிகளின் அர்த்தக்களம் விசாலாமாகியது போல மொழி, மொழியில் காணப்படும் சொல் தொடர்பான ஆய்வும் பெருகின. இவ்வளர்ச்சியின் அடிப்படை மொழியில் பாலின பாகுபாட்டிற்கான புதிய களத்தினை நமக்கு அறிமுகப்படுத்தியது. அவ்வடிப்படையில் மொழியில் காணலாகும் சொற்கள், அவற்றுக்கான பொருட்கள், பாலின நோக்கோடு பார்க்கும் போக்குப் பெருகியது. இந்தக் கருத்துகளை மையமாக கொண்டு இடைச்சொல்லில் ஒன்றாகக் காணப்படும் “மன்“ என்ற சொல்லைப் பாலின வேறுபாடு (Gender discrimination) என்ற பார்வைக் கொண்டு பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மொழியில் காணலாகும் சொல் மற்றும் சொற்பொருள் என்னும் இரு நிலைப்பாடுகளும் ஆண் சார்புத் தன்மையைக் கொண்டதாகவும், பெண்ணுக்கு எதிராகவும் உருவாக்கம் பெற்றுள்ளன. இக்கூற்றினைப் புரிந்துகொள்ள ஃபூக்கோ கூறியதாகப் பஞ்சாங்கம் எடுத்துக்காட்டும் கூற்று கீழ்வருமாறு, “ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பது அதிகாரம் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ அவர் புனைந்து தருகிற மொழிதான் அப்பொருளுக்கான அர்த்தம் என்றாகிறது” பெண்மொழி புனைவு, ப.66).

கட்டுரை தொடங்குவதற்கு முன்னால், பாலினம் என்றால் என்ன என்பது பற்றி ஒரு சிறு வரையறையை இங்கு காண்போம். “பாலினம் என்பது ஆண், பெண் இவ்விருபாலரும் சமூகத்தில் எவ்வாறு வாழவேண்டும் எனச் சமூகம் வரையறுத்திருப்பதற்கேற்றவாறு வாழும் வாழ்க்கைக் கூறாகும். மேலும், பாலின வேற்றுமைகள் என்பது, மேற்குறிப்பிட்ட உயிரியல் சார்ந்த பால் வேறுபாடுகளை ஆதாரமாகக் கொண்டு சமூகக் கலாச்சார உளவியல் கூறுகளை உள்ளடக்கியதாக அமைகிறது என்றும் ச. முத்துச்சிதம்பரம் கூற்றினை அ.மரியசெபஸ்தியான் அவர்கள் தமிழரின் பாலியல் முறைமைகள் ப.8 என்னும் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

தொல்காப்பியம் கூறும் சொல்வகையில் ஒன்று இடைச்சொல். இடைச்சொல் எண்ணிக்கையில் அதிகமானவை என்பதை அவ்வியல் நமக்கு உணர்த்துகின்றது. பெயர், வினை ஆகியவற்றைச் சார்ந்து தோன்றுவதால் இடைச்சொல் என்றாயிற்று.

இடையெனப் படுப பெயரோடும் வருதலும்
நடை பெற்றியலும் தமக்கியல் பிலவே (தொல். இடை. 734)

இருப்பினும் தொல்காப்பிய அடுத்த நூற்பா,

அவைதான்,

முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும்
தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையிலும்
அன்னவை எல்லாம் உரிய என்ப (தொல். இடை. 735)

இவ்வாறு கூறியிருப்பதால், இடைச்சொல் தோன்றும் இடம்பற்றி உரையாசிரியர்களிடம் கருத்து வேறுபாடு காணப்படுகிறது (காண்க. சொல்லிலக்கணக் கோட்பாடு, ப.214).

இடைச்சொல் பெயர், வினை என்ற இரண்டினைச் சார்ந்த இயங்குவது, அச்சொல்லுக்குப் பொருள் காணப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு தொல்காப்பியத்திலே “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (தொல். பெயர். 640) என்ற பதில் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கட்டுரையின் அமைப்புக்கு இடைச்சொல் குறித்த செய்திகள் போதுமானதாகத் தெரிவதால், தொடர்ந்து கட்டுரையின் மையப்பகுதிக்குச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.

