காலையில் வழக்கம்போலக் கத்திரிச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சத் தொடங்கினேன். பாம்பு தலையை அசைத்தசைத்து வருவதுபோல தண்ணீர் வாய்க்காலில் வந்துகொண்டிருந்தது. கால்களை எடுத்து வைக்கும்பொழுது “க்ளக்“ எனக் கவ்விப் பிடித்தது. தண்ணீரை இன்னொரு பாத்திக்கு மாற்றியதும் ஏதோ ஓடியது போன்ற அரவம் கேட்டது. சற்று விலகிக் குனிந்து கண்களைக் கூர்ந்து பார்த்தேன். ஒரு அடிமரத்துடன் பதுங்கிக் கொண்டு… முயல்குட்டி!
இவ்வளவு சிறிய குட்டியாக நான் இதற்கு முன் முயலைக் கண்டதில்லை. நண்பன் தில்லையின் வீட்டில் முயல் வளர்க்கிறார்கள். கொழு கொழு எனத் திரட்சியாகப் பெருத்து வளர்ந்த முயல்கள் கம்பிவலையால் அடைக்கப்பட்ட கூட்டுக்குள் விடப்பட்டிருக்கும். கட்டித் தொங்கவிடப்பட்ட இலை குழைகளை எவ்வித லயிப்பும் இல்லாமல் அவை கடிக்கும். அண்மையிற் போய் வலையினூடகப் பார்த்தால்கூடச் சற்றும் வெருட்சியடையாமல் குழையை நறுக்கித் தின்றுகொண்டிருக்கும்.
அந்த முயல்களைப்போல பால் வெள்ளையாகவோ கறுப்பாகவோ இல்லாமல் இந்த குட்டி மண்நிறமும் சாம்பல் கறுப்பும் சேர்ந்த ஒரு நரைத்த நிறமாக இருந்தது. அதனாலேயே அவற்றைவிட வடிவாகவும் இயற்கையோடு ஒன்றிப்போன மாதிரியும் இருந்தது. காய்ந்த இலைச் சருகுகளுள்ளும் மண் பொந்துகளுள்ளும் ஒளிந்து பிற மிருகங்களிடமிருந்து தப்புவதற்காக காட்டு முயல்கள் அந்நிறத்தைக் கொண்டிருக்கின்றன போலும்.
பொதுவாக எனக்கு முயல்களைப் பற்றிய அறிவு மிகக்குறைவு. அதிலும் காட்டு முயல்களைப் பற்றி குறைந்தபட்ச ஞானமும் இல்லை. வீட்டைச் சுற்றியுள்ள காணித்துண்டுகள் பற்றையும் புதருமாக ஒரு சிறிய காடு போலத்தான். வீடு கட்டுவதற்காகப் பற்றைகளை வெட்டி காணியைத் துப்பரவு செய்தபொழுது பல காட்டு முயல்கள் இருந்ததாக வேலை செய்தவர்கள் முன்னர் சொல்லியிருக்கிறார்கள். அதற்குமேல் நான் அதுபற்றி அறிய முயன்றதில்லை. காட்டு முயல்கள் துடினமாகவும் பொல்லாதவையாகவும் இருக்குமென எனது அறிவுக்கு எட்டியவரை கருதியிருந்தேன்.
ஆனால் இந்த முயல்குட்டி பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறது! ஒவ்வொரு மயிர்க்கணைகளும் நடுங்குகின்றன. அதன் அடிவயிறும் கால்களும் தண்ணீரில் நனைந்திருக்கின்றன. குளிரில் நடுங்குகிறதா அல்லது என்னைக் கண்டு பயத்தில் நடுங்குகிறதா என்று புரியவில்லை. பார்வை மிகவும் பயந்துபோன மாதிரித்தான் தோன்றியது. கையில் பிடித்திருந்த மண்வெட்டியைத் தூரப் போட்டேன். எனினும் அதன் நடுக்கம் தீரவில்லை. சின்னஞ்சிறு குட்டி… அதனால் பயப்படுவதாக இருக்கலாம்.
முயல்க்குட்டியைப் பிடிக்கவேண்டும் எனும் ஆசை இயல்பாகவே என்னுள் கிளர்ந்தது. பிடித்தால் என் குழந்தைக்குக் காட்டலாம் எனும் ஆர்வமும் ஒருபுறம் தூண்டியது.
