கூகி வா தியாங்கோ கிழக்கு ஆபிரிக்காவில் கென்யாவில் தோன்றிய திறமையான, தரம்வாய்ந்த எழுத்தாளராகக் காணப்படுகிறார். பல பல்கலைக்கழகங்களில் கடமையாற்றிய இவர், ஒப்பிலக்கியம் மற்றும் அளிக்கைகள் தொடர்பான பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
தியாங்கோ நாவல், நாடகம், சிறுகட்டுரை முதலானவற்றையும் இலக்கிய விமர்சனம், சமூக விமர்சனம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளிலும் எழுதியுள்ளார். 1977 இல் நாவல் எழுத ஆரம்பித்தார். தியாங்கோ சாதாரண மக்களைக் கருத்திற் கொண்டே தனது படைப்புக்களை எழுதினார். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடைப்பட்ட ஆறு' (The River Between) , 'கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது நாவல்களாகும்.
தியாங்கோவின் படைப்புக்கள் ஆபிரிக்க இலக்கியம், அரசியல், மற்றும் அடிமை வாழ்க்கை குறித்து எழுதப்பட்டவையாகும். ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற கூகி வா தியாங்கோவின் நூலை அடிப்படையாக வைத்து ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து தியாங்கோவின் சிந்தனைகளை அறியமுடியும்.
காலனிய ஆதிக்கத்தில் இருந்து தமது மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் ஆபிரிக்கப் படைப்பாளிகள் மேற்கொண்ட முயற்சிகள் அடையாள மீட்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற தமது நூலில் ஆபிரிக்க அடையாளத்தை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளில் இருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்ச் செயற்பாடுகளை விபரித்துள்ளார்.
ஐரோப்பிய, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசரின் காலனியம், அமெரிக்க ஏகாதிபத்தியம், உள்நாட்டு நவகாலனிய ஆட்சி, அதிகாரம் ஆகியவை ஆபிரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்தின. ஆபிரிக்க மக்களின் மொழி, கலை மற்றும் பண்பாடு ஆகியன காலனிய ஆதிக்கத்தால், சீரழிக்கப்பட்டன.
இக்கொடுமைகளுக்கு எதிரான சிந்தனைகளோடு போராட்டத்தை நடத்தியவர்களில் கூகி வா தியாங்கோ முக்கியமானவர். ஆபிரிக்க மொழி, அரங்கம், இலக்கியம் ஆகியவற்றைக் கைப்பற்றி அடையாளப்படுத்த வேண்டிய தேவை குறித்து தியாங்கோ விவாதித்தார்.
- கூகி வா தியாங்கோ -
அந்நிய மொழியில் எழுதாது, எல்லா வகை எழுத்துக்களையும் சொந்த மொழியில் எழுத வேண்டும் என்ற சிந்தனையால் 1977இல் இவரது ‘இரத்த இதழ்கள் (Petals of blood) வெளியான பின்னர், ஆங்கில மொழியில் எழுதுவதிலிருந்து விடைபெற்றார். ஆயினும் ஒரு சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமது சொந்த மொழியாகிய ‘கிகூயூ’ மற்றும் ‘ஸ்வாஹிலி’ மொழிகளில் எழுத வேண்டும் என்ற இவரது சிந்தனையால் இவரது படைப்புக்கள் அனைத்தும் கிகூயூ மொழியிலேயே வெளிவந்தன.
ஆபிரிக்க எதார்த்தத்தை தியாங்கோ இரு வேறு எதிர்நிலைப்பட்ட சக்திகளுக்கு இடையே நடக்கும் பெரும் போராட்டத்தின் தாக்கமாக நோக்கினார். அதில் ஒன்று ஏகாதிபத்திய மரபு - மற்றையது எதிர்ப்பு மரபு ஆகும். ஏகாதிபத்திய மரபை ஆபிரிக்காவில் கட்டிக் காப்பவர்கள் பன்னாட்டு மூலதனம் மூலம் செயற்படும் சர்வதேசிய பூர்ஷ்வாக்களும், கொடி தூக்கக் காத்திருக்கும் உள்நாட்டு ஆளும் வர்க்கத்தினருமாவர். ஏதிர்ப்பு மரபு உழைக்கும் மக்களால் நடத்தப்படுகிறது.