“மன்“ என்ற இடைச்சொல் கழிவு, ஆக்கம், ஒழியிசை ஆகிய மூன்று பொருள்களில் வரும் என்று தொல்காப்பியம் கூறியுள்ளது. இந்த இடைச்சொல்லையும் அவைக்கான பொருள்களையும் ஆண், பெண் என்னும் இருபாற் புலவர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் பயன்படுத்துதலில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வு ஏன் என்பதையே இக்கட்டுரை சிக்கலாக முன்வைக்கிறது.

எழுத்து மரபில் உருவாகும் பெரும்பாலன இலக்கியங்கள், இலக்கணங்கள், முதலிய அதிகார மய்யங்களுக்குச் பணிவிடை செய்வதையே குறிக்கேளாகக் கொள்கின்றன. சமூகத்தில் ஆண், பெண் என்ற இருவரும் மொழியையும், மொழியில் காணப்படும் சொல் அவற்றிக்கான பொருள் ஆகியவற்றை அவரவறுக்கான வகுக்கப்பட்ட வரையறைகளோடு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அளவிடுதலை கற்பித்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோளாகும்.

கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பு கழிவு, ஆக்கம், ஒழியிசை ஆகிய மூன்று பொருள்களைப் பற்றி உரையாசிரியர்கள் குறிப்பிடும் விளக்கமும், அகராதி தரும் பொருள்களும் கீழ்வருமாறு, கழிவு என்பதற்குச் “சிறியகல் பெறினே எனக்கு ஈயும் மன்னே” என்ற எடுத்துக்காட்டினையே (இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையர், நச்சினார்க்கினியர்) போன்ற உரையாசிரியர்களும் கூறுகின்றனர். அதாவது, இழந்த ஒரு பொருள் இனி திரும்ப வராது என்பதே இதற்கு பொருள்.

ஆக்கம் என்பதற்கு, “அதுமன் எம்பரிசில் ஆவியக் கோவே” என்ற வரியை (நச்சினார்கினியர், தெய்வச்சிலையர்)வும் , பண்டு காடுமன் என்ற வரியை (இளம்பூரணர், சேனாவரையர்)வும் எடுத்துக்காட்டியுள்ளனர். சுருக்கமாகக் கூறினால், ஆக்கம் என்பதற்கு, முன்னே நிலையினும் மிக்குதலாகும் என்பதாம்.

ஒழியிசை என்பதற்குக் “கூரியதொரு வாள்மன்” என்ற வரியையே (நச்சினார்கினியர், இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையர்) ஆகியோரும் எடுத்துக்காட்டியுள்ளனர். சுருக்கமாகக் கூறினால் ஒழியிசை என்பதற்குச் சொல்லாது விட்டதைக் குறிப்பால் சொல்வது” என்று பொருள் கொள்ளலாம்.

மேலும் கழிவு என்ற சொல் உரியியல் 314 நூற்பாவிலும் காணப்படுகிறது. ஆக்கம் என்ற சொல், கிளவியாக்கத்தில் 20, 21, 22 ஆகிய நூற்பாவிலும் காணக்கிடக்கின்றது. ஒழியிசை என்பது “தில்“ என்ற இடைச்சொல் குறிக்கும் பொருளில் ஒன்றாகவும் இருக்கிறது.

மதுரை தமிழ்ப் பேரகராதி
ஆக்கம் என்பதற்கு இலக்குமி, இலாபதம், எழுச்சி, கொடிப்படை, செல்வம், பொன் குன்றாச் சம்பத்து, உயர், பொலிவு, பூப்பு, சிறந்த அறம், செய்கை ஆகிய பொருள்களைக் கூறுகிறது.

ஒழியிசை என்பதற்கு ஒழிந்து நிற்கும் சொற்களைக் கொண்டு முடிவது என்று கூறுகிறது.

கழிவு என்பதற்கு ஈவு, உள்ளத்சிதைத்தல், கழிதல் தள்ளுபடியானது, இறந்தகாலம் என்ற பொருள்களைத் தருகிறது.

