[மீண்டும் இணையத்தில் 'பாரதி மகாகவியா' என்பது பற்றிய விவாதத்தை பிரபல தமிழ் எழுத்தாளரொருவர் தனது வலைப்பதிவில் ஆரம்பித்து வைத்துள்ளார். 'பாரதி பற்றிய இத்தகைய விவாதம் தமிழ் இலக்கிய உலகிற்கொன்றும் அந்நியமானதல்ல. 1936இலிருந்து இவ்விதமான விவாதங்கள் தமிழ் இலக்கிய உலகில் நடைபெற்று வந்திருக்கின்றன; இனியும் வரும்.. கோவை ஞானியின் 'பாரதி, மகாகவி: வரலாறு' என்னுமிந்தக் கட்டுரை இத்தகைய விவாதங்களுக்கெல்லாம் நல்லதொரு பதிலாக அமைந்திருக்கின்றது. காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட 'ஞானி கட்டுரைகள் - III - தமிழ்க் கவிதை' என்னும் நூலில் வெளியான இக்கட்டுரையினை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமானதென்பதால் 'பதிவுகள்' அதனை மீள்பிரசுரம் செய்கிறது. ] 1936 வாக்கில் தமிழகத்தில் பாரதியார் மகாகவி இல்லையா என்ற விவாதம் எழுந்தது. காரைக்குடியில் வ.ரா. பேசும்போது பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு சேக்ஸ்பியரோ செல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினாராம். பாரதியாரை மகாகவி என்று அடைமொழி தந்து நூல் எழுதியதோடு, தன் காலம் முழுவதும் பாரதி புகழ் பாடுவதையே தன் கடமையாக வ.ரா. கொண்டிருந்தார். வ.ரா.வின் கருத்து கடுமையான சர்ச்சைக்குள்ளாகியது. சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், தினமணி ஆகிய இதழ்களில் 'நெல்லை நேசன்' என்ற புனைபெயரில் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, கல்கி ஆகியோர் தமிழ்க் கவிதையில் பாரதியின் இடத்தைக் கேள்விக்குரியதாக்கி எழுதினார்கள். பாரதியைத் தேசியக்கவி என ஒப்புக் கொள்ளலாம் என்றும், வால்மீகி, காளிதாசர், சேக்ஸ்பியர், செல்லி, முதலியவர்களுக்கு நிகராகச் சொல்லமுடியாது என்றும் எழுதினார்கள்.கு.ப.ராவும் சிட்டியும் விரிவாக மறுப்பு எழுதினார்கள். ஓமர் முதலிய பெரும்கவிஞர்கள்பலரோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு நிகராக பாரதியை மகாகவி என்றார்கள்.
விவாதத்தின்போது தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு அல்லது மதிப்பீடு என்பதே இன்னும் தோன்றவில்லை என்றும், தமிழ்க் கவிதையில் பாரதியின் இடத்தை நிர்ணயிப்பதன் மூலமே பிற கவிஞர்கள் பற்றிய மதிப்பீட்டிற்கு வழி பிறக்குமென்றும் கு.ப.ரா. முதலியவர்கள் குறிப்பிட்டார்கள். விவாதத்தில் முதலில் எழுந்த சூடு தணிந்த நிலையில் பாரதியார் பற்றிய இந்தத் திறனாய்வு நாளடைவில் தமிழில் திறனாய்வு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டார்கள். "கண்ணன் என் கவி" என்ற இவர்களது கட்டுரைகள் அடங்கிய நூல் 1937-ல் முதல் பதிப்பாக வெளிவந்தது. அவர்கள் எதிர்பார்த்த முறையில் தமிழில் பாரதியார் பற்றியோ, வேறு படைப்பாளிகள் பற்றியோ திறனாய்வுகள் தோன்றவில்லை. சுமார் 50 ஆண்டுகள் கழிந்த நிலையில் 1981-இல் இந்த நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இதில் சி.சு.செல்லப்பா அவர்களின் கட்டுரையும் இடம் பெற்றது. பாரதியார் மகாகவிதான் என்பதை செல்லப்பா ஒத்துக் கொள்கிறார். அதே சமயம் தமிழில் திறனாய்வு வளராதது குறித்தும், குறிப்பாகப் பாரதியார் பற்றிய மதிப்பீடு செய்யப்படாதது குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிடுகிறார்.
கு.ப.ரா. முதலிய எழுத்தாளர்களின் கவலையை நாம் புரிந்து கொள்கிறோம். தமிழில் திறனாய்வு, அவர்கள் விரும்பியவாறு ஏன் வளரவில்லை என்ற ஆய்வு தேவையானதுதான் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளலாம். கடந்த சில 10 ஆண்டுகளில் திறனாய்வு குறித்து நாம் நிறையப் பேசியிருக்கிறோம். பாரதியார் குறித்தும் அண்மைக் காலத்தில் சில கடுமையான எதிர் விமர்சனங்களூம் எழுந்துள்ளன. குறிப்பாகப் பாரதியாரின் பார்ப்பனியம் குறித்துச் சிலர் எழுதியுள்ளார்கள். இவைபற்றியெல்லாம் நாம் கருத்துச் செலுத்துவது அவசியம்தான் என்ற போதிலும், பாரதியாரை மகாகவி என நிலைநிறுத்துவதற்கு, கு.ப.ரா, சிட்டி, செல்லப்பா ஆகியவர்கள் முன்வைத்த வரையறைகள் முதலியவற்றின் தகுதிப்பாடு குறித்து இப்பொழுது நாம் ஆராய வேண்டும். பாரதியார் மகாகவிதான் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இல்லை. கு.ப.ரா. முதலியவர்களின் கருத்துக்களையும் நாம் அதே வடிவில் இன்று எந்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். தமிழில் திறனாய்வு ஓரளவுக்கேனும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் கு.ப.ரா. முதலியவர்களின் கருத்துக்களை ஒரு மறுமதிப்பீடு என்ற முறையில் பார்க்க வேண்டியிருக்கிறது.
பாரதியை மகாகவி என்று மதிப்பீடு செய்ய விரும்பிய இவர்கள் வடமொழியிலும், மேற்குலகில் கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம், செருமனி முதலிய மொழிகளிலும் பெருங்கவிஞர்கள் எனப் புகழ் பெற்றிருக்கும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பெருங்கவிஞர்கள் என்று மதிப்பீடு செய்யும் முறையில் ஏற்கனவே பலர் முன் வைத்திருந்த சில கருத்துக்களையும் குறிப்பிடுகிறார்கள். வால்மீகி, காளிதாசர், ஓமர், வர்ஜில், தாந்தே, சேக்ஸ்பியர், மில்டன், வேர்ட்ஸ்வொர்த், செல்லி, பைரன், கத்தே, என்ரிச்எய்ன் ஆகிய பெருங்கவிஞர்களை இஅவர்கள் குறிப்பிடுகிறார்கள். சீனக் கவிஞர்களூம், அரபுக் கவிஞர்களூம் இவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். கு.ப.ரா முதலியவர்கள் ஆங்கில மொழியோடு கொண்டிருந்த நெருக்கமான உறவை நாம் புரிந்து கொள்கிறோம். ஆங்கில மொழியின் வழியே பிற மொழிக் கவிஞர்களோடும் இவர்கள் கொண்டிருந்த உறவையும் நாம் புரிந்து கொள்கிறோம். 1950/60 வரை கல்வி உலகத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்களுக்கு இத்தகைய வாய்ப்பு பெருமளவு இருந்தது. இன்று இந்த வாய்ப்புக் குறைந்து விட்டது.
வடமொழியில் இதிகாசம் எழுதியவர்கள் மகாகவிகள். வால்மீகி இராமாயணம் என்ற இதிகாசத்தை எழுதியவர். பாரதியார் எழுதியவை குறுங்காவியங்கள். ஆகவே பாரதியாரை வால்மீகியோடு ஒப்பிடமுடியாது. காளிதாசன், சாகுந்தலம் முதலிய நாடகப் பேரிலக்கியங்களைப் படைத்தவன். பல தலைமுறைகளின் கதையைச் சொன்னவன். பாரதி இப்படி எதையும் எழுதவில்லை. மகாபாரதம் என்ற இதிகாசத்தை எழுதிய வியாசரோடு, பாரதியை இவர்களில் யாரும் ஒப்பிடவில்லை. இதிகாசங்கள் என்பவை பத்தாயிரக்கணக்கான பாடல்களையும், நூற்றுக்கு மேற்பட்ட கிளைக்கதைகளையும் கொண்டு ஆலமரங்களைப் போன்ற அடர்த்தியானவை. இந்தியாவின் பழங்கால வரலாற்றை இன்றும் நமக்குச் சொல்பவை. இறைவனின் அவதார நோக்கம் குறித்த இதிகாசம் இராமாயணம், குருச்சேத்திரப் போரையும் பகவத்கீதை என்ற தத்துவ உரையையும் விரித்துரைக்கிறது மகாபாரதம். இத்தகைய பெரும் வீச்சுக்கள் பாரதியாரிடம் இல்லை.
