இலியட் ஒடிஸி எனும் கிரேக்க காவியத்தில் ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க பத்து ஆண்டுகள் கிரேக்கத்தில் நடை பெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயாணத்திலும் கழித்தவன் யுலிஸஸ். ஓய்வு என்பதே அறியாதவன், சும்மா இருக்கத் தெரியாதவன். புதிய, புதிய அனுபவங்களைத் தேடுபவன். புதிய புதிய திசைகளை நோக்கிச் செல்ல விரும்புவன். தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று. கிழப்பருவமெய்திய யூலிசஸ் நாட்டுக்கு மீள்கிறான்.
இளமைப் பருவத்தில் துடிதுடிப்போடு ஓடி ஆடித் திரிவதைப் போல இப்போது இருக்க அவன்முதுமை உடல் இடம் தருவதாயில்லை. எனினும் நாடுவந்து. ஓய்வு பெற்ற அவனால் எல்லோரையும் போல உண்டு, உடுத்து உறங்கி வறிதே இருக்க முடியவில்லை. சுறுசுறுப்பான அவன் மனம் அதற்கு இடம் தரவில்லை. மற்றவர்கள் “சும்மா” வாழ்வது அவனுக்கு வறிதாகத் தெரிகிறது. தெனிசன் பாடிய இலியட் ஒடிசியில் வரும் யூலிசஸ் கூற்றை மொழி பெயர்த்துத் தந்துள்ளார் விபுலானந்த அடிகளார். சும்மா இருப்பதை வெறுத்த யூலிசஸ், “ பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே வறிதிங்குறையும் மன்னன் யானே “ எனத் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறான். விளைவு குன்றிய களர் நிலமும் புகைபடிந்த சாப்பாடும், மூப்பு வந்து சேர்ந்த மனைவியும் வந்து சேர, எதுவும் செய்யாமல் வறிதேயிருப்பது அவனுக்கு வாழ்க்கையில் அலுப்பையே தருகின்றது.
“ என்னிழல் வாழ்வோர் என்னியல் பறியார்
உண்பார், துயில்வார்:
செம்மை நலமிலாச் சிறியோர் “
எனத் தன்னைச்சூழ சாதாரண வாழ்க்கை வாழும் மக்களைப் பரிதாபத்தோடு நோக்கும் அவன், தான் பிரயாணத்திற் பெற்ற அனுபவங்களை நினைவு கூருகின்றான். செழுமையான பயன்மிக்க அந்த நாட்களை கூறுகிறான்.
விழைவுறு மனனோடு அலைவுறு நாளில்
அளப்பில கண்டேன் அறிந்தனபலவே
எத்தனை நகரம் எத்தனை மக்கள்
எத்தனை ஒழுக்கம் எத்தனை அவைக்களம்
எனத்தான் கண்ட நகரம், மக்கள், ஒழுக்கங்கள், அரசவைகள், அரசியல்கள் அத்தனையையும் மகிழ்வோடு நினைவு கூர்வதுடன் தனது சாதனைகளையும் நினைக்கிறான். அந்த அனுபவத்திரட்சியினால் அவன் பெறும் ஞானம் பெரிது. வாழ்க்கை என்பது உண்டு உடுத்து உறங்கி வாழும் சிறிய வட்டமன்று. அது பெரிய வட்டம். சிறிய வட்ட வாழ்க்கைக்கப்பாலும் விடயங்கள் உள்ளன என்பதே அந்த ஞானம். வாழ்க்கை வட்டத்து எல்லையில் இகந்த
வேற்றுப் புலங்கள் மிகப் பல உள. செல்வழிச் செல்வழி சேணிடை அகல்வன். என்கிறான் யூலிசஸ் , ஆம் வாழ்க்கையை ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழாமல் தேடல் நோக்கோடு வாழ்க்கையைப் பார்ப்பவன் வேறு பல விடயங்களையும் வாழ்விற் காண்பான். வாழ்வின் அர்த்தத்தை, வாழ்வின் அனுபவங்களைத் தேடிச் செல்லச் செல்ல அவை இன்னும் இன்னும் என அகண்ட கொண்டே இருக்கும். அத்தகைய தேடல் எண்ணமுடையோன் ஓய்வு அறியா உளத்தினன் . இத்தகைய உள்ளமுடையோர்க்குச் சும்மா இருக்கும் பொழுதுகள் அவப் பொழுதுகளாகவே தோன்றும்.