குறுந்தொகையில் மன் என்ற இடைச்சொல் 25 பாடல்களில் காணப்படுகிறது. அதில் வெள்ளீவிதியாரின் 58, 149, 286 ஆகிய பாடல்களும், கபிலின் 38, 153 ஆகிய பாடல்களும், வெண்மணிபூதியாரின் 299ஆம் பாடலும், பாலைபாடிய பெருங்கடுங்கோவின் 231 பாடலும் அரிசில் கிழாரின் 193 மற்றும் கல்லாடனாரின் 269 ஆகிய பாடல்கள் கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இருபாற் புலவர்களின் சொற்பொருள் பயன்பாட்டின் வேறுபாட்டினை எடுத்துக்காட்ட மேற்கண்ட புலவர்களையும் அவர்களுடைய பாடல்களையும் எடுத்தாளவேண்டியிருக்கிறது. கட்டுரைக்குத் தேவையான மற்றொரு முக்கியமான குறிப்பினையும் இங்கு சுட்ட வேண்டும். அதுயாதெனில், இருபாற்புலவர்களும் “மன்“ என்ற இடைச்சொல்லுக்கான பொருளினை கையாளும் முறையில் வேறுபட்டிருக்கின்றனர் என்பதனை விளக்க, அந்தப் பாடலின் சூழலையும் துணைக்கொண்டு விளக்கவேண்டியிருக்கிறது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் கபிலரின் 38வது பாடலை எடுத்துக்கொள்வோம். நன்றுமன் வாழி தோழி யுன்கண் என்ற அடியில் தான் இடைச்சொல் காணப்படுகிறது. இந்த அடியில் வரும் இடைச்சொல்லுக்கான பொருளைப் பாடலை முழுவதுமாகப் புரிந்துகொண்டால்தான் விளக்கமுடியும்.

பாடலின் பொருளாவது மயில் அடைக்காத்தற்குரிய அதன் முட்டை அங்ஙனம் செய்யப்பட்டாது, பாறையின் மேல் தனித்துக் கிடப்பதையன்ற அதனைக் குரங்கு விளையாட்டாக உருட்டுவது போல், தலைவன் உடனிருந்து இன்புறுதற்குரிய தலைவி அவன் பிரிவினால் ஆற்றிருப்பதால் ஊரார் அலர் கூறுகின்றனர் (இங்கு தலைவனை மயிலுக்கு நேர்பொருளாகக் கொண்டால் ஆண் மயில் முட்டையிடுமா என்று ஆய்வளர்கள் கேள்வியையும் கேட்கலாம, இந்தச் சர்ச்சைக்கு இங்கு இடம் தரவேண்டாம் என்று நினைத்து, தொடர்ந்து கட்டுரைக்குள் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.

மயில்=தலைவன், முட்டை=தலைவி, முட்டை உடையாமல் இருப்பது=காமத்தினை தலைவியால் வெளிப்படுத்தாமல் போவது, உடல் மெலிந்து போவது=குரங்கு முட்டையை உருட்டுவது போல் மற்றவர் அலர் தூற்றுவது. தலைவன் தலைவியும் ஒன்றாக இருந்த பின், தலைவன் பிரிந்து போயினான். தலைவியின் காமம் மிகுதியால், தலைவி ஆற்றியிருக்கிறாள், காமத்தினை வெளிப்படுத்த முடியாத காரணத்தினால், உடல் மெலிவின் காரணமாக அலர் ஏற்படுகிறது.

முட்டை உடையாமல் உருட்டப்படுவது, தலைவியால் காமத்தினை வெளிப்படுத்தாமல், உடல் மெலிந்து போவதும், தலைவன் தன்னுடன் இல்லை என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. ஒரு பொருள் அதன் தன்மையை ஒழித்து மறைமுகமாக மற்றொரு குறிப்பால் உணர்த்துவது ஒழியிசைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும் கபிலரின் 153 பாடலில், அஞ்சும னறித்தை னெஞ்சு மினியே என்ற அடியில் “மன்“ என்ற இடைச்சொல் காணப்படுகின்றது. தோழி! குன்றிலுள்ள கோட்டான் கத்தினாலும், வீட்டு முற்றத்தில் உள்ள பலா மரத்தின் கரிய கிளையில் உள்ள பழம் காரணமாக ஆண் குரங்கு தாவி அலைத்தாலும் அவ்வொலிகளைக்கேட்டு எனது நெஞ்சும் அஞ்சும் (அவ்வளவு மென்மையுடையது அது) இப்போது அவர் அரிய, நிறைந்த நள்ளிரவில தன்னைத் தேடி வருவராயின், அவ்வாறு அவர் வரும் மலைச்சாரலிலுள்ள நீண்ட வழியில், என் நெஞ்சம் சிறிதும் தடைபாடாது, அவர் கூடவே செல்கின்றது.

