- நெதர்லாந்தில் நிகழ்ந்த 34வது பெண்கள் சந்திப்பின் போது வாசிக்கப்பட்ட கட்டுரை -
பாலியல் வன்முறை என்பது பாலியல் இலக்கை நோக்கிய உடல்ரீதியான மற்றும் உளரீதியான ஒரு துன்புறுத்தல் ஆகும். எங்களுடைய கலாசாரம் மற்றும் அமைப்புமுறைக் கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் இது அதிகாரத்தின் ஒரு வகையான வெளிப்படுத்தலாக இருக்கிறது. பால்மயமாக்கப்பட்ட இந்த வன்முறையைச் சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு, அதன் பல்வகைமையான தோற்றுவாய்களை அடையாளம்காணல், அவை பற்றிப் பேசல், அவற்றை அகற்றுவதற்கான தீர்வுகளை இனம்கண்டறிதல் போன்றவை முக்கியமானவையாக இருக்கின்றன.
வாழ்க்கைக் காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் மூன்றில் ஒரு பெண்ணும், ஆறில் ஒரு ஆணும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பெண் எனத் தன்னை அடையாளம் காண்பவர்களுக்கும் பாலியல் வன்முறை பொதுவானதாயினும், இன்றைய எனது பார்வை தமிழ் பெண்களாகிய எங்களை நோக்கியதாகத்தான் இருக்கப்போகிறது.
இலங்கையில் வாழ்ந்த எங்களுக்கு ரெயினில், பஸ்சில் போகும்போது நிகழ்ந்த பலவகையான பாலியல் வன்முறைகள் நினைவிருக்கலாம். ஆனால், அந்த நேரம் அது பற்றி நான் எதுவுமே செய்யவில்லை. அப்படித்தான் எங்களில் பலர் இருந்திருப்போம். அப்படியான நேரங்களில் முடிந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்போம்; நகரவே முடியாத நெருக்கடி எனில், அது எவ்வளவுதான் அருவருப்பைத் தந்திருந்தாலும் அதைச் சகித்திருப்போம். இவ்வகையான சம்பவங்கள் நாங்களும் அவற்றை விரும்புகிறோம் என்ற எண்ணத்தை அல்லது நாம் எதுவும் செய்யமாட்டோம் என்பதால் என்னவும் செய்யலாமென்ற தைரியத்தை அந்தப் பாலியல் வன்முறையாளர்களுக்குக் கொடுத்திருக்கக்கூடும். அதனாலும் அந்தப் பாலியல் வன்முறையாளர்கள் அப்படியான செயல்களை மேலும் மேலும் செய்திருக்கலாம். எனவே முடிந்தவரை உடனடியான எதிர்ப்பைச் சொல்லல் மிகவும் முக்கியமாகும். முடியாதபோது அவரவர் விருப்பத்துக்கும் செளகரியத்துக்கும் ஏற்ப அதனை எப்படி மேவுவது என ஆராய்வது நல்லது.
பாலியல் வன்புணர்வு, பாலியல் தொந்தரவு, பாலியல் உறுப்புக்களை வெளிக்காட்டல், விரும்பத்தகாத கருத்துரைகள் சொல்லல், இரத்த உறவுள்ளவர்களுக்குள் வன்புணர்வு எனப் பலவகைகளில் பெண்கள் மீது இந்தப் பாலியல் வன்முறை நடாத்தப்படுகிறது.
ஆரம்ப காலங்களில் துணையை இழந்த பெண்ணை அவனுடன் உடன்கட்டை ஏற்றுதலில் ஆரம்பித்த பால் அடிப்படையிலான இந்தப் பாலியல் வன்முறை, பின் கைம்மைகாப்பது எனத் தரையில் படுக்கும்படி, தலைக்கு மொட்டையடிக்கும்படி, சுகங்களைத் துறக்கும்படி அறிவுறுத்தி, அதன்பின் வெள்ளைச் சீலை, பூ, பொட்டு இன்மையுடனான ஓர் அபசகுணமாக பெண்ணை உருவகப்படுத்தியது. தற்போது, காலத்துடனான மாற்றமாக மேலும் பல்வேறு புது வடிவங்களில் இந்தப் பாலியல் வன்முறை உருவெடுத்திருக்கிறது. வடிவங்கள் மாறியிருக்கின்றனவே அன்றி பெண்கள் மேலான இந்தப் பாலியல் வன்முறையின் தீவிரம் குறையவில்லை.
