முன்னுரை
ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?தொல்காப்பியர் காலம்தொடங்கி இன்றுவரையிலும் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்திருப்பது ‘தூது’ என்னும் இலக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால், மனித இனம் தோன்றிய காலத்திலேயே தூதும் தோன்றியிருக்கவேண்டும். அதன் வளர்ச்சியாக, 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியாரால் ‘நெஞ்சுவிடு தூது’ எனும் சிற்றிலக்கியம் இயற்றப்பட்டு வெளியானது. காலப்போக்கில் புலவர்கள் தத்தமது தேவைக்கேற்பத் தூது நூல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு அணிசேர்த்தனர். இவ்வகையில், இந்தியெதிர்ப்புப் போரின்போது காக்கையைத் தூதாகவிடுத்துத் தமிழில் யாக்கப்பட்டுள்ள ‘வெண்கோழியுய்த்த காக்கைவிடு தூது’ எனும் நூல் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பாரதீய சனதா கட்சியினர் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளாகியுள்ளன. இச்சூழலில் சமற்கிருதமே உயர்ந்ததென்றும் அம்மொழியில் எழுதப்பெற்று, வருணாசிரமத்திற்குப் பாதுகாவலாயிருக்கும் (மகாபாரதம் எழுத்து வடிவில் ஆக்கப்பட்ட காலத்தில் இல்லாது பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட) பகவத்கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்றும் வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறினார். மேலுமவர், ஐ.நா.சபையில் இந்தியாவிற்கான மொழியாக இந்தியை முன்மொழிவோம் என்கிறார். ஐ.நா.வில் இந்தியைக் கொண்டுவர 129 உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது. இந்திமொழியில்தான் அனைத்து மாநில அலுவலகக் கடிதங்கள் இருக்க வேண்டுமென்று மோடி தலைமையிலான அரசு ஆணையிட்டுப் பிறகு திரும்பப்பெற்றது. 32 ஆண்டுகளுக்குப்பிறகு ‘உலக இந்திமொழி’ மாநாட்டைப் போபாலில் தொடங்கிவைத்தார் (09.09.2015-11.09.2015) மோடி. “வேலை வாய்ப்பிற்கேற்ற ஒரேமொழி இந்திதான்” என்று மாநாட்டுக் குறிக்கோள் வாசகம் கட்டமைக்கப்பட்டது. “இந்தியை மறந்தால் நாட்டுக்குத்தான் இழப்பு” என்று 10.09.2015ஆம் தேதி மாநாட்டில் மோடி பேசியுள்ளார். இந்திதான் இந்நாட்டிலுள்ள ஒரேமொழியா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். ஓகத்தில் (யோகா) உள்ள சூரிய வணக்கத்தை ஏற்காதவர்களும் இராமனை ஏற்காதவர்களும் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சியை உண்பவர்களின்மீது காழ்ப்புணர்ச்சியை - இனவெறியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது நடுவணரசு. உத்திரபிரதேசத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தார் என்றும் தின்றார் என்றும் கூறி, இசுலாமிய முதியவர் கொல்லப்பட்டுள்ளார். இப்படிப் பல நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் காட்சி ஊடகங்களில் வெளியாயின. யார் எதைத்தின்ன வேண்டுமென்று முடிவுசெய்யும் அதிகாரம் யாருக்குமில்லை.

மத்திய அரசால், சமற்கிருத வாரம் கொண்டாட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு கொண்டாடுவதில் தவறில்லை என்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன். பன்மைப் பண்பாட்டைக் கொண்ட இந்தியாவில், சமற்கிருதம் மற்றும் இந்தியைக் காட்டிலும் பழைமையும் இளமையும் கொண்டிருக்கின்ற மொழிகள் பல உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் வழக்கில் இல்லாத, வளர்ச்சியென்பதே இல்லாதுபோன, சமற்கிருதத்திற்குத் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது நடுவணரசு. இந்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறது; இவ்வாறு செய்வதனால் சமற்கிருதத்தை மீட்டெழச்செய்து மற்ற மொழிகளை அழித்தொழிக்கும் பணியைத் துணிந்து செயல்படுத்தி வருகிறது.

இவையெல்லாம் போதாவென்று, தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் அதற்கு எதிராகவும் ஆங்கிலவழிக் கல்வியை, ஆளுகின்ற அரசே நடத்துகிறது. இவ்வாறெல்லாம் தமிழுக்கும் அதன் பண்பாட்டிற்கும் எதிராகப் பன்முனைத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்ற இவ்வேளையில், இந்த நூல்குறித்துக் கட்டுரை வரைவதும் பரப்புவதும் பேசுவதும் தமிழர்தம் கடமையாகிறது.