ஏகாதிபத்தியம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அணுகுமுறையிலும் நிதர்சனமானது. ஏகாதிபத்தியம் ஒரு முகப்பட்ட பண முதலீட்டின் ஆட்சி. 1884 இல் இருந்து ஏகபோக ஒட்டுண்ணி முதலீடு ஆபிரிக்க நாடுகளின் மூலை முடுக்குகளில் உள்ள விவசாயிகளையும் பாதித்தது. உலகில் உள்ள மக்களைப் பொருளாதார, அரசியல், இராணுவ, பண்பாட்டு, உளவியல் ரீதியாகப் பாதிக்கக் கூடிய விளைவுகளைக் கொண்டுள்ளது.
இத்தகைய ஏகாதிபத்தியத்தின் நவகாலனிய கட்டத்தையும் வடிவத்தையும் எதிர்க்கும் வர்க்கத்தினர் இந்த அச்சுறுத்தலை மேம்பட்ட , படைப்பூக்கம் மிக்க உறுதியான போராட்டம் மூலம் எதிர்கொள்ள வேண்டும். தமது பண்பாடுகளில் உள்ள போராட்டக் கருவிகளை வலிமையோடு செலுத்த வேண்டும். தமது மொழிகள் ஒவ்வொன்றிலும் உள்ள போராட்டத்திற்கான பொதுமொழியைப் பேச வேண்டும் என்கிறார் தியாங்கோ.
தன் எழுத்துக்களில் மொழியைப் பயன்படுத்தும் படைப்பாளி, மொழியுடன் உறவாடுவதிலும் பண்பாட்டைப் பாதுகாப்பதிலும் உயிர்ப்பதிலும் மாற்றத்தைக் கட்டமைப்பதிலும் அதிக பங்கினை ஆற்றுகிறான். அவன் தாய் மொழியைப் புறக்கணிக்கின்ற போது, வேறொரு மொழியின் , கருத்தின் பிரதிநிதியாகிவிடுகிறான். மொழியின் ஊடே ஆழமான பிளவையும் , மிக நெருக்கமான உறவையும் ஏற்படுத்த முடியும் என்பதை வேறெவனைக் காட்டிலும் அவனே அறிந்திருக்கிறான். அடக்கு முறைக்கு எதிராக அவன் தாய் மொழியை உயர்த்தி பிடிக்கின்ற போது ஒடுக்கப்படுகிறான்.
“மக்களது மொழியில் புரட்சிகர ஒற்றுமை , நம்பிக்கையை வெளிப்படுத்தும் படைப்பாளி நிலைகுலைவுப் பண்பு கொண்டவராகக் கருதப்படுகிறார். எனவே ஆபிரிக்க மொழியில் எழுதுவது குற்றமாகிறது. தண்டனைக்குரியதாகின்றது. அந்த எழுத்தாளர் சிறைவாசம் , நாடு கடத்தல் , மரணம் ஆகிவற்றை எதிர்கொள்ள வேண்டியதாகின்றது. அவருக்கு தேசிய விருதுகள் இல்லை. புத்தாண்டு மரியாதைகள் இல்லை. ஆனால் வசைகளும் அவதூறுகளும் அள்ளி வீசப்படும். ஆளும் இராணுவத்தின் எண்ணற்ற பொய்கள் அவர்கள் மீது சுமத்தப்படும்” என கூகி தான் அனுபவித்த ஒடுக்குமுறைகளைப் பொதுமைப்படுத்தி கூறுகிறார்.