குழந்தை முயல்குட்டியைக் கண்டால் சந்தோஷப்படுவாள். காகங்கள் குருவிகளைக் கண்டாலே அவளுக்குப் புதுமையாயிருக்கிறது. குதூகலமடைகிறாள். மனைவி குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டும் பொழுதுகளில் வெளியே கொண்டுவந்து ஊரிலுள்ள காகங்களையெல்லாம் “காக்கா.. காக்கா“ என அழைத்துக் காட்டுவாள். குழந்தை அவற்றில் என்ன விநோதத்தைக் காண்கிறாளோ! மதில் மேலும் மரங்களிலும் உள்ள காகங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்தபடியே சாப்பிட்டுத் தீர்த்துவிடுவாள். குயில் குருவி மைனா என எதைக் கண்டாலும் “க்கா..கா..ஆ!“ எனக் கையசைப்பாள். குழந்தைக்கு எல்லாம் இப்பொழுது ”க்கா..கா..ஆ“ தான். இது குயில், இது மைனா என்கிற வேறுபாடு புரிய இன்னும் காலமிருக்கிறது. ஆனால் இது முயல்! பறவைகளைப்போலப் பறக்காமல் தாவித்தாவி ஓடும் பிராணி. பறவைக்கும் முயல்க்குட்டிக்கும் உள்ள வேறுபாட்டை குழந்தை இலகுவில் புரிந்துகொள்வாள்.
பிடிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. ஆனால் எப்படிப் பிடிப்பது? அதன் வாயின் முன் இரு பற்கள் கூர்மையாக வெளியே தெரிகின்றன. கடிக்குமோ? முயல் கடிக்குமா என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. வீட்டுப்ப+னை கடிப்பதில்லை. ஆனால் காட்டுப்ப+னை கடிக்கும் என்று சொல்லுவார்கள். அதுபோலக் காட்டுமுயல் கடிக்கலாம். அவ்வளவு ஏன்? அணில்கூட பார்த்தால் எவ்வளவு சாதுவான பிராணியாகத் தெரிகின்றது. பிடித்தால் கடிக்கிறது! ஒரு சாயலுக்கு முயல்குட்டியின் மூஞ்சையும் (அந்த நீண்ட செவிகளைத் தவிர) அணிலை ஒத்ததுபோலத் தெரிகிறது. எனவே கடிக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அல்லது தற்பாதுகாப்புக்காகவேனும் கடிக்க முற்படலாம்.
”இது குட்டிதானே… கடிக்காது…பிடி!” எனத் தள்ளியது மனசு. முயல்குட்டியைப் பிடிப்பதற்கு ஆயத்தமானேன். அதன் கழுத்தில் அழுத்திப் பிடிப்பதுதான் நல்ல உபாயம் எனத் தோன்றியது. அப்படியானால் அது தலையைத் திருப்பிக் கடிக்க எத்தனிக்க முடியாது. தப்பிவிடலாம்! ஆனால் கழுத்தில் அழுத்தினால் அது செத்துப்போகவும் கூடும்!
தில்லை, முயல் கூட்டுக்குள் கையை விட்டு முயலின் செவியில் பிடித்துத் தூக்குவது நினைவில் வந்தது. முயலுக்கு அதன் பலமே செவியில்தானாம் - அவன்தான் சொன்னான். பிறருக்குத் தெரியாத விஷயமென்றால் தனது கையாலும் தாராளமாகப் போட்டுச் சொல்லக்கூடியவன் தில்லை என்பதால், அவன் சந்தோஷத்தைக் குழப்பாது சொன்னதைச் சரியெனக் கேட்டு வந்தேன். பின்னர் அதை மறந்திருந்தேன். இப்பொழுது அது நல்ல ஐடியாவாகப் பட்டது. செவியில் பிடித்தால் முயல்குட்டி கடிக்காது! அதன் செவியைப் பார்த்தேன். குத்தென மேலுயர்ந்து நல்ல வசதியாகத்தான் இருக்கிறது. கடவுளின் படைப்பாற்றலை எண்ணி வியப்பாயிருந்தது, இரண்டு செவிகளையும் சேர்த்து ஒரு கையால் பிடிக்கலாம். அதற்கு வலிக்குமோ? செவியில் பிடித்துத் திருகினால் எங்களுக்கு வலிக்கிறது. முயலுக்கு வலிக்காதா என்ன?
”இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் முயல்குட்டியைப் பிடித்தமாதிரிதான்“ என மனதைச் சமாதானப்படுத்தினேன். ஓடவிடாமல் ஒரே எத்தனிப்பில் பிடிப்பது, ஓடினாலும் விடாமல் துரத்திப் பிடிப்பது போன்ற திட்டங்களை வகுத்துக்கொண்டேன். முயல்குட்டியைப் பிடிப்பதற்கு நான் ரெடி! என்னிடத்திலுள்ள சர்வ வலிமையையும் சேர்த்துக்கொண்டு அதன்மேல் பாய்ந்தேன். அது மிகச் சாதாரணமாக தாவி ஓடிச் சென்றது. இன்னொரு மரத்தடியோடு பதுங்கி நின்று திரும்பிப் பார்த்தது. ஓடிவிடுமோ என உள்மனம் சொல்ல… வலதுகையை வெறுமனே வீசி வீசி அதன் செவிகளைப் பிடிப்பதுபோல இரு தடவை ஒத்திகை பார்த்தேன். பின்னர் அவ்வாறு மிக நேர்த்தியாகச் செயற்பட்டேன்., 'கீ! கீ! கீ!"
நினைத்ததுபோல அவ்வளவு கஷ்டமான காரியமாக இருக்கவில்லை. முயல்குட்டியைப் பிடித்துவிட்டேன்.
ரப்பர் பொம்மையை அழுத்தினால் ஒலிக்கும் குரலைப்போல முயல்குட்டி கத்தத் தொடங்கியது. அச் சத்தம் கேட்டு எங்கள் வீட்டுநாய் தூக்கம் கலைந்து ஓடிவந்தது.
இது ஒரு பொல்லாத சாமான். பாம்பு ஓணான் ப+ச்சி போன்ற ஜந்துக்களை வளவிற்குள் கண்டால் கலைத்துப் பிடித்துக் கடித்துப்போட்ட பின்னர்தான் மறுவேலை பார்க்கும். இப்பொழுது முயல்குட்டியை என் கையில் கண்டதும் வலு உற்சாகத்துடன் தொங்கிப் பாய்ந்தது. கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன். நாயும் தொங்கி தொங்கிப் பாய்ந்தவாறு என்னோடு ஓடிவந்தது. நான் வீட்டுக்குள் நுழைந்தேன். நாய் மேற்கொண்டு வராமல் வாசலிலேயே பிரேக் அடித்தது. அதற்குக் காரணம் என் மனைவிதான்!
அங்கு என் மனைவி நின்றுகொண்டிருந்தாள்!
'என்ன? என்ன?" என்றாள்.
செவிகளைப் பிடித்த கையை நீட்டினேன்.
'முயல் குட்டி!"
'எப்படி வந்தது?"
'இரவு தாயோட புல்லு மேய வந்திருக்கும். விடிஞ்சதும் தாய் போட்டுது போல. இவர் கவனிக்காமல் தோட்டத்திலேயே நின்றிட்டார்."
'ஐயோ பாவம்! தாய் எங்கையெல்லாம் தேடித்திரியுதோ தெரியாது."
'இல்லையில்லை! அதுகும் இஞ்சைதான் எங்கையாவது ஒளிச்சிருக்கும்!" என் மனைவியைச் சமாதானப்படுத்தினேன். வீட்டையும் வீட்டோடு சேர்த்து சிறு தோட்டத்தையும் சுற்றிவர மதில் அமைந்துள்ளது. ஒரே ஒரு வழியான கேற்றுக்கூடாக நுழைந்துவந்து பின்னர் போகும் வழி தெரியாமல் தங்கியிருக்கலாம்.
முயல்குட்டி கத்தும் சத்தத்தில் குழந்தை கண்களை மூடிக்கொண்டு திரும்பி அம்மாவின் கழுத்தை கட்டிப்பிடித்திருந்தாள்.
'இஞ்சை பாரம்மா.. முயல்குட்டி… என்ன பயம்? அப்பா பயப்பிடாமல் வைச்சிருக்கிறன்தானே?" எனக் குழந்தையின் கவனத்தைத் திருப்ப முயற்சித்தேன். அவள் திரும்பவில்லை.
