
கட்டுரையாசிரியர் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைகோவில், திருச்சிராப்பள்ளி-05 -
முகவுரை:
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கிறித்துவப் பாதிரிமார்களின் பங்களிப்பு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியங்களின் பெருமையையும், செழுமையையும் மேனாட்டார் அறியும் வகையில் உலகளவில் எடுத்துச் சென்றவர்கள் இவர்கள். அத்துடன் உலக இலக்கிய புதுமைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர்களும் இவர்கள் தாம், தமிழ் இலக்கணம், உரைநடை, செய்யுள் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் புதுமைகளைப் படைத்து தமிழின் உயிரோட்டத்தை மிகச் செழுமைப்படுத்தியவர்கள் இவர்கள். ஐரோப்பாவிலிருந்து வந்து சமயப்பணி மூலமாக சமூகப்பணிக்காகத் தம்மை அர்பணித்துக் கொண்டு வாழ்ந்த பல பாதிரிமார்கள் தமிழிலும் புலமைப்பெற்று தமிழ் பணியாற்றியுள்ளனர். அந்தவகையில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட காண்ஸ்டாண்டியஸ் ஜோஸப் பெஸ்கி தமிழுலகமே என்றும் வியந்து போற்றுவதற்குறிய பெருமைக்குரியவர் ஆவார்.
பிறப்பு:
இறைமகன் இயேசுவின் பிரதிநிதியாக உலகையாளும் பாப்பரசரின் ஆட்சிப்பீடம் உள்ளதும், வெர்ஜில், தாந்தே போன்ற பெருங்கவிஞர்கள் தோன்றியதும், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில், மறுமலர்ச்சி அரும்பியதும், ஈரறமும் முச்சீரும் சுகமோர் ஏழும் நிலவுவதும் ஆகிய பெருமைகளை உடையது இத்தாலிய நாடு. இந்நாட்டில் வர்ஜில் மாண்டுவா மாவட்டத்தில் காஸ்திக் கிளியோன் என்னும் ஊரில் 08.11.1680 ல் டான் கொண்டல்போ பெஸ்கிக்கும் எலிசபெத் அம்மையாருக்கும் நன்மகனாய் பிறந்தார்.
கல்வி:
இளமைக் கல்வியை முடித்துக் கொண்டு 18 ம் வயதில் 21.10.1698 நொவில்லாரியாவிலிருந்த இயேசு சபையில் சேர்ந்தார். ஈராண்டுகள் கழிந்த பின்னர் ரவேனாவில் ஈராண்டுக்காலம் அடிப்படை இலக்கணம் போதித்தார்.1701ல் பொலோனாவிற்குச் சென்று பத்தாண்டுக்காலம் தங்கியிருந்தார். அக்காலத்தில் இவர் நடுத்தர, உயர்தர இலக்கணங்களைப் போதித்தார். அதே சமயம் இறையியல் பயின்று தேர்ச்சிப் பெற்றார். மறை பரப்புப் பணிக்காக வெளிநாடு செல்லவும் தம்மைத் தகுதியாக்கிக் கொண்டார்.1710ல் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் துறைமுகத்திலிருந்து கோவாவிற்குப் புறப்படும் கப்பலில் இவர் இந்தியாவிற்குப் பயணமானார். கோவா வந்தடைந்த பெஸ்கி அடிகள் சில நாட்கள் அங்கு தங்கி ஓய்வெடுத்த பின் மேற்குக் கரையிலிருந்த அம்பலக்காட்டுக் குருமடத்தை அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுக் கிழக்கிலுள்ள முத்துக் கரையின் மணப்பாடு (தூத்துக்குடி)க்குப் பயணமானார். 08.05.1711ல் மதுரை மறைப்பணி மண்டலத்துள் இவர் பணியேற்றார்.
