பஸ் வந்து நின்றது. இந்த பஸ்ஸில் ஏறுவதா விடுவதா என்பதுதான் இவரது பிரச்சினை. இது இவர் போகவேண்டிய பஸ்தான். ஆமர்வீதிச் சந்தியிலிருந்து தெகிவளை வரை போகவேண்டும். அதற்கான சில பஸ்கள் ஏற்கனவே வந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போய்விட்டன. இவர் எதிலும் ஏறவில்லை. பஸ்ஸில் நெருக்கடிகூட இல்லை. இவர் குழம்பிப் போய் நின்றார். இப்போது வந்து நிற்கிற இந்த பஸ்ஸில் ஏறுவதா வேண்டாமா?
சனிக்கிழமையாதலால் மதியம் ஒருமணியுடன் வேலை நேரம் முடிந்து விட்டது. பசி வயிற்றைப் பிடுங்கியது. ஏனைய நாட்களில் மனைவி அதிகாலையிலேயே சமைத்து ஸ்கூலுக்குப் போகும் பிள்ளைகளுக்கும் கொடுத்து> இவருக்கும் சாப்பாட்டுப் பார்சலைத் தந்துவிடுவாள். சனிக்கிழமைகளில் அதிகாலைச் சமையலுக்கு ஓய்வு. வீட்டுக்குப் போய்ச் சேர இரண்டு இரண்டரைக்கு மேலாகிவிடும். அங்கு இங்கு என்று நிற்காமல் விறு விறுவென பஸ் நிறுத்;தம்வரை நடந்தார்.
வெயில் தலையைச் சுட்டெரித்தது. இவருக்குத் தலைமுடி குறைவு. தலையைத் தொட்டு தடவிக்கொண்டு நடந்து வந்தார். தெரிந்தவர்கள் ஓரிருவர் தென்பட்டாலும் நிற்காது அவர்களுக்கு ஒரு முகஸ்துதிச் சிரிப்பை மட்டும் காட்டிக்கொண்டு வந்தார். இந்தவிதமான சிரிப்பு அவரிடம் எப்போதும் ரெடியாக இருக்கும்.
எல்லோருக்கும் அவசரம். தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ யாராயிருந்தாலும் வீதியின் இரு மருங்கும் ஏதோ ஒரு வேகத்தில் போய்க்கொண்டேயிருந்தார்கள். வாகனங்கள் என்றால் அதைவிட மோசம். அவை யாரையும் பொருட்படுத்தாமல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக ஓடிக் கொண்டிருந்தன. அவர்கள் அவற்றையும் பொருட்படுத்தாமல் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வீதிக்குக் குறுக்காகப் போகிறார்கள். என்ன அவசரமென்றாலும் இவர் மஞ்சள் கோடு போட்டிருக்கும் இடத்தில் நின்று பார்த்து வாகனங்களற்ற வேளையிற்தான் வீதியைக் கடந்து மறுபக்கம் போவார். அப்படி எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுள்ள மனுசன்தான் இவர். இன்றைக்கு ஏன் இப்படி…?
பஸ் நிறுத்தத்துக்கு வந்து பேஸைக் கையிலெடுத்தபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. என்ன தேவையேற்பட்டாலும் பஸ்ஸிற்குரிய காசை வேறாக வைத்திருப்பார். இன்று அந்த வழக்கம் தவறிவிட்டது. பேஸில் பத்து ரூபா மட்டும் இருந்தது. தெகிவளைவரை போவதற்கு இது போதாது.
இந்த நிலைமைக்கு அந்தப் பெண்தான் காரணமோ?
