ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் காடையர்கள் சிலரால் தாக்கப்பட்டதாகத் தேசம்.நெற் செய்தி வெளியிட்டுள்ளது.
சூழலியாளர், ஊடகவிலயாளர், எழுத்தாளர், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் என்னும் பன்முக ஆளுமையாளரான மு.தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டது அதிர்ச்சி தருவது. மிகவும் கண்டிக்கத்தக்கது. மு.தமிழ்ச்செல்வனைத் தாக்கியவர்கள் சட்டத்தின் மும் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவார்கள் என எதிர்பார்ப்போம்.
தேசம்.நெற் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:
"கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன்.
தேசம்நெற்றுக்குத் தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்."
]
ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் சூழலியற் பாதுகாப்புக்காகக் குரல்கொடுக்கும் ஊடகவியலாளர். அவ்வகையில் சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட. இவரது 'நஞ்சாகும் நிலம்' நூல் சூழல், சூழல் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இவ்வகையில் முக்கியமான நூல். கிளிநொச்சியிலிருந்து வெளிவந்த 'வெள்ளிநாதம்' பத்திரிகையின் உதவி ஆசிரியராகவிருந்தவர். அக்காலத்திலிருந்து சூழலியல் பற்றிய கட்டுரைகளை எழுதிவருகின்றார். தினகரன் பத்திரிகையிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவரது சூழற் பாதுகாப்பு பற்றிய 13 கட்டுரைகளின் தொகுப்பே 'நஞ்சாகும் நிலம்'.
மேற்படி செய்தியில் மு.தமிழ்ச்செல்வன் கூறிய "என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்" என்னும் கூற்று துயரம் தருவது. ஆனால் ஆச்சரியத்தைத் தரவில்லை. இது போன்ற சம்பவங்கள் பலவற்றில் நம் மக்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். வெட்கப்பட வேண்டிய விடயம். நம் மக்கள் மாற வேண்டும்.
இந்நிலை தொடர்வது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலானது. இவ்விடயத்தை எவ்வகையில் நம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கையாள்கின்றார்கள் என்பதைக் காலம் வெளிப்படுத்தும். ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள இலங்கை அரசு இது போன்ற விடயங்களை எவ்விதம் கையாள்கின்றது என்பதையும் அவதானிப்போம்.