இறைப்பயணம்:
மதுரை மறைப்பணி மாநிலம் அக்காலத்தில் மிகுந்த பரப்புள்ளதாக இருந்தது. கன்னியாகுமரிக்குச் சற்று வடக்கிலிருந்து, மேற்குமலைத்தொடருக்குக் கிழக்கே, ஆர்க்காட்டு வேலூர் பாண்டிச்சேரி உள்ளிட்ட சோழமண்டலக் கரையடங்கிய பெரும் பரப்பை தன்னுள் அடக்கியிருந்தது. இத்துணை அகன்ற பரப்பைப் பத்து நற்குருக்களே பங்கிட்டுக் கொண்டு மறைபரப்புப் பணியாற்றினார். அவர்களிருந்த 10 இடங்களாவன மதுரை, இராமநாதபுரம், காமநாய்க்கன்பட்டி, மலையடிப்பட்டி, ஆவூர், கூறைப்பட்டி, அய்யம்பேட்டை, வடுகர்பேட்டை, கல்பாளையம் இவ்விடங்களில் தங்கி சமயப்பணி ஆற்றினார்.
காமநாயக்கன்பட்டியில் பெஸ்கியடிகள் பணியாற்றிய காலத்தில் தமிழ் செய்யுட்களை நன்கு கற்றார். பழனியிலிருந்த சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார் மேலும் செய்யுள் அடிகளும் யாப்பு முறைகளையும், இலக்கிய மரபுகளையும் ஐயந்திரிபறக் கற்றுணந்தார். இக்கல்விமுறையே இவரைப் பிற்காலத்தில் இலக்கிய மேதையாக்கியது. இராமநாதபுரம் சென்ற இவர் மறைபரப்பு பணியில் ஈடுபட்டார் அவ்வப்போது 1693 இல் தலை வெட்டுண்ட வேதசாட்சியான ஜான் டி பிரிட்டோவின் பெயரால் நிகழும் அற்புதங்களை எல்லாம் தொகுத்து வேதவிளக்கம் என்ற நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அருளானந்தருக்கு முத்திப்பேறு பட்டம் அளிப்பது பற்றி விசாரணை செய்ய உரோமாபுரியிலிருந்து அனுப்பப்பட்ட குழுவினருக்குத் தேவையான தகவல்களை வீரமாமுனிவர் தொகுத்துக் கொடுத்ததுடன் வேதசாட்சியின் வாழ்க்கைத் தொடர்பான இடங்களுக்கும் அழைத்து சென்றார்.
ஐய்யம்பேட்டை பகுதியில் பெஸ்கியடிகள் பணியாற்றிய போது கொள்ளிடக்கரையிலுள்ள ஆச்சாபுரம், கோடாலி, கூவத்துர் ஆகிய ஊர்களின் வழியே தென்னார்காடு வேளான்குப்பம் என்ற ஊரையடைந்தார். அங்கு வாழ்ந்த முத்துச்சாமி கச்சிராயன் என்ற பாளையக்காரரின் ஆதரவில் தேவதாய்க்கு ஓர் ஆலயம் எழுப்பினார். தமிழ்தாயின் உடையில் தேவதாயின் படம் வரைந்து மணிலாவிற்கு அனுப்பி அங்கிருந்து சுரூபம் தருவித்து அவ்வாலயத்துள் நிலைநாட்டினார். பெரியநாயகி அம்மாள் எனப்பெயரிட்டு விழா நடத்தினார். சூசை மாமுனிவரின் வரலாற்றை தேம்பாவணி என்ற காவியமாகப் புனைந்துரைத்தார்.
