I cannot breathe!
I cannot breathe!
இன்று அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் இது.
கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தின் ஒரு மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த ஓர் இளைஞர், கள்ளநோட்டு கொடுத்ததாக கடைக்கார் போலீசில் புகார் செய்கிறார். உடனே அங்கு சோதனையிட வந்த காவல்துறையினர், கடைக்கு வெளியே காரில் அமர்ந்திருந்த கருப்பு நிற இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றனர். அவர் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (வயது 46).
காரில் இருந்த அவரை கீழே இறங்கும்படி கூறி, பின்னாலிருந்து அவரது கைகளைக் கட்டி, பொதுவெளியில் இழுத்துச் சென்ற காவலர்கள், அவரை காரின் டயர் அருகில் சாய்த்துப் படுக்க வைத்தனர். வந்திருந்த நான்கு காவலர்களில் ஒருவர் தனது முழங்காலை அவரது கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்திப் பிடித்துள்ளார். அப்போது, “தன்னால் மூச்சுவிட முடியவில்லை; எனக்கு தண்ணீர் கொடுங்கள்; என்னை கொன்றுவிடாதீர்கள்” என்றெல்லாம் ஃப்ளாய்ட் பலமுறை கெஞ்சியும் அந்தக் காவலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
மீதமுள்ள மூன்று காவலர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது அருகிலேயே நின்றுள்ளனர். சுற்றி நின்று கூச்சல் போட்ட பொதுமக்களில் யாருடைய குரலையும் அந்த போலீகாரர் பொருட்படுத்தவுமில்லை. எவ்வளவோ போராடிப் பார்த்தும் அசையக்கூட முடியாமல், இறுதியில் ஜார்ஜ் பேச்சுமூச்சின்றி சலனமற்றுக் கிடந்தார்.
ஆம்புலன்ஸ் வரும்வரை அவருடைய கழுத்தை அழுத்தியிருந்த காவலர் தனது காலை எடுக்கவேவில்லை. மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
உயிருக்குப் போராடிய ஜார்ஜ், இறக்கும்போது உச்சரித்த கடைசி வார்த்தைதான் “I cannot breathe! - என்னால் மூச்சு விடமுடியவில்லை”.