[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி - 08.12.2014 - அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. - பதிவுகள்-]
நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே ‘பென்சன்’ போதாது. ஆக, அவள் மாடு, ஆடு, கோழி, கன்று, காலி, சீட்டு, சித்தாயம் என்றெல்லாம் மாய்ந்தாள். எதுக்கும் ஈடு கொடுக்கிற வலிச்சல் தேகம்.
‘தம்பியை எப்பிடியும் நல்லாப் படிப்பிச்சு ஒரு கரை காணவேணும்’ என்ற ஆசை, நாளாக அவளை எலும்பாக்கியது. ‘எலும்புருக்கியாக்கும்’ என்று நடைமருந்து பாவிக்கிறாள். ‘உவ்வளவு கஷ்டத்துக்க பெட்டையளைப் படிப்பிக்க வேணுமேர் பொடியனைப் படிப்பிச்சு ஆளாக்கினால் அவன் உன்னையும் தங்கச்சிமாரையும் பாக்கமாட்டானோ?’ என்று அயலட்டை சிலேடையாகச் சொல்லும். அசட்டை பண்ணி விடுவாள்.
‘பொம்புளைப்பிள்ளையள் படிச்சு நாலு காரியம் தெரிஞ்சாலதான் மேலைக்கு ஆம்பிளையள் அடக்கி ஆளாங்கள்’ என்று சொல்லுமளவு அனுபவம். ‘இந்தப் பிள்ளையள் மூண்டையும் கோசு போகாமல் நல்லாப் படிப்பிக்க வேணும்’ என்ற அவள் எண்ணத்துக்கு உரம்பாய்;ச்சி வருகிறது.
‘தம்பி கட்டாயம் கம்பசுக்கு எடுபடுவான். அதுக்குப் பிறகு துரை சகோதரியளையும் அப்படி ஆக்குவான்’ என்ற இவள் நம்பிக்கை வீண்போகவில்லை.
கம்பசுக்கு எடுபட்டான்
‘பயோ சயன்ஸ்’
யாழ்ப்பாணக் கோயில் குளம் ஒன்றும் பாக்கியில்லை. நேர்த்திக்கு வேண்டின ‘கைமாத்து’களைக் கடன் பட்டும் தீர்த்துக் கொண்டாள். பாடுபட்டுச் சுமந்து
பெற்ற வளர்த்ததுக்குத் தக்க பலன் அடைந்ததான பூரிப்பில் ஆழ்ந்து போனாள்.
ஒரு வருஷம் ஆகவில்லை.
கொஞ்ச நாளாக மைந்தனில் ஒரு மாற்றம்.
கவனித்தே வருகிறாள்.
‘மேல் படிப்பெண்டா அப்படித்தானிருக்கும்’ என்று தனியே இருந்து யோசிப்பாள்.
பிடிபடுவதில்லை; புரிகிறதாயுமில்லை.
கடல் நீருள் தாளையாக மனசு தளம்பி என்னவோ செய்கிறது. எப்போதும் ‘திக் திக்’கென்று அடித்துக் கொள்கிறது.
‘அண்ணையின்ர போக்கு இப்ப ஒரு மாதிரி’ என்று தங்கச்சிமாரும் கணித்தே வருகிறார்கள். தாய்க்குச் சொல்வதில்லை.
‘அம்மா பாவம், ஏங்கிப் போவா’ என்று இந்தப் பெண் பிறவிகள் மனம் கரையும்.
‘கம்பசுக்குள் என்னென்னவோ எல்லாம் நடக்கிறதாக’ தாய் கேள்விப்பட்டிருக்கிறாள்.
நம்புவதில்லை.
பொறுப்பில்லாத சகோதரன்போல, தங்கச்சிமாரை மறந்து அவன் அப்பிடி ‘ஏணாகோணமாக’ நடக்கான்’ என்று திட்ப்படுத்திக் கொள்வாள்.
எனினும், மனசுள் ஓர் அரிப்பு.
