உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை – 14 ஜனவரி 2012
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையேயான ‘பேச்சுவார்த்தை’ பற்றி உலகத் தமிழர் பேரவை அரசியல் சமூகங்களின் வரலாற்றில் தனியார், குழுக்கள், அமைப்புக்கள் மற்றும் பொதுப்படையாக மக்கள் போன்றோர் தமது வாழவின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து, சமுதாயத்தின் பொது நன்மையையை மேம்படுத்துவதற்காகத் தம்மிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டு ஒன்றாகச் செயற்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், மிக அரிதாகவெனினும், ஏற்படுவதுண்டு. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இப்படியான காலகட்டத்தில் உள்ளனர். வெற்றியீட்டிய இலங்கை அரசானது எம்மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தல், அவர்களின் விடுதலையுரிமையை மறுத்தல், உடைமைகளைப் பறித்தல், அவர்களை நிரந்தர அடிமைகளாக்குவதற்கான திட்டத்தைச் செயற்படுத்தல் ஆகிய அடாத்துக்களைத் தொடர்ச்சியாகக் குவித்து அவர்களை நிரந்தர அடிமை நிலைக்குத்தள்ள எத்தனிக்கின்றது. இவ்வாறான அரச அடக்குமுறைகளை எதிர்த்துத் தம் வருங்கால நலன்களையும் பாதுகாப்பையும் காப்பது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையாகும். மேற்கூறிய அடக்குமுறைகளை எம்மக்கள் வேறு வழியின்றி அமைதியாகச் சகித்து வாழ்ந்து வரும் இவ்வேளையில் நாம் எம்மிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து தற்போதுள்ள அரசமுறையை மாற்றியமைப்பதற்கு எமது உறுதிப்பாட்டை வலிமைப்படுத்துதல் வேண்டும்.