முயல்குட்டி கால்களை உதறி உதறித் துடித்தது. துடிக்கிற துடிப்பில் செவிகள் அறுந்து விழுந்துவிடுமோ எனத் தோன்றியது. கீழே சீமெந்துத் தரையில் விட்டேன். தாவி ஓடிச் சுவர் மூலையில் பதுங்கியது. வெளியே ஓடிவிடாதவாறு குறுக்காக நின்றுகொண்டு 'பெட்டி ஏதாவது இருக்குதா?" என மனைவியிடம் கேட்டேன் – முயல்குட்டியை விடுவதற்கு.
பெட்டி ஒன்று தேடி எடுப்பதற்காக மனைவி குழந்தையை தம்பியிடம் கொடுத்துவிட்டு உள்ளே போனாள்.
அந்தக் கணத்தில் நாய் வீட்டுக்குள் பாய்ந்தது. நாய் முயல்குட்டியைக் கலைக்க நான் இரண்டையும் கலைத்துக்கொண்டு ஓட, எங்களுக்குப் பிறகால் தம்பி குழந்தையுடன் ஓடிவர…
'சூய்! சூய், ஏய்… அடீக்! அடிக்… அங்காலை போ!..."
'கீ, கீ, கீ.."
இரண்டடி உயரத்தில் ப+ச்சாடியொன்று ஹோலின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு இடைவெளியூடு முயல்குட்டி ஓடி மூலையில் ஒதுங்க, மறுபக்க இடைவெளியூடு நாய் ஓடி அதைப் பிடிக்க, இரு பக்கமாகவும் ஓட முடியாது சாடியின் மேலாக எட்ட முனைந்து… முழங்கால் அடிபட தலைகரணமாக விழுந்தேன்.
இந்த அமர்க்களத்தில் குழந்தை வீரிட்டுக் குளற ஆரம்பித்தாள். குழப்பம் நடப்பதை உணர்ந்து மனைவி ஓடிவர நாய் வாலை மடக்கிக்கொண்டு வெளியே ஓடியது. நான் முயல்குட்டியைப் பிடித்துக்கொண்டேன். அதைப் பார்த்துப் பார்த்துக் குழந்தை உரத்து அழுதுகொண்டிருந்தாள்.
முயல்குட்டியின் சேமம் எப்படியிருக்கிறது எனக் கவனித்தேன். அதன் முன்னங்கால் ஒன்றை நாய் பதம் பாத்திருக்கிறது. நாயின் பல் விஷமாயிற்றே! முயல்குட்டி செத்துப்போய்விடுமோ?
எனது அடிபட்ட காலின் வலி உச்சம் தலைவரை ஏறுவதுபோலிருந்தது. பார்த்தால் முழங்காலில் ஒரு சதைத் துண்டை அப்படியே சீவி எடுத்ததுபோல, சீமெந்துச் சாடியின் கடின விளிம்பு பதம் பார்த்திருந்தது!
மனைவி மருந்து எடுத்துவந்து தந்தாள்.. ”போடுங்கோ..!” என்றாள்! மிகவும் நன்றிப்பெருக்குடன் அவளைப் பார்த்துக்கொண்டு எனது காயத்துக்கு மருந்தைத் தடவினேன்.
'நான் உங்களுக்குக் கொண்டுவரயில்லை… முதலில முயல்குட்டிக்குப் போடுங்கோ..! பாவம்.. செத்துப் போயிடும்!"
இப்படியெல்லாம் மனைவிமாரிடம் அதிகம் எதிர்பார்க்கக்கூடாதுதான்! அது எனது தப்பு! ஒருவாறு சமாளித்து, முயல் குட்டியின் காயத்துக்கும் மருந்தைப் போட்டு அதைப் பாதுகாப்பாக விட ஒரு இடம் தேடினேன். நாய் வாசலிலேயே நின்றதால் பெட்டி எடுப்பதற்கு மனைவியைத் திரும்பவும் வீட்டுக்குள் அனுப்ப எனக்குத் துணிவில்லாதிருந்தது. முயல்குட்டியைத் தற்காலிகமாகக் குழந்தையின் தொட்டிலில் விட்டு, பரமதிருப்தியுடன் திரும்பினேன்.
அழுது ஓய்ந்து அமைதியாக இருந்த குழந்தை அதைக் கண்டு மீண்டும் குளறத் தொடங்கினாள். உடனே தொட்டிலிலிருந்து முயல்குட்டியைத் தூக்கவேண்டியதாயிற்று. அழுகையும் நின்றது.
