ஜெவ்ரி பாவா Geoffrey Bawa - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!
இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.
இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.
ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.
இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர் இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.
1959இல் 'டானிஸ்' கட்டடக்கலைஞரான உல்ரிக் பிலெஸ்னெர் (Ulric Plesner) இவருடன் இணைந்தார். இவர்கள் இருவருமாகப் பல கட்டடங்களை தமக்குரிய தனித்துவமான பாணியில் வடிவமைத்துத்தார்கள். இப்பாணியே பின்னர் 'வெப்பநில நவீனத்துவம்' என்று உலகக் கட்டடக்கலையில் 'வெப்பநில நவீனத்துவ'ப் பாணியாக அறியப்பட்டது. கட்டடங்கள் அமைந்துள்ள நிலத்தின் தன்மைக்கேற்ப, அங்குள்ள காலநிலைக்கேற்ப அப்பகுதியின் பாரம்பரியக் கட்டடக்கலைக்கூறுகளை உள்வாங்கி, அங்கு வாழுவோருக்கு இன்பத்தைத்தரும் வகையில், கட்டடக்கலையின் நவீனத்துவக் கூறுகளையும் கலந்து கட்டடங்களை வடிவமைப்பதில் வல்லவர் இவர். காலனித்திய, பாரம்பரிய மற்றும் நவீனத்துவக் கட்டடக்கலையின் கூறுகளை உள்வாங்கி அம்மண்ணின் கலாச்சாரக் கூறுகளையும் கவனத்தில்கொண்டு , வெப்பமண்டலப் பிரதேசங்களில் வடிவமைக்கப்பட்ட இவரது கட்டடஙகள் இவரது கட்டடக்கலைப்பாணியில் பிரதிபலித்த தனித்துவம் காரணமாக உலகக்கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. இலங்கை மட்டுமல்லாமல், இந்தியா, இந்தோனேசியா என்று பிற நாடுகளிலும் இவர் கட்டடங்களை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டங்களைபெற்ற ஜெவ்ரி பாவா , பின்னரே தனது நடுத்தர வயதில் கட்டடக்கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவ்விதம் ஈடுபடுத்திக்கொண்ட அவர் உலகக் கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் தனது தனித்துவமான பாணியில் வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள் மூலம் 'வெப்பநில நவீனத்துவம்' என்னும் கட்டடக்கலைப்பாணியின் மூலவராக இடம் பிடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல பிரமிக்கத்தக்கதும் கூட.
தனது கட்டடக்கலைப்பங்களிப்புக்காக ஆகாகான விருது, இலங்கை அரசின் விருதுகளைப்பெற்ற ஜெவ்ரி பாவா இலங்கையில் வடிவமைத்த அவரது சிறப்பினை வெளிப்படுத்தும் முக்கியமான கட்டடங்களில் சிலவாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:
1. கோட்டேயில் அமைந்துள்ள புதிய பாராளுமன்றக் கட்டடம்..
2. பெந்தோட்ட கடற்கரைக் ஹொட்டல்.
3. ருகுண பல்கலைக்கழகக் கட்டடங்கள்
4. கந்தான ஹொட்டல்
5. புளூ வார்ட்டர் ஹொட்டல்
எண்பதுகளில் நகர அதிகார சபையில் நானும் நண்பர் கட்டடக்கலைஞர் வைரமுத்து அருட்செல்வனும் நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞரான (Landscape Architect) திருமதி 'கெஸ்டர் பசநாயக்கா'வுடன் கோட்டேயில் அமைக்கப்பட்டிருந்த புதிய பாராளுமன்றக் கட்டடத்தைச் சுற்றிய நிலப்பரப்பு வடிவமைப்பு வேலைகளில் இணைந்து பணியாற்றியிருந்தோம். அதன் காரணமாக புதிய பாராளுமன்றம் திறப்பதற்கு முன்னர் அங்கு சென்று அதன் உட்புறத் தோற்றங்களையெல்லாம் கண்டு களித்திருக்கின்றோம். அப்பொழுது கட்டடக்கலைஞர் ஜெவ்ரி பாவாவின் கட்டடக்கலை வடிவமைப்பில் எம்மை மறந்திருக்கின்றோம். இப்பொழுதும் நினைவிலுள்ளது.
- கோட்டேயில் அமைந்துள்ள புதிய பாராளுமன்றக் கட்டடம். -
இப்பதிவுக்கான முகநூலில் வெளியான எதிர்வினைகள்:
Janaki Karthigesan Balakrishnan இந்தப் பதிவினை வாசிக்கும் போது நானும் கந்தளம சுற்றுலாத் தளத்தைத்தான் உடனே எண்ணினேன். இந்தப் பதிவினைப் படித்து கருத்துரைக்கு வரும் வரை அதன் கட்டடக் கலைஞர் யார் என்று தெரிந்திருக்கவில்லை அல்லது மனப்பாடம் செய்து வைத்திருக்கவில்லை. எனது இரு பயணங்கள் போது குடிசைகள் போலமைக்கப்பட்ட அறைகளில் தங்கி, ஏனைய ஹோட்டல் வசதிகளை அனுபவித்தேன். அந்த ஹோட்டலும், குடிசை போன்ற அறைகளும் ஒரு கிராமமும், நகரமும் ஒருங்கிணைந்தது போல், ஆதிகுடியினரின் கலாச்சாரத்தை அதில் புகுத்தி, அழகான அமைதியான சுற்றுப்புறச் சூழலில் ஒரு அற்புதமான சுற்றுலாத் தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. சிறீ லங்கா பயணம் செல்பவர்கள் ஒரு நாளேனும் அங்கு சென்று வந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். செல்வதற்கு பகல் பயணத்தை மேற்கொள்வதையே நல்லதென்று கூறுவேன். தம்புளை எனும் இடத்திற்கு சென்று, உள்ளே அதிகம் வெளிச்சம் அற்ற பாதையில் நீண்ட பயணம். அவ்வாறெல்லாம் அமைந்தது தான் அதன் சிறப்பிற்குக் காரணம். நான் முதல் தடவை வேறு அனுசரணையுடன் சென்று நன்கு அனுபவித்ததால், அடுத்த தடவை எனது குடும்பத்தினரை அழைத்துச் சென்றேன். இதைக் கூறாவிட்டால் கடமையிலிருந்து தவறி விடுவேன். செலவும் அதிகம்தான். கந்தளம பற்றி முகநூல் வாயிலாக நண்பர்களுக்கு தெரியப்படுத்த முன்பே விரும்பினேன். அச் சந்தர்ப்பத்தை இப்பதிவின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்த கிரிதரனுக்கு மிக்க நன்றி.