ஏலாக்குறிச்சியிலும் வடுகர்பேட்டையிலும் இருந்த காலத்தில் தரங்கம்பாடி டேனிஷ் சபையார் அச்சுப் பொறியிலே தொடுத்த கேள்விகளுக்கெல்லாம் தக்க விடையளித்தார். இதன் சார்பாக வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம் போன்ற நூல்களை எழுதினார். 1732 ஆம் ஆண்டில் தமிழகத்தின் அரசியல் நிலைமை அமைதியற்றதாகவும், உறுதியற்றதாகவும் இருந்தது. தஞ்சை மராட்டியர் படை, மதுரை நாயக்கர் படை, திருச்சிராப்பள்ளி நாயக்கர் படை, ஆர்க்காட்டு முஸ்லீம் படை, மைசூர் ஹொய்சளர் படை ஆகிய ஐம்படைகளால் தமிழகத்து மக்கள் அவதியுற்றனர். அப்போது வீரமாமுனிவர் ஆவூரில் பணியாற்றினார். ஆவூருக்கருகில் முகாமிட்டிருந்த முஸ்லீம் படையினரின் மாடுகளைப் புதுக்கோட்டைத் தொண்டைமானின் படையினர் கவர்ந்து சென்றனர். உண்மையறியாத முஸ்லீம் படையினர் ஆவூர் மக்களே பசுக்களை திருடியிருக்க வேண்டும் என என்ணி ஆவூரைச் சூரையாட முற்பட்டனர். ஊர்மக்களைப் பாதுகாக்கப் படைத்தலைவனிடம் சென்று உண்மையை இதமாக எடுத்துரைத்தார். அதனால் அம்மக்களின் இன்னல் தவிர்ந்தது. அப்படைத்தலைவன் அடிகளிடம் மரியாதையுடன் நடந்து கொண்டதால் அப்படைகளின் தளபதியான சந்தா சாகிபைச் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்குமாறு படைத்தலைவனிடம் கோரினார் படைத்தலைவனும் உடன்பட்டான். இச்சந்திபிற்காக இந்துஸ்தானி, பாரசீகம் ஆகிய மொழிகளை வெகுவிரைவாக கற்றார்.
பெஸ்கியடிகளின் பேச்சாற்றலைக்கண்ட சந்தா சாகிபு மகிழ்ந்து அவருக்கு இஸ்மதி சந்யாசி என்ற பட்டத்தையளித்தார். முனிவர் வேண்டிக்கொண்டவாறு கிறிஸ்துவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாதவாறு தம் படைகளுக்குச் சந்தா சாகிபு உத்தரவிட்டார். எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தம்மை முனிவர் சந்திக்கவும் அனுமதித்தார். 1740 இல் சந்தா சாகிபை மராட்டியர்களின் தலைவரான ராகேஜி பான்ஸ்லே கைது செய்து சதாராவிற்குக் கொண்டு சென்றார். இதே சமயத்தில் வீரமாமுனிவர் மணப்பாடு வட்டாரத்தில் மறைப்பணியாற்றச் சென்றார்.
தஞ்சை மன்னர் ஷாஜி சந்ததியின்றி இறந்ததால் அவருடைய தம்பி சரபோஜி 1711 இல் அறியணை ஏறினார். இளவரசராக இருந்த காலத்தில் கிறிஸ்தவர்பால் பரிவுகாட்டிய அவர் மன்னரானதும் பேரன்பு காட்டுவார் எனக் கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்தது தவறாயிற்று. ஆதலின் அவர்கள் நிரந்தரமாக கொள்ளிடத்திற்கு வடக்கே வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆகையால் ஏலாக்குறிச்சியில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடைக்கல நாயகிக்கு ஆலயம் அமைத்தும், விழாவெடுத்தும் நூல்கள் இயற்றியும் உபதேசிமார்களுக்கு செந்தமிழ் இலக்கணப் பள்ளியையும் ஏற்படுத்தினார். தொன்னூல் விளக்கம், செந்தமிழ் இலக்கணம் ஆகிய நூல்கள் அங்கு கற்பிக்கப்பட்டன. ஏறக்குறைய 30 ஆண்டுகள் இடையறாது பணியாற்றிய இவருக்கு ஓய்வும் தேவைப்பட்டது. மணப்பாட்டிலிருந்து அம்பலக்காட்டிற்கு அனுப்பப்பட்டார் அங்குள்ள குருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இறையியல் கற்பித்தார்.
