'நைட் ஸிஃப்ட்" வேலை முடிந்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்து சேர எட்டு மணியாகிவிட்டது. நித்தியும் கோபாலும் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள் என்பதை பூட்டியிருந்த கதவு காட்டியது. இப்படி சில நாட்களில் அவர்களுக்கு பொறுப்புணர்வு மிகுதியானதுபோல் நேரத்துடன் வேலைக்குப் போய்விடும் அற்புதம் நடப்பதுண்டு. கதவைத் திறந்து வீட்டுக்குள் போனதும் தனிமையை மறக்க ரேடியோவை 'ஓன்" பண்ணினேன். 'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…" என அது பாடியது. இரவு வேலைக்குப் போகிறவர்களெல்லாம் தூக்கம் கெட்டு கடமையே கண்ணாக இருப்பார்களாக்கும் என அது அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இப்போது உறங்க முடியாது. சமையல் வேலை காத்துக்கொண்டிருக்கிறது. உத்தியோக நிமித்தம் இந்த நகரத்துக்கு வந்து தங்குமிட வசதி கருதி ஒன்று சேர்ந்தவர்கள் நாங்கள். நகரத்தையண்டிய பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறியிருந்தோம். நித்தியானந்தன் கிராம அபிவிருத்தி அலுவலராக வேலை பார்க்கிறவன். கோபாலச்சந்திரன் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி. தொழிற்சாலை ஒன்றில் 'ஸிஃப்ட் என்ஜினியரா"கக் கடமையாற்றுகிறவன் நான். அன்றாடம் வேலைக்குப் போவது, வருவது, சாப்பாட்டுக் கடைகளில் போய் எதையாவது வயிற்றுப்பாட்டுக்குப் போட்டுவிட்டு வந்து அறைகளில் ஒதுங்குவது என்று எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. உப்புச் சப்பில்லாத இந்த வாழ்க்கைக்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாமே எனக் கருதி 'நாங்களே சமைக்கிற" திட்டத்தை ஆரம்பித்தோம். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. மூவருமே திருமண வயதில் (திருமணத்தை எதிர்பார்த்து) காத்திருக்கும் இளைஞர்கள். வந்து வாய்க்கப்போகிற மனைவிக்குச் செய்யவேண்டிய பணிவிடைகள் பற்றிய பயம் (அல்லது ஆர்வம்) உள்@ர எங்களுக்கு இருந்தது. விளையாட்டாகவேனும் சமையற் கலையைக் கற்றுத் தேர்ந்துவிடலாமே என்ற ஆசைதான்.
அரிசியை சுளகில் எடுத்துக்கொண்டு வெளித்திண்ணைக்குப் போனேன். அரிசி கொழிப்பதென்பது மிக நுட்பமாகச் செய்யவேண்டிய பணி. நெல், கல், உமி, குறுணல் இத்யாதி சரக்குக்களையெல்லாம் அப்புறப்படுத்தும் வித்தை கை வருவதற்கு சில நாட்கள் பிடிக்கும். ஒரு வகையில் பார்த்தால் மனதுக்கு சலிப்புத் தரும் வேலை இது. ஆனால் இதற்காகவே விசே~மாக படைக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் என்பது போல பெண்கள் மிக நிதானமாக அரிசி கொழிக்கும் காட்சிகளை நினைவில் கொண்டுவந்து இவ்வேலையை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளப் பழகியிருந்தேன். எனினும் வெளித்திணைக்குப் போவது சலிப்புணர்வை போக்கடிக்கும் நோக்கத்தில்தான். அரிசியின் வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டோ அல்லது எனது வருகையின் அசுகையை தெரிந்து கொண்டோ வழக்கமாக வரும் கோழிகள் என் மனதைத் கவர்ந்திருந்தன.
அரிசியை கொழித்தவாறு வேலிப்பக்கம் நோட்டமிட்டேன். முதலில் அந்தச் சேவல் வந்தது. சிறகை அடித்து ஒரு முறை கூவியது. தலையை திருப்பித் திருப்பி இந்தப் புறமும் அந்தப் புறமும் பார்த்தது. பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு குனிந்து தீன் பொறுக்குவதுபோல பாசாங்கு செய்து பேடுகளை அழைத்தது. பேடுகளும் இந்தப் பக்கம் வந்ததும் நான் ஒரு சிறங்கை அரிசியை எடுத்து வீசினேன். சேவலும் அதோடு சேர்ந்து இளங்கோழிகள் இரண்டும் ஓடிவந்தன. சேவல் 'கொக்! கொக்!" என நிலத்தைக் கொத்தி பேடுகளைச் சாப்பிடச் சொன்னது. கறுப்புக் கோழி ஒரு வயதான பெண்ணைப்போல இடுப்பை அசைத்து அசைத்து ஓடமுடியாது அப்போதுதான் ஓடிவந்து சேர்ந்தது. வந்ததும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் விட்டு இளங்கோழிகளுக்கு கொத்கொத்தென கொத்தியது. மனிதர்களிடம் மட்டுமன்றி பிராணிகளிடமும் பொறாமை உணர்வு உள்ளதுபோலும்!
