- எழுத்தாளர் அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அவர் நினைவாக அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைந்த அகஸ்தியரின் சிறுகதை 'வட்டி' அவர் நினைவாகப்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -
‘தாரு வூட்டில? கதவைப் பூட்டிக்கிட்டிருக்கீங்கலே, எந்திரிச்சு வெளியே வாங்கலேன்?’
பாத்திமாதான் வந்து கரிக்கிறாள். காலங் காத்தால வேறு யார் இப்படி வருவது?
‘நான் கூப்புட்டுக்கிட்டே இருக்கேன். ஓத்தரும் பேசாம அப்புடியே அமுங்கிப் பேயித்திருக்கீங்கலே. அது என்னில தாண்டியம்மா குத்தம்...நான் சும்மா இரிக்கிய ஏலாம எண்ணிக் குடுத்துப்போட்டு இப்ப நாயா அலஞ்சு திரியிறனல்ல..? வூடு தேடியாந்து கூப்பிட்டாக்கா வந்து ஏனென்னும் கேட்கிறதாக் காங்கலியே? ஏய், தாரு வீட்டில, எந்திரிக்சு வெளியால வாங்கலேன்...’
பலகைக் கதவு திறபடுகிறது, வீட்டுப்பெண் மொட்டாக்குடன் வெளியே வந்தாள்.
‘ஏன்ரியும்மா இம்மட்டு நேரமா உள்ளுக்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க. செல்லம் பொழிஞ்சிக்கிட்டிருந்தீங்கலா?’
‘கோவிச்சசுக்காதையுங்க ராத்தா. புள்ளைங்கள வூட்டுல உட்டுட்டுக் கக்கூசுக்குப் பேயித்திற்று இப்பதான் வந்தன்’
பாத்திமாவுக்கு மனசு கொஞ்சம் இளகிற்று. ஆனாலும், அதுவே பின் கொதித்து வேறு உருவெடுத்துச் சாடியது.
‘ஏன். ‘அதெ’ இன்னும் கொண்ணாந்து குடுக்காம இரிக்கீங்க, எத்தனை தரமா அதுக்காவ நடக்கிறது?’
‘வரோணாம் ராத்தா, நான் கொண்ணாந்து ‘அதே’ தர்றன்’
‘ அ .. பேச்சை நம்;பிக்கிட்டுப் போறன். கொண்ணாந்து தரேல்லான்னாக்கா, பொறவு ... சள்ளு கிள்ளு வைச்சிராதை’
‘பிறகு என்ன நடக்கும் பார்’ என்ற ஒரு ‘கடும் எச்சரிக்கை’ தொனிக்கக் கூறிவிட்டுப் பாத்திமா அதே அலுவலாக அடுத்த தோட்டத்துக்கு விரைந்தாள்.
‘தாரு வூட்டில?’
‘ஏன் தாரு கூப்பிடுறது?’
‘ஏன்ரியாத்தே. என்னயத் தெரிஞ்சுக்கலியா?’
‘அஹே, பாத்திமா ராத்தாவுங்கலா? அ உல்லுக்க வாங்கலேன்’
‘வரது கிடக்கட்டும், ‘அதெ’ நேரங்காத்தால தந்துட்டீன்னா நானு ஏன் இப்ப காகமாட்டம் கத்தி அலைஞ்சு சாகிறன்?’
அவ செய்த உபசரிப்பு, இவ காரியக் கண்ணால் புகைகிறது. எப்படியோ வந்த ‘விஷயம்’ முடிந்து விட்டது. ஆனால், அதிலே கொஞ்சம் பிசகு தட்டவே உடனே கேட்கிறா:
‘எஹே, போன மாசத்தில வேங்கினதுக்கு வட்டி எவ்வனவுன்னு செல்லியிருந்தனில்லையா? அப்புடீன்னா இப்ப ஏன் இதில குறையுது?’
‘ஒரு மாதிரிப் பாத்து வேங்கிக்க ராத்தா. இப்ப ரொம்பக் கஷ்டமாயிரிக்கி... எங்க உம்மாட வாப்பா மவுத்தாயி பதினைஞ்சு நாளாவேல, இப்ப கையில ஒரு சல்லி இல்ல... மக்க மாசம் பாப்பம்...’