ஊர்க் கடுவன்களுக்கு நலமடித்து, பெட்டை நாய்களுக்கு நெருப்புக் கம்பிச் சூட்டுக்குறி போடுகிற ராட்சத மனுஷ அப்புக்குட்டியப்பா, ‘யூனிவேசிட்டிக்;குப்
போற பொடி பொட்டையளுக்கு நலமடிக்காட்டி, காடு கரம்பையெல்லாம் நாய்க்கொழுவலாக இழுபடுங்கள்’ என்று வேறு பகிடி விடுவது இவள் மனசில்
விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
‘கோதாரி மனுஷன். அந்தாள் தான் செய்யிற கருமத்திலதான் கண்ணும் கருத்தும் கதையும். மலம் தின்ற காகமாட்டம் எந்த நேரமும் இதே கரிசனை, எப்பவும் கிலிசகெட்ட எண்ணம்’
எரிந்துகொண்டே தன்னுள் புழுங்கிப் போவாள்.
‘தம்பி அப்பிடி ஒருக்காலும் கிலசகேடா நடக்கான்’
மனசுள் தேறினும், மகன் போக்கு, நடை, உடை, பாவனை, போச்சு யாவும், ‘அப்பிடித்தானிருககுமோ?’ என்றும் அவளை ஐயுறுத்துகின்றன.
‘காடேறி சாடை வர வ உவன் ஆன குளிப்பு முழுக்கும் இல்லையே?’
மனசு நெட்டுருவிற்று.
‘நேரே கேட்டுவிடுவது’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.
ஒரு நாள் கேட்டாள்.
அவன் சிரித்துவிட்டு, ‘நான் முந்தியப்போல இல்லையெண்டா, இப்ப ஓய்வில்லாமல் நல்லாப் படிக்கிறனெண்டு தெரியுதுதானே? பேந்தேன் உப்பிடிக்குடைஞ்சு மடைஞ்சு கேக்கவேணும்?’ என்று இவனே திருப்பிக் கேட்டதோடு புத்தகக் கட்டுகளை எடுத்தவன் சயிக்கிளில் ஏறி வெளியேகினான்.
மனசுள் கிலேசம், சஞ்சலம், ஐயம் விடுபடுகினும் அவன் விறுத்தாப்பிபோல் பதில் சொன்ன விதம் - அதன் விறுத்தம் சற்று வித்தியாசமாகப்படுகிறது.
முருகேசர் வீட்டுக் கடுவன் நாயொன்று பெட்டை வளைச்சலுக்கு வேலி பாய கல் எடுத்து எறிந்து ஆத்திரமாக நிமிருகையில் மனசு அப்புக்குட்டியப்பாவைக் கறுவிற்று.
மேலைக் கடற்கரை தாண்டிய மண்கும்பான் திட்டி வெளிப்பக்கம் இரவு நேரங்களில் துவக்கு வெடிச்சத்தம் கேட்கிறபோதெல்லாம், ‘பொடியங்கள் சுட்டுப்பழகிறாங்களெண்டு கள்ளுக்குடிக்க வாறவெ சொல்லுகினம்’ என்று பட்டு விளையாட்டு வாக்கில் சொல்லுவாள். சுசீலா ஒத்து ஊதுவாள்.
இது வேறு நெடுக நெஞ்சை இடிக்கிறது.
மண்டை அதிருகிற ஓயாத வெடிகுண்டுச் சத்தம் எப்பவும் கோடை இடியாகக் கேட்டபடி...
‘ஜூலை எண்பத்திமூன்றுச் சனியனுக்குப் பின் இளமட்டங்கள் வீடு வாசல், ஊண் உறக்கம், வேலை வெட்டி, கல்விக் கூடம் அருந்தலாகி ஊர்தோறும் கந்தறுந்து நாடு விட்டு வெளியேறுவது, இயக்கங்களுக்குப் போவது தாய் தந்தை சகோதரர்களுக்கு ஊமைக்காய நோவு எடுப்பதுபோல் இவள் நெஞ்சும் கண்டிப்போய்க் கனத்துக் கிடக்கிறது.
யோசிக்க நெஞ்சில் லயம் பிசகிப் பறை ஓலமாக அடிக்கிறது. மனசு ஓயாமல் நெருடுகிறது.
மண்டைக்குள் இடியப்பச் சிக்கல். சிந்தனையில் - மனசில் தெளிவற்ற வலைவீச்சு பூஞ்சாணி;த்த அலைப்பாய்ச்சலாகக் குதி போடுகிறது.
சுசீலா – பட்டு மண்கும்பான் சூட்டுச் சம்பவம் சொன்னபின், வானம் பார்த்த பூமி அவள் கண்ணில் சுடுகாடாகத் தெரிகிறது. சவுக்க மரத்தோப்பில் கூவி எழும் காற்றோசை சூறாவளியாக அலைகுமுழ்த்தி ஏகாந்தமான இவள் மனக் குகையில் மண்டுகிறது.
நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண்கிற பாவி, மேக வெளி நாடி, மின்வரிபோட, செக்கல் கருகி இருள் அடந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர்; வேட்டுக்கள் வானமடங்க வெடித்து நிலமதிரச் சிதறி அவள் மனக் கண்ணுள் மின்னித் தெரிகின்றன.
மைந்தன இன்னும் வந்து சேரவில்லையாதலால் சடலம் நத்தைச் சதையாக ஊனிக்கிறது.
உடல் சோர்ந்து ஒரு வாட்டி அயர்ந்து போனாள்.
ஆழ்ந்த உறக்கத்திலும், ‘தம்பி அப்பிடி நடவான்’ என்று அடைக்கோழி அனுங்குகிற சாடை வாய்ப் புசத்தல்.
விகாலை அவன் வளாகம் செல்ல ஆயத்தமானபோது, ‘மனக் கிலேசத்தைத் தீர்த்து விடுவமோ?’ என்று யோசித்தாள். ஆனால், அவன் சயிக்கிள் ஏறிய உசார் அவனைக் கிண்ட மனமின்றி ஓய்ந்தது.
தேறிய தேட்டம் இந்தமாதக் ‘கட்டுக்காசு’ கொடுக்கப் போதாது. தவணைக்கு நறுவிசாகக் கட்டாட்டி விழகிற தொகையைத் தரவும் சீட்டுக்காறி ஒஞ்சுவாள். அவள்பாவியோட மல்லுக்கட்ட ஏலாது.
‘கழிவு கூடினாலும் இந்த மாசம் சீட்டைக் கூறி எடுப்பமோ?’ என்று புதுசாக ஒரு குழப்பம் மண்டையைப் போட்டு இடித்தது.
பொட்டாக லாச்சிகளுக்குள் கை வைக்க அஞ்சி, கடுதாசிகள், சீலைத்துண்டு ஆவணங்களால் சுருட்டி முகட்டுக்குள் - கிடுகு ஓலைச் செத்தை இடுக்குகளில் சொருகி வைத்த காசு முடிச்சுகளில் ஒன்றைச் சொடுக்கி எடுத்த போது....
‘பொடுக்’கென்று ஒரு போட்டோப்படம் காலில் விழுந்தது.
‘அவுக்’கென்று குனிந்து எடுத்து உற்றுப் பார்த்தாள்.
அஞ்செழுத்தும் அச்சொட்டாக இளையவள் போல் நல்ல வடிவான இளம் வாலிபி, களிசான், தொப்பி, புஸ்சேட், பட்டி மாட்டிய கம்பீரம்.
‘எடிகோதாரி, தாரடி இந்த ஆண்மூச்சுக்காறி.....?’
‘பாலசூரன்’ நாட்டுக் கூத்தில் அப்புக்குட்டியப்பா பயங்கர ராட்சதன் வேஷம் போட்ட காட்சி கண்ணில் திரை விழுத்திற்று.
அவர் பகிடியாகச் சொல்கிறது இவள் காதுள் இப்போ விண் கூவியது. சடலம் உப்பிப் போயிற்று.
‘இந்தப் பொடிச்சியைத் தெரியுமோ?’ என்று பிள்ளைகளிடம் அறிய வாய் உன்னியவள், இதைப் பற்றிப் பறைஞ்சால் தங்கட பாட்டில படிச்சுக் கொண்டிருக்கிற இதுகளின்ர மனமும் கெட்டுப்போம்’ என்று தன்பாட்டில் மௌனித்து விட்டாள்.
படம் திருப்பிப் பார்த்த கண்களில், ‘ஓர் இலட்சியத்திற்காக’ என்று கிறுக்கி எழுதிக் கிடந்த ஒரு வசனம் அவளை உலுப்பிற்று.
எழுத்துக் கூட்டி வாசித்தாள். ஏதேதோ அர்த்தங்கள்கற்பனையில் முகிழ்த்தன.
தேகம் ‘பச்சைத்தண்ணி’யாய்ப் போய்விட்டது. கை கால் அசுப்பிரிவதாயில்லை. கண்களில் சுரந்த நீர் கடை மடல் வழியாக ஊனித்துக் கன்னைகளில் உப்பிற்று. வயிறு பதைக்கிறது. பயோதரங்கள் துடித்தன. மின்னிய கண்கள் இருண்ட பூமியில் கவிந்தன. மனசு குதறி விம்மிப் பிறிட்ட அழுகையை நெஞ்சுள் அடக்கிக் கொண்டாள்.
