- 'அஞ்சலி' (இலங்கை) சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' நல்லதொரு சிறுகதை. நெடுந்தீவில் வாழும் மீனவர்களைப்பற்றிய கதை. அவர்களுக்கிடையில் நிலவும் உட்பிரிவுகள், அதனாலேற்படும் வறட்டுக் கெளரவப்பிரச்சினைகள், கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்தும் இருப்பிடப் பிரச்சினைகள் , தொழிலாளர் & முதலாளி முரண்பாடுகள் , கூளக்கடாய்ப் பறவை, இராவணன் மீசை, கத்தாளைச் செடிகள் என எனப் பலவற்றை விபரிக்கும் மண் வாசனை மிகுந்த சிறுகதை. - பதிவுகள் -
பனங்கூடலுக்கு மேற்புறமாக ஒரு நாரை பறந்து வந்தது. அந்த நாரையின் இறக்கைக்கள் மெதுவாகவே அசைந்ததில், அது களைப்படைந்திருக்கிறதென்பதும் விரைவில் எங்காவது ஒரு பனை மரத்தில் இறங்கித் தரிக்கும் என்பதும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது.
பனங்காணி கடற்கரையில் மணல் புட்டி ஒன்றில் நின்று அந்த நாரையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அருளப்பன்.
“என்ன மச்சான் ஆகாயத்தை பார்த்துக் கொண்டு நிற்கிறாய்..."
“இல்ல, ஒரு கூளக் கிடாய் பறந்து போகுது அங்காரன்...”
“இப்பதான் இந்தியாப் பக்கம் கிடந்து பறந்திருக்கிறார்...
எங்கவண்டாலும் பனை வட்டில குந்துவார்...இல்லையே மச்சான்...”
“உம்...”
“மச்சான் வாடா...வாடி முதலாளியின்ர துவக்கை கேட்டா தருவார் வேண்டிக் கொண்டு போய் வெடி வைப்போம்...இப்ப எங்கயும் ஒரு பனை வட்டில குந்துவார்...”
“கறுமம்...நான் வரவில்லை...நீ போறதண்டா போ....” “நீ போனாப் போதும் மச்சான்...”
“இந்தச் சந்தியாபோனா எப்படியும் சுடுவான், பங்கு வேணுமண்டா வா...” “சந்தியா வானத்தை மீண்டும் ஆராய்ந்தான், நாரை மெல்லக் கீழே இறங்கி மாயனத்திற்கு அண்மையில் நின்ற ஒற்றை பனைமரமொன்றில் அமர்ந்தது"
“குந்தீற்றார்... .” கத்தியபடி வாடியை நோக்கி ஓடினான் சந்தியா. அவனது கால்களுள் பட்டு நசுங்கும் இளம் கோரைப் புற்களை பச்சா தாபத்துடன் பார்த்துப் பெரு மூச்சு விட்டான் அருளப்பு.
** ** **
கோடை காலத்தில் மணற் கிணத்தடி, மாரி காலத்தில் பனங்காணி என்று மாறி மாறி மூட்டை முடிச்சுக்களுடன் நெடுந்தீவில் கிழக்கும் மேற்குமாக இடம்பெயரும் நாடோடி வாழ்க்கைதான் மீனவர்களது வாழ்க்கை. காற்று மாறும் பருவங்களில் அவர்கள் காற்றொதுக்கான கரைகளை நாடி இடம் பெயருவார்கள்.
கோடை காலத்தில் வெறிச்சோடிப் போய்க் கரடு முரடான கற்பாறைகளும், வரண்ட மணல் வெளியும், காய்ந்து போன இராவணன் மீசைச் செடிகளும், கருகிய கத்தாளைகளுமே சொந்தம் கொண்டாடும் அந்த வரண்ட கடற்கரை வெளியில், மாரி காலம் கண்ணுக்கினிய பசியகோரைப் புற் கம்பளத்தைப் பரப்பி வைக்கும். பூத்துக் குலுங்கும் வெடி வேலன் பூண்டுகளையும் காவோதிச் செடிகளையும் விட சிவந்த மொட்டுக்களையும் பூக்களையும் தாங்கிய தண்டுகளை நீட்டிய படி அணிவகுத்திருக்கும் கத்தாளைகளே யாரையும் பரவசம் அடையச் செய்பவை.