இளங்கோழிகள் அப்பால் விலகி ஓட, சேவல் இடையில் புகுந்து விலக்குப் பிடித்தது. ஒரு காலைத் தூக்கி சிறகொன்றை விரித்து ஒருமுறை சுழன்று நடனமாடுவதுபோல கோழிகளைக் கவர்வதற்கு முயன்றது. தான் ஓரிரு பருக்கை அரிசியை மட்டும் கொத்தி எடுத்துக்கொண்டு பேடுகளை வயிறு நிறைய சாப்பிடவிட்டு மனம் நிறையப் பார்த்து நின்றது. பிராணிகளின் வாழக்கையில் நிறைய அர்த்தங்கள் உள்ளன. அவைகளிடத்தில் அன்பும் காதலம் உண்டு.
'கேற்" திறக்கப்படும் சத்தம் கேட்டது. நித்திதான் வருகிறான் என நினைத்துக்கொண்டு எழுந்தேன். சமையலுக்கு ஏதாவது கறி வாங்கி வருவான் என அவனைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அவனோ வெறுங்கையுடன் வருவது தெரிந்தது.
'என்ன நித்தி?..... கறிக்கு ஒன்றும் வாங்கி வரவில்லையா?"
அவன் கையைச் சொறிந்துகொண்டு நின்றான். எனக்கு விளங்கிவிட்டது. அவனது கையிற் பணம் இல்லை. என்ன செய்யலாமெனச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். அவனைப் பொறுத்தவரை இது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய வி~யம்தான். மச்சக் கறியில்லாது நித்திக்குச் சாப்பாடு இறங்காது. எதை இழந்தாலும் ஒரு நேரச் சாப்பாட்டை இழக்கத் தயாராயில்லாதவன் அவன். எனக்கு நித்தியை சீண்டவேண்டும் போல ஒரு விளையாட்டு உணர்வு மூண்டது.
'உனக்கு கோழிக் கறி விருப்பமா?"
என்னை ஒரு ஏளனப் பார்வை பார்த்தான் நித்தி. ஒரு முழுக் கோழி வாங்கக் கூடியளவுக்கு கையிற் பணப்புழக்கம் இல்லாதவன்… சம்பளம் எடுத்த மறுநாளே அப்பாவின் கடன் சுமைகள், தம்பியவர்களின் படிப்பு செலவுகள் போன்றவற்றுக்கு பணம் அனுப்பிவிட்டு வெறும் கையோடு திரிகிறவன் கோழி வாங்குவதாவது! இதுதான் நித்தியின் பார்வைக்கு அர்த்தம்.
நான் மேலும் புதிர் போட்டேன்.
'உனக்கு கோழி உரிக்கத் தெரியுமா….? அது மட்டுமல்ல கோழியைக் கொலை செய்து உரிக்கவேணும்… அது உன்னாலே முடியுமா?" கொலை என்றதும் பின்வாங்கிவிடுவான் என மனக்கணக்குப் போட்டுக்கொண்டுதான் இப்படிக் கேட்டேன். அவன் அலட்சியமாகப் பதில் சொன்னான்: 'கொலை செய்வது பெரிய வேலையா? குண்டுகள் போட்டு மனிசரையே கொண்டு குவிக்கிறாங்கள்…! இது சிம்பிள்!... பகிடி விடாமல் சொல்லு! என்ன, கள்ளக்கோழி பிடிக்கப் போறியா?"
நித்தி எனது ரோச நரம்பைத் தட்டிவிட்டதுபோலிருந்தது. எனினும் அவன் கேட்டது சரி! கள்ளக் கோழிதான்! எப்படியோ, ஒரு கோழியைப் பிடிக்கவேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டதை உணர்ந்தேன்.
'நீ இங்கையே நில்! நான் ஒரு கோழியோட வாறன்!" எனக் கூறி அரிசிச் சுளகை, எடுத்துக்கொண்டு வெளித்திண்ணைக்குப் போனேன். கோழிகள் அங்கு இன்னும் என்னை எதிர்பார்த்துக் காத்து நின்றன. அரிசி கொழிக்கும் அலுவலை நிறைவு செய்யாமல் நான் இடை நடுவில் எழுந்து போனதை அவை கவனித்திருக்கக் கூடும். கொஞ்ச அரிசியை எடுத்து வீசினேன். கோழிகள் அண்மையில் ஓடி வந்தன.
'உனக்கு எது வேணும்…? பார்த்துச் சொல்லு!" எனக் குரல் கொடுத்தேன். நித்தி கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தான். கோழிகள் கலைந்துவிடக்கூடாது என்பதில் அவன் என்னைவிட உசாராக இருப்பது தெரிந்தது.
