'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் கலைகளாகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 36) `'சித்திரமாகட்டும், இலக்கியமாகட்டும் சிற்பங்களாகட்டும் அது ஒரு தனிமனிதக் கலைஞனும் சமூகமும் கொண்ட உறவாடலின் பதிவு' (கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; க்0) அதே சமயம் 'கலைஞரின் மன உந்துதல்களுக்கேற்ப, அக்காலத்துச் சூழ்நிலைகளுக்கேற்ப, மீறியே ஆக வேண்டிய சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்கேற்ப, தானறிந்தோ அறியாமலோ, மரபுகள் மீறப்படுகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்': பக்கம் 39) என்று குறிப்ப்டும் வெ.சா. 'சமூக மாற்றங்களோ' அல்லது கலைப்படைப்பு மனதிலேற்படுத்தும் விளைவாக உருவாகும் மாற்றங்களோ முன்கூட்டியே விதிகளால் தீர்மானிக்கப்பட்டுப் பெற முடியாது' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 40) என்கின்றார். சூத்திரங்களுக்குள் கலையினை அடைப்பதை அவர் பலமாகவே எதிர்க்கின்றார். இந்த விடயத்திற்காகத்தான் அவர் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் (மார்க்சியத் தத்துவத்துடனல்ல), முற்போக்கணியினருடன் முரண்படுகின்றார். அடித்தளமாக விளங்கும் சமூக-பொருளாதார அமைப்புகளே இலக்கியம், தத்துவம், அரசியல் போன்றவற்றினை உள்ளடக்கிய மேல் கட்டுமானத்தை உருவாக்குகின்றனவென்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'நம் தத்துவ சரித்திரத்தின் பல சிந்தனைகளை, மனித வரலாற்றின் நிகழ்ச்சிகளில் பலவற்றை அவற்றின் சமுதாய- பொருளாதார அமைப்பின் விளைவாகக் காணலாம். அப்படியில்லாதவை அநேகமுண்டு. அதுபோல சமூக- பொருளாதார அமைப்புகளைத் தத்துவ சிந்தனைகளின் விளைவாகவும் காணமுடியும். இவை ஒன்றை ஒன்று பாதிக்கின்றன. பாதிக்காமலே அமைதியாகக் கூட்டு வாழ்க்கை நடத்துவதும் உண்டு. எது நிரந்தரமான அடித்தளம், எது நிரந்தரமான மேல் கட்டுமானம் என்று சொலவ்து முடியாது. இது ஒரு முடிவற்ற சுழல். எதை ஆரம்பம், எதை முடிவு என்று சொல்வது? முடிவற்றுப் பிரவாகிக்கும் சரித்திர கதியின் ஒரு கால கட்டத்தை வேண்டுமானால் மடையிட்டுத் தடுத்து, ஒன்றை ஆரம்பம் என்றும் பின்னையதை முடிவு என்றும் சொல்லலாம். அதைச் சொல்ல வசதியாகக் கட்டிய மடை , அதன் உணமையைப் பொய்ப்பித்து விடுகிறது. மடையை நீக்கிவிட்டால், விளைவு என்று சொல்லப்பட்ட பின்னையது அடுத்த கதியில் ஆரம்பமாகக் காட்சியளிக்கும்' ('விவாதங்கள் சர்ச்சைகள்'; பக்கம் 41). இவ்விதம் வெ.சா. கூறுவதைப் பார்த்து அவரையொரு மார்க்சியத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்துக் குரல்கொடுத்தவராகக் கருத முடியாது. அப்படியிருந்தால் 'மார்க்சின் முடிவுகள், மனித சிந்தனை வளத்திற்கு அளித்த பங்கு உண்மையிலேயே அதிகம்தான்' ('விவாதங்கள், சர்ச்சைகள்'; பக்கம் 88) என்று அவரால் கூறியிருக்க முடியாது. பல முற்போக்குப் படைப்புகளையெல்லாம் ஆரோக்கியமாக விமர்சித்திருக்க முடியாது. வெ.சா. மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றவர். அதனை அவரது கட்டுரைகளில் அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கின்றார். அவ்விதம் மார்க்சியத்தைக் கற்றபின்தான் அதனை மீறிச் சிந்திக்குமொரு எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளப்படுத்த அவரால் முடிகிறது. நம் உணர்வுகளாலும், பார்வையினாலும் பெறப்படும் அனுபவ உலகிலிருந்து உருவாகும் கலைகளை விதிகளுக்குள் கட்டுப்படுத்திவிட முடியாதென்பதே வெ.