நூலமைப்பும் வரலாறும்

1937-1940 காலப்பகுதியில் சென்னை மாகாண முதலமைச்சராகவிருந்த ச.இராசகோபாலாச்சாரியார் அவர்களிடத்தில் காக்கையைத் தூது அனுப்புவதாக ‘வெண்கோழியுய்த்த காக்கை விடு தூது’ எனும் பெயரில், பாந்தளூர் வெண்கோழியார் (க.வெள்ளைவாரணன்) என்பவரால் 1939ஆம் ஆண்டில் இந்நூல் இயற்றப்பட்டது1. இந்நூல் தஞ்சையிலுள்ள கரந்தையைச் சார்ந்த கூட்டுறவு மின்னியக்கப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. தூதுநூல் இயற்றுவதற்கென்று இலக்கணிகளால் சொல்லப்பட்ட கலிவெண்பாவினால் 119 கண்ணிகளில் இது யாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்குச் சிதம்பரம் அண்ணாமலை நகரிலுள்ள சிவகாமி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பு (1987) பயன்கொள்ளப்பெறுகின்றது. இந்தி மொழியைத் தமிழகப்பள்ளிகளில் கொண்டுவந்த இராசகோபாலாச்சாரியாரின் செயலைப் பழிக்கும்வகையில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. “காலமாற்றத்திற்கேற்பத் தூதிலக்கியத்தின் பொருண்மை, அமைப்பு ஆகியன இதில் மாற்றம் பெற்றுள்ளன. அகப்பொருள் முதலானவற்றைவிடுத்து, மொழியுரிமையைக் காத்தல், பிறமொழித் திணிப்பை எதிர்த்தல் முதலிய மொழிக்காப்பு வேட்கையோடு இந்நூல் இயற்றப்பெற்றிருப்பது சிறப்பாகும்” (டாக்டர் அ.ஆனந்த நடராசன், தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1997, ப.125). அவ்வகையில், “தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட அரசியலாரைப் பாட்டுடைத் தலைவாராகக்கொண்டு காக்கையைத் தூது விடுத்துப்பாடியதாக வரும் இந்நூல், தலைப்பு வகையாலும் பொருண்மை நிலையாலும் புதுமையுடையதாக விளங்குகின்றது” (மேலது, ப.174). இந்நூலில், காக்கையின் சிறப்புகள், தமிழ் மொழியின் சிறப்புகள், பாட்டுடைத்தலைவரின் அரசியல் வரலாறு, ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும், இல்லையேல் உண்மைவழிப்போரியற்ற நேரிடும் என்பதைத் தூது சொல்லிவா’ எனும் தூதுரைக்க வேண்டிய செய்தி ஆகியன நிரல்பட சொல்லப்பட்டுள்ளன.

“பாரதநாடு வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறாத நிலையில் அளிக்கப்பெற்ற தேர்தல் உரிமையினையேற்றுத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரசு கட்சி, சென்னை மாநில ஆட்சியுரிமையைக் கைப்பற்றியது. மூதறிஞர் இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சராயினார். அக்காலத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப் பெறவில்லை. ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது. அந்நிலையில் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் இந்தி மொழியினைக் கட்டாயப் பாடமாக்கினார். அப்பொழுது தமிழ் விருப்பப் பாடமாகவே இருந்தது. தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்காமல் அயன் மொழியாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாக்குதல் கூடாது என மறைமலையடிகளார், பேராசிரியர் ச.சோமசுந்தரபாரதியார், தமிழவேள் உமாமகேசுவரம்பிள்ளை முதலிய தமிழறிஞர்களும், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், தந்தை பெரியார், இராவ் சாகிபு ஐ.குமாரசாமிபிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம், அறிஞர் அண்ணா முதலிய தமிழன்பர்களும் எதிர்த்தார்கள். மூதறிஞர் இராசாசி அவர்கள் தமது கட்சிப் பெரும்பான்மையைக்கொண்டு, தமது திட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்த தந்தை பெரியார் முதலியவர்களும் துறவிகளும் புலவர்களும் பெண்களும் சிறையிலடைக்கப்பட்டனர். அந்நிலையில் பாடப்பெற்றதே இந்நூலாகும். இது, தமிழ்ப்பொழில், விடுதலை, திராவிடநாடு ஆகிய இதழ்களில் வெளிவந்தது” (இந்நூலின் பதிப்புரை, ப.1).