கையை நீட்டிக் காட்டினான். 'அந்தக் கறுப்புக் கோழி!"
நான் எதிர்பார்த்த பதில்தான். பிடிக்கிறதுதான் பிடிக்கிறோமே அது பெரிசாகவே இருக்கட்டும் என்றுதான் அவனும் நினைத்திருக்கிறான். கோழியைப் பிடிக்கப்போகிறேன் என்றதும் ஒரு மனத்தயக்கம் ஏற்பட்டது. இவ்வளவு தூரம் வந்த பிறகு பின்வாங்கக் கூடாது. மனதைத் தைரியப்படுத்தினேன். என்னாலும் சில காரியங்களைச் சாதிக்க முடியுமென்று நித்திக்கு காட்ட வேண்டாமா என்ன? மனோரீதியாக என்னைத் தயார் படுத்திக்கொண்டதும் (கள்ளக்) கோழி பிடிப்பவனுக்குரிய எச்சரிக்கையுணர்வும் தானாகவே வந்து சேர்ந்துகொண்டது. கோழியைப் பிடிக்கும்போது அது அவலக் குரல் எழுப்பாது பார்த்துக்கொள்ள வேண்டுமே…. இன்னும் கொஞ்ச அரிசியை கையில் எடுத்து வீசினேன். கோழிகள் அண்மையில் அண்மையில் வந்தன. கறுப்புக் கோழிக்கு கையை வளம் பார்த்துப் பார்த்து – சட்டென எட்டி அதன் கழுத்தைப் பற்றினேன்.
'கொக்" என ஒரு விக்கல் சத்தம் மட்டும் கேட்டது. தொண்டடைக் குழியில் ஒரே அழுத்தாக அழுத்திப் பிடித்துக் கொண்டேன். ஏனைய கோழிகள் கொக்கரித்தவாறு துள்ளிப் பறந்தன. சேவல் ஆட்களைக் கூப்பிடுவது போல கொக்கரித்துக்கொண்டே நின்றது. 'நித்தி!.... நித்தி….!" நான் அவலக்குரல் எழுப்பினேன். கதவைத் திறந்து கோழியை என் கையிலிருந்து அதே ஸ்டைலில் (கழுத்தில் கையை அழுத்தி) வாங்கிக் கொண்டான். உள்ளே வந்து கதவைப் பூட்டினேன்.
சேவல் கொக்கரித்து ஓயும்வரை நான் மூச்சு விடாமல் நின்றேன்.
நித்தியைத் திரும்பிப் பார்த்தால் அவன் சர்வ சாதாரணமாக தன் கால்களுக்குள் கோழியின் கால்களை மிதித்து வைத்துக் கொண்டு அதன் தலையை இழுத்து பிடித்துக் கழுத்தை ஒரு கத்தியினால் அரிந்துகொண்டிருந்தான். இரத்தம் கொப்பளித்துச் சீறியது. அதை அப்படியே போட்டுவிட்டு நிமிர்ந்தான்.
வெட்டிய தலையுடன் கோழி இறக்கையை அடித்துத் துடித்தது. பின் அடங்கிப்போனது. நான் அதிர்ந்து பேச்சற்று நின்றேன். கொலை! இது எப்படி நடந்து முடிந்தது?
அரிசியைக் கண்டதும் ஓடி ஓடி வந்த அதன் கால்கள் உயிரற்று விறைத்துப்போய்க் கிடந்தன.
ஏனைய பறவைகளைப் போல உயர உயரப் பறக்க முடியுமானால் அது பறந்தே தப்பிப் போயிருக்கும். சிறகிருந்தும் பறக்க முடியாத கோழி இனத்தின் மேல் பரிவு ஏற்பட்டது.
பறந்து போக முடியாமையினாற்தான் அவை மனிதனை அண்டி வாழ்கின்றனபோலும். தனக்கு இப்படி ஒரு கதி நேரும் என அந்தக் கறுப்புக் கோழி நினைத்திருக்காது. அதை எண்ணி மனம் கசிந்தது. நான் செய்தது சரியில்லை என குற்ற உணர்வு என்னைக் குத்தியது. நித்தி இந்தக் கவலை எதுவுமின்றி தன் பாட்டுக்கு (பாடிப் பாடி) கருமமே கண்ணாயிருந்தான். ஒரு பேப்பரை நிலத்தில் விரித்து அதன் மேல் கோழியைக் கிடத்தினான்.
'ஒரு இறகுகூட வெளியில் விடக்கூடாது. யாருக்கும் தெரியக்கூடாது. யாருக்கும் தெரியவந்தால் அவ்வளவுதான்…! கள்ளக் கோழி பிடிச்சவங்களென்று பொலிசிலை பிடிச்சுக் குடுத்தாலும் குடுத்திடுவாங்கள்!"