‘அப்ப ஒன்னு செஞ்சுங்கலேன்?’
‘என்னது?’
‘கஷ்டப்படாம ரொக்கத்தை அப்பிடியே தந்துட்டா எல்லாம் தீந்து போவுமே. அப்படிச் செஞ்சுங்களேன்...?’
அது கிழிஞ்சுது போ. அவளால் வட்டியே கொடுக்க முடியவில்லை. அவள் கேட்கிற ரொக்கத்தை எப்படித் திருப்புவது? இருந்தும் என்னவோ பாத்திமா அந்த இடத்தை விட்டு நகரும்போது ‘வாங்கிய திருப்தி’யோடுதான் நடந்தாள். ஏன்ன மாயப் பொடியைப் போட்டாளோ?
தோட்டங்கள் மீண்டு வீதி ஏறும்போது, பொழுது ஏறமுன்னம் உப்பிடியே அவ மைமூனையும் பேயித்திட்டுப் பாப்பம்’ என்ற ஒரு எண்ணம் பாத்திமாவுக்கு. ‘ஆனா, மைமூன் ஆக நொந்து பேயித்திருக்கா. பேயித்திட்ட வர வெயிலும் தலைக்கி ஏறி வந்திரும்... ஆனமட்ட நாளக் காத்தால வருவம்’ எனத் தன்னுள் சொல்லிக் கொண்டு திரும்பி விட்டாள்.
மைமூனிடம் இன்றைக்கு இல்லாத ‘அது’ நாளைக்கு எங்கிருந்து வந்து குவியப்போகிறதோ? எல்லாம் அந்தப் பாத்திமாவுக்குத் தான் வெளிச்சம். ஆனால், மைமூன் தன் குடிலுக்குள்ளே இப்போ முந்திய மைமூனாகவுமில்லை. தாயின் முலைகளைப் பலம் சேர்த்து இழுத்து, சூப்பிக் கடித்துச் சினந்து அழுகிறது மைமூனின் குழந்தை. அது நன்னிக் கடித்த கடி அவளுக்கு வலுவாக நொந்துவிட்டது.
‘க்சூ, ஊ சீ, மூதேசி சனியன் கிரவம்’
குழந்தையை ‘வெடுக்’கென்று இழுத்தாள். குழந்தை வீரிட்டுக் கத்திற்று. பசியின் தவிப்பு. பாலில்லாத ஏமாற்றம், தாயினிழுப்பால் எழுந்த ரோசம்... அது தாய் முகம் பார்த்துக் கேவிக் கேவி அழுதது.
‘ஹே அல்லாஹ்...அவரெ இன்னிக்கென்னாச்சும் உழைக்கச் செய்யி. எத்தினி நாளைக்கி நாம இந்தக் கஷ்டம் படரது?’
பொல பொலத்துக் கண்ணீர் உகுத்தது. கந்தல் புடவையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். அதிலே படர்ந்த அழுக்கு அவள் முகத்தில் அப்பிக்கொண்டது.
‘உம்மா, ஏம்மா அழுவுரே?’
உலக விந்தையைத் தெரியாத பரீத்தா, தனது அம்மாவைப் பார்த்து ஒரு ஏக்கத்தோடு கேட்டாள்.
‘ஒண்ணுமில்லைக் கண்ணு, நான் அழேல்லம்மா. போயி வாப்பா வர்றாரான்னு வெளியே நின்னு பாரும்மா’
‘வாப்பா எங்கம்மா பூட்டாரு?’
‘வேலைக்குப் போயித்தாரு’
‘நேத்திக்கு வாப்பா வூட்டில இந்திரிச்சே?’
‘அது நேத்திக்கி’
‘வேலை செஞ்சாக்கா சோறு கிடைக்குமில்லே?’
‘ஓ, கிடைக்கும்’
பரீத்தா தன் சின்ன முகம் சுழித்துச் சிரித்துக்கொண்டாள். ஆனாலும் அது உடனே சுண்டிக் கறுத்துவிட்டது.
‘அப்ப இன்னிக் காத்தால குடுத்தி இம்மட்டு நேரமா ஏம்மா எங்களுக்குச் சோறு திங்கத் தரேல்ல?’