அந்த மாரிகாலத்துக் காலைப் பொழுதுகளில் திடீரென ஒரு நாள் சாரி சாரியாகக் கிடுகுகளும் பனம் சலாகைகளும் ஏற்றப்பட்ட வண்டிகள் அந்த மணல் வெளிக்கு வந்து சேரும். தொடர்ந்து அங்குமிங்குமாகக் கொட்டில்களும் மீன் வாடிகளும் அமைக்கப் பட்டு ஒரு சுறுசுறுப்பான கிராமம் உருவாக்கப்பட்டுவிடும்.
கட்டுமரங்கள் ஒவ்வொன்றாக அந்தக் கரையில் அடைக்கப்பட்டுக் கொட்டில்களுகுப் பெண்களும் குடிவந்து விட்ட பின்னர் அங்கு ஒரு பூரணத்துவம் பெற்ற ஒரு கிராமத்தை எவரும் உணர்வார்கள்.
அருளப்பனைப் பொறுத்த வரையில் இதுதான் அவன் ஒரு தொழிலாளியாக பனங்காணியில் குடிவந்த முதல் மாரிகாலம். இதற்கு முன்னர் பனங்காணியில் இருந்து நான்கு மைல் களுக்கப்பால் வெல்லை கடற்கரையில் அவன் அதிகார மிடுக்குடன் தலை நிமிர்ந்து நடந்திருக்கின்றான். அங்கு தொழில் செய்வதற்காக மாரிகாலங்களில் தங்கும் மீனவர்கள் யாழ்பாணக் குடா நாட்டில் இருந்து வருபவர்கள். பெரும்பாலான மீனவர்களது சொந்த இடம் காங்கேசன் துறைக்கு அண்மையில் உள்ள மயிலிட்டி கிராமமாகும். அவர்களிடம் இயந்திர வள்ளங்கள் இருந்தன. அருளப்பன் அந்த அழகான வெல்லைக் கடற்கரையையும் அங்கே கிடைக்கக் கூடிய வசதிகளையும் கற்பனை செய்து பார்த்தான்.
சென்ற வருடம் இதே மாதத்து மாலை வேளைகளில் அவன் எத்தனை மகிழ்ச்சியோடு இருந்தான். அவனது தந்தையாரது இரண்டு மீன் பிடி வள்ளங்களும் ஒழுங்காகப் பராமரிக்கப் படுகின்றதா என்பதை மேற்பார்வை செய்வதும், வெல்லைக் கரை ஓரங்களில் சாரி சாரியாக மேச்சலுக்காக வரும் குதிரைகளை வேடிக்கை பார்ப்பதும் கடுதாசிக் கூட்டம் விளையாடுவதும்தான் அவனது வாழ்க்கையாக இருந்தது. எனினும் மிகுந்த வைராக்கியத்துடன் அந்த சொகுசான வாழ்க்கையைத் துறந்த அருளப்பன் தன்னந் தனியனாக ஒரு கார்த்திகை மாதத்து மாலை பொழுதில் பனங்காணியை நோக்கிக் கடற்கரை ஓரமாக நடந்து வந்தான்.
அருளப்பனுக்குத் தனது தந்தையாரது கடைசி வார்த்தைகள் இப்பொழுதுதான் கேட்டதுபோல் தெளிவாக ஞாபகத்தில் இருந்தது.
“யாக்கோப்பன் உன்னைக் காப்பாற்றினதுக்கு வேணுமெண்டா காசு தாறேன் குடு. பெட்ட பிள்ளைத்தாச்சி யெண்டா எங்கிட வள்ளத்தில் வேலை செய்யிற ஒருத்தனுக்கு பேசி முடிச்சு வைக்கலாம். நாங்கள் மேல் நோக்கிக் கரையார்... கீழ்சாதிக் கரையாரோட எங்களுக்கு என்ன சம்மந்தம்...?”
** ** **
மீன்பிடித் தொழிலாளர்களது சக்திக்குச் சவால் விடுவதைப் போலக் கடல் ஒவென்று இரைந்து கொண்டிருந்தது, அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் பல தொழிலாளர்கள் பகுதி பகுதியாகச் சிதறிக் கிடந்த கட்டுமரத்தின் உதிரிகளை மிகுந்த பிரயத்தனத்துடன் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
கடல் பலமாக இரைந்தது.
“ அப்பா இஞ்சாருங்க இஞ்சால ஒருக்கா வந்திட்டு போங்களன் ...இஞ்சாருங்க .. ...”
கடல் இரைந்த போதும் திரேசம்மாவின் குரலை அருளப்பன் எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொண்டான். முன்பு அவனைக் கூப்பிடுவதென்றால் திரேசம்மாவுக்குச் சங்கடம். குழந்தை பிறந்த பிறகு அப்பா அப்பா என்று அடிக்கடி தனது கணவனைக் குரல் வைத்து கூப்பிடுவதில் அவளுக்கு ஒரு இனம் புரியாத ஆர்வம்!