30க்கு மேற்பட்ட நாடகங்களைப் படைத்த சேக்ஸ்பியரோடு பாரதியை ஒப்பிட முடியாது. மனிதகுல மீட்புக்காக இறைவன் அவதாரம் செய்த கதையின் முதற் பகுதியை மில்ட்டன் காவியமாகப் பாடினார். சாத்தானின் ஆளுகைக்கு இடம் கொடுத்து மனிதன் சொர்க்கத்தை இழந்தான். ஆகவே துன்புற்றான். ஓமர் கம்பீரமான காவியம் ஒன்றைப் படைத்தான். யுலிசிஸ் மேற்கொண்ட பயணம் அதன் கருவடிவில் வாழ்வின் நெடும் பயணத்தைக் குறிக்கிறது. வர்ஜிலின் காவியம் மனித வாழ்வின் தொடர்ந்த நிரந்தரமான பயணத்தைக் குறிக்கிறது. அறிவியலின் ஆதிக்கத்தை முழுமையாகத் தான் வசப்படுத்துக் கொள்ள வேண்டும் என்று புறப்பட்ட அறிவியலாளன் தன் ஆன்மாவை இழந்த கதையைச் சொல்லுகிறார், கத்தே. பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்துக்குட்பட்டவர் செல்லி, அன்றியும் தன் மாமனார் வழியாகப் பிளேட்டோ கூறிய பேரான்மாவின் உள் இயக்கத்தைத் தனக்குள்ளூம் கண்டவர் செல்லி. இந்தியாவில் தாகூரும் அனைத்து உயிர்களின் வாழ்வுக்குள்ளும் பிரம்மத்தைத் தரிசித்தவர். பிரபஞ்சத்தின் அனைத்துவகை இயக்கங்களுக்குள்ளூம் பிரம்மன் இயங்குகிறான்.
மனித வாழ்க்கை என்பது ஒரு மனிதன் என்ற ஒற்றைப் புள்ளிக்குள் குறுகி விடுவதில்லை. மனித வாழ்வின் வீச்சும், பிரபஞ்சத்தின் இயக்கமும் பிரிவுபடாதவை. மனித வாழ்வு ஒரு பெரும் நாடகம். அறத்திற்கும் மதத்திற்கும் ஆன இடையறாத போராட்டக்களம். அறத்திலிருந்து தவறிய மனிதனை மீட்பதற்காக இறைவன் மனிதனோடு இணைந்து செயல்படுகிறான். மாபெரும் துயரங்கள் என்ற தடையை மனிதன் கடந்து சென்று அறத்தோடு, இறைவனோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசைகள் அவனை வழிமறிக்கும். தடைகளுக் தயக்கங்களும் அவனை தடுமாறச் செய்யும். தன் உறவுகளையும் தன்னையும் கூடச் சுமந்து மனிதன் நெடுந்தொலைவில் தெரியும் இலக்கு தேடிப் பயணம் போக வேண்டும். இடையில் எத்தனையோ திரைகள் மற்றும் மாயைகள். தனக்குள் மிகச்சிறிதளவே தென்படும் ஆன்மாவின் ஒளியில் நம்பிக்கை வைத்து மனிதன் முன்செல்ல வேண்டும். இத்தகைய மாபெரும் வீச்சுக் கொண்ட மனித வாழ்வை இதிகாசமாக, காவியமாக, நாடகமாக படைப்பவன் மகாகவி.
மகாகவி என்ற சொல் கூட வடமொழியில் இருந்து நமக்கு வந்தது. பெருங்கவிஞன் எனத் தமிழில் பெயர்த்துச் சொன்னாலும் வடமொழியின் பொருளை இது தரிக்காது. மேற்கத்திய மொழியில் மகாகவி என்பதற்கு நிகரான சொல் இல்லை. 'மேஜர் பொயட்' என்ற சொல் மகாகவியெனப் பொருள்படாது. என்றும் சேக்ஸ்பியர், ஓமர் முதலிய பெருங்கவிஞர்களுக்குள் செயல்படும் வீச்சை நாம் புரிந்துகொண்டுதான் விவாதிக்கிறோம். சேக்ஸ்பியருக்கோ, மில்ட்டனுக்கோ, ஓமருக்கோ நிகரான கவியென செல்லியை அவர்கள் சொல்லுவதில்லை. இப்படிச் சில வேறுபாடுகள் இருந்த போதும், பெருங்கவிஞருக்குள்ளிருக்கின்ற ஆழ்ந்த வீச்சைப் புரிந்து கொள்ளூம் நிலையில்தான் இத்தகைய விவாதம் எழுகிறது. கு.ப.ரா. முதலியவர்களுக்கு இந்த வரையறைகள் நன்கு புரியும் என்ற முறையில்தான் நாம் இங்கு விவாதிக்கிறோம். மகாகவி என்ற சொல்லின் பொருள் ஆழத்தைப் பெருங்கவி என்ற ஓர் சொல்லுக்குள்ளூம் நாம் வைத்துக் காண்கிறோம்.
பாரதியை தேசியக்கவி என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இந்திய தேசம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த நிலையை ஒப்புக்கொள்ளாமல் விடுதலை வேண்டி உணர்ச்சிமிக்க கவிதைகளை பாரதியார் பாடினார். இந்தியாவின் விடுதலை அவரது நோக்கம். இந்தியா விடுதலை பெற்றவுடன், அவரது கவிதைகளில் தங்கியுள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பு மெல்ல, மெல்லக் குறைந்துவிடும். அதன்பிறகு அவரது வரிகள் கவிதைகளாய் நிற்க முடியாது என்பது பரதியைத் தேசியக்கவி என்று மட்டுமே மதிப்பிடுபவர்களின் கருத்து. இப்படியரு விவாதம் 1935-36களில் எழுந்திருப்பது ஒரு விநோதம்தான். இப்படி விவாதிப்பவர்கள் தேசவிடுதலை என்பதைக்கூட பாரதியின் அளவுக்குப் புரிந்து கொள்ளாதவர்கள் என்று இன்று நாம் சொல்லலாம். பாரதியின் கவிதைகளை அழ்ந்து படிக்கும்பொழுது அரசியல் விடுதலையை மட்டும்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது உண்மையல்ல. பொருளாதார விடுதலை என்பதும் அவரது நோக்கம். சாதியிலிருந்து விடுதலை பற்றி பாரதியார் பாடுகிறார். பெண்ணுக்கு விடுதலை வேண்டுமென்கிறார். ஆன்ம விடுதலைதான் பாரதியின் இறுதி இலக்கு. தேச விடுதலைக்காகப் பாடும்பொழுதே அனைத்து விடுதலையும் பாரதியின் படல்களூக்குள் பின்னலாக வந்து விடுகின்றன. அரசியல் விடுதலையை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகப் பாரதியின் பாடல்கள் இல்லை.
இன்றும் பாரதியின் தேசியப் பாடல்கள் நம் மனத்தை முழு அளவில் ஈர்க்கின்றன. அடிமை கொள்கின்றன. 47க்கு முன் நாம் விரும்பி வேண்டிப் பெறத்துடித்த விடுதலை, இன்னும் நமக்குக் கைகூடவில்லை. மீண்டும் ஒரு சுதந்திரத்திற்கான போராட்டம் என்றுகூட இன்று நாம் பேசுகிறோம். பாரதி நமக்குள் மீண்டும் உயிர்த்தெழுகிறார். பாரதிக்கு மரணம் இல்லை.
பாரதியைத் தேசியக்கவி என்று மதிப்பிட்டவர்களின் பார்வை வீச்சுக் குறுகலானது தான் என்பதில் வியப்பில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது தேசம் பற்றித்தான் ஒரு கவிஞர் தீவிரமாகப் பாடமுடியுமென்று வைத்துக் கொண்டாலும், அதற்குக் குறிப்பிட்ட காலம் அல்லது தேசத்தின் வழியே உலகளாவிய மனித வரலாறு இயங்குவதைப் பாரதி பாடலினுள்ளூம் நாம் கூர்ந்து பார்க்க முடியும்.
பாரதியின் காலத்தில் தேசபக்தி என்பது சமயங்கள் சொல்லும் பக்தி உணர்வோடு கரைந்ததாக எழுச்சி பெற்றிருந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒரு வகையில் இது பக்தி இயக்கத்தின் நீட்சி என்பதைக் காட்டிலும் மாற்று வடிவமென்று சொல்வது தகும். வங்கத்தில் பங்கிம் சந்திரர் மூலம் வந்தே மாதரம் என்று தொடங்கிய இந்தக் குரல் நாளடைவில் தேசத்தின் குரலாக மாறியது. துறவிகள் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்கள். நாளடைவில் கவித்துவ மனம் கொண்ட அனைவரின் குரலாக இது மாறியது. இந்தியா பாரத தேவி என உருவகம் பெற்றது. பாரத அன்னை பேருருவலத்தில் அற்புதமான அணிகலன்களோடு அருள் வீரம் முதலிய அழகுகளோடுதன் பக்தர்களின் நெஞ்சில் காட்சி தந்தாள். இவள் வாய் வேதங்களை அருளியது. உபநிடதங்களை சொல்லியது. இலங்கையை அழித்த இராமனின் வில் இவளது கைவில். கர்ணன் அணிந்திருந்த குண்டலங்கள் இவளுடையவை. 18 மொழிகளும் இவளுடைய மொழிகள். முப்பது கோடி மக்களீன் திருவுருவங்கள் இவளது உருவங்கள்.