‘ஆரும் அறியாத இந்தப் பெட்டையின்ர போட்டோ இஞ்ச ஏன் வருவான்? அதென்ன லட்சியம்....?’
அவலச் சிந்தனையில் ஒரு கலகத் திரை பஞ்சாக ஊஞ்சலாடிற்று.
வானத்தில் விமானங்கள் இடிமுழக்கம் போட்டு வட்டமிட்டன.
ஆமி ஊருக்குள் இறங்கி, துவக்குமுனைகளில் இளமட்டங்களை மடக்கி, ‘றக்’குகளில் போட்டு வதைத்தப்போன அல்லோலம் நடந்து ஆறு மாதம் ஆகவில்லை. இந்த விமான உறுமல் மேலும் இவள் கமண்டலத்தில் குதறுகிறது.
‘ஆமி குண்டு போடுகிறான்’ என்ற ஊர்க் களேபரம் காதில் விழுந்தது.
வேலி வாய்க்கால் ஒழுங்கை பிரித்து ஓடுகிற சனக்கூட்டம் தாண்டி ஒர் இளைஞர் பட்டாளம் துவக்குகள் சகிதம் ‘மோட்டார்ச்சயிக்கிள்’களிலும் சிதறி ஓடும் கம்பீர்யத்தில் இவள் தன்னை மறந்து நின்றாள்.
திரைக் கீறு நீங்கிற்று. பூமி வெளிறிற்று.
வெயர்த்துக் கொட்டிப்போன தேகத்தை உசிப்பிக் கொண்டாள்.
‘யூனிவேசிட்டியில் படிக்கிற இவன் இந்தப் பெட்டையின்ர படத்தை ஏன் இஞ்ச கொண்டு வந்து வைச்சான்....?’
மண்டை குழவிக் கூடாயிற்று.
‘இதை அவனிடம் எப்படி விடுத்துக் கேட்பது?’ என்ற அச்சமிருந்தும், ‘இதுக்கு ஒரு முற்றுக் காணத்தான் வேணும்’ என்று முடிவு செய்தாள்.
இதற்கான ஒரு விரதம் இருந்த ஒரு வெள்ளிக் கிழமை.
‘தம்பி இஞ்ச வா, உதில இரு’ என்றாள்.
வாங்குப் பலகையில் குந்தினான்.
தன் குடும்ப விருத்தாந்தங்களை ஆதியோடந்தமாக மீட்டு மகனுக்கு ஒப்புவிக்க அரைமணி நேரமாயிற்று. ஆனால், அவன் எதையும் கரிசனையோடு கேட்பதாகக் காண்பிக்காதபோதும், படத்தை எடுத்து நெற்றிக்கு நேரே காட்டி அதட்டிக் கேட்டாள்:
‘தார் இந்தப் பெட்டை?’
எடுத்தவாக்கில் பொட்டிட்டாற்போல் கேட்ட தோரணை, ‘என்னோட கம்பசில படிக்கிற பெட்டை’ என்று கூறும் துணிவை மறைத்து விரட்டிற்று.
‘தமையனோட கம்பசிலதான் படிக்குது’
‘பழக்கமோ?’
‘பழக்கமில்ல, தெரியும்’
‘அப்ப, இந்தப் படம் எப்பிடி வந்தது?’
‘எனக்குத் தெரியாது’
கூசாமல் அவன் படுபொய் சொன்னவிதம் அவனுக்கே திகிலூட்டிற்று.
‘இவன் பொய் சொல்லவும் துணிஞ்சிட்டான்’ என்று இவள் சாடையாகக் கறுவியபோதும், அதை மிகைப்படுத்தாதவளாகப் பாசாங்காய்க் காண்பிக்கும் தோரணையில் ஏற இறங்கப் பார்த்து நெட்டுருவிய ஏக்க விழி. அவனை, ‘பாவம், என் தாயை ஏமாற்றுகிறேனே’ என்ற உணர்வினனாக்கிற்று.