தமிழ்ப்பணி:
வேற்றுமொழி அல்லது வேற்று இலக்கியங்களைக் கற்க விழைவோர் எழுத்து மொழியையே கற்பது வழக்கம். இன்றைய கல்வி நிறுவனங்களிலும் எழுத்து மொழியைக் கற்பிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த எழுத்து மொழிக் கல்வி இலக்கியங்களில் புலமை பெறுவதற்கு உதவும். ஆனால் சாதாரண மக்களிடம் உணர்வு ஒன்றிய நிலையில் பழகுவதற்கு உதவாது. பேச்சு மொழியே அதற்கு உகந்தது. வாழ்வியல் வெற்றிக்கு மொழி பற்றிய அவர்தம் கொள்கை முதன்மைக் காரணம் ஆகும். இவர் ஏற்கனவே இத்தாலி, இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், பிரெஞ்சு, போர்ச்சுக்கீசியம் முதலிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். பாரதநாடு வந்ததும் பாரசீகம், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகியவற்றையும் கற்றார். தமிழக மக்களிடம் சமயக் கருத்துக்களைக் பரப்புவதற்கு விரும்பிய முனிவர் தமிழில் சிறப்புப் புலமை பெற்றிட விழைந்தார். அதனால் தமிழ்ப் புலவர்கள் சிலரை நாடினார். பேச்சுத் தமிழிலும் எழுத்துத் தமிழிலும் வல்லவர் ஆனார். இவருக்கு தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்த ஆசிரியர்களுள் சுப்பிரதீபக் கவிராயர் முதன்மையானவர்.
வீரமாமுனிவர் ஒரு மேலைநாட்டவர் மொழியால் இனத்தால் சமய நம்பிக்கையினால் தமிழ் மக்களிடமிருந்து வேறுபட்டவர் ஆனால் அவர் தமிழ் மல்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டார். நடை, உடை, உள்ளவுணர்வால் ஒரு தமிழனாக ஒன்றிப் போனார். அவர் பின்பற்றிய பண்பாடு, நாகரிகம், சமய நெறிகள், மொழிப்பணிகள் யாவும் அவரை ஓர் இத்தாலியராக இனம் காட்டவில்லை.
குடிசையில் வாழ்ந்த வீரமாமுனிவர் அமைதி தவழும் முகத்தில் தாடியும் மீசையும் காட்சி அளித்தன. நெற்றியில் சந்தனப்பொட்டு, செவிகளில் முத்துக்கடுக்கன், விரலில் மோதிரம், கைகளில் பூணிடப்பெற்ற கோலும், விவிலியப் பெட்டியும், நீண்ட காவி நிற அங்கி, பாதங்களில் மரக்கட்டையால் ஆன செருப்புக்கள் , தலையில் காவித் துணியால் ஆன தொப்பி என அவரது தோற்றமும் சமயப் பிரச்சாரத்திற்கு சிவிகையில் அமர்ந்து செல்வர். வெண் கொற்றக்குடையை ஒருவர் பிடித்துச் செல்வார். இவர் புலாலை மறுத்துச் சைவ உணவை உட்கொண்டார் இவ்வாறாக இவரது பழக்க வழக்கங்களும் தோற்றமும் காணப்பட்டது.
தமிழகக் கிறித்துவம்:
சமய வழிபாட்டு முறைகளை தமிழ் மயமாக்கினார். இவர் சென்று தங்கிய ஊர்தோறும் இயேசுபிரானின் தாயார் மாதவுக்கு தேவாலயம் கட்டினார். அங்கு அருளிச்செய்கிற மாதாவுக்குத் தமிழிலேயே பெயரும் சூட்டி மகிழ்ந்தார். விருத்தாசலத்திற்கு அருகில் கோனான்குப்பத்தில் உள்ள தேவாலய மாதாவைத் தமிழ்ப்பெண் உருவில் அமைத்து, பெரியநாயகி என்று பெயர் சூட்டினார். அரியலூர் அருகிலுள்ள ஏலாக்குறிச்சியைத் திருக்காவலூர் என்று பெயர் மாற்றி, அங்கு தாம் உருவாக்கிய மாதாவுக்கு அடைக்கலமாதா, அடைக்கலநாயகி என்று பெயரிட்டார். தேவாலயங்களில் ஆண்டுத் திருவிழாவும் அவ்விழாவின் போது தேர்த்திருவிழாவும் நடத்தப்பெற்றன. தேவமாதா அலங்காரம், பூசை முறைகளிலும் தமிழ் மணம் கமழ்ந்தது.