தூதுப் பொருள்கள்
பொதுவாக, தூது இலக்கியங்களில் எல்லாப் பறவைகளையும் தூதுவிடும் மரபு என்பது இல்லை. “தூது நூல்களில் 35 பொருள்கள் தூதுப்பொருள்களாக அமைந்துள்ளன. அவற்றில், குயில், கூகை ஆகிய இனப்பொருள்களைத் தூது விடுத்தனவாக அமைந்த நூல்கள் இன்று இல்லை” என்று ந.வீ.செயராமன், ‘தூதிலக்கியங்கள்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997, ப.192). அன்னம், மயில், கிளி, மேகம், மைனா, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய அஃறிணைப் பொருள்கள் ஒன்பதையும் உயர்திணையில் தோழியையும் தூதாக அனுப்பலாம் என்று, கி.பி.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த பிரபந்தத் திரட்டில் (நூற்.30) எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதே கருத்தைப் புகழேந்திப் புலவரால் பாடப்பட்டதாகக் கருதப்படும் ‘இரத்தினச்சுருக்கமும்’ (நூற்.7) குறிப்பிட்டுள்ளது (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997,ப.191). இவ்வாறு தூதுவிடுக்கும் பறவையினங்களுள் காக்கை, வெளவால் போன்ற பறவைகளும் பிறவும் விடுபட்டுள்ளன. ஆனால், தெலுங்கில் கவிஞர் குர்ரம் ஜேசுவா, “கப்பிலம்” என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்நூல் தமிழில் கவிஞர் தெசிணியால் ‘வெளவால்விடு தூது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிற்கால வளர்ச்சியாகக் காக்கையைத் தூதுவிடுத்துள்ளமைக்குக் காக்கைவிடுதுது சான்றாகத் திகழ்கின்றது.

காக்கையின் சிறப்புகள்
தமிழிலுள்ள ‘கா’வெனும் எழுத்தை உலகெலாம் பேசுகின்ற சிறப்புப் பெற்ற காக்கையே, (காக்கையும் தமிழ் பேசுகின்றபோது மனிதராகிய இராசகோபாலாச்சாரியார் தமிழுக்கு எதிராக இந்தியைத் திணிக்கின்றாரே எனும் அங்கதக்குறிப்பு இதன்வழி வெளிப்படுகின்றது) நீ மேன்மை பெற்ற கருமை நிறத்தைக்கொண்டு இருக்கின்றாய் (கருப்பு நிறம் அருவருப்பானது என்ற போலிப் பண்பாட்டுக் கருத்திற்கு எதிராக, இந்தக் கருத்தை முன்மொழிந்துள்ளார்). மாயனை நிறத்தாலும் முருகப்பெருமானை வள்ளல்தன்மையாலும் ஒத்திருக்கின்றாய். உணவு கிடைத்தபோதெல்லாம் உனது இனத்தைக் கூவியழைத்து அவற்றுக்கு இன்பமூட்டி, கிடைத்ததைச் சுற்றத்தோடு பகிர்ந்துண்கின்றாய். இதுவே எம் தமிழரின் ஒப்புரவு (உலக ஒழுக்கம்) என்று உலகிற்கு அறிவிக்கின்றாய்.

உலகில் முதலில் தோன்றியது தென்னாடு. அது தோன்றிய நாளிலிருந்து இம்மக்கள் பேசும் மொழி தமிழ்மொழியே என்பதை எந்நாட்டினரும் ஏற்றுக்கொள்ளும்பொருட்டு, பசுவின் கன்றுகூட அம்மா என்றழைக்கும். அதைப் பார்த்துக்கூடத் தாய்மொழிமேல் பற்றுவராத தமிழ்மக்களைக் கண்டு சினந்ததால் உன்னுடல் கருகிப்போயிற்றோ! (தற்குறிப்பேற்றம்). பாவிகளாகிய தீயவர்கள் தேனையொத்த செந்தமிழைச் சிதைப்பதற்கு விரையுமுன், அதைத் தடுத்துக் ‘காகா’ (காத்திடுவீர்! காத்திடுவீர்!) என்றே கூவியழைக்கின்றாய். உன்னைப் போன்று தாய்த்தமிழ்மீது பெருங்காதல் கொண்டவர்களை நான் இதுவரை கண்டதில்லை. அகத்திய முனிவர் குடத்திலே அடக்கிய நீரைக் கவிழ்த்துக்கொட்டி, காவிரியாக ஓடவிட்டுத் தமிழகத்து உயிர்களைக் கருணையால் காத்து அருமருந்திற்கொப்பானாய். தமிழ்மொழியைக் காக்கின்றமையால் இந்த மாநிலத்துக்கு அரசனானாய் (அண்டங்காக்கை). கருமை நிறம் என்பது கடவுள் அமைத்திட்ட நிறம். கடவுளுக்கும் அதுவே நிறம். உமையும் திருமாலும் கருமைநிறம் பெற்றதனால் பேரழகும் ஆண்மையும் வாய்க்கப்பெற்றனர். முகிலும் உன்னுடைய நிறத்தைக் காட்டி மழையைப் பெய்யும். இவற்றையெல்லாம் அறியாத மடமைபொருந்தியவர்கள், உனது ஒப்பற்ற கருமை நிறத்தை உணராமல் ‘கருங்காக்கை’ என்று இழிவாகக் கூறுவர்.