பத்து மணிபோல வேலைத்தலத்திலிருந்து வெளியே வந்து கடையில் தேநீர் அருந்திவிட்டு வெற்றிலையைச் சப்பிக்கொண்டு வீதியோரமாக நின்றார். அப்போதுதான் அவள் வந்தாள். அவள் நடக்கும்போதே மிக அசதியுடன் வருவது தென்பட்டது. சோர்வுடன் இவர் முன்னே வந்து நின்றாள். கைக்குழந்தையையும் காட்டி> தன் வயிற்றையும் தொட்டுக் காட்டி கையேந்தினாள். குழந்தைக்குப் பசி என்று சொல்கிறாளா? அல்லது குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்… தனக்குப் பசி என்று சொல்கிறாளா? மன்றாடுவது போன்ற அவளது கண்கள் இவர் மனதை அசைத்தது. அவளது ஏழ்மையான கோலம் இரக்கத்தைத் தூண்டியது. இவர் தொட்டதற்கெல்லாம் உணர்ச்சி வசப்படுவார். குழந்தை அழுத கண்ணீர் அவனது முகத்திற் காய்ந்து போயிருந்தது. பசியில் அழுதிருப்பானோ? பால்குடி வயதுப்பிள்ளை. பாலூட்டுவதற்கு அவளிடம் எந்த ஊட்டச்சத்தும் இல்லை. அவளது தேகம் ஒட்டி உலர்ந்துபோயிருந்தது. வேளா வேளைக்குச் சாப்பாடு கிடைப்பதில்லைப்போலும். பிள்ளைக்குப் பால்மா பக்கற் ஒன்று வாங்குவதென்றாற் கூட இப்போதுள்ள விலையில் அது அவளுக்கு இயலக்கூடிய காரியமா? நாளொரு பொருழும் பொழுதொரு விலையுமாக போட்டி போட்டு ஏறிக்கொண்டிருக்கின்றன. அவள் என்ன செய்வாள்? பேஸில் முப்பது ரூபா இருந்தது. அதில் இருபதை எடுத்து அவளது கையிற் கொடுத்தார்… முடிஞ்சது அவ்வளவுதான்.
'நல்லாயிருப்பீங்க… சாமி!"
இருபது ரூபாயுடன் சாமி அந்தஸ்து கிடைத்துவிட்டது. ஆனால் அதைக் கொடுக்கும்போதே பஸ்ஸிற்குத் தேவையான காசு பற்றிய உள்ளுணர்வும் இவருக்கு இருந்தது. இன்று சம்பள முற்பணம் கிடைக்குமாகையால் அதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை என எண்ணிக்கொண்டார். அட்வான்ஸ் பத்தாயிரம் ரூபா கேட்டிருந்தார் வேலைத்தலத்தில். சனிக்கிழமை தருவதாக மனேஜர் கூறியிருந்தார்.
ஒரு தனியார் அச்சக நிறுவனத்தில் இவர் பணி புரிகிறார். அங்கு இவர் கிட்டத்தட்ட ஒரு மனேஜர் மாதிரித்தான். இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு சாதாரண வேலையிற் சேர்ந்தவர்… இப்போது அந்த அச்சகத்தை நிர்வகித்து நடத்துகிறார். ஆனால் மனேஜர் என்ற பட்டயத்துடன் இருப்பவர் வேறு ஒருவர்.
காலையில் வேலைக்கு வரும்போதே ஒருவித உற்சாகத்திலிருந்தார். கையிற் காசு கிடைக்கப்போகிறதென்றால் சந்தோஷம்தானே! காசுதான் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறது.
மாதா மாதம் தீர்க்கப்பட வேண்டிய பலசரக்குக்கடைக் கடன் சற்று இழுபடத் தொடங்கிவிட்டது. அந்தக் கடன் அடைபடாததால் கடை இழுத்து மூடப்படவேண்டிய நிலையை எட்டிவிட்டதுபோல கடைக்காரர் வேறொரு முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். அந்த முகம் அடிக்கடி தோன்றி இவரது நெஞ்சு வலியைக் கூட்டுகிறது. கனவிலும் வந்து பயமுறுத்துகிறது. கடையில் உள்ள பொருட்களைப் போலவே கடைக்காரரிடம் பலவிதமான முகங்கள் இருக்கும்போலும். காசைக் கொடுத்தால் சட்டென ஒரு மலர்ந்த முகத்தைக் காட்டுவார். அந்தத் தரிசனத்தைப் பெறுவதற்காக என்றாலும் சீக்கிரம் காசைக் கொடுக்கத்தான் வேண்டும். கடனைக் கழிக்காமல் கடைக் கணக்கைத் தொடருவது முடியாது.