கத்தோலிக்கக் கிறித்துவம் தமிழ்நாட்டிற்கு அயல்நாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்றது என்ற உணர்வுக்கு மாறாக அது தமிழ் நாட்டிற்குச் சொந்தமான ஒன்றே என்று கருதும் வண்ணம் பல சீரமைப்புகளை சமயத் துறையில் செய்தார். இலக்கியத் துறையிலும் தமிழ் மணத்தைப் படரவிடுவதற்கு தவறவில்லை. இவர் படைத்துள்ள பேரிலக்கியம், சிற்றிலக்கியங்கள் யாவும் தமிழ் மயம் ஆக்கப்பெற்றன. இவை பெயராலும் விவரிக்கும் திறத்தாலும் தனித்தமிழ் இலக்கியங்களாகக் காட்சி தருகின்றன. தேம்பாவணி இவர் படைத்திட்ட பேரிலக்கியம் ஆகும். அடைக்கலமாலை, வெண்கலிப்பா, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரி அம்மாள் அம்மானை, கருணாம்பரப்பதிகம், வண்ணக்கலைகள் என்பன இவரது சிற்றிலக்கியங்கள் ஆகும். சிற்றிலக்கியங்களின் தொகுப்பு திருப்பாவணி என்றும் பேரிலக்கியங்களின் தொகுப்பு தேம்பாமாலை என்றும் கூறப்படுகின்றன.
தற்கால உரைநடையின் தந்தை:
பரமார்த்தகுருவின் கதை, வேதியர் ஒழுக்கம், திருச்சபைக்கணிதம், வேத விளக்கம், வாமன் சரித்திரம், வாக்கிய சிந்தாமணி, ஞான விளக்கம், ஞானக் கண்ணாடி, பேதகமறுத்தல், ஞானமுணர்த்தல், லுத்தேரினத்தியல்பு, பதிதர்பேரில் நிரூபம் என்பன இவர் எழுதிய உரைநடை நூல்களாகும். இதில் பரமார்த்தகுருவின் கதை தமிழகத்தில் இருந்த வேற்றுச் சமயத் தலைவர்களையும் அவர்களது மாணாக்கர்களையும் கேலி செய்து எழுதப்பெற்ற அங்கத உரைநடை நூல்களாக கருதப்படுகிறது.
சாதாரண மக்களின் பேச்சு மொழியாகிய கொடுந்தமிழ் நடையில் எழுதினால் கற்றோரும் இலக்கியம் கல்லாதோரும் எளிதில் புரிந்து கொள்ள இயலும். எனவே கொடுந்தமிழ் நடையில் பரமார்த்த குருவின் கதையை எழுதியதாக முகவுரையில் குறிப்பிடுகின்றார். சிறுகதைகளும் புதினங்களும் பேச்சு மொழியிலே எழுதப்படுகின்றன. இதனாலேயே ஒரு வகையில் பெஸ்கி தற்கால உரைநடை மற்றும் தற்காலச் சிறுகதையின் தந்தையாக கருதப்படுகிறார். நீலக்கண்டி, வீரமெழுகு, வைத்திய முறை, இரத்தினச் சுருக்கம், நசகாண்ட வெண்பா நூறு, மேகனாதி எண்ணெய் சிந்தாமணி, குணபாடம் எனும் மருத்துவ நூல்களையும் இயற்றியுள்ளார்.