'பாவம் போகவிடுங்கோ… தாய் எவ்வளவு கவலைப்படும்?" என மனைவி சொல்ல நானும் அதற்கு இணங்கினேன். ஆனால் நாயிடமிருந்து அது தப்பவேண்டுமே?
'இரவைக்கு நாயைக் கட்டி வைச்சிட்டு, முயல்குட்டியைத் தோட்டத்தில் விட்டால் தாய் வந்து கூட்டிக்கொண்டு போயிடும்.." என மனைவி தனது ஆலோசனையைத் தெரியப்படுத்தினாள். அது சரியாகவே எனக்குப் பட்டது. அதுவரை முயல்குட்டியை ஒரு அறையுள் விட்டுப் பூட்டிவிடலாம் எனத் தீர்மானித்தோம்.
முயல்குட்டிக்கு பசியாக இருக்கும் என்ற யோசனையோடு.. 'பால் மிச்சம் இருக்கா?" என மனைவியைக் கேட்டேன்.
'பசும்பால் கொடுத்தால் முயல்குட்டி வலி வந்து செத்துப்போகும்" என்றான் தம்பி. இவனும் தில்லையின் ஸ்டையிலைத்தான் பிடிக்கிறானோ என ஓரக்கண்ணால் பார்த்தேன்.
'உண்மையாகத்தான்!" என எனது பார்வைக்குப் பதில் சொன்னான்.
“அப்ப பிள்ளை குடிக்கிற பாலிலை கரைச்சு வைப்பம்!’ என நானே முடிவெடுத்துக்கொண்டு லக்டோஐனை எடுத்து ஒரு பாத்திரத்தில் கரைத்தேன்.
'தட்டில பால் குடிச்சுப் பழக்கமில்லாமல் எப்படிக் குடிக்கும்?" என மனைவி கேட்க, அலட்சியமாக, 'அது குடிக்கும்!" எனச் சொல்லிவிட்டு, எல்லாம் தெரிந்தவனாக மனைவிக்குக் காட்டும் எண்ணத்துடன் அறைக்குள் போனேன்.
கதவைச் சற்றுத் திறந்து தலையை மட்டும் உள்ளே எட்டிப் பார்த்துப் பின்னர் நுழைந்து கதவை மீண்டும் பத்திரமாகப் பூட்டினேன். முயல்குட்டி கட்டிலின் கீழ் ஒரு மூலையில் கடிபட்ட காயத்தை நக்கியவாறு இருந்தது. அதைக் கலையப்படுத்தாமல், தரையிற் படுத்து மெதுவாக உடும்பு நகர்வதுபோல கட்டிலின் கீழ் மெல்ல ஊர்ந்து தட்டுடன் பாலை அதன் முன் வைத்தேன். எனது கை அண்மித்ததும் ஒரு பாய்ச்சல் தாவியது., பாலத்தட்டு தட்டுப்பட்டு அதன் முகத்திலும் என் முகத்திலும் பால் தெறித்தது. தட்டு கவிழ்ந்துபோனதும் பால் நிலத்தில் சிந்தி ஓடியது.
நான் சற்றும் தாமதியாது எழுந்து துரிதமாக இயங்கினேன். சிந்திய பாலை மனைவிக்குத் தெரியாது துடைத்துத் துப்பரவு செய்தபின் பதற்றத்தை வெளிப்படுத்தாமல் வெளியே வந்தேன். குசினியில் பாத்திரத்தை வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக நழுவ முயற்சிக்க…
'என்ன.. முழுப்பாலையும் குடிச்சிட்டுதோ?" என மனைவி கேட்டாள்.
'ஓம்! ஓம்!"
'பாவம் நல்ல பசிபோல..!"
'ஓம்! ஓம்… பசி!"
தனது தோல்வியை மறைக்கவோ, என்னவோ, 'அது சரி, இண்டைக்கு வேலைக்குப் போகவில்லையா?" எனக் கதையைத் திருப்பினாள் மனைவி.
'எவ்வளவு நேரமாச்சு! ஒவ்வொரு நாளும் போற வேலைதானே.. நாளைக்குப் போகலாம்!"