சமையல் வாயு எந்த நேரத்திலும் முடிவடையும் தறுவாயில் உள்ளதாக இரண்டு நாட்களாக எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறாள் மனைவி. முன்னரென்றால் இன்னொரு சிலிண்டர் வாயு வாங்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும். இது முடிந்தவுடன் அது. அது முடிந்தவுடன் இது. எரிவாயுவின் விலை எகிறிப் பாய்ந்துவிட்ட நிலையில் இன்னொரு சிலிண்டர் வாங்கும் வல்லமை இவருக்கு இல்லை. கொழும்பில் தொடர்மாடி வீடுகளில் சமையலுக்கு எரிவாயுவே தஞ்சம் எனக் காலம் தள்ளியவர்களுக்கு வந்த கஷ்;டம் இது.
முப்பதாயிரம் ரூபா சம்பளக்காரர் இவர். “உங்களுக்கென்ன… பெரிய சம்பளம்… நாங்க படுகிற கஷ்;டம் கடவுளுக்குத்தான் தெரியும்!| என குறைந்த சம்பளம் எடுக்கும் சிலர் வேலைத்தலத்தில் இவருடன் குறைப்படுவதுண்டு. பெயருக்குத்தான் அது பெரிய தொகைபோலத் தெரிகிறது என இவர் அலுத்துக்கொள்வார். வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இரண்டாயிரம் ரூபா சம்பளம் கிடைத்தது. அப்போதெல்லாம் மாதாந்தச் செலவுகள் போக கையில் காசு மீதமிருக்கும். இப்போது மாதா மாதம் வீட்டு வாடகை லைட் பில் தண்ணீர் பில் சாப்பாட்டுச் செலவுகள் பாடசாலைச் செலவுகள் அது இது என… மைனஸில் போய்க்கொண்டிருக்கிறது கணக்கு. இதையெல்லாம் எங்கே போய்ச் சரிக்கட்டுவது என்று தெரியவில்லை. எது எப்படியோ அட்வான்ஸ் எடுத்து சில பிரச்சினைகளைச் சமாளிக்கலாம் எனும் ஆறுதலுடன் பன்னிரண்டு மணிவரை காத்திருந்தார்.
மனேஜரிடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் எதையும் காணவில்லை. காசைக் கைவிடும் விஷயம் என்றால் மனேஜருக்கு இந்த மறதி வருத்தம் வந்துவிடும். ஏதாவது அலுவலாகப் போவதுபோல அடிக்கடி அவருக்கு முன்னே பிரசன்னம் செய்தார் இவர். எந்த யுக்தியும் பலனளிக்கவில்லை. அதற்கு மேலும் பொறுமை காக்கும் திறமை இன்றி ஒரு தீர்மானத்துடன் மனேஜர் முன் போய் நின்றார். இவர் எதற்காக வந்து நிற்கிறார் என்று மனேஜருக்கு புரியவில்லையாம்! புதினமாகப் பார்ப்பதுபோலக் கேட்டார்:
'என்ன விஷயம்…?"
'அட்வான்ஸ்…" எப்படியாவது ஒரு முடிவு காணவேண்டும்.. எனும் தீர்மானத்துடன் மனேஜர் முன் வந்தவருக்கு… தொடங்கிய வார்த்தையைத் தொடர முடியவில்லை.. முடிக்கவும் முடியவில்லை.
'இன்றைக்கு இல்ல… திங்கட்கிழமை பார்க்கலாம்!"
இவர் விக்கித்துப்போனார். தனது வீட்டு நிலைமைகளை மனதை உருக்கும் விதமாக மனேஜருக்கு எடுத்துக் கூறினார். அதையெல்லாம் அவர் அனுதாபத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவரது முகம் சோகமாகக்கூட மாறியது. ‘சரிவரும் போலிருக்கிறது’ எனத் தெம்படைத்தார் இவர். ஆனால் வந்தது அதே பதில்தான்.
'திங்கட்கிழமை எப்படியும் எடுக்கலாம்… அதுவரைக்கும் கொஞ்சம் அஜஸ்ட் பண்ணுங்க!"