பாரதியின் கவித்துவ நெஞ்சில் இத்தகைய பெரும்காட்சி எழுந்து நிறைந்தது. இமயமலை, கங்கை ஆறு, நீர் செழித்த நெல் வயல்கள் என்ற ஆயிரக்கணக்கான இயற்கைக் காட்சிகள் வழியே பாரத தேவியைத் தரிசனம் செய்கிறார் பாரதி. பாரதிக்குள் மேலும் ஒரு ஆழ்ந்த பார்வை. பராசக்தியின் வடிவம் இந்தப் பாரத தேவி. இவளே காளியாய், கண்ணனாய்த் திகழ்கிறாள். இவளுக்குள்ளே பேரருளாளர்கள், அறிவாளர்கள் அடக்கம். கீதை மட்டுமா இந்தப் பாரத தேவியின் உரைகள், புத்தரின் உரைகளும் இவளுடையவை. ஒரு கடவுள், பலநூறு வடிவங்களில் பலநூறு பெயர்கள். ஏசு என்பதும் நபி என்பதும்கூட இந்தப் பெயர்களில் அடங்கி விடுகின்றன. கண்ணனின் திருவுருவத்தை நெஞ்சில் நிறுத்துகிறார் பாரதி. அதே உருவம் புத்தனாய், ஏசுவாய் மாறுகிறது.
தேசம், விடுதலை என்ற பாரதியின் கருத்துக்களின் வழியே பயணம் செய்யும்பொழுது நமக்குள் ஏற்படும் விரிவை, வேறு எவ்வாறு விளக்க முடியும்! கங்கையும், காவிரியும் நமக்குள் புரண்டோடுகின்றன. மாபெரும் வரலாற்றின் வசப்படுகிறோம். நாமே எல்லாமாகவும் இருக்கின்றோம். இந்தியா என்ற எல்லைக்குள்தான் நாம் இருக்கிறோமா? பிரபஞ்சத்தின் எல்லைகள் தகரும் பேரலைகள் எழுகின்றன. பாரதியின் கண்ணன் பாட்டு முதலியவற்றுக்குள்ளும் பயணம் செய்கிறோம். பாரதி கூறிய அமரத்துவம் நமக்கு வாய்க்கிறது. இப்பொழுது நாம் உறுதியாகச் சொல்லலாம் - பாரதி ஒரு மகாகவி.
தேசியக்கவி என்று தொடங்கிப் பாரதியை மகாகவி என நம்மால் மெய்ப்பிக்க முடியுமென்ற போதிலும், கு.ப.ரா. முதலியவர்கள் இந்த முறையில் விவாதிக்கவில்லை. கு.ப.ரா.வைப் பொறுத்தவரை சக்தி என்ற தத்துவத்தை முன்வைத்து, அதன் மூன்று வகைப் பரிமாணங்களை பாரதிக்குள் விரிவாகக் கண்டு மகாகவி என நிறுவுகிறார். சக்தி என்பது அவர் கருத்தின்படி தெய்வம், தேசம் மற்றும் பெண்மை. பாரதி சக்தியை வழிபட்டார். சாக்தம் கூறும் சக்தி வழிபாடு பாரதிக்கு உடன்பாடு. காளி முதலிய வடிவங்கள் சக்தியின் வடிவங்கள். இருளுக்குள்ளும் இருக்கிற சுடர் சக்தி. தேசம் என்பதன் வழியே பாரதியிடம் விளங்குவது பராசக்தி. பெண்ணுக்குள் வெளிப்படும் வீர்யம் சக்தி. பெண் அடிமைத்தனம் பாரதிக்கு உடன்பாடில்லை. பெண்ணுக்கு விடுதலை வேண்டும். அவள் சக்தியாய் சுடர்விட வேண்டும். சக்தியின் முப்பரிமாணங்களையும் பாரதிக்குள் கண்டு கு.ப.ரா.விளக்குகிறார். மூன்றுமே ஒரு வகையில் ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருந்தியவை. கு.ப.ரா.வும் பெண் விடுதலையைப் போற்றுபவர்.
கு.ப.ரா.வின் பார்வையைத் தத்துவம் என்று செல்லப்பா குறிப்பிடுகிறார். சக்தி என்பது இறைமையல்ல என்று செல்லப்பா விளக்குகிறார். பிரபஞ்ச அளவிலான இயக்கம்தான் சக்தி. அணுவுக்குள் உயிர்களுக்குள்ளும் உற்றெடுத்துப் பெருகும் இயக்கமே சக்தி என்று பாரதியிடம் கு.ப.ரா கண்ட சக்தித் தத்துவத்தை செல்லப்பா விளக்குகிறார். கு.ப.ரா.வும் செல்லப்பாவும் இறை நம்பிக்கை இல்லாதவர்களல்ல. சக்தி என்பதை வெளிப்படையாக இறை என்றோ பிரம்மம் என்றோ கு.ப.ரா. குறிப்பிடவில்லை. பாரதி சக்தி வழிபாட்டினன் என்பது உண்மைதான். என்றாலும், அத்வைதம் அவருக்கு உடன்பாடான தத்துவம்தான்.
அணுவுக்குள்ளும் அண்டத்துக்குள்ளூம் உயிர்களுக்குள்ளும் செயல்படுவதாகிய இயக்கத்தைப் பிரபஞ்ச இயக்கமெனக் காணும் பொழுது இங்கு அத்வைதமும் சக்தியும் வேறுபட்டனவாகத் தோன்றவில்லை. செல்லப்பாவின் கருத்தின்படி கவிஞனும், பக்தனும் வேறானவர்கள். ஆழ்ந்து பார்த்தால் கவிஞனும் ஒருவகையில் பக்தன் தானென்பதைப் புரிந்து கொள்ளலாம். தாகூர் தனது சமயத்தைக் கவிஞனின் சமயம் என்று கூறியிருப்பதை வேறு எப்படி விளக்க முடியும். செல்லி பிரபஞ்சத்திற்குள் பேரான்மாவின் இயக்கத்தைக் காண்கிறார். வேர்ட்ஸ்வொர்த்தும் இயற்கையினுள் இறைமையைக் காண்கிறார். எல்லாவற்றினுள்ளூம் இறைமையைக் காண்பது என்பது இயக்கத்தைக் காண்பதாகவும் இருக்க முடியும். இந்த இடத்தில் சமயவாதியும் மதச்சார்பற்றவனும் முரண்படுவதற்கு அதிக வாய்ப்பில்லை. இருவருக்கிடையில் உள்ள வேறுபாடு மிக மிக நுட்பமானது என்பதிலும் ஐயமில்லை.
சிட்டி அவர்களைப் பொறுத்தவரை, செல்லப்பா கூறுவது போல கவிதைக்கு அழுத்தம் தந்து பாரதியை மதிப்பிடுகிறார். பாரதியின் குழந்தை பற்றிய கவிதைகளையும், காதல் பற்றிய கவிதைகளையும் எடுத்துச் சொல்கிறார். விவரித்துக் கொண்டே செல்லும்பொழுது பாரதியின் கவித்துவத்திற்குள் இறங்குகிறார். குழந்தைமை என்பது மனிதனின் முதற்பருவம் என்ற போதிலும், குழந்தைப் பருவம் மனிதனுக்குள் ஒரு வியப்புணர்வாய்க் காலம் முழுவதும் நிலைபெறுவதைச் சிட்டி காண்கிறார். பழமை என்ற பதிவை நீக்கி உலகத்தையும் வாழ்வையும் என்றும் புதியதாய் அழகியதாய்க் காணும் பேருணர்வில் கவித்துவத்தைக் காண்கிறார் சிட்டி. ஆண்டர்ஸன் முதலியவர்களின் தேவதைக் கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமே உரிய கதைகள் அல்ல. இவை மனிதர் அனைவருக்கும் உரிய கதைகள் அல்லது கவிதைகள்.
காதல் பற்றி பாரதியின் கவிதைகளை விவரிக்கும் சிட்டி பாரதியின் காதல் கவிதைகளின் உச்சம் என "யோகம்" கவிதையைக் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் காதலனும், காதலியும் ஒன்றாகிவிடுவதைச் சொல்லுகிறார். நான் நீ என்பன அற்று வீழ்ந்து விடுகின்றன. இந்த இடத்தில் சிட்டி பொருளும் சக்தியும் ஒன்றே என்று விஞ்ஞானத் தத்துவம் பற்றிப் பேசுகிறார். செல்லியின் காதல் தத்துவம் பற்றிச் சொல்லுகிறார். பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிப் பிரபஞ்சத்தை ஒன்றாக இணைக்கிறது காதல். இப்பொழுது நாம் சொல்லலாம். கவிதை என்று தொடங்கி தத்துவத்தின் உச்சத்தை அடைகிறோம். வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் அன்பு அல்லது காதல் இணைக்கிறது. இத்தகைய தரிசனத்தில் பிறப்பவன் மகாகவி.