உன்னுடைய ஒப்பற்ற கண்ணைப்பற்றி அறியாதவர்கள், உனக்கு ஒற்றைக்கண்தான் (பெரியாழ்வார் திருமொழி 3.10.6) என்று கூறுவர். சனியின் உறவு நீயென்பர். சனியின் வேகத்தைக் குறைப்பதற்காகத்தான் தந்திரம் செய்து அவருக்கு நீ வாகனமானாய் என்பதை அறிபவர் யாவரோ? உறங்குகின்ற மக்களின் மயக்கத்தை அகற்ற, காலைப்பொழுதில் வந்து கரைகின்ற அருமணியைப்போன்ற காக்கையே! ஒரு துறவியைப்போல, உயிர் பிரிந்த உடல்களைத் தின்று, அவ்வுடலை உடையவர்க்கு மறுபிறவியளிக்கும் உன்பெருமையெல்லாம் சொல்லுதல் இயலா (1-31) என்று காக்கையையும் அதன் குணம் மற்றும் செயல்களையும் புகழ்ந்து புலவர் பாராட்டுகிறார்.

தேனேயுஞ் செந்தமிழைத் தீயவர்கள் தம்மொழியால்
வீணே சிதைக்க விரையுமுன் - ஆனாதிங்
காவாவென் றார்த்தெழுமின் என்றவரைக் கூவியே
காகாவென் றோலமிடுங் காக்கையே - மாகாதல்
தாய்த்தமிழிற் கொண்டார் தலைமைசேர் நின்போல
ஏத்து புகழோரை யான்காணேன் - … …” (12-14)

“கருமைநிறந் தானுங் கடவுளமைத் திட்ட
பெருமை யடையாளப் பேரே - உருவார்ந்த
பார்வதியும் மாலும் பகர்கருமை பெற்றதனால்
பேரழகும் ஆண்மையும் பெற்றுயர்ந்தார் - தேரின்
கருமுகிலும் மற்றுன் கருணைநிறங் காட்டி
அரிதின் உலகம் அளிக்கும் - … …” (20-22)

எனவரும் கண்ணிகள் மேற்குறிப்பிட்ட செய்திகளுக்கான சில கண்ணிகளாகும்.

தமிழின் தொன்மையும் ஆரியத்தின் சீர்குலைப்பும்
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலே பிறந்து, கடல்கோளால் அழிந்துபோன குமரிக் கண்டத்தில் செழித்து வளர்ந்த தமிழ்மொழி, ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைப்பட்ட’ (தொல்காப்பியப் பாயிரம்) எல்லையில் வழங்குவதாயிற்று. இப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அடுத்தவர்க்குத் துன்பம் செய்யாத இயல்பினர். எதிரிகளையும் மன்னிக்கும் பண்பினர். ஆதரவற்று ஏதிலிகளாய் வருகின்றவர்களை அன்புடன் காத்திடும் குணம் படைத்தவர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறம்.192) என்றென்னும் நற்சிந்தை உடையவர்கள். தெய்வம் ஒன்றென்று உணர்ந்தவர்கள் (ஒருவனே தேவன்). கீழ் மேல் என்று பாகுபாடு காட்டாமல், “பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்” (குறள்.972) என்பதைப் பொன்போல் போற்றி மதிப்பவர்கள். ‘தன்னேரில்லாத தமிழ்’ (தண்டியலங்காரம்) ஆழ்கடலில் மூழ்கிப்போனதைப்பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டேயிராமல், அதை மீண்டும் புத்துயிர்பெற்று எழச்செய்து, மூவேந்தர்களும் தம் கண்போல் காத்தனர். முச்சங்கம் வைத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்துப் போற்றினர். அதற்குத் தேவர்களும் அறியாத திறமளித்தனர் (சமற்கிருதம் தேவபாசை எனும் கருத்துடையவர்களுக்குத் தேவர்களாலும் அறிமுடியாத தன்மையைப் பெற்றது தமிழ்மொழி என்று இடித்துரைக்கிறார், வெள்ளைவாரணர்). இவ்வாறு, மக்களனைவரும் தாயெனப் போற்றிப் பாதுகாத்த, தனித் தமிழை, அதன் அருமை பெருமை சீர்மையென எதுவும் தெரியாத, தெளிவில்லாத சொற்களைப் பேசும் ஆரியர்கள், கெடுத்துச் சிதைத்ததோடு நில்லாமல், நக்கீரரிடத்தில் சென்று, “ஆரியம் நன்று, தமிழ் தீதென” உரைத்தனர் (ஆரியம் வல்ல கொண்டான் என்னும் குயவன்). வெகுண்ட கீரர், இப்பழிச்சொற்களைச் சொன்னவன் இறக்கும்படி ஒரு பாடல் பாடினார்2. தங்கள் தவற்றினுக்கு வருந்தி, உடனிருந்தவர்கள் அவனை மீண்டும் உயிர்பெறச் செய்யும்படி அவரிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். பெருந்தன்மையோடு மன்னித்த கீரர், அவன் உயிர்பெற்று எழும்படி மற்றோரு பாடலைப் பாடினார்3. அதையெல்லாம் மறந்த ஆரியர்கள், தற்போது கீரர் பெருமகனார் இல்லையே என்ற மதப்பினால், நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாமென்று கருதி, சிதைவு மொழியாகிய ஆரியம் எனும் அம்பைச் செலுத்தித் தமிழைப் புண்படுத்துகிறார்கள் என்று, தமிழின் பெருமையையும் அதன்மீது வடமொழியைத் திணித்துச் செய்யும் அழிம்புகளையும் உள்ளக்குமுறலோடு புலவர் வெளிப்படுத்தியுள்ளார் (கண்ணிகள் 32-48).