‘ஐயோ, நாம் பெந்த குஞ்சுங்கலே!’
இடி இடித்த கேள்வி. எரிமலை வெடித்த மாதிரி அவள் தாய் நெஞ்சு கமறியது. முகம் வெளிறிற்று. கண்ணீர் ‘பொடுக்’கிட்டது. வாயிப் பேச்சு நாவில் எழவில்லை.
‘உம்மா, ஏம்மா அழுவுரே?’
பதில் இல்லை. அசைவற்ற பார்வை. குழந்தை தாயை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. அதன் கண்களும் கலங்கின. அப்போது அவள் குழந்தையை இழுத்து இறுக அணைத்துக் கொண்டாள்.
ஹாபரில் அரிசி மூட்டை தூக்குவது தொட்டு புகையிரத ஸ்தானங்களில் பெட்டிகள் சுமப்பது வரை எத்தனையொ பல ரகத் தொழில்களைச் செய்து பழகியவன் ஆப்தீன்.
ஆப்தீன் புறக்கோட்டையில் ‘ஜந்திர மனிதன்’. அபதீன் நாட்டாமை ஒரு மூட்டைக்கு மேல் இன்னொன்றையும் தூக்கிப் போட்டுக்கொண்டே விண்கூவி நடக்கிற ஒரு சடலம் என்பது புறக்கோட்டைக் கூலிகள் அத்தனைக்கும் தெரியும்.
அந்தச் சடலம் இன்று இந்த அறையில் கிடந்து இருமிக்கொண்டிருக்கிறது.
மரப்பலகைகளாலான கூரைக் குடிசைக்குத் தகரச்சீப்புகள் சுவர்களாய் அலங்கரித்துக் கொண்டிருந்தன. உள்ளே ஒழுங்கு பண்ணிய ஒரு எட்டடிக் காம்பரா. பலகைக்கூரையைத் தொட்டு இறக்கிச் சரிக்கட்டிய பக்கூஸ் பலகைகள் குசினிக்கு மறைப்பாகக் கிடக்கின்றன. அறைக்கு முன்னால் மறைப்பே இல்லாத ஒரு சிறு ஸ்தோப்பு. தெருவோரமாக மல ஜல வாடை நாறிக்கொண்டிருக்கும் ஒரு முனிசிப்பல் கக்கூஸ். அதை அண்டித் தண்ணீர் வராத கறள் ‘பைப்’புகள். அடுத்து ஒரு குப்பைத் தொட்டி.
வெளியே தலைநீட்டி ஸ்தோப்புக்கு வந்த ஆப்தீனை இருமல் கொக்காக வளைத்துக் கொண்டிருந்தது.
மைமூன் அழுதாள்.
‘ஏன் நீனு அழுவுரே? பாத்திமா ராத்தா கிட்ட நூறு ரூபாக் காசு ‘கைமாத்தா’க் கேளு’
காசு கேட்கிற குறி அறிந்தாலே, ‘என்ன ஏதும் சல்லி கில்லி ஊணுமா?’ என்று பாத்திமா கொடுத்து உதவுகிற சீதக்காதி வாரிசு அல்ல. இவவிடம் அது நூற்றுக்குப் பத்து வட்டி. அதற்கு மேல் கொடுத்தால் வீதம் எட்டு. காலப்பாடு அறிந்து சில வேளை இது பதினைந்தாக ஏறுவதுண்டு, வேளைப் பிசகு வந்து கையில் ‘கடிக்கிற’ போது எதிர்பாராமல் இதுவே திடீரென்றும் மாறும். இந்தச் சங்கதி தெரியாதவர்கள் அந்தத் தோட்டங்களிலே கிடையாது.
புறக்கோட்டை வட்டாரத்தின் முக்காற் பங்குத் தோட்டங்களுக்கும் பாத்திமாவே ‘உரிமை’க்காரி. பத்தைப் பதினைந்தாக்கி, அதை இருபதாக்கி- கன்றைப் பார்;க்க விட்டுப் பசுவில் பால் கறக்கிறக் கலைப்பணியில் தேடிய தோட்டங்கள் அவை.