கென்ய மக்களின் தாய்மொழிகள் குழந்தையின் பேச்சு மொழி லயத்தை மட்டுமன்றி, அவர்களின் இயற்கையுடனான போராட்டம், மற்றும் சமூகப் பண்புகளைக் காட்டக் கூடிய இலக்கியங்களை உருவாக்க முனைந்தார். தனது தன்னிலை மொழி , சூழலோடு இயைந்த ஒத்திசைiவு தொடக்க காலத்தில் பெற்ற ஒருவர் பிற மொழிகளைக் கற்கலாம். அவற்றின் வளமான மனிதநேயமிக்க, சனநாயக , புரட்சிகர அம்சங்களை அறிந்து கொள்ளலாம் என்கிறார். காலனியத்தைப் பற்றிய கூகியின் விமர்சனச் சிந்தனைக்கு அவரது இளமைப் பருவத்தில் கண்ட ‘மாவ்மாவ்’ ஆயுதப் போராட்டம் ஒரு காரணமாகும்.
கதை சொல்லும், கதை கேட்கும் பாரம்பரியத்தில் வளர்ந்த கூகி, தமது வாய்மொழி மரபை முக்கியமானதாகக் கருதினார். இதனால் இவரது படைப்புலகை கென்யாவின் வாய்மொழி மரபு பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்தது. மொழியாக்கம் என்பது பரந்துபட்ட வாசக வட்டத்தை எதிர்பார்க்கும் அரசியல் செயற்பாடாக மாறிவிட்ட சூழலில் , ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
தலித் எழுத்தாளர்களும், மற்ற பூர்வீக குடிகளும் தமது மொழிகளிலே எழுதி, தேவைப்படுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நமது மொழியில் நாம் ஆழமாக ஊறி இருப்பது அவசியமெனக் கருதுகிறார்.
1963 இல் கென்யா, பிரிட்டிஷில் இருந்து விடுதலை பெற்ற பின் ஆங்கிலமே அரசு மொழியாக அறிவிக்கப்பட்டது. ‘ஸ்வாஹிலி’ என்ற மொழிதான் அதன் பேச்சு மொழி. இதை விட ஐம்பதிற்கு மேற்பட்ட தேசிய இனங்கள் தங்களுக்கென தனியான மொழிகளையும், பண்பாட்டையும் கொண்டிருந்தன. இவை யாவும் தத்தமது தேசியத்தை மட்டுமல்லாமல் ஏனைய தேசிய இலக்கியங்களையும் , கென்ய தேசத்தையும் , அதன் நீட்சியாக உலகு பற்றியும் பேச வேண்டும் என்ற சிந்தனையுமுடையவர் கூகி.
எந்த ஒரு மொழியும் பண்பாடும் வேறொன்றின் மேல் திணிக்கப்படக் கூடாது. மொழிகளுக்கு இடையிலான உரையாடல் மூலம் ஒரு புதிய மொழி உருவானால் அது அனுகூலமான விடயமே. புதிய மொழியின் பிறப்பு மற்ற மொழிகளின் கல்லறையின் மேல் உருவாகக் கூடாது என்கிறார்.
கூகி , ஐரோப்பிய மொழிகளில் எழுதுவதில் தவறில்லை என்று கருதும் சினுவா அச்சுபே போன்றோரை மறுதலிக்கின்றார். ஒரே ஆபிரிக்க அரசின் கீழ் வாழ்கின்ற பல்வேறு இனத்துவக் குழுக்களிடையேயும், அரசுகளுக்கிடையேயும் தொடர்புகள் கொள்ள ஐரோப்பிய மொழிகளால்தான் சாத்தியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய தொடர்புகளை ஆபிரிக்க மொழிகளைக் கற்பதன் மூலமும் அவற்றை ஆய்வதன் மூலமும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். தேசிய இலக்கியங்களும் ஆபிரிக்க இலக்கியங்களும் ஆபிரிக்க மொழிகளில் தத்தம் இலக்கியங்களை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழியாக்கம் செய்வதன் மூலமே சாத்தியம்.