‘பொலிஸ்…. அது இது’ என நித்தி என்னைப் பயமுறுத்துகிறானோ என்று தோன்றியது. ஆனாலும் அவனது புத்திசாலித்தனைத்தை மெச்சத்தான் வேண்டும். கோழி உரித்த கழிவுகளையும் இறகுகளையும் அப்படியே பேப்பரில் சுற்றி எடுத்துப் புதைக்கப்போகிறான் போலிருக்கிறது. 'அப்படித் தானே?" என்று கேட்டேன்.
'நல்லாய்த்தான்…! நாய்கள் விட்டுவைக்குமா? மோப்பம் பிடிச்சு கிளறியிடுமே? பிறகு வேற வில்லங்கமே தேவையில்லை! அயலிலை உள்ளங்களெல்லாம் இஞ்ச பொல்லோட வந்திடுவாங்கள்..!"
இப்போது நான் உண்மையிலேயே பயந்தேன். 'அப்ப என்ன செய்யலாம்?" எனது குரலும் அடைத்துக்கொண்டது.
'நீ ஒன்றுக்கும் பயப்பிடாதை…. நான் பார்த்துக் கொள்ளுறன்…. எல்லா அலுவலும் முடிஞ்ச பிறகு இதை அப்படியே கொண்டு ஆற்றிலோ குளத்திலோ எறிஞ்சுவிடலாம்." நித்தி அபயமளித்தான். இந்தக் கட்டத்தில் எனக்கு அவனை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஏதோ கொலைக் குற்றத்திலிருந்து என்னைத் தப்பவைக்கப் போகிறவனாகக் கருதிக்கொண்டு அவனிடத்தில் கட்டுப்பட்டுப்போய் நின்றேன்.
'யன்னற் கதவுகளைச் சாத்து!" அவன் கட்டளையிட ஓடிச் சென்று கதவுகளையெல்லாம் பூட்டினேன். பின்னர் வந்து அவனது அடுத்த ஏவலுக்காகக் காத்து நின்றேன். கோழி தன் கைக்கு வந்த நேரமுதலே அவனும் ஒரு புதிய தோரணையுடன் உருக்கொண்டு நின்றான்.
'சட்டியை எடுத்துக்கொண்டு வா!"
கொண்டு வந்தேன்.
கை வேறு கால் வேறாக இறைச்சியை வெட்டி சட்டியில் போட்டான். கோழியின் நெஞ்சைப் பிழந்தான். வயிற்றப் பாகத்தை கிழித்ததும் அதனுள்ளிருந்த ஒரு முட்டையைக் கையில் எடுத்தான்.
'இந்த பார்த்தாயா…. முட்டை!... இந்தக் கோழி சாகாமல் இருந்தால் இன்றைக்கு இடவேண்டிய முட்டை….!"
இப்படி அவன் சொன்னதும் எனக்கு வலித்தது. கோழியைப் பிடித்தக் கொடுத்துக் கொலை செய்வதற்கு உடந்தையாயிருந்த பாவத்தை நினைத்து வருத்தமேற்பட்டது.
சமையல் செய்துகொண்டிருக்கும்போது நித்தி என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.
'இது கள்ளக்கோழியென்று கோபாலுக்கு சொல்ல வேண்டாம். சரியா?"
செய்த காரியத்துக்காக நித்தி வெட்கப்படுகிறானோ என நினைத்தேன். அல்லது எதற்காக கோபாலுக்கு சொல்லக்கூடாது என்கிறான்? கள்ளக்கோழி பிடித்தவனை கேவலமாக நினைக்குமளவிற்கு கோபாலன் உத்தமமான ஆளுமல்ல….
கோழியைப் பிடித்தாயிற்று! சாப்பிடவும் போகிறோம். ஆனால் மனது ஏதோ ஒருவிதத்தில் குழப்பமடைந்து போயிருக்கிறது.
'அகப்பட்டுவிடுமோ?" என்ற பயமும் ஒரு புறம். இதைக் கோபாலனிடம் சொல்லாமல் விடலாமா? அவனது நிம்மதியையும் குலைக்காமல் விடுவது சரியா? 'ஏன் சொல்லக்கூடாது?" என நித்தியிடமே கேட்டேன்.
'அவன் பயந்தவன்…. சாப்பிடமாட்டான்! ஆளை விடக்கூடாது! கோழி பிடிச்சது நாங்கள்தான் என்று தெரியவந்திட்டால் நாலு சாத்து சாத்தாமல் விடுவாங்களா? அவனையும் சேர்த்துக்கொண்டால் அவனும் சேர்ந்து வாங்குவான்..! யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம்!"