பாலியல் வன்முறை குடும்பங்களினுள் நிகழும்போது அது வன்முறை என்பதுகூட பலரினால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. துணைவர் ஒருவரின் விருப்பமில்லாதபோது அல்லது அவர் அதற்குத் தயாராக இல்லாதபோது நிகழும் உடலுறவுகூட ஒரு பாலியல் வன்முறையே என்பதை எங்களுடைய கலாசாரம் ஏற்பதற்கு இன்னும் தயாராக இல்லை. மேலும், பெண்ணுக்குப் பிடிக்காவிட்டாலும் கணவன் விரும்பும் விதத்தில் உடலுறவில் ஈடுபடல் பெண்ணின் ஒரு கடமை என்பதால் பெண்கள் பொறுத்துப்போக வேண்டும், படுக்கையில் கணவனை மகிழ்விக்கும் ஒரு தாசியாக மனைவி இருக்கவேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்புகள் வன்முறைகளைச் சகித்து குடும்பத்தைக் கட்டிக் காக்கவேண்டும், அதனை விட்டுவிலக விடாமல் இருக்கவேண்டுமென பெண்களை இறுகக்கட்டி வைத்திருக்க முயற்சிக்கின்றன. தங்களுடைய பெயர் கெட்டுப்போகக்கூடாது என்ற பயமும், பிள்ளைகளுக்கு அப்பா என்ற உறவு தேவை என்ற நிதர்சனமும், sentiment – உணர்ச்சிவயமான கருத்துக்களும் பாலியல் வன்முறைகளைத் தாங்கிக் கொண்டு பெண்கள் வாழ்வதற்குக் காரணமாகின்றன எனலாம்.
பாலியல் வன்முறையாளர்களின் நெறிமுறைகள் அற்ற, சட்டத்துக்கு விரோதமான இந்தச் செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் உடல்ரீதியான ஊறுகளை மட்டுமன்றி, கிரகித்தலில் சிரமம், பதட்டம், நித்திரையின்மை, கெட்ட கனவுகள், நம்பிக்கையின்மை, மனச்சோர்வு போன்ற நீடித்திருக்கும் உளரீதியான பாதிப்புக்களையும் அனுபவிக்கக்கூடும்.
பாலியல் வன்முறையாளர்கள் பாதிக்கப்படுபவர்களுக்கு அந்நியர்களாக இருக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகும். பெரும்பாலும், அதாவது 82 சதவீதமான நேரங்களில் பெற்றோர், துணைவர், நண்பர், ஆசிரியர், கூட வேலைசெய்பவர், பராமரிப்பாளர், மேலதிகாரி போன்ற நம்பிக்கைக்குரிய நிலையிலிருக்கும் மிகவும் நெருங்கிய ஒருவராகவே அவர்கள் இருக்கின்றனர்.