சேக்ஸ்பியர் நாடகங்களைச் செய்தார். பாரதி நாடகம் எதுவும் எழுதவில்லை என்றுதான் நம் முதற்பார்வைக்குத் தோன்றுகிறது. சிட்டியும் இப்படித்தான் தொடங்குகிறார். காட்சி முதலிய வசன கவிதைகளில் பாரதி ஒரு நாடகத்தை எழுதிக் காட்டுகிறார். பாஞ்சாலி சபதம் ஆற்றல் மிகுந்த ஒரு நாடகம். குயில் பாட்டும் ஒரு நாடகம்தான். கண்ணனை அரசனென்றும், தாய் என்றும், தந்தையென்றும், தோழனென்றும் சீடனென்றும், காதலி என்றும், குழந்தையென்றும் பாரதி பல கோணங்களில் பாடும்பொழுது ஒரு அற்புத நாடகம் நம் கண்களில் விரிகிறது. இன்னும் ஆழ்ந்து செல்லும்பொழுது வாழ்க்கையே, வரலாறே, உலகமே, பிரபஞ்சமே ஒரு நாடகமாகி விடுகின்றது. இந்நாடகத்திற்குள் நாம் இருக்கிறோம். இயங்குகிறோம். குயிலாகி நாம் பாடுகிறோம். பாஞ்சாலியாகிக் கொந்தளிக்கிறோம். சகுனியாகிச் சூதாடுகிறோம். சேக்ஸ்பியரும் மனித நாடகத்தைத் தான் சித்தரிக்கிறார். நாம் �கேம்லெட்டாக இருக்கிறோம். மேக்பெத்தாக, லியர் அரசனாக இருக்கிறோம். சிட்டி தரும் விளக்கத்தை இவ்வாறு நமக்குள் வைத்தும், விரித்தும் பார்க்கலாம். இத்தகைய அண்டம் தழுவிய விரிந்த பார்வையைத் தனக்குள் கொண்டவன் மகாகவி என்பதில் ஐயமில்லை.
பாரதியின் தனிப்பாடல்கள் என்று குறிப்பிடத்தக்க சில பாடல்களில் மகாகவி என்பவனின் பேருணர்வும் பெருங்காட்சியும் வெளிப்பட்டு இருப்பதைப் பலரும் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். பாரதியின் ஊழிக்கூத்து என்ற கவிதையை அனைவரும் குறிப்பிடுகின்றனர். செல்லப்பா இந்தக் கவிதையை குறிப்பிட்டுச் சிறப்பாக விளக்குகிறார். இப்பாடலில் இடியும் மழையும் உலகத்தைப் பிரளயமாய் மாற்றும்பொழுது மாபெரும் அழிவுச்சக்தி செயல்படுவதை நாம் பார்க்கிறோம். இந்த அழிவுச் சக்தியே உலகத்தை ஆக்கும் சக்தியாகவும் இருக்கிறது. வெறிகொண்ட காளி நடனமாடுகிறாள். வெறியின் உச்ச அளவில் அதுவே ஆனந்த நடனமாகிறது. காளி தன் வெறியில் தணிகிறாள். இரண்டு எதிர் முரண்கள் கூர்மையாக மோதி அப்புறம் இணைந்து புதியது பொலிகிறது. இது ஒரு பெரும் காட்சி. மகா கவிஞனுக்குரிய காட்சி.
கு.ப.ரா., சிட்டி ஆகியவர்களைக் காட்டிலும் நவீனத்துவம் என்னும் சொல காலப் பார்வைக்கு நெருக்கமாக வருகிறார் செல்லப்பா. எல்லாவற்றையும் குறிகளாய்ப் பாரதிக்குள் காண்கிறார் செல்லப்பா. பாஞ்சாலி, பாரதத்தாயின் குறியீடு. குயில் காதலின் குறியீடு. கவிதையின் குறியீடு. ஆன்மாவின் குறியீடு. கண்ணன் என்பது ஒற்றைக் குறியீடு அல்ல. கண்ணனை அர்த்தப்படுத்தும் பொழுது பல குறிகளில் அர்த்தப்படுகிறான், இவ்வாறு குறியீடு என்ற முறையில் அர்த்தப்படுத்துவது நம் மரபுக்கு புதியது அல்ல.
கண்ணன் பாட்டு பற்றி சிட்டி அவர்கள் ஓர் உண்மையைச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். கண்ணன் மாதிரி ஒரு படிமம் மேற்கத்திய உலகுக்குக் கிடைக்கவில்லை. கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை. நம்மிடமிருந்து ஒரு பொருளைத் தட்டிப் பறித்து உயர்ந்த இடத்தில் அதை வைத்து, உயரங்களைத் தொட நம்மைத் தூண்டுகிறான். பாரதியின் கண்ணன் ஆழ்வார் பாடல்களில் நமக்குத் தெரிகிற கண்ணன்தானா என்று கேட்டு, அல்ல என்கிறார் சிட்டி. இவன் நம் காலத்து அனுபவங்களின் வழியே நம்மை நெருங்கியிருக்கிற கண்ணன். இவன் நமக்கு அரசன் மட்டுமல்ல; குரு அல்லது தந்தை மட்டுமல்ல; இவன் நமக்குத் தாய், தோழன், சீடன். இவன் நமக்குக் காதலி. இத்தகைய காட்சிகளின் வழியே நமக்கு பக்தியின் மூலம் அல்லாமல் வாழ்வியல் அனுபவங்கள் வழியே நமக்குள் வருபவன் இந்தக் கண்ணன். இவன் நமக்குள் இருப்பவன். இவன் நம் உயிர்ச்சக்தி. இவனை நமக்குள் ஓயாமல் உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும்.
மேற்குலகக் கவிதைக்கும் கிழக்குலகக் கவிதைக்கும் இடையிலான வேறுபாடு குறித்துச் சிட்டி சொல்கிறார். சீனக் கவிதை மற்றும் அரபுக் கவிதைகளின் தனித்தன்மை பற்றிக் குறிப்பிடுகிறார். பாரதியின் மனோதர்மம் பற்றிச் சிறப்பித்துச் சொல்கிறார். இயற்கையை வெளியில் வைத்து பாரதி கவிதை செய்யவில்லை. இயற்கையின் வழியே தன்னை வெளிப்படுத்துகிறார் பாரதி. இயற்கையோடு பாரதி இனைந்திருக்கிறார் என்றெல்லாம் சிட்டி விளக்குகிறார்.
கு.ப.ரா, சிட்டி, செல்லப்பா ஆகியவர்கள் பாரதியை மகாகவி என நிலைநிறுத்துவதற்கு முன் வைத்த காரணங்களை ஒரு மீள்பார்வை என்ற முறையில் இங்கு தொகுத்துக் கொள்ளலாம். கு.ப.ரா.வுக்குப் பெண்ணுரிமை என்பதில் ஆர்வம் உண்டு. அரவிந்தர் பற்றி அவர் எழுதிய சிறு நூலின் மூலம், அவரது ஆன்மீக ஈடுபாட்டை நாம் அறியமுடியும். பாரதிக்குள் கு.ப.ரா கண்ட சக்தித் தத்துவத்தைக் கு.ப.ராவின் ஆன்மீக ஈடுபாட்டின் பகுதியாக நான் காண முடியும். பாரதிக்குள் மேலும் விரிந்து செல்லும் தத்துவம் பற்றிய விரிவான பார்வையின் மீது கு.ப.ராவின் கவனம் செல்லவில்லை; பெரும் கவிஞர் எனப் பாரதியை நிலைநிறுத்துவதற்கு, பாரதியின் தத்துவப் பார்வைக்குள் ஆழ்ந்து செல்ல முடியும். பெண்மை பற்றிய பாரதியின் பார்வையும் நமக்குக் கூடுதலாகப் பயன்படும். சிட்டி அவர்களைப் பொறுத்தவரை, பாரதியின் கவிதை பற்றி மட்டுமே கருத்துச் செலுத்துகிறார். கவிதை என்பது இலக்கியத்தின் ஒரு பகுதி. இலக்கியம் என்பது நீட்சி. தத்துவத்தின் உள்ளும் வரலாற்றின் உள்ளும் விரிந்து செல்கிறது. பாரதிக்குள் செயல்பட்ட கவிதை அல்லது இலக்கியம் என்பது நெடுங்கால இந்தியத் தத்துவத்தோடும், வரலாற்றோடும் நெருக்கமான தொடர்புடையது. இந்த உறவைப் பின்னணியாக வைத்துத்தான் பாரதி கவிதையின் பன்முகப் பரிமாணங்களுக்குள், நம் ஆய்வு தொடர முடியும். இம்முறையில்தான் பாரதியின் மகாகவி தகுதி உறுதிப்படும். செல்லப்பா அவர்களைப் பொறுத்தவரை, மேற்கிலிருந்து நமக்கு வந்த நவீனத்துவம் என்பதல் கலை இயல் பற்றிக் கூடுதலாகச் சிந்தித்தார். பாரதியின் இலக்கியம் பற்றிய ஆய்வில் குறியீடு என்ற அணுகுமுறையைச் செல்லப்பா பயன்படுத்தியதை நாம் பெரிதும் வரவேற்கலாம். செல்லப்பாவிடம் பாரதி கவிதைக்குள் குறியீடு என்ற கட்டுதல் இருக்கின்றதே தவிர இதன் விரிவு இல்லை.