முன்பு குரங்கின் தாவலுக்கும், கோட்டான் சத்தத்திற்கும் பயந்த நெஞ்சு இன்று தலைவன் வரும் காட்டின் கண் சென்றது என்பது, தலைவியின் நெஞ்சு, பயம் அறியாது, அப்பயத்தினை மறந்து தலைவனைத் தேடிக் காட்டின் வழியே சென்ற துணிச்சலான் உணர்வினைக் காட்டுகின்றது. இப்படி தலைவியின் நிலை முன்னைய நிலைவிட மிக்குதலாக் காணப்படுவதால், ஆக்கம் சார்ந்த பொருளிலேயே இவ்வாசிரியர் மன் என்ற இடைச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது.

அடுத்து, பாலைபாடிய பெருங்கடுங்கோவின் 231ம் பாடலில் காணாக் கழிப மன்னே நாண் அட்டு என்ற அடியில் மன் என்ற இடைச்சொல் பாடலின் பொருளாவது, நம் தலைவர் இந்த ஊரில் வாழ்வாராயினும், நம் தெருவிற்கு வந்தார் இல்லை. அப்படியே நம் தெருவிற்கு வந்தாலும் நம்மைச் சுடுகாட்டைப் பார்ப்பதுப் போல பார்த்துப் போகிறார். அவரின் இத்தகைய செய்கையால், என்னுடைய நாணம் வில்லிருந்து எரிந்த அம்பினைப் போல் விழுகிறது.

இங்கு சுடுகாட்டைப் பார்ப்பதுப் போல் தலைவியைப் பார்த்து தலைவன் பிரிந்து போவதும், வில்லிருந்து அம்பு பிரிந்து போவதும் கழிந்த பொருளைக் குறிப்பதாக் கொள்ளலாம். அதாவது சுடுகாட்டைப் திரும்ப, திரும்ப பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சமூக அமைப்பில் மக்கள் விரும்பவதில்லை. அதுபோல், வில்லிருந்து புறப்பட்ட அம்பு திரும்ப பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில்லை. எனவே பாடலில் காணப்படும் சுடுகாடு, வில் சார்ந்த செயல்பாடுகள் கழிவுப் பொருளுக்கான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறது என்பதனை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

அடுத்து,
“அரிசில் கிழார் பாடிய 193ஆம் பாடலில், மணந்தனன் மன்னெடுந் தோளே என்ற அடியில் மன் என்ற இடைச்சொல் காணப்படுகிறது.

பாடலின் பொருளாவது: தோழி! கள்ளைப் பெய்து வைத்த, நீலமணி போலும் குப்பிகள் அனைய, குறுகிய வாயையுடைய தேரைகள் கிளகடி கருவியாகிய தட்டைப் பறையைப்போல ஒலிக்கும் நாடன் நம் தலைவன். அவன் சென்ற மாதத்து நெடிய முழு வெண்ணிலவும் பொழுதில், என் தோளைத் தழுவித் கூடினன். தழுவிய அவனது முல்லை மொட்டின் நறுமனமானது, இன்றும் என் மேனியில் மணக்கின்று!.

தலைவன் தலைவியைக் கூடிய நாளில் இருந்து நறுமனம் இன்னும் மணக்கிறது என்பது, பாடலில் கழிவு, ஒழியிசை ஆகிய பொருள்களில் வரவில்லை. மாறாக தலைவியின் தோளில் அழகும் நறுமணம் இன்னும் இருக்கின்றது என்று ஆக்கப் பொருளையே நமக்கு எடுத்துரைக்கிறது.

கல்லாடனாரின் 269ஆம் பாடலில், உசாவுநர்ப் பெறினே நன்னறுமன்தில்ல என்ற அடியில் இடைச்சொல் காணப்படுகிறது. தந்தையும் தாயும் கடல் மீன்பிடிக்கும் பொருட்டு, உப்பை விற்று நெல் கொண்டுவரும் பொருட்டு சென்றுவிட்டனர். நான் தனியாகத்தான் வீட்டில் இருக்கின்றேன். தலைவன் வந்தால், அவனோடு கூடி முயங்குவதற்கு இந்நேரம் ஏற்புடையதாக இருக்கும். இதனை, தலைவனிடம் சொல்லி யாரேனும் கூட்டிக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும், இதுவே எனது விருப்பமாகும், என்று தலைவி கூறுவதாக அமைந்த பாடலில், தலைவனுக்குத் தலைவிக்கும் புணர்ச்சி நடப்பதற்கான ஏற்பாடுகளை வெளிப்படுத்துவதாக அமைகின்றது என்ற அடிப்படையில், இப்பாடல் ஆக்கம் சார்ந்த செயல்களை முன்னிருத்திருக்கிறது என்று கூறலாம்.