எனவே, ‘கைமாத்தாக’ வாங்குவது கல்லில் நார் உரிக்கிற பிரயத்தனம் என்று மைமூனுக்குத் தெரியும்.
அவள் எழுந்து பாத்திமாவிடம் சென்றாள்.
போனவள் சொற்ப நேரத்தில் திரும்பிவிட்டாள். முகத்தில் ஒரே சோர்வு.
‘என்ன போனதும் திரும்பி வந்துட்டியே?’
‘அவுங்க ‘கைமாத்தா’ குடுக்க மாட்டீன்னாங்க. ‘வட்டி’ன்னாக்கா, அதுவும் அரை மாச வட்டியையும் முதல்ல எடுத்துட்டுத்தான் தருவாங்களாம்’
‘அதின்னாச்சும் காரியமில்லை. பிள்ளையிங்க பசியால துடிக்கி. வாங்கியா உழைச்சித் தீத்திருவம்’
பிள்ளைகளின் எக்கல் வயிறுகளைப் பார்த்து இந்தப் பெற்ற வயிறு தகித்துக் கொண்டது. துக்கம் நெஞ்சிலடைக்க எழுந்து போனவள் அந்தி பிந்தித்தான் திரும்பினாள்.
‘இம்மட்டு நேரமா என்ன செஞ்சனி? பிள்ளையங்க வவுத்தைப் புடிச்சிக் கத்திண்டிரிக்கி’
‘நான் என்ன செஞ்சிரது? அவ சொகுசுக்காரி. என்னியக் காத்திருக்கச் செஞ்சிட்டாங்க...?’
புகைந்து கொண்டு ஒன்பது பத்து ரூபாய் நோட்டுக்களை வெளியே எடுத்தாள்.
தொண்ணூறென்றால் நூறு என்று கணிப்பு.
‘உம்மா வவுத்தப் பசிக்குதம்மா’
தாயைக்கண்ட குஞ்சுகள் கத்தின.
அவள் குசினிக்குள் விரைந்தாள். ஆப்தீன் கண்கள் அப்போது அவளைப் பார்த்துப் பரிதவித்தன. அவன் கண்களில் கண்ணீர் கண்ணாடி கட்டிற்று.
‘ஏன் வாப்பா அழுவுரே?’
‘இல்லேம்மா, நான் அழேல்லம்மா’
பொய் சொன்ன வாயை அடக்கிக் கொண்டே பீறி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
அப்போது ‘பைப்’ படிப் பக்கம் வழக்மாகச் சச்சரவுப் பட்டுக் கொள்ளும் பெண்களின் காரசாரப் பேச்சுக்கள் புதிய ரூபமெடுத்து ஆப்தீன் காதில் விழுந்தன.
‘எம்மட்டு நேரமா நான் வாளியக் கொண்ணாந்து வச்சிரிக்கேன். நீம இப்ப வந்திரிச்சி எனக்கு முன்னாடி ஏந்திட வந்திட்டியே?’
‘அ... எடி ஆத்தே. அவுக வாயப் பாத்தீங்கலா? இம்மட்டுப் பெரியவ என்னமாய்ப் பேசிரா. எடுன்னா எடுத்திரிச்சிப் பேயித்திருவனே’
‘உம்மாடியோ. நா பெரிய பொண்ணு இவங்கமட்டும் சின்னக் குழந்தை. ‘கொளு கொளு’ன்னு நாம்பனைத் தேடுற மாடாட்டமா வளந்திட்டு என்னியப் பாத்து இப்பிடிக் கேக்கிராவே?’
‘அங்... எடிய வாய வளத்துக்காதே. வளத்தீன்னா, வாயைப் புடிச்சிக் கிலிச்சிருவன்’
‘என்னாது கிலிச்சிருவாமல்ல, கிலிச்சி... எங்கடி கிலியடி பாப்பம். ரோசமின்னா வாங்கடி வந்து கிலியன்ரி. என்னியத் தெரியுமல்ல...? ஒன்ர ‘குரு குரு’ப்பைப் பாத்திமா ராத்தாக்கிட்டச் செல்லி அடக்கி வைக்கிரன்...’