'சரி! ஆனால்.. சாப்பிட்ட பிறகு அவனுக்குச் சொல்லுவம்!" என எனது திருத்தக் கருத்தையும் தெரிவித்தேன். சாப்பிட்ட பின் கோழித்தூக்கம் போடுவான் கோபாலன். 'அட்லீஸ்ட்" அதையாவது கெடுத்துவிடலாமே என்ற நோக்கம்தான். மேசைக்கு சாப்பாடு வந்ததும், கோழியின் உயிரைப் பற்றியதும் கோழிச் சொந்தக்காரர்களைப் பற்றியதுமான பாவ பயங்களெல்லாம் பறந்துபோனது. நித்தியின் கைப்பட்ட சமையலின் மகத்துவம் அது! அவன் சமையற்கலையில் வல்லுநன். இந்த வி~யத்திலாவது வரப்போகிற மனைவியிடம் நல்ல பெயர் எடுத்துவிடுவானே என எங்களுக்கு அவன்பால் பொறாமையும் உண்டு. சாப்பாடு முடிந்ததும், இது யார் வீட்டுக் கோழியாக இருக்கும், இன்னாருடைய கோழியாக இருந்தால் சாதக பாதகங்கள் எப்படி இருக்கக்கூடும் என ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அண்டை அயலவர்களின் குணங்களும் 'பலம்களும்" அலசி ஆராயப்பட்டன. பொழுதுபட, பக்கத்து வீட்டில் சத்தம் கேட்டது.
'பா…. பா….. பா….."
வேலிக்கு இந்தப் பக்கமாக நின்று காது கொடுத்துக் கேட்டோம்.
'எங்க போயிருக்கும்?.... வழக்கமாக இருட்டுபடமுதல்ல மற்ற கோழிகளோட வந்திடுமே…. பா!....பா!...பா…!"
ரோசலின் அண்டியின் குரல் அது. இரவு இரவாகவும் அந்தக் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. மூலை முடுக்குகள், மரக்கிளைகளெல்லாம் ரோர்ச் அடித்து தேடிக்கொண்டிருப்பது கேட்டது. நித்தி என்னைப் பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தான். அவர்கள் கோழியைத் தேடிக்கொண்டிருக்க நாங்கள் அதே கறியுடன் இரவுச் சாப்பாட்டையம் நடத்திக் கொண்டிருந்தோம்.
அடுத்த நாள் காலை வேலைக்கென கிளம்பி வாசல்வரை போன கோபாலன் திரும்பி ஓடிவந்தான்.
'வாராங்க!..... வாராங்க!.... கோ…. கோழி…. கோழி…!" அதே ஸ்பீட்டில் ரொய்லட்டுக்குள் ஓடிச்சென்று கதவைப் பூட்டிக் கொண்டான். இன்னொரு ரொய்லட் இல்லாத காரணத்தால் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொள்ளலாம் என நான் ஓடினேன்.
'ஏன்டா பயந்து சாகிறீங்கள்…. வாங்கடா…! சமாளிக்கலாம்!" நித்தியின் கத்தல் என்னை தடுத்து நிறுத்தியது. தான் தனித்துவிடப்பட்டுவிடுவோமோ என்ற பயம் அவனுக்கு!
வாசலுக்கு வந்தோம். ரோசலின் அன்டி வாசலைத் திறந்து உள்ளே வந்தார்.
'ஒரு கோழியைக் காணயில்லை… இந்தப் பக்கம் வந்திச்சுதா… மகன்?"
'கோழியா? எப்படியிருக்கும்?" சீவியத்திலேயே கோழியைக் காணாதவன் மாதிரி பாவனை செய்துகொண்டிருந்தான் நித்தி. ரோசலின் அன்டியைக் குழப்புகிற உத்திதான் அது. 'என்ன நிறம்?" என்றான். ஆனால் அன்டியின் சோகமான தோற்றம் என்னை நெகிழ்த்தியது. அவரது தரப்பு சாட்சியாக மாறிவிடுவதென அக்கணமே தீர்மானித்து, 'கறுப்பு!" என்றேன்.
'உனக்கு எப்படித் தெரியும்? பேசாமலிரு!" என எனக்கு ஒரு குட்டுப் போட்டான் நித்தி. அதன் வலிமை எனது வாயை மூடியது. 'அந்தத் தம்பி சொல்றது சரி… கறுப்புக் கோழிதான்..! அன்டி இன்னும் அப்பாவித்தனமாகப் பேசிக் கொண்டிருந்தார்." 'அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க எங்களுக்கு எங்க நேரமிருக்கு? வேலைக்குப் போய் வரவே பொழுது பட்டிடும்! நீங்கள் போங்கோ, கோழி திரும்பி வந்திடும் போங்கோ!" நித்தி சொல்வதைக் கேட்டும் சமாதானமின்றி ரோசலின் அன்டி போகாமலே நின்றார்.