இராசகோபாலனின் உழைப்பும் வஞ்சனையும்
சேலத்தையடுத்த ஓர் ஊரிலுள்ள (இன்றைய தருமபுரி மாவட்டம் தொரப்பள்ளி) ஐயங்கார் மரபில் பிறந்த இராசகோபாலன் என்பவர், தம்முடைய கடும் உழைப்பினால், ஆங்கிலமொழியைக் கற்று, வழக்குரைஞரானார். இந்தியநாடு வெள்ளையர்களால் கீழ்நிலைக்குத் தள்ளப்படுவதைக் கண்டு மனம் வருந்தினார். இந்தநிலையை மாற்ற மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டினார். ஆங்கிலேயர்க்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிச் சிறைசென்றார். அதனால், மக்களால் தென்னாட்டுக் காந்தியெனப் போற்றப்பட்டார். தான் பிறந்த குடியையும் வேதநெறியையும் ஆறுதொழிலையும் மறந்து காந்தியடிகளின் மகனுக்குத் (தேவதாஸ்காந்தி) தன் மகளைத் (இலட்சுமி) திருமணம் செய்துவைத்தார். வெள்ளையர் அரசைத் தகர்க்க மகாத்மாகாந்தி என்னை அனுப்பிவைத்தார் என்று பலசொல்லி, வஞ்சனையால் மக்களை ஏய்த்து, மஞ்சள்பெட்டியில் (அந்தக் காலத்தில் வாக்குப்பெட்டியின் நிறம்) தீப்பெட்டிச் சின்னத்தில் வாக்களிக்கச் செய்து, முதலமைச்சரானார். தமிழக மக்களுக்காகத் தன்னலமற்று உழைக்கவேண்டிய தலைவர் அமருமிடத்தில், தனக்கு ஆதரவாளரான இராசனைக் (முசிறிப் பகுதியைச் சார்ந்த பிராமண குலத்தவர்) கொல்லைப்புறவழியே கொண்டுவந்தார். தமிழைக் கட்டாயப் பாடமொழியாக ஆக்காமல், பிழைப்புக்காக ஆங்கிலத்தையும் பிற மொழிகளையும் கற்று, அறவே செந்தமிழைப் புறந்தள்ளியவர்களாகத் தமிழர்களை மாற்றினார். இவ்வாறு செய்வதன்மூலம், தமிழர்களை மட்டிகளாய் மாற்றித் தம்மடியின்கீழே வைத்துக்கொள்ள நினைத்தார்.