ஆனால், பாலியல் வன்முறைகளுக்கு உட்பட்டமை பற்றி வெளியே கதைப்பது தமக்கு வெட்டக்கேடு எனப் பெண்கள் நினைப்பதால், சமூகம் அவர்களை வித்தியாசமாகப் பார்க்குமென அவர்கள் பயப்படுவதால், நடந்த செயல்களுக்கு அவர்கள் தாம்தான் காரணமெனத் தம்மில் பிழைகாணத் தலைப்படுவதால், அவை பற்றிப் பொலிசுக்கு அறிவிப்பதற்கு அவர்கள் அஞ்சுவதால், அறிவித்தால் மேலும் பிரச்சினை வரலாமென பாலியல் வன்முறையாளர்களால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதால், 95 சதவீதமான பாலியல் வன்முறைகள் அறிவிக்கப்படுவதில்லை. அத்துடன் அவை அறிவிக்கப்பட்டாலும் தகுந்த ஆதாரமில்லை என அனேகமான வழக்குகள் தள்ளப்படும் தூரதிஷ்டவசமும் அறிவித்தும் என்ன பயன் என்ற விரக்தியைப் பாதிக்கப்படுவோருக்குக் கொடுக்கிறது என்பதும் உண்மைதான்.
மேலும் எமது சமூகத்தில் பெண்ணுக்குக் கற்பு என்றொரு கவசம் போடப்பட்டுள்ளதால் பாலியல் வன்புணர்வு கற்பழிப்பு எனப் பார்க்கப்படுகிறது. பழமை பேணும் சில எழுத்தாளர்கள் போர்க்காலத்தில் நிகழ்ந்த இத்தகைய பாலியல் வன்புணர்வு பற்றிய கதைகளை எழுதும்போதுகூட, ‘கற்பழிந்ததால் மயிர் நீங்கினால் உயிர்வாழ விரும்பாத கவரிமான் போல அவள் கிணற்றில் விழுந்து தற்கொலை’ போன்ற பொருள்களில் கதைகளை எழுதி எழுதி அந்தக் கருத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனாலும் சில பெண்கள் இது பற்றி முன்வந்து கதைப்பதற்குத் தயங்குகின்றனர். அது மட்டுமன்றி தற்கொலை முயற்சிகளைக்கூட அவர்கள் எடுப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இப்படியான ஒரு பாலியல் வன்புணர்வின் பின்னரும் ஒரு பெண் தலைநிமிர்ந்து வாழ்வதாகக் கதைகள் படைக்கப்பட வேண்டும்.
அண்மையில் வெளிவந்த பாபநாசம் என்ற திரைபடத்தில், இன்றைய தொழில்நுட்ப உலகில் நடக்கக்கூடிய ஒரு பிரச்சினையை, அதாவது குளிக்கத் தயாராகும் பெண் ஒருவரின் படம் அவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டதைத் துணிச்சலாக அந்தக் குடும்பத்தவர் எதிர்கொள்வதாகக் காட்டப்படவில்லை. ஒருவன் படம் எடுத்துவிட்டு அதைக்காட்டி உடலுறவுக்கு வா, வராவிட்டால் உனது அந்தப் படத்தை இணையத்தில் போடுவேன் என மிரட்டும்போது, தாராளமாகப் போட்டுக் கொள் எனக் கூறும் துணிவு தங்கள் மகள்மாருக்கு வரும்வகையில் அவர்களுக்கு பெற்றோர் ஆதரவு வழங்கவேண்டும். எனது இந்த விமர்சனத்தை நான் சொன்னபோது, சில ஆண் எழுத்தாளர்கள் கலைப்படைப்பு ஒன்றை கலைப்படைப்பாக மட்டுமே பார்க்கவேண்டுமென்றார்கள். ஆனால், ஊடகங்களின் ஊடாகப் பரப்பப்படும் கருத்துக்கள் சமூகத்தில் பெருமளவில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பது மிகவும் நிதர்சனமான ஒரு உண்மை ஆகும். பெரியார் அவர்கள் ஆரம்பித்துவைத்த புரட்சியை மேவி, விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுமொரு கலாசாரமாக இந்தியத் தமிழ் கலாசாரம் மீண்டும் மாறியதற்குக் காரணம் தமிழ்த் திரைப்படங்களே என்கிறார் சமூக செயற்பாட்டாளர் மாலதி மைத்திரி அவர்கள் ரொறன்ரோவில் வெளிவந்த வைகறை என்ற பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில்.
