1. இருண்ட சொற்கள்
உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து
எமது எண்ணங்களில் துடிப்பவற்றை
ஒரு பெரும் மத்தளத்தின் துணையுடன்
பித்துப் பிடித்தவனொருவன் அம்பலப்படுத்துகிறான்
ஒரு கல் தட்டப்படுகிறது
அதனுடன் ஒப்பிடுகையில்
தண்ணீரும் புற்களும்
எமது துயரங்களின்
விகாரமான வடிவங்களைக் காட்டுகின்றன
'நாம் ஏன் பிறந்திருக்கிறோம்?' என
திரும்பவும் கேட்க மாட்டேன்
அப்படிக் கேட்பதன் மூலம்
கற்களின் வரலாற்றின் பின்னாலிருக்கும்a
ளபளப்பான வார்த்தைகளின் மீது
சோர்வுகளை ஊற்ற முடியாது
எளிமையாகவும் பிரகாசமாகவும் இருப்போம்
எனவே யன்னலிலிருந்து உனது
பார்வையைத் திருப்பும்போதெல்லாமோர்
பாடலின் வடிவம் கொள்ளும் யன்னல்
எனது ஆகாயம் அதன் நீல நிலையிழந்து
வெறிச்சோடிப் போகும் அக் கணத்தில்
எனது பிறப்பின் காரணத்தை நான்
இவ்விதத்தில் கற்றுக்கொள்ளக் கூடும்
ஆனால் அது சாத்தியமில்லை
எமது இரவுக்குரிய நிலவின்
மகிழ்ச்சிகரமானதான மெல்லிசை
இல்லாத நிலையில்
சாலையோரத்தில்
யன்னலும் காணாமல் போகும்
எனது தேர்ச்சியற்ற பயணங்களின் போது
வளைந்து சோர்ந்த கற்களோடும்
இருண்ட வார்த்தைகளோடும்
நானும் தனியாக வளர்வேன்
நானொரு ஒலியை செவிமடுக்கிறேன்
பித்துப்பிடித்தவனொருவன் தொடர்ந்தும்
எமது சிந்தனைகளில் அடித்துக் கொண்டிருக்கிறான்
உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து
2. குடை
மழை பெய்து கொண்டிருக்கிறது
துளை விழுந்த குடையொன்றுடன்
தெருவைக் கடக்கிறேன் நான்
சிவப்பு விளக்குக்குப் பின்னால்
எனது நெற்றி வரிகளின் மீது கவனத்தைச் செலுத்தும்
ஒரு பெண்ணின் பச்சை நிறப் பார்வை
மழை வடிவம் கொண்டு
இந்தத் தெருவில் கரையக்கூடியது
தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது மழை
என்னிடமில்லை அந்தக் குடை இப்பொழுது
அந்தப் பெண்ணின் கரங்களில்
அதோ எனது குடை
கவிஞர் மஹ்மூத் ஃபலாகி (கவிஞர் பற்றிய குறிப்பு)
ஈரான் தேசத்து கஸ்பியன் கடற்பிரதேசத்தை அண்டிய நகரமொன்றில் 1951 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் மஹ்மூத் ஃபலாகி, தனது ஆரம்பக் கல்வியை ஈரானில் கற்றதோடு பட்டப்படிப்பை ஜேர்மனியில் பூர்த்தி செய்துள்ளார். மன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அவரது ஆட்சிக்கெதிரான அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்ததன் காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கவிஞர் மஹ்மூத் ஃபலாகி, மூன்று வருடங்களின் பிறகு, 1979 ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதோடு, தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து ஈரானின் திறந்த பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த இவர், புதிய ஆட்சியில் கவிதைகள் எழுதுவது தடை செய்யப்பட்டு, கவிஞர்களுக்கு ஆபத்தான சூழல் உருவானதால், நாட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, 1986 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது பாரசீக மொழி மற்றும் இலக்கியங்கள் சம்பந்தமான விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், கவிதைகள், நாவல், புனைவு, விமர்சனங்கள் என எழுதி, இதுவரையில் கிட்டத்தட்ட 19 தொகுப்புக்களை பாரசீக மற்றும் ஜேர்மன் மொழிகளில் வெளியிட்டிருக்கிறார். இவரது கவிதைகள் இதுவரையில் ஆங்கிலம், ஸ்வீடிஷ் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன
.இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.