அந்த. அவப்பொழுதுகளை அனுபவித்த யூலிசஸ்,
“ வாளா உயிர்த்தல் வாழ்க்கையாமோ
அறிவு நிறைதலும் அருஞ் செயல்புரிதலும்
ஓரிரு பிறவியில் ஒழியும் நீர்மையவோ. “
என்கிறான்.
பிறவிதோறும் அறிவைத் தேடவேண்டும். பிறவி தோறும் அருஞ்செயல் புரியவேண்டும். இதுவே யுலிசஸின் நோக்கு . எனினும் அவனுக்கு வயது சென்றுவிட்டது. கிழவனாகி விட்டான். இறப்பதற்கு இன்னும் சில நாட்கள் தான் உண்டு. இறப்பைப் பற்றிக் வலைப் படவேண்டிய யூலிசஸ் அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாது வாழும் நாளை அர்த்தமுடையதாக்க எண்ணுகிறான்.
“ யாண்டு பல கழிந்தன ஈண்டு இப்பிறவியில்
ஏஞ்சி நாள் ஒரு சிலவே அங்கவை
புதுப் பயன் விளையும் நாளாகுக. “
எனக் கூறும் அவனது கூற்றில், எஞ்சிய நாளையும் பயனுடன் கழிக்க வேண்டும் என்ற வாழ்க்கைப் பிடிப்பும் புலனாகின்றது.
நடை முதிர்ந்து விட்டது. திரை விழுந்து விட் ட து. தோற்றம் மாறிவிட் ட து. உடல் இயக்கம் குறைந்து விட்டது எனினும் அவனது ஆசையைப் பாருங்கள்:
"விதிப்பட மக்கள் யாத்த எல்லையினிகந்து
குணகடற் குளிக்கும் வான் மீன்போல
அறிவு நிறைதற் கிவ் அயல் கடல் கடக்க
நரைமுதிர் உள்ளம் நாடி நின்றதுவே"
மூப்பு அவனுக்கு ஒருதடை இல்லை . அறிவுதேடுதலே அவனது வேட்கை. சாதல் வருமுன் இன்னும் இன்னும் எனப் பயன்தரு காரியங்கள் புரிவதே அவன் நோக்கு. தான் மாத்திரம் அப்படிச் செய்வது குறுகிய நோக்கு. ஏனையோரையும் தான் கண்ட உன்னதவழி அழைப்பது விசால நோக்கு. நண்பர்களையும் தன்னுடன் அழைக்கிறான் யூலிசஸ்.
“ வம்மின் நண்பீர், என்னுடன் உழன்நீர்
யானும் நீரும் ஆண்டினில் முதிர்ந்தனம்
மூப்பினும் வினையுள. ஆக்கமும் உளவே
சாதல் எய்துமுன் மேதகவுடைய செயல் சில புரிகுவம். “
என்பது அவன் அழைப்பு. ‘மூப்பினும் வினையுள’ என்ற அடிகள் நயமிக்கவை. மூப்பு நிலையிலும் செய்வதற்கு அதிகம் உண்டு என நினைக்கிறான். மூப்பு அவனைப் பயப்படுத்தவில்லை.சாவதற்கு முன்னரும் ஏதும் செய்ய வேண்டும் என்பதே அவன் எண்ணம்.
“ இரிந்தன பலவெனின் இருப்பவும் பலவே’ என்கிறான்.
இவ்வரிகளில் அவன் உலக நோக்கு புலப்படுகிறது. இவ்வுலகத்தை மேலும் மேலும் அறிய, மேலும் மேலும் துய்க்க,
வயோதிபப் பருவத்திலும் அறிய, மரணம் வரும் வரை அறிய நினைக்கும் யூலிசஸ், காலம் சென்ற நீர்வை பொன்னையனை ஞாபகப்படுத்துகிறான்.