வெள்ளிவீதியாரின் 58வது பாடலில், நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல என்ற அடியில் மன் என்ற இடைச்சொல் காணப்படுகிறது.

இப்பாடலின் பொருளாவது: கையில்லாத ஊமன் கண்ணினால் மட்டுமே பார்க்க முடிகின்ற உருகும் வெண்ணையைப் போல், என் காமம் நோய் என் உடம்பினுல் உறுகியது (உறுகயி பொருள் மீண்டும் வராது). காமம்=வெண்ணெய்=கழிவுப் பொருளை வெளிப்படுத்தி நிற்கிறது.

அடுத்த பாடலான வெள்ளிவீதியாரின் 149ஆம் பாடலில், நனிநீடுழந்தன்று மன்னே யினியே என்ற வரியில் மன் என்ற இடைச்சொல் காணப்படுகிறது.

இப்பாடலுக்கான பொருளாவது: தோழி! நாணம் என்னும் நற்பண்பு இதுகாறும் நம்மோடு இருந்த, மிக நீண்ட காலமாகத் துன்புற்றது. இனி, வெள்ளிய பூவைக் கொண்ட கரும்பினையுடைய உயர்ந்த மணல் மேடாகிய சிறிய கரையானது இனிய புதுவெள்ளம் பாய்ந்த உடைத்ததால் அழிந்து கரைந்து போனதைப் போல் நமது காமமானது மிகுந்து என்னிடம் நிலை பெறாது கழிகின்றது. வெள்ளம் வந்து உடைத்துக் கொண்டு (வீய்ந்து உக்காங்கே) போய்விட்டது. அதை திரும்பப் பெற முடியாது. இதனை காமம்=வெள்ளம்=கழிவுப் பொருளில் வருகிறது என்று கொள்ளலாம்.

அடுத்து 386ஆம் பாடலில், மாலையோ அறிவேன் மன்னே, மாலை என்ற வரியில் மன் என்ற இடைச்சொல் காணப்படுகிறது. மாலைப் பொழுதினை மையமிட்டு இப்பாடல் அமைந்துள்ளது.

இப்பாடலின் பொருளாவது: வெள்ளிய மணல் பரவிய, மலர்கள் செறிந்த சோலையையுடைய தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன், என்னைப் பிரியாத முன்காலத்தில் தூய அணிகலன்களை அணிந்த மகளிர் விழாவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற மாலையே நான் அறிந்தேன். இப்போது தனிமையும் புலம்புதலை அடையுமாறு என்னை வருத்துகின்ற மாலைக் காலத்தினையே நான் அறிகின்றேன். இவ்விளக்கத்தின் மூலம் தலைவன் வரவில்லை என்பதை மாலைக் காலத்தின் குறிப்பால் உணர்த்துகிறாள். ஒழியிசை சார்ந்த பொருள் அமைப்பில் இப்பாடல் காணப்படுவதாகக் கொள்ளமுடிகிறது.

வெண்மதிபூதியாரின் 299ஆம் பாடலில்,

கண்டன மன்எம் கண்ணே; அவன்சொல்
கேட்டன மன்எம் செவியே; மற்று அவன்

இப்பாடல் மன் இடைச்சொல் கூறும் மூன்று பொருட்களில் ஒழியிசைச் சார்ந்த வந்திருப்பதாகக் கருதமுடிகிறது. காரணம், தலைவி தலைவனோடு இருக்கும் போது, அவனோடு சொல்லையே அவளுடைய செவிகள் கேட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய கண்ணும் அவளுடைய கண்ணும் கலந்திருந்தன. அவன் அவளின் தோளினை தொட்டவுடன் அவள் தோள் அழகு வாய்ந்ததாகவும், பிரிந்தவுடன் அத்தோள் அழகு இழந்ததாகவும் காணப்படுகிறது.