எப்படி அஜஸ்ட் பண்ணுவது? காலையில் பொருட்கள் வாங்கும்போது பெரிய மனிதத் தோரணையுடன் கடைக்காரரிடம் கூறிவிட்டு வந்திருந்தார்: ‘கணக்கை கூட்டி வையுங்க… ஈவினிங் வந்து செற்றில் பண்ணுறன்!" – அட்வான்ஸ் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது. கடைக்காரர் கணக்கைக் கூட்டிவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பார். இவர் பொய்க்காரன் ஆகப்போகிறார். காலையில் பொருட்கள் வாங்குவதற்காக சும்மா கணக்கு விட்டதாக கடைக்காரர் நினைக்கக்கூடும். என்ன வெட்கக்கேடு இது?
ஒருபோதும் வார்த்தை தவற விரும்பாதவர் இவர். சிலவேளைகளில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாது சந்தர்ப்பங்கள் சதி செய்துவிடுகின்றன. இந்த முகத்துடன் எப்படி இன்று கடைக்குப் போவது? திங்கட்கிழமை வரை அந்தப் பக்கமே போகாமல் விட்டுவிடலாமோ?
‘சரி கடைப்பக்கம் போகாமல் விட்டுவிடலாம்.. சமையல்வாயு முடிந்துவிட்டால் என்ன செய்வது? மனைவிக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே! கடைக்காரரின் முகமாவது கனவில் வந்து பயமுறுத்துகிறது. இந்த முகத்துக்கு நிஜத்திலேயே எதிர்கொண்டு தப்பவேண்டுமே?’
இது போன்ற மனக்குழப்பங்கள் பஸ்ஸிற்குக் காசு தேவையென்பதையே மறக்கடித்துவிட்டது.
இப்போது வருகிற பஸ்களையெல்லாம் போக விட்டுப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். இப்படியே நின்றால் எப்போது வீட்டுக்குப் போய்ச் சேர்வது?
வேலைத்தலத்திலிருக்கும்போது சற்றேனும் இந்த நினைவு தோன்றவில்லையே என மனம் மீண்டும் மீண்டும் அலட்டிக்கொண்டிருந்தது. கூட வேலை செய்பவர்கள் யாரிடமாவது மாறிக்கொண்டு வந்திருக்கலாம். இனி அதுபற்றி யோசித்தும் பலனில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் யாராவது இந்தப் பக்கம் வரமாட்டார்களா என நோட்டம் விட்டார். வந்தால் அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம்.. உண்மையான நிலைமையை எடுத்துக் கூறவேண்டியதுதான். இப்படி மறதி யாருக்கும் ஏற்படுவது சகஜம்தானே? அதற்கும் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டு நிற்பது? இவருக்கு அலுத்துப் போய்விட்டது. தேவையற்ற வேளைகளில் யாரையாவது தற்செயலாகக் காண நேரிடுவதுண்டு. சிலர் பேசப் பிடித்தால் விடமாட்டார்கள். பஸ்களெல்லாம் வந்து போகிறதே… நின்று மினைக்கெடுத்துகிறாரே என்று சங்கடமாயிருக்கும். இப்போது ஒருவரையும் காணோம்!
அக்கம் பக்கம் பார்த்தார். பஸ்ஸிற்காக வந்து நிற்பவர்கள் யாரிடமாவது கதை கொடுத்துப் பார்ப்போமா என்றுகூடத் தோன்றியது இவருக்கு. மறுகணமே அந்த எண்ணத்தைக் கேவலமாக உணர்ந்தார். பஸ் நிறுத்தத்தில் வந்துநின்று முன் பின் தெரியாதவர்களிடம் கையேந்துவதா? அவர்கள் அதை எப்படிக் கணிப்பார்கள்?