Memon Kavi அருமையான பதிவு
Memon Kavi '' 'வெப்பநில நவீனத்துவம்' என்று உலகக் கட்டடக்கலையில் 'வெப்பநில நவீனத்துவ'ப் பாணியாக அறியப்பட்டது. கட்டடங்கள் அமைந்துள்ள நிலத்தின் தன்மைக்கேற்ப, அங்குள்ள காலநிலைக்கேற்ப அப்பகுதியின் பாரம்பர்யக் கட்டடக்கலைக்கூறுகளை உள்வாங்கி, அங்கு வாழுவோருக்கு இன்பத்தைத்தரும் வகையில், கட்டடக்கலையின் நவீனத்துவக் கூறுகளையும் கலந்து கட்டடங்களை வடிவமைப்பதில் வல்லவர் இவர். காலனித்திய, பாரம்பரிய மற்றும் நவீனத்துவக் கட்டடக்கலையின் கூறுகளை உள்வாங்கி அம்மண்ணின் கலாச்சாரக் கூறுகளையும் கவனத்தில்கொண்டு , வெப்பமண்டலப்பிரதேசங்களில் வடிவமைக்கப்பட்ட இவரது கட்டடஙகள் இவரது கட்டடக்கலைப்பாணியில் பிரதிபலித்த தனித்துவம் காரணமாக உலகக்கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் முக்கியமானவையாகக் கருதப்பட்டன'' இது மிக முக்கியான குறிப்பு கட்டிட கலை ஆர்வலர்களுக்கு
Memon Kavi அதே போல் ஒரு நிலப்பகுதியினை சமப்படுத்தாமல் அது இருக்கும் அதே அமைப்பில் வைத்து கட்டிடங்கள் என்பதும் ஒரு உத்தியாக இருந்த து. இலங்கை யில் அம்மாதிரியான அக்கட்டிடங்கள் பல உண்டு. (சும்மா ஒரு நினைவுக்கு இலங்கை மகரகம வில் அமைந்துள்ள் இளைஞர் சேவை மன்ற கட்டிடம். அப்படியான ஒரு கட்டிடமாகவே பட்டது.) இது கட்டிட ஒர் உத்தி என்றும் , அது ஜெர்மனியில் கட்டிட கலையில் அறிமுகப்பட்ட உத்தி என்றலாம் சொல்லப்ட்டது. ஆனால் அது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. இங்கு இதனை நான் குறிப்பிட காரணம். எனது சிறிய வயதில் எனது தாய் மாமா வசித்த இலங்கை கண்டி அக்குறணையில் நிலத்தின் அமைப்புக்கு அமைப்பு ஏன்ப உள்ளூர் bassமார்கள் கட்டிய கட்டிங்கள் கண்டு நான் வியந்து போனது உண்டு.அங்கு மேடும் பள்ளமும் சின்ன சின்ன கற்பாறைகளும் அதிகமான அக்குறணை ப்குதியில் அமைந்து கட்டிடங்களுக்கு சிறிய பாலம் வளைந்து நெளிந்து போகும் படிகற்கள் அப்படிவான வடிவில் பல கட்டிங்கள்.
Memon Kavi Lafees Shaheed (இந்த குறிப்பு நண்பர் lafees shaheed யின் கவனத்திற்கு கிரி! ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003) பற்றிய: உங்கள் குறிப்பு எனக்கு 60களின் இறுதியில் அக்குறணையில் நான் பாரத்த கட்டிங்களை எனக்கு நினைவுப்படுத்தின.
Vadakovy Varatha Rajan புதிய தகவலை தந்தத்திற்கு நன்றி
Vimalendran Barathithas Very interesting article! Great
Kanagaratnam Balendra நன்றி. நல்ல பதிவு.
Gv Venkatesan Well-done...super
Naveen Navaratnarajah Kandalama Heritage Hotel also one of his architectural work.
Naveen Navaratnarajah இந்த கந்தளம விடுதியில் 2003 ல் சில நாட்கள். தங்கியிருந்தேன். குளியலறைகளின் வெளிப்புறச்சுவர்கள் முற்றிலும் கண்ணாடியாலானவை. மறைப்பு ஒருவகையில் படர்கொடிகளே (kind of curtain creepers hanging from roof garden)
உசாத்துணை விபரங்கள்
1. விக்கிபீடியா: https://en.wikipedia.org/wiki/Geoffrey_Bawa
2. Spotlight: Geoffrey Bawa by Patrick Kunkel https://www.archdaily.com/770481/spotlight-geoffrey-bawa
3. Geoffrey Bawa :http://www.geoffreybawa.com/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.