தலைவனோடு இருக்கும் போது தலைவியின் கண், செவி, தோள் என்று மூன்றின் அழகு பெருகியும், தலைவன் பிரிந்த போது, அவை மூன்று அழகு இழந்து காணப்படுகின்றன என்பதால், முன்னைய நிலை மிகச் சிறப்பானதாகவும், பின்னது அதனின் தன்னை குறைந்து காணப்படுகிறது. மேலும் தலைவியின் தோளின் அழகு குறைந்து இருப்பதற்குக் காரணம் தலைவனே என்று குறிப்பால் பொருளை உணர்த்துகின்ற அடிப்படையில் இப்பாடலில் வந்துள்ள மன் என்ற இடைச்சொல் ஒழியிசைப் பொருளை வெளிப்படுத்தி நிற்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

இருபாற்புலவர்களின் பாடல்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, ஆண்புலவர்கள் மன் என்ற இடைச்சொல் வரும் பொருள்களான கழிவு, ஆக்கம், ஒழியிசை என்ற மூன்றினையும் பயன்படுத்திப் பாடல்கள் இயற்றி இருப்பதும், பெண்பாற்புலவர்கள், ஒழியிசை மற்றும் கழிவுச் சார்ந்த பொருளியே பாடல்கள் பாடியிருப்பதும் சிந்திக்கக் கூடியதாகும்.

குறுந்தொகையில் “ஆக்கம்“ சார்ந்த பொருளில் பெண்பாற் புலவர்கள் ஏன் பாடவில்லை என்பதை இங்கு கேள்வியாக எடுத்தக்கொள்ளப்படுகிறது. அக்கேள்விக்கு விடைக்காணும் நோக்கில் டேல் ஸ்பெண்டர் கூறிய கருத்துக்களும் கவனத்தில் கொள்ளத்தக்கவையாக அமைகின்றன.

டேல் ஸ்பெண்டர் ; ஆண், பெண் என்ற இருவரும் பயன்படுத்திய சொற்கள் அல்லது பேச்சு எப்படி அமைந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்து தன்னுடைய ”ஆணால் உருவாக்கப்பட்ட மொழி” Man made Language என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவை, ஆண் பேச்சு அல்லது சொற்கள்
Forceful – ஆற்றல் வாய்ந்த
Efficient – விரும்பிய விளைவை ஏற்படுத்தக்கூடிய, ஒன்றைச் செய்வதற்கான திறன் உடைய
Effecitive - ஆற்றல் வாய்ந்த, செயல் உரமிக்க, பலன் அளிக்கக் கூடிய
Masterful – திறமை போன்றவற்றை வெளிப்படுத்துகிற, ஆதிக்க மனப்பான்மையுடைய, திறமைசாலியான.

பெண் பேச்சு அல்லது சொற்கள்
Weak – வலுக்குறைந்த, வலிமையற்ற, அதிகாரம் இல்லாத, திட்டவட்டமான, முடிவு எடுக்காத, அலைபாய்கிற
Trivial - சிறிதே முக்கியத்துவம் உடைய
ineffectual – தேவையான விளைவை உண்டாக்கக் கூடியதல்ல
Tentative – நிச்சயமற்ற, உறுதியற்ற ஐயப்பாடு நிலையில் உள்ள
Hesitant – உறுதியற்ற, நிலையற்ற பேச்சு, தயங்குகிற, தயக்கம் காட்டுகிற.

டேல் ஸ்பெண்டர் கூறிய கருத்துக்களுடன் கீழ்வரும் சில செய்திகளையும் கட்டுரையின் கூறப்பட்டுள்ள கருதுகோளுக்குத் துணையாக கூறலாம்.

தாய்வழிச்சமூகத்தில் பெண்களுக்குத் தலைமை இடம் இருந்ததையும் அவர்கள் உற்பத்தி முறையில் சிறந்த விளங்கினர் என்பதையும் பல ஆய்வில் ஆய்வாளர்கள் நமக்கு தெரிவித்து இருக்கின்றனர். அப்படி தாய்வழிச் சமூகம் இருந்ததெனின், மொழியும் மொழியில் காணப்படும் கருத்துக்களும் பெண்ணுக்குப் பின்னடைவைக் கொடுத்தது ஏன்?