தமிழ் அகராதியின் தந்தை:
வீரமாமுனிவரின் பணிகள் தமிழ் இலக்கியத்தில் மட்டுமின்றி இலக்கணம், அகராதித்துறைகளிலும் தன்னுடைய பங்கைச் செலுத்தியுள்ளார். அயல் நாட்டவர்களுக்கு, குறிப்பாக இயேசுசபை ஊழியர்களுக்குப் பயன்படும் வகையில் தமிழ்-இலத்தீன் அகராதி, போர்ச்சுகீஸ்- இலத்தின் அகராதி ஆகியன எழுதப்பெற்றன. இவர் இயற்றிய சதுரகராதி தமிழ்க் கவிதைகளை எழுதுவோர்க்குப் பயன்படுமாறு உருவாக்கப்பெற்றது. பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு அகராதிகளின் தொகுப்பு இது. அகராதி நெறிகளின் படி உருவாக்கப்பெற்ற முதல் தமிழ் அகராதியாகும். இதனாலேயே முனிவர் தமிழ் அகராதியின் தந்தை என்று போற்றப்பெறுகிறார்.
தமிழ்க் கிளைமொழியியலின் முதல்வர்:
இவர் எழுதிய கொடுந்தமிழ் இலக்கணம் பேச்சுத்தமிழ் இலக்கணத்தை விவரிக்கிறது.தமிழ் மக்களின் பேச்சுத் தமிழை இயேசுசபைக் கிறித்துவ ஊழியர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு எழுதப்பெற்றது. பேச்சுத் தமிழை முழுமையாகச் சிறப்பாக விவரிக்கிற முதல் நூல் எனலாம். இதனால் வீரமாமுனிவர் தமிழ்க்கிளை மொழியியலின் முதல்வராக் கருதப்பெறுகிறார்.
எழுத்துச் சீர்திருத்த முன்னோடி:
தமிழ் மொழிக்கு வழங்கிய கொடைகளுள் எழுத்துச் சீர்திருத்தம் குறிப்பிடத்தக்க ஒன்று. தமிழில் எகர,ஒகரங்களில் குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே வடிவம் எழுதப்பெற்று, மேலே புள்ளி இட்டுக்காட்டுதலின் வழி குறில் வேறுபடுத்தப்பட்டது. தொல்காப்பியக் காலத்திற்கு முன்னரே இம்முறைக் காணப்படுகிறது. எகர, ஒகர உயிர்மெய் எழுத்துக்களில் புதியமுறையை உருவாக்கி குறில் நெடில்களை வேறுபடுத்தினார். கொம்பு (n) தனியாக எழுதப்பெற்றால் எ,ஒ ஆகியவற்றின் குறிலாக இருக்கும் கொம்பின் மேற்பாகம் (N) சுழிக்கப்பெற்றால் நெடிலாக இருக்கும். (N) இம்முறையில் என்பது ஏ,ஓ ஆகிய எழுத்துக்களின் நெடிலாகும். இவ்வாறு கொடுந்தமிழ் இலக்கணத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்துக்களை மேம்படுத்திடச் செய்த முயற்ச்சி அவரை எழுத்துச் சீர்திருத்ததிலும் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
நிறைவுரை:
கிறித்துவத்தையும் தமிழ்மொழியையும் தம் இரு விழிகளாகக் கொண்டு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்த வீரமாமுனிவரின் உயிர் மணப்பாடு என்னும் சிற்றூரில் அடங்கியது. தம் வாழ்வில் ஒளி ஏற்றிய கலங்கரை விளக்கத்தைத் தம் ஊரில் அடக்கம் செய்து பெருமை கொண்டது மணப்பாடு. நிலமகள் தம் தவப்புதல்வன் பெஸ்கியை தன்னகத்தே அடக்கிக்கொண்ட நாள் 04.02.1746 ஆகும்.சிலர் 1747 இல் மறைந்தார் என்று குறிப்பிடுகின்றார். இறுதிக்காலம் பற்றி வெவ்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. மணப்பாட்டில் வாழ்ந்து அங்கேயே இறந்தார் என்பது சிலர் கூற்று. வேறுசிலர் மணப்பாறையில் இறந்ததாக குறிப்பிடுகின்றார். மேலும் அம்பலக்காட்டில் இறந்தார் என்றும் ஞானப்பிரகாச அடிகளார் கருதுகின்றார். இவர் புகழுடம்பு எய்தினாலும் இவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை என்பது மேற்கண்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் பெறப்படுகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