இயற்கையோடும் சமமனிதரோடும் வரலாற்றோடும் ஒருவரைத் தொடர்புபடுத்துவது அவரது மொழிதான். எனவே சொந்த மொழி மூலமே கடந்த காலத்தின் சாரங்களை மீட்டெடுத்து, நிகழ்காலத் துயரங்களைக் கடந்து, ஒளிமிக்க எதிர்காலத்தை நோக்கி முன்னேற முடியும். கலையும் இலக்கியமும் மக்களால் மக்களுக்காகப் படைக்கப்பட வேண்டுமானால் அது அவர்களின் சொந்த மொழி மூலமே சாத்தியம் என்பது கூகியின் கருத்தாகும்.
அந்நிய மொழிகளால் ஆபிரிக்க அனுபவத்தை எவ்வாறு சுமக்க வைப்பது? ஆபிரிக்கப் பழமொழிகள் , நாட்டார் கதைகள் மற்றும் ஆபிரிக்கப் பேச்சு மொழிகளின் சிறப்புக் கூறுகளை ஐரோப்பிய மொழிகள் எப்படி உள்வாங்கும் என்பது கூகி போன்றோரின் சிந்தனையாக இருந்தது. ஆபிரிக்கச் சிந்தனை, தத்துவம், நாட்டார் கதைகள் மற்றும் படிமங்களை முழுமையாகப் பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட படைப்பாளியாகக் கூகி காணப்படுகிறார்.
எழுத்தாளனின் சொந்த ஆபிரிக்க மொழியில் இருந்து அவற்றை அப்படியே அவர் வெளிப்பாட்டு மொழியாகக் கொண்டுள்ள ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். ஒரு சொல், பல சொல், ஒருவாக்கியம் அல்லது ஏதாவதொரு ஆபிரிக்க மொழியில் புழங்கும் சொற்கள், வாக்கியங்களிலிருந்து ஒர் இனத்தின் சமூக விதிகள், கண்ணோட்டங்கள், மதிப்பீடுகளைக் கண்டடைய முடியும் என்கிறார்.
அந்நிய மொழித் திணிப்பு, உள்நாட்டு மொழிகளின் பேச்சையும் எழுத்தையும் ஒடுக்குவதுடன், ஆபிரிக்கக் குழந்தைக்கு தொடர்பாடல் மொழியின் அம்சங்களுடன் இருந்த ஒத்திசைவையும் குலைத்தது. தொடர்பாடலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மொழி, வேறொரு இடத்தின் வாழ்வியல் எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாகும்.
காலனியப்பட்ட சமூகத்தின் நிஜ வாழ்வை அம்மொழி வெளிப்படுத்தவோ, பிரதிபலிக்கவோ முடியாது. பேச்சு, எழுத்து இரண்டிலும் அது சாத்தியம் இல்லை. அதனால்தான் தொழில் நுட்பம் எங்களுக்கு எப்போதும் ஓரளவு அந்நியமாகவே தோன்றுகிறது. அது அவர்களின் பொருள். எங்களுடையது அல்ல என்ற உணர்வு மிஞ்சுகிறது என்கிறார் கூகி. காலனியக் குழந்தை தனது உலகை காலனிய மொழி, எழுத்துக்கள் மூலம் அறிய நேர்ந்ததை மோசமான நிலையாகக் கூகி கருதுகிறார்.
கூகி, ‘கிகூயூ’ என்ற கென்ய ஆபிரிக்க மொழியில் எழுதுவதை கென்ய மற்றும் ஆபிரிக்க மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதினார். காலனிய ஆட்சியில் ஆபிரிக்கத் தேசிய இனங்களின் மொழிகள் எதிர்மறையாகப் பார்க்கப்பட்டன. வளர்ச்சியின்மை, பின்னடைவு, அவமானம், தண்டனை ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டன. பள்ளி அமைப்பில் வளர்ந்தவர்கள் அவமானம் மற்றும் தண்டனைக்குக் காரணமான தமது ஆபிரிக்க மொழியின் மதிப்பீடுகளை மறுதலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
கென்யக் குழந்தைகள் தமது சமூகமும் வரலாறும் உருவாக்கிய தொடர்பாடல் ஊடகங்களை ஏகாதிபத்திய திணிப்பால் வெறுக்கும் மரபில் வளருவதை கூகி விரும்பவில்லை. காலனிய அந்நியமாதலை கடக்க வேண்டும் என்பது கூகியின் விருப்பமாகும்.
