முன்னுரை :
தொல்காப்பியம் தமிழ் மொழிக்கும், கவிதைக்குமான இலக்கண நூல், இதில் பொருளதிகாரம் திணைக்கு முக்கியம் கொடுத்து எழுதப்பட்டுள்ள பகுதி. திணைகள் மொத்தம் ஐந்து அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இதனொடு கைக்கிளை, பெருந்திணை சேர்ந்து 7 என்று கூறப்படுகின்றன. இவற்றில் அகத்திணைக்குரிய திணைகள் 5 ஆகும். அவற்றில்
மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் (தொல். 1000)
என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறியுள்ளது. ஆகமொத்தத்தில் தமிழர்களின் முதன்மையான திணை 5 மட்டுமே. இந்த திணையை, நிலப்பகுதிகள் என்பது பொருத்தமாக அமையும். அந்த வகையில் தமிழர்கள் ஐவகையான நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அகமாகவும் புறமாகவும் பாகுபடுத்தியுள்ளனர் முன்னோர்கள். அந்த வகையில் இக்கட்டுரை புறத்திணையியல் கொண்டு புறநானூற்றுப் பாடல்களை திணை இலக்கணத்தில் ஆராய்கிறது.
திணை விளக்கம் :
திணை என்பது ஒழுக்கம் என்பர். திணை என்பது நிலம் என்பர். இரண்டு கருத்தும் நடைமுறையில் உள்ளன. ஆனால் திணை என்பது நிலம் என்பது சங்க காலத்தைப் பொருத்தவரையில் உண்மையானதாக உள்ளது. ஆனால் தொல்காப்பியர் அகத்திணை, புறத்திணை என்று இரண்டு இயல்களுக்குத் தலைப்பு வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தொல்காப்பியர் அகம் புறம் குறித்து இலக்கணம் கூறும்போது புறப் பொருள்கட்கு திணை துறைகளை வகுத்துப் பேசுகிறார். 'அன்பினால் நிகழும் அகத்திணை யொழுகலாற்றைக் குறிஞ்சி முதலான ஐந்திணையாகவும், கைக்கிளை பெருந்திணைகளாகவும் சேர்த்து ஏழு திணைகளாகப் பகுத்துரைத்தல் பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழையும் புறத்திணைகளாகக் கூறுவர். இத்திணைகள் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கிய போர் முறைகளையும் அம் முறையில் காட்டப்பெறும் வீரச் செயல்களையும், பெரும்பான்மையாகவும், ஏனைய அரசியல், கொடை, புகழ் நிலையாமை முதலியவற்றைச் சிறுபான்மையாகவும் உணர்த்துகின்றன' என்பர் ந.சுப்புரெட்டியர் (தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பக்.215-216).
இங்கு மூன்று கருத்துக்களை ஆராய வேண்டும்.
1. அகத்திணை, புறத்திணை - இதில் வருகின்ற திணை என்பது பெரும் பிரிவு - இயல் - எனலாம்.
2. ஐந்திணை - நிலம் என்று கூறலாம்.
3. புறப்பொருளில் வரும் 7 திணைகளும் செயல் என்று கூறலாம்.
அதாவது புறப்பொருளில் கூறப்படுகின்ற வெட்சி முதலான திணைகள் மன்னர்களின் செயல்பாட்டைக் குறிக்கும் சொல் என்று கூறவேண்டும். இவ்வாறு திணையைப் பகுத்துப் பார்ப்பது நலம்.
திணைக்குப் புறன் அகத்திற்குப் புறம் :
1. தொல்காப்பியர் அகன் ஐந்திணைகளை அகத்திணையில் கூறிவிட்டு புறத்திணையில் அதனைப் புறனாகக் கூறுகிறார்.