‘தம்பி, சொல்றனெண்டு கோவிக்காதை கம்பசுக்குப் போனதுகளைப்பற்றி ஊர் உலகமெல்லாம் என்னென்னமோ கதைக்குது. நீ அப்பிடி நடக்காயெண்டு எனக்குத் தெரியும். ‘உதுகள் அதுகள்ல’ மினைக்கெடாமல் படிப்பாயெண்ட நம்பிக்கையிருக்கு. என்னைப்பற்றி நீ யோசிக்கத்தேவையில்லை. ரண்டு தங்கச்சிமார் இருக்குதுகளெண்ட பொறுப்போட படிச்சு அதுகளையும் முன்னுக்குக் கொண்டு வந்தால் காணும்’
அவன் மௌனம் அவளுக்கு ஒருவித பீதி – சோர்வை உண்டாக்கியபோதும், ‘உன்னை நம்பியே இந்த வீடு இருக்கிறது’ என்றுதான் நம்புகிற பாவனையில் ஒர் இரங்கற் பார்வை அவன் மீது காந்த அவன் சற்றுத் தடுமாறினான்.
பாசத்தைவிட வேறு அறியாத தாய்க்கு ஒரு போதும் பொய் சொல்லமுனையாத தன் போக்கு, தன்னிடம் ஏதோ ரூபத்தில் வந்து பொய் புனைய மாட்டி விபரீதமாக்கியிருக்கிறது என்று அவன் யூகித்தபோதும், அதற்காக அவன் பச்சாத்தாபப்பட்டானே தவிர, தாயின் மனக்குமுறலை ஆற்றுவதற்கான
கரிசனை அவன் கிருத்தியத்தில் இராதது அவனுக்கே வியப்பாயிற்று.
‘ஓர் இலட்சியத்திற்காக’ என்று அந்தப் படத்தில் குறித்தாளே அந்த ஒன்றிற்காக இப்படி ஓர் அந்தகாரச் சுழற்சி அவனை ஆட்கொண்டு அதுவே
எல்லாமாய் ஆகிவிட்ட சூட்சுமம் இவனில் கருக்கொண்டது.
‘உதுகள் அதுகள்ல’ என்று தாய் அழுத்திச் சொன்ன வாக்கின் அடக்கம்’ காதல் - இயக்கம்’ இரண்டிலொன்றைக் குறித்தே என்று இவன் புரிந்து
கொண்டானாயினும், ஒன்றையேனும் மறுத்துச் சொல்லத் தான் தயக்கம் காட்டிய தோரணை, தாய் தன்னில் வைத்த முழு விசுவாசத்தையே
தகர்த்துவிட்டதாகப் புலனாக்கிற்று.
இணை பிரியாப் பந்தத்தில் இணையாத ‘இலட்சியத்திற்காக’ என்ற ஒரு வீம்புச் சுலோகம் உயிர் துறக்கவும் வச்சிரம் பாய்ந்திருக்கையில் அப்படி
வரித்ததற்காகவே ‘சகல பந்தங்களையும் துறந்தாலென்ன?’ என்ற ஒரு கண நினைவில் கனத்த மனப்போர் அவனில் உக்கிரகித்திருக்க தாய் விடுத்துக்
கேட்டாள்:
‘பழக்கமில்லாத ஒருத்தியத் தெரிய வாறதும், தெருஞ்சிருக்கிறவ உன்னோட பழக்கமில்லையெண்டுறதும் என்ன மாதிரியெண்ட விளங்கேல. அதை
விளப்பமாச் சொல்லு?’
‘விரிவுரை செய்ய. இதென்ன யூனிவேசிட்டியே?’
முகத்தில் அறைந்த சாடை சூதர்க்கித்த மகனை அவள் சினக்காமல் சாந்தமாகப் பார்த்தபோது. ‘அப்பிடி ஊதாசினமாக அம்மாவுக்குப் பதில்
சொல்லியிருக்கக் கூடாது’ என்று வருந்தினானாயினும். ‘விளப்பமாகச் சொல்லு’ என்ற அவள் ‘முட்டுப்பிடி’க்கு எதாவது ஈடு கொடுத்தேயாக வேண்டும்
என்று யோசித்து அவன் சொன்னான்:
‘கம்பசில ஒரு விரிவுரையாளரை எல்லா மாணவர்களும் அறிஞ்சிருப்பினம், பழகவேணுமெண்டில்லை. அந்த முறையில்தான் தெரியும். சினேகமில்லை’
‘இந்தச் சிடுக்குப் பெட்டை விரிவுரையாளரே?’
‘பாக்க அப்பிடித்தான்.... ஏன், பெட்டையள் விரிவுரையாளராயிருக்க முடியாதோ?’