இதுபோல எப்போதாவது சிலர் வந்து இவரிடம் பணம் கேட்டிருக்கிறார்கள். பக்கத்தில் வந்து முகத்தைப் பார்த்தபடி பேசாமல் நிற்பார்கள். ‘யார் இது’ எனத் திரும்பிப் பார்த்தால் இவரது காதுக்குள் மெல்லக் கேட்பார்கள்…
‘பஸ்சுக்குக் காசில்ல… ப்ளீஸ்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!’ பத்து ரூபாயோ இருபது ரூபாயோ தரும்படி கேட்பார்கள். அப்போது அவர்களைப் பார்த்து எரிச்சலடைந்திருக்கிறார். ‘ஆளைப் பார்த்தால் நல்ல கிளீன் சேர்ட்… உடுப்புடன் நிக்கிறான். இது என்ன வெட்கம் கெட்ட பிழைப்பு? குடிக்கிறதுக்குக் கேட்கிறான் போலிருக்கு… இப்படி எத்தனை பேரிட்டைப் போய்க் கேட்பானோ!’ - இப்போது அவர்களை நினைக்கக் கவலையாயிருந்தது. அவர்களுக்கும் என்ன என்ன நிலைமைகள் நேர்ந்திருக்குமோ?
இப்போது தனக்கு நேர்ந்திருக்கும் நிலைமையை யாரிடம் சொல்லி அழுவது என சொல்வதறியாது செய்வதறியாது நின்றார். வீட்டில் போய்ச் சொன்னால் மனைவியிடம் நல்ல மங்களம் கிடைக்கும்… ‘பொம்பிளையளெண்டால் மனசு இளகியிடும்!... அவளொருத்தி கேட்டாளாம்… இவர் இருபது ரூபாயைத் தூக்கி கொடுத்தாராம்!’ - ஐயையோ… இதையெல்லாம் வீட்டில் போய்ச் சொல்லக்கூடாது.
எப்படியோ வீட்டுக்குப் போய்ச் சேரவேண்டும்… அதற்கு ஒரு வழி காணவேண்டுமே என மூளையைப் போட்டுக் குமைந்தார். அன்றாடம் பஸ்ஸில் பயணம் செய்பவராகையால் அந்த ரூட்டில் வரும் சில கண்டக்டர்களின் முக ஞாபகம் உள்ளது. அவர்களும் தன்னை ஞாபகம் வைத்திருக்கக்கூடும். அவர்களிடம் விஷயத்தைக் கூறிச் சரணடைந்துவிட்டால் என்ன? மிகுதிக் காசை அடுத்தமுறை பஸ்ஸிற்கு வரும்போது தருவதாகக் கூறலாம். அந்த எண்ணமும் வந்த வேகத்திலேயே அடிபட்டுப் போனது. பஸ்ஸில் ஏறி கண்டக்டருக்கு எப்படி விளக்கமளிப்பது? அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வாரோ? மற்றவர்கள் முன்னிலையில் என்ன சொல்வாரோ… - ‘என்னய்யா பெரிய ஆளா இருக்கிறீங்க… பஸ்ஸில் வந்து கடன் கேக்கிறீங்க!’ எனக் கேட்டுவிட்டால்? பஸ்ஸில் இருப்பவர்களெல்லாம் திரும்பி வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் பார்வைகளில் ஒரு வினோதமான மனிதனைப்போலக் கூசிக்கொண்டு நிற்கவேண்டும். வேண்டாம் அந்தக் கூத்து!
அப்போ…? இப்படியே எவ்வளவு நேரம்தான் நிற்பது? ஏதாவது தடாலடி முடிவு எடுக்கவேண்டியதுதான் - பஸ்ஸில் ஏறிவிடுவோம்! கையிலிருக்கும் காசை கொடுத்துவிட்டுப் பேசாமல் அமர்ந்துவிடவேண்டியது. கண்டக்டர் என்ன கவனிக்கவாபோகிறார்?
எல்லாம் சரி! ஏறலாம்… போகலாம் என்று முடிவெடுத்தாயிற்று. ஆனால் பஸ்கள் வரும்போது கால்கள் சற்று நடுக்கமெடுத்துப் பின்வாங்கின. பஸ்ஸிலுள்ள கண்டக்டர் இவர் வழக்கமாக இறங்கும் இடம் தெரிந்தவராக இருந்தால். பத்து ரூபாயை மட்டும் கொடுக்க மிகுதி எங்கே என்று கேட்கமாட்டாரா? அதற்கு என்ன செய்வது?