ஆபிரிக்க மொழிகள் தம்மைப் புரட்சிகர மரபுகளோடு மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்தை முறியடிக்க விவசாய, தொழிலாள வர்க்கத்தினரை ஒன்று திரட்டி அமைப்பாக நடத்தும் போராட்டத்தோடு தம்மைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். உலகெங்கிலும் உள்ள ஜனநாயக, சோசலிச சக்திகளோடு இணைந்த உயர் அமைப்பு உருவாக ஒன்றிணைய வேண்டும். அப்போராட்டங்களோடு ஒன்றிணைவது, ஆபிரிக்கப் பன்மொழிப் பண்பாட்டில் ஒற்றுமை காண உறுதி செய்யும் என்கிறார்.
ஏகாதிபத்திய வாதிகளின் மொழிதான் ஆபிரிக்கர்களைக் கவர்ந்திழுத்து , அவர்களது ஆன்மாவைச் சிறைப் பிடித்தது. துப்பாக்கிக் குண்டு உடலை அடிமையாக்கவும், மொழி உள்ளத்தை, ஆன்மாவை அடிமையாக்கவும் பயன்பட்டன. மொழியும் பண்பாடும் பிரிக்க முடியாதவை.
வரலாற்றில் மக்கள் பெறுகின்ற அனுபவத்தை சேமித்து வைத்திருக்கும் ஒரு கூட்டு நினைவு வங்கிதான் மொழி. ஆபிரிக்கர்களை அவர்களது கூட்டு நினைவுகளுடன் வரலாற்றுடன் விழுமியங்களுடன் பிணைத்து வைத்திருப்பது அவர்களது மொழிதான். எனவே அவர்களது மொழியை அழிப்பது அவர்களது வரலாற்றைப் பண்பாட்டை அழிப்பதுதான். எனவே ஏகாதிபத்தியத்தின் பண்பாட்டு வெடிகுண்டை தகர்ப்பது என்பதன் பொருள் அனைத்துத் துறையிலிருந்தும் அந்த ஏகாதிபத்திய மொழியின் ஆதிக்கத்தை அழிப்பதுதான் என கூகி கூறுகிறார்.
கூகியின் இலக்கிய மொழி குறித்த சிந்தனைகள் அரசியலோடு தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. காலனிய அமைப்பு, ஆபிரிக்க மொழிகளை, இலக்கியங்களை அமைப்பு ரீதியாக அடக்கி வைத்து , ஆங்கிலம் மற்றும் அதன் இலக்கியத்தை உயர்த்தி வைத்ததன் விளைவாக தமது சொந்த மொழியில் தமது ஆபிரிக்க இலக்கிய வெளிப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை தோன்றுகின்றது. ஆபிரிக்க பேச்சு மொழியின் படிமங்களை வசப்படுத்த கூகி தனது எண்ணங்களை ஆங்கிலத்தில் வெளியிடும் பழக்கத்தை ஒதுக்கினார்.
ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட மொழி முற்றுகையில் இருந்து வெளிவர வேண்டும். ஏகாதிபத்திய ஐரோப்பிய மொழிகளும் பண்பாடுகளும் ஆபிரிக்க மொழிகள், பண்பாட்டை ஆதிக்கம் செய்வதை எதிர்த்தல், ஆபிரிக்க மொழிகளின் அனைத்துப் பண்புகளையும் பாதுகாத்தல் என்ற அடிப்படையில் ஆபிரிக்க இலக்கிய, மொழி, அரசியல் குறித்து கூகி வா தியாங்கோவின் சிந்தனைகள் அமைந்துள்ளன.