சா.வின் பார்வை. இதனை நன்கு விளங்கிக் கொண்டால் முரண்பாடுகள் பற்றிய விதிகளை விபரிக்கும் மார்க்சியக் கோட்பாடுகளுக்கமைய வெ.சா.வின் பார்வையும் தவிர்க்கமுடியாததொரு முரண் என்று உள்வாங்கி விளங்கிக் கொண்டிருந்தால் இரு சாராருமே இத்தகைய மோதல்களை, ,முரண்பாடுகளை ஆரோக்கியமானவைகளாகக் கருத முடியும். வெ.சா. ஒரு போதுமே மார்க்சியத்தின் மூலவர்களான கார்ல் மார்க்சையோ அல்லது எங்கெல்சையோ தரக்குறைவாக மதிப்பிட்டவரல்லர். 'மார்க்ஸினதும், எங்கெல்ஸினதும் சிந்தனைகள் அவர்களது காலத்துக்குரியன. அவர்களையும் மீறி உலகமும், சிந்தனை நிலைகளும் சென்றுவிட்டன' என்பது அவர் கருத்து. இதனால்தான் அவர் '... அவர்களது மேதைமையையோ, புரட்சிகரமான சிந்தனைகளையோ குறை கூறுவதாகாது. அவர்கள் காலத்தில் அவர்களின் எதிராளிகளின் கருத்து நிலையை அறிந்து அதற்கு எதிராக வாதாடியவர்கள். அவர்கள் காலம் மாறி விட்டது. கருத்து நிலைகள் மாறி விட்டன. மார்க்ஸ்-எங்கெல்ஸின் வாதங்கள் இன்று நமக்கு உதவுவதில்லை.' இவ்விதம் கூறும் வெ.சா. லெனினோ, ஸ்டாலினோ மார்க்ஸ்- எங்கெல்ஸின் கருத்துகளை அவர்கள் அளித்த ரூபத்தில் ஏற்றுக்கொள்ள்வில்லை. இன்றைய சோவியத் ரஷ்யாவும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. மா-ஸே-துங்கும் ஏற்றுக்கொள்ளவில்லை' ('விவாதங்கள், சர்ச்சைகள்'; பக்கம் 80) என்பார். உண்மையில் வெ.சா. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களைக் குப்பைக் கூடைக்குள் போடுங்களென்று கூறவில்லை. காலத்திற்கேற்ப அவை மாறவேண்டுமென்றுதான் வற்புறுத்துகின்றார். அதிலவருக்கு எந்தவித முரண்பாடுமில்லை என்பதைத்தான் அவரது கீழ்வரும் கூற்று புலப்படுத்துகின்றது:
'19-11ம் நூற்றாண்டில் முதலாளித்துவ வர்க்கம் இருந்த திசையைச் சரியாகக் கணித்துத்தான் மார்க்ஸும் எங்கெல்ஸும் தங்கள் சித்தாந்த பீரங்கிகளைக் குறிபார்த்துக் கொடுத்துள்ளார்கள். முதலாளித்துவம் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டது. அதற்கேற்ப உங்கள் பீரங்கிகளின் குறியையும் மாற்றிக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மார்க்ஸும் எங்கெல்ஸும் குறிவைத்துக் கொடுத்த இடத்தையே சுட்டுக்கொண்டிருப்பதால்தான் உலகம் முழுதும், எங்கிலும் இருக்கும் முதலாளித்துவத்தை நீங்கள் எதுவும் செய்ய முடியவில்லை' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 80)
அத்துடன் அவர் கீழ்வருமாறும் கூறுவார்: ' மார்க்சையும், எங்கெல்சையும் ஒவ்வொருவரும் கற்க வேண்டும். அது அவசியம். கற்று, ஜீரணித்து, அவர்கள் சித்தாந்தத்தை நம் System-இல் ஒன்று கலக்கச் செய்ய வேண்டும். ஜீரணமாகாது மாந்தம் ஏற்பட்டுவிடக் கூடாது' என்கின்றார். இது எதனைக் காட்டுகிறதென்றால் வெ.சா. மார்க்சியத்தின் எதிர்ப்பாரல்லர்; ஆனால் அத்தத்துவத்தைக் கற்று, உள்வாங்கி, அது ஜீரணித்துப் பெறும் சக்தியில் அடுத்த வளர்ச்சிக்குச் செல்ல வேண்டுமென்ற கருத்துடையவர் என்பதையல்லவா? மேலுள்ள கூற்றின் இறுதியில் அவர் 'கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் மாந்தம் ஏற்பட்டுவிட்டது' என்பார். அவ்விதம் அவர் கூறுவது கம்யூனிஸ்ட் கட்சியினரைத்தான். எனவே கம்யூனிஸ்ட் கட்சியினரோ அல்லது முற்போக்குப் படைப்பாளிகளோ வரிந்து கட்டிக் கொண்டு வெ.