இவையெல்லாம் போதாவென்று, ‘தூய்மையில்லாத தேய்ந்தமொழியாம் ஆரியத்தின் இழிசொல்லாய், உருது முதலிய பன்மொழிச் சொற்களைக் கடன்பெற்று உருவாக்கப்பட்ட, இழிவுதரும் இந்தியைப் பள்ளிக்கூடப் பிள்ளைகள் யாவரும், ஆங்கிலத்தோடு சேர்த்துப் பயில வேண்டுமெனக் கட்டாயச் சட்டமொன்றை இயற்றினார். இச்செயல் அடாதென்று உணர்ந்த தமிழறிஞர்களும் ஆர்வலர்களும்கூடிக் கிளர்ச்சி செய்தனர். அவர்களுடைய உண்மைப் போராட்டத்தைப் பொருட்படுத்தாத இராசகோபாலன், அவர்களைச் சிறையிலடைத்தார் (இன்று மது வேண்டாமென்று போராடுபவர்களைத் தமிழ்நாட்டரசு சிறையில் அடைப்பதைப்போல) (கண்ணிகள் 49-82). இதனைப் பின்வரும் கண்ணிகளில் விளக்குகிறார்.

“…. ….. ….. - வருந்துமிந்தி
எம்மைந்தர்க் கென்றும் இளவயதி லேறாதால்
அம்மைத் தமிழும் அழியுமால் - செம்மையிலா
இத்திட்டஞ் செந்தமிழர்க் கேற்புடைத்தன் றென்றரற்ற
அத்தகையோர் தம்மை அறிவிலியென் றெத்திறத்தும்
தன்னேரிலாப் பெரியோர் தம்மை யிழித்துரைத்தே
எந்நாளும் மாறா வசையுரைத்தும் - உன்னாது
தான்கொணர்ந்த கட்டாய இந்தி தனையெதிர்க்கும்
மேன்மைத் தமிழர்களை வெஞ்சிறையிற் றான்வைத்தார்” (78-82)

மேலும், சாதியை மேன்மையாய்ப் போற்றுகின்ற இராசகோபாலர், துறவிகளையும் குழந்தைகளுடன் பெண்டிரையும்4 தொண்டர்களையும் புலவர்களையும் சிறையிலடைத்தார். தாய்மொழியின்மீது அளவுகடந்த பற்றினால் போராடி, கைக்குழந்தைகளுடன் பெண்டிர் சிறைசென்ற கொடுமை இதற்குமுன் தமிழகத்தில் நடந்ததில்லை.

இவற்றையெல்லாம் கண்ட தமிழர்களின் உள்ளங்கள், ‘மறைகளைக் கற்றுப் பஞ்சாங்கம் சொல்லி, மக்களை வஞ்சித்து, அவர்களிடமிருந்து பொருள் பறிக்கும் பார்ப்பனர்களுடைய நெஞ்சமானது கருங்கல்லோ நீண்ட மரமோ வஞ்சகத்தை உருக்கிச்செய்த அரமோ அருளையும் அருளாளர்களையும் தாக்குகின்ற கொடிய வாளோ? என்றெல்லாம் கவலைப்பட்டுக் கருகிப்போயின’ (கண்ணிகள் 94-96) என்பதைப் புலவர் கவலையுடன் இவ்வுலகினர்க்குத் தெரிவிக்கிறார்.

காக்கைக்கு வழிகாட்டல்
முதலமைச்சரைச் சந்திக்கப் பலரை அனுப்பியும் பலனில்லை. அதனால், திருச்சிராப்பள்ளியிலிருந்து கிளம்பிய சினங்கொண்ட தமிழர்படை5 போர்க்கொடி உயர்த்திப் போராடி வாகை சூடியது. ஆயினும், யாவரும் முதலமைச்சரிடம் தூதுவிடுக்க முடிவுசெய்தனர். ஆகையால், காக்கையே! நீ அவரிடம் சென்று ‘ஆங்கில ஆட்சியின் அடிமையிலிருந்து மக்களை விடுவிக்கவே பிறந்தேன்; உழைத்தேன் என்று மக்களிடம் திறமையாகப்பேசி, தந்திரத்தால் முதலமைச்சர் ஆனவரே! மறையவரே! நானும் ஒரு தமிழனென்று தேனாகப்பேசிப் பெரும் பதவியைப் பெற்றவரே! பதவி வந்தபிறகு ஆசை அறிவை மறைக்க, சாதியைப் போற்றி வளர்த்து, பழந்தமிழைக் குட்டிச் சுவராக்கி, கூறுகூறாக வெட்டி, வெட்டவெளியில் வீசிய வீரரே! உம்முடைய உள்ளத்தைத் தெளிவாக அறிந்துகொண்டோம். உம்மவர்கள் நன்கு வாழ நினைத்துச் செயலாற்றுவீராயினும் எம்மவர்கள் வாழவும் வழி சொல்லுங்கள்’ என்று கேள். பூணூலால் (அதை அணிந்தவர்களால் - ஆகுபெயர்) உலகம் நொடியில் அழியுமென்று அறிவு நலம்படைத்த முன்னோர்கள் சொல்லியதன் உண்மைப் பொருளை இன்று நன்கு அறிந்துகொண்டோம். அறிவிலே மயக்கம்கொண்டாய். அதனாலே, இந்தியெனும் தீய குணங்கள் நிறைந்த பெண்ணிடம் இன்பத்தைத் துய்க்க எண்ணினாய். செந்தமிழ்த்தாயின் திருவுடலுக்குத் தந்திரத்தால் தீங்கிழைத்தாய். இனிமேலாவது, தமிழர்தம் பகையைத் தேடாது இருக்க வேண்டுமென்றால், உடனடியாகச் சிறையில் இருப்பவர்களை நீ விடுதலை செய்வாயாக. அவர்களுடைய பகைக்கு அஞ்சி, ஓடோடிச்சென்று, நீ செய்த தவறுகளுக்கும் கசப்பான உன் பேச்சுகளுக்கும் அவர்களிடத்தே மும்மடங்கு மன்னிப்புக் கேட்பாயாக! அவ்வாறு நீ உன்மீதுள்ள பழியை நீக்கிக்கொண்ட பிறகுதான், இந்த உலகம் உன்னைப் போற்றும். நீயும் வசை நீங்கி இசை பரப்பி முதலமைச்சராய் வாழ்வாயாக!’ என வாழ்த்துவாயாக என்று காக்கையைப் புலவர் அனுப்பிவைக்கிறார் (கண்ணிகள் 98-117). இதற்குச் சான்றாகப் பின்வரும் கண்ணிகள் சிலவற்றைக் காட்டலாம்.