'முட்டையிட்டுத் தந்து கொண்டிருந்த கோழி.. நேற்று முட்டையிடக் கூட வரயில்லை மகன்..!" அன்டி அழுதேவிடுவார் போலிருந்தது. மந்திரவித்தை காண்பிக்கிறவன்போல நித்தி எடுத்துக் காட்டிய முட்டை எனக்கு நினைவில் வந்தது. (பார்த்தாயா.. கோழி சாகாமல் இருந்தால் இன்றைக்கு இடவேண்டிய முட்டை!)
ரோசலின் அன்டியின் நிலைமையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. கோழி வளர்ப்பதும் முட்டை எடுத்து விற்பதும் அவர்களுடைய ஜீவனோபாயத்தை சரிக்கட்டுகிற முயற்சியாயிருக்கலாம். அவருடைய கணவர் சரியான வருமானமற்றவர். சில்லறைக் கடையொன்றில் பணியாளராக உள்ளார். அவர்களது வயிற்றிலே கையை வைத்துவிட்டோமே எனக் கவலையிருந்தது.
'இந்தப் பக்கம்தான் கோழியள் அடிக்கடி ஓடிவரும்… தேடிப்பார்த்து சொல்லுங்க…. மகன்…. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்." அன்டி நித்தியைப் பார்த்து கெஞ்சும் தொனியில் கேட்டார். அவனோ தன் தொனியைக் கடுமையாக்கினான்.
'எங்களுக்கு வேற வேலையில்லையா….? உங்கட கோழியைத் தேடிக்கொண்டிருக்க….? அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது…. கரைச்சல் தராமல் போங்கோ!"
அந்தச் சத்தம் வேலை செய்தது. அன்டி திரும்பிவிட்டார். அதே கடுமையுடன் என்னைப் பார்த்தான் நித்தி.
'இப்படியான விடயங்களில் இரக்கப்படக்கூடாது! ஏதாவது உளறிக்கொட்டினால்… பிறகு எல்லாருமாய்ச் சேர்ந்து மாட்டுப்பட வேண்டியதுதன்." ஒவ்வொருத்தருக்கும் என்ன மாதிரி போடு போடவேண்டும் என அவனுக்குத் தெரிந்திருக்கிறது. நான் அடங்கிப்போனேன். அடுத்த நாள் நானும் நித்தியும் கடைத்தெருவுக்கு போய்விட்டு வந்து கொண்டிருக்கும்போது ரோசலின் அன்டி தன் வீட்டிலிருந்து புயலெனக் கிளமபி; வந்துகொண்டிருந்தார். நான் சற்றுப் பயந்து வந்த வழியே திரும்பிவிடலாமோ என நினைத்தேன். தூரத்திலிருந்தே எங்களை இனங் கண்டுகொண்டவர் போல வலு வீச்சாக வந்தார். 'கோழி ஓரிடத்தில நிக்கிறதாய் தகவல் கிடைச்சிருக்கு மகன். ஆண்டவன் என்னைக் கைவிடவில்லை!"
நித்தியை பார்த்தே இந்தச் சங்கதியைச் சொன்னாலும் 'அப்படியிருக்க முடியாதே" என நான் தடுமாறினேன். எனது வாய் உளற முற்பட்ட தருணத்தில் நித்தி உறுமல் போட்டு என்னைத் தடுத்தாட்கொண்டான். எனினும் ஆண்டவனின் செய்கையை நாங்கள் மெச்சினோம். அவருக்கு இப்படி ஏதாவது அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தால் மிகவும் நல்லதுதான். எங்களைப் போன்ற (அப்)பாவிகள் வீணாகப் பழிவாங்கப்படாமல் தப்பித்துவிடலாம்!
வீட்டுக்கு வந்து சேர்ந்தும் இருப்புக் கொள்ளவில்லை. 'வாடா போய்ப் பார்ப்பம்!" என்றான் நித்தி. எனக்கும் மேற்கொண்டு என்ன நடக்கிறது என அறியும் ஆவல். ரோசலின் அன்டி போன திக்கில் நடந்தோம். நாலாவது வீட்டின் முன் சிலர் கூடியிருந்தனர். அன்டியின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
'மூணு நாளாய் கோழியைக் காணயில்ல. நான் தேடித் திரியிறன்…. அதைப் பிடிச்சு அடைத்து வைச்சுக்கொண்டு… கேட்டால், கோழியை காட்டிறாங்களும் இல்லை…. சண்டைக்கு வாறாங்களே!"
'சண்டைக்கு வாறது நீங்களா? நானா? எங்கட கோழிதான் கூட்டில இருக்கு. சும்மா சத்தம் போட்டு ஊரைக் கூப்பிடாமல் போங்கோ!" அந்த வீட்டுக்காரரின் குரல் அடைத்துப் போனமாதிரி வெளிவந்தது.