உண்மையிலேயே இன்று வேலைக்குப் போக எனக்கு விருப்பமிருக்கவில்லை. முயல்குட்டியைப் போகவிடுவது எனத் தீர்மானித்தாலும் உள்ளுர அது எனக்குச் சம்மதமில்லாமலிருந்தது. நான் அதை மிகவும் விரும்பினேன். அதன் பயத்தைத் தெளிவிப்பது, குழந்தைக்கு அதன்பால் உள்ள பயத்தைத் தெளிவிப்பது, நாயுடன் சகஜமாகப் பழக வைப்பது - இதையெல்லாம் மெல்ல மெல்ல சாத்தியமாக்கலாம். முயல்குட்டியை எங்கள் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.
வெளியே வந்து மனைவியிடம் கேட்டேன். 'முயல் குட்டியை வீட்டிலே வைத்திருந்து வளர்ப்போமா?" இப்படி சின்னச் சின்ன விடயங்களுக்குக்கூட மனைவியிடம் அப்றூவல் பெறவேண்டியது எங்கள் வீட்டில் எழுதப்படாத சட்டமாயிருந்தது.
'உங்கட நாய் விட்டுவைக்கப் போகுதோ?" என மனைவி தன் சந்தேகத்தைக் கிளப்பினாள்.
'இண்டைக்கு முழுக்க நாய் முயல்குட்டிக்கு ஒண்ணும் செய்யவில்லைத்தானே?"
நாய் முன்னர் மணிப்புறா, மைனா, புலுனி போன்ற பறவைகள் வந்தாலும் விடாது கலைக்கும். அந்த நேரங்களில் நாயை அதட்டித் தடை செய்ததால் பிறகு அது அவற்றைப் பழகிவிட்டது. இப்பொழுது மைனாக்களும், மணிப்புறாக்களும் சர்வசாதாரணமாக வந்து முற்றத்தில் தீன் பொறுக்கிச் செல்லுகின்றன. குயில் பூஞ்செடிகளில் வந்திருந்து கூவுகிறது. கிளிகள் மிகப் பதிய வந்திருந்து பயிற்றங்காய் உடைத்துத் தின்கின்றன. இன்னும் பல சின்னஞ்சிறு குருவிகள் வீட்டுச் சூழலில் மிக இயல்பாகவே வந்து சத்தமிசைக்கின்றன. நாய் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் படுத்திருக்கும். 'நாய் அறிவுள்ள ஜீவன், சொன்னால் கேட்டுப் பழகிவிடும்" என எனது நம்பிக்கையை மனைவியிடம் தெரிவித்தேன். குருவிகள் வந்து போவதுபோல, முயல்குட்டியும் வீட்டுத்தோட்டத்தில் நின்று வளராதா என்ற ஏக்கம் என் மனதில் படர ஆரம்பித்தது. இரவு, முயல்குட்டியை தோட்டத்தினுள் விட்டோம்.
சிலவேளை அது தன் தாயுடன் சென்றுவிடக்கூடும்.
எனக்கு இருண்டு விடிந்தது. காலை சந்தேகத்துடன்தான் தோட்டத்துக்குச் சென்றேன். முயல்குட்டி என்னை ஏமாற்றவில்லை. கண்டதும் மெல்ல மெல்லக் காலடிக்கு வந்தது. இது ஓரளவு எனக்கு மகிழ்ச்சி தருவதாகவுமிருந்தது. இவ்வளவு சீக்கிரமாக என்னோடு சேர்ந்துவிடுமென நான் நினைக்கவில்லை. இரு தடவை நாயிடம் கடிபட்டபொழுது காப்பாற்றியிருக்கிறேன். அந்த நன்றியுணர்வா? ஒருவேளை தாயைப் பிரிந்த தனிமை இந்த முயல்குட்டியையும் வாட்டுதோ? எதுவோ, என்னால் தனக்கு ஒரு தீங்கும் நேராது என அது உணர்ந்துவிட்டது எனப் புரிந்தது. இது எனக்குப் பெரும் ஆறுதல் அளித்தது. இனி அதைப் பழக்கி எடுப்பது சுலபம்.