கு.ப.ரா. முதலியவர்கள் பாரதி பற்றிய ஆய்வின் போது, பாரதியிடம் ஏதேனும் குறை கண்டனரா என்ற கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டு பார்க்கலாம். வ.வே.சு. பாரதியின் கண்ணன் பாட்டிற்கு எழுதிய முன்னுரையில் கண்ணன் பாட்டின் சில பகுதிகளில் விரசம் தொனிப்பதைக் குறித்திருந்தார். கு.ப.ரா. இதை ஏற்கவில்லை. சிட்டி அவர்கள் கூட வள்ளிப்பாட்டில் இவ்வகைக் குறை கண்டார். அங்கும் இங்குமாகச் சில வரிகளைத்தான் இவர்கள் சுட்டிக்காட்ட முடியும். தெய்வங்களுக்கு இடையில் ஆன காதலைக் குறித்து எழுதும்பொழுதே விரசம் வந்துவிடக்கூடாது என்கிறார்கள். மனிதக் காதலில் இந்த வகைக் குறை வருவதை நம்மால் மறுக்க முடியுமா என்று நாம் கூட கேட்டுக் கொள்ளலாம். இது எப்படி இருந்த போதிலும் பாரதியிடம் இவர்கள் காணும் இந்தக் குறை பாரதியின் கவிதை தொகுப்பு என்பதன் ஓரத்தில் தெரியும் குறை. பாரதி கவிதையின் மையத்தில் இவர்கள் குறை எதனையும் காணவில்லை என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். பாரதி கவிதையின் உபாசகர்கள் என்றுகூட இவர்களை நாம் குறிப்பிடுவதில் தவறில்லை. பாரதி கவிதை அந்த அளவிற்கு இவர்களைக் கவர்ந்திருக்கிறது. நம்மையும் பாரதி கவர்ந்திருக்கிறார். வரலாற்றுப் போக்கில் இந்தக் கவர்ச்சி கூடி வந்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
கு.ப.ரா. முதலியவர்கள் எழுப்பிய மேலும் சில கேள்விகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கு உரிய இடம் எது? செல்லப்பா அழுத்தமாகக் கேட்கிறார். பாரதிக்கு உரிய இடத்தை நிர்ணயிப்பதன் மூலமாகத்தான் தமிழில் திறனாய்வு வளர முடியும். பாரதியே கூட கம்பருக்கும், இளங்கோவுக்கும், வள்ளுவருக்கும் நிகரான கவிஞர் இல்லை என்று பாடியிருக்கிறார். கம்பர் முதலிய தமிழ்ப் பெரும் கவிஞர்கள் வரிசையில் பாரதியைச் சேர்ப்பதில் கு.ப.ரா. முதலியவர்களுக்கு விருப்பம் உண்டு. இப்பொழுது நமக்குள் எழும் கேள்வி, கம்பர் முதலியவர்களை மட்டுமல்லாமல் பாரதியையும் பெரும் கவிஞர் என்று மதிப்பீடு செய்வதற்குப் பொதுவான வரையறைகள் வகுக்க முடியுமா? அல்லது மகாகவி எனப் பாரதியை மதிப்பீடு செய்வதற்கு கு.ப.ரா. முதலியவர்கள் எடுத்துக் கொண்ட வரையறைகளைக் கம்பர் முதலியவர்களுக்கும் நாம் பயன்படுத்த முடியுமா? இன்னும் ஒரு கேள்வி. தமிழில் திறனாய்வு ஓர் அளவுக்கேனும் வளர்ந்திருக்கின்ற இந்தச் சூழலில் பாரதியை மகாகவி என மதிப்பீடு செய்வதற்கு நான் முன் வைக்கின்ற வரையறைகள் எவை?
பாரதி மகாகவி என்ற ஆய்வு 1937ல் முடிவு பெற்றதாக நாம் கருதுவதற்கு இடம் உண்டு என்ற போதிலும், கு.ப.ரா. முதலியவர்கள் முன்வைத்த வரையறைகள் மற்றும் மதிப்பீடுகள் பற்றி புதிய பரிசீலனைகள் நடைபெறத்தான் செய்தன. அன்றியும் பாரதி மகாகவி என மதிப்பீடு செய்வதற்குப் புதிய வரையறைகளும் கண்டறியப்பட்டன. இம்முறையில் மேலும் ஓர் ஆய்வு நூல் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
பேராசிரியர் சிவத்தம்பியும், அ.மார்க்சும் இணைந்து எழுதிய 'பாரதி - மறைவு முதல் மகாகவி வரை' என்ற நூல் (1982) பாரதி மகாகவி என்ற ஆய்வில் பெரிதும் குறிப்பிடத்தக்க ஓர் ஆய்வு. 1920 முதல் 1949 வரையிலான கால அளவில் பாரதி பற்றிய மதிப்பீடுகள் எவ்வாறு உருவாயின என்ற முறையில் ஏராளமான தகவல்களுடன் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் ஆய்வு நூல் என்பதற்கான ஒரு முன்மாதிரி என்ற தகுதி இந்த நூலுக்கு உண்டு. இந்த ஆய்வின் முன் வைக்கப்படும் சில கருத்துகள் மற்றும் சில முடிவுகளை இங்கு தொகுத்துக் கொள்ளலாம்.
1. பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவரைக் 'கவி சிரேஷ்டர்' என்றும் 'அவதார புருஷர்' என்றும் சிலர் கூறினர். பாரதி எட்டையபுரத்து அரசருக்கு எழுதிய சீட்டுக் கவியில் "கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். பாஞ்சாலி சபதம் முன்னுரையில் எளிய பதங்கள் முதலிய சேர்க்கையோடு தமிழில் காவியம் செய்து தருவோன், தமிழுக்குப் புத்துயிர் தருபவன் என்று குறிப்பிட்டிருந்ததை, நம்மைப் பொறுத்த அளவில் பாரதி தன்னைப் பற்றிய மதிப்பீடாகவே கருதலாம். எனினும் மணிக்கொடி தோற்றம் பெறும்வரை தேசிய விடுதலையை உள்ளடக்கிய அரசியல் களத்தில் அல்லாமல் பிற களங்களில் பாரதிக்கு செல்வாக்கு ஏற்படவில்லை.
2. மணிக்கொடி தமிழில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தது என்பது இன்று பலரும் ஒப்புக்கொள்ளூம் கருத்து. மணிக்கொடி எழுத்தாளர்களுக்கும், ஆனந்தவிகடன் சார்ந்த கல்கி முதலிய எழுத்தாளர்களுக்குமிடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவின என்பது பற்றி இந்த நூல் ஒரு புதிய புரிதலை நமக்கு முன் வைக்கிறது. தமிழில் ஆக்க இலக்கியத்தின் மூலம் படைப்பிலக்கியத்தின் மூலம் தமிழில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்கள் மணிக்கொடியினர், தமிழுக்கு மிகப்புதியது என அன்று தென்பட்ட ஆக்க இலக்கிய முயற்சியை முன்எடுத்துச் செல்லும் ஒரு முறையாகப் பாரதியைப் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் முன் வைத்தனர். பாரதிக்கு மகாகவி என்னும் இலக்கிய பீடத்தை உறுதிப்படுத்துவதன் வாயிலாகப் பாரதியின் வழியே ஏற்பட்ட புதிய ஆக்க இலக்கிய முயற்சியை அவர்கள் மெய்ப்பிக்கப் போராடினர். இவர்களுக்கு எதிரான முயற்சியில் இராசாசி, டி.கே.சி. ஆகியவர்களையும், கல்கி தன்னோடு இணைத்துக் கொண்டார். இராசாசி காந்தியிடம் பாரதியை அறிமுகப்படுத்தும்பொழுது தமிழின் மகாகவி என அறிமுகப்படுத்தவில்லை. பாரதி இறந்த செய்தியைக் காந்தி அறியார். டி.கே.சி. பாரதியை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இவ்வாறு மேலும் பல விவரங்களை முன்வைக்கும் ஆய்வாளர்கள் தம் முடிவை இவ்வாறு தெரிவிக்கின்றார்கள். மணிக்கொடியினர் தான் தமிழ் மக்கள் மத்தியில் இலக்கிய உணர்வை முதன்முறையாகத் தூண்டினர். இந்தச் சூழலில்தான் பாரதியின் இலக்கியத் தகுதி முதன்முறையாக முன்வைக்கப்பட்டது. அரசியல் களத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரதி, இப்பொழுது இலக்கியக் களத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கினார். கு.ப.ரா, சிட்டி முதலியவர்களின் கட்டுரைகள் வெளியானது இந்தச் சூழலில்தான்.
3. சமத்துவம் முதலியவை பற்றிய சமூக உணர்வு சார்ந்த பாரதியின் கருத்துகளை மணிக்கொடியினர் பாராட்டவில்லை. மணிக்கொடியினருக்கு அழுத்தமான சமூக உணர்வு இருந்தது என்று சொல்ல முடியாது. பாரதியிடம் இருந்த சமூக உணர்வை வ.ரா. கண்டறிந்து பாராட்டினார். சாதி மற்றும் பெண்ணடிமை ஆகியவற்றை ஒழிப்பதில் பாரதி கொண்டிருந்த தீவிரத்தைப் பாரதிதாசன் தன் 'கவிதா மண்டலத்தில்' எடுத்துரைத்தார். தன்மான இயக்கத்தின் தொடக்க காலத்தில் பாரதியின் சமூகக் கருத்துகள் பாராட்டப்பட்டன. 1937க்குப் பிறகு ஜீவாதான் பாரதியின் சமூகக் கருத்துகளுக்கு அழுத்தம் தந்து பேசினார். 'பிரமதேவன் கலை இங்கு நீரே' என்று பாரதி தொழிலாளர்களைப் பற்றிப் பேசினார். ஞானம் முழுவதற்கும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது என நீதி நூல் எதுவும் இல்லை என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் தன் கருத்தை வெளிப்படுத்தினார். 'எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என்றும் 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றும் பாரதி பாடினார். ரஷ்யாவில் எழுந்த யுகப்புரட்சியை வரவேற்றுப் பாடினார். இவ்வாறெல்லாம் பாரதியின் சமூகக் கருத்துகளுக்கு அழுத்தம் தந்து பேசியவர் ஜீவா. ஜீவாவின் மார்க்சியம் சார்ந்த கருத்துகளை பி.ஸ்ரீ. முதலியவர்கள் சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் மறுத்து எழுதினாலும், மக்கள் மத்தியில் பாரதி பற்றிய ஜீவாவின் மதிப்பீடு செல்வாக்குப் பெற்றது. முதல் முறை மக்களால் பாரதி மகாகவி என ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பது ஆய்வாளர்களின் முடிவு.
