விமலதாசன் என்றொரு புனிதன்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவனாக நான் அறியவந்த விமலதாசன்(1954-1983) சமூக விடுதலையினை, தனிமனித அறத்தைப்பேணிய பெருமகன்.இயேசுவின் விசுவாசம் மிகுந்த ஊழியன்.மெல்லிய உடல்.சாதாரணமாக ஷேர்ட்டை வெளியில் விட்டிருப்பார். தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப்பை.அதில் பல்வேறுபட்ட பிரசுரங்கள், அறிக்கைகள், 'மனிதன்' இதழ்கள், ஆங்கில சஞ்சிகைகள் இத்தியாதி .
புள்ளிவிபரவியலில் (Statistics) சிறப்புப்பட்டம் பெற்றவர். கணிதம் அவரின் கோட்டை. இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் கணிதம் போதித்த சிவப்பிரகாசம் மாஸ்டர் கரும்பலகையில் கணக்கை எழுதி முடிப்பதற்கிடையில், கணக்கை செய்து முடித்துவிடும் அபார திறமையை பள்ளிக்காலத்திலேயே வெளிப்படுத்திய மாணவன்.இந்தக்கணித ஞானம் அவரது சமூக ஆய்விலும் ஒளிர்ந்ததை அவரது சமூகசெயற்பாடுகள் கோடிகாட்டின. அடிப்படை மனித உரிமைகள் பற்றிய கேள்வியை அறிவுபூர்வமாயும் உணர்வுபூர்வமாயும் தனது 'மனிதன்' பத்திரிகையில் எழுப்பியவர் விமலதாசன்.
சுதந்திரம் என்பதனை அதன் சகல பரிமாணங்களிலும் விஸ்தரித்து விளக்கம் தேடியவர் அவர்.எனவேதான்,'தமிழ் நெஞ்சே! தாழ் திறவாய்!' என்று தலைப்பிட்டு தனது மனிதன் இதழில் அனைவருக்கும் திறக்கப்படாத ஆலயங்கள் என்று மானிப்பாயில் தாழ்த்தப்பட்டோரை உள்ளே அனுமதிக்க மறுத்த 12 ஆலயங்களை அவர் முன்பக்கத்தில் பட்டியலிட்டார். 'சுதந்திரம் எமது பிறப்புரிமை'யானால், தீண்டாமை என்பதற்குப் பொருள் ஏது? வரலாறுதான் ஏது?' என்று தலைப்பிட்டு, அவர் சாதியஒடுக்குமுறையினை அணுகும் விதம் அசலானது.வெற்றுக்கேள்விக்கொத்துகளுடன், தாம் ஆராயப்போகும் சமூகப்பிரச்னையின் சரித்திரமும் தெரியாமல், சமகாலப்பிரச்னையும் புரியாமல் ஆய்வை முடித்து,யாழ்ப்பாணத்தில் அனைத்துத் தரப்பும் உற்று நோக்கிய ஒரு பிரச்னையில் சாதியம் செயற்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுந்தபோது, ஒரு தயக்கமும் இன்றி, அதனை முற்றாக மறுதலிக்க முயன்றபோது, சமூகஆய்வு என்று பெயர்பண்ணிக்கொண்டு செய்யப்படுகிற ஆராய்ச்சிகள் எப்படி அந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராகப் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்கையில் அறிவுலகின்மீதுள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துபோகின்றன.