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
வஞ்சி தானே முல்லையது புறனே
உழிஞை தானே மருதத்துப் புறனே
தும்பை தானே நெய்தலதுப் புறனே
வாகை தானே பாலையது புறனே
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
இங்கு வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை வாகை, மட்டுமே முதன்மையான செயல்பாடாக மன்னர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
புறத்திணை என்பது மன்னர்களின் வீரத்தை மையமிட்டப் பகுதி. அதில் வெட்சி என்பது குறிஞ்சி நிலத்தை மையமாகக் கொண்ட செயல் என்று கூறலாம். அது போலவே வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, முறையே முல்லை, மருதம், நெய்தல், பாலை, முதலான நிலத்தின் அரசர்களுக்குரிய செயல்பாடாகும். எனவே தான் தொல்காப்பியர் புறனாகக் கூறியுள்ளார்.
புறநானூறும் திணையும் :
புறநானூற்றில் நானூற்றுப் பாடல்கள் உள்ளன. அவை புறப்பொருளிலக்கணத்தின் திணை துறைகளுக்கு முக்கியமாக உள்ளவை. இந்நூலில் உள்ள செய்யுள்களில் இருந்து சேர, சோழ, பாண்டியர்கள் வரலாற்றையும் பாரி, பேகன், ஆய், அதிகன், காரி, ஓரி, நள்ளி, குமணன் முதலான வள்ளல்களையும், புலவர்களின். வாழ்வியலையும் அறிந்து கொள்ள முடிகின்றன.
இங்கு புறநானூற்றுக்கு திணை துறை குளிக்கப் பெற்றுள்ளதை ஆராய முற்படலாம். முன்னோர்கள் திணை குறிக்கும்போது ஏழு திணைகளைக் கொண்டு குறித்துள்ளனர். அவற்றில் குறிப்பாக புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடலின் கருத்துக்களைக் கொண்டு திணைகளைக் குறித்துள்ளனர்.
இதில் தொல்காப்பியரின் புறத்திணைக் கோட்பாடு சரியாகப் பின்பற்றப்படவில்லை. மேலும் புறநானூறு பாடல்களில் இடம்பெற்றுள்ள முதல், கரு உரிப்பொருள்களைக் கொண்டு திணைப் பிரித்தல் தற்போது இடம்பெற்றுள்ள திணை மாறும் என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.
முதல், கரு, உரி ஆகிய முப்பொருளாலும் அகத்திணை ஒவ்வொன்றும் புறத்திணை ஒவ்வொன்றோடு இயைபு பெறும்| என்னும் கு.வெ.பாலசுப்பிரமணியன் கூற்று ஏற்புடையதாகும்.
சான்று :
புறநானூற்றில் சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பொருந்தி இளங்கீரனார் பாடிய பாடல்.
முதிர் வார் இப்பி முத்தவார் மணல்
கதிர் விடு மணியன் கண்பொரு மாடத்து
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்றை
களம் கொள் யானை, கடு மான் பொறைய!
விரிப்பின் அகலும்ளூ தொகுப்பின் எஞ்சும்
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கும், ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே - ஷதாழாது
செறுத்த செய்யுட் செய் செந் நாவின்
வெறுத்த வேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன், என்ற நின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்ப
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே
இப்பாடல் வாகைத் திணை என்று குறிக்கப்பட்டுள்ளது.
வாகைத் திணை பாலைத் திணைக்குப் புறனான திணை என்று தொல்காப்பியம் கூறியுள்ளது. இங்கு பாடலில் மணல் மேடு என்னும் சொல் பாலை நிலத்தைக் குறிப்பதாகக் கொண்டால் வாகைத்திணை சரியாகப் பொருந்தியுள்ளது. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது சில பாடலடிகள் ஆகும்.
செறுத்த செய்யுட செய்நன் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின் நன்றுமன்
என்பது கபிலன் பற்றிய சிறப்பு ஆகும். ஷவிரைவாகப் பலபொருள் அடக்கிப் பாடல் புனையும் செவ்விய நாவினையும் செறிந்த புலமையையும் பலரும் அறிய நின்று விளங்கிய புகழையும் உடையவன் கபிலன் அவன் இன்று இருப்பான் நன்று என்றாய்' என்று கூறும் புலவர் இளங்கீரனார். நானும் உன் வெற்றிச் சிறப்பை பாடுவேன் என்கிறார்.