4. பாரதியை வேதாந்த கவி என ராஜாஜி மதிப்பிட்டார். அரசியல் மற்றும் இலக்கியக் களத்தில் பாரதியின் பங்களிப்பை ராஜாஜியால் மதிக்க இயலவில்லை. ஆகவே வேதாந்தக் கவி என்று கருதினார் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பாரதியின் படைப்புத் திறனுக்கு முதன்மை தந்து சிதம்பர சுப்ரமணியம் எழுதினார். ஆரிய திராவிடப் போராட்டம் முன்னிலைக்கு வராத காலத்தில் பாரதியின் ஆரியச் சார்பைக் குற்றம் சொல்வது தவறு என்று அண்ணாதுரை எழுதியிருந்தார். இப்படிச் சில கருத்துக்களையும் கட்டுரையாளர் தொகுத்துள்ளனர்.
5. பாரதியைத் தமிழ்ப்புலவர்கள் ஏற்ற வரலாறு பற்றியும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தொடக்கக் காலத்திலேயே சோமசுந்தர பாரதியாரும், விபுலானந்தரும் பாரதி பற்றி உயர்வான மதிப்பீடு கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர தமிழ்ப் புலவர்கள் கூட்டம் பாரதியைப் பொருட்படுத்தவில்லை. உ.வே.சா. பற்றிப் பாரதி எழுதிய கவிதை நமக்கு நினைவிருக்கும். தமிழ் வாழும் காலமெல்லாம் உன் புகழ் நிலைபெறும் என்று பாரதி தன் இளமைக் காலத்திலேயே உ.வே.சா. வாழ்த்துப் பாடியிருந்தார். ஆனால் உ.வே.சா. பாரதி இறந்த பிறகு கூட அவரைக் கண்டு கொள்ளவில்லை. தமிழ் அறிஞர்கள் என்று சிறப்பித்துக் கூறத்தக்கவர்களில் வையாபுரி அவர்கள்தான் பாரதியின் மேன்மையை உறுதியாகத் தெரிவித்தார். நம் காலத்தில் பாரதியை மறுக்கும் தமிழறிஞர்கள் எவருமில்லை. பாரதியின் தமிழைப் புலவர்கள் ஏற்க நெடுங்காலம் ஆயிற்று.
பாரதி மகாகவி ஆன வரலாற்றை மேலும் பல ஆதாரங்களிலிருந்து இந்த ஆய்வாளர்கள் விவரிக்கின்றார்கள். கு.ப.ரா முதலியவர்கள் தந்த வரையறைகளை இவர்கள் மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். பாரதிக்குள் கவிதையும், அரசியலும், தத்துவமும், தமிழ்ப்புலமையும் இணைந்திருந்தன. பாரதியிடம் படைப்புத்திறன் மேலோங்கி இருந்தது. இவை அனைத்தும் பாரதிக்குள் ஒருங்கிணைந்திருந்தாலும், அடுத்து அடுத்து வரும் கால நிலைகளில்தான் இவை ஒன்றையடுத்து மற்றதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. தொடக்கத்தில் தேசிய கவி எனப் பாரதி மதிக்கப்பட்டார். மணிக்கொடியினர் மூலம்தான் பாரதியின் இலக்கிய மேன்மை உறுதிப்படுத்தப்பட்டது. வ.ரா. பாரதிதாசன் ஆகியவர்கள் பாரதி கவிதையில் தென்படும் சமூக உணர்வுக்கு அழுத்தம் தந்த போதிலும் அரசியல் மற்றும் இலக்கியக் களத்தினுள் ஜீவா நுழைந்த பிறகுதான் பாரதியின் மகாகவி பெயருக்குக் கூடுதலான தகுதி ஏற்பட்டது. சிட்டி முதலியவர்கள் பாரதிக்குள் கண்டறியாத பாரதியின் சமூக உணர்வு என்ற தகுதியை ஜீவாவும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களும்தான் பாரதியின் கவிதையில் கண்டறிந்தார்கள்.
பாரதி ஒரு பெருங்கவிஞராகத் தோற்றம் பெற்றார். அவருக்குள் இலக்கியம், அரசியல், தத்துவம், படைப்புத்திறன் முதலியவை எவ்வாறு ஒருங்கிணைந்திருந்தன என்பதைச் சிட்டி முதலியவர்களும், சிவத்தம்பி முதலியவர்களூம் விளக்கவில்லை. ஆனால் ஒரு பெருங்கவிஞரின் தோற்றத்தை ஏற்றுக் கொள்வதற்கான சமூகச் சூழல் குறித்த ஆய்வைச் சிவத்தம்பியும் அ.மார்க்சும் மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள். இலக்கியம் பற்றிய சமூகவியல் ஆய்வு என்று இதனைக் குறிப்பிடுவது பொருந்தும். சங்க இலக்கியம் இடைக்காலத்தில் பொருட்படுத்தப்படவில்லை. திருவள்ளுவருக்கும், இளங்கோ அடிகளுக்கும் இதே கதி ஏற்பட்டது இருபதாம் நூற்றாண்டில் இந்த இலக்கியங்கள் முன்னணிக்கு வந்திருக்கின்றன. இலக்கிய வரலாற்றில் இப்படி எத்தனையோ நிலவரங்கள் உள்ளன. இலக்கியத்தின் சமூகவியல் பற்றிய ஆய்வின் மூலம்தான் இலக்கியம் பெறும் மதிப்பீட்டு மாற்றங்களை, ஏற்றத்தாழ்வுகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
1937 இல் பாரதி பெருங்கவிஞரென ஏற்றுக் கொள்ளப்பட்டார். விடுதலை இயக்கத்தில் ஆர்வமுடையவர்கள் முதலிலும், பிறகு தமிழன் மறுமலர்ச்சி சார்ந்த படைப்பாளிகளூம் பாரதியை ஏற்றுக் கொண்டனர். தமிழில் மரபு சார்ந்த இலக்கியத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக படைப்பிலக்கிய முயற்சியில் மணிக்கொடியினர் ஈடுபட்டனர். புலவர்கள் இந்தப் புதிய போக்கைப் புரிந்து கொள்ளவில்லை. ஏற்கவுமில்லை. இந்நிலையில் பாரதியின் கவிதையை, பாரதி கவிதையின் புதுமையை, பாரதி கவிதையின் படைப்புத் திறனை முன்னிருத்திப் பாரதியை மகாகவி என மெய்ப்பிப்பதன் மூலம் தங்களின் படைப்பிலக்கிய ஆளுமையை மெய்ப்பிக்க மணிக்கொடியினர் முனைந்தனர் என்பதைச் சிவத்தம்பியும், மார்க்சும் சிறப்பாக விளக்கியுள்ளனர். தம்மை நிலைநிறுத்திக் கொள்ள பாரதியை இவர்கள் தூக்கிப் பிடித்தார்கள். இதனால் பாரதிக்கு மட்டுமல்லாமல் மணிக்கொடியினருக்கும் உரிய தகுதி கிட்டியது.
இதன்மூலம் தெரிய வரும் இன்னொரு உண்மை பற்றி இங்கு நாம் குறிப்பிட வேண்டும். புலவர்கள் பார்வையில் இலக்கியத்திற்குத் தனி வாழ்வு இல்லை. சமயத்தின் ஒரு பகுதிதான் இலக்கியம். புராணங்கள் இலக்கியமாகப் பயிலப்பட்ட காலத்தில் இலக்கியத்தின் தனித்தன்மை மதிக்கப்படவில்லை. இலக்கியம் என்பதைக் கூடத் தமிழ்ப்புலவர்கள் அறியார். எதுகை, மோனை, யாப்பு, உயர்வு நவிற்சி முதலிய வடிவங்களில்தான் அவர்கள் கவிதையைக் கண்டனர். இறைவனைப் பற்றி அல்லது அரசனைப் பற்றிப் பாடுவதுதான் இலக்கியம். இலக்கியம் செய்யுள் வடிவில்தான் இருக்க வேண்டும். கற்பனை அழகு இலக்கியத்தில் முக்கியம். இவ்வாறு இலக்கியம் பற்றிக் கருத்துக் கொண்டிருந்த புலவர்கள் நிகழ்காலத்தோடு தொடர்பு கொண்டவர்களாக இல்லை. வாழ்வைத் தீர்மானிப்பவன் இறைவன். இத்தகையச் சூழலை மறுத்துத்தான் பாரதி செயல்பட்டார். பாரதிக்குள் இலக்கியம் புதுவடிவம் பெற்றது. இதை முதன்முறையாகப் புரிந்து கொண்டவர்கள் மணிக்கொடியினர். தொன்மையான இலக்கியங்கள்தான் உன்னத இலக்கியங்கள் என்னும் மரபுப் பார்வையை இவர்கள் மாற்ற முனைந்தனர். உரைநடையிலும் இலக்கியம் இயங்கும் என்று காட்டினர். சிறந்த படைப்புகள் பலவற்றைத் தந்ததன் மூலம் தமிழைப் புதுமைப்படுத்தினர். இப்பொழுது இலக்கியம்/இலக்கியத்தன்மை என்பதற்கும் புதுப்பொருள் தோன்றுகிறது.