மேற்சொன்ன தாய்வழிச்சமூகம் கழிந்து தந்தைவழிச் சமூகம் ஆராம்பித்தது. அதன்பிறகு, ஆண்சமூகம் தனக்கென்று உயாநிலைகளிலான வரையறைகளையும், தனக்குட்பட்டவர்களைத் தனக்கீழாக வைத்து கட்டமைத்துக் கொண்டது. குறிப்பாக மொழியை வைத்து ஆண் சமூகம் பெண்ணுக்கு எதிரான பல செயல்களைக் கட்டமைத்து தொடர்ந்து அதில் அதிகாரம் செய்து வெற்றியும் பெற்று வருகின்றது.

பெண் என்பவள் அமைதி, அச்சம், நாணம் கொண்டவளாக இருக்கவேண்டும் என இலக்கணம் வழி அவள் தொடர்ந்து கட்டமைக்கப்படும்போது, “ஆக்கம்“ தொடர்பானச் செயல்களை அவளால் எவ்வாறு சிந்தித்து செயல்பட முடியும்? ” மனையுறை மகளிருக்கு ஆடவரே உயிர் (குறுந்:135) அதை தவிர வேறு எவ்வித சிந்தனையையும் அவள் உயிராகக் கொள்ளக் கூடாது.

இப்படி இருக்கும் போது அவள் வாழ்ந்த சூழலும், அவளுடைய புலனிறவுக்கு எட்டிய செய்தி, ஆகியவற்றை வைத்துதான் அவள் பாடலைப் படைத்திருக்க முடியும்.

மேலும், பெண் ஆற்றி இருக்க வேண்டும், சிந்திக்கும் திறனியல்லாமல் ஊடல் கொள்ளவேண்டும், இரங்கலில் அவளுடைய நிலையை மற்றவர்களுக்குக் குறிப்பால் உணர்த்த வேண்டும். இப்படி எஞ்சிய, தங்கிய, ஏங்கிய, இரங்கிய, இருத்தல் ஆகிய நிலைப்பாடுகளையே தனது வாழ்வதாராமாகக் கொண்டு வாழும் பெண்களுக்கு ஆக்கப்பாவமான சிந்தனை இல்லாமல் அவளுக்கென்று சமூகம் கற்பித்த சிந்தனையான மேற்சொன்னவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

இத்தகைய நிலையதைதான், அதாவது சமூகம் பெண்களுக்கு விதிக்கப்பட்ட அளவிடுகளின் அடிப்படையிலேயேதான் அவர்கள் சொற்கள், சொற்களுக்கான பொருள்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

மேற்சொன்ன பெண் தொடர்பான கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் ஆண் தனக்கான கட்டமைப்பினை வகுத்துக்கொண்டான். ஆண் என்றால் தைரியமானவன், அதிகாரம் செய்பவன், பெருமை உரனும் கொண்டவன், “வினையே ஆடவர்க்கு உரியே” (குறுந்:135) என்று தன்னுடைய வெளியை அகலப்படுத்திக் கொண்டான்.

ஆக்கத் தொடர்பான செயல்பாடுகளில் மட்டுமல்லாமல் கழிவு, ஒழியிசை என்று அனைத்திலும் தனக்கான செயல்களின் பொருத்தப்பாட்டை விளக்குபவன் ஆண் என்பதற்குக் கட்டுரையில் வந்துள்ள ஆண்பாற் புலவர்களின் பாடல்கள் நமக்கு சான்றாகின்றன.

உலகின் தொடர் நிகழ்வாகக் காணப்படும்

சூரியன்xசந்திரன்
பண்பாடுxஇயற்கை
பகல்xஇரவு
தந்தைxதாய்
அறிவுxஉணர்ச்சி
நல்லதுxகெட்டது
இருத்தல்xஇன்மை
கருத்து(அ) ஆன்மாx பொருள்

தந்தை வழிச் சமூகம் இப்படி அனைத்தையும் இணைமுரண்களாக்கிப் பார்த்து மட்டுமல்லாமல், இவற்றுள் முதுலில் (இடது பக்கம்) இடம் பெற்றவை விரும்பத்தக்கவை என்றும் அவற்றிற்கு எதிராக (வலது பக்கம்) இடம் பெற்றவை வெறுக்கத்தக்கவை என்ற சமூகத்தின் இணைமுரனான பார்வையை ஹெலன் சீக்சூ மையமிட்டு காட்டுவது இந்தக் கட்டுரையின் கருதுகோளுக்கு வலுவானதாகவே காணப்படுகிறது. காரணம்,

கழிவு என்ற பொருளில் இருபாற் புலவர்களும் மன் என்ற இடைச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பாலை பாடிய பெருங்கடுங்கோவின் 231ஆம் பாடலில் தலைவன் தன்னைப்பார்ப்பது சுடுகாட்டைப் பார்ப்பது போல பார்த்து பிரிந்து சென்றனர் என்றும், தன்னுடைய நாணம் வில்லிருந்து புறப்பட்ட அம்பினைப் போல், போய் வீழ்ந்த்து என்றும் கூறியுள்ளார். வெள்ளிவீதியார் பாடல், நெய் உறுகியது போலவும், வெள்ளம் உடைத்துக் கொண்டு போவது போலவும் பரவியது என்று கூறுகிறார்.