இங்கு கபிலன் இருந்தால் பாடுவேன் என்னும் கருத்து குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த மன்னன் என்பதைக் காட்டுகிறது. காரணம் கபிலன் குறிஞ்சித் திணைப் பாடல்கள் மட்டும் பாடியதாக வரலாறு கூறுகிறது. அந்த அடிப்படையில் இப்பாடலை நோக்கினால் இது குறிஞ்சித் திணைக்குப் புறனான வெட்சித் திணை என்று குறிக்கலாம் அல்லவா?
இது போலவே மற்றொரு புறநானூறு 52 வது பாடல் இளநாகனார் பாடியது.
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து
தான் வேண்டு ... என்னும் பாடலில் வருகின்ற
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங்கொடி
என்னும் அடி நெய்தல் நில மக்களின் உணவான மீன் பற்றியதாக அமைந்துள்ளது. பெரும்பாலும் நெய்தல் நில மக்களின் கருப்பொருள் மீன். எனவே இப்பாடலில் நெய்தல் நிலத்தின் புறனான ஷதும்பைத்| திணை என்று அல்லவா? இருக்க வேண்டும் ஆனால் வாகைத்திணை என்று இருக்கின்றது.
வாகைத்திணை - பாலைத்திணைக்குரியது பாலைத்திணையில் மீன் பற்றிய கருத்தமைந்த பாடல் ஏன் வந்தது? காரணம் பாடலுடைய மொத்தக் கருத்தையும் வைத்துக்கொண்டு திணையை வரையறை செய்துள்ளனர்.
பாடாண் - கைக்கிளை - மாற்றுத்திணை
புறநானூற்றில் பாடாண்திணைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களை ஆராய்ந்துப் பார்த்தால்ளூ தொல்காப்பியத்தில் திணைக் கோட்பாடு வரையறையில் இடம்பெற்றுள்ள கருப்பொருளை மையமாகக்கொண்டு மாற்றுத்திணை குறிக்கலாம்.
ஓங்கு மலைப் பெருவிரல் பாம்பு ஞான் கொளீஇ
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண்போல
இங்கு இப்பாடல் பாடாண்திணை என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பாடலின் பொருள் உயர்ந்த மலையாகிய பெரிய வில்லில் பாம்பினை நாணாகக் கொண்டு ஒரே அம்பினால் மூவர் மதிலை அழித்துப் பெருஞ்சிறப்புடைய அமரர்க்கு வெற்றி தந்தவன் விடமுண்டு கருமை படிந்த திருமிடறுடைய இறைவன்ளூ அந்தப் பெருமானின் அழகிய திருவடியில், சூடிய பிறை சேர்ந்த நெற்றியில் விளங்கும் கண்போல, வேந்தர் மூவருள்ளும் உயர்ந்தவனே, பூமாலை அணிந்த மார்பை உடையவனே!
என்று பாண்டிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடினார். இதில் மலை என்னும் முதல் பொருள் இடம்பெற்றுள்ளது மலை குறிஞ்சிக்குரியது, குறிஞ்சி - வெட்சித் திணைக்குப் புறனானது, ஆனால் இப்பாடல் பாடாண்திணை என்று குறிக்கப்பட்டுள்ளது. பாடாண் திணை - கைக்கிளைக்குப் புறனாக அமைந்தது.
இது ஒருவகையில் சரியானதாகவே அமைந்துள்ளது. அதாவது தொல்காப்பியர் அகத் திணையியலில், உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே என்று நூட்பா கூறுகிறார். இதற்குப் பொருள் தரும், தமிழண்ணல், உரிப்பொருள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன ஐந்து இவ் அகன் ஐந்திணைக்குள்ளேயே கைக்கிளையும், பெருந்திணையும் மயங்கி வரும் குறிஞ்சியில் கைக்கிளையும், நெய்தலில் பெருந்திணையும் பெரிதும் இடம்பெறக் காணலாம் என்கிறார்.