‘பாத்திமாவும் நீனும் பேயித்திட்டு அல்லாகிட்ட ‘துவா’க் கேளுங்கடி அல்லா பேரைச் சொல்லித்தான் அவுங்க வட்டிக்கு வட்டி வேங்கி ஏலைங்கலப் புழியுறா. ஆப்தீன் நானா அவவுக்குக் குடுத்த சல்லிக்காவ இப்ப அவரு உசிரை வேங்கிக்கிட்டிரிக்கா தெரியுமல்ல. எங்க மார்க்கத்தில ‘வட்டி வேங்கினவுங்க, ஏலையிங்க கோடிக்கயும் நிற்க யோக்கியமில்லே’ன்னு செல்லியிரிக்சே, அப்புடிக்கொத்த பத்திமாவச் செல்லி என்னயப் பயப்புளுத்திரியே’
‘ஆப்தீன் காக்காடது நல்லா இனிச்சுக்கிட்டுது. அதுதான் இவ அவருக்காவ உசிரிய வுட்டுப் பேசிரா’
‘ஆ! என்னங்கடி சொன்னனீ? நீங்க உங்க வலக்கத்தைத்தான் செல்வீங்கடி. ‘நானா நானா’ன்னு நானாகூட நீங்கதான்ரி படுப்பீக. ஏலிய நாயிங்கல், சீ...’
அறுதியாக வந்த பிரயோகங்கள் ஆப்தீன் நெஞ்சை வலுவாக இடித்தன.
ஏலைகலுக்குத்தான் எலையிங்கட கயிட்டம் தெரியும். அதான் அவ எனக்காவப் பேசி, தான் கெட்ட போர் வேங்கிற்றுப் போறா’ என்று தன்னுன்ளே பெருமூச்சு விட்டான் ஆப்தீன்.
‘வூட்டில தாரு இரிக்கிய?’
அடுப்பின் புகைமூடத்தால் வீங்கிய கண்களைத் துடைத்தபடி. மைமூன் தலையை நீட்டி வெளியே பார்த்தாள்.
வெண் துகிலால் மொட்டாக்கிட்ட அதிரூபவதியாக எதிரில் வந்து நின்றாள் பாத்திமா.
மைமூன் நெஞ்சு ‘திடுக்’கிட்டு இடித்தது, உடல் தீய்ந்து கொண்டது.
‘அதெ’ நேரங் காலத்தோட கொண்ணாந்து குடுக்காம என்னிய நடக்க வச்சிரிக்கீங்கலே. ஆவத்தில உதவினாக்கா உப்பிடித்தான் எல்லாரும் செஞ்சிறீங்க, இது நன்னாயிருக்கா?’
‘நன்னாயில்லத்தான்’ என்று மைமூனின் தலை ஒரு கணம் ஆடியது.
கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.
‘கோவிச்சசுக்கோணாம் ராத்தா. பொறவு கொண்ணாந்து தாரேன்’
‘மறுக்காலும் என்னிய நடக்க வச்சிராதையுங்க. நான் பேயித்திட்டு வர்ரேன்’
‘பாத்திமா வாத்துமாதிரி அரக்கி அரக்கி நடந்தாள். மைமூன் இவள் போகும் வழியை விழி உறுத்திப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் கண்களில் நீர் மல்கிற்று.
‘உம்மா, ஏம்மா அழுவுரே?’
‘உம்மா, பேசும்மா, ஏம்மா அழுதுகிட்டிரிக்கே?’
அவர்கள் மீண்டும் துருவித் துருவிக் கேட்டார்கள். ஆனால், அவள் வாய் அசையவில்லை. நூறு ரூபாயில் தொட்ட காசு வட்டியும் முதலுமாக நாநூறுக்கு மேல் வந்துவிட்டது. குழந்தைகளுக்கு கடும் பசி. காய்ந்த உதடுகளைக் கடித்துச் சூப்பிக் கொண்டார்கள். அடுத்த குடிசைகளில் அவர்கள் கண்கள் விழுந்தன.
உம்மா ‘காம்பரா’ வில் போர்தபடி கிடக்கிறாள்.
தங்களுக்கு இன்று சோறு கிடையாது என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்து விட்டது.