“அப்பா இஞ்சாருங்க...”
அருளப்பன் வேண்டா வெறுப்பாகத் திரும்பினான்.
இனியும் அவன் அமைதியைத் தேடித் தனித்து நிற்கமுடியாது. இன்னொரு மனித்தப் பிறவியின் ஒவ்வொரு கண வாழ்வின் சுக துக்கங்களிலும் தட்டிக் கழிக்க முடியாத பங்கை ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவன்.
“பாவம் தகப்பன் செத்த பிறகு சரியா உடைஞ்சு போனாள்" முணு முணுத்தபடி தனது குடிசையை நோக்கி நடந்தான்.
“பிள்ளை தேடுது நீங்கள் குளிர் காத்துக்கிள் நிண்டுகொண்டு, வாங்க உள்ளுக்கு. உங்களுக்கு தேத்தண்ணியை வைச்சுப் போட்டு கத்தவும் வேண்டியிருக்குது" அருளம்மா கோபித்துக் கொண்டாள்.
அருளப்பனுக்குச் சிரிக்க வேண்டும் போலத் தோன்றியது. குளிர் காற்றுக் கடல் அவனது போர்க்களம், அவன் அங்கு கதாநாயகன், குளிர் காற்று அவனை என்ன செய்துவிடும்?
சென்ற வருடம் கார்த்திகை மாதத்திற்கு முன்னம் ஒரு வேளை அவன் குளிர் காற்றுக்குச் சற்று நடுங்கி இருக்கலாம்.
அவன் தன்னுடைய வசதிமிக்க வாழ்க்கையைத் துறந்து கால் நடையாகப் பனங்காணியை நோக்கி நடந்த போது பணம் அவனுடன் கூடி வரவில்லை. அவனுடைய மனிதப் பண்புகளும் இயல்புகளும் மட்டும் அவனிடத்தில் உரிமை பாரட்டிக்கொண்டன.
மறுநாள் காலை யாக்கோப்பின் கொட்டிலில் தடபுடலில்லாமல் ஒரு வாழ்க்கைக் கதை ஆரம்பமானது. அந்த சின்னஞ்சிறு குடிசையின் நான்கு கிடுகுத் தட்டிகளுக்கு நடுவில் ஐந்தாறு பேர் சம்பிரதாயத்துக்காகக் கூடினர். அவர்களது சாட்சியத்துடன் சோறு கொடுக்கும் 'ஏழைகளது திருமணச் சடங்கு' நிறைவேறியது. குடும்பப் பொக்கிஷங்களுடன் பாத்துகாப்பில் இருந்த அழகிய பீங்கான் கோப்பையில் அழகப்பனுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு பரிமாறும் போது திரேசம்மா வெட்கப்பட்டாள். சக தொழிலாளி சந்தியாவுக்கு வாய் துருதுருத்தது.
“சரி...சரி மாப்பிள்ள இப்ப சோத்தத்தான் சாப்பிடவேணும் சோத்தப் பாருங்க "
வெளியே கடலின் இரைச்சலையும் மீறி அந்த சிறிய குடிசையில் இருந்து பலத்த சிரிப்பொலி பரவி ஒய்ந்தது. அருளப்பனுக்கு அவையாவுமே சற்று முன் நிகழ்ந்த சம்பவம் போல இருந்த்தது.
“என்ன காலம் அவன் முதலாளி சொன்னதுக்கா இப்படி பிரமசத்தி பிடிச்சதுபோல இருக்கிறியள் அறுவாருக்கு கடவுள் காட்டும் "
திரேசம்மா கோபமாகப் பேசினாள். எப்பொழுதும் அல்லல் பட்டு ஆற்றாது அழுவதற்கு முன்னம் அவளுக்குச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எவர் மீதும் கோபம் வரும்.
குப்புறப் படுத்திருந்த கைக் குழந்தை கால்களை நிலத்தில் அடித்துத் தனது பாஷையில் அருளப்பனை வரவேற்றது.
“சீ சனியன் எங்காவது வெள்ளாள வீடுகளில் பிறக்காமல் ஏன் ஒரு கரையாரை வீட்டில பிறந்திருக்கு...” அருளப்பனது கண்களில் இருந்து பொல பொலவெனக் கண்ணீர் வடிந்தது.
திரேசம்மா பதறிப்போய்விட்டாள்.