இவ்வாறாகச் சுற்றிப் புரிந்து கொள்வதை விட புறநானூற்றுக்குப் பாடலுக்கு அடியிலேயே
ஐந்திணையான - குறிஞ்சி - என்றும்
கைக்கிளை - மயங்கம்
பாடாண் - புறன்
என்று குறிப்பிட்டால் பாடலில் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு எளிதானதாக அமைந்துவிடும். இல்லையென்றால் புரிவது எளிதானதாக அமையாது. பிரிதொரு பாடலில் திணைக் குறிப்பு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறிதொரு பாடலில் திணைக் குறிப்பு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து (பாடல் - 60)
என்னும் பாடல் பாடாண் திணை என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்பாடலில் முழுக்க முழுக்க நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருள்கள் இடம்பெற்றுள்ளன. முந்நீர், செம்மீன், உப்பு, போன்ற பொருள்கள் நெய்தல் நிலத்து மக்களின் பொருள்கள் ஆகும்.
அதாவது கடல் நடுவே படகினில் வைத்த விளக்கு போல செவ்வாயின் ஒளி திகழும் மாகமாகிய ஆகாயத்தில் உச்சியல் முழுமதி நின்று தோன்றும்ளூ அதனைச் சுரமாகிய அரிய பாலை வழியில் காட்டில் வாழும் மயிலைப் போன்றவளும் சில வளையல்களை அணிந்தவளுமான விறலியுடன் நானும் கண்டேன்.
கடற்கரைக் கழிமுகத்திலுள்ள நீரால் விளைந்த உப்பினைச் சுமந்து மலைநாடு நோக்கிச் செல்லும் ஆரக்கால்கள் அமைந்த வண்டிளூ அதனை பள்ளத்தில் ஆழ்ந்துவிடாதபடி வலிமையுடையதும் சுமை தாங்குவதுமான காளை இழுத்துச் செல்லும்ளூ அந்த வலிய காiளையைப் போன்றவன் எம் அரசன்ளூ என்கிறது பாடலின் பொருள்ளூ இது நெய்தல் திணை சார்ந்த பாடல்ளூ என்பது கருப்பொருளைக் கொண்டு அறியலாம்.
ஆனால் பாடாண் திணை குறிக்கப்பட்டுள்ளது இங்கு
நெய்தல் - திணை
தும்பை - புறன்
என்று இருக்க வேண்டும். நெய்தலுக்குரிய தும்பைத்திணை இப்பாடலுக்குக் குறிக்க வேண்டும. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே என்ற அடிப்படையில் நெய்தலில் பெருந்திணை என்பதனால் காஞ்சித்திணை இருக்க வேண்டும். மாறாக பாடாண்திணை குறிக்கப்பட்டுள்ளது. திணைக் கோட்பாட்டிற்குப் பொருந்தாததாக அமைந்துள்ளது.
பெருந்திணை - காஞ்சி
முடிவுரை
இவ்வாறாக புறநானூற்றில் புறத்திணையியலின் திணைக் கோட்பாடு சரியானதாக அமையவில்லை என்னும் இக்கட்டுரை முன்வைக்கிற செய்திகளை இக்கட்டுரை சிறிதளவே ஆராய்ந்துள்ளது. இதனையே முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தால் புறநானூறு முழுமைக்கும் தொல்காப்பியரின் திணைக் கோட்பாட்டைப் பயன்படுத்திப் பாடல்களுக்கு சரியான திணையை வரையறை செய்யலாம்.
பயன்பட்ட நூல்கள்
1. புறநானூறு - ஔவை. துரைசாமி பிள்ளை உரை
2. சங்க இலக்கியக் கொள்கை – கு. வெ. பாலசுப்ரமணியம்
3. புறப்பொருள் வெண்பாமாலை - கழக வெளியீடு
4. சங்க மரபு – தமிழண்ணல்
5. சங்க இலக்கிய ஒப்பீடு – தமிழண்ணல்
6. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை – ந. சுப்பு ரெட்டியார்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.