‘இந்தப் பெட்டை இயக்கக்காரர் மாதிரியல்லவோ தெரியுது?’
‘இயக்காரரெண்டா என்ன இளப்பமோ?’
‘நான் இளப்பமாச் சொல்லேல. உனக்குத் தெரியுமோவெண்டுதான் கேக்கிறன்’
‘அதென்னவோ எனக்குத் தெரியாது’
‘அப்ப, இந்தப் படம் எப்பிடி இந்த முகட்டுக்க வந்தது?’
‘என்னைப் பிடிச்சுக் கேட்டா....?’
‘உன்னை அறியாமல் இந்தப் படம் இஞ்ச வராது’
அவனுக்குப் பொறுக்கவில்லை.
வாங்கிற்பலகையைத் தூக்கி எறிந்த வேகத்தோடு எழுந்து ‘விறுக்;’கென்று சயிக்கிள் எடுத்து அவன் வெளியேற அடுக்குப் பண்ண, ‘இனி நீ கம்பசுக்குப்
போனது காணும்’ என்று கத்த ஆவேசித்த சன்னதம் அலகு பூட்டி நின்றது.
நெஞ்சு குதறி விம்மிய அழுகையை அடக்கிக் கேருந் தொனியில் தன்னாரவார சொல்கிறாள்:
‘கம்பசுக்குப் போனதால புத்தி முத்திப் போச்சு. இனி எல்லாம் முடிஞ்சுது’
வெக்காளம் கெம்ப அவன் கேட்டான்:
‘உங்களுக்குத்தான் புத்தி பேதலிச்சுப்போச்சு. இப்ப என்னத்தைக் கண்டு போட்டு உப்பிடியெல்லாம் அலம்பிறியள்?’
‘அந்தப் பெட்டையைப் பற்றிக் கேக்க உனக்கேன் உப்பிடிக் கோவம் வருது?’
‘சும்மா தேவையில்லாத கதையள் பறைஞ்சா ஆருக்குத்தான் கேந்தி வராது?’
‘ஒரு ‘தொடசலும்’ இல்லாம இந்தப் படம் இஞ்ச எப்பிடி வரும்?’
‘ஒரு வேளை தங்கச்சியவளவயோட பழக்கமோ....?’
‘எடி பிள்ளையள்’ என்று கூப்பிட்டாள்.
‘என்னண்ணை?’ என்று கேட்கும் சாங்கத்தில் நின்ற பிள்ளகைளிடம் கேட்டாள்:
‘இந்தப் பிள்ளைய உங்களுக்குத் தெரியுமோ?’
‘ஏதோ சில்லெடுப்பாக்கும்....’
‘ஓம்’ என்று இருவரும் தலையாட்டியபோது இவள் அசந்தேபோனாள்.
‘இந்தப் படம் இறப்புக்குள்ள ஏன் வருவான்?’
‘நான்தான் வச்சிட்டு எடுத்து வைக்க மறந்து போனன்’ என்றாள் மூத்தவள்.
தமையனைக் காப்பாற்றியதால் தாய்க்கு வஞ்சகம் செய்கிறேனோ என்று தன்னுள் சஞ்சலித்தாள்.
‘என்ர அவசர புத்தி ஒண்டுமறியாததின்ர மனசைக் குழப்பியிட்டுதே’ என்று தாய் வேதனை தாங்காது தவித்தபோது கண்கள் கசிந்தன.
‘இனி எந்தப் பிள்ளையிட்டயும் எதையும் விடுத்துக் கேட்டு மொக்கேனப்படக்கூடாது’ என்று தன்னைக் கடிந்து கொண்டாள்.
‘வட மாகாணம் கம்பஸ் வந்தால் யாழ்ப்பாணம் உருப்படாது’ என்று சொன்னவர்களையும் தன்னாரவாரம் திட்டித் தீர்த்தாள்.
அவள் முகம் இப்போ முகை விரித்த மொட்டு இதழ்போல் சிலிர்த்தது.
‘நாசமறுந்த ராட்சதன் அப்புக்குட்டியாலயும், பொறாமை பிடிச்ச ஊரவையாலும் என்ர பிள்ளையில ஐமிச்சப்பட்டேனே’
பொச்சம் தீர ஒரு பாட்டம் அப்புக்குட்டியையும் ஊரையும் முனிந்து பெருமூச்சு விட்டாள்.