“ஐயா சோமால மாதாவே இந்த மனிசனுக்கு என்ன பிடிச்சது... சல்லறிஞ்சியாரே நான் இனி எங்கே போய் ஆறுவேன்... ”
** ** **
திரேசம்மாவும் அழத்தொடங்கி விட்டாள்.முன்பு பல தடவைகள் மாரி காலத்தில் நெடுந்தீவுக்கு வந்திருந்த அருளப்பனுக்கு அந்த கோடை காலத்தில் எதிர்பாராதவிதமாக நெடுந்தீவுக் கரையில் இறங்க நேரிட்டது. இயந்திரக் கோளாறினால் நடுக்கடலில் தத்தளித்த அருளப்பனது வள்ளத்தை கடல் நீரோட்டம் மேற்குப் புறமாகத் தள்ளியது. அந்த கோடை காலத்து மாலை நேரத்தில் யாக்கோப்பின் கட்டு மரம் அவனது இயந்திர வள்ளத்தை மீட்டிருக்காவிட்டால் அருளப்பனின் கதையே முடிந்து விட்டிருக்கலாம். அல்லது முன்போரு முறை அவனது உறவுக்காரர்களுக்கு நிகழ்ந்தது போல ஒரிசாக் கரைகளில் ஒதுக்கப் பட்டிருக்கலாம்.
வள்ளத்தில் அருளப்பனைத் தவிர நான்கு பேர் இருந்தார்கள். யாக்கோப்பின் கட்டுமரம் அவர்களது வள்ளத்தை அண்மிய போது ஒருவனுக்கு சுய நினைவு இருக்கவிலலை.
கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கட்டுமரத்தில் வள்ளத்தைப் பிணைத்திழுப்பது ஆபத்தான முயற்சி தங்களை மட்டும் மீட்டால் போது மென அருளப்பன் வாதாடியபோதும் யாக்கோப்பு கட்டுமரத்தில் வள்ளத்தைப் பிணைத்து கட்டுமரத்தில் பாயை விரித்து விட்டான்.
சாதகமில்லாத காற்றில்லும் கூட ஒரளவுக்கு வெற்றிகரமாகத் தனது இலக்கு நோக்கி முன்னேறிய அந்தக் கிழவனையும் அவனுடன் கட்டுமரம் வலித்த தொழிலாள்ர்களையும் அருளப்பு தனது வள்ளத்தில் இருந்த படியே மனதார வணங்கினான். பாயைச் சுருட்டி விட்டு கைகளால் வலிக்கவேண்டிய கட்டம் வந்தபோது அருளப்பு மீண்டும் தங்களை மட்டும் மீட்டால் போதுமென்று கத்தியதை அந்த வீரக் கிழவன் பொருட்படுத்தவில்லை.
நெடுந்தீவின் வடக்குக் கரையில் இருந்த அவர்களது குடியிருப்பை வள்ளம் அண்மியபோது யாக்கோப்பு சிங்கநாதமெடுத்து பாடத்தொடங்கி விட்டான். ஆம் அவனுக்கு அத்தனை வெற்றிப் பெருமிதம், யாக்கோப்பின் கட்டுமரம் வலித்தவர்களும் சேர்ந்து பாடினார்கள். அருளப்பன் வள்ளத்தின் முன் அணியத்தில் ஏறிநின்று பின் பாட்டுப் பாடினான்.
அன்றிரவு யாக்கோப்பின் வீட்டில் விருந்துண்ட போது அருளப்பன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இளமையின் ஆசைகளா அல்லது நன்றிக் கடன் செய்ய விரும்பும் வெறியா அந்தத் தீர்மானத்துக்கு வரச்செய்தது என்பதை யார் சொல்ல முடியும்.
மறுநாள் காலை யாக்கோப்பின் தந்தியைக் கண்டு ஏழு எட்டு இயந்திர வள்ளங்களில் அவனது தந்தையாரும் நண்பர்களும் வந்து குவிந்து விட்டார்கள். எல்லோரையும் யாக்கோப் உற்சாகமாக வரவேற்றான்.
வள்ளங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின.
திரும்பிச் செல்ல வள்ளத்தில் ஏற முன்னர் அருளப்பு ஞாபகமாக யாக்கோப்பின் குடிசைப் பக்கம் திரும்பிப் பார்த்தான். முற்றத்தில் நின்ற திரேசம்மா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தனது கைகளை அசைத்தாள். அருளப்புவுக்குப் பிரிவை விட தனது தந்தையார் யாக்கோப்பின் வீட்டில் தேனீர் வழங்கிய போது சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக் கழித்து விட்டதுதான் பெரும்கவலையைக் கொடுத்தது.