ஆண் தலைமைத்துவக் கலாசாரமும், காலணித்துவம் எங்களின் மேல் திணித்த வரைமுறைகளும் பெண்கள் மேலான பாலியல் வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்திருக்கின்றன. ஆண்மை என்ற கருத்தாக்கம் பிழையான வழியில் விதைக்கப்படுகிறது. ஆண் என்பவன் பலம்வாய்ந்தவன், அவன் அழக்கூடாது, சாண் பிள்ளையானாலும் அவன் ஆண் பிள்ளை, உதவி கேட்பது அவனுக்கு அவமானம், பெண்ணை விட அவன் மேலானவன், அவன் ஆண்தானே - எனவே அவன் என்னவும் செய்யலாம் என்ற நிலைகளைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தக் கருத்துக்களைத் தங்கள் மகன்மாருக்கு கடத்துவதற்குப் பெரும்பாலான அம்மாமாரும் தவறுவதில்லை. அதனால் ஆண் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை, மன நலப் பாதிப்புக்களை எப்படிக் கையாள்வது என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனை தன் அதிகாரமாகப் பெண்ணில் காட்ட விழைகின்றான். இந்த ஆண்மைத்துவக் கருத்துநிலை நச்சுவிளைவுகளையே ஆண், பெண் என்ற இருபாலாரிலும் விளைவிக்கின்றது
எனவே பாலியல் வன்முறையை இல்லாமல் செய்வதற்கு ஒருமித்த ஓர் அணுகுமுறையே அவசியமானது. பாதிக்கப்பட்டவர்களில் குற்றம்காண்பதை விடுத்து பாலியல் வன்முறையாளர்களுக்குப் போதிய தண்டனையும் அவர்களின் அந்தச் செயல்கள் மீது பரந்தளவில் விமர்சனமும் வைக்கப்பட வேண்டும். அத்துடன் சமூகரீதியில் இந்தச் செயல்களுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் ஆராயப்படல் அவசியமானது. உண்மையில் பாலியல் வன்முறையை இல்லாமல் செய்யும் பொறுப்பு ஆணுக்கே அதிகமாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம், இப்படி நடக்காமலிருக்க நாம் என்ன செய்யலாமென நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திப்பது முக்கியமானது. பாதிப்பிலிருந்து பிழைத்துவாழ்பவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும், அவர்களின் கதையை நாங்கள் நம்பவேண்டும். அவர்கள் எப்படி தங்களைக் கவனித்துக்கொள்ளலாம், எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றிய அறிவூட்டலை நாம் அவர்களுக்குக் கொடுக்க முனைய வேண்டும். பாலியல் வன்முறை பற்றிய அவர்களின் விழிப்புணர்வை வளர்க்கவேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசெளகரியம் கொடுக்கும் பரிதாபப்படலை விடுத்து, அந்தப் பாதிப்பை எதிர்நோக்கும் திறனை, சமாளிக்கும் தைரியத்தை அவர்களில் வளர்த்தல் அவசியமானது. ஏதாவது ஒரு விடயம் அந்த நினைவைத் தூண்டும்போது அவர்கள் அது பற்றிக் கதைப்பதற்கு ஒருவர் இருக்கிறார் என்றதொரு நம்பிக்கையை அவர்களிடையே உருவாக வேண்டும். வேதனைதரும் பிழையான ஒரு எண்ணம் மனதுக்குள் ஓடும்போது அதைக் கண்டறிந்து மனதின் கவனத்தைத் திசைதிருப்பலும், மீண்டும் எழுந்துவருவதற்காக நம்ப வேண்டியவற்றை எழுதிவைத்தலும் அவர்களுக்கு உதவிசெய்யலாம். நான் செய்திருக்க வேண்டும் அல்லது செய்திருக்கக்கூடாது எனத் தன்னைத்தானே குற்றம்காண்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் நிறுத்துதல் அவசியம் என்பவற்றைக் கற்பிக்க வேண்டும்.