ஆனால் அன்டி அதைக் கேட்கும் நிலைமையில் இல்லை. சன்னதம் தலைக்கேறுவதுபோலக் கத்தினார். சிலர் கட்டுபடுத்த முயன்றார்கள். முடியவில்லை. நாலாவது வீட்டுக்காரருக்கும் ஐந்தாவது வீட்டுக்காரருக்கும் உறவு நிலை சுமுகமில்லை. அதனாற்தான் இப்படியொரு தகவலைக்கொடுத்துவிட்டு தன் வீட்டுக்குள் பதுங்கிவிட்டார் அவர். அது புரியாமல் அன்டி தன் வாக்கு வாதத்தின் உச்சக்கட்டத்தில் 'அந்த மனுசன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்…. நான் இஞ்ச ஆதாரமில்லாமல் வரயில்ல" என பக்கத்து வீட்டைக் காட்டி சத்தம் போட பிரச்சினை வேறு வடிவம் எடுக்கத் தொடங்கியது. இடத்தை விட்டு நாங்கள் மெல்ல நழுவினோம். எப்போதும் ஒரு சாதுவைப்போல தோன்றும் அன்டியின் ருத்ர தோற்றம் எங்களுக்கு ஆச்சரியமாயுமிருந்தது. எப்படியாவது கோழியைக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற ஆவேசமாயுமிருக்கலாம்.
நாட்கள் ஒன்றிரண்டெனக் கழிந்துகொண்டிருந்தன. ரோசலின் அன்டி தன் முயற்சியைக் கைவிடவில்லை. 'பா!..... பா!.... பா….!" என அடிக்கடி அந்தப் பக்கத்தில் அழைப்பொலி கேட்கும். அயலிலுள்ள வீடுகளிலெல்லாம் அலைந்து திரிந்தார். அவரது உடலிலும் மெலிவும் தளர்வும் ஏற்பட்டிருப்பது போலிருந்தது. முகத்தில் வாட்டம் தெரிந்தது. கண்டும் காணாதவர் போலப் போகிற ஒருவித மன அழுத்த நிலைக்கு ஆட்பட்டபவர்போலத் தோன்றினார். அல்லது…. எங்கள் மேலே சந்தேகமோ?
அரிசி கொழிப்பதற்காக வெளித்திண்ணைக்குப் போவதை நான் சில நாட்களுக்குத் தவிர்த்திருந்தேன். மற்றக் கோழிகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் குற்ற மனப்பான்மை உறுத்தியது. நாளாக ஆக மனம் சற்று மாறிக்கொண்டு வந்தது. மற்றக் கோழிகளைப் பார்த்தால் மனம் ஆறும் போலிருந்தது. ஆனால் அந்தக் கோழிகளும் இந்தப் பக்கம் வருவதில்லை என்பதை சில நாட்களுக்குள்ளே புரிந்துகொண்டேன். இவை தாமாகவே பயத்தில் வராமல் விட்டுவிட்டனவா? அல்லது ரோசலின் அன்டியே எங்கள் மேல் சந்தேகம் கொண்டு அவற்றை அடைத்து வைத்திருக்கக்கூடுமோ என்பது புரியாமல் இருந்தது. காரணம் எதுவாயிருப்பினும் நாங்கள் ஏதோ ஒருவிதத்தில் சிறுமைப்படுத்தப்பட்டுவிட்டது போல மனம் சங்கடப்பட்டது. கோழிகள் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா எனப் பார்க்கவேண்டும் என ஓர் உந்துதல் ஏற்பட்டது.
ஒரு மரக்கட்டையை வைத்து அதன் மேல் ஏறி வேலிக்கு மேலாக எட்டிப் பார்த்தேன். அந்தப் பக்கம் கிணற்றடியில் ரோசலின் அன்டியின் மகள் தென்பட்டாள். நான் நோக்கிய தருணத்தில் அவளும் நோக்கி அந்தக் கணத்திலேயே தண்ணீர் அள்ளிய வாளியையும் விட்டு ஓட முற்பட்டாள். இது கோழி பிடித்ததை விடப் பெரிய வில்லங்கத்துக்குள் போய் முடியப்போகிறது எனத் தடுமாறி இந்தப் பக்கமாக நான் விழுந்தேன். சத்தம் கேட்டு ஓடிவந்த நித்தி கட்டைக்கு மேலே ஏறி அந்தப் பக்கம் பார்த்துவிட்டு 'கள்ளா எத்தனை நாளாக இந்த விளையாட்டு?" எனக் கேட்டான்.
இப்படி ஒரு சங்கதி இருப்பதை தங்களுக்கு ஏன் இவ்வளவு நாட்களும் சொல்லவில்லை என நித்தியும் கோபாலும் தினம் என்னைக் குடையத் தொடங்கினார்கள். நானும் அவர்களிடையே கதாநாயக அந்தஸ்த்து பெறும் நோக்கில் கதையளந்து கொண்டிருந்தேன். இதனால் அவர்களுக்கு என் மேல் சற்று விரோத உணர்வுகூட ஏற்பட்டது.