“நூலால் உலகம் நொடியின் அழியுமென
மேலோர் உரைத்த விதியறிவோம் - மால்கொண்டே
இந்தியெனுந் தீயாள் இன்பத் தினைவிழைந்து
செந்தமிழ்த் தாயின் திருவுடற்குத் - தந்திரத்தால்
தீங்கிழைத்துச் செந்தமிழர் தம்பகையைத் தேடாது
தேங்கா தவரைச் சிறையகற்றி - ஓங்குபெரும்
அச்சமீக் கூர்ந்தெம் அருந்தமிழர்ப் போற்றியே
மெச்சு மவர்முன் விரைந்தடைந்து - கைச்ச
மொழியுரைத்த தீப்பிழைக்கு மும்மடங்கு வேண்டி
அழியா வுளத்தன்பு பெற்றுப் - பழிபோக்கி ” (111-115)

போரில் சந்திப்போம்
‘காக்கையே! இராசகோபாலனிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறி மன்னிப்புக் கேட்டுப் பிழைத்துக்கொள்ளச் சொல். இல்லையேல், உள்ளத்தால் உயர்ந்த எம் தமிழர்படை, உண்மைவழியிலும் நேர்மைமுறையிலும் போர்புரிய, விரைவாக இசைவு தருவாயாக (கைகுலுக்குவாயாக!) எனக்கேள். இதை உன்னிடம் தெரிவித்துவர, வெண்கோழி என்னை அனுப்பி வைத்தது என்று சொல். ‘கடுமைநிறைந்த வீரப்போரில் சந்திப்போம்’ என்பதை உறுதியாகச் சொல்லி, கைகுலுக்கிவிட்டுத் திரும்புவாய்’என்று காக்கையைத் தூதாக அனுப்பிவைத்தார் புலவர்.

“வசைநீங்கி யாரும் வழுத்து மரபால்
இசைபரப்பி வாழுமின் இன்றேல் - நசையினால்
உள்ளத் துயர்தமிழர் உண்மைவழிப் போரியற்ற
ஒல்லையிற் கைதாரும் என்றுரைத்துச் - செல்லவே
வெண்கோழி யென்னை விடுத்ததுகாண் என்றுரைத்து
வண்போர்க்குக் கைவழங்கி வா” (117-119)

இவ்வாறு, இந்திமொழியைக் கட்டாயமாக்கியதோடு அதை எதிர்த்துப் போராடியவர்களையும் சிறையிலடைத்த சிறுமைத்தனத்தைக் கடுமையாக எதிர்த்துத் தூது நூல் பாடியுள்ளார் வெள்ளைவாரணனார். வழக்கமாக, அகப்பொருள் தூது நூல்களில் தலைவன் கழுத்தில் அணிந்த மாலையை வாங்கி வா என்பதாகத் தூது நூலின் இறுதி அமைக்கப்படும். இது புதுமையாய்ப் பாடப்பட்ட புறத்தூதாகையினால் முடிவையும் புதுமையாகக் ‘கைகொடுத்துக் குலுக்கிவிட்டு வா’ என்று பேராசிரியர் வெள்ளைவாரணனார் அமைத்துள்ளார்.

