எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியம் பற்றிய அறிமுகப் பதிவுகளை நான் விரும்பி வாசிப்பது வழக்கம். மிகவும் அழகாக படைப்பாளிகளைப் பற்றியும், படைப்புகள் பற்றியும், தன் உளப்பாதிப்புகளின் அடிப்படையில் விபரிக்கும் அவரது நடை வாசகர்களின் நெஞ்சங்களை ஈர்த்துவிடும். அவரது படைப்புகளில் காணப்படும் இன்னுமொரு அம்சம் இருப்பின் நிலையாமை பற்றிய சோகம். பெரும்பாலான அவரது படைப்புகளில் புனைவுகளாகவிருக்கட்டும், அபுனைவுகளாகவிருக்கட்டும் எல்லாவற்றிலுமே இவ்விதமான சோகம் பரவிக்கிடக்கும். நகரங்கள், பயணங்கள் எல்லாமே அவருக்கு எப்பொழுதும் கடந்த கால நிகழ்வுகளை, உறவுகளை, துயரங்களையெல்லாம் தம்முள் அடக்கி வைத்திருக்கும் படிவுகளாகவேயிருக்கின்றன. இதனால் பெரும்பாலான அவரது புனைவுகளை வாசிக்கும்பொழுது வாசகரொருவரின் உள்ளமானது வாசிப்பின் முடிவில் நிலையாமை பற்றிய ஒருவித துயரத்தால் கனத்துப் போகின்றது.
அவரது படைப்புகளில் காணப்படும் இன்னுமொரு முக்கியமான அம்சம் தமிழ் இலக்கணத்துடன் சம்பந்தப்பட்டது. நூற்றுக்கணக்கில் காணப்படும் எழுவாய் - பயனிலை இயைபு வழுக்கள் வாசகரொருவரின் வாசிப்பிற்கு எப்பொழுதுமே தடங்கலாக இருக்கின்றன. இவ்வழுக்களை தட்டச்சுப் பிழைகளாகக் கருதுவதற்கிடமில்லை; ஏனென்றால் நூற்றுக்கணக்கில் இவ்வகையான வழுக்கள் காணப்படுகின்றன. இதனை எஸ்.ரா வேண்டுமென்றே மீறுகின்றாரா? அல்லது அடி சறுக்கும் ஆனையாக சறுக்குகின்றாரா என்பது தெரியவில்லை.
உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
'செகாவின் சொற்களில் அந்த இரவும் பனியும் தனிமையும் அப்படியே உறைந்து போயிருக்கிறது.' (போயிருக்கின்றன என்று வந்திருக்க வேண்டும்.) (நூல்: 'செகாவின் மீது பனி பெய்கிறது'; பக்கம் 38; உயிர்மை வெளியீடு).
'அவரது பெரும்பான்மையான சிறுகதைகள் மனதின் விசித்திரமான போக்குகளையெ ஆராய்கிறது.' ( 'ஆராய்கின்றன என்றிருக்க வேண்டும். நூல்: 'செகாவின் மீது பனி பெய்கிறது'; பக்கம் 68; உயிர்மை வெளியீடு).
'நாம் வாழும் வாழ்க்கை முறையும், எண்ணங்களும், செயல்களும், இச்சைகளுமே நோய்மைக்குக் காரணமாக இருக்கிறது' (இருக்கின்றன என்றிருக்க வேண்டும். 'துயில்' நாவலின் முன்னுரையில்; பக்கம் 8; உயிர்மை வெளியீடு)
'தொடர்ந்த பயணமும் அலைச்சலும் என்னைப் பலமுறை நோய்மையுறச் செய்திருக்கிறது' (செய்திருக்கின்றன என்றிருக்க வேண்டும். 'துயில்' நாவலின் முன்னுரை; பக்கம் 7)
'வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே' என்றார் தொல்காப்பியர். தொல்காப்பியரின் அறிவுரையினை எஸ்.ரா. கொஞ்சம் கவனத்தில்கொள்வது நல்லதென்றே படுகின்றது.
புனைவொன்றின் வட்டார வழக்குகளைப் புலப்படுத்தும் உரையாடல்களில் இதுபோன்ற வழுக்களுள்ள வாக்கியங்கள் வருவதியல்பு. ஆனால், ஆசிரியரின் கூற்றாகவரும் கட்டுரைகளில் இவை நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியவை. ஏனென்றால், முன்பே குறிப்பிட்டதுபோல் இவை, இத்தகைய வழுக்கள், வாசிப்பிற்கு எப்பொழுதுமே இடர்களாகவிருக்கின்றன. இவ்வழுக்களைத் தவிர்ப்பதற்கு இலகுவான வழிகளிலொன்று வெளியிடும் பதிப்பகத்தாரை ஒழுங்காக 'புரூவ் ரீடிங்' (Proofreading) பார்க்கச் சொல்வது.