ஆனாலும் அன்றாட சமையல் பாதிக்கப்படாமல் நடந்துகொண்டிருந்தது. நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தன. நாங்கள் அந்தக் கோழியை மறந்தோம். (ஆனால் வேலியை மறக்கவில்லை) சம்பள நாள் வந்தது. சம்பள நாளென்றால் நித்தி ஒரு பை சுமையோடு வருவான். பையைக் கொண்டுவந்து அவன் வைத்ததும் 'கொக்!" என ஒரு சத்தம்.. கோழி கத்துவது போலக் கேட்டது. எனக்குப் பிரமையோ? அவலமாக இறந்த மனிதர்களின் ஆவியும் அலையும் என்கிறார்களே… அது போலக் கோழியின் ஆவியும் அலையுமோ? பையைத் திறந்து பார்த்தேன். அது போலவே ஒரு கோழி..! ஒரு கறுப்புக் கோழி! அல்லது அதுதானோ..? ஒரு துள்ளுத் துள்ளிப் பின்வாங்கினேன். பின்னர் சுதாகரித்துக் கொண்டேன்.
அறையில் உடையை மாற்றிக் கொண்டு நித்தி வெளியே வந்தான். கறிக்கு என்றால் வழமையாக உரித்து ரெடிபண்ணப்பட்ட புரெய்லர் கோழியை வாங்கிவருவான். இது என்ன புதிதாக உயிருடன்? ருசி கண்ட பூனை விடுமா? ஊர்க் கோழிக்கறியின் ருசியை சொல்லவே தேவையில்லை.
'என்ன? கோழி.. கறிக்கா?" என்றேன்.
'இல்ல மச்சான்.. அது ரோசலின் அன்டிக்கு குடுக்கிறதுக்காக….! அவ… அந்தக் கோழியைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுத் தேடுறதைப் பார்க்கப் பாவமாயிருக்கு! அதுதான் வேலைக்குப் போகிற இடங்களில சொல்லி வைச்சு கிட்டத்தட்ட அது போலவே ஒரு கோழி வாங்கி வந்திருக்கிறன்."
இதுபோல சில சந்தர்ப்பங்களில் எனக்கு நித்தியை அளக்க முடியாமல் இருந்திருக்கிறது என்பது உண்மைதான். உற்சாகம் பொங்க எழுந்தேன்.
'சரி வா! கொண்டு போய்க் கொடுக்கலாம்!" என நித்தியை அவசரப்படுத்தினேன்.
'என்ன இவ்வளவு அவசரம்? ஆரைப் பார்க்க?" எனச் சீண்டினான்.
கோழியைத் தூக்கிக் கொண்டு போனோம். வாசலில் நின்று கூப்பிட்டு கதவைத் திறந்து உள்ளே போனோம்.
கையில் கோழியைக் கண்டதும் ரோசலின் அன்டி தீனைக் கண்டு ஓடிவரும் கோழியைப் போல ஓடிவந்தார். அவரைத் தொடர்ந்து அன்ன நடையுடன் அவரது மகள் வந்தாள். நித்தி என்னை ஓரக் கண்ணால் பார்த்தான்.
'என்ன, கோழி…. கிடைச்சிட்டுதா?"
'இல்ல… அன்டி!... இது வேற கோழி! நீங்க எப்பவும் அதைத் தேடுவீங்கதானே! எங்களுக்கு கவலையாயிருக்கும்…! அதுதான் அதேமாதிரி ஒரு கோழியைத் தேடி வாங்கியிருக்கிறம்!" நித்தியை முந்திக்கொண்டு நான் பதில் சொல்லி விட்டுப் பெருமிதம் ததும்பும் ஒரு தோற்றம் கொடுத்தேன்.
ரோசலின் அன்டியின் முகத்தில் மலர்ந்திருந்த வெளிச்சம் பக்கென அணைந்தது.
'அது… குஞ்சாயிருந்தே…. நான் வளர்த்தெடுத்த கோழி…. எங்கட பிள்ளையைப் போல…. காணயில்ல என்டதும்… மனசு தாங்காமல்தான் தேடித் திரிஞ்சன். எப்படியாவது கிடைச்சிடாதா என்ற கவலைதான்.. நீங்க நல்ல பிள்ளையள்…. அதனால இப்படி செய்யறீங்க!.... வேணாம் கொண்டு போங்க."
போக முடியவில்லை. கவலை அந்தக் கோழியை நினைத்தா அல்லது அன்டிக்காகவா என்று கூடப் புரியாமல் நெஞ்சில் ஏதோ ஒரு உறுத்தல்.
(தினகரன் பத்திரிகையிற் பிரசுரமானது - 2000)
பதிவுகளுக்கு அனுப்பியவர்: சுதாராஜ் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.