போறணையில் பாண் எடுத்து வாடிக்கைக் கடைகளுக்கு விற்றுக்கொண்டிருந்த இவள் பேரன், ‘திடீ’ரென்று தோளில் துவக்கோடு செக்கல் நேரம் குச்சொழுங்கையால் மோட்டச் சயிக்கிளில் போன வேகத்தில் ஊர் மறுபடியும் கிலி கொண்டது.
யாழ்ப்பாண வட்டாரத்தில் பதினாறு பெருங்கிராமங்களைச் சுற்றி வளைத்து சும்மா கிடந்த முழு மனுமாஞ்சாதிகளையும் பயங்கரவாதிகளாக்கி அள்ளி ‘றக்’குகளில் போட்டு வதை முகாம்களுக்குள் சித்திரவதை செய்த அரச மிருக ராணுவம் ஊருக்குள் மறுபாட்டம் இறங்கி வேட்டையாட எத்தனிக்கிறதோ என்று இவள் ஏங்கினாள்.
‘இந்தப் பிள்ளை எந்த அத்திவாரத்தைப் போட்டு ஆமியோட மோத வெளிக்கிட்டான்..... எடுத்தவாக்கில் ஊருக்கும் தெரியாமக் கொடுக்குக் கட்டினா அழிவுதானே வரும்’
இப்படியான பேச்சுக்கூட ‘தவறணைக் குடிகாறரின் விடிஞ்ச பேச்சு’ என்று ஒதுக்கினாலும், அதில் ஒரு சரியான அர்த்தம் இருப்பதாகவே இவளுக்குப் பட்டது.
அன்று இரவு இவள் நித்திரை இல்லை. அந்தப் பேரனே மனசில் - கண்ணில் - சிந்தனையில் வலை பின்னிச் சுழன்றடித்தான்.
கரையோர வான வெளியில் ‘ஹெலிக்கொப்டர்’கள் போல் மீன் கொத்தி வல்லூறுகள் குஞ்சுகளை இறாஞ்ச வட்டமிடுகிறதை, ‘ஐயோ, ஆமி பிளேனில் நிண்டு குண்டு போடுறான்’ என்று கிராமம் குய்யோமுறையோக் கூச்சலில் அல்லோலகல்லோலப்படுவதை இவளும் பிள்ளைகளும் கேலியாகக் கருதி மேலே பார்க்க உண்மையாக ஹெலிகொப்டர்களே குண்டு வெடிகளைத் தீர்த்துக்கொண்டிருந்தன.
பதுங்கு குழிகளுக்குள ஊரே அடங்கிவிட்டது.
இவள் மனம், வாக்கு, கிரிகை, சிந்தனை ஒடுங்கி, ‘அய்யோ கம்பசுக்குப் பிள்ளை இன்னும் வந்து சேரவில்லையே ?’ என்று தொண்டை வறளக்கேரி ஒப்பாரி வைத்துக் கெந்தகித்துக் கொண்டிருந்தபோது....
‘கம்பஸ் பெட்டையொண்டைச் சுட்டுப் போட்டாங்கள்’ என்று சடுதியாக ஒரு கதை பரவி இவள் காதில் நச்சிரமாய் விழுந்தது.
சரீரித்து விறைத்த மண்டை கூழ் முட்டையாக உலும்பிச் சிலும்பிற்று.
நிலமதிருமாப் போல் வெடிகுண்டுகள் வானமடங்க நெருப்பாய்ச் சீறி, மின்மினிப் பூச்சிகளாக இவள் மனக் கண்ணில் மொய்க்க.... ‘விறுக்’கென்று உன்னி எழுந்து ஆவேசம் பிடித்தவளாக எகிறி நடந்து, செத்தை பிரித்து அந்தப் ‘பெட்டை’ படத்தை ஆவலோடு தேடினாள். புகை கக்கி நாறும் ஒரு துவக்கு..... மண்டைக்குள் எரிமலை வெடித்தது. மின்சாரித்த கண்கள் ‘திக்’கிட்டு மின்னின. சடலத்தில் ஊனம் கும்ம....
நெஞ்சில், தொண்டையில், கமண்டலத்தில் ஓங்கி ஓங்கி அடித்து, இந்தத் தாய் ‘ஓ’வென்று கதறினாள்:
‘ஆ.... என்ர ராசாத்தி......!’
அனுப்பியவர்: நவஜோதி யோகரட்னம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.