** ** **
“எல்லோரும் மீன் பிடிக்கின்றம் பிறகு எங்களுக்கிள் ஒரு மேல்சாதியும் கீழ் சாதியும்... ..விசருகள்...”
“இந்தாங்க தேத்தண்ணி ஆறப்போகுது ...அப்பா....கூப்பிடுறன்...”
“உம் ...”
“தேத்தண்ணியைக் குடிச்சுப் போட்டு கோப்பையைத் தாங்க. பிள்ளைக்கு மாக்கரைக்க வேணும். சும்மா தெருவில போறவன் வாறவன்ர கதைகளுக்கெல்லாம் யோசிச்சுக் கொண்டிருந்தா வாழ ஏலுமே...”
அருளப்பன் வேண்டா வெறுப்பாகத் தேனீரை அருந்தினான்.
“சீனி ஓரெப்பன் கூடிப் போச்சுது இந்தா பிள்ளை நித்திரையாகப் போகுது மாவைக் கரைகிறதெண்டாக் கரை...”
திரேசா எட்டி சுண்டுக்கோப்பையை வாங்கினாள்.
“அவன் ஆரோ சொன்ன கதைக்கு ஏன் இப்பிடி மண்டையை உடைக்கிறியள், அவன் முதலாளியெண்டால் எங்களுக்கு என்ன ராசாவே... சும்மா கிடவுங்க...”
“என்ர பிள்ளை நல்ல இலக்கணதில ஸ்ராறோட பிறந்திருக்குது" எண்டு சாத்திரக்காறன் சொன்னதைச் சொல்ல அவன் "அப்ப நல்லா மீன் பிடிப்பான் போல கிடக்கிது.” எண்டு சொல்லிறதெண்டால் எவ்வளவு தடிப்பு அவனுக்கு இருக்கவேணும். அதோட எண்டாலும் பறுவாயில்ல... கூட நிண்ட பயல்கள் சிரிச்ச சிரிப்பு... அதுகளை அவன் சரிசமனா மதிக்கிறவனே ...பண்டி நாய்கள்.”
அருளப்புவுக்குக் கண்ணில் நீர் மல்கியபோது கிழக்குப் பக்கமாகத் துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டது.
“கூழக்கிடாய் சுட்டுப் போட்டான் ...”
“ஆர் "
“சந்தியா...”
அதன் பின்னர் நெடுநேரம் அருளப்பு மௌனமாக இருந்தான். திரேசம்மா குழந்தைக்குப் பால் கொடுத்து நித்திரையாக்கிவிட்டு வெளியே வந்தவள் நடுங்க்கிப் போனாள்.
“அப்பா இதென்ன சண்டை...”
அருளப்பு வெளியே வந்தான். வாடியில் பெற்றோமாக்ஸ் விளக்கு கொளுத்தப்பட்டிருந்தது. அங்கே பலர்கூடி நின்றார்கள். கடல் இரைந்து கொண்டிருந்ததில் ஒன்றும் கேட்காவிட்டாலும் யாரோ வாய்ச் சண்டை போடுகின்றார்கள் என்பது புலப்பட்டது.
யாரோ வாடிபக்கம் இருந்து வந்தார்கள். அந்த மைமல் இருட்டில் அருளப்புவுக்கு வந்த ஆளை அடையாளம் தெரியவில்லை.
“யார் அது...”
“ஏன் நான் தான் ...”
“ஆர் அந்தோனி அண்ணனே, என்னண்ண வாடியில சத்தம்.”
“ஏதோ கூழக் கிடாய் சுட்டவனாம் சந்தியா அவனோட வாடியில வேலை செய்யிற கந்தப்புவும் போனதாம். முதலாளி முழு நாரையையும் தனக்கு வேணும் எண்டாராக்கும். அதுதான் கந்தப்புவும் சந்தியாவும் ஒண்டாச் சேர்ந்து முதலாளியோட இளுபறிப்பட்டுக்கொண்டு நிக்கிறாங்க " அந்தோனி அப்பால் போய் விட்டான்.
அருளப்புவுக்கு உடல் ஒருமுறை புல்லரித்தது.
“ஆரடா அவன் முதலாளி காட்டொருக்கா அவனை"
அருளப்பு தனது காலில் இடறிய கட்டை ஒன்றைத் தூக்கிக் கொண்டு தன்னை மறந்து ஓடினான்.
நன்றி: அஞ்சலி (இலங்கை) - 1971 ஆகஸ்ட்