அத்துடன், பாலியல் வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான உறவுகள் என்றால் என்ன, எது நல்ல தொடுகை, எது கூடாத தொடுகை என்பது எங்களின் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எங்களின் உடல் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது, அதனை எவரும் எமது அனுமதியின்றித் தொடமுடியாது என்பதை எங்களின் பிள்ளைகளுக்கு நாங்கள் கற்பிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் உறவினர்களிடம் செல்லும்போது, அவர்களைக் கொஞ்சும்படி அல்லது கட்டிப்பிடிக்கும்படி எம்முடைய பிள்ளைகளை வற்புறுத்துவது போன்ற செயல்களை நாங்கள் நிறுத்தவேண்டும்.
மீ ரூ இயக்கம் வந்த பின்னர், நான் மட்டும் தனித்தில்லை என்ற ஒரு ஆறுதலை மட்டுமன்றி, ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தன்மையை பெண்களுக்கு இது வழங்கியிருக்கிறது. இதனால்தான் பல பிரமுகர்கள், நிறுவனத் தலைவர்களின் பாலியல் அட்டூழியங்கள் அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. பாலியல் வன்முறையின் விளைவுகள் பற்றிய பயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைக்கு 50 வருடங்களின் முன்னர் எட்டு வயதுச் சிறுமியாக இருந்த என்னுடன் ஒருவர் தவறாக நடக்க முயன்றபோது அந்த வீட்டில் வேறு நபர்கள் இருந்ததால், நடக்கவிருந்தது என்னவென்று விளங்காவிட்டாலும்கூட சத்தம்போட்டுக் கத்திக்கொண்டு வெளியில் ஓட என்னால் முடிந்திருந்தது. பின்னர் அவர்களுடான உறவு நின்றுவிட்டது. இதை ஏன் சொல்கிறேன் எனில், பெண்தான் தள்ளியிருக்க வேண்டுமென அன்று நினைக்கப்பட்டது போலத்தான் இன்றும் நினைக்கப்படுகிறது. இருட்டில் போகாதே, நேரம் பிந்தி வராதே, தனியப் போகாதே - இவையாவும் பெண்ணுக்குத்தான் சொல்லப்படுகின்றன. ஆணுக்கு எதுவுமில்லை. அத்துடன் அவன் செய்வது பிழை எனச் சொல்வதற்கும் யாருமில்லை. பாலியல் வன்முறை செய்ய முயற்சிப்பவர்களை எதிர்க்கும் மனத் துணிவு பெண்களாகிய எங்களுக்கும் ஏனைய ஆண்களுக்கும் தேவை. எப்படி நம்பிப் போனாய் எனப் பாதிக்கப்பட்டவரிடம் கேட்பதை விட்டுவிட்டு, நம்பி வந்தவளை எப்படி ஏமாற்ற முடிந்தது என பாலியல் வன்முறையாளர்களிடம் நேரில் கேட்க நாங்கள் அனைவரும் ஆரம்பிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் போட்டிருந்த உடுப்புத்தான் தங்களை அப்படிச் செய்யத் தூண்டியது எனச் சிலர் சொல்லும் கருத்துக்களைப் பார்க்கும்போது, அதை இன்னும் சிலர் ஆதரிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் சுயகட்டுப்பாடு இருக்கவேண்டுமென்பதை மறந்துபோகிறோமா என நினைக்கத் தோன்றுகிறது, இது பலமா அல்லது பலவீனமா என ஒரு சில வருடங்களின் முன்னர் இது பற்றிக் கேட்டு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தபோது சில ஆண்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்களும் சாட்டுக்களும் ஆண்களுக்கு இது பற்றிக் கல்வியூட்டப்பட வேண்டிய அவசியத்தையே எனக்குள் வலியுறுத்தின.