இந்த நேரத்தில் இவருக்கு குறுக்கு மூளை நன்றாக வேலை செய்யத் தொடங்கியிருந்தது – சன நெருக்கடியான பஸ்ஸில் ஏறினால் சனத்தோடு சனமாக மறைந்து போய்ச் சேர்ந்துவிடலாம்! எனினும் பஸ்ஸில் ஏறும்போது கால்கள் ஒத்துழைக்காதோ எனும் தயக்கம் இருந்தது. கற்பனையில்... காற்றில் ஒத்திகை செய்து பார்த்தார். பஸ்ஸில் எப்படி ஏறுவது… படிகளில் எப்படி கால் பதித்து நுழைவது…
ஓடுகிற பஸ் ஓடி சன நெருக்கமுள்ள பஸ் வரும்வரை காத்திருந்தார். அப்படியான ஒரு பஸ் வரவேண்டுமென தனது இஷ்;ட தெயவத்தையும் வேண்டினார். என்ன அதிசயம்! அந்த வேண்டுதல் உடனே பலித்தது. ஆட்கள் வாசலால் நுழைய முடியாத நெருக்கத்துடன் ஒரு பஸ் வந்து நின்றது. இப்படிக் கேட்டதுமே பலன் கிடைக்குமெனத் தெரிந்திருந்தால் தெய்வத்திடம் கொஞ்சக் காசு கேட்டிருக்கலாமே!
பஸ் வந்து நின்றதும் ஏற்கனவே மேற்கொண்ட ஒத்திகைகளெல்லாம் மறந்து போயின. இவர் அவசரப்பட்டார். பதைபதப்பில் ஆட்கள் இறங்குவதற்கு முன் ஏறி அவர்களுடன் இடிபட்டு… மீண்டும் கீழே தள்ளப்பட்டார். விழுந்துபோகாத குறையாக தடுமாறிக்கொண்டு நின்றார்.
'பஹின்ட இடதென்ட.." (இறங்க இடம் குடுங்க!) – கண்டக்டர் கத்தினார்.
'இக்மன் கறன்ட! நகின்ட… நகின்ட…" (கெதிபண்ணுங்க… ஏறுங்க! ஏறுங்க!)
இவருக்குப் பின்னால் நின்றவர்கள் தள்ளிக்கொண்டு இவருக்கு முன்னால் ஏறினார்கள். எனினும் இம்முறை இவர் மிகவும் எச்சரிக்கையுடன் வலதுகாலை எடுத்துவைத்து பஸ்ஸில் ஏறினார்.
'இசறாட்ட என்ட!" (முன்னுக்கு வாங்க) – கண்டக்டரின் கத்தல். ஆனால் அது இவருக்குக் கேட்கவே இல்லையாம்! பின் பக்கமாகவே நின்றுகொண்டார். அடுத்த நிறுத்தத்தில் பக்கத்து சீட்டிலிருந்து ஒருவர் இறங்க… அந்த இருக்கையில் முந்திக்கொண்டு அமர்ந்தார். ‘கடவுள் கொஞ்சம் அருள் புரிகிறார் போலிருக்கிறது… எந்த வில்லங்கமும் இல்லாமல் போய்விடலாம்’ - மனதைத் திடப்படுத்தினார். 'ரிக்கட்…! ரிக்கட்…!" என்ற கண்டக்டரின் சத்தம் மட்டும் நெஞ்சில் இடித்துக்கொண்டிருந்தது. சனங்களுக்கு ஊடாக நுழைந்து நுழைந்து ஒவ்வொருவராக ரிக்கட் காசைச் சேகரித்துக்கொண்டு வந்தார் கண்டக்டர்.
இவருடைய முறை வந்ததும் கையில் எடுத்து ஆயத்தமாக வைத்திருந்த பத்து ரூபாயை நீட்டினார். காசைக் கொடுத்துவிட்டுக் கண்டக்டரைப் பார்த்தும் பாராமலும் கையாலேயே ‘சரி’ என்பது போலச் சைகை செய்தார். அதாவது இவர் போகவேண்டிய இடத்துக்குப் பத்து ரூபா சரியாக இருக்குமாம். போகும் இடம் எது என்று இவரும் சொல்லவில்லை. அவரும் கேட்கவில்லை. இவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்பதுபோல அப்பால் போய்விட்டார் கண்டக்டர்.