மாலையில் விட்ட குறையிலிருந்து புல்லைப் பிடுங்க ஆரம்பிக்க, முயல்குட்டி கிட்ட வந்தது. எனது வேலையை விட்டு அதன் நடவடிக்கைகளைக் கவனித்தேன். புல்லைக் கடிப்பதும், பின்னர் என்னை நிமிர்ந்து பார்த்தவாறு சப்புவதுமாக இருந்தது. எங்காவது ஒளிந்து கிடந்துவிட்டு நான் வந்திருக்கும் நேரங்களில் மட்டும் வந்து புல் சாப்பிடுகின்றதோ என்றுகூட எண்ணினேன். அந்த அற்ப சீவனின் மேல் தாளாத இரக்கம் சுரந்தது. புல் பிடுங்கிய பகுதியைத் திரும்பிப் பார்த்தேன். ஒரே வெளியாக இருந்தது. இப்படியே முழுப் புல்லையும் பிடுங்கிவிட்டால் முயல்குட்டிக்குப் பாதுகாப்பாயிராதே எனத் தயக்கமேற்பட்டது. புல் இல்லாவிட்டால் அது இங்கிருந்து போய்விடவும்கூடும். குருவிகளை ஆதரிப்பதற்காக செரி, கொய்யா, கஜு, மா போன்ற பழ மரங்களை நட்டு உண்டாக்கியதுபோல் முயல்குட்டிக்காகப் புல் வளர்ப்பது இன்றியமையாதது எனக் கருதினேன். வெறுங்கையோடு வருவதைக் கண்ட மனைவி கேட்டாள்: 'ஏன் புல்லுப் பிடுங்கவில்லையா?"
'மாட்டுக்கு… இனிக் காசு கொடுத்துப் புல்லு வேண்டிப் போடலாம்..!"
'இப்படித்தான் நடக்குமெண்டு நான் முதலே நினைச்சனான்.." என்றாள் மனைவி. எனினும் அதை ஆதரிப்பது போன்ற அவளது சிரிப்பு என்னை மகிழ்வித்தது. பொதுவாக மனைவிமாரின் சிரிப்பு என்பது மகிழ்ச்சி அளிக்கும் சங்கதிதான்!
காலையில் வேலைக்குப் போகவேண்டிய அவசரம் இருப்பதால், மாலை வேளைகளில் முயல்குட்டிக்காக என் நேரத்தை ஒதுக்கினேன். போய் வரம்பில் அமர்ந்துவிட்டால் அது கிட்ட வரும். ஒரு சில நாட்களில் என்னோடு நெருக்கமாக பழகவும் ஆரம்பித்துவிட்டது. எனது கையை விரித்து நிலத்தில் வைக்க உள்ளங்கையில் ஏறி நிற்கும். அடுத்து, அதன் மேலுள்ள குழந்தையின் பயத்தைத் தெளிவிப்பது எனத் திட்டமிட்டோம். குழந்தை என்னைக் கவனிக்கக் கூடியதாக மனைவி வைத்திருப்பாள். முயல்குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைப்பேன். அது அப்பிடியே அணைந்துகொள்ளும். அதற்கு முத்தம் கொடுப்பேன். என் தோளில் அதை நிற்கவிட்டு கையை அசைத்து ஆடி குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவேன். அதைக் கண்டு அவள் சிரித்துக் குதூகலிப்பாள். கையை அசைத்து ஆனந்தமடைவாள். சரிப்பட்டுவரும் போலிருந்தது. இன்னும் சில நாட்களில் முயல்குட்டியை வீட்டுக்குள் கொண்டுவரலாம். நாயுடனும் பழக்கிவிட்டால் எல்லாம் சரி.
அடுத்த ஒரு லீவு நாளில் மத்தியானச் சாப்பாட்டின் பின் சற்று ஓய்வாகச் சாய்ந்திருந்தேன். பக்கத்து வெறும் வளவில் அமளிதுமளியாகச் சத்தம் கேட்டது. ஆக்களின் கூக்குரல்கள்.
எழுந்து சென்று கிணற்றுக்கட்டில் ஏறி நின்று மதிலின் மேலாகப் பார்த்தேன். ஐந்தாறு பேர் எதையோ கலைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளில் பெரிய பொல்லுகள் இருந்தன. சில நாய்களும் ஓடித்திரிந்தன. பற்றைக்குள் கற்களை வீசினார்கள்.
“என்னவோ?” என்ற சந்தேகத்தில் உரக்கக் குரல் கொடுத்து அவர்களிடம் கேட்டேன்.
'முயல்..!"
அப்போது என்னுடன் மனைவியும் கிணற்றுக்கட்டில் நின்றிருந்தாள். அவர்கள் சொன்னதைக் கேட்டு, 'பிடிச்சால் விப்பினமோ தெரியாது. ஒரு முயல் வேண்டினால் எங்கடை குட்டியோட துணையாய் நிற்கும்..!" என அபிப்பிராயித்தாள். நான் மீண்டும் உற்சாகமாகக் குரல் கொடுத்தேன்.