அதை நினைக்க உடல்கள் தகித்தன. குப்பைத் தொட்டிகளில் ‘ஏதும் நல்லது கிடைக்குமா?’ என்று தடவி எதையோ பொறுக்கி எடுத்துத் தின்றார்கள்.
அப்போது இருள் சூழ்ந்து விட்டது.
டாக்டர் சமீமிடம் போன அவர்களின் வாப்பா இன்னும் வரவில்லை.
குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டுத் தடவிய அவர்கள் கரங்களில் எதுவும் கிட்டவில்லை. கைகளைச் சூப்பிக்கொண்டு குடிசையைத் தேடி நடந்தார்கள். விளக்கு எரியவில்லை.
‘உம்மா என்ன செஞ்சிரா?’
உம்மாவைப் பார்த்தால் அவ போர்த்துக்கொண்டு படுத்திருப்பது தெரிகிறது.
‘உம்மா பாவம், உம்மாவுக்குப் பசி, அவவை எழுப்ப வேணாம்’ என்று ஒருவருக்கொருவர் தமக்குள் நினைத்துக்கொண்டே, உம்மாவுக்குப் பக்கத்தில் போய் இருந்துவிட்டார்கள்.
பாப்பம்மாவைக் காணவில்லை.
‘பாப்பம்மா அங்கால வூட்டுக்குப் போயித்திருப்பா’
அக்கா பரீத்தா, ‘ஏ, பாப்பம்மா’ என்று குரல் கொடுத்தாள்.
சத்தம் இல்லை. முழுசிக்கொண்டு நெஞ்சில் பீடித்த பயத்தோடு வெளியே வந்;தாள். வெளியில் ஒரே இருட்டு.
அப்போது வாப்பா விரைந்து குடிசைக்குள்ளே நுழைந்தார். அங்கே ஒரே இருட்டாயிருக்கிறது.
குப்பி விளக்கை எடுத்துக் கொளுத்தினான்.
மைமூன் கரங்கள் குழந்தைகளைத் தாவி அணைத்துக் கிடப்பதை, மங்கிய விளக்கொளியில் விழி குத்திப் பார்த்தான்.
அவன் சடலம் மின்சாரத்தால் கிடுக்கி அடிபட்ட புறாவாக விழுந்தது.
குழந்தைகள் ஒன்றும் புரியாமல் கீச்சிட்டு அழத் தொடங்கினார்கள்.
அப்போது குப்பைத் தொட்டியிலிருந்து பரீத்தா குரலிடும் ஒலி அவன் காதைக் கிழித்தது.
‘வாப்போ எங்க பாப்பம்மா தொட்டிக்க வுழுந்து மவுத்தாயி...’
ஆப்தீன் நெஞ்சிலடித்து ‘ஓ’ வென்று பெருங் குரல் வைத்துக் கதறினான்:
‘உம்மா எங்கல வுட்டு நீனும் பேயித்திட்டியே! உம்மா பரீத்தா.... உங்க உம்மாவும் மவுத்தாயி...!’
‘அய்யோ எங்க உம்மா... எங்களய வுட்டு ... எங்க உம்மா....’
குழந்தைகளைக் கட்டி ஆப்தீன் ஓலமிட்டழுத குரல் தோட்டங்களடங்கக் கேட்டது.
அந்த அழுகுரல் பாத்திமா ராத்தாவுக்கும் நன்றாகக் கேட்டது.
‘விஷயம்’ தெரிந்து விட்டது.
வந்த வழியில் தரித்துவிட்டாள்.
‘இப்ப நாம போனா, எல்லாரும் என்னியப் பாத்துக் கறுமுவாங்க’
அப்போது பாத்திமாவின் நெஞ்சில் பெருமூச்சு அருக்கட்டிற்று.
‘வட்டிதான் பேயித்திரிச்சி, காரியமில்ல. ஆனா, அவ மவுத்தாயிட்டா, இப்ப எம் முதலுமல்ல பேயித்திட்டுது. அந்த முதல் இனி ஆரிட்ட வேங்கிக்கிரது?’
பாத்திமா கண்களில் கண்ணீர் துருத்திற்று.
திரும்பி நடந்தாள்.