நம்முன் வாழ்ந்து காலமான நீர்வை பொன்னையனை நான் எனது பல்கலைக்கழக காலத்திலிருந்து அறிவேன். மாணவப் பருவத்தில் நாம் அவரை ஒரு பயபக்தியுடனேயே அணுகினோம். 1970 களில் அவர் அன்றைய இளைஞர்களுக்கு ஓர் ஆதர்சம். வேகம் வேகம் வேகம், அவரிடமிருந்த பெரும் குணாதிசயம். அவருடைய பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என வெகு கறாராகவே இருக்கும். அவரது நேர்மையான கண்டிப்பு அவரது நண்பர்களை அவர் மீது பயமும் மரியாதையும் கொள்ள வைத்தது. “ கைலாஸ் “ என விழித்து கைலாசபதியை அவர் கண்டித்தையும், “ சிவா “ என விளித்து சிவத்தம்பியை அவர் கண்டித்ததையும் நான் நேரிலேயே கண்டுள்ளேன். அவர்கள் இருவரும் நீர்வைமீது பயம் கலந்த ஓர் மரியாதை வைத்திருந்தனர். “ நீர்வை என்ன சொல்கிறார் ..? “ எனக் கேட்பர்.
ஹெலனுக்காக நடந்த யுத்தத்தில் வாழ் நாள் முழுவதையும் செலவிட்டவன் காவிய நாயகன் யூலிசஸ். இலங்கைத் தொழிலாள வர்க்கப் போராட்டத்தில் தன் வாழ் நாள் முழுவதையும் செலவிட்ட நம் கால நாயகன் நீர்வை பொன்னையன். மூப்பிலும் இயங்கியவன் யூலிசஸ். தன் முதிர் வயதிலும் இயங்கியவர் நீர்வை பொன்னையன். தான் மாத்திரம் இயங்காது தன்னோடொத்த மூப்பு மிகுந்தோரையும் யூலிசசைப் போல இயங்குங்கள் எனக் கூறி இயங்கிக் காட்டியவர் நீர்வை பொன்னையன். 1960, 70 இலங்கையின் தொழிலாள வர்க்க எழுச்சியினதும் அதன் வீர மிகுந்த போராட்ட வரலாறும் அறிந்த அனைவரும் நீர்வைபொன்னையனையும் அறிவர்.
ஒரு சகாப்பத்தின் ஒரு பழம் தலை முறையில் இன்றும் எஞ்சி நிற்போர் ஓரிருவரே. அந்தத் தலைமுறை வேகமாக மாறும் இவ்வுலகத்தையும், தறிகெட்டு ஓடும் இளம் தலைமுறையையையும் கண்டு விக்கித்து நின்றது. எல்லாமே தம் காலத்தில் மாறுவது கண்டும் சோராது இதுவும் மாற வேண்டும் என அர்ப்பணிப்போடு தமது தள்ளாத வயதிலும் தன்னாலான வேலைகளைச் செய்தது. வெற்றி தோல்வி பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு அது ஓர் கர்ம யோகம். அந்த ஓரிருவரில் ஒருவர் இன்று நம்மிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டார் நீர்வை பொன்னையன்.
தோழராக, நண்பராக, தந்தையாக , அண்ணராக, ஆசிரியனாக என என்னுடனும் சித்திரலேகாவுடனும். நேற்றுவரை மிக மிக உரிமையோடு பழகிய அந்தத் திருவுரு, இப்போது நம்முடன் இல்லாதது மலையின் பாரம் போல மனதை அழுத்துகிறது. தற்போது மட்டக்களப்பில் நிற்கிறேன், அவரது மரண ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத நாட்டின் சூழல் மேலும் மேலும் பாரம் தருகிறது. இந்தப் பாரம் அவரோடு பழகிய அனைவருக்கும் இருக்கும். முதிர்ச்சி பெற்ற எங்கள் முதியவனான யூலிசஸ் அவர்களுக்கு விடைகொடுப்போம்.
* 'பதிவுகள்' இணைய இதழுக்கு இக்கட்டுரையினை அனுப்பிவைத்தவர் எழுத்தாளர் முருகபூபதி. -