சற்று ஆசுவாசம் ஏற்பட்டது. எனினும் நிம்மதியாக இருக்க முடியவில்லை இவருக்கு. நெஞ்சில் படபடப்பு. தவறு செய்கிறோமே எனும் குற்ற உணர்வு. வேறு என்னதான் செய்வது என்ற எதிர்க் கேள்வியும் எழுந்தது மனதில். அது சரி இந்த பஸ்ஸில் போகிற எல்லோரும் ரிக்கட் எடுத்துக் கொண்டுதான் பயணம் செய்கிறார்களா… என்ன?
சரியோ… தவறோ… இனி அதைப் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம். ரிலாக்ஸ் ஆக இருப்போம் எனக் கண்களை மெல்ல மூடினார். தியானம் செய்கிறாரா அல்லது உறங்குகிறாரா என்று சொல்லமுடியாத நிலை. இதுவும் ஒரு வழிக்கு நல்லதுதான். உறங்கிக்கொண்டே தெகிவளை வரை போய்ச் சேர்ந்துவிடலாம்;. ஆனால் கண்டக்டரின் சத்தம் இவருக்குக் கண்களை மூடிக்கொண்டிருக்கக்கூடிய அமைதியைக் கொடுக்கவில்லை. 'ரிக்கட்… ரிக்கட்…! ரிக்கட்…! ரிக்…கட்!"
சிலர் ரிக்கட் எடுக்காமல் பயணம் செய்து எப்போதாவது பிடிபட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் போகும் இடத்துக்குரிய சரியான கட்டணத்தைக் கொடுக்காமலும் மாட்டுப்பட்டிருக்கிறார்கள். பஸ்ஸில் பயணிக்கும் வேளைகளில் ஏற்கனவே இப்படி சில சம்பவங்களைக் கண்டிருக்கிறார். பிடிபட்டால் அவ்வளவுதான் - கண்டக்டரின் மட்டு மரியாதையில்லாத ஏச்சைக் கேட்க வேண்டிவரும். பஸ்ஸிலுள்ள அனைவரின் பார்வைகளும் அந்தப் பக்கம் திரும்பும். சிலர் நிலைமையைச் சமாளிக்க எதிர்த்துச் சண்டை பிடிப்பார்கள் – ‘நான் காசு தந்திட்டன்… மறந்திட்டாயா?’ என சத்தமிட்டு அடிபிடிக்கும் போய் விடுவார்கள். கடவுளே… இதெல்லாம் இந்த நேரத்திலா நினைவுக்கு வரவேண்டும்?
இந்த நேரத்தில் இவருக்கு கடைக்காரரும் நினைவில் வந்தார். கடன்களும் நினைவில் வந்தன. இன்று கடைப்பக்கம் போகாவிட்டால் அதை அவர் எப்படிக் கணக்கெடுப்பாரோ?
இவர் தன்னை மிகவும் சிறுமையாக உணர்ந்தார். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பார்கள்… இப்போது இவருக்குப் பசியே மறந்து போனது. வீட்டு நினைவு வந்தது. பிள்ளைகள் நினைவில் வந்ததும் சொல்லிவைத்ததுபோல கண்கள் பனித்துக் கலங்கியது. பிள்ளைகள் வெளியே புறப்படும் வேளைகளிலெல்லாம் ‘பஸ்சுக்குக் காசு கொண்டுபோறீங்களா?’ எனத் திரும்பத் திரும்ப நினைவு படுத்துவார்கள். இப்போது தனது பரிதாபகரமான நிலை அவர்களுக்குத் தெரியவருமா? பஸ் யன்னலூடு தூசிபட்டதுபோலப் பாவனை செய்து கலங்கும் கண்களைத் துடைத்தார்.
ஒருவித கவலை இவரது மனதை அலைக்களித்தது. பஸ் ஓட ஓட… ஓடி ஓடி வேலை செய்யும் கண்டக்டரைக் காணும்போது இன்னும் உறுத்தல்கள் - அல்லது உதறல்.