முடிவுரை
காலத்தின் அருமைகருதி புதுமையாக இத்தூது நூல் படைக்கப்பட்டுள்ளது. இராசகோபாலனார் தமது மதி நுட்பத்தால், சேலம் நகராட்சித் தலைவராயிருந்தபோது, இந்தியாவிலேயே முதன்முதலாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிசெய்ய விற்பனை வரியை முதன் முதலாக நடைமுறைக்குக் கொண்டு வந்தார். ஆயினும், முதலமைச்சரானபோது இந்தித் திணிப்பைக் கொண்டுவந்ததால் கடுமையான எதிர்ப்பை ஏற்றார். பிற்காலத்தில் உண்மையை உணர்ந்தபிறகு, அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். அவரளவிற்;குப் பக்குவமும் முதிர்ச்சியும் அற்றவர்களே, தற்போது அரசாள்வதால், காக்கை கடைசியாகச் சொன்ன சில அடிகளின் பொருளை மனத்தில் நிறுத்துவோம்.

22 மொழிகளைத் தேசிய மொழிகளாகக் கொண்ட நமது நாட்டில், இந்தியை மட்டும் பாராளுமன்ற அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதே அடாவடித்தனமாகும். இந்தநிலையில் ஐ.நா.சபையில் இந்தியை முன்மொழிவது தான்தோன்றித்தனமாகும். இவற்றையெல்லாம் கண்டு கேட்டும் ஆடாய் மாடாய் அம்மியாய் அசைவற்றிருத்தல் அழகோ என்று எண்ணுவோம்.

சான்றெண் குறிப்புகள்
1. கட்டாய இந்தி குறித்து இராசாசி அறிவித்த நாள் 10.08.1937. கட்டாயமாக்கப்பட்ட நாள் 21.04.1938. இந்தி எதிர்ப்பின் முதல் போராட்டம் 1938 - 1939 காலத்தில் நடந்தது. இராசாசி 27.10.1939 அன்று முதல்வர் பதவியிலிருந்து விலகியதால் போராட்டம் கைவிடப்பட்டு, இந்தியெதிர்ப்பு வாரியம் கலைக்கப்பட்டது. 21.02.1940 அன்று சென்னையின் ஆளுநர் இந்தியை விலக்கிக்கொண்டார். 1938இல் இந்தியைக் கட்டாயமாக்கிய இராசாசி, 1965இல் இந்தியெதிர்ப்பு அணியில் சேர்ந்தார். இதற்கு முரணாக, 1939இல் இந்தியை எதிர்த்த பெரியார், 1965இல் இந்தியெதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரித்தார். இந்நூல் இயற்றப்பட்ட 1939ஆம் ஆண்டில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் கடுமையானநிலையை எட்டியிருந்தது. சிறைக்குச் சென்றவர்களுள் நடராசன் 15.01.1939 அன்றும் தாளமுத்து 12.03.1939 அன்றும் சிறையிலேயே பலியாயினர். சிறையில் பலரும் நோயுற்றனர்.

2. முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி - அரணிலா
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தஞ் சேர்கசுவா கா
(ந.மு.வேங்கடசாமி நாட்டார் - நக்கீரர் - சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, அக்.2006, பக்.10-11. உண்மையில் முதற்பதிப்பு 1919).

3. ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்கசுவா கா (நக்கீரர், 2006, ப.11).

இப்பாடல்கள் நக்கீரரின் பெயரில் யாரோ ஒருவரால் பாடப்பட்டவை.

4. சீதம்மாள் மங்கையர்க்கரசி (3), நச்சினார்க்கினியன் (1) ஆகிய குழந்தைகளுடனும் ‘திராவிடன்’ ஆசிரியர் அருணகிரியின் மனைவி உண்ணாமுலையம்மையார் மகள் தமிழரசியுடன் (1) சிறைபுகுந்தனர். இப்படிப் பற்பலர் தங்களது குழந்தைகளுடன் சிறையிலடைக்கப்பட்டனர். மேலும் பலரின் பெயர்களும் குழந்தையின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு, ப.118

5. திருச்சிராப்பள்ளியின் உறையூரிலிருந்து வெளியான நகரதூதுன் எனும் இதழாசிரியர் ரெ.திருமலைசாமி தலைமையில், 100பேர்களுடன் 01.08.1938இல் புறப்பட்டு 409கல் தொலைவு நடந்து 11.09.1938 அன்று சென்னைக்கு வந்தது. மா.இளஞ்செழியன், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு, சிந்தனை வெளியீடு, 2012, பக்.94-96


மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

* கட்டுரையாளர் - - முனைவர் கி.சிவா, உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம், மதுரை-09 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்