என்னுடைய மொழிபெயர்ப்பு வேலையில் நான் சந்தித்த ஒருவர், தன்னுடைய பிள்ளை படுத்திருந்தவிதம் குடித்திருந்த தன்னை உடலுறவுக்குக் கூப்பிட்டது என்றபோது அந்தத் தந்தையில் நான் அருவருப்பை உணர்ந்தேன். இதைவிட மோசமாக, நான் வைச்ச செடியில் பூத்த பூவை நான் நுகர்ந்தாலென்ன என பேத்தியுடன் தகாத நடத்தைசெய்த தாத்தாவின் நியாயப்படுத்தல் பற்றி அறிந்தபோது --- எனக்கு வந்த உணர்ச்சியை விபரிக்க வார்த்தை தேடமுடியாது.
கனடாவுக்குப் புலம்பெயர்ந்த ஆரம்ப காலங்களில் எனது இரு சிறிய பிள்ளைகளுடன் நான் தனியே வாழ்ந்தேன். அப்போது என்னுடன் கொம்பியூட்டர் பயின்ற ஒருவர் தான் என்னுடன் வந்திருந்தால் என் பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கும், தனக்கும் இருக்க ஒரு இடம் கிடைக்கும் என்று சொல்லியது எனக்கு ஏற்படுத்தியிருந்த ரெளத்திரம் பற்றி என் தங்கையிடம் நான் பகிர்ந்துகொள்ள முயன்றபோது, அப்படி அவர் கேட்கும்படியா நான் என்ன செய்தேன் என என்னைக் கேட்டு என் ஆத்திரத்தை அவ மேலும் அதிகப்படுத்திய மாதிரி, பெண்ணுக்கு என்ன நடந்தாலும் பெண் மட்டும்தான் கேள்விக்குட்படுத்தப்படுகிறாள்.
பாலியல் வன்முறை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும்கூட, சிலர் குடிவெறியில் நடனம் ஆடும்போது தற்செயலாகத் தொட்டுவிட்டேன் என்பார்கள். குடித்திருந்தேன் அதனால் களவெடுத்தேன், கொலை செய்தேன் எனச் சொல்ல முடியுமா? எனவே இப்படி ஒரு சாட்டுச் சொல்வதுகூட பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் மதிப்பைத்தானே சொல்கிறது. இல்லையா?
தாய்க்கும் சொல்ல முடியாத நிலையில், என்னுடைய பாடசாலைத் தோழி ஒருவர் தந்தையினதும் தமையனினதும் பாலியல் வன்முறையைச் சகித்துக்கொண்டு தினமும் இரவுகளை எப்படிக் கடத்துவது என்ற பயத்தில் வாழ்ந்திருக்கிறாள். அப்பா பிள்ளையைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னரும்கூட அந்த அப்பாவுடன் சேர்ந்து வாழும் அம்மாமாரும் உள்ளனர், அப்பா கண்டிப்பாக இருப்பதால் பிள்ளைகள் அப்படிப் பொய் சொல்கிறார்கள் என வக்காலத்து வாங்கும், நம்பும் அம்மாமார்கூட வாழ்கின்றனர், இப்படியாக இருக்கும் இந்தப் பெண்களுக்கும் அறிவூட்டப்பட வேண்டும்.
பாடசாலையில், வேலையிடத்தில் எங்கும் பாதுகாப்பு நிலைமைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பாதிப்பிலிருந்து எப்படி மீள்வது என யோசித்துக்கொண்டிருந்தால் அதிலிலிருந்து வெளிவருவது சிரமமாக இருக்கலாம், ஆனால் விட்டுவிட்டு வெளியே வர முயன்றால் நம்பிக்கை துளிர்க்கலாம், பின்னர் அது வளர்ந்து வேரூன்றுவதை நாங்கள் பார்க்க்கூடியதாக இருக்கும். எனவே பாலியல் வன்முறையைத் தடுப்பதும், அப்படி ஒன்று நடந்துவிட்டால் அதிலிருந்து மீள வர உதவிசெய்வதும் எங்களுடைய தார்மீகக் கடமை என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.