இலக்கியத்தின் சமூகம் மற்றும் அரசியல் சார்பை மணிக்கொடியினர் காணவில்லை. இந்தக் கருத்துகளூக்கு கு.ப.ரா. முதலியவர்களூம் அழுத்தம் தரவில்லை. தொடர்ந்து சமூக நிலவரங்கள் மாறிக்கொண்டிருந்தன. தேசவிடுதலை என்பதன் அரசியல் கூறுகளோடு பொருளியல் கூறுகளூம் முன்னுக்கு வந்தன. தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. போராட்டங்களூம் எழுந்தன. விடுதலை என்பது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் உரியது என்ற கருத்து வலுப்பட்டது. பெண்ணுக்கும் விடுதல வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விடுதலை தேவை. இத்தகைய சூழலில் தன்மான இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் தோன்றுகின்றன. இத்தகைய சூழலில் பாரதி இவர்களுக்குக் கை கொடுக்கிறார். பாரதி கவிதைகள் மூலம் சமூக உணர்வை முன்னெடுத்துச் செல்வதும் மக்கள் மத்தியில் பரப்புவதும் மக்கள் ஏற்பதும் சாத்தியமாகிறது. மக்களின் மொழி நடையில் பாரதி கவிதைகள் அமைந்துள்ளன. மக்களுக்காகத்தான் பாரதி கவிதை இயற்றினார். புலவர்களுக்காக அவர் பாடவில்லை. இத்தகைய சூழலில் இலக்கியம் எளிமையும், புதுப்பொலிவும் பெறுகிறது.
இலக்கியத்தின் சமூகவியலை இவ்வாறு விளங்கிக் கொள்ளும்பொழுது சிவத்தம்பி, மார்க்சு ஆகிய ஆய்வாளர்களீன் கருத்தில் உள்ள புதுமையை நாம் ஏற்க முடியும். இவர்கள் நூலின் முன்னுரையிலும் இடையில் முன் வைத்த இன்னொரு கருத்துப் பற்றி இங்குக் குறிப்பிடலாம். தமிழிலக்கியப் பாரம்பரியம் பாரதிக்குள் எவ்வாறு வந்து சேர்ந்தது என்றும், பாரதியின் மூலம் தமிழிலக்கியப் பாரம்பரியம் பெற்ற 'புதியதான திசைதிருப்பம்' என்ன என்றும் இவர்கள் கேள்வி எழுப்பினர். இவை அடிப்படையான தீவிரமான கேள்விகள். இக்கேள்விகளுக்கு ஆய்வாளர்கள் பதில் தரவில்லை. இக்கேள்விக்குரிய விடை நோக்கி இயங்குவது நம் கடமை.
எத்தகைய வாழ்வியல் சூழலிலிருந்து பாரதி மகாகவியாய்ப் பிறப்பெடுத்தார் என்பது பற்றி இங்குச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டு இந்தியச் சூழலில் வாழ்ந்தவர் பாரதியார். இளம்வயதிலேயே சோமசுந்தர பாரதியார் கூறுகின்றபடி வரகவியாய்த் திகழ்ந்தார். தந்தையின் நவீனத் தொழிற்சாலை சிதைந்ததோடு, தந்தையும் இறந்தார். காசி வாழ்வு, சமக்கிருத அறிவை மட்டுமல்லாமல் அனைத்திந்தியத் தொடர்பையும் அவருக்குத் தந்தது. சென்னையில் பத்திரிகைத் தொழிலை விரும்பி மேற்கொண்டதன் விளைவாக, விடுதலை அரசியல் அவரை உள்வாங்கிக் கொண்டது. விவேகானந்தர், நிவேதிதா ஆகியவர்கள் மூலம் வேதங்களின் பொருளை சோசலிசம் என்றும் விடுதலை என்றும் அவர் புரிந்து கொண்டார். அரவிந்தர், வ.வே.சு, திலகர், வ.உ.சி முதலிய மேதைகள் மூலம் உலகளந்தவராகப் பாரதி தன்னை உருவாக்கிக் கொண்டார். அவர் பார்வைக்குள் சப்பானும், பெல்சியமும், �பிசித் தீவுகளும் பதிந்தன. மாபெரும் ரசியப் புரட்சியை வரவேற்றார். இந்தியாவிற்கும் புரட்சி தேவை என்றார். இந்திய அரசியலில் காந்தி நுழைந்த பொழுதே இந்திய அரசியலில் ஏற்படுத்தவிருக்கும் பெரும்வீச்சை உணர்ந்து பாடினார். இந்தியாவின் நெடுங்கால ஆன்மீக வாழ்வு அவரைத் தன்வயப்படுத்திக் கோண்டது. வறுமையின் எல்லைக்கோடு வரை அவர் பார்த்திருக்கிறார். இசுலாமியரோடும் தாழ்த்தப்பட்ட மக்களோடும் அவர் இணைந்திருந்தார். வாழ்வின் கனலை அவர் அனுபவித்தார். இந்தியச் சமூகம் தனக்குள் பதிந்து வைத்திருக்கிற தடைகளை அவர் தகர்த்துக் கொண்டார். இந்தியாவின் தொன்மைக்காலச் சிந்தனைகளுக்கும் நவீன காலச் சிந்தனைகளுக்குமிடையிலொரு அற்புதமான உறவு அவருக்குள் மலர்ந்தது. வேதங்களைப் புதுமை செய்தார். இந்தியாவுக்குத் தேவையான புதிய யுகத்தைக் கிருதயுகம் எனக் காண்பார். அவர் பார்வையில் கண்ணனும் ஏசுவும் நபியும் வேறு அல்லர். நந்தனும் ஒரு பார்ப்பான். சுரண்டலும் ஒடுக்குமுறையும் எந்த வடிவிலும் தேவை இல்லை. ஆங்கிலம் நம்மை அழிக்கும். பெண்ணடிமைத்தனம் வேண்டாம். அவர் பார்வையில் தாசுமகால் ஆரிய சம்பத்து. வேளாளரும் பறையரும் ஆரிய மக்கள். ஆரியரென்பது, மேன்மையரென்று அவருக்குப் பொருள்படும். அவருக்குள், ஒரு சித்தர் வாழ்ந்தார். அவர் ஏழைகளின் தோழர். இவ்வாறு இந்திய வரலாற்றீன் ஆக்கத்திறன்கள் அவருக்குள் ஒன்றிணைந்தன. வரலாற்றுக்குத் தன்னைத் திறந்து கொடுத்தார். ஆதிக்கத்தை உள்வாங்கிக் கொண்ட பார்ப்பனீயம் அவருக்குள் இல்லை. வரலாற்றுள் தன்னைக் கரைத்துக் கொண்ட நிலையில் எல்லாவகை ஆக்கத்திறன்களும் அவருக்குள் பொங்கி வழிந்தன. வ.ரா. கூறியபடி அரக்கரால் பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட உலகத்தை, திருமால் மீட்டெடுத்ததுபோல, பாரதி தமிழை மட்டுமா மீட்டெடுத்தார்? நவீன காலத்துக்கேற்ப வாழ்வை அவர் மீட்டெடுத்தார். பாரதி நமக்குத் தந்தது ஒரு புதிய சகாப்தம். தமிழ் இலக்கியத்திற்குள் ஒரு புதிய ஊழியை நமக்குரியதாகச் செய்ததன் மூலம் பாரதி நமக்கு மகாகவி.
வர்க்கங்களின் தோற்றத்தோடுதான் வரலாறு தோன்றுகிறது. வர்க்க ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் காலம் முழுவதும் சமூகம் முழுவதிலும் தனி உடைமை. அரசு ஆகியவற்றின் ஆதிக்கம் ஒருபுறமும் அடிமைத்தனம் இன்னொரு புறமும் நிலவுவது தவிர்க்க இயலாதது. சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிலவும் காலம் முழுவதிலும் வறுமை, நோய் நொடிகள் முதலிய எத்தனையோ தீமைகளால் மக்கள் அவலத்திற்கு உள்ளாகி வருந்துவதும் தவிர்க்க இயலாதது. இந்த நிலையில் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபடுகின்றனர். இத்தகைய போராட்டத்தின் மூலமே மக்கள் தமக்கான வாழ்வை மற்றும் விடுதலையைப் பெறுகின்றனர். மக்கள் வாழ்வை நாசமாக்கும் அழிவுச் சக்திகளூக்கெதிராக, மக்கள் தமக்குள் ஆக்கச் சக்தியைத் திரட்டிக் கொள்வதன் மூலமே வாழ்வில் புதிய ஒளியையும், பார்வையையும், ஆற்றல்களையும் பெறுகின்றனர். இந்தச் சூழல்தான் புதியதான தத்துவத்திற்கும் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் ஆக்கம் தருகிறது.