'முயல் பிடிச்சால் விப்பீங்களா?"
'ஓமோம்…, நூறு ரூபா!"
பாட்டத்தில் போட்டுக்கிடந்த ஒரு கொழுத்த முயலை அதன் செவிகளில் பிடித்துத் தூக்கி உயர்த்திக் காட்டினான். தூங்கிச் செத்த மனிதனைப் போல தலை சரிந்து தொங்க கால்கள் சோர்ந்து தூங்க அது தோற்றமளித்தது.
'ஐயோ!"
அதிர்ச்சியில் தடுமாறி கிணற்றுப்பக்கம் சரிந்த மனைவியை இழுத்துப் பிடித்தேன். இருவருமாக தொபுக்கடீர் என மறுபக்கம் விழுந்தோம். அந்த நேரமாக பார்த்து… எங்கிருந்தோ, தில்லை என்னைத் தேடி வந்திருந்தான். நாங்கள் விழுந்து கிடப்பதைக் கண்டு, கிட்ட ஓடி வந்தான். அவன் அபரிதமான உதவுமனப்பான்மை கொண்டவன்! கை கொடுத்து மனைவியைத் தூக்கிவிடுவதற்கு உற்சாகப்படுவானோ என ஐயமேற்பட்டது! அதற்குள் நான் அவசரப்பட்டு எழுந்து மனைவியின் கையைப் பிடித்துத் தூக்கினேன்.
அவள் அழாக்குறையாகச் சொன்னாள்: 'அதுதான் முயல்குட்டியின் தாயோ தெரியாது?
'என்ன விசயம்?" எனத் தில்லை கேட்க நான் விவரத்தைச் சொன்னேன்.
'முயல் இறைச்சி நல்ல ருசியாயிருக்குமே!" என்றான்.
மீண்டும் 'ஐயோ!" என அதிர்ந்தாள் மனைவி.
நான் அவளை ஆறுதல் படுத்தினேன். 'அவன் சும்மா…"
'இவ்வளவு மினக்கெட்டு ஏன் பிடிக்கிறார்கள்? அதோடை விளையாடவா?" என எங்களப் பார்த்து ஓர் ஏளனத் தொனியுடன் தில்லை கேட்டான். 'ஏன் முயலைப் பழக்கினால் அதோடை விளையாடலாம் தானே?" என அவனை மடக்குவது போலச் சொன்னேன்: எங்கள் வீட்டு முயல்குட்டியின் கதையை!
'எங்கை பார்ப்பம்?"
தோட்டத்துக்குள் கூட்டிச்சென்று வரம்பில் அமர்ந்து காட்டினேன். என்னைக் கண்டதும் முயல்குட்டி கிட்ட ஓடிவந்தது. தில்லை சடாரென அதன் செவியைப் பிடித்துத் தூக்கினான். 'கீ! கீ! கீ!"
'விடு, விடு, விடு!... அதைவிடு!" என நான் கத்தினேன். விட்டதும் தூர ஓடிப்போனது.
தேடிப் பார்த்தேன். மயிர்க்களைகள் குத்திட்டு நடுங்க புற்களின் மறைவில் பதுங்கியிருந்தது.
'பார்த்தது போதும் வா!" எனத் தில்லையை வெளியே கூட்டிவந்தேன்.. அவனது இன்னொரு குணவிசேடம்.. ஒட்டினால் இலகுவில் விடான். காயைக் கழட்டி அனுப்பும்போது பொழுதுபட்டுவிட்டது.
இரவு எட்டு மணியளவில் சாப்பிடுவதற்கு அமர்ந்தோம்.
தம்பி ஓடிவந்து 'முயல்குட்டி! கேற்! முயல்குட்டி! கேற்றடி!" எனத் திக்கித் திணறினான். அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை. ஆனால் என்னால் ஊகிக்க முடிந்தது.
'என்ன முயல்குட்டி போயிட்டுதா?" என்றவாறு எழுந்து ஓடினோம்.
எங்களைக் கண்டதும், நாய் கடவாயைச் சூப்பிக் கொண்டு நழுவி ஓடியது. கேற்றடியில் முயல் குட்டி இறைச்சித் துண்டுகளாகக் கிடந்தது.
(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது, 1987)
பதிவுகளுக்கு அனுப்பியவர்: சுதாராஜ் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.