தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்கொள்வோம். ஒரு கேள்வி எழுகிறது. யார் தமிழர்? தலைமுறை தலைமுறைகளாகத் தமிழ் பேசும் மக்கள் தமிழர்களா? அல்லது அவர்களது மரபணுக்களின் அடிப்படையில் அவ்ர்களைத் தமிழர்கள் ,தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதா? அப்படி யாரையுமே வேறு இனக்கலப்பல்லாத இனமொன்றைச் சேர்ந்தவராகக்ப் பிரிக்க முடியாது. மரபணுவை வைத்த்து ஒருவர் எத்தனை இனங்களின் கலப்பு என்பதை இன்று இலகுவாகக் கண்டு பிடிக்கலாம்.
நாம் தமிழர் என்று கருதுவது தலைமுறை, தலைமுறையாகத் தமிழ் பேசி, தமிழ்ர்களின் பண்பாட்டு அடையாளங்களுடன் ஒன்றிணைந்து போனவர்களைத்தாம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் காலத்துக்குக் காலம் தமிழகத்து மன்னர்கள் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றார்கள். பிற தேசத்து மன்னர்கள் தமிழக்த்துக்குப் படையெடுத்து வந்தார்கள். இலட்சக்கணக்கான படை வீரர்கள் இடம் பெயர்து வந்தார்கள். வேலை வாய்ப்புக்காக, வர்த்தகத்துக்காக மக்கள் இடம் பெயர்ந்தார்கள். இவ்விதம் வந்தவர்களின் சந்ததியினர்தான் இன்றுள்ள தமிழகத்தமிழர்கள்.
இதுபோல்தான் இலங்கைத் தமிழர்களும். இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்கள் மத்தியில் பண்டைத்தமிழரான கேரளக்காரர்களின் கலப்பு முக்கியமானது. தெலுங்கர்களின் கலப்பும் முக்கியமானது. நாயக்கர்களின் கலப்பே சிங்கள மக்கள் மத்தியில் நாயக்க என்னும் பெயர் உருவாகக் காரணம் என்பர். பிள்ளை என்பது சிங்கள் மக்கள் மத்தியில் புள்ளே ஆயிற்று. உதாரணத்துக்குப் பெர்ணாண்டே புள்ளே. சுவாமி ஞானப்பிரகாசர் பண்டைத்தமிழரின் ஒரு பகுதியினரே சிங்களவர்களாக மாறினர் என்பார். அதற்கான அவரது ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய நூலொன்றினை எழுநா பதிப்பகம் 'சுவாமி ஞானப்பிரகாசரின் பண்டத்தமிழர்' என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது. அக்கட்டுரைகளில் ஒரு காலத்தில் கண்டங்கள் பல் ஒன்றிணைந்திருந்த சமயத்தில் தமிழர்கள் உலகின் எப்பகுதிகளில் ஆரம்பத்தில் வசித்து வந்துளளார்கள் எனபது பற்றியெல்லாம் தன் கருத்துகளை முன் வைத்திருப்பார். அந்நூலுக்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/144/14386/14386.pdf
என்னைப்பொறுத்தவரையில் திராவிடம் என்பது தமிழிலிருந்து உருவானது என்னும் தேவநேயப்பாவாணரின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். த்மிழம் என்னும் சொல்லிலிருந்து திரமிளம், த்ரவிடம் , திரவிடம் , திராவிடம் என்னும் பெயர் உண்டானது என்பார் அவர். அவரது திரவிடத்தாய் நூல் இவ்வகையில் முக்கியமானது. அந்நூலை இணையத்தில் வாசிக்க் - https://www.tamilvu.org/library/lA46P/html/lA46Pind.htm
பெரியார் தமிழ்தான் வெவ்வேறு இடங்களில் கன்னடமாக, மலையாளமாக, தெலுங்காகப் பேசப்படுகின்றது என்றார். இதற்காக அவர் தர்க்கபூர்வமான சான்றுகளுடன் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அக்கட்டுரைகளை பெரியா ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுப்புகளில் வாசிக்கலாம். https://archive.org/details/evrt-vol-2-part-1
பெரியார் தன்னைத்தமிழராக அடையாளப்படுத்தியவர். திராவிடர் தமிழரே என்ற்வர். இன்று அவரை வடுகர் என்றும், தெலுங்கர் என்றும் தூற்றுபவர்கள் பெரியார் என்னும் சமூகச் சீர்திருத்தங்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த தலைவர் ஒருவரைக்கொச்சைப்படுத்துபவர்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிடக் கழகமும், அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் க்ழகமும் , பின்னர் ஆண்ட திராவிடக் கட்சிகளும் முக்கியமான , ஆரோக்கியமான சமூகப் பங்களிப்புகளைச் செய்துள்ளன. அதே சமயம் இன்றைய அரசியலில் , தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியலில்ம், சர்வதேச அரசியலிலும் கூட ஊழல், குடும்ப ஆட்சி என்பவை நிலவுகின்றன என்பதும் உண்மைதான். ஊழலுக்கெதிராக, குடும்ப ஆட்சிக்கெதிராக தற்போதுள்ள முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிற்குள் வாழ்பவர்கள் , போராடுவதென்பது வர்வேற்கத்தக்கது. ஆரோக்கியமானது. ஆனால் அதற்காக ஒற்றுமையாக வாழும் தமிழர்களை இனரீதியாகப் பிரித்தாளும் அரசியல் ஆரோக்கியமானதல்ல. தமிழ் இனத்தின் ஒற்றுமையைச் சீர்குலைப்பது. தமிழரான திராவிடரை தெலுங்கர், வ்டுகர் என்று பிரித்தரசியல் செய்வதும், நாங்கள் இங்கு வாழும் ஏனைய இன மக்களுக்கெதிரானவ்ர்கள் என்று கூட்டங்களில் உரையாற்றிய மறுகணமே வடுகருக்கு வாக்குகள் போடாதீர்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஏற்கனவே வர்ணப்பிரிவுகளால் தமிழரின் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் , இவ்விதமான பிரிக்கும் அரசியல் தமிழர்களின் ஒற்றுமையை மேலும் சீர்குலைப்பதாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிடச் சிந்தனைகளை எதிர்த்துச் செய்யப்படும் அரசியல் ஒருபோதும் தமிழக மக்கள் மத்தியில் எடுபடுமென நான் நினைக்கவில்லை. ஏனென்றால் திராவிடச் சிந்தனைகள் சமநீதிக்காகப் போராட வைத்தன. சுயமரியாதைக்காகப் போராட வைத்தன. மூட நம்பிக்கைகளைக் களைய வைத்தன. மொழிச் சீர்திருத்தங்களுக்காகப் போராட வைத்தன. தமிழ் மக்களை விழிபடைய வைத்த சிந்தனைகள் அவை. அவற்றை எதிர்த்துச் செய்யப்படும் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் ஆட்சியின் சீர்கேடுகளுக்கெதிராக, ஆதாரங்களுடன் மக்களை அணி திரட்டுவதை யாரும் கேள்விக்குட்படுத்தப்போவதில்லை. அதே சமயம் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.