பஸ் ஒவ்வொரு நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டதும் கண்டக்டர் வாசலுக்கு ஓடிச்சென்று பஸ் போகும் ரூட்டிலுள்ள ஒவ்வொரு இடங்களின் பெயர்களையும் சொல்லிச் சொல்லிக் கத்துகிறார். பpன்னர் அதே வேகத்திலேயே உள்ளே உள்ளவர்களிடம் ரிக்கட்டுக்குரிய காசைச் சேகரிக்கிறார். சில இடங்களில் பஸ் நிறுத்துப்பட்டதும் கீழே இறங்கி நின்று சத்தமிட்டுக் கத்துகிறார் - இது அன்றாடம் பஸ்ஸில் அவர் காண்கிற காட்சிதான். அப்போதெல்லாம் இதைப் பொருட்படுத்தியதில்லை. கண்டும் காணாமல் இருந்திருக்கிறார். ஆனால் அது இப்போது வித்தியாசமாக மனதைத் தொட்டது. எந்தக் கண்டக்டராயிருந்தாலும் இதை ஒரு கடமையைப்போலச் செய்கிறார்கள். இப்படி நாள் முழுவதும் கத்திக் கத்தியே அலுத்துப் போகமாட்டார்களா? எப்படியாவது இன்னும் ஓரிருவரையாவது ஏற்றிவிட முடியாதா என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு. ஒவ்வொருவராக சில்லறை சில்லறையாகச் சேர்த்துத்தான் அவர்கள் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. இவர்களை ஏமாற்றுவது சரிதானா?
நகரமண்டப நிறுத்தத்தில் பலர் பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இன்னும் ஆட்களை ஏற்றுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் பொறுமை இழந்து முணுமுணுத்தார்கள். சிலர் ட்றைவருடன் சினப்பட்டார்கள். ட்றைவர் பஸ்சை எடுக்க… கண்டக்டர் கீழே நின்றவாறே ‘இன்னும் கொஞ்சம் நிற்போம்’ என்பது போலக் கையைக் காட்டினார். ஒருவர் யன்னலூடு எட்டி கண்டக்டரை ஏசினார். இவர் எல்லாவற்றையும் நோட்டமிட்டுக்கொண்டு பேசாமலிருந்தார் - பஸ் புறப்பட்டது.
பஸ்ஸில் இறங்கி ஏறுபவர்களைக் கவனித்துக்கொண்டே கண்டக்டர் தன் கையிலுள்ள காசை எண்ணி எண்ணிப் பார்த்தார். சில்லறைகளை உள்ளங்கையில் அடுக்கினார். இன்னொரு முறை எண்ணினார். இதில் இவர்களது ஒருநாள் சம்பாத்தியம் எவ்வளவாக இருக்கும்? கண்டக்டரைப் பார்க்கப் பாவமாயிருந்தது. இவருக்கு இருப்புக்கொள்ள முடியவில்லை.
வெளியே பார்வையைச் செலுத்தினார். பத்து ரூபாய் அனேகமாக இந்த இடம்வரை சரியாக இருக்கும். இருக்கையை விட்டு எழுந்தார்.
‘பெல்’லை அடித்ததும் அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றது. இவர் இறங்குவதைக் கவனித்த கண்டக்டர் கிட்ட ஓடிவந்தார்.
'மஹத்தயா… தெகிவளைக்குத்தானே… போறது? எதுக்கு இங்கேயே இறங்கிறது?"
இவருக்கு வியப்பாயிருந்தது. படியில் நின்றவாறே மேலே பார்த்தார். ஏற்கனவே இவரது முகம் கண்டக்டருக்கு நினைவிருக்கிறது… கண்டக்டரின் பெருந்தன்மையை நன்றியுடன் நோக்கினார். ‘சரி… அவர் தான் சொல்லிவிட்டாரே… திரும்ப ஏறிவிடுவோமா?’ என மனது சற்றுத் தழும்பியது.
ஒரு சிறு தழும்பல்தான்.
'இல்ல… இந்த இடத்தில வேற ஒரு அலுவலாய்ப் போறன்!" எனக் கூறிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கினார். சுட்டெரிக்கும் வெயிலை துச்சமென மதித்துக்கொண்டு தலையை நிமிர்த்தி நடக்கத் தொடங்கினார்.
000
(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது - 2008)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.