வரலாற்றில் தவிர்க்க இயலாமல் தோன்றும் சில புரட்சிகரமான போக்குகள் மற்றும் போராட்டங்களின் சூழலில்தான் பெருங்கவிஞர்கள், சிந்தனையாளர்கள், மெய்யியலாளர்கள், மாவீரர்கள் தோன்றுகின்றனர். வரலாற்றின் திரண்ட சக்திகள்தான் இவர்கள் மூலம் வெளிப்படுகின்றன. வரலாற்றை இவர்கள்தான் உருவாக்குகின்றனர் என்பதுபோலத் தோன்றினாலும், மேதைகள் எனப் பெயர் பெறும் இவர்கள் வழிஏ இயங்குவது மக்கள் சக்திகள்தாம். ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் இவர்கள் புதிய மெய்யியலை, புதிய இலக்கியத்தைப் படைக்கிறார்கள். தமிழக வரலாற்றிலும் பெருங்கவிஞர்கள், மெய்யியலாளர்கள் என்பவர்களின் தோற்றத்தை இத்தகைய வரலாற்றுத் திருப்பங்களில் வைத்துக் காண்பதுதான் பொருத்தமாக இருக்க முடியும். இத்தகைய வரலாற்றுத் திருப்பங்களில் முதலில் கவிஞர்கள்தான் தமக்குள் வரலாற்று நெருக்கடியை உணர்ந்தோ, அறிவுப்பூர்வமாக உணராமலோ வெளிப்படுத்துகிறார்கள் என்றும், இதன் அடுத்த கட்டத்தில்தான் மெய்யியலாளர்களூம், அதன்பிறகு அறிஞர்களும் தோன்றுகின்றார்கள் என்றும் சில அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இது எப்படியாயினும் வரலாற்றின் குவி முனைகளில் கவிஞனுக்குள் அல்லது மெய்யியலாளனுக்குள் அல்லது மாவீரனுக்குள் இலக்கியம், மெய்யியல், அரசியல் பலவும் ஒருங்கிணைந்த எழுச்சி வெளிப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு உடனடியாகப் பிறரால் புரிந்து கொள்ளப்படுவது சாத்தியமில்லை. சில கட்டங்கள் தாண்டிய பிறகே இந்த ஒருங்கிணைப்புப் பலராலும் புரிந்து கொள்வது சாத்தியப்படும். இதன் காரணமாகத்தான் ஒரு கவிஞன் அல்லது மெய்யியலாளன், இன்னொரு கட்டத்தில் பெரும் புகழ் வாய்ப்பதும் இதனால்தான். பாரதிக்கும் நேர்ந்தது இதுதான். பாரதி இந்திய வரலாற்றின் ஒரு குவி முனையில் தோன்றினான். அவனுக்குள் பல்வகை ஆற்றல்களூம் பார்வைகளும் திரண்டிருந்தன. இவற்றின் பேரெழுச்சியாகப் பாரதி வெளிப்பட்டான். வரலாற்றின் தொடர்ச்சியான இயக்கத்தின் மூலம் பாரதியின் பல்வேறு கூறுகளூம் புரிந்து கொள்ளப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்டன. பாரதி மகாகவி ஆவான். பாரதியைப் போலவே கம்பரையும் இளங்கோவையும் பெருங்கவிஞர்கள் என்று நாம் மதிப்பிடும்பொழுது, அவர்களின் வரலாற்றுச் சூழலை வைத்தே மதிப்பிட முடியும். ஆதிக்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு அல்லது போராட்ட உணர்வின் வழியேதான் இவர்களை நாம் பார்க்க வேண்டும். வரலாற்றைப் புதியதாக மாற்றுவதற்கான இந்தப் பேரெழுச்சியின்போதுதான் மொழியிலும் புதுப்பொலிவுகள் தோன்றுகின்றன. இலக்கியம் புதியதாய்ப் படைக்கப்படுகிறது. புதிய வடிவங்கள் தோன்றுகின்றன. மரபை இவர்கள்தான் புதுமைப்படுத்தவும் செய்கின்றனர்.
வரலாற்றுக்குள் எழும் பல்வகைப் பரிமாணங்களோடு கூடிய பேரெழுச்சியைக் கவித்துவ வீறு என்று குறிப்பிடுவதே பொருத்தமாகும். இந்தக் கவித்துவத்தில் இலக்கியம் மட்டுமல்லாமல் மெய்யியல் முதலிய அனைத்துமே பெரும் படைப்புத்திறனோடு கிளம்புகின்றன. கவித்துவ வீறு என்பது சமூகத்தின் பல முனைகளிலும் தோன்றும் ஆற்றல் மிக்க படைப்புத்திறன்,. இந்தப் படைப்புத் திறனை இலக்கியம் என்றோ தத்துவம் என்றோ பிரித்துப் பேச முடியாது.
இப்பொழுது நாம் சொல்லலாம். பாரதி போன்ற பெருங்கவிஞரின் இலக்கியத்தை அல்லது கவிதையை மதிப்பீடு செய்யும்பொழுது கவிதையென்றோ, தத்துவம் என்றோ அரசியல் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. புரிந்து கொள்வதன் பொருட்டு பகுத்துப் பார்ப்பது தேவையென்றாலும் இவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும்பொழுதுதான் மகாகவியின் பெருந்தோற்றம் வெளிப்படும்.
பாரதிக்குள் முதலில் அரசியலை, பிறகு கவிதையை, பிறகு தத்துவத்தை, அதன் பிறகு சமூகத்தை, உணர்வைக் கண்டதும் இவற்றின் அடிப்படையில் கு.ப.ரா. முதல் சிவத்தம்பிவரை மதிப்பிட்டதையும் நாம் பார்த்தோம். பாரதியின் அரசியல் கவிதைக்குள்ளே பிற அனைத்துக் கூறுகளும் இணைந்திருக்கின்றன. கவிதையிலிருந்து மெய்யியலைப் பிரிக்க முடியாது. கவிதையிலிருந்து சமூக உணர்வை மற்றும் அரசியலைப் பிரித்துப் பேச முடியாது. இராசாசி, பாரதியை வேதாந்தக் கவி என்று மதிப்பிட்டதை அணுகிப் பார்த்தால், பாரதியின் மெய்யியல் கூறு அல்லது மேன்மை புலப்படும். வேதாந்தம் என்ற சொல் இராசாசியைப் பொறுத்தவரை ரிக் முதலிய வேதங்களோடு சார்ந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கலாம். அதைப்போலவே தத்துவம் என்ற சொல்லும். ஆனால் உண்மையில் இந்தச் சொற்கள், அவற்றின் ஆழத்தின் மெய்யியல் என்ற புரிதலை நமக்குத் தருகின்றன. பாரதியிடம் படைப்புத் திறன் என்பது பல முனைகளிலும் திரண்டு எழும் பேரெழுச்சி என்றுதான் நாம் இன்று புரிந்து கொள்ள முடியும்.
இத்தகைய விரிவான பார்வை 20-ஆம் நூற்றாண்டில் மெல்ல மெல்லத்தான் நமக்குள் உருவாயிற்று. தமிழகத்தின் அரசியல் மற்றும் இலக்கியத்திற்குள் மார்க்சியத்தின் நுழைவை அடுத்துத்தான் இத்தகைய விரிந்த பார்வை நமக்கு வசப்பட்டிருக்கிறது. ஓர் இலக்கியத்தின் மேன்மையை மதிப்பிடுவதற்கு அதனுள் செயல்படும் பலமுனைப்பட்ட கவித்துவ வீறு கொண்டுதான் மதிப்பீடு செய்ய முடியும். இதன் கூறுகளில் அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் அடங்குகின்றன. கு.ப.ரா.விற்கோ, செல்லப்பாவுக்கோ கவித்துவ வீறு என்பதன் பல்வகைப் பரிமாணங்கள் புலப்படாதிருந்திருக்கலாம். சிவத்தம்பி முதலியவர்களும் இது பற்றிக் கவனம் கொள்ளாது இருக்கலாம், எனினும் இலக்கிய வரலாற்றாய்வின் வழியே இப்பார்வை இன்று நாம் பெறுவது சாத்தியப்பட்டு இருக்கின்றது. இந்தப் பார்வையின் அடிப்படையில் பாரதி மட்டுமல்லாமல் கம்பர் முதலியவர்களின் இலக்கிய ஆளுமைக்கான வரையறைகள் / அளவுகோல்கள் என்ன என்பதை நாம் தீர்மானிக்க முடியும். அன்றியும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியின் இடம் என்ன என்பதையும், தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை மதிப்பீடு செய்வதற்குப் பாரதியின் வழியே நமக்குக் கிடைத்த அளவுகோல்கள் என்ன என்பதையும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினுள் பாரதி ஏற்படுத்திய திசைமாற்றம் என்ன என்பதையும் சரியாகக் கணித்தறிய முடியும்.
இந்தக் கட்டுரை எழுதுவதற்குப் பயன்பட்ட சில நூல்கள்:
1. கண்ணன் என் கவி: ஆசிரியர்: கு.ப.ரா, சிட்டி, செல்லப்பா
2. பாரதி - மறைவு முதல் மகாகவி வரை - பேராசிரியர் கா.சிவத்தம்பி, அ.மார்க்ஸ்
3. பாரதி கவிதைகள் - தொகுப்பாசிரியர் - மா.ரா.போ. குருசாமி - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு.
4. பாரதி பற்றி கல்யாணராமன் எழுதிய நூல்
குறிப்பு: 1997 - மார்ச்சில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் 115-ஆம் பிறந்த நாள் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கட்டுரை.
நன்றி: தமிழில் படைப்பியக்கம் - கோவை ஞானி - காவ்யா வெளியீடு, பெங்களூர் - 38.