ஆண்பாற்புலவர் பாடலில் வில், அம்பு, சுடுகாடு என்ற நிலையில் அவர் பயன்படுத்தியுள்ள பொருளும் பெண்பாற்புலவர் பாடலில், மயில், குரங்கு, முட்டை, நெய், வெள்ளம் முதலிய நிலையில் அவர் பயன்படுத்தியுள்ள பொருளும் இருபாலினருக்கான சமூக இருப்பிடத்தினை நமக்கு தெரியப்படுத்துகிறது.

நிறைவாக,
ஓர் ஆணின் பார்வையில் கொடுக்கப்படும் எதார்த்தங்கள், ஒரு பெண்ணின் பார்வையில் வேறான அடையாளத்தை அர்த்தப்படுத்துகிறது. இலக்கணம் என்பதே ஓர் அதிகாரச் செயல்பாட்டின் விளைவாய் இருப்பதை அறியமுடிகிறது. இலக்கணங்கள் மொழிக் கூறுகளின் வருகை முறையைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் சொல் பயன்பாட்டின் வரைமுறைகளையும் வகுக்கும்போது அது அதிகாரச் செயல்பாடாகிறது.

மேலும், மொழிக்கும் பண்பாட்டிற்கும் இடையே உள்ள உறவைக் கூறும் பொழுது மொழி என்பது சுற்றுப்புறச் சூழல்களால் கட்டமைக்கப்படுகிறது. ஆண், பெண் இருபால் புலவர்களும் ஒரே சொல்லைக் கையாண்டாளும் அச்சொல்லுக்கான பொருள் என்று பார்க்கும் போது இருபாற் புலவர்களும் ஏற்றத்தாழ்வுகளுடன் கையாண்டுள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு அவர்களின் சுற்றுச்சூழல் புலனறிவுதான் காரணமாகத் தோன்றுகிறது. அண், ஆனணப் பற்றிப் பேசும்போது உயர்வனாவனாகவும், பெண்ணைப் பற்றிப் பேசும்போது அல்லது எழுதும்போது தாழ்வானவளாகவும், பெண் ஆணைப் பற்றிப் பேசும் போது உயர்வானவனாகவும் பெண்ணைப் பற்றிப் பேசும் அல்லது எழுதும்போது தாழ்வானவளாகவும், சொற்களைப் பய ன்படுத்துகின்றனர். இதற்கான காரணம் அவ்விருவருக்குமான பண்பாட்டு வரையரைகள் தான். அவள் பார்க்கின்ற உலகம் பயன்படுத்துகின்ற, பேசுகின்ற சொற்கள் எல்லாம் ஆணைச் சார்ந்த்து. ஆணின் குரலிலேயே பெண்ணும் அவளுக்கான, அவனுக்கான சொற்களைப் பயன்படுத்த நேரிடுகிறது. ஆணின் சொற்கள் தான் உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறது என்பதனை Woman word என்ற கட்டுரையில், Annie Lecter கூறியுள்ளார். ப. 74. அவை “The world is Man word. Man is the word of the world.

துணைநூற் பட்டியல்
1. உ.வே.சா. (ப.ர்.)., குறுந்தொகை, உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2009.
2. மகராசன், பெண் மொழி இயங்கியல், தோழமை வெளியீடு, சென்னை, 2010.
3. மரிய செபஸ்தியான்,அ., தமிழரின் பாலியல் முறைமைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2013.

ஆங்கில நூல்கள்

4.Dale Spender, Man Made Language, Routledge&Kega Paul, London, Bostion and Henley, Second edition Published in 1985.
5. Deborah Cameron, The Feminist Critique of Language A reader, RoutledgeL, London and New York, 1990.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*  கட்டுரையாளர் - - புவனேஸ்வரி, முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி & இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R