சா.வின் மேல் குற்றச்சாட்டுகளை வீசுவதற்குப் பதில், தங்களுக்கு ஏன் மாந்தமெற்படவில்லையென்பதை வெ.சா.வுக்குப் புரிய வைத்தாலே போதுமானது. அதனைத்தான் அவரும் எதிர்பார்க்கின்றாரென்பதைத்தான் அவரது கட்டுரைகள், கூற்றுகள் புலப்படுத்துகின்றன. மார்க்ஸியம் பற்றி, கலையின் அம்சங்கள் பற்றியெல்லாம் வெ.சா. என்னுமொரு மனிதருக்கு அவரது கற்றுக் கேட்டு, உணர்ந்த அறிவிற்கேற்ப சரியென்று படக்கூடிய கருத்துகளுள்ளன. அந்தக் கருத்துகள் மாற்றுக் கருத்துகளாக இருக்கின்றன என்பதனால் அவற்றைக் கொச்சைப்படுத்திச் சேற்றை வாரித்தூற்றுவதில் அர்த்தமெதுவுமில்லை. கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான தர்க்கத்தின் மூலமே அது சாத்தியம். எவ்விதம் வெ.சா.வுக்கு மார்க்ஸிய கோட்பாடுகளில் ஈடுபாடுள்ள ஓவியர் தாமோதரனின் ஓவியங்களைக் கலைத்துவமிக்க படைப்புகளாகக் காண முடிகிறதோ? அந்தப் பக்குவம் நல்லதொரு ஆரோக்கியமானதொரு பண்பு. அதனால்தான் அவரால் தாமோதரன் போன்றவர்களுடன் மார்க்சியம் பற்றியெல்லாம் ஆரோக்கியமான விவாதங்களை நடாத்த முடியுமென்று கூற முடிகிறது. தன் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் வெ.சா. அவர்கள் 'என் கருத்துநிலை என்ன என்று தெரிந்து, புரிந்து, ஒப்புக் கொண்டு பின் என்னுடன் வாதிட வாருங்கள்' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 80) என்று கூறுவதைப் போல் அவரது கருத்துகளைப் பற்றி விவாதிக்க விளைபவர்கள் அவர் கூறுவதைப் படித்து, புரிந்து, ('ஒப்புக் கொண்டு' என்று அவர் கூறுவதை என்னால் ஏற்க முடியாது. ஒப்புக் கொண்டால் பின் எதற்கு விவாதம்? - கட்டுரையாளர்) அவருடன் வாதிட முனைவதே சரியானதாகப்படுகிறது. மேலும் வெ.சா. மாக்ஸிய கோட்பாடுகளைச் சூத்திரங்களாக்கி , அவற்றிற்கியைய படைக்கப்படும் படைப்புகள் கலைத்தன்மையினை இழந்து விடுகின்றனவென்று கருதினாலும், கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருக்கும் நாடுகளிலிருந்து உண்மையான கலைப்படைப்புகள் வெளிவராதென்று கருதியவரல்லர். அவ்விதம் வந்தபொழுது அவற்றைக் குறிப்பிடவும் மறந்தவரல்லர். 'இன்னமும் குறிப்பாக, மிலாஸ் போர்மன் என்ற பெயரைக் கவனித்தீர்களானால் இன்னுமொன்று விளங்கும். மிலாஸ் போர்மன், கம்யூனிஸ்டுகள் அரசு செலுத்தும் செக்கோஸ்லோவேகியாவிலிருந்து வந்தவர். அங்கு இருந்தவரின் அவரது படைப்புகள் , கலைப்படைப்புகளாக இருந்தன. காரணம் கம்யூனிஸ ஆட்சி அல்ல. அங்கு இருந்த திரைப்பட உள்வட்டச சூழல், கலைப் பண்புகொண்ட சூழல். ஆகவே அங்கு இருந்தவரை அவர் படைத்தவற்றின் கலைப்பண்புகளைக்கண்டு, கலையாக அவற்றை ஏற்றுக் கொண்டோம். அமெரிக்கா வந்ததும் அமெரிக்க திரைப்பட உள்வட்டச் சூழலின் வியாபாரப் போக்கு, அவரது கலையைக் கொன்றுவிட்டது.' (விவாதங்கள் சர்ச்சைகள்; பக்கம் 73)
ஆகச் சுருக்கமாகக் கூறப்போனால் 'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் கலைகளாகின்றன' என்றும் , அவ்விதமான கலைப்படைப்புகள் கோட்பாடுகளின் சூத்திரங்களாகி, வெறும் பிரச்சாரங்களாக மாறுதல் கூடாதென்றும், ஆயினும் நல்லதொரு கலைப்படைப்பு உருவாவதென்பது அது எந்தச் சமுதாயத்தில் உருவாகின்றதோ அங்கு நிலவும் கலைப்பண்புகொண்ட உள்வட்டச் சூழல்களிலேயே தங்கியிருக்கிறதென்றும் வெ.சா. கருதுவதாகக் கருதலாம். அதனைத்தான் அவரது படைப்புகளும் வெளிக்காட்டி நிற்கின்றன.